பாக்தாத் திருடன், 1960ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த திரைப்படம். பிரபல இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய திரைப்படம் இது. எம்.ஜி.ஆர், வைஜெயந்தி மாலா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் இது. 1924ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பேசா படமான The Thief of Bagdad என்ற திரைப்படத்தை உள்வாங்கி எடுக்கப்பட்ட படம் பாக்தாத் திருடன்.
ஆனால் நாம் இன்று பார்க்கப் போவது பஞ்சாப் திருடனைப் பற்றியது. பாக்தாத் திருடன், அலிபாபா, மலைக்கள்ளன் ஆகிய அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் திருடன்தான் பஞ்சாப் திருடன்.
ஸ்ரீசாந்த், அஜீத் சான்டிலா மற்றும் அங்கீத் சவான், என்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் முதன் முறையாக ஐபிஎல் சூதாட்டத்திற்காக மே 2013ல் கைது செய்யப்பட்டபோது, இந்தியாவே அதிர்ந்து போனது. தேசிய ஊடகங்கள், 24 மணி நேரமும் இந்த செய்திகளை ஒலி ஒளிபரப்பின. செய்தித்தாள்களில் முதல் பக்கத்தை இந்த விவகாரம் நெடுநாட்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.
ஆனால், டெல்லி போலீசார் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுப்பதற்கு காரணமே, தமிழக காவல்துறை என்ற விவகாரம், பலருக்கு வியப்பாக இருக்கும்.
தமிழகத்தின் க்யூ பிரிவு காவல்துறை, நெடு நாட்களாகவே போலி பாஸ்போர்ட் குறித்த விவகாரங்களை விசாரித்து வந்தது. இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ள ஒரு கும்பல், போலி பாஸ்போர்ட்டுளை தயாரித்து, வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆட்களை கொண்டு வருவதும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதும் என்று நெடு நாட்களாக நடந்து கொண்டிருந்தது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு உள்துறை, வெளியுறவுத் துறை ஆகிய அமைச்சகங்களில் சில அதிகாரிகளின் தொடர்பும் இருந்தது தெரிய வந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்தி, மத்திய அதிகாரிகளின் பங்கு குறித்த ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விடலாம் என்ற கோணத்தில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்படி விசாரணை நடைபெற்றபோது, சிக்கிய நபர்தான், ஜாபர் என்கிற ஜபருல்லா. இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இவர் விசாரிக்கப்படுகையில், இவர் தன்னுடைய மொபைல் போன் (98840 88814) என்ற மொபைல் போனிலிருந்து ஹரீஷ் பஜாஜ் என்ற நபரை தொடர்பு கொள்கிறார். இந்த ஹரீஷ் பஜாஜ் என்ற நபர், சென்னையில் உள்ள மார்வாடிகள் அனைவருக்கும் ஏஜென்ட். இவரின் பணி, சென்னையில் நிழலான காரியத்தில் ஈடுபடும் மார்வாடிகளிடம் இருந்து பணம் வசூல் செய்து, காவல்துறைக்கு கொடுப்பது. காவல்துறையிடம் சிக்கல் ஏற்பட்டால், அவர்களை காப்பாற்றுவது.
கைது செய்யப்பட்ட ஜபருல்லா, ஹரீஷ் பஜாஜை தொடர்பு கொள்கிறார் என்பது தெரிய வருகிறது. யார் இந்த ஹரீஷ் பஜாஜ் என்று ஜபருல்லாவிடம் விசாரித்ததும் ஹரீஷ் பஜாஜ், டெல்லியில் உள்ள சில இடைத்தரகர்கள் மூலமாக, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதில் உதவி செய்வார் என்று கூறுகிறார். ஹரீஷ் பஜாஜ், ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துவது தெரிய வருகிறது. ஹரீஷ் பஜாஜின் ஏஜென்டாக, ஈஸ்வரன் என்ற நபர் செயல்பட்டு வந்ததும் தெரிய வருகிறது. ஈஸ்வரனை பிடிக்கலாம் என்று முயற்சி எடுக்கின்றனர். ஈஸ்வரன் கைது செய்யப்படுகிறார். ஈஸ்வரனிடமிருந்து 9.39 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஹரீஷ்
மோகனகிருஷ்ணன்
பஜாஜ் தொலைபேசியை கண்காணித்ததில், அவர் பிரசாந்த் என்ற நபரை கடைசியாக தொடர்பு கொண்டு விட்டு, செல்பேசியை அணைத்து விட்டு தலைமறைவாகி விடுகிறார் என்ற விபரம் தெரிய வருகிறது.
ஹரீஷ் பஜாஜை கைது செய்ய தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நேரத்தில்தான் அப்போது தஞ்சாவூர் எஸ்.பியாக இருந்த அன்பு ஐபிஎஸ் இந்த விசாரணையில் தலையிடுகிறார். இந்த வழக்கை விசாரித்த க்யூ பிரிவு எஸ்.பி சம்பத் குமாரை தொடர்பு கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் சென்னை வந்து உங்களைப் பார்ப்பார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து தாருங்கள் என்று அன்பு கேட்டுக் கொள்கிறார். அதன்படி, மோகனகிருஷ்ணன், ஹரீஷ் பஜாஜை அழைத்துக் கொண்டு, க்யூ பிரிவுக்கு செல்கிறார்.
