“ஊழல் ஒழிப்பே பிரதான லட்சியம். ஊழலை ஒழித்தே தீருவேன்” என்று முஷ்டியை உயர்த்திக் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்ன மச்சான். ஆம் ஆத்மி பார்ட்டியில சேந்துட்டியா ? ” என்றான் ரத்னவேல்.
“ஊழலை ஒழிக்க ஆம் ஆத்மி பார்ட்டியில் சேர வேண்டும் என்று அவசியம் இல்லை. டெல்லியில் வேணா ஆம் ஆத்மி ஊழலை ஒழிக்கலாம்… ஆனா தமிழகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே கட்சி கேப்டன் கட்சிதான். அதனால அவர் தலைமையில ஊழலை ஒழிக்கப் போறேன். ” என்று சொல்லி சிரித்தான் டாஸ்மாக் தமிழ்.
“ஏன்டா சிரிக்கிற… ? கேப்டன் ஊழலை ஒழிக்க மாட்டாரா ? “
“கேப்டன் அரசியல்வாதியா உருவானதும் தமிழக மக்கள், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இந்த நபராவ ஏதாவது செய்யறாரான்னு பாக்கலாம் னு நம்பி ஓட்டு போட்டாங்க. 2011 சட்டமன்றத் தேர்தலில், திமுக மீது இருந்த கடும் எதிர்ப்பலையில், தனியா நின்னாவே ஜெயலலிதா ஜெயிச்சிருப்பாங்க. ஆனா, ஒரு வேளை தோத்துடுவோமோன்ற பயத்துல, ஜெயலலிதா கேப்டன் கூட கூட்டணி வைச்சாங்க. அந்த தேர்தலில் 27 எம்.எல்.ஏக்களை பெற்றதும், கேப்டனுக்கு தலையும் புரியலை… காலும் புரியலை.
மக்களவை தேர்தலுக்காக, ஒரு பெரிய தேசிய கட்சியான பிஜேபியும், இன்னொரு பெரிய கட்சியான திமுகவும், மாறி மாறி கெஞ்சறது, கேப்டனுக்கு, நாம பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிச்ச மாதிரி, இதுவும் ரொம்ப ஈசின்னு முடிவு பண்ணிட்டாரு.
சினிமாவுல, என்ன நடந்தாலும் கடைசியில ஹீரோ ஜெயிக்கிற மாதிரி நாமளும் ஜெயிச்சிடலாம்னு நினைச்சிருக்கார். அந்த ஐடியாவுலதான், மீட்டிங்குல பேசறார்….
கேப்டனோட ஊழல் ஒழிப்பு மாநாடே ஒரு பெரிய நகைச்சுவை. எதுக்காக அவர் இந்த மாநாட்டை நடத்துனாருன்னு யாருக்குமே தெரியலை. தேர்தல் சமயத்தில் ஒரு பில்டப் குடுத்து, டெவலப் பண்ணலாம்னு நெனைச்சாரா என்னன்னு தெரியலை. ஊழல் எதிர்பபை மனதில் வைத்து, ஆம் ஆத்மி பார்ட்டி டெல்லியில் பெரிய வெற்றியை அடைந்ததும், நாம ஊழலை பத்தி பேசுனா, தமிழ்நாட்டுல பெரிய அளவுல வொர்க் அவுட் ஆகும்… அதை வைச்சு ஒரு மொமென்டம் டெவலப் பண்ணி, தமிழ்நாட்டின் ஆம் ஆத்மின்னு பத்திரிக்கைகளை பேச வச்சுடலா… பெரிய மாஸ் உருவாகும்னு நெனைச்சார்”
“சரி அவர் நெனைச்சபடி நடந்துச்சா ? ” என்றான் ரத்னவேல்.
“அவர் நெனைச்சதே அவருக்கு ஞாபகம் இல்ல. நிதானத்துல இருந்தாத்தானே தெரியும் ? எதுக்காக மாநாடு போட்டாங்களோ, அதைப் பத்தி பேசாம, டிஜிபி ராமானுஜத்தையும், ஜெயலலிதாவையும் சகட்டு மேனிக்கு திட்றதுலயே தங்களோட நேரத்தை செலவிட்டாங்க. ஊழலைப் பத்தி எந்த விதமான தெளிவான விவாதமும் இல்ல.. பேசுன விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்களும் “கேப்டன் சிரிச்சா செங்கோட்டை, முறைச்சா ஜார்ஜ் கோட்டைன்னு ” பன்ச் டயலாக் பேசினாங்க. பேசிய பல பேர் நாகரீகமே இல்லாம பேசினாங்க. ஜெயலலிதாவை, “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் புகுந்த கருநாகம் னு” விஜயகாந்த் பேசறாரு. இது மாதிரி சம்பந்தம் சம்பந்தம் இல்லாமதான், ஒட்டுமொத்த மாநாடே நடந்தது.. “
“நடந்தது ன்னு சொல்லாதடா.. தள்ளாடியதுன்னு சொல்லு” என்று சொல்லி சிரித்தான் பீமராஜன்.
