ஆம் ஆத்மி கட்சி கடந்த செவ்வாயன்று வெளியிட்ட உரையாடல்கள், நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தமிழகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக கூடாரமே கலங்கிப் போயிருக்கிறது.
அரசியல் கட்சிகள், திரை மறைவு பேரங்களில் ஈடுபடுவது, சகஜமான விஷயமே என்றாலும், இத்தகைய பேரங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது ஒலிநாடாவோடு தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு விவகாரம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய ஒரு ஐபிஎஸ் அதிகாரி, இந்திய அரசியல் அமைப்பிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரி இந்தியாவின் மிக மோசமான ஒரு ஊழல் குடும்பத்தின் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்பதும், அதிர்ச்சி அளிக்கக் கூடிய விவகாரங்கள். இந்தியாவில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியும், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி எடுக்க வேண்டும்.
அந்த பயிற்சிப் பள்ளி தனது நோக்கமாக என்ன கூறுகிறது தெரியுமா ?
“இந்திய காவல் துறைக்கு, துணிவு, நேர்மை, அர்ப்பணிப்பு, இந்திய மக்களுக்கு சேவை மனப்பான்மை ஆகியவற்றோடு கூடிய சிறந்த காவல் துறை அதிகாரிகளை உருவாக்குவதே இந்த பயிற்சி மையத்தின் நோக்கம்.
இந்த பயிற்சி மையம், மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில், இந்த அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளும், அறிவுரைகளும் வழங்கப்படும். குறிப்பாக, உச்சபட்ச நேர்மை, மாறி வரும் சமூக பொருளாதார சூழலில் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் பக்குவம், குறிப்பாக மனித உரிமைகள் குறித்தும், சட்டம் மற்றும் நீதி குறித்தும், சிறந்த காவல்துறை அதிகாரியாவதற்கான தகுதிகள் குறித்தும், சிறந்த உடல் மற்றும் மன நிலை குறித்தும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும்”
இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்தவர்தான் ஜாபர் சேட். ஜாபர் சேட் அடிப்படையிலேயே ஒரு நேர்மையற்ற மனிதர். தன்னை மிக மிக புத்திசாலி என்று கருதிக் கொள்பவர். அது ஒரு வகையில் உண்மையும் கூட. அவர் மிக மிக திறமையானவர்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தத் திறமையை எதற்குப் பயன்படுத்தினார் என்பதுதான் கேள்வியே.
2007ம் ஆண்டு முதல், 2011 வரை, அவர் தமிழகத்தை ஆண்டார் என்றால் அது மிகையான சொல் அல்ல. ஒரு காவலர் மாறுதல் முதல், ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்.பி, டிஐஜி, ஐஜி, கூடுதல் டிஜிபி தவிர, யார் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக வேண்டும் என்பதையும் ஜாபர் சேட் தான் முடிவு செய்வார். யார் உள்துறை செயலாளராக இருக்க வேண்டும், யார் தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதையும் ஜாபர் சேட்தான் முடிவு செய்வார்.
முதுமை காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவோ, மிக மிக அறிவு கூர்மையுடைய கருணாநிதி, தன் நிதானத்தை இழந்தது 2006ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான். 1997ம் ஆண்டு முதல், 1999 வரை, ஜாபர் சேட், கருணாநிதியின் பாதுகாப்பு எஸ்.பியாக இருந்தார். அப்போதே, ஜாபர் சேட்டுக்கும், 2006ம் ஆண்டு வாக்கில், தமிழக ஆளுனர் மாளிகையில் கோலோச்சிய நஜிமுத்தீனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நஜிம்முதீன் அப்போது, கம்ப்யூட்டர் சிப்புகளை கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பியாக இருந்த ஜாபர் சேட், நஜிம்முதீனின் சரக்குகள் விமானம் மூலமாக வந்தடையும்போது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசி, அதை பிடிபடாமல் வெளியே கொண்டு வரும் வேலையை ஜாபர் செய்து தருவார்.
2001ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும், கருணாநிதியை கைது செய்யும் வேலை, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கருணாநிதியை கைது செய்யும் வேலை, ஜாபரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜாபர் எதற்காக இந்த டீமில் சேர்க்கப்படுகிறார் என்றால், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காரணத்தால், அவரின் வீடு, அவர் செல்லும் பாதை, வீட்டின் நுழைவாயில்கள் உள்ளிட்ட அத்தனை விபரங்களும் அவருக்குத் தெரியும் என்பதற்காகவே.
கருணாநிதி கைது செய்யப்பட்ட அன்று நள்ளிரவு, ஜாபர் சேட், மைலாப்பூர் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு, கைது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார். ஆனால், எந்த ஜாபர் சேட், தன்னுடைய கைது நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்பு வகித்தாரோ, அந்த ஜாபர் சேட்டையே, அதி முக்கியத்துவம் வாய்ந்த, உளவுத்துறையின் தலைவராக நியமித்தார் கருணாநிதி. இப்படி ஜாபர் சேட் உளவுத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம், கருணாநிதியின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்லும் ட்ராலி பாய்ஸ் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான பாண்டியன். பாண்டியன் 15 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதியோடு இருக்கிறார். அவருக்கு பணி ரீதியாக ஜாபர் சேட் சில உதவிகளைச் செய்து கொடுத்த காரணத்தால், பாண்டியன் ஜாபர் சேட்டுக்கு விசுவாசமான நபராக மாறுகிறார்.