ஹரீஷ் பஜாஜ் தான் தேடப்படுவதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். வாரா வாரம் 5 கோடி ரூபாயை காவல்துறைக்கு வழங்கும் நம்மை எப்படி காவல்துறை தேடும் என்பது பஜாஜுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிறகு சென்னை மாநகர காவல்துறையில் விசாரித்ததும், இந்த விசாரணையை மேற்கொள்வது க்யூ பிரிவு சிஐடி என்றும், பாதுகாப்புப் பணம் வழங்கப்பட்டது சென்னை மாநகர காவல்துறைக்குத்தான் என்றும், அந்த பாதுகாப்புப் பணம், க்யூ பிரிவுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மோகனகிருஷ்ணன் க்யூ பிரிவு போலீசாரிடம், ஹரீஷ் பஜாஜ், ஹவாலா போன்ற விவகாரங்களில் ஈடுபடுபவர் அல்ல என்றும், ஐபிஎல் விவகாரத்தில் அவர் புக்கியாக செயல்பட்டது மட்டுமே உண்மை என்றும் கூறுகிறார். பஜாஜை விசாரித்ததும், அவருக்கும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரிய வருகிறது.
ஹரீஷ் பஜாஜ் யாருடனெல்லாம் பேசியிருக்கிறார் என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்த விசாரணையில், பிரசாந்த் என்ற புக்கி இதில் முக்கியப் பங்கு வகித்திருப்பது தெரிய வருகிறது. பிரசாந்துக்கு என்ன வேலை என்றால், புக்கிகளிடமிருந்து ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே, வாரம்தோறும் 30 ஆயிரம் ரூபாயை பிரசாந்திடம் தந்து விட வேண்டும். பிரசாந்த் இந்த பணத்தை மொத்தமாக சேகரித்து, அந்த நேரத்தில் சென்னையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அளிப்பார். ஐபிஎல் முடியும் வரை, இந்தப் பணம் வழங்கப்படும். சென்னையில் எந்த இடத்தில் பெட்டிங் நடந்தாலும், போலீஸ் சோதனை செய்யாமல், பாதுகாக்கவே இந்த ஏற்பாடு. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் மேட்சுகளில் மட்டும் 168 புக்கிகள் செயல்பட்டு வந்தார்கள். 168 புக்கிகளும் வாரந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மொத்தம் எத்தனை தொகை என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். வாரத்துக்கு 5 கோடி. ஐபிஎல் நடந்த 10 வாரங்களும் இந்த தொகை காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்த கிரிக்கெட் பெட்டிங் www.cricketlivebet.com என்ற இணையதளம் மூலமாக நடத்தப்பட்டது. எந்த மேட்சில் பெட் கட்டுவது, யார் மூலம் கட்டுவது, எந்த அணி வெல்ல வாய்ப்பு உள்ளது, அல்லது அல்ல என்ற விபரங்களை புக்கிகளுக்கு சொல்ல, வாரந்தோறும் அவர்கள் 4 ஆயிரம் ரூபாயை பிரசாந்த்துக்கு தர வேண்டும். இந்த இணையதளம் லண்டனிலிருந்து முதலில் செயல்பட்டு வந்தது. பின்னாளில், ரஷ்யாவுக்கு மாற்றப்பட்டது. இந்த புக்கிகள் அனைவரும் சஞ்சீவ் அஹுஜா என்பவர் தலைமையில் பணியாற்றி வந்தார்கள். இந்த சஞ்சீவ் அஹுஜாவுக்கு தலைவராக இருந்து செயல்பட்டவர், டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் வியாஸ். இந்த விபரங்கள் அனைத்தும், க்யூ பிரிவு போலீசார் மூலமாக, மத்திய உளவுத்துறையான இன்டெலிஜென்ஸ் ப்யூரோவுக்கும் பகிரப்படுகிறது. அப்படி பகிரப்பட்ட தகவல்கள், மத்திய உளவுத்துறையால் டெல்லி காவல்துறையோடு பகிரப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில்தான் டெல்லி காவல்துறை ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை கைது செய்கிறது.
இந்த விசாரணையை க்யூ பிரிவு போலீசார் செய்து கொண்டிருந்தபோது தெரிய வந்த மற்றொரு விவகாரம், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டு, பின்னால் இருந்து இயக்கி வருவது, தாவூத் இப்ராஹிம் என்ற விவகாரம். தாவூத் இப்ராஹிம் மூலமாக, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட, நிதி இந்தியாவுக்கு வருவது வழக்கமான ஒன்று என்பதால், அந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கப்படுகிறது.
விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், விசாரணையை சிபி.சிஐடிக்கு மாற்ற டிஜிபி ராமானுஜம் உத்தரவிடுகிறார். சிபி.சிஐடிக்கு விசாரணையை மாற்றிய அதே நேரம், தீவிரவாதம் தொடர்பான விவகாரங்களை மட்டும், க்யூ பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார் ராமானுஜம்.