“சரி… கூட்டணி பற்றி அறிவிக்கிறேன்னு சொன்னாரே…. அறிவிச்சாரா ? ” என்றான் வடிவேல்.
“எங்க அறிவிச்சாரு ? அதைப் பற்றி என் தொண்டர்கள் முடிவு செய்வார்கள்னு சொல்லிட்டாரு”
“தொண்டர்கள் முடிவு பண்ணுவாங்களா ? “
“கிழிப்பாங்க. தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி. சுயநினைவு உள்ள யாராவது ஒருத்தன், தேமுதிகவுல இருப்பானான்னு சொல்லு. அதனாலதான் கேப்டனே தொண்டரகளை கேட்டு முடிவு பண்றேன்னு சொல்லிட்டாரு. தொண்டர்கள் ஒரு வேளை தப்பா சொல்லிட்டாங்கன்னா, பாவம், போதையில சொல்லிட்டாங்க விட்டுடுன்னு சொல்வாரு”
“விளையாடதாடா… உள்ளதை சொல்லு” என்று எரிச்சல்பட்டான் ரத்னவேல்.
“கேப்டனுக்கு இன்னும் அவர் கேட்ட தொகை வந்து சேரல. பிஜேபி கூட போறதா இருந்தா, அவரை பிப்ரவரி எட்டு அன்னைக்கு மோடி கூட்டத்துல அவரை ஏத்தணும்னு பிஜேபி முடிவு பண்ணியிருந்தாங்க.”
“சரி.. இப்போ ஏத்தறாங்களா ? “
“அவர் ‘ஏத்திட்டு’ பேசுனதை பாத்துட்டு, நல்ல வேளை ஏத்தலைன்னு நினைக்கிறாங்க”
“நீ வேற வெளையாடிக்கிட்டு. இருக்காத டா… கூட்டணி என்ன ஆச்சு” என்று கோபமாக கேட்டான் ரத்னவேல்.
“திமுக தரப்புல இருந்து, திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் ஹைதர் அலி ஆகியோர் கிட்ட எப்படியாவது பேசி, விஜயகாந்தை கூட்டிட்டு வந்திடுங்கன்னு சொல்லியிருக்கார். அவங்களும், எப்போ எப்போல்லாம் நேரம் கிடைக்குதோ, அப்போல்லாம் கேப்டனை பாத்து கெஞ்சி பாக்கறாங்க. ஆனா, அவர், அவங்ககிட்ட மாநாடு முடிஞ்சதுக்கப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாரு இப்போ மாநாடும் முடிஞ்சுடுச்சு”
“சரி… விஜயகாந்த் பெரிய தொகையை கேட்டுக்கிட்டு இருந்தாரே… அது என்ன ஆச்சு ? ” என்றான் ரத்னவேல்.
“விஜயகாந்தோட இப்போதைய தொகை 400 கோடி. இதை யாரு தர்றாங்களோ, அவங்களோடதான் கூட்டணின்ற முடிவுல இருக்கார். பிஜேபி பணம் தர்றதுக்கு தயாரா இருந்தாலும், 400 கோடின்னு மலைக்கிறாங்க.”
“அப்போ கேப்டனுக்கு பணம் கிடையாதா ? “
“யாரு சொன்னது.. ? காங்கிரஸ் 500 கோடி கொடுத்தா, காங்கிரஸ் கூட கூட்டணி அமைச்சு, ஐந்தாவது ஆறாவது அணியெல்லாம் அமைக்க கேப்டன் தயாரா இருக்காரு. டெல்லிக்கு ஒரே ஒரு எம்.பியை அனுப்பி ஒன்னும் கிழிக்கப் போறதில்லன்றது, கேப்டனுக்கு நல்லாவே தெரியும். அதுக்கு பதிலா, 500 கோடியை வாங்கிட்டா, நிம்மதியா இன்னும் நாலு வருஷத்துக்கு பொழப்பை நடத்தலாம்…. அதுக்குள்ள இன்னொரு தேர்தல் வரும். அப்போ நம்ப ரேட்டை கூட்டிக்கலாம்னு இருக்காரு…”
“டேய்… கேப்டன் புராணம் போதும்டா… டேப் மேட்டர் பத்தி சொல்லுடா… அதுதானே பரபரப்பா இருக்கு? ” என்று பரபரத்தான் பீமராஜன்.
”அதான் ஊரே சொல்லுதே… ஃபேஸ் புக், ட்விட்டரெல்லாம் போய் பாத்தியா ? திமுகவை கழுவி கழுவி ஊத்தறாங்க. திமுக இந்த மிகப்பெரிய சிக்கலில் இருந்து எழுந்து வருவது கஷ்டம்னு சொல்றாங்க..