கருணாநிதியோடே எப்போதும் இருப்பதால், கருணாநிதியை யார் சந்திக்க வருகிறார்கள், யாரோடு பேசுகிறார், என்ன பேசுகிறார் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எடுத்து ஜாபர் சேட்டிடம் சொல்வார் பாண்டியன். மேலும், வண்டியை தள்ளிச் செல்கையிலேயே, அய்யா, ஜாபர் சேட் மிக மிக திறமையான அதிகாரி. அவரை உளவுத் துறைக்கு நியமித்தால், அரசை திறமையாக வழி நடத்துவார் என்று ஓதிக் கொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில், கருணாநிதி ஜாபர் சேட்டை உளவுத்துறை தலைவராக நியமிக்கிறார். ஐ.ஜி அந்தஸ்தில் இருந்த ஜாபர் சேட், உளவுத்துறையை கையாண்டு கொண்டு இருக்கிறார். 2007. உளவுத்துறைக்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டவர் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால். சங்கர் ஜிவால் அதற்கு முன்பாக, மத்திய அரசின் போதைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, போதைப் பொருள் கடத்துபவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க, டி3டி டெக்னாலஜிஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தினார் சங்கர் ஜிவால். அந்த டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில், சங்கர் ஜிவால் மனைவி, மம்தா சர்மா ஒரு இயக்குநர் என்பது கூடுதல் தகவல். சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு அரசு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு, தனக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திடமே, கான்ட்ராக்ட் கொடுக்கும் வேலையை சங்கர் ஜிவால் செய்து வந்தார்.
சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால், மாநில உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டதும், தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தி, ஒட்டுக் கேட்ட விபரங்களை கூறுகிறார். ‘அருமையான யோசனையாக’ இருக்கிறதே என்று அந்த தனியார் நிறுவனத்தை வைத்து, ஒட்டுக் கேட்பு விவகாரத்தை தொடங்குகிறார். தன்னைப் பற்றிய விவகாரங்கள் கருணாநிதிக்குத் தெரிந்து, ஒரு வேளை தன்னை மாற்றி விடப் போகிறார்களோ என்று எப்போதும் பதட்டத்திலேயே இருந்த ஜாபர் சேட், கருணாநிதியின் மதிப்பைப் பெற கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டார். அப்படி ஒரு முயற்சியின் வெளிப்பாடுதான், மருத்துவர் ராமதாஸின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டது. மருத்துவர் ராமதாஸூக்கு தியாகராய நகரில் உள்ள ஒரு செவிலியரோடு பழக்கம் உண்டு. அந்த செவிலியரின் தொடர்பு வெளியுலகில் யாருக்கும் தெரியாது. இந்த செவிலியருடனான, ராமதாஸின் உரையாடலை ஜாபர் சேட் பதிவு செய்து கருணாநிதியிடம் போட்டுக் காட்டியபோது, மகிழ்ச்சியில் திளைத்தார் கருணாநிதி.
ஜாபர் சேட் போன்ற நபர்களை கருணாநிதி எப்போதும் இல்லாத வகையில் நம்பியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், திமுக 2006ம் ஆண்டு ஒரு சிறுபான்மை அரசாக இருந்தது. ராமதாஸ் போன்றவர்கள், திமுக மைனாரிட்டி அரசாக இருக்கிறது என்ற காரணத்தால் அவ்வப்போது கருணாநிதியை மிரட்டி வந்தார்கள். அந்த நிலையில், ராமதாஸ் மறைக்க விரும்பிய ஒரு ரகசியத்தை ஜாபர் சேட் எடுத்துக் கொடுத்ததும் அகமகிழ்ந்தார் கருணாநிதி.
ராமதாஸ் நாளொரு அறிக்கை வெளியிட்டு, கருணாநிதியியை எரிச்சலூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை ஜி.கே மணி கருணாநிதியை சந்திக்கிறார். அப்போது, ‘ஏன்யா நானெல்லாம் சொன்னா உங்க டாக்டர் கேக்க மாட்டாரா ? அந்த நர்ஸ் சொன்னாத்தான் கேப்பாரா ?’ என்று சொன்னதும், ஜி.கே மணி அதிர்ந்து போனார். அதற்குப் பிறகே மருத்துவர் ராமதாஸ் தனது நேரடியான தாக்குதலை ஜாபர் சேட் மீது தொடுத்தார். ஜாபர் சேட் எனது தொலைபேசிகளையும், எனது உறவினர் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஒரு கட்டத்தில் இனியும் ராமதாஸை கூட்டணியில் வைக்கக் கூடாது என்று கருணாநிதி முடிவெடுத்ததும், காடுவெட்டி குரு, ஒரு உள் அரங்கக் கூட்டத்தில் பேசிய விபரங்களை எடுத்துக் கொடுத்து, இதை காரணமாக வைத்து ராமதாஸை கூட்டணியை விட்டு வெளியேற்றலாம் என்று அறிவுரை கூறுகிறார் ஜாபர் சேட். காடுவெட்டி குருவை கைது செய்யலாம் என்றும் கூறுகிறார். அதன்படி, ஒரு திருமண விழாவில் பேசுகையில் காடுவெட்டி குருவை கடுமையாக கண்டித்து பேசி, பாமக வை கூட்டணியை விட்டு வெளியேற்றியதோடு, காடுவெட்டி குருவையும் கைது செய்கிறார். பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குரு கைது செய்யப்படுகிறார்.
கருணாநிதியின் வரலாறே தன் குடும்பத்துக்காக யாரையும் விட்டுக் கொடுக்காதது. தன் குடும்பத்துக்காக கொலையும் செய்யத் தயங்க மாட்டார் கருணாநிதி. கேடி சகோதரர்களின் தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்காக, மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு, மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்பட்ட போது, சன் டிவி நிருபர், கருணாநிதியிடம் “அய்யா அழகிரிதான் மூணு பேரையும் கொலை செய்துட்டதா சொல்றாங்களே… ” என்று கேட்டபோது இடைமறித்த கருணாநிதி, “யாருடா சொன்னது… ? நான் சொல்றேன்… நீதான் கொலை செஞ்ச ?” என்று வெளிப்படையாக பேசியவர் கருணாநிதி.
