நீதிபதி கர்ணனின் விவகாரங்களைப் பற்றி எழுதியதும் அந்த சம்பவத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கட்டுரை இணைப்பு. நீதிபதி கர்ணன் தலைமை நீதிபதி அறைக்குள் சென்று, அவரை அவதூறாகப் பேசிய சம்பவம் முதல் முறை அல்ல.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இக்பால் இருந்த காலத்தில், அவர் மீதான ஊழல் புகார்களில் தப்பிப்பதற்காக, சக நீதிபதிகள் தன்னை சாதி ரீதியாக அவமானப்படுத்துகிறார்கள் என்று புகார் அளித்தபின், ஊடகங்களுக்கு பேட்டியளித்த பின், அவரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாக இருந்த திட்டம் உடனடியாக கைவிடப்பட்டது. அப்போது கர்ணனுக்கு ஆதரவாக 80க்கும் மேற்பட்ட தலித் வழக்கறிஞர்கள் அப்போதைய தலைமை நீதிபதி இக்பாலின் அறைக்குள் புகுந்து செய்த கலாட்டாவின் விளைவே, நீதிபதி கர்ணனின் இன்றைய நடவடிக்கைகள்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி கர்ணனை மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பிய நாள் முதலாகே கர்ணன், தன்னைத் தற்காத்துக் கொள்வது மற்றும், உயர்நீதிமன்றத்தில் தலித் வழக்கறிஞர்களை தூண்டி விடும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
முதல் நாள் தலைமை நீதிபதி அகர்வால் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். அடுத்ததாக, தன் மீது அனுப்பப் பட்ட புகார் மனுவின் நகலை தருமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அடுத்ததாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில், தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அவருடைய உறவினரான உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி சதாசிவத்தோடு இணைந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், சதீஷ் அக்னிஹோத்ரி மற்றும் தலைமை நீதிபதி அகர்வாலோடு சேர்ந்து கூட்டச் சதியில் ஈடுபட்டு, 12 தகுதியில்லாத நபர்களை நீதிபதியாக்க முயன்றார் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வெகு சில நல்ல நீதிபதிகளில் எம்.எம்.சுந்தரேஷும் ஒருவர். அவர் கவுண்டர் என்ற ஒரே காரணத்துக்காக, நீதிபதி சதாசிவத்தோடு சேர்ந்து 12 தகுதியில்லாத நபர்களை நீதிபதியாக்க முயற்சி செய்தார் என்று கூறுவது, அபாண்டமானது மட்டுமல்ல….. அயோக்கியத்தமனமானதும் கூட. சுந்தரேஷ் போன்ற நீதிபதிகளால் அதிகபட்சம் ஒருவரையோ, அல்லது இருவரையோ பரிந்துரைக்க மட்டுமே இயலும். 12 பேரை பரிந்துரை செய்வது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும், மூத்த வழக்கறிஞர் காந்தி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம், இனி விசாரிக்க கூடாது என்று கூறி, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றியுள்ள நிலையில், கர்ணன் இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததே முட்டாள்த்தனமான காரியம்.
அடுத்ததாக கர்ணன் செய்த காரியம்தான் அயோக்கியத்தனமானது. நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பின்னணி என்னவென்றால், நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அறைக்கு சென்று, அவரை அவதூறாக பேசியது குறித்து, சித்ரா வெங்கட்ராமன் புகார் அளிக்க உள்ளார் என்ற செய்தி பரவியதுமே, அதற்கு முன்னதாக தான் புகாரளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நீதிபதி கர்ணன் அளித்த புகாரே இந்தப் புகார். நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல.. ஆனால், அதற்காக அவர் அறைக்கு சென்று, அவரை ஏகவசனத்தில் பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தான் அளித்த புகார்களின் மீது விசாரணை நடத்தி முடிக்கும் வரையில், தன்னை சென்னை உயர்நீதிமன்றத்தை விட்ட மாற்றக் கூடாது என்றும் ஒரு மனுவை அளித்துள்ளார் கர்ணன். நீதிபதி கர்ணனின் இந்த அயோக்கியத்தனங்களை சவுக்கு தளத்தைத் தவிர வேறு எந்த ஊடகமும் அம்பலப்படுத்தவில்லை.
