“ஓயாது இந்த அலை… சாயாது இந்த சிலை” என்று பேசியபடியே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வாடா வா…. போன வாரம் மாதிரியே லேட்டா வர்ற… கரெக்ட் டையத்துக்கு வர வேண்டாமா ? “
“பற்பல, சிற்சில வேலைகள் இருந்தது. அதான் லேட்டு. “
“சரி.. சரி… விஷயத்துக்கு வா… வைகோ என்ன ஆனாரு… ஏன் மோடி கூட்டத்துக்குப் போகாம, மல்லை சத்யாவை அனுப்பி வைத்தாரு ? “
யாரோடு கூட்டணி சேரப்போகிறார் ன்ற விஷயத்தை இறுதி வரைக்கும் சொல்லாமல் வைத்திருப்பது வரை, அவருக்கு மரியாதை. எங்கே சேரப்போகிறார் என்று ஒரு ஹைப் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்குக் கூட, இந்த விபரங்கள் தெரிந்திருக்கிறது.
ஆனால், எந்த விதமான தயக்கமும் இல்லாமல், முதன் முதலாகப் போய் பிஜேபி கூட்டணியில் சேர்ந்தேன் என்ற அறிவித்ததோடு, பிஜேபி அலுவலகத்துக்கும் போய், நான் வந்துட்டேன் பாருங்கன்னு பாரத மாதா சிலைக்கு பூஜையெல்லாம் பண்ணியிருக்கார். பிஜேபி பேரணி நடத்துவதற்கு, இவர் கட்சியில் கமிட்டி போட்டு, அதற்கான ஏற்பாடுகளை கவனித்தார்.
இவர் இப்படி நடந்து கொள்வதற்கான முக்கிய காரணம், நான்தான் உங்களுக்கு ரொம்ப விசுவாசம் என்று நிரூபித்தால், பிஜேபியினர் அவர்களாகவே வைகோவுக்கு அதிக சீட்டுகளை தருவார்கள் என்ற வைகோவின் நம்பிக்கையே. ஆனால், வைகோ எதிர்ப்பார்த்தது போல, பிஜேபி தரப்பிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் கோபமடைந்த வைகோ, மோடியின் கூட்டத்தை புறக்கணிச்சுட்டார்”
“சரி… பிஜேபி காரங்க அவரை சமாதானப்படுத்தலையா ?”
“பிஜேபி காரங்க எதுக்கு சமாதானப்படுத்தனும் ? அதான் அவரே போயி மோடியை கட்டிப்புடிச்சு போஸ் குடுத்துட்டு வந்துட்டாரே”
“என்னடா சொல்ற ? “
“ஆமாம்டா.. இதுதான் வைகோ. வெண்டைக்காயை வெட்டி, விளக்கெண்ணையில் போட்ட மாதிரிதான் அவரோட நடவடிக்கைகள் இருக்கு. தன்னை மதிக்காத கட்சியின் பொதுக்கூட்டத்தை புறக்கணிக்கணும். நான் திமுகவோடு பேசப்போகிறேன்ற மாதிரி, கலைஞர் நல்லவருன்னு ஒரு பேட்டி கொடுத்தா, பிஜேபி காரங்க அலறி அடிச்சிக்கிட்டு வருவாங்க. அதை விட்டுட்டு, கூட்டத்தை புறக்கணிக்கிறது.. அப்புறம் அன்னைக்கு இரவே, மோடியை கட்டிப் புடிக்கிறதுன்னு இவரோட தெளிவில்லாத நிலைபாடுகளால்தான், வைகோ ஒரு தலைவராகவே உருவாக முடியாம, வட்டச்செயலாளர் மாதிரி முடங்கிப் போயிட்டாரு. “
“கேப்டன் என்ன சொல்றாரு ?” என்று கேப்டன் சப்ஜெக்டுக்கு தாவினான் ரத்னவேல்.
“ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா.. மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா..
காங்கிரஸூம், கேப்டனும் சேந்திச்சின்னா, கொட்டுது கொட்டுது கோடிகள்ணா… “
“டேய்… விளையாடாம சொல்லுடா… “
“மச்சான். நான் விளையாடல. உண்மையைத்தான் சொல்றேன். கேப்டன் ரொம்ப முறுக்கறதைப் பாத்துட்டு, பிஜேபி தரப்பும் எரிச்சலாயிடுச்சு.
