இன்று காலை செய்தித்தாள்களில் ஒரு செய்தி. நீதி நாயகர், நீதிச் சுடர், நீதி தேவன், நீதிப் பேரொளி, நீதிக் கோமான், நீதிச் சக்கரவர்த்தி கர்ணனை வேறு நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அகர்வால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக வந்த அந்த செய்தி, நெஞ்சில் இடியாகப் பாய்ந்தது. நீதி நாயகனை வேறு மாநிலத்துக்கு மாற்றி விட்டால், தமிழகத்தில் நீதி எப்படி நிலை நாட்டப்படும் ? யார் காப்பாற்றுவார் தமிழகத்தை என்ற அந்தக் கேள்வி, காதில் புகுந்த தண்ணீராய் உறுத்திக் கொண்டே இருந்தது.
அப்படி என்ன தவறு செய்து விட்டார் நீதியரசர் கர்ணன் ? உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறைக்குள் கடந்த 8ம் தேதி புகுந்து, சராமாரியாக அவரைத் திட்டியுள்ளார். தலைமை நீதிபதி அகர்வாலைப் பார்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டீர்கள். உங்களால்தான் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில வழக்கறிஞர்கள் மத்தியில் குழப்பம். உடனடியாக பதவி விலகுங்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?” என்று கேட்டிருக்கிறார். தலைமை நீதிபதியோ அமைதியாக இருந்திருக்கிறார். டெர்மினேட்டர் 2 படத்தில் அர்நால்ட் ஸ்க்வார்ஸனேகர் சொல்வது போல, I will be back tomorrow என்று வேறு பன்ச் டயலாக் பேசியிருக்கிறார். நான் தற்போது பார்த்துக கொண்டிருக்கும் வழக்குகளுக்கு பதிலாக, வேறு நீதிமன்றத்துக்கு (ஜாமீன், முன்ஜாமீன் போன்ற வழக்குகள்) நியமிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, மார்ச் முதல் வாரத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் பணி மாற்றி அமைக்கப்படும் போது, உங்களுக்கும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே மாற்ற வேண்டும் என்று கூறி விட்டு சென்றிருக்கிறார்.
அந்த கடிதத்தில் தலைமை நீதிபதி, கர்ணன் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் புகார்கள் வழக்கறிஞர்களிடமிருந்தும், நீதிபதிகளிடமிருந்தும் வந்த வண்ணம் உள்ளன. நீதிபதி கர்ணன் ஒரு நீதிபதி போல நடந்து கொள்ளாதது மட்டுமல்ல… நீதித்துறைக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்ற தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் தலைமை நீதிபதி.
நீதிபதி கர்ணன் யார் ? கர்ணன் குறித்து சவுக்கு தளத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் , நீதிக்கே அவமானம் மற்றும் ஓபனிங் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஃபினிஷிங் ? ஆகிய கட்டுரைகளில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கர்ணன் எப்படி நீதிபதியானார் என்பது பழைய சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். இருப்பினும், தற்போது ஒரு சின்ன ப்ளாஷ் பேக். “கர்ணன் தான் உண்டு தன் வழக்கறிஞர் தொழில் உண்டு என்று சிவனே என்று இருக்கையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் படுகிறார் நீதியரசர்களுக்கெல்லாம் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன். அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போது, அவரது தாயாரின் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள தானாக முன் வந்து வழக்கறிஞராக இருந்த கர்ணன் வருகிறார்.
இரவும் பகலும், கடலூர் மாவட்டத்தில் தன்னைப் பெற்றெடுத்த தாயருக்கு கொடுக்காத பாசத்தை பொழிகிறார். தலைமை நீதிபதியின் தாயாரல்லவா ? விளையாட்டா ?
இதனால் மனமகிழ்ந்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். எனக்கு, உயர்நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு கவுரவமான பதவி கொடுங்கள் என்று கேட்கிறார். கவுரவமான பதவி என்ன…… உன்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்குகிறேன் பார் என்று கர்ணனை உயர்நீதிமன்ற நீதிபதியாக்குகிறார். இதுதான் கர்ணன் நீதிபதியான வரலாறு என்று கூறுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.”
