1994ம் ஆண்டு முதன் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த மதிமுக, ஒரு சீட்டுகளில் கூட வெற்றி பெறாமல் படு தோல்வியை சந்தித்தது. அப்போது வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியது “காட்டாற்று வெள்ளத்தில் சாக்கடையோடு சில சந்தன மரங்களும் அடித்துச் செல்லப்படுவதுண்டு”. அதன் பிறகு, வைகோ பல சாக்கடைகளில் மூழ்கி, முத்தெடுத்தார் என்பது வேறு விஷயம்.
இது அரசியலுக்குப் பொருந்துமோ இல்லையோ… நீதித்துறையைப் பொருத்தவரை, இந்த வாசகம் முழுக்க முழுக்க பொருந்தும். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மூத்த வழக்கறிஞர் காந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், நீதிபதிகள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. வழக்கறிஞர் காந்தி தனது மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் அதிகமாக உள்ள நிலையில், மேலும் சில பார்ப்பனர்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நீதித்துறையில் சமூக சமன்பாடுகள் சிதைந்து விடுமென்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே, நீதிபதி கர்ணன் நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்து, இந்த வழக்கில் தான் மனு தாக்கல் செய்வதாகவும், நீதிபதிகள் நியனமனத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றம் போனது. உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு. தடை விதித்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனவும் தடை விதித்தது.
உயர்நீதிமன்றத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்தப் போராட்டங்களின் இறுதியாக, தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம், மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோரைச் சந்தித்த பிறகு இந்த முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் வழக்குரைஞர்கள் குழு தில்லிக்கு புதன்கிழமை பிற்பகலில் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்துப் பேசினர். “இந்த விவகாரத்தில் நீதிமன்ற நியமனக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், வழக்குரைஞர்களின் கோரிக்கையை கவனிக்கும்படி சம்பந்தப்பட்ட அமைப்பை சட்ட அமைச்சர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கபில் சிபல் கூறினார்.
அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவத்தை அவரது இல்லத்தில் தமிழக வழக்குரைஞர்கள் குழு சந்தித்துப் பேசியது. அப்போது, புதிய நீதிபதிகளின் பட்டியலைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கோப்புகள் என் பார்வைக்கு வரவில்லை. அதற்கான நடைமுறைகள் ஏராளமாக உள்ளது. அது தொடர்பான நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவது இறுதியாகும் கோப்புகள் என் பார்வைக்கு வருகையில், உங்கள் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து வழக்கறிஞர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கான பின்னணி என்ன ? எதற்காக இந்த போராட்டம் ? இந்தப் போராட்டத்துக்கான காரணமே, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம்தான். அவருடைய பரிந்துரையின் பேரில்தான் 12 நீதிபதிகளின் பட்டியல் உச்சநீதிமன்றத்துக்கு சென்றது என்பதே பரவலான குற்றச்சாட்டு. இந்த 12 பெயர்களில் இரண்டு பேர் மாவட்ட நீதிபதிகள். அவர்கள் மீது வழக்கறிஞர்களுக்கு குறை இருக்க வாய்ப்பில்லை. மீதம் உள்ள 10 பெயர்கள் மீதுதான் சர்ச்சையே.