தற்போது சவுக்கு வாசகர்களுக்காக பிரத்யேகமாக மற்றொரு விவகாரம் அம்பலத்துக்கு வருகிறது. கடந்த ஜனவரி 10ம் தேதி, நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட 23 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டார்கள். இந்த நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதிகளால் நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் அடங்கிய இந்த தேர்வில், நேர்முகத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் வழக்கறிஞர் லிங்கேஸ்வரன். திறமையானவர்.
2004ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு போராட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் என்பவர், சென்னை வந்து அப்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனை சந்திப்பதற்காக, சக நிர்வாகிகளோடு வந்திருக்கிறார். தற்போது தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருக்கும் பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படி வருகின்றனர். தலைமை நீதிபதியின் அறை வாசலில் காத்திருந்த லட்சுமணன் உள்ளிட்ட வழக்கறிஞர்களை, அவதூறாகப் பேசி, தாக்கத் தொடங்குகின்றனர். லட்சுமணன், அவரோடு வந்திருந்த வழக்கறிஞர்கள் இளமுருகு, சந்திரமோகன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்தத் தாக்குதலை அடுத்து, அந்த இடத்திலிருந்து அகன்ற, லட்சுமணன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், காவல்நிலையம் சென்று புகாரளிக்கின்றனர். அந்தப் புகார், குற்ற எண் 16/2004ல் பதிவு செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்காக பதியப்படுகிறது. இதில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், மாதவரம் செந்தில், பாண்டிச்சேரி அப்துல் ஹமீது, கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரன், தமிழரசன், பாஸ்கரன், டீக்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று, 09.11.2005 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த குற்றப்பத்திரிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“குற்ற அறிக்கையில் கண்ட எதிரி ஏ.1 பிரபாகரன் மற்றும் A.2 to A.7 எதிரிகள் மாதவரம் செந்தில், பாண்டிச்சேரி அப்துல் ஹமீது, கும்மிடிப்பூண்டி லிங்கேஸ்வரன், பாஸ்கரன், தீக்ராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக ஒன்றுகூடி, சாட்சி 1 to 5 ஆகியோரை தாக்கி காயம் ஏற்படுத்த வேண்ம் என்ற பொது நோக்கத்துடன், சேர்ந்து சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்து பிரிவு 147 இதச வின் படி தண்டிக்கக் கூடிய குற்றம் புரிந்துள்ளார்கள். அதே நாள், அதே இடத்தில், அதே நேரத்தில் மேற்படி சம்பவத்தின் தொடர்சியாக மேற்படி பொதுநோக்கை நிறைவேற்றும் பொருட்டு A1 to A.7 எதிரிகள், கைகளால் சாட்சி 2 இளமுருகு என்பவரின் முகத்திலும், மார்பிலும் தாக்கி சொற்ப காயங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எனவே குற்ற அறிக்கையில் கண்ட A.1 to A.7 வரையிலான எதிரிகள் அனைவரும் பிரிவுகள் 147, 341, 323, உடன் இணைந்த 49 இதச வின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றம் புரிந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதுவே குற்ற அறிக்கை”
இந்த குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டது 09.11.2005 அன்று. நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, முதல் நடவடிக்கையாக, குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொள்ளுமாறு, குற்றவாளிகளுக்கு சம்மன் வழங்கப்படும். இந்த சம்மனை வழக்கமாக, ஒரு காவலரோ தலைமைக் காவலரோ, குற்றவாளியிடம் சார்வு செய்வார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு காவலர், ஒரு சம்மனை, உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து, வழக்கறிஞருக்கு சம்மனை கொடுத்து விட்டு திரும்ப முடியுமா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. சம்மன் வழங்கச் சென்ற ஒரு உதவி