சமீபத்துல சென்னை கூட்டத்துக்காக வந்த மோடிக் கிட்ட, கேப்டனும், பாட்டாளி மக்கள் கட்சியும், வைக்கக் கூடிய நிபந்தனைகள் பற்றி சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டதும் மோடி, நாம ஒரு தேசிய கட்சி. தேசிய கட்சி போல நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடம் போய் கெஞ்சுவதை முதலில் தவிருங்கள். தானாக வழிக்கு வருவார்கள். அப்படி வராவிட்டாலும் பரவாயில்லை. விட்டு விடுங்கள் னு சொல்லியிருக்கார்.
இந்தத் தகவல் கேப்டனுக்கும் போயிருக்கு. கேப்டன், உடனே மதச்சார்பற்ற கூட்டணி ன்னு முடிவெடுத்து, காங்கிரஸ் கூட சேரலாம்னு முடிவெடுத்துட்டார். விரைவில் டெல்லி போயி காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதா சொல்றாங்க.”
“திமுக என்ன நிலைபாட்டுல இருக்காங்க ? “
“காங்கிரஸோடு இனி ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாதுன்னு அறிவித்த கருணாநிதிக்கு, மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்தது சமீபத்தில் வெளியான டேப்புகள்.
2ஜி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கனிமொழி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கணும் னு ஒரு மனு தாக்கல் பண்ணியிருந்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வருது. அந்த மனு விசாரணைக்கு வரும் நிலையில், தற்போது இந்த டேப்புகள் வெளியாகியிருக்கு. இந்த டேப்புகளை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன் னு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சொல்லியிருக்கும் நிலையில், 2ஜி விவகாரத்தில், கருணாநிதி மற்றும் ஜாபர் சேட்டின் பங்கை விசாரிக்கணும்னு அனுப்பப் பட்ட புகார், சிபிஐ வசம் சனிக்கிழமை போய் சேந்திருக்கு. இந்தப் புகாரின் மீது சிபிஐ விசாரணை தொடங்கினால், கருணாநிதியை விசாரித்தே ஆக வேண்டும். கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ, 2ஜி விவகாரத்தில் வந்துள்ள இந்த புகார் தொடர்பாக கருணாநிதியை விசாரித்தே ஆக வேண்டும்.
சிபிஐ விசாரணை நடத்தவில்லையென்றால், புகார் கொடுத்தவரும், பிரசாந்த் பூஷணும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வார்கள் ன்ற விபரம் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இதையெல்லாம் சமாளிக்க காங்கிரஸின் தயவு தேவைன்றதும் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.
மேலும், தற்போது உள்ள கட்சிகளை வைத்து, தேர்தலை சந்திப்பதை விட, காங்கிரஸ் மற்றும் தேமுதிக வோடு கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் னு கருணாநிதி நினைக்கிறார்.
காங்கிரஸ் என்ன நினைக்குதுன்னா, தனியா போட்டியிட்டா 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்துக்கு போயிடும் னு அவங்களுக்கு தெரியும். ஒரு தேசிய கட்சி, இப்படி மோசமாக தோற்பது நல்லா இருக்காது. அதனால, திமுகவோட கூட்டணி அமைத்தால், தோல்வியடைஞ்சாலும், அது நாகரீகமான தோல்வியா இருக்கும். இந்த நேரத்தில் வெளியாகியுள்ள 2ஜி டேப்புகள், திமுகவை மிரட்ட காங்கிரஸ் கட்சிக்கு பேருதவியா இருக்கு.
இதை அடிப்படையா வைத்து, நேரடியாவே திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்னு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருக்கு. வரும் புதன் கிழமை அன்று, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஏகே.அந்தோணியும், வீரப்ப மொய்லியும் சென்னை வர்றாங்க. அனுபவம் வாய்ந்த இரண்டு தலைவர்களை அனுப்பறதே, கருணாநிதியை சம்மதிக்க வைக்கத்தான் என்ற சொல்லப்படுகிறது. அதனால் விரைவில், திமுக காங்கிரஸ் கட்சியோடு கை கோர்க்க வாய்ப்புகள் இருக்கு. மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டுவதற்காக, சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக, நாட்டின் நலன் கருதி, இந்த கூட்டணியை அமைக்கிறேன்னு, கருணாநிதியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அநேகமாக திமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணி உறுதின்றதுதான் இறுதிக் கட்ட தகவல். திமுகவுக்கு 15, தேமுதிகவுக்கு 12, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2, புதிய தமிழகத்துக்கு 1, முஸ்லீம் லீகுக்கு 1, முஸ்லீம் முன்னேற்றக் கழகத்துக்கு 1, பாண்டிச்சேரியோடு சேர்த்து காங்கிரஸ்க்கு 8. இதுதான் கடைசி நிலவரம். இந்த விவகாரம், இந்த வாரத்தில் தெளிவடையும்.