அப்படிப்பட்ட கருணாநிதி, தன் மகன் அழகிரி மற்றும் மனைவி ராசாத்தி அம்மாளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் பணியை ஜாபர் சேட்டிடம் ஒப்படைத்தார். அழகிரி, தன் ஆதரவாளர்களோடு பேசி, ஏதாவது திட்டமிடும் போது, அதை முன்கூட்டியே தொலைபேசி வழியாக அறிந்து, அழகிரியை மடக்குவார் கருணாநிதி. ஒரு கட்டத்தில், தன் மனைவியில் தொலைபேசியையே ஒட்டுக் கேட்கும் பணியை ஜாபர் சேட்டிடம் பணித்தார் கருணாநிதி. ராசாத்தி அம்மாளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு தன்னிடம் தரும்படி, கருணாநிதி பணித்ததும், யோக்கியன் போல, எவ்வித சலனமும் இல்லாமல், அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்தார் ஜாபர் சேட்.
மனைவி ஏதோ கடுமையான திட்டமிடுகிறார், அதை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருந்த கருணாநிதிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “எல்லாத்தையும் கொண்டு அந்த வீட்டுலயேதான் குடுக்குறான் இந்த ஆளு. நானும் என் மவளும், என்னதான் பண்றது, என்ற தொனியில், காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கருணாநிதியை அர்ச்சித்தார் ராசாத்தி அம்மாள்.”
இதையடுத்து 2010ம் அல்லது 2009ம் ஆண்டு வாக்கில், ஒரு வாரத்துக்கு சிஐடி காலனிக்கே போகாமல் தவிர்த்தார் கருணாநிதி. இந்த நேரத்தில்தான், திமுகவின் மிகப்பெரிய சவாலாக 2ஜி ஊழல் வெடித்தது.
விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை எழுபதுகளிலயே கருணாநிதி கற்றுக் கொண்டார். இந்தியாவின் மிகச் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான சர்க்காரியா விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று சான்றளிக்கும் அளவுக்கு ஊழல் செய்வதில் நிபுணராகத் திகழ்ந்தார் கருணாநிதி. பூச்சி மருந்துகளிலேயே ஊழல் செய்தால் அள்ளி அள்ளித் தரும் அலைக்கற்றையில் என்னென்ன செய்வார் ?. கருணாநிதி நினைத்ததை, அவர் வழித்தோன்றல் ஆ.ராசா செய்து முடித்தார்.
அந்த அலைக்கற்றை ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மிக மோசமான ஒரு மாஃபியா கூட்டணி உருவாகிறது. அந்த மாஃபியா கூட்டணியின் தலைவர் ஜாபர் சேட். தளபதி நக்கீரன் காமராஜ். செயலாளர் ஆ.ராசா. எடுபிடிகள் காலம் சென்ற சாதிக் பாட்சா மற்றும் கருணாநிதியின் ட்ராலி பாய் பாண்டியன். இந்த ஐவர் கூட்டணி, 2ஜி ஊழலில் வந்த பணத்தை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வது முதல், உள்நாட்டில் பத்திரமாக முதலீடு செய்வது வரை அத்தனையையும் பார்த்துக் கொண்டது.
ட்ராலி பாய் பாண்டியன்
கருணாநிதி வீட்டில் நடப்பவற்றை பாண்டியன் ஜாபர் சேட்டிடம் சொல்வார். அதற்கு ஏற்றார்ப் போல, காய் நகர்த்துவார் ஜாபர். பண முதலீட்டை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டே, மக்களை திசைத் திருப்பி, பொய்யையும் புரட்டையும் வெளியிடும் கோயபல்ஸ் வேலையை செய்து வந்தார் காமராஜ். டெல்லியில் இருந்து பணத்தை வாங்கி வருவார் ஆ.ராசா. அந்தப் பணத்தை தொழில் நிறுவனங்களை தொடங்கி, முதலீடு செய்து, கருப்பை வெள்ளையாக்கும் பணியை செய்தார் சாதிக் பாட்சா.
இந்தக் கூட்டணியே 2ஜி ஊழலில் மொத்தமும் எனலாம். பண வரவு, முதலீடுகள், ஊடக மேலாண்மை என அத்தனை வேலைகளையும் ஜாபர் ஒருவராகவே செய்து முடித்ததைக் கண்ட கருணாநிதி வியந்தார். ஜாபர் சேட்டை உச்சிமுகர்ந்தார். இப்படி கருணாநிதி, தன்னை சார்ந்தே இருக்கத் தொடங்கி விட்டார் என்பதை அறிந்ததும், ஜாபர் சேட்டுக்கு ஆணவம் அதிகமாகியது. அகங்காரம் தலைக்கேறியது.
ஸ்டாலின், அழகிரி, துரை முருகன், பொன்முடி என்று திமுகவில் உள்ள அத்தனை பேரும் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்று நினைத்தார். தன் சக அதிகாரிகளையும், தன்னை விட பதவியில் மூத்தவர்களையும் இழிவு படுத்தத் தொடங்கினார்.