இப்படிப்பட்ட கர்ணன்தான் தற்போது தலைமை நீதிபதியின் புகாருக்கு ஆளாகியுள்ளார். எப்போது தன் சேம்பரில் பத்திரிக்கையாளர்களை அழைத்து கர்ணன் பேட்டியளித்தாரோ, அந்த நாளே அவரை, வேறு மாநிலத்துக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படி மாற்றாமல் விட்டதன் பலனை இன்று ஒட்டுமொத்த நீதித்துறையே அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தலைமை நீதிபதி, கர்ணன் மீது புகார் அனுப்பிய செய்தி, இன்று காலை ஊடகங்களில் வெளி வந்ததும், மாலை நாலு மணிக்கு நீதிபதி கர்ணன் ஊடகங்களை சந்திப்பார் என்று ஒரு தகவல் வெளியானது. மாலை நாலு மணிக்கு நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு சென்றால், நீதிபதி பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி அகர்வால் மீது, அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்துக்கு அளித்த புகாரின் நகல் மற்றும் ஆதாரங்களை வாசலில் இருந்த காவலர் அளித்தார்.
அந்தப் புகாரை வாங்கிப் பார்த்தால் அது பின்வருமாறு இருந்தது. எனக்கு கரூர் மாவட்டத்தை பொறுப்பாக 08.02.2013 முதல் வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு, நான் கரூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை பார்வையிட்டேன். ஒருங்கிணைந்த குளித்தலை நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அங்கே உள்ள ஆறு போட்டி சங்கங்கள், கட்டிடத்தில் பதிக்கும் கல்வெட்டில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதற்காக நான் 22.04.2013 அன்று குளித்தலை சென்று பேச்சுவார்த்தை நடத்தினேன். 08.06.2013 அன்று கட்டிடத்தை திறக்கலாம் என்று முடிவானது. இப்படி இருக்கையில், எனக்கு பொறுப்பான கரூர் மாவட்டத்தை மாற்றி எனக்கு சிவகங்கை மாவட்டத்தை விழா நடக்க இருந்த நான்கு நாட்களுக்கு முன்பாக மாற்றி விட்டார் தலைமை நீதிபதி அகர்வால். இதனால் அந்த கட்டிடத் திறப்பு விழாவுக்கு என்னால் போக முடியவில்லை. எனக்கு பொறுப்பான கரூர் மாவட்டத்தை மாற்றி விட்டு சிவகங்கை மாவட்டத்தை ஒதுக்கியதன் மூலம், தலைமை நீதிபதி அகர்வால் பிரிவு 3 (1) (x) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார். இந்தப் பிரிவே, தாழ்த்தப்பட்டோரை உள்நோக்கத்துடன் அவமானப்படுத்துவதை தடுப்பதற்கான பிரிவு. தலைமை நீதிபதி அகர்வால் கரூர் மாவட்டத்தை ஆதிக்க சாதியை சேர்ந்த நீதிபதி மாலா என்பவருக்கு ஒதுக்கியுள்ளார். இதற்கு எந்த காரணத்தையும் தலைமை நீதிபதி சொல்லவில்லை. தலைமை நீதிபதியின் இந்த செயல் சரியல்லாத நடவடிக்கை. உடனடியாக இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதுதான் நீதிநாயகர் கர்ணன் அளித்துள்ள புகார். இந்தப் புகாரை இவர் 6 ஜனவரி 2014 அன்று தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் வழங்கியதாக தேதி குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 6 அன்று அளிக்கப்பட்ட புகார் 10 நாட்களாக ஏன் வெளியுலகத்துக்கு சொல்லப்படவில்லை என்பது தெரியவில்லை. இதற்கு முன் நவம்பர் 2011 அன்று நீதிபதி கர்ணன் இதே போல தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினார். இணைப்பு. அப்போது கர்ணன் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஊழல் குற்றச்சாட்டை அடுத்து, அப்போதைய தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்தார். இது நடந்த பிறகே, நீதிபதி கர்ணன் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி, அதன் விபரங்களை பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக அளித்தார். அதையொட்டி, நீதிபதி கர்ணனின் பின்னால் தலித் வழக்கறிஞர்கள் அணி திரண்டனர். இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால் பணிந்தார். கர்ணனுக்கு மீண்டும் வழக்குகள் ஒதுக்கப்பட்டது.