சர்ச்சைக்குள்ளான அந்த 10 பெயர்கள், புகழேந்தி, வாசுதேவன், ராஜசேகரன், ரவிக்குமார், கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீகாந்த், அப்துஸ் குதூஸ், ஜாபருல்லா கான் மற்றும் நிர்மலா ராணி. தற்போது மூத்த வழக்கறிஞர் காந்தியின் கூற்றுப்படி, பார்ப்பனர்கள் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனரா என்று பார்ப்போம்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் வாசுதேவன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்ப்பனர்கள். ஏற்கனவே, நீதிபதியாக உள்ளவர்களில் 5 பேர் பார்ப்பனர்கள். ஆகையால் மேலும் இருவர் இதே சமூகத்திலிருந்து வந்தால், சமூக சமன்பாடுகளே அழிந்து விடும் என்பதே மூத்த வழக்கறிஞர் காந்தியின் கூற்று.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது உள்ள நீதிபதிகளில் 5 பேர் பார்ப்பனர்கள். இவர்களில் ஒருவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுகிறார். மற்றொருவர் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஓய்வு பெறுகிறார். சரி. பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், மற்ற சமூகத்தினர் சரியான விகிதத்தில் இருக்கிறார்களா என்றால் ….. நீதித்துறை கொங்கு வேளாளர் பிரிவு தொடங்கும் வகையில் ஆறு பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக தற்போது பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கிருஷ்ணகுமார் என்பவர் கவுண்டர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். முக்குலத்தோர் ஆறு பேர் இருக்கிறார்கள். நாயுடு, பிள்ளை, உடையார், கோனார், பொற்கொல்லர், மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டொருவர் இருக்கிறார்கள்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கை, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்பது. தமிழகத்தில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தில் ஒரே ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார். அதே போல வழக்கறிஞர்களில் இருந்து நீதிபதிகளைத் தேர்ந்துடுப்பதில், தலித்துகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. மாவட்ட நீதிபதிகளாக இருந்து வருபவர்களில், தலித்துகளுக்கு பதவி உயர்வு கொடுத்து, அதை சரி செய்கிறார்கள். நேரடியாக வழக்கறிஞர்களில் தலித்துகளைத் தேர்ந்தெடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் உள்ளது. நீதிபதிகள் நியமிக்கப்படுகையில், இந்த சமன்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே செய்கின்றன. எழுத்துபூர்வமான இட ஒதுக்கீடு இல்லையென்றாலும், நீதிபதி பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கையில் சாதியையும் பார்த்தே தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு சாதி மட்டுமே போதுமா என்றால் போதாது என்ற நிலையே இது வரை நீடித்து வந்தது. வெறும் சாதி மட்டுமே அடிப்படை என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் உள்ள 200 ஜாதிகளிலும் ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும். போதுமான சட்ட அறிவு. ஏதாவது ஒரு சட்டப்பிரிவில் நிபுணத்துவம். வழக்குகள் வாதாடிய அனுபவம். சமூக அக்கறை. இது போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்தே பட்டியல் இறுதி செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தலைமை நீதிபதியாக சதாசிவம் வந்ததும், சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறார். இவர் பரிந்துரை செய்த வழக்கறிஞர்களுக்கு பெரிய அளவில் அனுபவமோ, சட்ட அறிவோ இல்லை என்பதே பரவலான கருத்து.
இந்த அளவில், நீதிபதி சதாசிவம் பரிந்துரைத்தவர்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடந்த அளவில் மகிழ்ச்சியே. அது வரவேற்கத்தகுந்ததும் ஆகும். இதில் மூத்த வழக்கறிஞர் காந்தி ஏன் நுழைந்தார் என்பதில்தான் பெரிய உள்குத்து அடங்கியிருக்கிறது. காந்தி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். நீதிபதி சதாசிவத்தோடு நெருக்கமானவர். அவர் எதற்காக இந்தப் பட்டியலை எதிர்க்க வேண்டும் என்பதைத்தான் உற்று நோக்க வேண்டும்.
தற்போது உள்ள இந்தப் பட்டியலில், நீதிபதி சதாசிவம் பரிந்துரைத்துள்ள பெயர்கள் இரண்டே இரண்டு. ஒன்று கிருஷ்ணகுமார். இன்னொன்று நிர்மலா ராணி. கிருஷ்ணகுமார், பெயர் கொங்கு முன்னேற்றப் பேரவை தொடர்பானது. நிர்மலா ராணி எந்த அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டார் என்பது, சதாசிவத்துக்கே வெளிச்சம். தன்னுடைய பரிந்துரையாக நீதிபதி சதாசிவம் அளித்த ஆறு பெயர்களில் நான்கை, உயர்நீதிமன்ற நீதிபதிகள், குப்பையில் போட்டு விட்டார்கள்.
வழக்கறிஞர் நிர்மலா ராணி
மீதம் உள்ள இரண்டையாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சதாசிவம் தந்த அழுத்தத்தின் வெளிப்பாடே, கிருஷ்ணகுமார் மற்றும் நிர்மலா ராணியின் பெயர்கள். இவர்களைத் தவிர்த்து மீதம் உள்ள பெயர்கள், பல்வேறு அடிப்படைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதில் அப்துல் குத்தூஸ் என்ற வழக்கறிஞர், பல்வேறு தரப்பினராலும் சிறந்த வழக்கறிஞர் என்ற அறியப்படுகிறார். அப்துல் குத்தூஸ், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹாதியின் மகன். இவர்கள் குடும்பம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம். இவர் நீதிபதியாவதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் இவரது வயது. இவருக்கு வயது 44. இவர் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியானால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாவதற்கு வாய்ப்பு உள்ளவர். இவர் உச்சநீதிமன்றத்துக்கு சென்றால், மூத்த வழக்கறிஞர் காந்தி உள்ளிட்டோர் பரிந்துரைக்கும் நபர்கள் உச்சநீதிமன்றத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அருகிப் போகும் என்ற தொலைநோக்குப் பேராசையே காந்தி போன்றவர்கள் இந்தப் பட்டியலை எதிர்ப்பதற்கான காரணம்.