அனூப் ஜெய்ஸ்வால் என்ற அதிகாரி, 2009ம் ஆண்டில் கூடுதல் டிஜிபியாக இருந்தார். இவர் மத்திய உளவு நிறுவனமான ஐ.பி யில், 12 ஆண்டுகள் பணியாற்றியவர். இதை விட முக்கியமாக, இலங்கையின் ராணுவத் தளபதி, சரத் பொன்சேகாவோடு, ராணுவ அகாடமியில் படித்தவர். இலங்கையில் போர் உச்சத்தை அடைந்தபோது, அங்கே நடக்கும் விவகாரங்களின் முழு விபரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக, இவரை உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கிறார் கருணாநிதி. அதாவது, ஜாபர் சேட் ஐஜி, அனூப் ஜெய்ஸ்வால் கூடுதல் டிஜிபி. ஈழப் போர் முடியும் வரை அனூப் ஜெய்ஸ்வால் உளவுத்துறையில் வைக்கப்பட்டிருந்தார். ஈழப் போர் முடிந்து ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 2009ல், அவர் டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது, உளவுத்துறை பதவியில் இருந்து தூக்கப்பட்டார். இணைப்பு. இப்படி அனூப் ஜெய்ஸ்வால் தூக்கப்பட்டற்கு முக்கிய காரணம், ஜாபர் சேட். உளவுத்துறையில் தனக்கு மேல் ஒரு உயர் அதிகாரி இருக்கக் கூடாது என்ற ஒரே காரணமே அனூப் ஜெய்ஸ்வாலை ஜாபர் சேட் மாற்ற வைத்ததற்கு காரணம். அனூப் ஜெய்ஸ்வாலை மாற்றியதோடு ஜாபர் சேட் நிற்கவில்லை ஜாபர் சேட். அவர் மீது ஒரு அபாண்டமான புகாரையும் சுமத்தினார். ஜாபர் சேட்டின் தொழில் கூட்டாளியும், ஊடக வியாபாரியுமான காமராஜை வைத்து, அனூப் ஜெய்ஸ்வால் மீது ஒரு பச்சைப் பொய்யை குற்றச்சாட்டாக சுமத்தினார். அதாவது என்னவென்றால், அனூப் ஜெய்ஸ்வால், தமிழக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாக இருந்து கொண்டே, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாராம். உலகத்தில் எவனாவது ஒரு கடைந்தெடுத்த முட்டாள் இப்படிச் செய்வானா ? கருணாநிதி அரசில் பணி புரிந்து கொண்டு, கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, திமுகவோடு பின்னிப் பிணைந்துள்ள காங்கிரஸ் அரசுக்கு எழுதுவானா ? அப்படித்தான் எழுதினார் காமராஜ். நக்கீரனில் செப்டம்பர் 2009ல் ராங் கால் பகுதியில் வந்த அந்த செய்தி இதோ.
“தமிழக உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி, டெல்லி ஐ.பிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார். அதில், தி.மு.க.வில் அழகிரியும் ஸ்டாலினும் தனித்தனியா செயல்படுறாங்க. கலைஞரால் தமிழகம் முழுக்க டூர் போக முடியாது. ராகுல் காந்தி இங்கே வந்ததில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்குது. அவர் தொடர்ந்து தமிழகம் வரணும். தேர்தலுக்கு 6 மாதம் முன்னாடி, தி.மு.க. அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் கட்சி வாபஸ் வாங்கிவிட்டு, ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணி, கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினால், 2011 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்குதுன்னு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார். அந்த அதிகாரி ஏ.டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால். இவர் ஏற்கனவே ஐ.பி.யில் பணியாற்றியவர். அந்தப் பாசத்தில் இவர் இப்படி ரிப்போர்ட் அனுப்பிய தகவல், மாநில அரசுக் குத் தெரிஞ்சிடிச்சி. அந்த அதிகாரி டெல்லி சென்றிருந்த நேரத்தில் அதிரடியா மாற்றப்பட்டதன் பின்னணி இதுதான்.”
“”நானும் கேள்விப்பட்டேம்ப்பா.. தமிழகத்தில் ஆட்சிங்கிற அந்த அதிகாரியின் ரிப்போர்ட்டை டெல்லி காங்கிரசே காமெடியாகத்தான் பார்த்ததாம். இப்போதைய நிலையில் தி.மு.க அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. இந்த நேரத்தில், அரசாங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அரசுக்கு எதிரா செயல்படும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்றாங்க. அரசாங்கம் கவனமா இருக்கணும்.”
இந்த செய்தியை வெளியிட்டு, அனூப் ஜெய்ஸ்வாலை பழி வாங்கினாராம் ஜாபர். இப்படிப்பட்ட அற்பத்தனமான மனிதர் ஜாபர் சேட். ஜாபர் சேட், ஜெகத் கஸ்பர், நக்கீரன் காமராஜ், ட்ராலி பாய் பாண்டியன் ஆகியோரின் கூட்டணி, தமிழகத்தையே ஆட்டிப் படைத்தது என்றால் அது மிகையாகாது.
அதிகாரிகள் நியமனம், அமைச்சரவை மாற்றம், அரசியல் நிகழ்வுகள் என்று அத்தனையிலும் ஜாபரின் முத்திரை இருந்தது. அரசியலையும், அதிகார வர்க்கத்தையும் எப்படி ஆட்டிப் படைத்தாரோ, அதே போல, தன்னுடைய எதிரிகளை பழிவாங்குவதில் மிக மிக கேவலமான நிலைக்கும் இறங்கிப் போவார் ஜாபர் சேட்.
ஜாபரின் செயல்களையும், ஜாபர் சேட் சட்டவிரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதையும் எதிர்த்தவர் ஒரு காவல்துறை அதிகாரி. அந்த அதிகாரியின் மீது கடும் கோபம் கொண்டார் ஜாபர் சேட். முதல்வரே என் சொல் கேட்டு நடக்கையில், ஒரு சாதாரண ஐபிஎஸ் அதிகாரியான நீ, என்னை எதிர்த்துப் பேசுவதா என்று கடும் சினமடைந்தார்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு முதன் முதலில் அம்பலமானது, முன்னாள் தலைமைச் செயலாளர், திரிபாதி மற்றும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி. உபாத்யாய் ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல் ஊடகங்களில் வெளியானபோது. அப்போதுதான் சட்ட விரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு வெளிச்சத்துக்கு வந்தது. ஒட்டுக் கேட்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனமான டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெயரும் ஊடகங்களில் அம்பலமானது. கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஜாபர். இப்படி வெளியானதற்கு காரணம், தன்னை எதிர்த்த அந்த அதிகாரி மட்டுமே என்று முடிவு செய்தார். அந்த அதிகாரியை பழிவாங்கியே தீருவது என்று முடிவு செய்தார்.
