“அன்பு வணக்கங்கள் அனைவருக்கும்” என்றபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வா மச்சான்.. வா.. பனி ரொம்பப் பெய்யுது. ஹாட்டா செய்திகளை எடுத்து விடு” என்று தமிழை வரவேற்றான் ரத்னவேல்.
“முதல்ல தேர்தல் அணி நிலவரங்களை பாத்துடுவோம். பிஜேபி அணிக்கு விஜயகாந்த் போறது சந்தேகம்தான்”
“என்னடா இப்படி சொல்ற… ? பிஜேபி அணிக்குதான் விஜயகாந்த் போவாருன்னு பலத்த பேச்சா இருக்கே ? “
“கேப்டன் தன் கொள்கையில பிடிவாதமா இருக்கிறதால, பிஜேபியில யோசிக்கிறாங்க”
“என்னடா சொல்ற.. கேப்டனுக்கு என்ன கொள்கை ? “
“எந்தக் கட்சி 500 கோடிக்கு குறையாம குடுக்குதோ அந்தக் கட்சியோடதான் கூட்டணின்ற கேப்டனோட கொள்கை. அந்தக் கொள்கையில சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்”
“சரி… பிஜேபி ஒன்னும் யோக்கியமான கட்சி இல்லையே. நெறய்ய பணம் வச்சிருக்காங்க. குடுக்கறதுக்கு என்ன ? ” என்றான் வடிவேலு.
“அவங்க குடுக்கறதுக்கும் ரெடிதான். ஆனா, கேப்டன் இதுக்கு சரிப்பட்டு வருவாரான்னு அவங்களுக்கு சந்தேகம். கேப்டனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய செல்வாக்கு இல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில், அவரோட செல்வாக்கு கணிசமா சரிஞ்சிருக்கு. அதனால, இந்த ஆளுக்கு 500 கோடி குடுக்கறதுக்கு, அந்தப் பணத்தை நாமளே தமிழகத்தில் செலவு செய்தா, வெற்றி பெறலாம்னு நினைக்கிறாங்க. இது தவிரவும், ஆர்எஸ்எஸ், விஜயகாந்த்துக்கு இவ்வளவு பணம் கொடுப்பது அவசியமில்லைன்னு நினைக்கிறாங்க”
“அதுவும் சரிதான். ஆனா, கேப்டன் கொஞ்சம் ஓவராத்தான் எதிர்ப்பாக்கறாரு இல்ல ? ” என்று வினவினான் ரத்னவேல்.
“அதுக்கு காரணம் இல்லாம இல்லையே. ஒரு பெரிய கட்சியான அதிமுக கூட சேந்து 27 எம்.எல்.ஏ ஜெயிச்சுட்டார். இன்னொரு பெரிய கட்சியான திமுக, காலில் விழாத குறையா கெஞ்சறாங்க. அப்படி இருக்கும்போது, அவருக்கு ஏன் இறுமாப்பு இருக்காது ? திருமாவளவன் போயி கெஞ்சறாரு. மனிதநேய மக்கள் கட்சியில போயி கெஞ்சறாங்க. அப்போ கேப்டன் மிஞ்சத்தானே செய்வாரு ?”
“அதுவும் சரிதான். ஆனா, கேப்டன் மலேசியாவுக்கு ஓய்வு எடுக்கப் போயிட்டாரே… ? “
“அங்கயும் அவரை விடல. தயாநிதி மாறன் மலேசியாவில் விஜயகாந்தை சந்திச்சு பேசியிருக்காரு. அங்க கூட்டணித் தொகுதிகளை விட பணப் பரிவர்த்தனை பத்தித்தான் முக்கியமான பேச்சு நடந்திருக்கு. மனித நேய மக்கள் கட்சிப் பிரதிநிதிகளும் மலேசியாவில் விஜயகாந்தை சந்திச்சு பேசியிருக்காங்க. பிஜேபி கூட மட்டும் போயிடாதீங்கன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க”
“கேப்டன் என்ன சொன்னாராம் ? “
“கிட்டத்தட்ட சம்மதம்தான்”
“எப்படி சொல்ற… ? பேரம் முடிவாயிடுச்சா ? “
“சொல்றேன் பொறு. திருச்சி சிவாவை மாநிலங்களவை உறுப்பினரா கருணாநிதி அறிவிச்சிருக்காரே பாத்தியா ? ” என்று எதிர் கேள்வி கேட்டான் தமிழ்.