அப்படி இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில், டெல்லி மும்பாய் என்று, கிரிக்கெட் புக்கிங் தொடர்பாக பல்வேறு புக்கிகள் கைது செய்யப்படுகிறார்கள். 17.05.2013 அன்று, சிபி.சிஐடி போலீசார், ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். சோதனையில் 2 கம்ப்யூட்டர்கள், 5 லேப்டாப்புகள், 12 மொபைல் போன்கள், 5 வயர்லெஸ் போன்கள் மற்றும் 14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. பெட்டிங்கில் ஈடுபட்டதற்காக 6 பேர் கைது செய்யப்படுகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிடும் சிபி.சிஐடி எஸ்.பி ராஜேஸ்வரி
இவர்களுக்கெல்லாம் தலைவராக செயல்பட்ட நபராக கிட்டி என்கிற உத்தம் ஜெயினை காவல்துறை தேடுகிறது. கிட்டி, மகேந்திர சிங் ராங்க்கா என்கிற இடைத்தரகர் மூலமாக, க்யூ பிரிவில் சரணடைய விரும்புவதாக தெரிவிக்கிறார். வழக்கின் புலனாய்வு, சிபி.சிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டதால், சிபி.சிஐடி அங்கே சரணடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கிட்டிக்கு சிபி.சிஐடியில் சரணடைய பயம். இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளின், தொடர்புகள் காரணமாக, தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும், அதனால், நான் க்யூ பிரிவு போலீசாரிடம்தான் சரணடைவேன் என்று கிட்டி சொல்லுகிறார். அந்த அடிப்படையில், கிட்டி முதன் முதலாக க்யூ பிரிவு போலீசாரால் விசாரிக்கப்படுகிறார்.
12 ஆண்டுகளுக்கு முன்னால் பெட்டிங் விவகாரத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பிறகு ஹரீஷ் பஜாஜ் உள்ளிட்ட பலரை பெட்டிங்கில் ஈடுபடுத்தியதாகவும், கூறிய கிட்டி, அடுத்து கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் உறைந்தனர். சென்னையில் உள்ள ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலின் அதிபர் விக்ரம் அகர்வால் என்பவர்தான், இந்த பெட்டிங்கின் தலைவர் என்றும் www.betfair.com எனற் இணையதளத்தில், விக்ரம் அகர்வாலுக்கு கணக்கு இருப்பதாகவும், அதன் மூலம் அவர் பெட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். விக்ரம் அகர்வாலோடு சேர்ந்து பெட்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் சையத் இர்ஃபான் மற்றும் முகம்மது நாசர் ஆகிய இருவர் என்றும், அவர்கள் மூலமாகவே பணப்பரிவர்த்தனை நடப்பதாகவும் தெரிவித்தார்.
பெட்டிங்கில் ஏராளமான பணம் புழங்குவது தெரியவந்ததும், மேட்சின் முடிவுகளை மாற்றும் வகையில் மேட்சி பிக்சிங்கில் விக்ரம் அகர்வால் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். விக்ரம் அகர்- வாலுக்கு, கிரிக்கெட் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரய்னா, ஆகியோரை நன்றாகத் தெரியும் என்றும் கூறினார் கிட்டி. மேலும், விக்ரம் அகர்வாலுக்கு தாவூத் இப்ராஹிமோடு தொடர்பு இருப்பதாகவும், டெல்லியில் கிரிக்கெட் பெட்டிங்கை விசாரித்து வந்த பதீஷ் தத் என்ற காவல்துறை ஆய்வாளரை கொன்றது தாவூத்தான் என்றும், பெட்டிங் தொடர்பாக காவல்துறையில் ஏதாவது சொன்னால், தன்னையும் தாவூத் கொலை செய்து விடுவார் என்று மிரட்டியதாகவும், தற்போது உளவுத்துறை ஐஜியாக உள்ள, அம்ரேஷ் பூஜாரி விக்ரம் அகர்வாலுக்கு நெருக்கம் என்றும், அதனால், விக்ரம் அகர்வால், எப்படியும் தப்பித்து விட்டு தன்னை மாட்டி விட்டு விடுவார் என்றும் கூறுகிறார் கிட்டி.
கிரிக்கெட் பெட்டிங்கை விசாரித்த டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் பதீஷ் தத் மற்றும் அவர் காதலி கீதா சர்மா ஆகியோர் மர்மமான முறையில் டெல்லியில் இறந்து கிடந்தனர். அவர்களை முடித்தது, தாவூத் கேங்கை சேர்ந்த அனீஸ் இப்ராஹிம்தான் என்றும், அது போல கிட்டி வாயைத்திறந்தால், தாவூத் இப்ராஹிம் கிட்டியின் கதையையும் முடித்து விடுவார் என்றும் விக்ரம் அகர்வால் கிட்டியை மிரட்டியிருக்கிறார்.
விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா அகர்வால் மற்றும், குருநாத் மெய்யப்பனின் மனைவி ரூபா மெய்யப்பன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் அகர்வால், கிரிக்கெட் வீரர்களுக்காக, ரேடிஸ்ஸன் ப்ளு அல்லது அடையார் கேட் ஹோட்டல்களில் கேளிக்கை விருந்து நடத்துவது வழக்கம், அந்த விருந்துகளில், விக்ரம் அகர்வாலோடு சேர்ந்து கிட்டியும் கலந்து கொள்வதுண்டு. 21.04.2013 மற்றும் 23.04.2013 அன்று, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், விக்ரம் அகர்வாலை அவருடைய ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்படி அந்த நபர் பேசிவிட்டு சென்ற பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 12.05.2013 அன்று நடக்க இருக்கும் மேட்சில், சென்னை அணியை தோற்கடிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், குருநாத் மெய்யப்பனிடம் விபரத்தை தெரிவித்தால், அவர், தோனியிடம் பேசி, வேலையை கச்சிதமாக முடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம் அகர்வால்
27.04.2013 அன்று, ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் நடந்த ஒரு விருந்தில், விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன் மற்றும் கிட்டி பங்கேற்கிறார்கள். அப்போது, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வாலிடம், தோனியிடம் பேசி விட்டதாகவும், தோனி 140 ரன்களுக்குள் அடிக்க ஒப்புக் கொண்டதாகவும், தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இந்தத் தகவல் பின்னாளில் கைது செய்யப்பட்ட விந்தூ தாராசிங் மூலமாக, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் குந்த்ராவிடம் சொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்தத் தகவல்கள் அனைத்தையும், கிட்டி க்யூ பிரிவு காவல்துறையிடம் சொல்கிறார். இந்தத் தகவல்கள் வாக்குமூலமாக க்யூ பிரிவினரால் பதிவு செய்யப்படுகிறது. இந்த வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், கிட்டி சிபி.சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
10 ஜுன் 2013 அன்று, விக்ரம் அகர்வால், சிபி.சிஐடி போலீசாரால், கைது செய்யப்படுகிறார். விக்ரம் அகர்வால் பஞ்சாபைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் ஒரு நெருக்கமான குழுவை வைத்திருக்கிறார்கள். மார்வாடி சமூகத்தினர் எப்படி தங்களது தேவைகளை நெருக்கமாக இருந்து பூர்த்தி செய்து கொள்கிறார்களோ, அதே போல, தமிழகத்தில் உள்ள பஞ்சாபிகளும் இதே போல தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். பஞ்சாபியர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு பிரச்சினை என்றால், உடனடியாக தலையிட்டு அதை சரி செய்வார்கள். விக்ரம் அகர்வால் விவகாரத்திலும், சிபி.சிஐடியின் தலைவராக உள்ள மற்றொரு பஞ்சாபியரான நரேந்திரபால் சிங்கிடம் இந்த விவகாரம் எடுத்துச் சொல்லப்படுகிறது.
நரேந்திர பால் சிங்
மலை முழுங்கி மகாதேவன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் யாரென்றால், அது நரேந்திரபால் சிங் தான். காவல்துறையில், உள்ள பல அதிகாரிகளுக்கு, பண மோகத்தோடு சேர்ந்து விளம்பர மோகமும் உண்டு. தங்கள் பெயர்கள் நாளேடுகளில், வார இதழ்களில் வர வேண்டும் என பெரிய லாபி செய்வார்கள். ஆனால், நரேந்திரபால் சிங்குக்கு அது போன்ற விளம்பர மோகமெல்லாம் கிடையாது. அவருக்கு வாழ்வில் ஒரே லட்சியம், லஞ்சம் வாங்கியே எப்படி அம்பானி ஆவது என்பதுதான். நரேந்திர பால் சிங்கின் தந்தை, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர் என்பத குறிப்பிடத் தக்கது. காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா ? விக்ரம் அகர்வால் சிபி.சிஐடி வசம் சிக்கியதும், நரேந்திர பால் சிங் அறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரிடம் நேரடி பேரத்தில் இறங்குகிறார் சிங். எங்களுக்கு எல்லா விபரங்களும் தெரியும். ஒப்புக் கொண்டால், மரியாதையாக நடத்தப்படுவாய். ஒப்புக் கொள்ள மறுத்தால், எல்லா கைதிகளையும் போல நடத்தப்படுவாய் என்று கூறுகிறார். விக்ரம் அகர்வால், பெட்டிங் விவரங்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே, நடந்த போட்டி எப்படி தோனி, ரூபா மெய்யப்பன், குருநாத் மெய்யப்பன், விந்தூ தாராசிங், மற்றும் பலரது உதவியுடன் ஃபிக்சிங் செய்யப்பட்டது என்றும், அப்படி ஃபிக்சிங் செய்ததனால், எப்படி 200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது என்றும், ஸ்ரீசாந்த் கைதானதும் அந்தப் பணம் பரிமாற்றம் செய்ய முடியாமல் நிற்கிறது என்ற விபரத்தையும் கூறுகிறார். சிங், அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு கூறியதும், போலீஸ் ட்ரீட்மென்டிலிருந்து தப்பிக்க அப்படியே செய்கிறார் விக்ரம் அகர்வால். விக்ரம் அகர்வாலுக்கு மூன்று நாள் போலீஸ் கஸ்டடி கேட்கப்படுகிறது. அந்த மூன்று நாட்களும், விக்ரம் அகர்வால், புது மாப்பிள்ளையை, மாமியார் வீட்டில் கவனிப்பது போல கவனிக்கப்படுகிறார். மூன்று நாட்களும் வீட்டு சாப்பாடு மட்டுமல்லாமல், விசாரணை முடிந்ததும் இரவு வீட்டுக்கு சென்று, மனைவியோடு தங்கி விட்டு மறுநாள் காலையில் சிபி.சிஐடி அலுவலகம் வந்தால் போதும் என்ற அளவுக்கு சலுகைகள் காட்டப்பட்டன.