அந்த உரையாடல் வெளியானது தொடர்பாக அமைக்கப்பட்ட சண்முகம் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தனக்கு ஏற்றபடி அளிக்க வைத்தார். அந்த உரையாடலை வெளியிட்டது டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. அந்த செய்திக் கட்டுரையை எழுதியவர், வி.பி.ரகு என்ற மூத்த பத்திரிக்கையாளர். அந்த ரகுவை சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் ஜாபர்.
வி.பி.ரகு
இந்த உரையாடல் வெளியான காரணத்துக்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் சங்கர் என்பவரை கைது செய்ய பரிந்துரை செய்தது சண்முகம் ஆணையம். சண்முகம் என்பவர் நீதிபதி. அவரை ஏன் நீதிபதி சண்முகம் என்று குறிப்பிடவில்லை என்றால், நீதிபதிகள் நீதிபதிகளாக நடந்து கொண்டால்தான் அவர்களை அவ்வாறு அழைக்க இயலும். சண்முகம் போல, எலும்பு துண்டுக்கு அலையும் நாய்கள் போல நடந்து கொண்டால், அவர்களை நீதிபதிகள் என்று அழைக்க இயலாது. சண்முகமும், ஜாபர் சேட் என்னென்ன சொன்னாரோ, அப்படியே பரிந்துரைகள் செய்தார்.
ஜாபர் சேட்டின் பழிவாங்கும் உணர்ச்சி அத்தோடு நின்று விடவில்லை. ஜாபர் சேட் சட்டவிரோத ஒட்டுக் கேட்பை செய்த விபரங்களை உலகுக்கு உரத்துச் சொன்னவர், டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் நிருபர் வி.பி.ரகு. அந்த ரகுவை சிறையில் அடைத்துப் பார்க்க விரும்பினார் ஜாபர் சேட். ரகு மட்டுமில்லாமல், தனக்கு எதிராக குரல் கொடுத்த, கொடுக்கத் துணிந்த அத்தனை பத்திரிக்கையாளர்களையும் சிறையில் அடைக்க விரும்பினார். என்னை எதிர்த்தால் உங்களுக்கு சிறைதான் என்ற விபரத்தை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். அவர் விரும்பியபடியே, பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தார் சண்முகம். சண்முகம் குற்ற வழக்கு பரிந்துரை செய்த மற்றொரு பத்திரிக்கையாளர் பெயர் வினோஜ். இவர் டெஹல்காவில் பணியாற்றியவர். இவருக்கும், அந்த தொலைபேசி உரையாடல் வெளியீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், டெக்கான் க்ரானிக்கிளின் ரகு, டெஹல்காவின் வினோஜ், மக்கள் டிவியின் கோமல் அன்பரசன், ஜுனியர் விகடனின் விகேஷ் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய பரிந்துரை செய்தார் சண்முகம். இப்படிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி படைத்தவர்தான் ஜாபர் சேட்.
வினோஜ் குமார்
தன்னை எதிர்த்த அந்த காவல்துறை அதிகாரியை எப்படியாவது பழிவாங்க நினைத்து, சண்முகம் பரிந்துரையின் படி, கைது செய்யப்பட்ட அந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் சங்கரிடம் இருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று, அந்த அதிகாரியை கைது செய்ய திட்டமிட்டார் ஜாபர் சேட். சங்கரை கைது செய்த சிபி.சிஐடி அதிகாரிகளிடம், வெளிப்படையாகவாவது, எந்த அதிகாரியை இதில் சிக்க வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல், அவன் ஒரு சாதாரண க்ளெர்க். அவனால் இதைச் செய்திருக்க முடியாது. அவன் பின்னால் சில அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை அவனிடமிருந்து வாங்குங்கள் என்று மட்டும் சொன்னார் ஜாபர்.
அந்த அப்பரசண்டிகள், என்ன ஏது என்றே தெரியாமல், சகட்டு மேனிக்கு அந்த சங்கரை இரவு முழுக்க வெளுத்தார்கள். என்ன வேண்டும் என்று தெரிந்தால்தானே ஒப்புதல் வாக்குமூலம் பெற ? “டேய்.. XXXXX பையா… உன்னால இதைப் பண்ணியிருக்க முடியாது. உனக்கு பின்னாடி சில ஆபிசர்ஸ் இருக்காங்க. யாருன்னு சொல்லுடா ? உன்னை அடிக்க மாட்டேன்” என்று சொன்ன உடன், வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிறார்கள் இந்த அப்பரசண்டிகள், என்று உணர்ந்து கொண்ட அவனும், ஜாபர் சேட்டுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று சொன்னான். “என்னடா இது…. அய்யா பெயரையே சொல்கிறான்” என்று இன்னும் நாலு மிதி மிதித்தார்கள். .அப்போதும் உண்மை வராத காரணத்தால், சார் அவன் எதுவும் சொல்ல மாட்டேன்கிறான், அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்கிறான் என்று அய்யாவிடம் விபரத்தைக் கூறினார்கள். சரி…. விட்டு விடுங்கள் என்று ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரியை பழிவாங்க வேறு வழியைத் தேடத் தொடங்கினார் ஜாபர்.