“பாத்தேன்டா. எப்படி திமுக ஜெயிக்க முடியும் ? திமுக வசம் போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையே ? திமுக எம்.எல்.ஏக்கள் 23, புதிய தமிழகம் 1, மனித நேய மக்கள் கட்சி 2. மொத்தத்தில் 26 எம்.எல்.ஏக்கள் மட்டும்தானே இருக்காங்க.. அப்புறம் எப்படி ?” என்று வியப்பாக கேட்டான் பீமராஜன்.
“அங்கேதான் கருணாநிதியின் சூட்சுமம் இருக்கு. திருச்சி சிவாவை வேட்பாளரா அறிவிச்சதன் மூலமா, தேமுதிக தங்கள் பக்கம் இருக்குன்றதை சூசகமா சொல்லிக் காட்றார்”
“தேமுதிக – திமுக கூட்டணி அப்போ இறுதியாயிடுச்சா ? “
“கூட்டணி இறுதியாயிடுச்சு. ஆனா, திருச்சி சிவா எம்.பி ஆகப்போறதில்லை”
“என்னடா சொல்ற… ? அவர்தான் திமுக மாநிலங்களவை வேட்பாளர்னு அறிவிச்சிட்டாங்களே ? ” என்று அதிர்ச்சியாக கேட்டான் ரத்னவேல்.
“என்னடா நீ… இத்தனை நாளா பத்திரிக்கையாளரா இருந்துக்கிட்டு கருணாநிதியை புரிஞ்சுக்காம பேசறியே… திருச்சி சிவா என்ன கருணாநிதி குடும்ப உறுப்பினரா ? அவர் திமுக உறுப்பினர்தானே ? தேமுதிக, திமுக கூட்டணிக்கு வர்றதுக்கு, கேப்டன் விதிச்ச நிபந்தனை, சுதீஷை எம்.பியாக்கனும் ன்றதுதான்”
“இதுக்கு திமுக தரப்பில் ஒத்துக்கிட்டாங்களா ? “
“ஒத்துக்கலைன்னா வேற வழி…. ? பல ஆண்டுகால பாரம்பரியம் மிக்க திராவிட முன்னேற்றக் கழகம், நேற்று கட்சி தொடங்கிய தேமுதிகவிடம் கெஞ்சுகையில், எத்தனை பலவீனமான நிலையில் திமுக இருக்கிறது என்பது தெரிகிறது. வேறு வழியில்லாத நிலையில் ஒத்துக் கொண்டே தீருவார்கள்”
“சரி.. அதுக்கு திருச்சி சிவாவை வேட்பாளரா அறிவிக்காமலே இருந்திருக்கலாமே… ? ” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் வடிவேலு.
“இந்த இடத்தில்தான் கருணாநிதியின் காய் நகர்த்தல்களை கவனமா பார்க்கணும். பல வழிகளில் பலருக்கு செக் வைத்திருக்கிறார் கருணாநிதி. சிவாவை வேட்பாளரா அறிவித்ததன் மூலமா, காங்கிரஸுக்கு மறைமுகமான அழைப்பு. விஜயகாந்துக்கு நேரடியான அழைப்பு. காங்கிரசோடு கூட்டணி கூடாது என்று சொல்லும் ஸ்டாலினுக்கு செக். நான் இருக்கும் வரை நான்தான் தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
விஜயகாந்துக்கும் ஒரு வகையில இது செக். கூட்டணிக்கு வந்தால், சுதீஷ் எம்.பியாவார். திருச்சி சிவாவை தியாகம் பண்ணக் கூட கழகம் தயாராக இருக்கிறது என்று சொல்வதற்காகவும் இருக்கும்.”
“காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கிற ஐடியா இன்னும் தலைவருக்கு இருக்கா ?”
“திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட ஒரு வலுவான கூட்டணியை அமைக்கலாம்னு திட்டம் போட்டிருக்கார் கருணாநிதி.”
“வாக்கு வங்கி சதவிகிதத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி மாதிரிதான் தெரியுது”
“அது மட்டுமில்ல. விஜயகாந்த் கேட்கும் 500 கோடியை தருவதற்கு திமுக தயாராக இல்லை. காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தால், விஜயகாந்த் கேட்கும் 500 கோடி மட்டுமில்லாம, மொத்த கூட்டணியோட தேர்தல் செலவையும் காங்கிரஸ் தலையில கட்டிடலாம்னு ப்ளான் போட்றார். “
“காங்கிரஸ் அவ்வளவு தொகை கொடுப்பாங்களா ? ” என்று வியப்பாக கேட்டான் பீமராஜன்.