வழக்கமாக போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நபர்களை, ஜட்டியோடு படுக்க வைப்பார்கள். அது கைதிகளை சிறுமைப்படுத்தவது என்ற நோக்கம் மட்டுமல்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காகவும். ஆனால், விக்ரம் அகர்வால், புது மாப்பிள்ளை போல கவனிக்கப்பட்டார். 10 ஜுன் 2013 அன்று கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வால் 13.06.2013 அன்று விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இதே போல இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட புக்கிகள் அனைவரும் ஒரு சில நாட்களிலேயே சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களை விடுதலை செய்த நீதிபதி சரவணன், புக்கிகளை விடுதலை செய்ய தலா 20 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் அகர்வாலை கைது செய்து ரிமாண்ட் செய்ய சிபி.சிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடைப்பு அறிக்கையில், விக்ரம் அகர்வால் இந்த சூதாட்டத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார், இவரின் ரேடிஸ்ஸன் ப்ளு ஹோட்டலில் நடந்த விருந்துகளில்தான் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது, தோனி மற்றும் விந்தூ தாரா சிங் ஆகியோர் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர், அந்த சதித்திட்டத்தை வெளிக் கொண்டு வர, விக்ரம் அகர்வாலை மேலும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் சிபி.சிஐடி போலீசார் அடைப்பு அறிக்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா ? விக்ரம் அகர்வால் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அதனால் அவரை சிறையில் அடையுங்கள் என்று கூறியிருந்தார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு என்ன தண்டனை தெரியுமா ? 500 ரூபாய் அபராதம். இப்படி ஒரு அடைப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் சிபி.சிஐடி போலீசார். கிட்டி என்ற உத்தம்சந்த் ஜெயின் க்யூ பிரிவு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சொல்லியிருந்த அத்தனை விஷயங்களும், மறைக்கப்பட்டன.
விக்ரம் அகர்வால் விடுதலை செய்யப்பட்ட அன்று, இரவு, நரேந்திர பால் சிங், ஒரு தனியார் காரில், விக்ரம் அகர்வால் வீட்டுக்கு சென்று, அவரை தனிமையில் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார். இப்படி நரேந்திர பால் சிங், விக்ரம் அகர்வாலை சந்தித்த விபரம், விக்ரம் வீட்டை கண்காணிப்பில் வைத்திருந்த க்யூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய உளவுப் பிரிவுக்கு தெரிகிறது. க்யூ பிரிவு போலீசார், இந்த விசாரணையை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள் என்ற விபரம் நரேந்திர பால் சிங்குக்குத் தெரிந்ததும், க்யூ பிரிவு போலீசாரை சிக்கலில் இழுத்து விட்டால்தான், தான் அபகரித்த 200 கோடியைக் காப்பாற்ற முடியும் என்று முடிவெடுக்கிறார்.
சிபி.சிஐடி போலீசார் ஐபிஎல் விசாரணையை நடத்தி வருகையில், விசாரணையை மேற்பார்வை செய்து நடத்திய இரண்டு அதிகாரிகள், தனக்கு தொல்லையாக இருப்பார்கள் என்று கருதுகிறார் நரேந்திரபால் சிங். அந்த இரண்டு அதிகாரிகள் ஐஜியாக இருந்த மஞ்சுநாதா மற்றும், எ.ஸ். பியாக இருந்த ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி தலைமையில்தான், இந்த விசாரணையே நடைபெற்றது.
ஐபிஎல் விவகாரத்தில், தொடக்கம் முதலே மூக்கை நுழைத்து, பணத்தை பங்கு போட காத்திருந்த அம்ரேஷ் பூஜாரி, உளவுத்துறை ஐஜியாக இருந்து, இந்த இரண்டு அதிகாரிகளையும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறார். அடுத்தடுத்து மஞ்சுநாதாவும், ராஜேஸ்வரியும், சிபி.சிஐடியை விட்டு வெளியே அனுப்பப் படுகிறார்கள். ராஜேஸ்வரி இடத்துக்கு யார் வருகிறார்கள் என்பதை அறிந்தால் வியப்படைவீர்கள். அது வேறு யாரும் அல்ல. முதன் முதலாக ஹரீஷ் பஜாஜை காப்பாற்றுவதற்காக தலையிட்டார் அல்லவா ? தஞ்சாவூர் எஸ்.பி அன்பு. அவர்தான். அவர் சிபி.சிஐடிக்கு நியமிக்கப்படுகிறார். மஞ்சுநாதா இடத்துக்கு ஆபாஷ் குமார் நியமிக்கப்படுகிறார். ஆபாஷ் குமார், அன்பு ஆகிய இருவரும், கூட்டுக் கொள்ளைக்கு ஏதுவானவர்கள் என்ற அடிப்படையிலேயே, இவர்கள் இருவரும், நரேந்திர பால் சிங் மற்றும் உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி ஆகிய இருவரின் பரிந்துரையிலேயே அன்பு மற்றும் ஆபாஷ் குமார் நியமிக்கப்படுகிறார்கள். மஞ்சுநாதா மற்றும் ராஜேஸ்வரியை, சிபி.சிஐடியிலிருந்து மாற்றுவதற்கான அவசியமே இல்லை.