அந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், காவல்துறையினர் உள்ளே புகுந்து, காட்டுமிராண்டித்தனமாக வழக்கறிஞர்களைத் தாக்கினர். அது தொடர்பான வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அந்த சமயத்தில், ஜாபர் சேட், ‘இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று களம் இறங்கினார். திமுக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக அந்த விவகாரம் அமைந்தது. தமிழகமே, வழக்கறிஞர்கள் போராட்டத்தால் கொந்தளித்த தருணத்தில், அதைத் திசைத் திருப்ப அவரை மருத்துவமனையில், முதுகெலும்பு அறுவை சிகிச்சை என்று அறிவித்து அனுமதி பெறச் செய்தார் ஜாபர் சேட். உலகமே, கருணாநிதிக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளும் வகையில், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவித்த சமயத்தில், கலைமாமணி விருதுகளை அறிவித்தார்.
ஆபரேஷன் பண்ணிக்கிட்டாராமா..
வழக்கறிஞர் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்று கருணாநிதி சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜாபர் சேட், சிஐடி காலனியை எப்படி சமாளிப்பது என்று அறிவுரை கூறினார் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பூங்கோதை, சுப்ரமணிய சுவாமி வெளியிட்ட ஒலிநாடா காரணமாக ராஜினாமா செய்திருந்தார். பூங்கோதை ராஜினாமா செய்து, வெறும் எம்.எல்.ஏவாக இருந்தபோது, பூங்கோதையை, மீண்டும் அமைச்சராக்க இதுவே தருணம் என்று ஆலோசனை கூறினார். அறுவை சிகிச்சை செய்ததாக நடித்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் படுத்திருந்த கருணாநிதி, அந்த நேரத்தில் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கினார். வழக்கறிஞர் தாக்குதல் தொடர்பாக தமிழகமே அந்த விவகாரத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், பூங்கோதையை அமைச்சராக்கினார் கருணாநிதி. நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று புழுங்கிக் கொண்டிருந்த சிஐடி காலனிக்கு, இது அருமருந்தாக அமைந்தது. பூங்கோதை, கனிமொழி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த காலம் அது.
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு அழகு, தலைமைப் பண்பு. இது என்னுடைய கட்டளை. இது சரியோ, தவறோ. இதற்கு நானே பொறுப்பு என்று சொல்வதே ஒரு உயர் அதிகாரிக்கு அழகு. வழக்கறிஞர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் கை கால்களை ஒடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அப்போதைய மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன். விவகாரம் கை மீறிப் போனதும், இதற்கு நான் பொறுப்பல்ல என்று தப்பிக்கப் பார்த்தார் ராதாகிருஷ்ணன். ஜாபர் சேட்டை ஒரு அதிகாரி எதிர்த்தார் அல்லவா ? அந்த அதிகாரி அப்போது சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரிதான் அத்தனை விவகாரங்களுக்கும் பொறுப்பு. அவர்தான் தவறாக முடிவெடுத்தார் என்று அறிக்கை அளித்தார் ராதாகிருஷ்ணன். அப்போது, ராதாகிருஷ்ணன், கிட்டத்தட்ட ஜாபர் சேட்டின் அடிமையாக இருந்தார். ஜாபர் சேட் சொல்வதை சிரமேற்கொண்டு முடிப்பார். அவரும், அவர் சகோதரர்களும், தமிழகம் முழுக்க பின்னாளில் நடத்திய நில அபகரிப்புகளுக்கு, ஜாபர் சேட், முழுமையாக துணை நின்றார்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு, காரணமான ஒரே நபர், ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரி என்று கருணாநிதி முடிவெடுத்து, ஜாபர் சேட்டை எதிர்த்த அந்த அதிகாரிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.
அந்த அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஜாபர் பரிந்துரைக்கிறார். அதன் படி, லஞ்ச ஒழிப்புத் துறை ஊழல் வழக்கை அந்த அதிகாரி மீது பதிவு செய்கிறது. ஊழல் வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரி, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளிக்க, ஜாபர் சேட் கொதிக்கிறார். அந்த அதிகாரியை கைது செய்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறார். ஒரு கட்டத்தில் ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அந்த அதிகாரியை கைது செய்தே ஆக வேண்டும் என்று ஜாபர் சேட் முடிவெடுக்கிறார். அதன்படி முடிவெடுத்து, அந்த அதிகாரியை கைது செய்ய முடிவெடுத்ததும், மத்திய உளவுத்துறையோடு நெருக்கமாக தொடர்புள்ள அனூப் ஜெய்ஸ்வால் மற்றும் வேறு சில அதிகாரிகளிடம் தகவல் தெரிகிறது. அவர்கள் டெல்லியில் உள்ள அவர்கள் தொடர்புகளை பயன்படுத்தி, கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்கள்.
கைது நடவடிக்கை தடுக்கப்பட்டதும், ஜாபரின் ஆத்திரம் அதிகமாகிறது. அந்த அதிகாரியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதன்படி, ஜாபர் சேட்டிடம் இருந்த தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்குகிறது. அந்த அதிகாரியின் மின்னஞ்சலை ஹேக் செய்கிறார் ஜாபர் சேட். ஹேக் செய்து, இன்னொரு, பெண் அதிகாரிக்கு, இந்த காவல் துறை அதிகாரியின் மின்னஞ்சலில் இருந்த காதல் கடிதம் சென்றது போல பல்வேறு மின்னஞ்சல்களை அனுப்புகிறார் ஜாபர் சேட். இது, இந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்திலும், மின்னஞ்சலைப் பெற்ற அந்த பெண் அதிகாரியின் குடும்பத்திலும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த வல்லது. ஆனால், அந்த பெண் அதிகாரியின் கணவர், மிக மிக இயல்பாக, அந்த மின்னஞ்சலை அப்படியே எடுத்து வந்து, அதை அனுப்பியதாக சித்தரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் அளிக்கிறார். அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரி, உண்மையை விளக்கியதும், பிரச்சினை அத்தோடு முடிவடைந்தது.
