இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின.
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில், “கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் தமிழக உளவுத் துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர் சேட்டும் 2011 பிப்ரவரி 13-ந் தேதி டெலிபோனில் பேசியதன் பதிவு, தி.மு.க ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஜாபர் சேட்டும் 2010 நவம்பர் 23ந் தேதி பேசியதன் பதிவு, அவர்கள் இருவரும் 2011 பிப்ரவரி 16ந் தேதி பேசிய மற்றொரு பதிவு, கலைஞரின் செயலாளர் சண்முக நாதனும் ஜாபர்சேட்டும் 2010 டிசம்பர் 31ந் தேதி பேசிய பதிவு ஆகிய நான்கு டேப்கள்தான் அதில் இருந்தன. இவை முதன்முறையாக வெளியிடப்படும் தொலை பேசி உரையாடல்கள் என்ற பிரசாந்த் பூஷண், 2008-ல் ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு 2ஜி அனுமதி பெற்றுத் தந்ததில் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரம் உள்ளது. கடன்வாங்கியதாக சரத்குமார் ரெட்டியால் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஜாபர்சேட் மற்றும் சரத்குமாருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவில் தெரியவருகிறது.
நம்பகமான இடத்தில் இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத் தில் ஒப்படைக்க உள்ளோம். இந்தப் பதிவுகள் அனைத்தும் ஜாபர் சேட்டின் செல்போனில் பதிவு செய்ததாக இருக்க லாம். இதன் மீது தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த ஆதாரங்களை சி.பி.ஐ. அல்லது லோக்பால் போன்ற பொது அமைப்புகளும் விசாரிக்கலாம்’ என்றார் அதிரடியாக. கலைஞர் டி.விக்கு வந்த 200 கோடி ரூபாய் பணம் தொடர்பான பேச்சுகள்தான் அவை.
“ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஹாட் நியூஸ் என்றபோதும், தமிழகத்தில் அதன் அலை பெரிதாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைப்பதற்கு ஆதர வாக இருந்தவர் கலைஞர். அவருடைய மகள் கனி மொழியின் பேச்சு டேப் செய்யப்பட்டிருக்கிறது. கலைஞ ரின் செயலாளர் சண்முகநாதன் பேச்சு டேப் செய்யப் பட்டிருக்கிறது. அவரது பெயரிலான டி.வி.நிறுவனத்தின் நிர்வாகியுடன் பேசியதும் டேப் ஆகியுள்ளது. இத்தனை யும் மாநில உளவுத்துறையின் உயரதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டின் போனிலிருந்து டேப் செய்யப்பட்டிருக்க லாம்’ என்று சொல்கிறார் பிரசாந்த் பூஷண்.
தமிழக உளவுத்துறைதான் மற்றவர்களின் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது வழக்கம். ஆனால், அதன் அதிகாரியாக இருந்தவரின் பேச்சே ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குமே பேரதிர்ச்சியைக் கொடுத் தது. அதிகாரிகளிடையே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது சிலநேரங்களில் அவர்களே தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்வதுண்டு. அப்படி டேப் செய்தார்களா? அல்லது மத்திய உளவுத்துறையான ஐ.பி. டேப் செய்ததா? சி.பி.ஐ. டேப் செய்ததா என அதிகாரிகள் மட்டத்தில் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை.
இந்தக் கேள்விகளை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் முன்வைத்தோம். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு பேசத் தொடங்கி, பல விவரங்களைத் தந்தனர்.
“”2ஜி விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், 2010ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த பேச்சுவிவரங் கள்தான் டேப் செய்யப்பட்டுள்ளன. 2011 பிப்ரவரி 2ந் தேதி ஆ.ராசா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். 2011 ஏப்ரல் 2ந் தேதி சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அடிப்படையில், போன் பேச்சுக்கள் டேப் செய்யப்பட்ட விதத்தை ஆராய்ந்தபோது, சி.பி.ஐயின் தென்மண்டல அதிகாரிகள்தான் சென்னை ராஜாஜி பவன் அலுவலகத்தை மையமாகக்கொண்டு இந்த ஒட்டுக்கேட்பு பணியைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்துள்ளது.
சி.பி.ஐ.யின் ஸ்பெஷல் டிவிஷனைச் சேர்ந்த அதிகாரிகள்தான் இந்த டேப் பணியைக் கையாண்டுள்ளனர். அப்போது சி.பி.ஐயின் தென்மண்டல ஜாயிண்ட் டைரக்டராக இருந்தவர் அசோக்குமார். மத்திய அரசின் சி.பி.ஐயிலிருந்து தமிழக அரசின் பணிக்கு மாற்றம் பெற்ற அசோக்குமார், தமிழக உளவுத்துறை டி.ஜி.பியாக தற்போது இருக்கிறார். அப்போது சி.பி.ஐ.யின் லஞ்ச கண்காணிப்பு பிரிவில் எஸ்.பி.யாக இருந்த முருகன், தற்போது ஜெ. ஆட்சியில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கிறார். டேப் செய்ததில் பங்கெடுத்த மற்றொருவர் சி.பி.ஐ. ஸ்பெஷல் டிவிஷனில் எஸ்.பி.யாக இருந்த ராஜு. இவர் தற்போது ரிட்டையர்டாகிவிட்டார்.
லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி இந்த ஒட்டுக்கேட்பு பதிவுகளை செய்திருக்கிறது சி.பி.ஐ. டீம். இதற்காக முருகன் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அனுப்பிய அசோக்குமார் அங்கு சில மாதங்கள் பயிற்சி எடுக்கச் செய்திருக்கிறார் என்கிறது சி.பி.ஐ வட்டாரத் தகவல். அந்தப் பயிற்சியில் கிடைத்த அனுபவத்துடன் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு டேப் செய்துள்ளனர்.

பலரது போன்களையும் ஒட்டு கேட்கும் மாநில உளவுத்துறையினருக்குத் தங்களது போன் கள் ஒட்டுக்கேட்பது பற்றி விவரம் தெரியாதா? அதைக் கண்டுபிடிக்கும் சாஃப்ட்வேரும் இன்னபிற கருவிகளும் தமிழக போலீசிடம் இல்லையா? என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே கேள்விகள் எழுகின்றன. தமிழக உளவுப் போலீசால் ஒருவரது போனை ஒட்டுக்கேட்கவும் முடியும். தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைத் தகுந்த சாஃப்ட்வேர் மூலம் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்நிலை யில், தமிழக உளவுத்துறை அதிகாரியின் போன் உரையாடல்கள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், தங்களுடைய போன் ஒட்டுக்கேட்கப் படவில்லை என உறுதி செய்துகொள்ள உளவுத்துறை பயன்படுத்திய சாஃப்ட் வேரும் இன்னபிற கருவிகளும் செயலிழந்துவிட்டனவா எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதுபற்றி நம்மிடம் விவரித்த சில உயரதிகாரிகள், “”ஒட்டுக் கேட்பது தொடர்பாகவும் ஒட்டுக் கேட்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காகவும் மாநில அரசின் உளவுத்துறை சிலவகை சாஃப்ட்வேர்களையும் அது சார்ந்த கருவிகளையும் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு தனது உள்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் நிலையிலுள்ள நவீன கருவிகளை மாநில அரசு வாங்க முடியாது. மத்திய அரசிற்குத் தெரியாமல் வாங்கிப் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். இதுதான், மாநில உளவுத்துறையின் நிலை. கட்டுப்பாடு தன் கையில் இருக்கவேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. சி.பி.ஐ அதிகாரிகள் டீம் அமெரிக்காவுக்கு சென்று பயிற்சி எடுத்துத் திரும்பியபிறகு, இஸ்ரேல் நாட்டிலிருந்து நவீன ஒட்டுக்கேட்பு கருவிகளை மத்திய அரசு வாங்கிப் பயன்படுத்தியது.
இந்தக் கருவிகள், மாநில அரசுகள் தம் வசம் வைத்துள்ள கருவிகளைவிட மேம்பட்டவை. ஒரு போன் ஒட்டுக்கேட்கப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய மாநில உளவுத்துறை பயன்படுத்தும் சாஃப்ட்வேரை ஏமாற்றிவிட்டு, அந்த போன்களை ஒட்டுக்கேட்கும் தன்மை வாய்ந்தவை. இதைத்தான் சி.பி.ஐ பயன்படுத்தியுள்ளது. அதனால்தான், தமிழக உளவுத்துறையினர் தங்களது போன் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்ற நம்பிக்கை யிலும் தைரியத்திலும் பேசியுள்ளனர். அனுமதி பெற்று டேப் செய்யப்படும் பேச்சுகளைத்தான் வழக்குகளுக்குப் பயன்படுத்த முடியும். அதனால், சி.பி.ஐ. இதுகுறித்து மத்திய உள்துறையிடம் உரிய அனுமதி பெற்றே இந்த போன் பேச்சுகளைப் பதிவு செய்துள்ளது” என்கிறார்கள் விரிவாகவே.
இதுபற்றி நாம் மேலும் விசாரித்தபோது, மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் போன் பேச்சுக்களைப் பதிவு செய்ய வேண்டும் என 2010 அக்டோபர் 8-ந்தேதியன்று சி.பி.ஐ. தரப்பு மத்திய அரசில் இதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவர்களிடம் உரிய அனுமதி பெற்றுள்ளது.