அன்பு ஐபிஎஸ்
சிபி.சிஐடிக்கு நியமிக்கப்பட்டதுமே, அன்பு தன் வேலையைத் தொடங்குகிறார். அன்புக்கு, நரேந்திர பால் சிங் அளித்த கட்டளை, சம்பத் குமார் வாயைத் திறக்கக் கூடாது. என்ன செய்ய முடியுமோ… செய்யுங்கள் என்பதுதான். 25.06.2013 அன்று மகேந்திர சிங் ராங்கா என்ற நபரை, அன்பு மதிய உணவு அருந்தலாம் என்று அழைக்கிறார். இந்த மகேந்திர சிங் ராங்கா யார் என்றால், இவர் மார்வாடிகளுக்கான மற்றொரு ப்ரோக்கர். வட இந்தியாவைச் சேர்ந்த உயர் உயர் அதிகாரிகளோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வார். மார்வாடிகளுக்கு பிரச்சினைகள் ஏதாவது வந்தால் உயர் அதிகாரிகளை சந்தித்து அந்த வேலைகளை முடித்துத் தருவார். முடித்துத் தருவதற்கு, கணிசமான தொகையை அந்த மார்வாடிகளிடம் கமிஷனாக பெற்றுக் கொள்வார். இதுதான் மகேந்திர சிங் ராங்க்கா. இவருக்கு வட இந்திய அதிகாரிகளோடு, தமிழ் அதிகாரிகள் பலரும் நெருக்கம். உயர் உயர் அதிகாரிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், வட்டியில்லாமல் பண உதவி செய்வார். இதன் மூலம் பல அதிகாரிகளோடு நெருக்கமானார் ராங்க்கா.
இந்த ராங்க்காவைத்தான் மதிய உணவு சாப்பிடலாம் என்று அழைக்கிறார் அன்பு. ராங்க்கா சென்றதும், அன்பு, கிட்டி ராங்க்காவிடம் என்ன கூறினார், பெட்டிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் பற்றி என்ன கூறினார், விக்ரம் அகர்வாலைப் பற்றி என்ன கூறினார் என்று விசாரிக்கிறார். பின்னர், ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட புக்கி ஒருவரிடம் ஒரு புகார் வாங்கப்படுகிறது. அந்தப் புகாரில் மகேந்திர சிங் ராங்க்கா, காவல்துறையிலிருந்து தன்னை காப்பாற்றுவதாக கூறி, ராங்க்கா பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக சிபி.சிஐடியில் எப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். சிபி.சிஐடி என்பது ஒரு சிறப்பு வாய்ந்த புலனாய்வு ஏஜென்சி. இந்த ஏஜென்சி எடுத்த எடுப்பில் யார் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. இந்த ஏஜென்சி, விசாரணையை தொடங்குவதற்கென்று டிஜிபி அல்லது உள்துறை செயலாளர் உத்தரவிட்டால் மட்டுமே முடியும். தன்னிச்சையாக சிபி.சிஐடி வழக்கு பதிவு செய்யவே இயலாது. அப்படிப்பட்ட சூழலில், மகேந்திர சிங் ராங்க்கா மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ராங்க்காவை, சிபி.சிஐடி போலீசார், நரேந்திர பால் சிங் உத்தரவின் பேரில் அடி வெளுக்கிறார்கள். ராங்க்காவின் சித்திரவதையை, எஸ்.பி அன்பு மற்றும் நரேந்திர பால் சிங் நேரடியாக மேற்பார்வை செய்கிறார்கள். ராங்க்காவிடமிருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில், க்யு பிரிவு எஸ்.பி சம்பத் குமாருக்கு, ராங்க்கா 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை லஞ்சமாக கொடுத்ததாகவும், அது, ஐபிஎல் பெட்டிங்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் காப்பாற்றுவதற்காக கொடுக்கப்பட்ட தொகை என்றும் கூறப்படுகிறது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அறுபது லட்ச ரூபாய் பணம், மூன்று நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த விபரங்கள் அத்தனையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தத் தகவல் ரகசியமாக வைக்கப் பட்டிருக்க இயலும். ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில், இந்தத் தகவல் வேண்டுமென்றே வெளியிடப்படுகிறது. அந்தத் தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியிட்ட பத்திரிக்கையாளர் பெயர் ஜெயராஜ் சிவன். இணைப்பு இந்த ஜெயராஜ் சிவனைப் பற்றி ஏற்கனவே சவுக்கு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இணைப்பு. ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஜாங்கிட் இது வரை போட்ட லே அவுட்களிலேயே மிக மிக வெற்றிகரமான லே அவுட், சென்னை போரூர் அருகிலுள்ள மணப்பாக்கத்தில் போடப்பட்ட லே அவுட்தான். அந்த லே அவுட், உயர் உயர் அதிகாரிகளுக்காகவே போடப்பட்டது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுக்காகவே போடப்பட்ட லே அவுட் அந்த லே அவுட். அந்த லே அவுட்டில் வீட்டு மனை ஒதுக்கப்பட்ட ஒரே பத்திரிக்கையாளர் ஜெயராஜ் சிவன் மட்டுமே. இந்த ஜெயராஜ் சிவன், தனக்கு ஒதுக்கப்பட்ட இந்த வீட்டு மனையை சமீபத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, டேஸ்ட் ஆப் கேரளா என்ற பணக்கார உணவு விடுதியையும் நடத்தி வருகிறார் இந்த ஜெயராஜ் சிவன் என்பது கூடுதல் செய்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் ஜெயராஜ் சிவன்