இதே ஆயுதத்தைத்தான் தற்போது கர்ணன் எடுத்துள்ளார். கர்ணன் இழிவு படுத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் நடந்தது 08.06.2013. அன்று நீதிபதி கர்ணனுக்கு மட்டும் மாவட்டங்கள் மாற்றப்படவில்லை. மொத்தம் 32 நீதிபதிகளுக்கு மாவட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதில் எந்த நீதிபதியும் மாவட்டங்களை மாற்றியது குறித்து குறை கூறவில்லை. ஆனால் நீதிபதி கர்ணனுக்கு மட்டும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தலைமை நீதிபதி மாற்றி விட்டார் என்று புகார் தெரிவிக்கிறார். மேலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2013 அன்று. கர்ணன் புகார் அளிப்பதோ ஜனவரி 2014 அன்று. கடந்த ஆறு மாதங்களாக கர்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி அனைவர் முன்பும் எழுகிறது. மேலும், இந்தப் புகாரின் நகலை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சட்ட அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறார் நீதிபதி கர்ணன். இது சரி. ஆனால், பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கும், தலித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கும் இந்தப் புகாரின் நகலை எதற்காக அனுப்பியுள்ளார் ? இவர்கள் இருவருக்கும் இந்தப் புகாரின் நகலை அனுப்பியுள்ளதே, கர்ணன் இந்த விஷயத்தை எப்படி அரசியலாக்குகிறார் என்பதை உணர்த்துகிறது.
கடந்த முறை சக நீதிபதிகள் தலித் என்பதால் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அளித்த கர்ணன், தன்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை பின்னர் வெளியிடுகிறேன் என்று சொன்னார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்தப் பெயர்களை வெளியிடவில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர், கர்ணனிடம் பேசுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதுதான் உண்மை. அவரிடம் பேசினால், தன்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டினார்கள் என்று பொய்ப் புகார் கொடுத்து விடுவாரோ என்று வெளிப்படையாகவே அஞ்சுகிறார்கள்.
மேலும், ஒரு வழக்கை யாருக்கு அனுப்பலாம், யாருக்கு அனுப்ப வேண்டாம், யாருக்கு எந்த நீதிமன்றம் என்பதை நிர்ணயிப்பதில், தலைமை நீதிபதியின் அதிகாரம் முழுமையானது. சந்தேகமோ, குழப்பமோ இல்லாதது. இது உச்சநீதிமனற்த்தின் ஒரு தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்வது சுவையாக இருக்கும். நீதிபதி கர்ணனை விட மோசமான ஒரு முட்டாள் நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இருந்தார். அவர் பெயர் சேத்னா. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுக்கிறார். அந்த வழக்கில், அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சரியான முறையில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோருகிறார். இந்த வழக்கை நீதிபதி சேத்னா விசாரித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது பண்டாரி என்ற வழக்கறிஞர் தன்னையும் அந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இந்த வழக்குகள், நீதிபதி சேத்னாவால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில், ரோஸ்டர் மாற்றப்பட்டு, நீதிபதி சேத்னா தனியாக வழக்குகளை விசாரிப்பதிலிருந்து, மற்றொரு நீதிபதியோடு டிவிஷன் பென்ச்சில் அமர்ந்து வழக்குகளை விசாரிக்கும் பணிக்கு மாற்றப்படுகிறார். இதற்கிடையே, நீதிபதிகள் குடியிருப்பு தொடர்பான அந்த வழக்கு, தொடர்ந்து விசாரணைக்கு வந்த வண்ணம் இருக்கிறது. ராஜஸ்தான் அரசு தலைமை வழக்கறிஞர், நீதிபதிகள் குடியிருப்பு தொடர்பான வழக்கு, சில முக்கிய சட்ட முடிவுகள் தொடர்பான வழக்காக இருப்பதால், இந்த வழக்கை டிவிஷன் பென்ச் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றுகிறார். நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எம்.பி.சிங் கொண்ட அமர்வு, அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறது.