2ஜி ஊழல் 2010ம் ஆண்டு வெளியில் வந்தபோது, திமுக அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்தது. கனிமொழி கைது செய்யப்பட்ட போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, திமுக கட்சியினர் பலரே, காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகத்தான் 2ஜி விவகாரத்தில் திமுக சிக்கியதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாங்க.
ஆனா, ஜாபர் சேட்டோட உரையாடல்கள் வெளியானதும், அந்த நம்பிக்கை முழுக்க முழுக்க பொய்யாயிடுச்சு. யாரும் இப்போ, திமுகவை நம்பத் தயாராக இல்லை. திமுக தொண்டர்களிலேயே பல பேர், என்ன இவ்வளவு மோசமா இருந்திருக்காங்க.. நம்பளையெல்லாம் இப்படி ஏமாத்திட்டாங்களேன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
1991ம் ஆண்டு தேர்தலில், ராஜீவ் காந்தி மரணத்தின் பிறகு நடந்த தேர்தலில் கூட, வாக்கு வங்கி குறையாத திமுக, இந்த முறை கடுமையான தோல்வியை சந்திக்கும் னுதான் பரவலா பேச்சு இருக்கு”
“திமுக தலைவர் கருணாநிதி மேல 2ஜி குறித்து விசாரணை நடத்தணும்னு புகார் அளிக்கப்பட்டிருக்காமே….. ? “
“ஆமாம் ஆமாம். இந்த ஊழலை வெளியிட்ட நபரே, கருணாநிதி, சண்முகநாதன், சரத் குமார், கனிமொழி உள்ளிட்டோர், 2ஜி ஊழலில் ஆதாரங்களை அழிக்க என்ன முயற்சிகள் எடுத்தார்கள் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தணும்னு ஒரு புகார் அனுப்பப் பட்டிருக்கு. இந்தப் புகாரைத் தொடர்ந்து, பிரசாந்த் பூஷணும், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவாருன்னு சொல்றாங்க.
இது போக, கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடியும், கடன் தொகை, அது லஞ்சம் இல்லைன்னு கலைஞர் டிவி தரப்புல சொன்னாங்க. ஆனா, அதை கடன்னு மாத்த, என்னென்ன ஏற்பாடு பண்ணாங்கன்னுதான் ஜாபர் சேட்டும், மத்தவங்களும் விவாதிச்சது இப்போ வெளியாகியிருக்கு.
இது போக, கலைஞர் டிவி திருப்பிக் கொடுத்த 214 கோடி ரூபாயும் கலைஞர் டிவியோட பணம் கிடையாது. பல்வேறு இடங்களில் வாங்கிக் கொடுத்தது. அதில் முதல் நபர், இந்திய சிமென்ட்ஸின் என்.சீனிவாசன். இந்த ஆள் ஏற்கனவே, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி. அடுத்த நபர், கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான எம்ஏஎம்.ராமசாமி. சாராய அதிபர் விஜய் மல்லையா ஆகியோர் பணம் கொடுத்திருக்காங்க. இந்த 214 கோடியும், பல்வேறு பேப்பர் கம்பெனிகள் மூலமா, சினியுக் பிலிம்ஸை அடைந்திருக்கு. பணம் திருப்பி வந்ததைப் பத்தி சிபிஐ விசாரணை நடத்வேயில்ல. ஆரம்பிச்சு இரண்டே வருஷம் ஆன ஒரு சேனலுக்கு, அதுவும் ஆரம்ப கட்டத்துல இருக்க ஒரு சேனலுக்கு, எப்படி 214 கோடி ரூபாயை வந்துச்சு.. அதுவும், 5 வருஷத்துக்கு, அட்வான்ஸா, 60 கோடியை விளம்பரத்துக்கான முன் பணமா, எந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தர மாட்டாங்க.
அதுவும், அஞ்சு வருஷத்துக்கு ஒரு டிவி நடக்குமா நடக்காதான்னு தெரியாத நிலையில், எந்த முட்டாள் நிறுவனமும் 60 கோடியை தூக்கி கொடுக்க மாட்டாங்க”
“அப்புறம் எதுக்குப்பா சீனு மாமா 60 கோடி கொடுத்தாரு ? ” என்று கிண்டலாக கேட்டான் வடிவேல்.
“தகவல் என்னன்னா… 80 கோடி ரூபாய், கருப்புப் பணமா, சீனு மாமாவுக்கு திமுக தரப்புல கொடுக்கப் பட்டிருக்கு. அதுக்கு பதிலாத்தான், சீனு மாமா 60 கோடி கலைஞர் டிவிக்கு விளம்பரத் தொகையா கொடுத்திருக்கார். இதே மாதிரி பணம் வாங்கிய எல்லா இடங்களிலும், கருப்புப் பணத்தைக் கொடுத்து, வெள்ளையா மாத்தியிருக்காங்க”
“சரி… ஜாஃபர் என்ன பண்றார் ? ” என்றான் பீமராஜன்.