இப்படிப்பட்ட கேவலமான மனிதர்தான் ஜாபர் சேட். ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்த ஜாபர் சேட்டை எதிர்க்கத் துணிந்தவர்கள் அன்று இரண்டே இரண்டு பேர். ஒருவர் அந்த காவல் துறை அதிகாரி. இன்னொன்று சவுக்கு இணையதளம். இவர்கள் இருவரும், ஜாபர் சேட்டுக்கு அந்த காலத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள்.
ஜாபர் சேட்டைப் பார்த்து பம்மி, பயந்து, அஞ்சி, நடுங்கி, அத்தனை பேரும் வாலை காலிடுக்கில் சொருகிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த நிலையில், சவுக்கு இணையதளம், ஜாபர் சேட்டின் காதில் புகுந்த எறும்பாக அவருக்கு தலைவலி கொடுத்தது. ஜாபர் சேட் எப்படி சவுக்கு இணையதளத்தை பின்தொடர்ந்தபடி இருந்தாரோ, அதை விட, இரண்டு மடங்கு, சவுக்கு இணையதளம், ஜாபர் சேட்டை பின் தொடர்ந்தது. செம்மொழி மாநாட்டில், ஜாபர் சேட், சரக்கடித்து விட்டு, சல்லாபத்தில் ஈடுபட்டது, ஒரு நாள் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற ஜாபர் சேட்டுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டது உட்பட, ஜாபர் சேட், எப்போதெல்லாம் சறுக்கினாரோ, அப்போதெல்லாம், சவுக்கு தளம், ஜாபர் சேட்டை சவுக்கால் அடித்தது போல துடிக்க வைத்தது.
ஆங்கிலத்தில் LAST NAIL IN THE COFFIN என்று சொல்வார்கள். அது போல, ஜாபர் சேட்டின், சவப்பெட்டியில் இறுதி ஆணியை சவுக்கு அடித்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறது.
ஒரு காவல்துறை அதிகாரி எப்படியெல்லாம் செயல்படக் கூடாதோ, அப்படியெல்லாம் செயல்பட்டார் ஜாபர் சேட் கருணாநிதியின் குடும்பத்துக்கு அடியாளாக, சேவகனாக, வேலையாளாக ஜாபர் சேட் செயல்பட்டதாக கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், கருணாநிதியின் குடும்பமே என்னை நம்பித்தான் இருக்கிறது. கருணாநிதியின் குடும்பமே, எனது கைப்பாவைகள் என்ற எண்ணத்தில்தான் ஜாபர் சேட் செயல்பட்டார் என்பதை, கருணாநிதியும், ஸ்டாலினும், அழகிரியும், இதர தொண்டர் அடிப்பொடிகளும், மிக மிக தாமதமாகவே புரிந்து கொண்டார்கள். அப்படி கருணாநிதியின் குடும்பத்தை தனது கைப்பாவையாக ஜாபர் சேட் கருதியதன் வெளிப்பாடே கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தன்னிடம் பேசும் தொலைபேசி உரையாடல்களை ஜாபர் சேட் பதிவு செய்து வைத்தது. அந்த உரையாடல்களில் ஒன்றுதான், ஜாபர் சேட் மற்றும் சண்முகநாதன் இடையே நடைபெற்றது.
சண்முகநாதன்
இந்த உரையாடலை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், இதில் சண்முகநாதன் வணக்கம், சண்முகநாதன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். உடனே ஜாபர் சேட் பேசத் தொடங்குகிறார். சார், அவர் 60 முதலில் தந்து விடுகிறேன் என்கிறார். அது தயாராக இருக்கிறது. ஐந்து வருடத்துக்கு விளம்பரமாக தந்து விடுகிறேன் என்கிறார். இன்னொரு இருபது வேண்டும் என்றேன். அவர் உடனே முடியாது என்கிறார். இன்னொரு நாற்பது வேண்டும் என்றேன். நீங்கள் அனுமதி அளித்தீர்கள் என்றால், வேறு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார் என்று அந்த உரையாடல் போகிறது..
உரையாடலின் இணைப்பு
உரையாடலின் விபரங்கள்
இந்த உரையாடல் ஜாபர் சேட்டுக்கும், கருணாநிதியின் அந்தரங்க உதவியாளர் சண்முகநாதனுக்கும் இடையே நடைபெறுகிறது.
மணி ஒலிக்கிறது.
ஜாபர் சேட் : ஜாபர்…
சண்முகநாதன் : சார் வணக்கம்… சண்முகநாதன்.
ஜாபர் சேட் : சார் பேசிட்டேங்க சார். அவர் மொதல்ல அறுபது பண்ணிட்றேங்கறாராம்.
சண்முகநாதன் : சரி.
ஜாபர் சேட் : அறுபதுக்கெல்லாம் ரெடியா இருக்குது. அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றேங்கறாராம். அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்டுக்கு போட்டு குடுத்துட்றேங்கறராம். இன்னொரு இருபதுக்கு வழி பண்ணித் தர்றேன். உடனே பண்ண முடியாதுங்கறாராம். என்ன சொல்றாருன்னா, அறுபது கன்ஃபர்ம் ஆயிடுச்சு. நான் சரி அந்த அறுபதுக்கு மொதல்ல வொர்க் அவுட் பண்ணுங்கன்னு சொன்னேன். மீதி நாப்பதுக்கு வேற வழி வேணும்னு சொன்னேன். மொதல்ல இருபதை பேசுவோம். நான் இன்னொரு தடவை அவர்கிட்ட பேசிப் பாத்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டு, அஞ்சு வருஷத்துக்கு அட்வர்டைஸ்மென்ட் மாதிரி குடுத்துட்றாருங்க சார். குடுத்து அறுபதை குடுத்துட்றாரு இவங்க கம்பெனிக்கு.