“ஜெயலலிதா என்ன பண்றாங்க ? அதிமுகவோட நிலைபாடு என்ன ? “
“தேவர் வாக்குகளை கவரணும்னு நினைச்சு, ஜெயலலிதா சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக, தங்கக் கவசம் அணிவிச்சாங்க. இது முக்குலத்தோர் வாக்குகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் னு சொல்லப்படுது. ஆனா, ஜெயலலிதாவோட இந்த நடவடிக்கையால, ஏற்கனவே அதிமுக மேல கோபத்துல இருக்கக் கூடிய பள்ளர்கள் மற்றும் நாடார்கள் கடும் கோபத்துல இருக்காங்க. பல்வேறு நாடார் சமூக தலைவர்கள், ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கக் கூடிய பள்ளர்கள் மற்றும், நாடார்கள் மத்தியில், ஜெயலலிதாவுக்கு பின்னடைவை உண்டாக்கும்”
“சொத்துக் குவிப்பு வழக்கு என்ன நிலையிலடா இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கு. ஜெயலலிதா இந்த வழக்கு பத்தி ரொம்ப கவலையில இருக்காங்க. தேர்தல் நேரத்துல இது சிக்கலை உண்டு பண்ணிடுமோன்ற கவலை அவங்களுக்கு இருக்கு. இந்த வழக்கை இனியும் இழுத்தடிக்க வாய்ப்பு இல்லைன்ற நிலைமையில், என்னோட சொத்துக்களை திருப்பிக் கொடுங்கன்னு ஒரு மனு தாக்கல் பண்ணினாங்க. வழக்கமா இது போன்ற மனுக்கள், வழக்கின் தொடக்கத்தில் அல்லது வழக்கு முடிந்த பின்னாடிதான் தாக்கல் பண்ண முடியும். ஆனா, ஜெயலலிதா இந்த நேரத்துல இந்த மனுவை தாக்கல் பண்ணியிருக்காங்க. ஜெயலலிதா, இந்த நேரத்துல தாக்கல் செய்த இந்த மனு வேடிக்கையானது. மேலும், ஒரு வழக்கின் சொத்துக்களை, வழக்கின் தன்மை பொறுத்து, இது என்னுடையதே அல்ல என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொல்வதும் உண்டு. ஆனா, ஜெயலலிதா என்னோட பொருட்களை திருப்பிக் குடுங்கன்னு தாக்கல் செய்த மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். தன்னோட உத்தரவில், ““நீண்ட காலமாக நடைபெற்றுவரும் இவ்வழக்கில் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரிடமும் விசாரணை நடை பெற்று, விளக்கமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நடந்திருக்கும் ஒரே மாற்றம், புதிய நீதிபதி பொறுப்பேற்றதுதான். இது போன்ற புதிய மனுக்களை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மீண்டும் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நினைவுப் பொருள்கள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, நினைவுப் பரிசு பொருள்கள் மீதான தனது உரிமையை ஜெயலலிதா சட்டப்படி நிலைநாட்டலாம்’ இப்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். “
“இப்படி ஒரு மனுவை இந்த நேரத்தில் தாக்கல் செய்ததற்கு என்ன காரணமா இருக்கும் ? ” என்று ஆச்சர்யமாக கேட்டான் பீமராஜன்.
“வழக்கை இந்த மாதிரி மனுவின் மூலமாக மேலும் தாமதப்படுத்தத்தான். தற்போதைய சிறப்பு நீதிபதி மைக்கேல் குன்ஹா நியமனம் தொடர்பான வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருது. சிறப்பு நீதிபதி நியமனம் தொடர்பா இந்த வழக்கில் ஏதாவது விடிவு கிடைக்காதான்னு காத்திருக்காங்க ஜெயலலிதா”
“பாட்டாளி மக்கள் கட்சியோட நிலைபாடு என்ன ? அவங்க எந்தப் பக்கம் போகப் போறாங்க ? ” என்றான் ரத்னவேல்.
“பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி, செப்டம்பர் மாதம் 2013ல் பேசும்போது, “தனியாக தான் போட்டியிட போகிறோம். யாருடனும் கூட்டணி கிடையாது. 2016-ல் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். இதற்கு ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” னு சொன்னாரு. ராமதாஸ் பேசும்போது, “வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க.., தனித்து போட்டியிடும். குறைந்தது, 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தவிர, பா.ம.க., தலைமையில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் வரும் 2016ல், பா.ம.க., ஆட்சியை பிடிக்கும்” னு சொன்னாரு. விஜயகாந்த் தண்ணியைப் போட்டுட்டு உளறுகிறார்னா, அப்பாவும் அப்பாவும் மகனும், தண்ணி போடாமயே உளறுகிறார்கள். கூட்டணி கிடையாது, பாமக தலைமையில் கூட்டணி ன்னு அறிவிச்சிட்டு, பிஜேபி கூட தொடர்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.
அவங்ககிட்ட பேசும்போதும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது போல பேசாமல், நாங்க வச்சதுதான் சட்டம் னு பேசறாங்க. இதனால, பிஜேபி அணியிலயும் சேருவது சிக்கலாயிட்டு இருக்கு. இப்படியே போச்சுன்னா, பாட்டாளி மக்கள் கட்சி, பி.டி.அரசகுமார் கூட கூட்டணி அமைச்சுதான் தேர்தலை சந்திக்கும். அப்படி பாராளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்ததென்றால், அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்”
“அப்போ தமிழகத்தில் தேர்தல் களம் நான்குமுனை போட்டியாக இருக்குமா ? ” என்றான் வடிவேல்.
“இந்த வார நிலவரப்படி, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, புதிய தமிழகம், முஸ்லீம் லீக் தமுமுக ஒரு அணி. அதிமுக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணி. பிஜேபி, மதிமுக, பாமக ஒரு அணி என்று தமிழகத்தைப் பொறுத்தவரை மும்முனைப் போட்டியாக இருக்கும்”
“ஏம்பா நாலாவது ஒரு அணியை உட்டுட்டியே.. ? ” என்றார் கணேசன்.
“என்னண்னே… நாலாவது அணி.. புரியலையே ? “
“அனைத்திந்திய நாடாளும் மக்கள் கட்சியாக இருந்து, தற்போது நாடாளும் மக்கள் கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நடிகர் கார்த்திக்கின் கட்சியை மறந்துட்டியே… பத்து தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளாரே… ” என்று சொல்லி விட்டு சிரித்தார் கணேசன்.
“போங்கண்ணே… தமாஷ் பண்ணிக்கிட்டு. ” என்று சொல்லி விட்டு அடுத்த செய்திக்குத் தாவினான்.
“அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநரா நியமிச்சிருக்காங்களே பாத்தீங்களா ? ” என்று கேட்டான் தமிழ்.
“பாத்தேன்பா… அதுல கூட பெரிய சர்ச்சை உருவாகியிருக்குதே..? என்ன விவகாரம் அது ? “
“சிபிஐ கூடுதல் இயக்குநர்கள் போன்ற பதவிகளுக்கான நபர்களை, மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்யும். அப்படி மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்த நபர். மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த ஆர்.கே.பச்நந்தா. ஆனால், இவர் பெயரை நிராகரிச்சிட்டு, அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிச்சிருக்காங்க. இந்த நியமனம் பிரதமரின் ஒப்புதலோடு நடைபெற்றிருக்கு.
சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும், அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரைத்தான் பரிந்துரை பண்ணியிருக்காரு. பச்நந்தாவை விட, அர்ச்சனா ராமசுந்தரம், அரசுக்கும், சிபிஐ இயக்குநருக்கும் உதவியா இருப்பாங்கன்னு காங்கிரஸ் அரசு நம்புது.