“என்னடா பேசற… ? காங்கிரஸ் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு அனாதைப் பிணம். பணம் வைச்சிருந்தாலும் யாரும் கிட்ட சேக்க மாட்டேங்கிறாங்க. இப்படிப்பட்ட சூழல்ல, இந்தக் கூட்டணியில போனா, கவுரவமா இருக்கும்னு நினைக்கிறாங்க. இதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு”
“சரி.. காவித்துண்டு கபாலி என்ன நிலைமையில இருக்கார் ? ” என்றான் பீமராஜன்.
தமிழ் புரிந்து கொண்டு சிரித்தான்.
“யார்டா அது காவித்துண்டு கபாலி ? ” என்று புரியாமல் கேட்டான் ரத்னவேல்.
“அதோ அவன் புரிஞ்ச மாதிரி பேசறானே.. அவன்கிட்டயே கேளு” என்றான் பீமராஜன்.
“காவித்துண்டு கபாலி, பிஜேபியோட அடிமையாவே மாறிட்டார். நாள்தோறும் மோடி பஜனை பண்ற அளவுக்கு விசுவாசமா இருக்கார். மோடியை பிரதமராக்கியே தீருவேன்னு சூளுரைத்திருக்கிறார். மோடி என்ற ஒருவர் பிறப்பார், அவர் இந்தியாவை ஆளுவார்னு கிரேக்க புராணத்தில் ஏதாவது ஆதாரம் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கார்” என்று சிரித்தான் தமிழ்.
“விளையாடாதடா.. கூட்டணி பேச்சுவார்த்தை என்ன நிலைமையில இருக்கு சொல்லு” என்றான் பீமராஜன்.
“இப்போதைக்கு பிஜேபி தலைமை என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்றால், தேமுதிக வந்தால் 12 முதல் 15 தொகுதி. மதிமுகவுக்கு 5 தொகுதி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதி. கொங்கு முன்னேற்றப் பேரவைக்கு 2 தொகுதி மற்றும் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி.
பிஜேபியும் எப்படியும் கேப்டனை வளைக்கணும்ன்றதுல முனைப்பா இருக்காங்க. மலேசியாவில தங்கியிருக்கிற கேப்டனை சந்திக்க, வெங்கையா நாயுடு தன்னோட உறவினரை அனுப்பியிருக்காரு.
பாட்டாளி மக்கள் கட்சியை விட தனக்கு 2 தொகுதிகள் குறைவாக ஒதுக்குவது வைகோவுக்கு உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கும். அதுவும் தேமுதிக கூட்டணிக்கு வந்தால் 15 தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கினால், காவித்துண்டு கபாலியோட நிலைமை பரிதாபம்தான்.
சரி.. விஜயகாந்த்
பிஜேபி தலைவர்களான எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர், தனியா அதிமுக கூட்டணிக்கு அடி போட்டுக்கிட்டு இருக்காங்க. தாங்கள் விரும்பும் தொகுதிகளை பிஜேபி தலைமை ஒதுக்காத பட்சத்தில் அதிமுக பக்கம் தாவினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை. இல.கணேசனுக்கு, திமுகவோட போகணும்னுதான் ஆசை. திமுகவோடு கூட்டணி சேர்ந்தாத்தான் ஜெயிச்சி எம்.பியாக முடியும்னு நினைக்கிறாரு. மதிமுக மற்றும் பாமகவோட போனா, போணியாகாதுன்னு நினைக்கிறாரு.”