தற்போது உள்ள பட்டியலில், பார்ப்பனர்கள் அதிக அளவில் பிரதிநிதித்துவப் பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் காந்தி, கவுண்டர்களைப் பற்றி ஏன் வாயே திறக்காமல் இருக்கிறார் என்பது விடை தெரியாத கேள்வி.
மூத்த வழக்கறிஞர் காந்தி
இந்தப் பட்டியல் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தின் பின்னணியில் மூத்த வழக்கறிஞர் காந்தி மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சமணனனின் மகன் ஏஆர்எல்.சுந்தரேஷ், டி.ராஜுவின் மகன் கார்த்திகேயன், ராமசாமியின் மகன் சஞ்சய் ராமசாமி ஆகியோர் நீதிபதி பதவிக்கான போட்டியில் முன் வரிசையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மகன்களோடு, மூத்த வழக்கறிஞர் முத்துமணி துரைசாமியின் மகன் கந்தவடிவேல் துரைசாமியும் களத்தில் உள்ளார்.
மூத்த வழக்கறிஞர் காந்தியிடம் ஜுனியர்களாக இருந்த வழக்கறிஞர்களில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இது வரை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தான் பரிந்துரைக்கும் நபர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பதே காந்தியின் விருப்பம். அது நடக்காதபோதுதான், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சார்பாகவும், வாய்ப்பு கிடைக்காத இதர கவுண்டர்கள் சார்பாகவும், பார்ப்பனர்களுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று வழக்கு தொடுத்துள்ளார் காந்தி. அதிக பிரதிநிதித்துவம் என்று காந்தி பார்ப்பனர்களை குறி வைத்ததன் காரணம், பார்ப்பன எதிர்ப்பு என்றால், சமூகத்தில் உள்ள அத்தனை பிரிவினரையும் ஒன்றிணைக்கலாம் என்பதே.
நீதிபதிகள் பட்டியலை பரிந்துரைக்க வேண்டிய முதல் மூன்று நீதிபதிகளில் அகர்வால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர். அக்னிஹோத்ரியும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால், மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையிலான காந்திநகர் கிளப் லாபி அணுகியது, நீதிபதி சித்ரா வெங்கட்ராமனை. அவரோ, தான் ஏற்கனவே அப்துல் குத்தூஸ், ரவிக்குமார் (வன்னியர்), ராஜசேகர் (தலித்) மற்றும் பிரபுராஜதுரை (கிறித்துவர்) ஆகிய பெயர்களை பரிந்துரைத்துள்ளதால், வேறு பெயர்களை பரிந்துரைக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்.
இதன் பிறகே காந்தி நகர் கிளப், “பார்ப்பன எதிர்ப்பு” என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. தாங்கள் பரிந்துரைத்த பெயர்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மீது, ஊழல் புகார்களை கூறினால் அது எடுபடாது என்பதோடு, ஆதாரமில்லாத ஊழல் புகார்களைக் கூறுவது அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதனால், இவர்கள் சார்பாக நீதிபதி சித்ரா வெங்கட்ராமனை குறி வைத்துத் தாக்க ஏற்பாடு செய்யப்பட்ட அடியாளாகச் செயல்படுபவர்தான் நீதிபதி கர்ணன்.
மூத்த வழக்கறிஞர் காந்தி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். நீதிபதி கர்ணன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கவுண்டர்கள் தலித்துகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்பது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதுதான் வியப்பளிக்கும் விஷயம். காந்திநகர் கிளப் லாபி, கர்ணனை ஏவி விட, கர்ணனும், தன் மீதான ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மீது புகார் அளித்துள்ளார். நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அறைக்குச் சென்ற கர்ணன், அவர்களை ஏக வசனத்தில் பேசியதோடு, என் மீது புகார் கொடுத்தால், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் உங்கள் மீது புகார் கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், நீதிபதி கர்ணன் சார்பாக, மூத்த வழக்கறிஞர் காந்தியை சந்தித்துள்ளார் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் புறந்தள்ள முடியாது.