அர்ச்சனா ராமசுந்தரத்தோட கணவர், ராமசுந்தரம் ஐஏஎஸ், கருணாநிதி அரசில் பொதுப்பணித் துறை செயலாளரா இருந்தார். அந்த காலகட்டத்துல, கருணாநிதிக்கு முழு நேர வேலையே, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்வையிடுவது மட்டும்தான். அந்த கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை செயலாளர் என்கிற முறையில், முழு நேரமும் பார்த்துக் கொண்டது ராமசுந்தரம்தான்.
அந்த கட்டுமானப் பணிகளில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது, ராமசுந்தரத்துக்கு நல்லா தெரியும். எப்படியும் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை எதிர்ப்பார்த்து, 2010ம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்று போயிட்டார். விருப்ப ஓய்வு பெற்றுக்கிட்டு, நாகார்ஜுனா கட்டுமான நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியா பல லட்ச ரூபாய் சம்பளத்தில் சேந்துட்டார்.
தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நாளை இதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று அறிக்கை அளித்தால், முதலில் பாதிக்கப்படப் போவது ராமசுந்தரம்தான்”
“சரி… அவர் ஊழல் பேர்விழியா இருந்தா, அதுக்கு அவங்க மனைவி என்ன பண்ணுவாங்க ? ” என்றான் ரத்னவேல்.
“என்னடா லூசு மாதிரி கேள்வி கேக்கற ? புருஷன் பண்றது பொண்டாட்டிக்கு தெரியாம இருக்குமா ? இந்த அம்மாவும் நேர்மையான ஆளெல்லாம் கிடையாது. சந்தோஷ் கே மிஸ்ரா என்ற ஐஏஎஸ் அதிகாரி, ஊட்டியில் கலெக்டரா இருந்தபோது, ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவுக்கு சட்டவிரோத கனிம சுரங்கங்கள்தான் காரணம்…. அந்த இடத்துக்கு சட்டவிரோதமாக வெடிபொருட்கள் எடுத்து வரப்படுகிறது னு, சிபி.சிஐடி ஒரு விசாரணையை தொடங்கறாங்க. அந்த விசாரணை கலெக்டர் கழுத்துக்கே வந்துச்சு.
அந்த நேரத்துல, சிபி சிஐடியோட கூடுதல் டிஜிபியா இருந்தது அர்ச்சனா ராமசுந்தரம். அவங்க, அந்த வழக்கை விசாரிக்கிற புலனாய்வு அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை மிரட்டி, சந்தோஷ் கே மிஸ்ராவுக்கு சாதகமா அறிக்கை தர வைச்சாங்க. இதுதான் அர்ச்சனா ராமசுந்தரம்.
ராமசுந்தரம் கருணாநிதிக்கு எவ்வளவு நெருக்கமா இருந்தாருன்றது, எல்லோருக்கும் தெரியும். ஆனா, ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றதும், முதலில் பூங்கொத்தோட போனது ராமசந்தரம் தம்பதியினர்தான்”
“ஏன்டா.. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்றது தப்பா ? ” என்றான் ரத்னவேல்.
“தப்பு இல்லடா. அந்த சமயத்தில் இருக்கக் கூடிய டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் போன்றவர்கள் வாழ்த்து சொல்வதும், முதல்வர் பொறுப்பேற்க இருக்கும் நபரை, நேரில் சந்திப்பதும் சகஜம். ஆனா, ராமசுந்தரம் ஐஏஎஸ் அரசுப் பணியிலயே இல்ல. அர்ச்சனா ராமசுந்தரம் அப்போ, பயிற்சி பள்ளி கூடுதல் டிஜிபியா இருந்தாங்க. அவங்கள்லாம் பாக்கணும்னு கட்டாயமே இல்லை. அவங்க முதல் நாள் பூங்கொத்தோட போனது, பச்சையான சந்தர்ப்பவாதம். இணைப்பு
இந்த அடிப்படையிலதான் சொல்றேன், அர்ச்சனா ராமசுந்தரம் காங்கிரசோட கைக்கூலியாத்தான் சிபிஐ உள்ளே அனுப்பப் பட்டிருக்காங்க. அதனாலதான், காங்கிரஸ் அர்ச்சனாவின் நியமனத்துக்கு இப்படி வக்காலத்து வாங்குது.