“டேப் வெளியானதுல ரொம்ப கலங்கிப் போயிட்டார். இதை அவர் எதிர்ப்பார்க்கவே இல்ல.. தன்னோட உரையாடல்களே இப்படி வெளியாகி தன்னை அசிங்கப்படுத்தும்னு அவர் நினைக்கவே இல்லை. சஸ்பென்டாகி இருந்தாலும், ஜாபர் சேட்டை இன்னும் சில அதிகாரிகள் போய் பாத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ இந்த டேப் வெளியானதும், எந்த அதிகாரியும் யாரையும் போய் பாக்கறது இல்லை. எல்லாரும் அவரை தவிர்க்கிறாங்க.
ரவி மட்டும், ஜாபர் தேவையில்லாமல் பழி வாங்கப்படுகிறார்னு சொல்லிக்கிட்டு இருக்காரு”
“ரவி ன்னா எந்த ரவி… ? ஆவின் விஜிலென்ஸ்ல இருக்காரே அந்த ரவியா ? “
அவரேதான்… ஜாபர் பாவம்.. அவரை தேவையில்லாமல் பழி வாங்கறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு”
ரவி ஐபிஎஸ்
ஜாபருக்கா சப்போர்ட் பண்ற….. உனக்கு இருக்குடி மாப்ள..
“இன்னுமா ஜாபரை ஊரு நம்புது ? ” என்றான் ரத்னவேல்.
“என்ன பண்றது… ? நம்பறாங்களே.. அடுத்து ஜாபரோட குரல் சாம்பிளை கொடுக்கச் சொல்லி, சிபிஐ உத்தரவு போடுவாங்க. அதுக்கப்புறம் ஜாபருக்கு தொடர்ந்து தலைவலிதான். மகளோட திருமணம் நிச்சயம் பண்ண இருக்கிற இந்த நேரத்துல, ஜாபருக்கு சோதனைதான்”
“திருமணம் நிச்சயமாயிடுச்சா ? “
“பேச்சுவார்த்தைகள் நடந்துக்கிட்டு இருக்கு. லைட் ரூப் நிறுவனத்தை நடத்தும் க்ரூப் வீட்டுலதான் சம்பந்தம் நடக்குது. திருமண சம்பந்தம் பேசிக்கிட்டு இருக்க இந்த நேரத்துல போய் இப்படிப் பண்ணிட்டானுங்களேன்னு கடுமையான வருத்தத்துல இருக்காரு”
“பாவம்தான்.. செய்த பாவம் அவரை வாட்டுது… என்ன பண்றது ? “
“சரி… பத்திரிக்கைகள், இந்த டேப் விவகாரத்தை எப்படி கையாண்டன ?
“இந்த உரையாடல், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான உரையாடல். தமிழக ஊடக வரலாற்றில், ஏன் இந்திய ஊடக வரலாற்றிலேயே, ஒரு உளவுத்துறை தலைவரோட உரையாடல்கள் இது வரை வெளியிடப்பட்டதேயில்லை. இதை ஊடகங்கள் கொண்டாடியிருக்கணும். இந்தியாவின் மிகப் பெரிய ஊழலான 2ஜி வழக்கில், சம்பந்தப்பட்ட கருணாநிதி குடும்பத்தை காப்பாற்ற நடந்த சதியை இந்த உரையாடல் அம்பலப்படுத்தியிருக்கு. இதை ஊடகங்கள் கொண்டாடியிருக்கணும். ஆனா, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடுகளைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் அடக்கியே வாசிக்குது.
இந்த உரையாடலை வெளியிட்ட ஜுனியர் விகடன் கழுகார் பகுதியில இந்த மாதிரி எழுதியிருக்காங்க
“திடீரென சி.டி.. வருகிறதே?”
”காங்கிரஸ் தனது அஸ்திரங்களை ஆரம்பித்து விட்டது என்றே சொல்கிறார்கள். அதனுடைய அஸ்திரங்கள்தான் இவையாம்! இதுவரை ஏதாவது ஒரு குதிரையில் சவாரி செய்துவந்த காங்கிரஸ் நிலைமைதான் இந்த தடவை பரிதாபமாக உள்ளது. அவர்களுடன் தேர்தல் கூட்டணி வைக்க தமிழக அரசியல் களத்தில் யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் அவர்கள் தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைக்க முடியும். ஆனால், தி.மு.க-தான் பிகு பண்ணுகிறது. அதை வழிக்கு கொண்டுவர புதிய சில அஸ்திரங்களை இப்போது கையில் எடுத்துள்ளார்கள். அதன் வீச்சுக்களைக் கேள்விப்பட்ட கருணாநிதி கலங்கித்தான் போயிருக்கிறார்”
இந்த டேப் எப்படி வந்துச்சு, எங்க வந்துச்சு, யார் மூலமா அவங்களுக்கு கிடைச்சது, இது மாதிரி எந்த விபரமும், இதை எழுதியவருக்கு தெரியாது. கண்ணை மூடிக்கிட்டு, வாய்க்கு வந்ததை எழுதறதுதான் அந்த பத்திரிக்கைக்கு வேலையே… இந்த டேப்புக்கும் காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தத்தை இதை எழுதுனவரு கண்டுபிடிச்சாருன்னு தெரியலை.”