இப்படிப்பட்ட ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக ஜெயராஜ் சிவன் இருப்பதால், இந்த செய்தி அவரை வைத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வெளியிடப்பட்டது. அந்த செய்தி வெளியானதற்குப் பிறகு, சம்பத் குமார் க்யூ பிரிவை விற்று மாற்றப்படுகிறார். சம்பத் குமார் இடத்துக்கு பவனீஸ்வரி நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு, ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி முத்கல் தலைமையிலான குழு முன்பாக சம்பத் குமார் சாட்சியம் அளிக்கிறார். அப்போது கிட்டி என்கிற உத்தம் சந்தின் வாக்குமூலம் கடைசி வரை அளிக்கப்படவேயில்லை. ஒரு கட்டத்தில், நாளை மாலை 4 மணிக்கு வாக்குமூலம் வழங்கப்படும் என்று நீதிபதி முன்பு தெரிவித்த பவனீஸ்வரி, அதை வழங்கவேயில்லை. கிட்டியின் வாக்குமூலம், நீதிபதி ஆணையம் முன்பு வழங்கப்படாமல் தடுத்ததும், நரேந்திர பால் சிங் என்ற மலைக்கள்ளன்தான்.
இந்த சூதாட்ட விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, குருநாத் மெய்யப்பன், ரூபா மெய்யப்பன், என்.சீனிவாசன், விக்ரம் அகர்வால், வந்தனா விக்ரம், விந்தூ தாராசிங் ஆகியோர் அனைவரையும் காப்பாற்ற, சிபி.சிஐடியின் ஒட்டு மொத்த அலுவலகமும் விழுந்து விழுந்து வேலை செய்கிறது. இந்த விவகாரம் முடிந்து விட்டது என்று இவர்கள் நினைத்திருந்த வேளையில், நீதிபதி முத்கல் கமிட்டியின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மலைக்கள்ளனுக்கும், இதர பெருச்சாளிகளுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த பஞ்சாப் திருடன் குழுவினர், எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதற்காக இவர்கள் செய்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்வேறு ஊடகங்களில் ஐபிஎல் ஊழலில் எவ்வித ஆதாரமும் சிக்கவில்லை என்று தகவலை கசிய விட்டுக் கொண்டிருக்கின்றனர். நரேந்திர பால் சிங் தரப்பில் சொல்லப்படும் தகவல், சம்பத் குமார் கேட்டதாக சொல்லி, மகேந்திர சிங் ராங்க்கா பணம் கொடுத்தது உண்மை, அந்தப் பணம் கைப்பற்றப்பட்டும் இருக்கிறது என்பதே. சம்பத் குமாருக்கும், மகேந்திர சிங் ராங்க்காவுக்கும், பல ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. சம்பத் குமாருக்கு தேவைப்படும் சமயங்களில் பண உதவி செய்து வந்துள்ளார். அந்தப் பணப்பரிவர்த்தனையை, ஐபிஎல் விசாரணையோடு சேர்த்து இணைத்துள்ளார்கள் என்கிறது சம்பத் குமார் தரப்பு. க்யூ பிரிவு போலீசாருக்கு ஐபிஎல் விசாரணை தொடர்பாக எந்த சம்பந்தமும் இல்லாதபோது, எதற்காக, அவர் இதில் தலையிட வேண்டும் என்றும், எதற்காக இந்த விசாரணையை கவனித்து வர வேண்டும் என்றும் சிபி.சிஐடி தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
சம்பத் குமார் ஐபிஎஸ்
சம்பத் குமாரை, இந்த விசாரணையை கவனிக்க உத்தரவிட்டது, தமிழக டிஜிபி ராமானுஜம். உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக எப்போதுமே அதீத கவனத்தோடு இருக்கும் ராமானுஜமே, இந்த விசாரணையை கவனிக்கச் சொல்லி சம்பத் குமாரை பணித்துள்ளார். ஐபிஎல் தொடர்பான விசாரணை சிபி.சிஐடி வசம் மாற்றப்பட்டாலும், தாவூத் இப்ராஹிம் தொடர்பு தொடர்பான விசாரணையை க்யூ பிரிவே தொடர்ந்து கவனிக்கட்டும் என்று உத்தரவிட்டதும் ராமானுஜமே. க்யூ பிரிவு சேகரித்த அத்தனை தகவல்களும், மத்திய உள்துறையோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதும் உண்மை.