ஆய்வாளருக்கும், வங்கி மேலாளர்களுக்கும் என்ன வரவேற்பை வழக்கறிஞர்கள் அளித்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். இந்த காரணத்தினால் யாருக்கும் சம்மன் வழங்கப்படாது, இந்த வழக்கு அப்படியே சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இப்படி குற்றப்பத்திரிக்கை நிலுவையில் உள்ள நபரைத்தான், உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. லிங்கேஸ்வரன் திறமையான வழக்கறிஞராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நேர்மையானவரா என்பதுதான் கேள்வி. மைலாப்பூரில் துணை ஆணையராக இருந்த லட்சுமி என்ற காவல்துறை அதிகாரியின் கணவர் குமரன், திருவண்ணமாலையில் வழக்கறிஞராக உள்ளார். இந்த குமரன் ஈடுபடாத கட்டப்பஞ்சாயத்துகளே கிடையாது. இந்தக் கட்டப்பஞ்சாயத்துகளை எதிர்த்து, ராஜ்மோகன் சந்திரா என்ற சமூக ஆர்வலர் குரல் கொடுத்தார். திருவண்ணாமலையில், குமரன் ஈடுபட்ட நில அபகரிப்புகள் என்று ஏராளமாக புகார்கள் அனுப்பப் படுகின்றன. லட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று, ராஜ்மோகன் சந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கை சந்திரா சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது, வழக்கறிஞர் லிங்கேஸ்வரன். இணைப்பு. இந்த ராஜ்மோகன் சந்திரா மீது, காவல்துறை அதிகாரி லட்சுமியின் தூண்டுதலின் பேரில், பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டன. பின்னாளில் வழக்கறிஞர் லிங்கேஸ்வரன், காவல்துறை அதிகாரி லட்சுமி மற்றும் குமரனுக்கு ஆதரவாக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உதவி செய்தார் என்று ராஜ்மோகன் சந்திரா தெரிவித்தார். அந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும்போதே ராஜ்மோகன் சந்திரா கொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய செய்தி, வழக்கறிஞர்களின் காவலன் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பிரபாகரன் அவர்கள், தன்னுடைய சக வழக்கறிஞரையே எப்படித் தாக்கியிருக்கிறார் என்பதுதான். 2004 மற்றும் 2005ல், வழக்கறிஞர் பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருந்த காலத்தில், இது போல வழக்கறிஞர்களை தாக்கியதாக பல முதல் தகவல் அறிக்கைகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. தன் சக வழக்கறிஞரை கூட்டமாக சேர்ந்து தாக்கிய பிரபாகரன்தான் இன்று தன்னை வழக்கறிஞர்களின் காவலனாக அழைத்துக் கொள்கிறார்.
இது போல, நீதித்துறைக்குள் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை முழுமையாக அம்பலப்படுத்தும் தளம், சவுக்கு தளம் மட்டுமே. நீதியரசர்கள் தவறிழைக்கையில் அதை அம்பலப்படுத்த எந்த ஊடகமும் தயாராக இல்லாத நிலையில், சவுக்கு தளம் மட்டுமே, நீதித்துறையில் புரையோடிப் போயிரக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறது. மீன் குழம்பு சரியாக வைக்காத காரணத்துக்காக ஒரு அலுவலக உதவியாளரை பணி இடை நீக்கம் செய்த நீதிபதியை அம்பலப்படுத்தியது சவுக்கு தளம் மட்டுமே. பல்வேறு வழக்குகளில் நடந்த நீதிப் பிறழ்வுகளை வெளியுலகிற்கு தொடர்ந்து கூறி வருவது சவுக்கு தளம் மட்டுமே. சாதாரண நீதிபதியாக இருக்கும் ஒருவர், அம்பானி வீட்டுத் திருமணம் போல, திருமண விழா நடத்தியதை வெளிச்சம் போட்டுக் காட்டியது சவுக்கு தளம் மட்டுமே. அப்பட்டமாக திமுக சார்பு நிலையெடுத்து, நீதி பரிபாலணத்தை, கட்சி சாயல் பூசும் நீதிபதிகளை அம்பலப்படுத்திய ஒரே தளம் சவுக்கு மட்டுமே.
சவுக்கு தளம் நினைத்திருந்தால், நீதித்துறை நாயகர்களைப் பற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருந்திருக்கலாம். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். அதை விட சிறந்தவர் சி.டி.செல்வம் என்று நீதிபதி சி.டி.செல்வத்தின் புகழ்பாடியிருக்கலாம். நீதியின் நாயகர் நீதிபதி கர்ணன் என்று வாழ்த்துரை வழங்கியிருக்கலாம். இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை….
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது ?