மன்னார்குடி மாஃபியா. ஜெயலலிதா என்று அதிகாரத்துக்கு வந்தாரோ, அன்று முதல், ஆட்சி நிர்வாகத்தில் மன்னார்குடி மாஃபியாவின் பங்கு என்ன என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் அறியும்.
டிசம்பர் 2011ல் சசிகலா உள்ளிட்ட மாஃபியா கும்பலை, ஜெயலலிதா வெளியேற்றியபோது, ஜெயலலிதா ஆதரவாளர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இனி ஜெயலலிதா இந்த மாஃபியா கும்பலை, அருகே சேர்க்க மாட்டார், சரியாக ஆட்சி நடத்துவார் என்று நம்பினர். மன்னார்குடி மாஃபியாவைச் சேர்ந்த பலர் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளி வரமுடியாத படி, பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டன. சசிகலாவின் கணவர், நடராஜன் மீது கூட பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஆனால், மூன்றே மாதங்களில், சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தார்.
மன்னார்குடி மாஃபியாவின் ஆதிக்கம் ஒழிந்தது என்று நினைத்து அகமகிழ்ந்த அதிமுக அடிமைகள் கலக்கமடைந்தனர். இனி என்ன ஆகுமோ, எப்படிக் காலத்தை ஓட்டுவோமோ என்று அஞ்சினர். அவர்கள் அஞ்சியது போலவேதான் நடந்தது.
1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட சன் டிவி, திமுவின் தேர்தல் வெற்றிகளுக்கு எத்தகைய பின்புலமாக இருந்தது என்பதை அறிந்த ஜெயலலிதா, சன் டிவிக்கு போட்டியாக ஜெ.ஜெ டிவி என்று தொலைக்காட்சியை தொடங்கினார். 1996ம் ஆண்டு ஜெயலலிதா தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து, மூடப்பட்ட ஜெஜெ டிவி, பின்னாளில் ஜெயா டிவியாக மறு அவதாரம் எடுத்தது. 21 கோடி முதலீட்டில், சசிகலாவின் சகோதரி, வனிதாமனியின் மகள் பிரபா சிவக்குமார் தலைமையில் ஜெயா டிவி தொடங்கப்பட்டது. டாக்டர் வெங்கடேஷ் மற்றும் டாக்டர் வினோதகனின் மகன் மகாதேவன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். அதன் பிறகு ஜெயா டிவியில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்தன. சசிகலாவின் உறவினராக, டிடிவி தினகரன் சில காலம் ஜெயா டிவியை கவனித்து வந்தார். பின்னர் சில காலம் டிடிவி பாஸ்கரன் கவனித்து வந்தார்.
இறுதியாக, ஜெயா டிவியின் முழு நிர்வாகமும் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவின் கையில் வருகிறது. நீண்ட நாட்களாக அனுராதாவின் கையிலேயே நிர்வாகம் இருந்தது. ஜெயா டிவியை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் ஒரே கவலை, அவருடைய அறிக்கை ஜெயா டிவியில், காற்புள்ளி, அரைப்புள்ளி தவறாமல் வருகிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே. இதைத்தாண்டி, ஜெயா டிவியில் என்ன நடக்கிறது, எவ்வளவு விளம்பரம் வருகிறது, வருவாய் இருக்கிறதா, ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தரப்படுகிறதா என்று எதுவுமே ஜெயலலிதாவுக்கு தெரியாது. தான் சட்டமன்றத்தில் யாரையுமே பேச விடாமல், பேசியதை, இரவு ரசித்து ரசித்து, ஜெயா டிவியில் பார்ப்பார். 7.30 செய்திகளில், மொத்தம் உள்ள 22 நிமிடங்களில் 21 நிமிடங்கள் தன் அறிக்கையும், ஒரு நிமிடம் உலக செய்திகளும் வருவதை பார்த்து அணு அணுவாக ரசிப்பதைத் தவிர்த்து ஜெயலலிதாவுக்கு ஜெயா டிவியின் மீது எந்த அக்கறையும் கிடையாது.
மன்னார்குடி மாஃபியா வெளியேற்ற பட்ட பிறகு, அனுராதா ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து வெளியேறுகிறார். அனுராதா வெளியேறிய பிறகு, நிர்வாகப் பொறுப்பில், மனோஜ் பாண்டியனும், ஜெயலலிதாவின் செயலாளர் பூங்குன்றனும் நியமிக்கப்படுகின்றனர். செக் முதலானவற்றில் கையெழுத்திடும் உரிமை பூங்குன்றனுக்கு வழங்கப்படுகிறது.
மே 2013 முதல், பூங்குன்றனிடமிருந்த இந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, சசிகலா வசம் இந்த அதிகாரம் வழங்கப்படுகிறது. சசிகலாவிடம் அதிகாரம் வழங்கப்பட்டது முதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பணியாளர்களை நீக்கப்பட்டு வருகின்றனர்.
சசிகலா ஜெயா டிவியின் அதிகாரத்தை கைப்பற்றி என்றைக்கு காலடி எடுத்து வைத்தாரோ, அன்று முதல், ஜெயா டிவி அலுவலகமே ஆமை புகுந்த வீடு போல ஆகிவிட்டது.
சில ஊடகங்களில் இருப்பது போல அல்லாமல், ஜெயா டிவியில், தொழிலாளர் சட்டங்கள் ஒழுங்காக பின்பற்றப்படும். வேறு வேலைக்கு செல்கிறோம் என்று கூறும் நபர்களுக்கு, முறையாக ஊதியம் செட்டில்மென்ட் செய்யப்படும். வருடாந்திர ஊதிய உயர்வுகள், போனஸ் உள்ளிட்டவை, சிற்சில தடங்கல்கள் இருந்தாலும் முறையாக வழங்கப்பட்டே வந்தன.
ஆமை உள்ளே புகுந்தவுடன் செய்த முதல் காரியம், சங்கர் என்ற நபரை நிதி நிர்வாகத்துக்காக நியமித்தது. அடுத்ததாக கொள்முதல் தொடர்பான விவகாரங்களை கவனிக்க சம்பத் என்ற நபரை நியமிக்கிறார். ரவீந்திரன் என்பவர் விற்பனை மற்றும் மார்க்கெடிங்கை கவனிப்பதற்காக நியமிக்கப்படுகிறார். இந்த மூன்று பேரும் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்றால், சசிகலாவுக்கு தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். எவ்விதத் தகுதியும் இல்லாமல், நியமிக்கப்பட்டதால், இந்தத் தற்குறிகளுக்கு தொலைக்காட்சி சேனலை நடத்த எந்த அனுபவமும் இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளதால், தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக கூறுகிறார்கள் ஜெயா டிவி ஊழியர்கள்.
ஏற்கனவே ஜெயா டிவியில் ஹெச் ஆர் துணை தலைவராக இருக்கும் ராஜன் என்பவரும் (சிலிண்டர் திருட்டுப் புகழ்) இந்த மூவர் கூட்டணியோடு சேர்ந்து கொண்டுள்ளார்.
சசிகலா என்ற ஆமைக்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது. பணத்தை வாங்கி வாங்கி பெட்டிக்குள் வைத்துக் கொள்வது மட்டுமே தெரியும். இந்த காரணத்தால் கடந்த ஆறு மாதத்துக்குள் 100க்கும் மேற்பட்ட ஜெயா டிவி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி நீக்கம் என்றால் எப்படி நடக்கும் தெரியுமா ? ஒரு காரில் நான்கு பேர் வருவார்கள். தங்களை தோட்டத்திலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். தோட்டம் என்றால் பாபிலோன் தோட்டம் அல்ல. போயஸ் தோட்டம். வந்தவர்கள், எந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டுமோ, அந்த ஊழியர் எழுதியது போல ஒரு ராஜினாமா கடிதத்தை எடுத்து வருவார்கள். சம்பந்தப்பட்ட ஊழியர் அழைக்கப்படுவார். அவர் அந்த கடிதத்தில் கையெழுத்திடும்படி பணிக்கப்படுவார். அவரிடம் ஜெயா டிவியின் சிம் கார்டும், அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்படும். ஒரு மாதத்துக்கான சம்பளத்தக்கான காசோலை வழங்கப்படும். சில நேரங்களில் அதுவும் கிடையாது. சம்பந்தப்பட்ட ஊழியருக்கு தான் எதற்காக நீக்கப்படுகிறோம், என்ன காரணம் என்று எதுவும் தெரியாது. ஜெயா டிவியில் வேலை பார்க்கும் அடிமைகள் இருக்கிறார்களே… அவர்கள் ஒரு ஊழியர் பணி நீக்கம் செய்யப்படுகையில் அவர்களுக்கு ஆறுதல் கூறினால், எங்கே நம் வேலை போய் விடுமோ என்று சம்பந்தப்பட்டவரை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். ஒரு மாத ஊதியம் கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்களே பெரும்பான்மை.