இத்தகைய அனுமதிகள் குறிப்பிட்ட சில காலம் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆ.ராசா கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் தொடர்புபடுத்தப்பட்ட க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சாதிக்பாட்சா 2011 மார்ச் 16 அன்று தற்கொலை செய்து கொண்டார். அப்போது இந்த மரணம் சர்ச்சையாக்கப்படவே, 2011 மார்ச் 28-ல் இந்த மரணம் தொடர்பான விசாரணைக் காக ஜாபர்சேட்டின் போன் டேப் செய்யப்பட வேண்டும் என மீண்டும் அனுமதி பெற்றிருக்கிறது சி.பி.ஐ. தரப்பு.
அரசியல்வாதியாகி விட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட நான்கு பேச்சுகளும் சி.பி.ஐயால் டேப் செய்யப்பட்டது. 2010 நவம்பர், டிசம்பர், 2011 பிப்ரவரி ஆகிய காலகட்டங் களில்தான். இதன்பிறகே 2011 ஏப்ரலில் 2ஜி வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேச்சுகள் குறித்து குற்றப்பத்திரிகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பேச்சுகளிலிருந்து வலுவான ஆதாரங் கள் எதுவும் இல்லை என்பதால் குறிப்பிடப்பட வில்லையா? என்பது குறித்து அதிகாரிகள் வட்டா ரத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
வெளியிடப்பட்ட 4 பேச்சுக்களுமே போன் டேப் செய்ய சி.பி.ஐ. பயன்படுத்தும் கருவியிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல மொத்தம் 18 பதிவுகள் பதிவிறக்கப் பட்டிருக்கின்றன. இந்த பதிவிறக்கங்கள் செல்ஃபோனிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது போல் ஸ்பெஷல் சாஃப்ட்வேர்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன. அதில் சில பதிவுகளை சுப்ரமணியசாமி வெளியிட இருப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இதைக் கொண்டு செல்ல இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் நேரடிப் பார்வையில் நடைபெறும் 2ஜி வழக்கு தொடர்பான ஆவணங்கள், மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் எப்படி வெளியாயின என்பதற்கும், ஏன் வெளியாயின என்பதற்கும் பல்வேறு அரசியல் காரணங்கள் டெல்லியிலும், சென்னையிலும் அலசப்படுகின்றன.
கூட்டணிக்கு மீண்டும் வர மறுக்கும் தி.மு.க.வை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுபோல இப்போதும் கொண்டுவருவதற்காக, சி.பி.ஐ.யை காங்கிரஸ் தலைமை பயன்படுத்துகிறதா? போன் ஒட்டுக்கேட்பு நடந்த போது சி.பி.ஐ. டீமில் இருந்த முக்கிய அதிகாரிகள் தற்போது தமிழக அரசுப் பணியில் இருப்ப தால் மாநில ஆளுங்கட்சி யான அ.தி.மு.க வரும் எம்.பி. தேர்தலில் தி.மு.கவுக்கு எதி ரான பிரச்சார ஆயுதமாக இத னைக் கையிலெடுக் கும் நோக்கத்தில் இதன் பின்னணி யில் செயல்பட் டுள்ளதா? சி.பி.ஐயில் உள்ள சில அதிகாரிகளே தங்களது சொந்த லாபங்களுக்காக இதனை வெளியிட உதவியிருக்கிறார் களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் வலம் வரும் நிலையில், தி.மு.க தலைமைக்கு இந்த டேப் விவகாரம் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கனிமொழியின் மனு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆ.ராசாவின் வாக்குமூலங்கள், அரசுத் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தயாளுஅம்மா மீதான விசாரணை பார்வை இனி மாறுமா என்ற கேள்வி, உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ஜாபர்சேட் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்பட பல அம்சங்கள், தற்போது வெளியான ஒட்டுக்கேட்பு பேச்சுகளால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவை குறித்து, சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதால் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது சுப்ரீம் கோர்ட்டை நோக்கித் திரும்பியுள்ளன.
-காமராஜ்
போலியானது…!
![]()
ஒட்டுக்கேட்பு தொடர்பான பின்னணி களைஅதிகாரிகள் தரப்பில் ஒரு மாதிரியாக விளக்கியுள்ள நிலையில், இந்த டேப் விவகாரமே முற்றிலும் பொய்யானது என நிருபர்களுக்கு பதிலளித்தார் கலைஞர். இது போலியானது என கலைஞர் டி.வி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எம்.பி.தேர்தலில் தி.மு.க.வின் பிழைப்பை கெடுக்க எதிரிகள் நடத்தும் சதி செயல் என துரைமுருகனும், இதனை பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் ஊடகங்களிடம் கொண்டு சென்றது உள்நோக்கம் கொண்டது என்று டி.ஆர்.பாலுவும் தெரிவித்துள்ளனர். |
நன்றி. இந்தியாவின் நம்பர் ஒன் புலனாய்வு நக்கீரன் வாரமிருமுறை இதழ்.