“சரி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு பிஜேபி கூட்டணி ஓகே வா ? “
“பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், 9 மக்களவை சீட்டும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கணும்னு நினைக்கிறாரு. தன்னோட விருப்பத்தை பாஜக தலைமையிடமும் சொல்லி விட்டார். ஆனா, பாஜக தலைமை அத்தனை இடங்கள் ஒதுக்க முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டாங்க. இதனால, எந்தப் பக்கம் போறதுன்னு டாக்டர் முழிச்சுக்கிட்டு இருக்கிறார். தன்னோட கோரிக்கையில இருந்து இறங்கி வர்றதைத் தவிர டாக்டருக்கு வேற வழியே இல்லை”
“டாக்டரோட உறவினரை கட்சியில இருந்து தூக்கிட்டாங்களாமே.. என்ன விஷயம் ? “
“ஆமா.. டாக்டரோட உறவினர் முன்னாள் எம்.பி தன்ராஜ். இவர் டாக்டருக்கு ரொம்ப நெருக்கமானவரா அறியப்பட்டவர். திடீர்னு என்ன ஆச்சன்னு தெரியலை. தனராஜை கட்சியை விட்டே நீக்கிட்டாரு டாக்டர்”
“அங்கயும் குழப்பம் நீடிக்குதுன்னு சொல்லு ? “
“ஆமா நிச்சயமா. இந்த குழப்பம் இன்னும் பெருசா வெடிக்கும்னு சொல்றாங்க. இது தவிரவும், தற்போது வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதிலும், பிரச்சினை வெடிக்கும்னு சொல்றாங்க”
“என்னடா சொல்ற ? என்ன பிரச்சினை அது ? ” என்று கேட்டான் ரத்னவேல்.
“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னியர் அறக்கட்டளைக்காக கோனேரிக்குப்பத்தில் நிறைய்ய நிலங்களை தானமா கொடுத்திருந்தார். தற்போது வன்னியர் அறக்கட்டளை நிர்வாகம், ராமதாஸ் கையில வந்திருக்கு. இந்த அறக்கட்டளையை நிர்வாகம் பண்ண ஏகப்பட்ட செலவு ஆகுதுன்னு சொல்லி, இந்த நிலங்களை விக்கத் தொடங்கியிருக்கார். இந்த நிலத்தை யாருக்கு விக்கிறாருன்னா, அவரோட மருமகன் டாக்டர் பரசுராமனுக்கே விக்கிறார். இந்த நிலத்தை வாங்கிய பரசுராமன், ஒப்புதல் இல்லாத இந்த நிலங்களுக்கு ஒப்புதல் வாங்கி, நல்ல விலைக்கு வித்து, பல லட்சம் லாபம் பாத்துக்கிட்டு இருக்காரு. வன்னியர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்த நிலங்களை, ராமதாஸ் குடும்பம் அபகரிக்கிறதை பாத்து, பல வன்னியர்கள் பொருமலில் இருக்காங்க”
“இந்த பிரச்சினை எதுவுமே தெரியாத மாதிரி, ராமதாஸ் தொகுதிகளுக்கு கேன்டிடேட் அறிவிச்சுட்டாரே ? ” என்றான் வடிவேல்.
“ஆமாம். கேன்டிடேட் போட்டதுலயும் சிக்கல் வந்திருக்கு. ஆரணி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிப்பாருன்னு ராமதாஸ் அறிவிச்சிருக்காரு. அந்தத் தொகுதி அவரோட சம்பந்தி கிருஷ்ணசாமியோட தொகுதி. அந்தத் தொகுதியில் பாமக போட்டியிடும்னு அறிவிச்சிருக்கிறதால, கிருஷ்ணசாமியோட மகன், விஷ்ணு பிரசாத் கடுமையா கோபமடைஞ்சிருக்காரு. இதனால, இவர் அதிமுகவுக்கு தூது விட்டிருக்கார். அன்புமணி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நிற்க நான் தயார் னு சொல்லியனுப்பியிருக்கார்”
“தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிக்கு பிஜேபி கூட்டணியில எத்தனை சீட்டுடா ஒதுக்க போறாங்க ? ” என்றான் ரத்னவேல்.
“நீ எந்தக் கட்சியை சொல்றன்னு தெரியுது. பச்சமுத்து உடையாரின் இந்திய ஜனநாயகக் கட்சியைத்தானே சொல்ற.. ? அந்தக் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதா, பிஜேபி தலைமை முடிவெடுத்திருக்கு. ஒரு சீட் கூட ஒதுக்காம விட்டுடலாம்னுதான் இருந்தாங்க. ஆனா, பச்சமுத்துவின் ஊடக பலமும், அவரிடம் இருக்கும் பணமும், அவருக்கு அந்த ஒரு இடத்தை பிடிச்சுக் கொடுத்திருக்கு”
“அம்மாவுக்கு எதிராக பிஜேபி கூட கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திச்சா அம்மா கோபமாயிட மாட்டாங்களா ? “
“அம்மா ஒரு வேளை கோபமாயிட்டா, பச்சமுத்து கம்பி எண்ணுவார் ” என்று குண்டைத் தூக்கிப் போட்டான் தமிழ்.