சரி. ஜெயா டிவிக்கு ஏதாவது நிதி நெருக்கடியா என்று கேட்டால், ஜெயா டிவியின் வருவாய் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஜெயா டிவியில் விளம்பரம் கொடுத்தால், அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்று பல தொழிலதிபர்கள், ஜெயா டிவியில் விளம்பரம் செய்ய வரிசையில் நிற்கிறார்கள். அது தவிரவும், அதிமுக அடிமைகள், தவறாமல் பார்க்கும் ஒரே சேனல் என்பதால், ஜெயா குழும டிஆர்பி ரேட்டிங்கும், மற்ற சேனல்களுக்கு நிகராகவே உள்ளது. இதனால் விளம்பர வருவாய் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஒரு ஸ்பாட்டுக்கு அதாவது 10 செகன்ட் விளம்பரத்துக்கு ஆயிரம் ரூபாய் என்று ஜெயா டிவியில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் எவ்வளவு தெரியுமா ? 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை. இத்தனை கொடுத்து இவர்கள் செய்யும் விளம்பரங்கள், அதே மொக்கை நிகழ்ச்சிகள் இடையேதான் வருகின்றன. ஜெயலலிதாவின் அறிக்கை, அதிமுக அடிமைகள் நீக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் தவிர, வேறு எந்த உருப்படியான நிகழ்ச்சியும் ஜெயா டிவியில் ஒளிபரப்பப் படுவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.
இந்த கொள்ளை காரணமாக மாதம் 4 கோடியாக இருந்த விளம்பர வருவாய், தற்போது 15 கோடியாக உயர்ந்துள்ளது. அமைச்சர்களாக உள்ள அதிமுக அடிமைகளின் பணி என்ன தெரியுமா ? அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பான தொழிலதிபர்களிடம், ஜெயா டிவிக்கு விளம்பரம் தரச் சொல்லி வற்புறுத்துவதுதான். விளம்பரம் வாங்கித் தரா விட்டால், பதவி பறிபோகும் என்பது அடிமைகளுக்குத் தெரியாதா ? அமைச்சர் அடிமைகளும், விசுவாசமாக, விளம்பரங்களை வாங்கித் தருகின்றனர்.
சரி. அவர்களுக்குத் தேவையான ஊழியர்களை நீக்கி, புதிய ஊழியர்களை நியமிக்க ஜெயா டிவி நிர்வாகத்துக்கு உரிமை உண்டு என்றே வைத்துக் கொள்வோம். தமிழகம் இந்தியாவுக்குள்ளேதானே இருக்கிறது ? இந்தியாவில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் தமிழகத்துக்கும், ஜெயா டிவிக்கும் பொருந்தும்தானே ? ஒரு தொழிலாளியை பணி நீக்கம் செய்வதற்கு முன் மூன்று மாத காலம் நோட்டீஸ் வழங்க வேண்டும், மூன்று மாத கால ஊதியம் வழங்க வேண்டும் என்பது ஜெயா டிவிக்கும் பொருந்தும் சட்டம்தானே ? ஆனால், சட்டத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜெயா டிவியிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று இந்த ஊழியர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி சுற்றித் திரிகிறார்கள். அந்த எழுபது ஊழியர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, அந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறது என்பது, ஊரான் வீட்டு சொத்தை கொள்ளையடித்து வாழும் சசிகலாவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