ஆனால், ஐபிஎல் தொடர்பாக, டெல்லியில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று வழக்குகளிலும் தொடர்புள்ள முக்கிய நபர்கள், குருநாத் மெய்யப்பன் மற்றும், விக்ரம் அகர்வால். ஆனால், சிபி.சிஐடி போலீசார், இது தொடர்பாக எந்தத் தகவலையும், டெல்லி மற்றும் மும்பை போலீசாரோடு பகிர்ந்து கொள்ளவேயில்லை. அவர்கள் விசாரணை தீவிரமா நடந்தபோதும், தமிழக சிபி.சிஐடி, இந்த விசாரணையை எப்படி இழுத்து மூடுவது என்பதிலேயே தீவிரமாக இருந்தது. செப்டம்பர் 10 அன்று இந்து பத்திரிக்கையாளரை அழைத்துப் பேசிய பஞ்சாப் திருடன் நரேந்திர பால் சிங் என்ன சொன்னார் தெரியுமா ?
“Meiyappan was interrogated for a couple of days in connection with the betting scandal. As of now, nothing concrete has come out to prove his involvement with the bookies. Since there were frequent telephonic conversations between him and the hotelier, we issued summons to examine him,” a CBCID official told The Hindu.”
அதாவது, மெய்யப்பனுக்கும், சூதாட்ட புக்கிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அடிக்கடி மெய்யப்பனும், விக்ரம் அகர்வாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதால் அவரை அழைத்து விசாரித்தோம். இந்த செய்தி இந்து நாளேட்டில் வெளியான நாள் 10 செப்டம்பர் 2013 இணைப்பு. ஆனால், இதே ஐபிஎல் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மும்கை காவல்துறை, குருநாத் மெய்யப்பன், பாகிஸ்தான் அம்பையர் அப்துல் ரவூஃப் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இணைப்பு.
எப்படி இருக்கிறது சிபி.சிஐடியின் யோக்கியதை பார்த்தீர்களா ? இது அத்தனையும் பஞ்சாப் திருடன்வேலை. விக்ரம் அகர்வால் மூன்றே நாட்களில் ஜாமீனில் வந்தது, புக்கிகள் அத்தனை பேரும், ஒரு சில நாட்களில் ஜாமீனில் வந்தது எப்படி புரியாத புதிரோ… அதே போல புரியாத மற்றொரு புதிர், சிபி.சிஐடி தானாகவே பதிவு செய்த எப்ஐஆரில் கைது செய்யப்பட்ட மகேந்திர சிங் ராங்க்கா ஜாமீனில் வர 45 நாட்கள் ஆனதும். சூதாட்டத்தின் மூளையான விக்ரம் அகர்வால் மூன்று நாட்களில் ஜாமீனில் வருகிறார். ஆனால் ராங்க்காவின் ஜாமீன் மனுவை, சிபி.சிஐடி கடுமையாக ஆட்சேபித்து, மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்படுகிறது. அமர்வு நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்படுகறிது. 45 நாட்கள் கழித்து, உயர்நீதிமன்ற ஜாமீனில்தான், ராங்க்கா வெளியே வருகிறார்.
சிபி.சிஐடி விசாரணைகளை பொறுத்தவரை, வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வெளியே சொல்லப்படாது. ஆனால்,
இந்த விவகாரத்தில் மட்டும், பத்திரிக்கையாளர்களை அழைத்து, குருநாத் மெய்யப்பனுக்கு உத்தமர் பட்டம் சூட்ட வேண்டிய அவசியம், பஞ்சாப் திருடன் நரேந்திர பால் சிங்குக்கு ஏன் வந்தது ?
அகர்வால் கணக்கு வைத்திருக்கும் www.betfair.com என்ற இணையதளத்தை விசாரிக்க பஞ்சாப் திருடன் ஏன் முயலவில்லை ?
சிபி.சிஐடி கஸ்டடியில் இருந்த விக்ரம் அகர்வால் வீட்டுக்கு செல்ல யார் அனுமதியில் அனுப்பப்பட்டார் ?
விசாரணையை முடித்த மும்பை போலீசார் மற்றும் டெல்லி போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், தமிழக சிபி.சிஐடி இன்னும் மாவரைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன ?
தற்போது பத்திரிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து, சம்பத் குமார் கைது செய்யப்பட உள்ளார் என்று சொல்ல வேண்டிய அவசியம் பஞ்சாப் திருடன் நரேந்திர பால் சிங்குக்கு ஏன் வந்தது ?
இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. இந்த வழக்கை மாநிலத்தில் எந்த பிரிவு காவல்துறை விசாரித்தாலும் நியாயம் கிடைக்காது. நியாயமான விசாரணை நடைபெறாது. ஆகையால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவது ஒன்றே, சரியான நடவடிக்கையாக அமைய முடியும். சிபிஐ விசாரணையில், விக்ரம் அகர்வாலுக்கும், புக்கிகளுக்கும் மூன்றே நாளில் ஜாமீன் கொடுத்த மேஜிஸ்ட்ரேட் சரவணனும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால், கருணாநிதிக்கு சற்றும் வேறுபாடு இல்லாத ஜெயலலிதாவிடம் இதை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?