“என்னடா சொல்ற ? அவர் மேல வழக்கு எதுவும் பதிவு பண்ணியிருக்காங்களா என்ன ? “
“2011 தேர்தல் விதிமுறைகளை மீறியதா அவர் மேல தேவக்கோட்டை டவுன் காவல் நிலையத்துல வழக்கு ஒன்னு நிலுவையில இருக்கு. கடந்த ஆண்டு மார்ச் 22 2013 அன்னைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததற்காக அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு போட்ருந்தாங்க. அந்த வாரண்ட் இது வரைக்கும் நிலுவையில இருக்கு. ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவல் தெரிஞ்சு அதை அப்படியே வைத்திருக்காங்க. பாரி வேந்தர் சேட்டை பண்ணாருன்னா, எப்போ வேணாலும் தூக்குவாங்க”
“பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கியிருக்காங்களே… என்ன கணக்கு ? “
நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா. பண்ருட்டியாருக்கு அண்ணா விருது. என்ன இருந்தாலும் அவர் மூத்தவர் இல்லையா ? விருது மட்டுமில்லாம, பண்ருட்டியாரை மாநிலங்களவை உறுப்பினராக்குவதுன்னு அதிமுக தலைமை முடிவு செய்திருக்கிறதா சொல்றாங்க. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், எம்.ஜிஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமா இருந்தவர் பண்ருட்டி. விஜயகாந்த் கட்சித் தொடங்கி, அதிமுகவோடு கூட்டணி சேர்வதற்கு அடிப்படையாக இருந்தவர் பண்ருட்டி. இந்த அடிப்படையில், நாளை டெல்லிக்கு பண்ருட்டி அனுப்பப்பட்டா, அதிமுகவோட அரசியல் காய் நகர்த்தல்களுக்கு பயன்படும்னு முடிவெடுத்திருக்கிறதா சொல்றாங்க”
“அழகிரி சமாதானமாயிட்டாரா ? ” என்று அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் கணேசன்.
“அண்ணே.. அழகிரியை வசியம் பண்ணி, தன் பாக்கெட்டுல போட்டுக்கிட்டார் கருணாநிதி”
“என்னப்பா சொல்ற ? “
“கடந்த சனிக்கிழமை அழகிரி கருணாநிதியை வந்து சந்திச்சார். கடந்த முறை போல இல்லாம, இந்த முறை, கருணாநிதியே அழகிரியை அழைச்சி பேசியிருக்கார்.
திமுக 25 தொகுதி போட்டியிடுவதாக இருந்தால் உனக்கு ஆறு இடம். ஆறு வேட்பாளர்களையும் நீயே தேர்வு பண்ணிக்கலாம். அந்த ஆறு இடத்துலயும் திமுக வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு. இதை வைச்சு இழந்த உன் செல்வாக்கை மீட்டு எடுத்துக்க. அதே நேரத்துல 25க்கு குறைவா திமுக போட்டியிட்டா, அதற்கேற்றார் போல, உனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளோட எண்ணிக்கையும் குறையும். சண்டை போடாம, திமுக வேட்பாளர்களை வெற்றி பெற வச்சன்னா, கழகத்துல உனக்கு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்படும் னு சொல்லியிருக்கார். “
“அழகிரி இதுக்கு ஒத்துக்கிட்டாரா ? “
“நாய் குட்டியை மடியில படுக்க வச்சி தடவுக் குடுத்தா சந்தோஷமா படுத்துக்கிட்டு இருக்கும்ல ? அது மாதிரி ஆயிட்டார் அழகிரி. தலையை ஆட்டிக்கிட்டே மதுரை பக்கம் போயிட்டார். அழகிரி ஆதரவாளர்கள் இடை நீக்கம் பண்ணப்பட்டது, விரைவில் ரத்து செய்யப்படும் னு வாக்குறுதி கொடுத்திருக்கார்”
திடீரென்று “பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்… அய்யனே என் அய்யனே… ” என்று பாடினான் வடிவேலு.
“இருடா… நீ எதுக்கு இந்த பாட்டை பாடுறன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லி விட்டு தொடர்ந்தான் தமிழ்.