“கழுகார் எழுதனும்னா, ரெண்டு பேருக்கு ஃபோன் போட்டுப் பேசறது. அந்த வாரத்துக்கு எம்.டி என்ன உத்தரவு போட்றாருன்னு பாத்துக்கறது. எம்.டி மோடிக்கு சப்போர்ட்டா எழுதுன்னாருன்னா, மோடி அலை வீசுதுன்னு எழுதறது. மாறன் பத்தி ஒரு வார்த்தை எழுதக் கூடாதுன்னா, ஒரு வார்த்தை எழுதாம தவிர்க்கறது. மாறன் சொன்னா, ஸ்டாலினை திட்டி கட்டுரை போட்றது, மாறன் சொன்னா, கனிமொழியை விமர்சித்து கட்டுரை போட்றது.. இதுதானே இவங்களுக்கு வேலையே.. அதே மாதிரிதான் டேப் வெளியீடு காங்கிரஸோட சதின்னு எழுதியிருக்காங்க”.
“சரி. கருணாநிதி குடும்பத்தோட ரியாக்சன் என்ன ?”
“ஸ்டாலின் வெளிப்படையாவே சொல்லிட்டார்… இந்த ஜாபர் சேட்டை ஒழிக்காம விட மாட்டேன்னு. டேப்புகள் வெளியானதும், அழகிரி, தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட, யார் இதை வெளியிட்டது, எப்படி டெல்லி போனதுன்னு கேட்டிருக்கார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பிறகு, சென்னைக்கு போன் போட்டு, “நான் அப்பவே இந்தப் பயலை நம்பாதீங்கன்னு சொன்னேன். நம்ப குடும்பத்துக்கு விசுவாசம், விசுவாசம்னு சொல்லிட்டு, இப்போ கழுத்தறுத்துட்டான். நான் எது சொன்னாலும் கேக்காத மாதிரியே, தலைவரும் இதைக் கேக்காம போனதோட விளைவுதான் இந்த சிக்கல் னு சத்தம் போட்டிருக்கார்.”
“சரி…. தலைவரோட ரியாக்சன் என்ன ? “
“இதையெல்லாமா போன்ல பேசுவீங்க ன்னு சிஐடி காலனிக்குப் போய் ஒரே சத்தம். கனிமொழி ஏற்கனவே மருத்துவமனைக்கு போய் வந்தததால, அவங்கள திட்டல. ராசாத்தி அம்மாளை கடுமையா திட்டியிருக்கார். உன்னோட வளப்புத்தான் சரியில்ல… இப்படி கட்சியையே நாசம் பண்ணிட்டீங்களேன்னு திட்டியிருக்கார்”
“அவரே சரியில்ல… அவர் குடும்பத்தைத் திட்டறார்” என்றார் கணேசன்.
“என்னண்ணே இப்படி சொல்றீங்க ? “
“ஆமாம்பா… கருணாநிதி தன்னோட சரித்திரத்திலயே இந்த மாதிரி ஒரு அதிகாரியை என்னைக்குமே முழுக்க முழுக்க நம்புனதே கிடையாது. இந்த அதிகாரிங்க, ஆட்சிக்கு தகுந்த மாதிரி மாறிக்குவானுங்கன்னு அவருக்கு தெரியும். அதனால, எந்த அதிகாரியையும் அவர் நம்பியதே கிடையாது. எல்லாரையும், கையெட்டும் தூரத்துலதான் வைச்சிருப்பார்.
ஆனா, 2006ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஜாபர் சேட்டோட தொலைபேசி டேப்புகளைப் பாத்து மயங்கினார். ராமதாஸ் அந்த கால கட்டத்துல கருணாநிதிக்கு ரொம்ப தொல்லை கொடுத்துக்கிட்டு இருப்பார். தினமும் ஏதாவது அறிக்கை விட்டு, தொல்லை பண்ணிக்கிட்டு இருப்பார். அப்போ, ராமதாஸ் என்னென்ன பண்றாருன்னு டேப்பை கொடுத்ததும், கருணாநிதி, நீதான்டா உளவு துரைன்னு பாராட்டினார். அதுக்கப்புறம், ஜாபர் வச்சதுதான் சட்டம்.