அது மட்டுமில்லாம, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டவரையே மத்திய கண்காணிப்பு ஆணையரா நியமித்த ஒரு அரசு, நேர்மையான அதிகாரிகளை சிபிஐக்கு நியமிப்பாங்கன்றதை நம்பவே முடியலை”
“சரி… இன்னொரு அதிகாரி சிபிஐக்கு போகப் போறாராமே.. அது பத்தி தகவல் இருக்கா ?” என்றான் ரத்னவேல்.
“ஆமாம். ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிஐக்கு போக கடும் பிரயத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கார். இவர் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப நெருக்கமான அதிகாரி. இந்த நேரத்தில் சிபிஐக்கு போனா ஜாபர் சேட்டுக்கு உதவியா இருக்கலாம்னு நினைக்கிறார்”
“அவர் எப்படிப்பட்ட அதிகாரி ? “
ஷகீல் அக்தர் ஐபிஎஸ்
“மத்திய உள்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போ, அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரியோடு இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அப்போ, இவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போ அவரை, எப்படியாவது காப்பாற்றணும்னு கருணாநிதி முயற்சி செய்து, அப்போது மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி மூலமாக, ஷகீல் அக்தரை இரவோடு இரவாக மாற்றி தமிழகம் அழைத்து வந்தார்.
அப்போது ஜெயலலிதா, இதைப் பற்றி ஒரு நீண்ட அறிக்கை கொடுத்தாங்க. அந்த அறிக்கையில் ” மத்திய உள்துறை இணை அமைச்சர் ரகுபதியின் தனிச் செயலாளர் முகம்மது ஷகீல் அக்தர், உளவு பார்த்த விவகாரத்தில் சிக்கி, மத்திய உளவுத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரவோடு இரவோக தமிழகப் பணிக்கு மாற்றியது குறித்து நேற்று முன்தினம் அறிக்கைவிட்டிருந்தேன். கடந்த 2002ம் ஆண்டு மத்திய சுகாதார துறை அமைச்சராக சத்ருகன் சின்ஹா இருந்தபோது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஷகீல் அக்தரை, மத்திய அமைச்சக பணிக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று ஷகீல் அக்தரை மத்தியப் பணிக்கு எனது அரசு அனுப்பி வைத்தது. பா.ஜ.க. ஆட்சி முடிந்து காங்கிரஸ் கூட்டணி அரசுஆட்சிக்கு வந்ததும், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரகுபதி ஷகீல் அக்தரை தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக் கொண்டார். உளவுத்துறைக்கு ஷகீல் அக்தர் மீது ஏன் சந்தேகம் வந்தது?. அவர் இரவோடு இரவாக ஏன் தமிழக பணிக்கு மாற்றப்பட்டார் என்பதுதான்இப்போதைய பிரச்சினை. இதற்கு ரகுபதியும், மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அமைதியாக இருக்க கருணாநிதி அவசரப்பட்டு பதிலளித்து முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுக்கிறது. அவருக்கு நான் வீரப் பதத்தகம் வழங்கியதாக கருணாநிதி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்தை பெறுபவர்களை தேர்வு செய்ய தனியாக ஒரு குழு இருக்கிறது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பதக்கம் பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து,அதன் பின்னர் சம்பிரதாய முறையில் பதக்கம் அளிக்கப்படுகிறது. அப்படித்தான் ஷகீல் அக்தருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆனால் ஏதோ, நான்தான் தேர்வு செய்தது போல கருணாநிதி பேசியுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலங்களுக்குத் திரும்பும் அதிகாரிகளை குறைந்தது சில வாரங்களாவது காத்திருப்போர் பட்டியலில்வைத்திருப்பார்கள். ஆனால் இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் ஷகீல் அக்தர் பதவிக்கு வருகிறார் என்றால், அதற்கான பின்னணி என்ன? எத்தனை அதிகாரிகளுக்கு இவ்வாறு சில மணித் துளிகளில் மாநிலத்திற்கு வரவழைத்து கருணாநிதி பதவி கொடுத்திருக்கிறார் என்பதை அவர் பட்டியலிட வேண்டும். ஷகீல் அக்தரின் பழைய புகைப்படத்தைக் காட்டி அப்போது நல்லவர் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்? அவரை அவசர அவசரமாக பணி அமர்த்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான நிர்ப்பந்தம் என்ன ? சந்தேகம் என்றால் ரகுபதி ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ, கருணநிதி இரவோடு இரவாக பதவி கொடுக்க வேண்டிய அவசியமோ என்ன? ஷகீல் அக்தரை கருணாநிதி விழுந்தடித்துப் பாதுகாக்கிறார் என்றால், அதில், ஆழமான, பயங்கரமான, கற்பனைக்கும் எட்டாத, கண்ணுக்குப் புலப்படாத பல மர்மங்கள் இருக்கும் என்பது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் கருத்தாகும். இத்தனை பேரும் கருணாநிதியும், ரகுபதியும் நான் அனுப்பி வைக்கும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பத்திரிக்கையாளர்கள், டிவி நிருபர்கள்
முன்னிலையில், முன் பதில் சொல்லத் தயாரா ?” இதுதான் ஜெயலலிதாவோட அறிக்கை.