“மார்க்சிஸ்ட் கட்சியோட டி.கே ரங்கராஜனின் எம்.பி பதவி முடிவுக்கு வர்றதை அடுத்து, அவரை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப, ஆதரவு கேட்டு, செவ்வாய் கிழமை அன்னைக்கு கொடநாட்டில் போய் சிபிஎம் தலைவர்கள் சந்திச்சிருக்காங்க. மாநிலங்களவை எம்.பிக்கு ஆதரவு தர்றேன். ஆனா மக்களவையில ஒரு சீட்டுதான்னு சொல்லியிருக்காங்க”
“என்ன சொன்னார்கள் தோழர்கள் ? கொதிச்சிருப்பாங்களே ? ” என்று புன்முறுவலோடு கேட்டான் பீமராஜன்.
“ஆமாமா… கொதிச்சுப் போயி, தேங்ஸ் மேடம்னு சொல்லிட்டு வந்துட்டாங்க. இதே உடன்பாடுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும். ராஜாவை மாநிலங்களவையில் ஜெயிக்க வைச்சதால, இந்த முறை அவங்களுக்கும் ஒரே ஒரு சீட்தான். இடது சாரிகளுக்கு ரெண்டு இடத்தை ஒதுக்கிட்டு 38 சீட்டில் போட்டியிடுவதா, அம்மா திட்டம் போட்டிருக்காங்க. இதோட இன்னொரு நிபந்தனை என்னன்னா, நாளை மூன்றாவது அணி அமைக்கப்பட்டு, ஜெயலலிதா தலைமையேற்கும் சூழல் வந்தால், ஜெயலலிதா பிரமராவதை, இடது சாரிகள் ஆதரிக்கணும் அப்படின்றதுதான் அந்த நிபந்தனை”
“இடது சாரிகள் இதுக்கு ஒத்துக்கிட்டாங்களா ? “
“அம்மா வாழ்கன்னு கோஷம் போடாத குறைதான். மத்தபடி எல்லாம் ஓக்கே. இதைப் பத்தி நான் ஏற்கனவே பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை செப்டம்பர் மாதம் சந்திச்சப்பவே சொல்லியிருக்கேன். இணைப்பு“
“மதவாத சக்திகளை தடுக்கறதுக்காக அப்படிப் பண்றாங்கப்பா. இப்படி ஏளனமா பாக்கறியே.. நீ பாக்கறதைப் பாத்தா, ஒவ்வொரு தேர்தலுக்கும், பத்து எம்எல்ஏ சீட்டுக்கும், ரெண்டு எம்பி சீட்டுக்கும் அவங்க பிச்சை கேட்டுக்கிட்டு அலையற மாதிரியே பாக்கறியே… அவங்க கொள்கை வாதிகள்பா” என்றார் கணேசன். “அம்மா எப்போப்பா சென்னை வர்றாங்க ? ” என்று தொடர்ந்தார் கணேசன்.
“அம்மா அநேகமா 26ம் தேதி குடியரசு நாள் விழாவுக்கு ஒரு நாள் முன்னாடி வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. வந்த ஒரு வாரத்துல ஜனவரி 30ம் தேதி அடிமைகள் மன்றம் கூடுது”
“அடிமைகள் மன்றமா ? ” என்றான் ரத்னவேல்.
“சட்டசபை கூட்டத்தொடரை சொல்றேன் டா.. அடிமைகள் மட்டும்தானே அங்க பேச அனுமதிக்கப்படுவாங்க. “
“சரி. கொடநாட்டில் அம்மா என்னதான் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ? “
“அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்களோ தெரியாது. ஆனா, ஜெயலலிதா கொடநாடு போனதால, கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு மரங்கள் வெட்டப்பட்டிருக்கு. பல ஆண்டு காலமாக வளர்ந்த மரங்கள், இப்படி வெட்டப்பட்டிருப்பது, சுற்றுச் சூழலை எவ்வளவு பாதிக்கும்னு படிச்ச ஜெயலலிதாவுக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை.