இதைத் தொடர்ந்து நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மீது மாவட்ட நீதிபதிகள் தேர்வில் ஊழலில் ஈடுபட்டள்ளதாக புகார் தெரிவித்துள்ளார் கர்ணன். நீதிபதி சித்ரா வெங்கட்ராமனின் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு மனு அளித்துள்ளார். இதைத்தவிரவும், நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், ஊழல் புரிந்து சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரது சொத்துக்களின் புகைப்படங்கள் என்றும், ஒரு சிடி, நீதிபதி கர்ணனால் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை, வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் சந்தித்து, இந்தப் பட்டியலை ஒப்பளிக்கக் கூடாது என்று கூறியதும், வழக்கறிஞர் காந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். உண்மையில், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற அவரது கோரிக்கை உண்மையானால், உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அந்த வழக்கை தொடர்ந்திருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால், தற்போது, இந்த பட்டியலில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்களும், நிர்மலா ராணியின் பெயர் மற்றும் அப்துல் குத்தூஸின் பெயரும், நீக்கப்படும் என்பதை அறிந்ததும், வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் காந்தி.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஒரு நியாய உணர்வின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டாலும், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஒரு சதிக் கும்பலும் இருந்தது என்பதே உண்மை. இந்தப் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கர்ணன் போன்ற ஊழல் நீதிபதிகள் தப்பிக்க முயற்சி செய்தார்கள் என்பதும் உண்மை.
கொலிஜியம் என்ற முறையின் மூலம் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, ஒரு வெளிப்படைத் தன்மையில்லாத முறையாக இருந்தாலும், இந்த முறையின் கீழ் இத்தனை நாட்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள், பெரும்பான்மையாக நல்ல நீதிபதிகளாகவே இருந்து வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நல்ல நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, தமிழகத்திலிருந்து முதன் முறையாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகியிருக்கும் சதாசிவத்தின் கடமை. இந்தக் கடமையிலிருந்து வழுவி, தரமில்லாத நீதிபதிகளை சதாசிவம் தேர்ந்தெடுப்பாரேயானால், அவர் வாழும் காலம் வரையில், தீராத பழிச்சொல்லுக்கு ஆளாவார். காலம், தலைமை நீதிபதியான முதல் தமிழன் சென்னை உயர்நீதிமன்றத்தை குட்டிச்சுவராக்கினார் என்றே பதிவு செய்யும்.
தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள், இந்தப் பட்டியலை முழுமையாக நிராகரிக்காமல், இந்தப் பட்டியலில் உள்ள நல்ல வழக்கறிஞர்களை நீதிபதியாக்குவதோடு, மீதம் உள்ள காலியிடங்களுக்கும், மனசாட்சிப்படி, நல்ல வழக்கறிஞர்களை பரிந்துரைக்க வேண்டும்.
பொதுமக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதித்துறை. இந்த நீதித்துறையில் புரையோடும் ஊழலும், முறைகேடுகளும், பொதுமக்களுக்கு, நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை குலைத்து, ஜனநாயகத்தின் ஆணி வேரையே அசைத்து விடும் என்பதை, நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், தங்கள் தீர்ப்புகளால் வாழவைத்த பி.என்.பகவதி, ஹிதயதுல்லா, எஸ்.ஆர்.தாஸ், கஜேந்திரகட்கர், சுப்பாராவ், எஸ்.எம்.சிக்ரி, வெங்கட்ராம அய்யர், பி.சாஸ்திரி, விவியன் போஸ், மேத்யு, கிருஷ்ணய்யர், எச்.ஆர்.கண்ணா போன்ற மிகச்சிறந்த நீதிபதிகளைக் கொண்ட இந்திய நீதித்துறையின் மாண்பை, போற்றிப் பாதுகாப்பது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் கடமை.
எஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களில் தலைமை நீதிபதி சதாசிவம், அவருக்கு முன்னால் அவர் வகிக்கும் பதவிகளை அலங்கரித்த நீதி நாயகர்களின் வழி நடக்காவிட்டாலும் பரவாயில்லை…. அவர்கள் உருவாக்கிய மரபை அழிக்கும் செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதே, ஜனநாயக உணர்வுள்ளவர்களின் வேண்டுகோள்.