“இப்படிப்பட்ட அதிகாரி சிபிஐக்கு போனா வௌங்காதே…? “
“இப்படிப்பட்ட அதிகாரிகளைத்தான் சிபிஐக்குள்ள கொண்டு போக காங்கிரஸ் அரசு நினைக்குது. என்ன பண்றது ? “
“சரி. ஐபிஎல் பெட்டிங் விவகாரம் சூடு பிடிச்சிருக்கே… ? என்ன விவகாரம் அது ? ” என்றான் பீமராஜன்.
“அது பத்தி சவுக்கு தளத்துல விரிவா கட்டுரை வர இருக்குது. வெயிட் பண்ணு”
“சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் உச்சநீதிமன்றம் போயிடுவாரு. அப்புறம் யாரு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர்றது ? “
“கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார் னு பேச்சு. அந்த மாறுதல் உத்தரவோட, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சில ஊழல் நீதிபதிகளும், வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவார்கள் ன்றதுதான், உயர்நீதிமன்ற வட்டாரத்தில் பேச்சு. பாப்போம் நல்லது நடக்குதான்னு”
“ஏம்பா… யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்துக்கு மாறியது பற்றி, பரபரப்பா பேச்சு அடிபடுதே…. என்ன விஷயம் ? ” என்றார் கணேசன்.
“இஸ்லாத் என்னை அழைத்தது. அதனால் மதம் மாறினேன்னு அவர்தான் சொல்லிட்டாரே…. அப்புறம் என்ன ? “என்றான் தமிழ்.
“விளையாடாதப்பா. விபரத்தை சொல்லு. “
“அண்ணே.. யுவன் சங்கர் ராஜா ஒரு மோசமான ஸ்த்ரீ லோலன். இந்தியா, மலேசியா, தாய்லாந்து ன்னு போயி பொறுக்கறதுதான் அவருக்கு வேலை. இவருக்கு நெருங்கிய தோஸ்து சிம்பு.
இவருக்கு ஏற்கனவே இரணடு முறை திருமணமாகி விவாகரத்து ஆகி விட்டது. மூன்றாவதா, ஒரு பிரபலத்தோட மகளை திருமணம் பண்ணனும்னு முடிவு பண்றார். அந்தப் பெண்ணும், நான் பண்ணிக்கிறேன் ஆனா, முஸ்லீம் மதத்துக்கு மாறு ன்னு சொல்லியிருக்கார். இவரும், முஸ்லீமா மாறி, காதலாகி கசிந்துருகியிருக்கார். ஆனா, அந்தப் பெண் வீட்டுல, இந்த மாதிரி ஒரு ஆளுக்கு திருமணம் பண்ணி வைக்க சம்மதிக்கல. இதையடுத்து அந்தப் பெண்ணும் முடியாதுன்னு சொல்லிடுச்சு.
அந்தப் பெண்ணின் மனதை மாத்தறதுக்காகத்தான் யுவன் இப்போ, நாலு வேளை பல்லு விளக்கறேன். ஐஞ்சு வேளை தொழுகை நடத்தறேன்னு, பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட வைச்சிக்கிட்டு இருக்காரு. ஆனா, யுவனோட கனவு கைகூடாது. அந்தப் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கு”
கொஞ்ச நாளுக்கு சோக பாட்டு பாடிக்கிட்டு சுத்துவாரு யுவன். அப்புறம், தாய்லாந்து போயி, சோகத்தை தீத்துக்குவாரு.” என்று சொல்லி விட்டு தமிழ் எழுந்ததும், சபை கலைந்தது.
Good newe