ஒரு கட்டத்தில் கருணாநிதி, தன்னோட மகன், மனைவி தொலைபேசியையை ஒட்டுக் கேட்டு தரச் சொன்னார். அந்த அளவுக்கு ஜாபரை நம்பினார். ஜாபர் சொல்றதைக் கேட்டுத்தான் கூட்டணி முடிவுகள் எடுக்கும் வரை கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர இருந்த குஷ்புவை, கடைசி நேரத்தில், திமுக பக்கம் அழைத்து வந்தது, ஜாபர்சேட்தான். குறிப்பாக குஷ்புவை கட்சிக்கு அழைத்து வந்தது,
இதுக்கு பிறகுதான், கருணாநிதி ஜாபரை ரொம்பவும் நம்பினார். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு போச்சுன்னா… 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக எதிர்ப்பு அலை கடுமைய வீசிக்கிட்டு இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சபோதும், தேர்தல் அன்னைக்கு கருணாநிதியை சந்திச்ச ஜாபர், திமுக கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெறும்னு சொன்னார்.
அப்படி ஜாபர் சேட்டை முழுமையா நம்பிய பாவத்துக்குத்தான் கருணாநிதி இப்போ அனுபவிச்சிக்கிட்டு இருக்கார்”
“தனி நபர் அந்தரங்கங்களை ஒட்டுக் கேட்கிறது தப்பு ன்னு பிஜேபி தலைவர் இல கணேசன் சொல்லியிருக்காரே ? ” என்றான் ரத்னவேல்.
“அதிமுகவுக்கு தா.பாண்டியன் மாதிரி, திமுகவுக்கு இல.கணேசன். இல கணேசனுக்கு இது கடைசி தேர்தலா இருக்கலாம். திமுகவோட கூட்டணி வைச்சா நாம எம்பி யாகிடலாம். மோடி பிரதமரா ஆனா, அமைச்சராகிடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கார்.
இல.கணேசன், இது மாதிரி பேசியதுக்குப் பின்னாடி கருணாநிதி இருக்கிறார். அவர் சொல்லித்தான் இது போல, பேசியிருக்கார் கணேசன். ஆனா, திமுக, பிஜேபி கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை”
“சரி… காவல் துறையில் டேப் விவகாரத்தைப் பத்தி என்ன பேசிக்கறாங்க ? ” என்றான் பீமராஜன்.
“காவல் துறையில் இந்த டேப் எப்படி வெளியில வந்துச்சுன்னு தான் பரபரப்பான பேச்சு. அதுவும் இதை வெளியிட்ட நபர் கைக்கு எப்படிப் போச்சுன்னுதான் பெரிய பரபரப்பா இருக்கு. நல்லா வச்சாண்டா ஆப்பு ஜாபருக்குன்னு பேசிக்கிறாங்க.
பல அதிகாரிகளுக்கு உள்ளுக்குள்ள ரொம்ப சந்தோஷம். ஆனா, அந்த சந்தோஷத்தையும் போன்ல பகிர்ந்துக்க வேண்டாம்னு பயப்படறாங்க” என்று சொல்லி சிரித்தான் தமிழ்.
“உண்மைதானேப்பா…. அன்னைக்கு ஜாபர் சேட் போட்டு வைச்ச வழியத்தானே, இன்னைக்கும் உளவுத்துறை பின்பற்றுது”
“டேய்.. இந்த உரையாடல்கள் போலி ன்னு கலைஞர் டிவி அறிக்கை கொடுத்திருக்காங்களே… பாத்தியா” என்றான் வடிவேலு.
“பாத்தேன் பாத்தேன். இந்த உரையாடல்கள் போலியா இல்லையான்றதை, சரிபார்க்க, இப்போ எவ்வளவோ விஞ்ஞான பரிசோதனைகள்லாம் வந்துடுச்சு. போலியான உரையாடல்களை பாத்து பயந்தா, கனிமொழி தற்கொலைக்கு முயன்றாங்க ? போலியான உரையாடல்களா, உண்மை உரையாடல்களா ன்ற விபரங்கள், சிபிஐ விசாரணையை கையில் எடுத்த பிறகு, தெரிய வந்துடும்.
அப்போ, எதை வச்சுப்பா இது போலின்னு சொன்ன ன்னு, இந்த அறிகைகையை கலைஞர் டிவியி சார்பா வெளியிட்ட அந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அப்போ தெரியும்”
“சரி… நீதிபதி சி.டி.செல்வம் என்ன பண்றாரு ?. எப்படியாவது அந்த டேப் வெளியீட்டை தடுக்கணும்னு முயற்சி பண்ணாரே…. அவர் முயற்சி வெற்றி பெறலை போல இருக்கே.. ? ” என்றான் ரத்னவேல்.
“டேப் விவகாரம் சிடி.செல்வத்துக்கு தெரிஞ்ச உடனேதான், இன்னைக்கே கைது பண்ணுங்கன்னு உத்தரவு போட்டது. எப்படியும் காவல்துறையில் கைது பண்ணிடுவாங்கன்னு நினைச்சிருக்கார். அவங்க, இந்த டேப்புக்கு சம்பந்தமே இல்லாத தள வடிவமைப்பாளரை கைது பண்ணி சிறையில் அடைத்து விட்டோம் னு பெருமையா சொன்னாங்க. சி.டி.செல்வத்துக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு. சரி… தலைவர் குஷியாயிடுவாருன்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போவே, முதல் டேப் சவுக்கு தளத்தில் வெளியாகவும் பயங்கர டென்ஷனாயிட்டாரு செல்வம்.
