சவுக்கு தளத்தை முடக்குவதற்காக நடைபெற்று வரும் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர சைபர் பிரிவு போலீசார், இந்த தளத்தை நடத்துபவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எங்களால் பிடிக்க முடியவில்லை, என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இப்படிப்பட்ட நபரையெல்லாம் எப்படி இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள். இது போன்ற நபர்களெல்லாம் மிகப்பெரிய சமூக விரோதிகள். இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றார். மூத்த வழக்கறிஞர் ரமேஷ் எழுந்து, இது நீதித்துறைக்கே விடப்பட்ட சவால். இதை தடுக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை என்று அப்படியே விட்டு விட முடியாது. கண்டுபிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர் எழுந்து, யார் நடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தும் தெரியாத விவகாரம் இது என்றார்.
நீதிபதி சி.டி.செல்வம், வழக்கறிஞர்களைப் பார்த்து, இப்படி ஒரு நபர் நீதித்துறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார், நீதித்துறைக்கே சவாலாக இருக்கிறார். அவருக்கு எதிராக நீங்கள் போராட வேண்டாமா ? என்று கேட்டார். எஸ்… எஸ்… எஸ்….. என்று ஆமோதித்தனர் வழக்கறிஞர்கள்.
இருப்பதிலேயே மோசமான மனிதர்கள் இரண்டு வகை. ஒருவன் அடுத்தவனின் வீட்டைக் கொளுத்துபவன். இன்னொன்று இவனைப் போல கீழ்த்தரமாக எழுதுபவன். இவர்கள் இருவர்தான் சமூகத்துக்கு மிகப்பெரிய விரோதிகள் என்றார் செல்வம். மெரட்டிக் கேட்டாலும் அரெஸ்ட் பண்ண மாட்றாங்க… அதட்டிக் கேட்டாலும் அரெஸ்ட் பண்ண மாட்றாங்க என்று மனமுடைந்த சி.டி.செல்வம், வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
நீதித்துறையைப் பொறுத்தவரை, அதுவும் குறிப்பாக, உயர்நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டிருந்தாலோ, அல்லது, அந்த நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று வழக்கறிஞர்கள் கூறினாலோ, உடனடியாக அந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதுதான், இந்தியா முழுக்க கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. கொஞ்சமாவது சட்டம் தெரிந்த நீதிபதிகள் இதைத்தான் செய்வார்கள்.
சவுக்கு தளம் குறித்த இந்த வழக்கு சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வரும்போதே, செல்வத்துக்கு, தன்னைப் பற்றி சவுக்கு தளத்தில் பல முறை எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியும். இருந்தும், கூச்சம், நாச்சம், எதுவுமே இல்லாமல், மிகுந்த ஆர்வத்தோடு வழக்கை விசாரித்து வந்தார். ஒரு ஐந்து அல்லது ஆறு முறை இந்த வழக்கு இவர் முன்னிலையில் வந்தபோதெல்லாம், என்ன ஆயிற்று…. என்ன முன்னேற்றம் என்று கேட்டு விட்டு, வழக்கை தள்ளி வைப்பார்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதான், பாண்டிச்சேரியில் உள்ள அந்த வடிவமைப்பாளரை உடனடியாக கைது செய்யுங்கள் என்றார். வடிவமைப்பாளர் பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பதை, பல முறை வழக்கு தொடுத்த சங்கரசுப்பு சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சி.டி.செல்வம், கடந்த வாரம், இன்றே கைது செய் என்று துடித்ததன் காரணத்தை நாம் விரிவாக எழுதியிருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளை கடுமையாக பேசி, மிரட்டி, நாளை கைது செய்த விபரத்தை சொல்லுங்கள் என்று செல்வம் மிரட்டிய காரணத்தால், சவுக்கு தளத்தின் வடிவமைப்பாளர் முருகைய்யனை கைது செய்தது காவல்துறை. சவுக்கில் வரும் கட்டுரைகளுக்கும், அந்த வடிவமைப்பாளருக்கும், துளியும் தொடர்பில்லை என்பது, சட்டம் முட்டாளான சி.டி.செல்வத்துக்கு நன்றாகவே தெரியும். எவனோ ஒருவன் செய்த தவறுக்காக, சம்பந்தமில்லாத நபரை கைது செய்ய உத்தரவிடுவது, அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதும் சி.டி.செல்வத்துக்கு தெரியும். இருந்தும், ஒரு அப்பாவியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார் என்றால், இது எத்தகைய அயோக்கியத்தனம் ? தன்னுடைய சொந்த பழிவாங்குதலுக்காக, இத்தகைய ஒரு உத்தரவை பிறப்பிக்கும் சி.டி.செல்வம், நீதிபதியாக அல்ல… நீதிபதிகளுக்கு முன் கம்பு ஒன்றை தூக்கிக் கொண்டு உஸ்ஸு… உஸ்ஸூ என்று கத்திக் கொண்டு செல்வார்களே….. அந்த வேலைக்குக் கூட தகுதியில்லாதவர்.
கடந்த ஒரு வாரமாக, செய்யாத குற்றத்துக்காக ஒரு அப்பாவி சிறையில் இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கு இந்த சி.டி.செல்வம் என்ன நஷ்ட ஈடு கொடுத்து விட முடியும் ? அவரை கைது செய்யுங்கள் என்று அடாவடியாக சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே, இன்று அவர் சிறையில் இருக்கிறார்.
இப்படி தன்னுடைய சொந்த கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, ஒரு அப்பாவியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட, அதுவும், அப்படி உத்தரவிட தனக்கு அதிகாரமே இல்லாதபோது அப்படி உத்தரவிட்ட, சி.டி.செல்வம், நீதியைப் பற்றியும், நீதித்துறையின் மாண்பைப் பற்றியும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
இப்படி ஒரு மோசமான மனிதராக இருந்து கொண்டு, தன்னைப் போய் மை லார்ட், மை லார்ட் என்று அழைக்கிறார்களே என்று சி.டி.செல்வம் வெட்கப்பட வேண்டும். ஆனால் அவர் வெட்கப்படுவாரா என்ன ? கருணாநிதியின் காலைப் பிடித்து நீதிபதியாகி, கருணாநிதியின் துதிபாடியாக, உள்ள சி.டி. செல்வம் போன்ற நபர்களிடம் இதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?