சண்முகநாதன் : அட்வர்டைஸ்மென்டுனா கரெக்டா இருக்காதே…
ஜாபர் சேட் : நான் நேரா இப்போ இன்னொரு தடவை பேசிட்றேன் சார். ஈவ்னிங் பேசிட்றேன் சார். அறுபது ரெடி பண்ணிட்டாரு. அறுபது ரெடி சார். இன்னும் இருபது ரெடி பண்ணிட்றேன்னு சொன்னாரு சார். இன்னொன்னு சொன்னாராம். நீங்க பர்மிஷன் வாங்கி சொன்னீங்கன்னா எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இருக்காரு. அவர் மூலமா இன்னொரு நாப்பது ரெடி பண்ணிடலாம்னு சொன்னாரு. அது யாருன்னு போன்ல வேணாம். நான் நேரா பாத்துட்டு ஈவ்னிங் சொல்றேன் சார். தேங்க்யூ சார்.
சண்முகநாதன் : தேங்க்யூ. ”
சண்முகநாதன் போனை எடுத்தவுடன், ஜாபர் பல்வேறு விபரங்களை சொல்கிறார் என்றால், அது கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கருணாநிதியிடம் சொல்வதற்காகவே, ஜாபர் சேட் பல்வேறு விபரங்களை சொல்கிறார். சண்முகநாதனும், அது விளம்பரமாக கொடுத்தால் சரியாக வருமா, வராதா என்று விவாதிக்கிறார். கலைஞர் டிவியோ, கருணாநிதி குடும்பமோ, நன்றாக இருந்தாலும், நாசமாகப் போனாலும் சண்முகநாதனுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அவர் இவ்வளவு அக்களையோடு பேசுகிறார் என்றால், அவர் பேசுவது கருணாநிதியின் சார்பாகவே. ஆக, கருணாநிதிக்கு தெரியாமல் இந்த 60 அல்லது 40 கோடி தொடர்பாக ஜாபர் சேட் பேசியிருக்கவே முடியாது.
கருணாநிதி சார்பாகவே, ஜாபர் சேட் அந்த நிதியைத் திரட்டியிருக்கிறார். அவருக்காகத்தான், பல்வேறு தொழில் அதிபர்களிடம் பேசி நிதி பெற்றிருக்கிறார் ஜாபர் சேட். அப்படிப்பட்ட உரையாடலை ஜாபர் சேட் பதிவு செய்து வைத்திருக்கக் காரணமே, பின்னாளில், கருணாநிதியை மிரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால், இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற காரணமே. அப்படி பதிவு செய்து வைத்திருந்த உரையாடல்கள்தான் இப்போது வெளியாகியுள்ளது. இப்படி வெளியாகிய உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்தது ஜாபர் சேட்தான் என்ற விபரம், திமுக தலைமைக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தெரிந்து, ஜாபர் சேட் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அந்த கோபத்தை மட்டுப்படுத்தவும், அந்த உரையாடல்கள் ஜாபர் சேட்டால் பதிவு செய்யப்பட்டவை அல்ல என்று நம்பவைத்து, ஜாபர் சேட்டைக் காப்பாற்றவும் எழுதப்பட்ட கட்டுரையே, இந்த வாரம் நக்கீரனில் காமராஜ் எழுதியுள்ள கட்டுரை. இணைப்பு. அதில் கூசாமல் பொய்யையும் புரட்டையும் சகட்டு மேனிக்கு எழுதியுள்ளார் காமராஜ். சிபிஐ ஒரு போதும் ஜாபர்சேட் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதில்லை. மாறாக, ஜாபர் சேட்தான், 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், சிபிஐ அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி ஒரு கட்டுரையை எழுதியதன் மூலம், ஜாபர் சேட்டை காப்பாற்றி விட முடியும் என்று காமராஜ் மனப்பால் குடித்தால், அவரை விட ஒரு முட்டாள் யாருமே இருக்க முடியாது. இந்தக் கட்டுரையை திமுகவில் உள்ளவர்களும் நம்ப மாட்டார்கள், சிபிஐ அதிகாரிகளும் நம்ப மாட்டார்கள். சிபிஐ அதிகாரிகள், ஜாபர் சேட்டின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள் என்ற பொய் கட்டுரையால், சிபிஐ அதிகாரிகள் மேலும் கோபமடைந்து விசாரணையை தீவிரப்படுத்துவது மட்டுமே, காமராஜ் ஜாபர் சேட்டுக்கு தற்போது செய்துள்ள உதவி.
வெளியாகியுள்ள உரையாடல்கள் காரணமாக, ஏற்கனவே அதிமுகவின் கோபப்பார்வையில் சிக்கியுள்ள ஜாபர் சேட், தற்போது திமுகவின் கடுங்கோபத்துக்கும் ஆளாகியுள்ளார். இதிலிருந்து ஜாபர் சேட் மீண்டு வருவது குதிரைக்கொம்பே. இந்த உரையாடல்களே, ஜாபர் சேட்டின் சவப்பெட்டியில் இறுதி ஆணி. அந்த இறுதி ஆணியை ஜாபர் சேட்டின் சவப்பெட்டியில் அடித்ததில்,பெருமகிழ்ச்சி கொள்கிறது சவுக்கு.
2 unconnected news items- In the meantime, CBI is scheduling voice tests of many 2G spectrum accused. Kanimozhi undergoes throat operation.