அன்னைக்கு வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தப்போ, வழக்கை புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன்னு சொன்னவரு, தன் சேம்பருக்கு காவல் துறை அதிகாரிகளைக் கூப்பிட்டு கன்னா பின்னான்னு திட்டியிருக்காரு…. என்னய்யா போலீஸ் நீங்க.. பாண்டிச்சேரியில இருக்கிறவன அரெஸ்ட் பண்றீங்க.. இங்க இருக்கவனை அரெஸ்ட் பண்ண முடியாதா ? எதுக்குய்யா வேலையில இருக்கீங்க ன்னு கடுமையா சத்தம் போட்டிருக்கார்.
இதுக்கு நடுவுல, சவுக்கு நடத்துபவரை, திமுக வழக்கறிஞர்கள் அணுகியிருக்காங்க. சி.டி.செல்வத்திடம் இருக்கும் வழக்கை முடித்து வைக்கிறோம். தலைவரை, செல்வத்திடம் பேசச் சொல்கிறோம். மீதம் உள்ள டேப்பை வெளியிடாதீர்கள். உங்களுக்கு “என்ன வேண்டுமோ” அதை செய்து தருகிறோம்னு சொல்லியிருக்காங்க”
“அதுக்கு சவுக்கு என்ன சொன்னாராம் ? “
“சிடி செல்வத்தை, சவுக்கு தளம் மீது இன்னும் 10 வழக்குகளை போடச் சொல்லுங்கள். அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியும் னு சொல்லிட்டாராம்”
“இது நடந்ததுக்கு மறுநாள், டெல்லியில டேப்புகள் வெளியியாகியது. திமுக கூடாரமே ஆட்டம் கண்டு விட்டது. இந்த டேப்புகளால, மற்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விட, சிடி.செல்வத்துக்குத்தான் கடுமையான பாதிப்பு.
சில திமுக வழக்கறிஞர்கள், கருணாநிதிக்கிட்ட போயி, அந்த நீதிபதிதான் அவனை கோபப்படுத்திட்டார். நீதிபதி அவனை கைது செய்ய உத்தரவு போடலன்னா, இது நடந்திருக்கவே நடந்திருக்காதுன்னு சொல்லியிருக்காங்க.
செல்வத்தை, காது கூசுற அளவுக்கு திட்டியிருக்காரு. இவனையெல்லாம் ஜட்ஜ் ஆக்கினேன் பாரு… எனக்கே ஆப்பு வச்சுட்டான் னு கழுவி கழுவி ஊத்தியிருக்காரு.
இதுக்கு நடுவுல, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், டேப் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. தலைமை நீதிபதிக்கு, பல்வேறு இடங்களில் இருந்து வழக்கை சி.டி.செல்வத்திடமிருந்து மாற்ற வேண்டும் என்று புகார் மனுக்கள் போயிருக்கு. போன வாரம் இந்த வழக்கு வந்தப்போ, ‘மனித உரிமைப் போராளி’ சங்கரசுப்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் னு கேக்கும்போதே, சி.டி.செல்வம் எழுந்து போயிட்டாரு. இதற்குப் பிறகு, இந்த வழக்கு திரும்ப வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருது.
திமுகவின் கைத்தடியாக சி.டி.செல்வம் செயல்பட்டு வருகிறார் என்ற விபரம், எல்லோரிடமும் பரவியிருக்கு. பல்வேறு வழக்கறிஞர்களும், பல நீதிபதிகளும், தனிப்பட்ட முறையில் பேசும்போது, செல்வத்துக்கு எதுக்கு இந்த வேலைன்னு சொல்றாங்க. ஒரே ஒரு வழக்குல, செல்வம் இப்படி பேரை கெடுத்துக்கிட்டாருன்னுதான் நீதிமன்ற வளாகத்தில் பேச்சா இருக்கு.”
“ஏய் தம்பி… அவரு நீதி அரசர்ப்பா…. என்னாப்பா நீ இப்படிப் பேசற..? ” என்றார் கணேசன்.