கொடநாடு பங்களாவில், அதிகாரிகளுக்குன்னு ஒரு கட்டிடம் இருக்கு. அமைச்சர்கள், கட்சிக்காரர்களுக்குன்னு ஒரு கட்டிடம் இருக்கு. எல்லா அறைகள்லயும் ஹீட்டர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கு. அத்தனை அடிமைகளும், அம்மாவைப் பாக்க போறேன்னு சொல்லிட்டு, அங்க போய் ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க. “
“என்ன பண்றதுப்பா. உலகத்துல எங்கயுமே, ஓய்வு இல்லத்துல, ஓய்வெடுத்துக்கிட்டு ஆட்சி பண்ற ஒரு முதல்வரை பார்க்க முடியாது. தமிழ்நாட்டோட தலையெழுத்து” என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.
“நீதிபதிகள் நியமனத்துல என்னப்பா நடக்குது ? வழக்கறிஞர்கள் போராட்டம் தீவிரமடைஞ்சிருக்கு போல இருக்கே ? ” என்றார் கணேசன்.
“வழக்கறிஞர்கள் போராட்டம் ரொம்பவும் தீவிரமடைஞ்சிருக்கு. மூணாவது நாளா நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியிருக்காங்க. கடந்த செவ்வாய்க்கிழமை அன்னைக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்காங்க. புதன்கிழமையும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கு. இந்த விஷயத்துல வழக்கறிஞர்கள் ஒற்றுமையா நடத்தும் போராட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை கலங்க வைத்திருக்கு. அவர் நினைச்ச மாதிரி நீதிபதிகளின் நியமனத்தை நடத்திட முடியாதுன்றதை உணர ஆரம்பிச்சிருக்கார். “
உண்ணாவிரதம் முடிந்து பழச்சாறு அருந்தும் வழக்கறிஞர்கள்
“சிங்கம் என்னப்பா பண்ணுது ? ” என்று கேட்டார் கணேசன்.
“அண்ணே. நீதிபதி கர்ணன் மீது, தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய புகாரின் நகலை அளிக்குமாறு கேட்டு திங்கட்கிழமை ஒரு கடிதம் அனுப்பினார். அதுக்கு பதில் கிடைத்ததான்னு தெரியலை. செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில் ஒரு மனுவை தாக்கல் பண்ணியிருக்கார். அந்த மனுவில் தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதிகள் அக்னிஹோத்ரி மற்றும் சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பெரிய தவறிழைத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக பொது மேடையில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, நான் அந்த நீதிமன்றத்தில் நுழைந்து பேசியதை பெரிதாக உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்ததே, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நடந்த ஊழலை மறைப்பதற்காகத்தான். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள எம்.எம்.சுந்தரேஷ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் உறவினர். இவருக்கும் நீதிபதிகள் நியமன ஊழலில் பெரிய பங்கு இருக்கிறது. இப்படியெல்லாம் சொல்லியிருக்கார். “
“என்னப்பா அநியாயமா இருக்கே… ? மொட்டை பெட்டிஷன் போட்றவன் கண்டபடி எழுதற மாதிரி இவர் எழுதியிருக்காரே… ? ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி இப்படியெல்லாம் எழுதலாமா ? ” என்றார் கணேசன்.
“என்னண்ணே பண்றது ? இன்னும் இந்த ஆளை நீதிபதியா வச்சிக்கிட்டு இருக்காங்களே.. ? என்ன பண்றது ? “
“சரிடா… இந்த கர்ணன் என்ன லூசா ? ” என்றான் ரத்னவேல்.
“ஏன்டா இப்படிக் கேக்கிற ? “
“நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்துக்கு மாத்தி உத்தரவு போடப்பட்டிருக்கு. இது போன வாரமே முடிஞ்சு போன விவகாரம். இனி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. அப்படி இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை எதுக்காக தாக்கல் செய்யணும் ? “
“அருமையா கேட்ட மச்சான். ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருத்தர், இந்த மாதிரி அறியாமையில் மனுத்தாக்கல் செய்தா பொறுத்துக்கலாம். ஆனா ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி இப்படி அறிவில்லாம இருக்காரேன்னு கேள்வி எழும். இது நீதிபதி கர்ணன் தெரியாமல் செய்த காரியம் அல்ல. அவர் தெரிஞ்சே செய்த காரியம். நீதிபதிகள் நியமனம் தொடர்பா போராட்டம் நடக்கும்போது, இப்படியெல்லாம் செய்தா, இவர் மாற்றப்படும்போது, உயர்நீதிமன்றத்தில் பெரிய போராட்டம் வெடிக்கும்னு திட்டம் போட்றாரு”
“அப்படி நடக்குமா ? “
“இந்த முறை, கர்ணனின் முகத்திரை கிழிக்கப்பட்டிருச்சு. அதனால, இவருக்கு ஆதரவா வழக்கறிஞர்கள் களமிறங்குவது சந்தேகமே”
“ஈஷா மையத்தின் மீது தாக்கல் செய்த வழக்குகள் என்ன நிலைமையில இருக்கு ? “
“ஈஷா மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அப்படியே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கு. இதற்கிடையில் ஈஷா பள்ளிகளுக்கான அட்மிஷன் தொடங்கி அமோகமா நடந்துக்கிட்டு இருக்கு”
“அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதா ? ” என்றான் ரத்னவேல்.
“அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தா, திருட்டுச்சாமியார் இந்நேரம் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓடியிருப்பார். ஆனா, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மாட்டேங்குதே.
திருட்டுச் சாமியார் தனக்கு உள்ள பண பலத்தை வைச்சு, எப்படியாவது தன்னோட எதிர்ப்பாளர்களை சமாளிச்சிடலாம்னு நினைக்கிறார். மக்கள் டிவியில, திருட்டுச் சாமியாரைப் பத்தி ஒரு செய்தி வெளியிட்டாங்க. அதில் ஈஷா நிறுவனம் சட்டவிரோதமா கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா செய்தி போட்டிருந்தாங்க.
இதையடுத்து, ஈஷா நிறுவனம், ஒரு திருட்டுச் சாமியாரைப் பத்தி ஒரு நிகழ்ச்சி தயாரிச்சு, அந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஒரு கணிசமான தொகையையும் கொடுத்ததும் மக்கள் தொலைக்காட்சி அமைதியாயிட்டாங்க. இது மாதிரி தனக்கு எதிராக செயல்படக் கூடிய அனைத்துத் தரப்பினரையும் பணம் குடுத்து, ஆஃப் பண்ணும் வேலையில் இறங்கியிருக்கார் திருட்டுச் சாமியார். திருட்டுச் சாமியாருக்கு எதிராக, கோவையில் செயல்பட்ட முக்கிய நபர்கள் இப்போ அமைதியாயிட்டாங்க”
மக்கள் தொலைக்காட்சியில் ஈஷாவுக்கு எதிரான செய்தி
மக்கள் தொலைக்காட்சியில் ஜக்கியின் பொங்கல் நிகழ்ச்சி
“சவுக்கு தளத்துல அந்த திருட்டுச் சாமியாருக்கு எதிரா தொடர்ந்து எழுதிக்கிட்டு இருக்காங்களே… அவங்களை அணுகலையா ? “
“சவுக்கு தளத்தையும் அணுகியிருக்காங்க. ஈஷா மையம் சார்பா பேசறோம். எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் னு சொல்லியிருக்காங்க. கட்டிடத்தையெல்லாம் இடிச்சுடுங்க. அதுக்கப்புறம் பேசலாம்னு சொன்னதும், அத்தோட போயிட்டாங்க”
“அவனுங்களா அமைதியாயிடுவாங்க.. நம்ப முடியலையே… ? ” என்று இழுத்தான் ரத்னவேல்.
“நீ சொல்றது சரிதான் மச்சான். ஈஷா திருட்டுச் சாமியாரோட உத்தரவின்படி, savukku.org ன்ற இணையதள முகவரியை அவங்க பேருக்கு பதிவு பண்ணி வைச்சுக்கிட்டாங்க. இப்படி பதிவு பண்ண முகவரி மூலமா, சவுக்கு மாதிரியே போலியா ஒரு தளத்தை உருவாக்கி, அந்த தளத்தில் சாமியாரை புகழ்ந்து எழுதணும்னு திட்டம் போட்டிருக்காங்க”
“சரியான கப்பிப் பயலுகளா இருப்பானுங்க போல இருக்கே…. ? ” என்று அலுத்துக் கொண்டான் பீமராஜன்.
“கப்பிப் பயலுகதான். என்ன பண்றது. விலை கொடுத்து வாங்க முடியலைன்னதும், இந்த வழியில முயற்சி பண்றாங்க. சரி. நாம கௌம்பலாமா ? நேரமாகுது” என்றான் தமிழ்.
“போலாம்பா” என்று கணேசன் எழுந்தார். சபை கலைந்தது.