சமீபத்தில் ஜி டிவி என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்திய மடிப்பாக்கம் வேலாயுதம், அந்த ஊழியர்களுக்கு ஆறு மாதத்துக்கும் மேலாக ஊதியம் தராமல் இழுத்தடித்து வந்தார். சம்பந்தப்பட்ட ஊழியர்கள், சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்ததும், உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜு மற்றும் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு, நிலுவையில் உள்ள ஊதியத்தை பெற்றுத் தந்தனர். ஜெயா டிவி ஊழியர்கள் இதே போல ஊதிய நிலுவை குறித்து, ஜெயா டிவி நிர்வாகத்தின் மீது புகாரளித்தால் அதில் நடவடிக்கை எடுக்கப்படுமா, எடுக்கப்படாதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதே போல, ஜெயா டிவி ஊழியர்கள், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையரை அணுகினாலும் எதுவும் நடக்காது என்பது தெரியும். ஜெயா டிவி நிர்வாகத்தை அழைத்து, ஊதியம் வழங்க உத்தரவிடும் அளவுக்கு முதுகெலும்பு உள்ள அதிகாரிகள் தமிழகத்தில் கிடையாது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஜெயா டிவியிலிருந்து வந்திருப்பதால், இவர்களை வேலைக்கு எடுப்பதா வேண்டாமா, எடுத்தால் மேலிடத்தை பகைத்துக் கொள்ள நேரிடுமோ என்ற சிக்கலில் சில நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதில்லை. ஜெயா டிவியில் வேலை செய்தவர்கள் என்றாலே, திறமை குறைவாக இருப்பார்கள் என்ற கருத்தும் உலவுகிறது. ஏனென்றால், ஒரு பத்திரிக்கையாளருக்கான பணி அங்கே சுத்தமாக கிடையாது. இது போன்ற பல்வேறு காரணங்களால், அந்தத் தொழிலாளர்கள் இன்று வீதியில் நிற்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருக்க ஒரே காரணம், சசிகலா என்ற ஆமை. இந்த ஆமை இப்படி செயல்படுவதற்கான காரணம்…. “அக்கா… அக்கா….. பாத்தீங்களா… என் கிட்ட ஜெயா டிவியை ஒப்படைச்ச பிறகு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுது. இது வரைக்கும் எல்லாரும் உங்களை ஏமாத்திட்டாங்கக்கா” என்று சொன்னதும்… “யு ஆர் ச்சோ ச்வீட் சசி” என்று ஜெயலலிதா மேலும் மற்ற நிர்வாகப் பொறுப்புகளையும் சசிகலாவிடம் தருவார். அதை வைத்து, பழையபடி மன்னார்குடி மாஃபியா கும்பலை மீண்டும் போயஸ் தோட்டத்தில் நுழைக்கலாம் என்ற திட்டமே இதற்கு காரணம்.
விஸ்வரூபம் பட விவகாரத்தின்போது, எனக்கும் ஜெயா டிவிக்கும் சம்பந்தம் கிடையாது என்று ஜெயலலிதா சொன்ன பச்சைப் பொய்யை குழந்தை கூட நம்பாது. ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகளோடு, இன்றளவிலும் ஜெயலலிதா இரண்டு அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை பேசியே வருகிறார். வைஸ் ப்ரெசிடென்ட் அளவிலான மூத்த நிர்வாகிகளை நியமிப்பது, மற்றும் பணி நீக்கம் செய்வது ஆகியன, ஜெயலலிதாவின் சம்மதம் மற்றும் ஆலோசனையோடே நடந்து வருகிறது. ரபி பெர்நார்டை ஜெயா டிவியின் ஆசிரியராக நியமித்ததும் ஜெயலலிதாதான்.
சசிகலாவின் தொழிலாளர் விரோதப்போக்கும், பணி நீக்கங்களும், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடந்திருக்கக் கூடும். உடனடியாக ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு, காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். அல்லது, குறைந்த பட்சம், அவர்களுக்கு மூன்று மாத ஊதியமாவது வழங்க வேண்டும். யாருடைய பணத்திலோ தொடங்கப்பட்டு இன்று கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் ஜெயா குழும சேனல்களுக்கு, இந்த 70 ஊழியர்கள் பெரும் சுமையாக இருந்திட மாட்டார்கள்.
பணம் மற்றும் அதிகார ஆசையின் காரணமாக கட்டிய கணவனையே விட்டு பிரிந்திருக்கும் சசிகலாவுக்கு, ஏழை தொழிலாளிகளின் வலியும் வேதனையும் தெரிந்திருக்காது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், எத்தனையோ செல்வங்களை அழித்திருக்கிறது. மன்னார்குடி செல்வத்தையும் அது அழிக்க வல்லது என்பதை சசிகலா நினைவில் வைப்பது நல்லது.