“அண்ணே… நான் பேசுனதுக்கே இப்படி சொல்றீங்களே…. கருணாநிதி பேசறதைக் கேட்டா, உங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் ? முடிஞ்சா செல்வத்தை, கருணாநிதி மேல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கச் சொல்லுங்க. “
“சரி… ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்னடா ஆச்சு ? எந்த நிலையில இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“ஜெயலலிதாவோட ஆடிட்டரா இருந்த பாஸ்கரன் என்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமான சில வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்று விட்டார். அந்த பொருட்கள் நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டவை. தற்போது பாஸ்கரன் இறந்து விட்டார். அதனால், அந்த சொத்துக்களின் மதிப்பை கண்டறிய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சொல்றாங்க. “
“இது எதுக்குப்பா.. அது என்ன அவ்வளவு மதிப்பா இருக்கும் ? “
“எல்லாம் வழக்கை தாமதப்படுத்தும் தந்திரம்தான்ணே…. ஆனா, இது பெரிய அளவில் ஜெயலலிதாவுக்கு எந்த உதவியும் செய்யாது. அந்த வெள்ளிப் பொருட்களின் மதிப்பு வழக்கின் தன்மையை பெரிதாக பாதிக்காது”
“யாருடா அந்த பாஸ்கரன் ? ” என்றான், பீமராஜன்.
“அப்படிக்கேளு. 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, ஒரு ஆங்கில பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் ன்ற முடிவுக்கு வர்றாங்க. அவுட்லுக் மாதிரியான ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கணும் ன்றது அவங்களோடு ஐடியா. அதுக்காக, பத்திரிக்கை எப்படிப் போகும், என்ன வடிவமைப்பில் இருந்தால், தமிழகத்தில் அது வரவேற்பை பெறும், உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டும், எத்தனை விற்கும், இது பற்றியெல்லாம் ஒரு சர்வே எடுத்து வரச் சொன்னாங்க. சர்வே எடுப்பதில் பாஸ்கரன் நிபுணர்.
பாஸ்கரனும், இது பத்தி ஒரு சர்வே எடுத்து, எல்லா விபரங்களையும் திரட்டிக்கிட்டு ஜெயலலிதாவை பாக்க 7 டிசம்பர் 1996 அன்னைக்கு போயஸ் தோட்டம் வர்றாரு. அங்க வந்து ஜெயலலிதாவை பாக்க காத்திருக்கும்போதுதான், சிபிசிஐடி போலீசார், டான்சி வழக்கில் ஜெயலலிதாவை கைது செய்ய வர்றாங்க.
போலீஸ் வந்ததைப் பாத்ததும், ஜெயலலிதாவுக்கு ஒன்னும் புரியலை. உடனே பாஸ்கரனை அழைத்து, நான் வரும் வரை, நீங்களே எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இருங்கள் னு சொல்லிட்டுப் போயிட்டார். அதுக்கு அப்புறம், லஞ்ச ஒழிப்புத் துறை 5 நாட்கள் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின் போது எல்லா மகஜரிலும் கையெழுத்து போட்டது, பாஸ்கரன்தான். ஜெயலலிதா வீட்டிலிருந்து ஒரு குண்டுமணி கூட வெளியில போகாம பாத்துக்கிட்டார்.
அதுக்கு அப்புறமா, ஜெயலலிதாவுக்கு பாஸ்கரன் மேல ஒரு மரியாதை வந்துடுச்சு. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இருந்தார் பாஸ்கரன். சசிகலாவுக்கு இது பொறுக்குமா… ? ஜெயலலிதா கிட்ட சொல்லி, பாஸ்கரனை வீட்டுக்குள்ள வர விடாம செய்துட்டாங்க.
அதற்குப் பிறகு பாஸ்கரனை ரத்தப் புற்றுநோய் தாக்கியது. படுத்த படுக்கையாவே கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல கிடந்தார் பாஸ்கரன். ஜெயலலிதா அவரைப் போய் பாக்கவே இல்லை. குறைந்தபட்சம் பண உதவி கூட செய்யலை.
இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்தான் ஜெயலலிதா”
“சசிகலா பண்ணதுக்கு அவங்க என்னடா பண்ணுவாங்க ? ” என்று வக்காலத்துக்கு வந்தான் ரத்னவேல்.
“அதிமுக அடிமை மாதிரி பேசாத டா இடியட். ஜெயலலிதா என்ன குழந்தையா… ? அவங்களுக்குத் தெரியாது ? தனக்கு நெருக்கடியான காலத்தில் உதவி செய்தவங்களை கை விடற நபர் என்ன மாதிரியான நபரா இருப்பாங்க ? இதுதான் ஜெயலலிதா”
“சரி.. கனிமொழி சரத் குமாரோட ஜாமீன் ரத்தாகுமா ? ” என்றார் கணேசன்.
“அண்ணே… ஜாமீன் ரத்தாவதற்கு வாய்ப்பு இல்ல. ஜாமீன் வழங்கப்பட்ட நாள் முதலா, சாட்சிகளை கலைப்பதற்கோ, ஆவணங்களை அழிப்பதற்கோ, முயற்சிகள் எடுத்திருந்தால்தான், ஜாமீனை ரத்து செய்ய முடியும். இந்த உரையாடல்கள், பதிவு செய்தது, இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு என்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை” என்று கூறி விட்டு தமிழ் எழுந்தான்.
சபை கலைந்தது.