நீதிபதி சேத்னா, தனி நீதிபதியாக இருந்து வழக்குகளை விசாரித்தபோது, ப்ரகாஷ் சந்த் என்ற நபர் தனது தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் விசாரணைக்கு வருகிறது. 03.09.1997 அன்று அந்த வழக்கை விசாரித்த சேத்னா, இந்த வழக்கை பாதியில் விசாரித்த மற்ற வழக்குகளோடு சேர்த்து தன் முன் வைக்கும்படி உத்தரவிடுகிறார். இதற்கு பின்னால், நீதிபதி சேத்னா, டிவிஷன் பென்ச்சில் அமர்ந்து வழக்குகளை பார்த்துக் கொண்டிருப்பதால், அவரால் தனி நீதிபதியாக வழக்குகளை பார்க்க முடியவில்லை. நீதிமன்றப் பதிவாளரை அழைத்து, ப்ரகாஷ் சந்த் வழக்கை தனி பட்டியலாக தன் முன் விசாரணைக்கு வைக்கும்படி உத்தரவிடுகிறார். தலைமை நீதிபதி இது குறித்து உத்தரவு பிறப்பிக்கிறார்.
There will be no roster for Hon’ble Justice B.J.Shethna for sitting in Single Bench on 5.9.1997. Those part heard matters may be listed on some other day some time next week as the business of the Court would permit with my specific order. Providing roster is the prerogative of the Chief Justice, which must be brought to the knowledge of the Hon’ble Judge.”
டிவிஷன் பென்ச்சில் இருப்பதால், நீதிபதி சேத்னாவுக்கு தனியாக வழக்குகளை விசாரிக்க பட்டியல் தயாரிக்க முடியாது. வேறொரு வேலை நாளில் நீதிபதி சேத்னா அந்த வழக்கை விசாரிக்கட்டும். மேலும், வழக்குகளை ஒதுக்குவது தலைமை நீதிபதியின் பிரத்யேக உரிமை என்பதை அந்த நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் என்று உத்தரவிடுகிறார்.
மறுநாள் மற்றொரு நீதிபதியோடு டிவிஷன் பென்ச்சில் உட்கார்ந்து வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி சேத்னா, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தன் முன் முறையிட்டதன் அடிப்படையில் ப்ரகாஷ் சந்த் வழக்கு மற்றும் தான் பாதி விசாரித்த வழக்குகள் அத்தனையையும் தன் முன் தனிப் பட்டியலாக வைக்கும்படி நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிடுகிறார். மீண்டும் விவகாரம் தலைமை நீதிபதிக்கு போகிறது. இந்த முறை தலைமை நீதிபதி, அந்த ஆள் கேட்பது போல, அந்த வழக்கையும், பாதி விசாரிக்கப்பட்ட மற்ற வழக்குகளையும் தனி பட்டியலாக அவர் முன்பு வைக்கும்படி உத்தரவிட்டார்.
உத்தரவிட்டதோடு அல்லாமல், ஏற்கனவே நீதிபதிகள் குடியிருப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்ட பொது நல வழக்கையும் தன் முன்னால் வைக்கும்படி உத்தரவிட்டார். அந்த வழக்கு முதலில் சேத்னாவால் விசாரிக்கப்பட்டாலும், பின்னர் ஒரு டிவிஷன் பென்ச்சால் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை எடுத்து அதில் ஒரு உத்தரவு போடுகிறார் நீதிபதி சேத்னா.
இந்த வழக்கை நான் பாதி விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தேகமான முறையில், இந்த வழக்கை டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றிய தலைமை நீதிபதியின் செய்கையானது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். அதனால், பதிவாளர், தலைமை நீதிபதிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற டிவிஷன் பென்ச், தலைமை நீதிபதியின் அதிகாரம் குறித்து கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தது.
(1) That the administrative control of the High Court vests in the Chief Justice alone. On the judicial side, however, he is only the first amongst the equals. (2) That the Chief Justice is the master of the roster. He alone has the prerogative to constitute benches of the court and allocated cases to the benches so constituted. (3) That the puisne Judges can only do that work as is allotted to them by the Chief Justice or under his directions.
ஒரு நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரம் முழுக்க முழுக்க தலைமை நீதிபதியிடம் மட்டுமே உள்ளது. நீதித்துறையைப் பொறுத்த வரை, அவர் மற்ற நீதிபதிகளில் மூத்தவர் மட்டுமே. யாருக்கு எந்த வழக்கை போடுவது என்ற பட்டியல் தயாரிப்பதில், தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம். யார் எந்த வழக்கை விசாரிப்பது, எந்த டிவிஷன் பென்ச்சில் எந்த நீதிபதி அமர்வது என்ற முடிவுகளை அவர் மட்டுமே எடுப்பார். மற்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி அவர்களுக்கு ஒதுக்கும் பணியை செய்ய வேண்டும்.
இது உச்சநீதிமன்ற டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு எல்லா நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். இது நீதிபதி கர்ணனுக்குத் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தலைமை நீதிபதி எடுத்த ஒரு நிர்வாக முடிவுக்கு, உள்நோக்கம் கற்பித்து, அவர் தலித் என்பதால், அவருக்கான மாவட்டத்தை மாற்றினார் என்று கூறுவது பச்சை அயோக்கியத்தனம். அதுவும், அவர் மீது தலைமை நீதிபதிக்கு புகார் சென்றிருக்கிறது என்பதை அறிந்த பிறகு, இப்படி ஒரு புகாரை அளிப்பதென்பது, ஒரு கேடுகெட்ட செயல்.
ஏற்கனே ஆதிக்க சாதியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை, தலித்துகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை, தன்னுடைய சுயநலத்துக்காக பொய்யாக பயன்படுத்தும் நீதிபதி கர்ணன் போன்றோர் தலித் இனத்தின் விரோதிகள். இந்த நிலையில், ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்து கொண்டு, கர்ணன் இது போன்ற பச்சைப் பொய்யை, அதுவும் அயோக்கியத்தனமான ஒரு பொய்யை புகாராக எழுதி, அதை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்புவதை விட, மோசமான இழிசெயல் எதுவுமே இருக்க முடியாது. இந்த பச்சை அயோக்கியத்தனத்தை கண்டிக்க வார்த்தைகளே இல்லை.
நீதிபதி கர்ணன் போன்ற நபர்களை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க வேண்டும். ஆனால், கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வரை, கர்ணன் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒரு நபரை பதவி நீக்கம் செய்வது, நடைமுறையில் நடக்காத காரியம் என்பதாலேயே, கர்ணன் போன்ற நபர்கள் குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதனாலேதான், தலைமை நீதிபதி அறைக்குள் நுழைந்து, அவரை மிரட்டும் அளவுக்கு துணிச்சல் பிறந்திருக்கிறது.
தலைமை நீதிபதி அகர்வால், கர்ணனுக்கு மாறுதல் உத்தரவு வரும் வரையில் காத்திருக்காமல், கர்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள் வழக்குகள் அனைத்தையும் வேறு நீதிபதிக்கு உடனடியாக மாற்ற வேண்டும். தலைமை நீதிபதி மீது பொய்க்குற்றச்சாட்டு கூறியதன் மூலம், தலைமை நீதிபதியின் அதிகாரத்தில் குறுக்கிட்டதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கும் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்.
தலைமை நீதிபதி அகர்வால்
இனி ஒரு நிமிடம் கூட நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றக் கூடாது. நீதிபதி கர்ணனை மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பரிந்துரை செய்தது போல, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்பாக பணியாற்றும் நீதிபதிகளையும், வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சும் வகையில் மகனின் திருமணம் நடத்திய நீதிபதியையும், மற்ற ஊழல் நீதிபதிகளையும் சிக்கிம், மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு மாறுதல் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றப்பட்ட மற்றொரு கழக உடன்பிறப்பான நீதிபதி ராஜா இளங்கோ, சென்னைக்கு வருவதற்கு தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பது தலைமை நீதிபதி அறியாதது அல்ல.
நீதிபதி கர்ணன் போன்ற நபர்கள், நீதிக்கு அவமானமே அன்றி வேறு அல்ல.