சவுக்கு என்ற தளம் ஊர் கூடி இழுக்கும் தேர் என்பது பல முறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனி நபரோ, ஒரு சிலரோ நடத்தும் தளம் அல்ல.
மனித சமுதாயம் தோன்றி, குடும்பம், தனிச்சொத்து, அரசுரிமை என்று சமுதாயம் மாறிய பிறகு, சமுதாயத்தில் கபடு, சூது, வஞ்சகம், பேராசை என்று அத்தனை தீய குணங்களும் குடியேறின. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று நிரந்தரமாக இந்த பூமியில் வாழத்தான் போகிறோம் என்று மனித இனம், அலையத் தொடங்கியது.
அன்று தொடங்கி இன்று வரை, வரலாறு நெடுக, பேராசையும், வஞ்சகமும், அது தொடர்பான கொடுங்குற்றங்களும் நிறைந்து கிடக்கின்றன. இந்த தீயகுணங்கள் இல்லாத நல்லவர்களும் வரலாறு நெடுக நிறைந்தே இருக்கின்றனர். இந்த தீய குணங்களையும், தீய மனிதர்களையும் எதிர்த்து குரல் கொடுத்த, போராட்டங்களை நடத்திய மனிதர்களை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்திருக்கிறது.
நாகரீகம் வளர்ந்து, வித விதமான நுகர்வுப் பொருட்கள் ஏராளமாக கிடைக்கப்பெற்றதும், இந்த பேராசையும், நுகர்வுக் கலாச்சாரமும், மனித சமுதாயத்தை ஆக்ரமித்தன. மிக மிக மோசமான நுகர்வுக் கலாச்சாரம் வளரத் தொடங்கியதையொட்டி நல்லவர்களின் சதவிகிதம் குறைந்து, நல்லவர்கள் அரிதாகி விட்டது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.
சமகால சமூகத்தை எடுத்துக் கொண்டால், நல்ல மனிதர்கள் அருகிப் போய் விட்டார்கள் என்ற ஒரு சூழல் உருவாகியது. ஒரு ஜனநாயக சமுதாயத்தில் முக்கிய அங்கமாக இருக்க வேண்டிய, நீதித்துறை, ஊடகம், அரசியல் என அனைத்தும், சீரழிந்து போய் விட்டதே என்று வேதனைப்படும் சூழலில், பொதுமக்களும், இந்த புரையோடிய ஊழலின் அங்கமாக மாறி விட்டார்கள் என்ற தகவல்தான், நல்லுள்ளம் படைத்தோர் அனைவரையும் வேதனையடையச் செய்தது.
குறிப்பாக தமிழக சூழலில் 2001ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நிலைமை மோசமடைந்தது. அப்போது அதிகாரிகள் தங்கள் கடமைகளை மறந்து, ஜெயலலிதாவுக்கு துதி பாடினாலும், ஊடகங்கள், தங்கள் கடமைகளை வலுவாகவே செய்தன. 2006ல், கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், நிலைமை மிக மிக மோசமடைந்தது. ஜனநாயகத்தை கட்டிக் காக்க வேண்டிய ஊடகங்கள், தங்கள் விழுமியங்களை இழந்து, ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிப் போனதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.
அரசுக்கு எதிராக ஒரு வரிச் செய்தியைக் கூட வெளிக் கொணர முடியாத ஒரு அவலச் சூழலில்தான் சவுக்கு தளம் தொடங்கப்பட்டது. வெகுஜன ஊடகங்கள், தங்கள் பணியைச் செவ்வனே செய்திருந்தால், சவுக்கு போன்ற தளங்கள் உருவாகுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.
அப்படிப்பட்ட சூழலில் தொடங்கப்பட்ட சவுக்கு தளம், தொடங்கிய காலத்தில் பெரிய அளவில் ஆதரவைப் பெறவில்லை. ஆனால், உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் மீதான வீட்டு வசதித் துறை ஆதாரங்களை பதிப்பித்த மறுநாள், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகுதான், சவுக்கு தளம் விறுவிறுப்படைந்தது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதும், சவுக்கு தளம் முடங்கி விடும் என்று மனக்கணக்கு போட்ட ஜாபர் சேட்டின் கணக்கு தவறானது. சவுக்கு தளம், அந்த பொய் வழக்கை அடித்தளமாக வைத்து வீறுகொண்டெழுந்தது. அன்று முதல், சவுக்கு தளத்துக்கு தயக்கமோ தொய்வோ கிடையாது. அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவதில் முன்னிலை வகித்தது சவுக்கு. தொடர்ந்து இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுத எழுத சவுக்கு தளத்தின் ஆதரவு பெருகிக் கொண்டே சென்றது.
ஒரு கட்டத்தில், இந்தத் தளத்தை நடத்துபவர்கள், பொய்யுரைக்க மாட்டார்கள், நேர்மையாக உண்மையை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையை பெற்றது. அதை விட மிக மிக முக்கியமாக, இந்தத் தளமும், இதை நடத்துபவர்களும், ஒரு காலத்திலும் விலை போக மாட்டார்கள் என்பதே இந்தத் தளத்தை நடத்தியதில் பெற்ற நம்பிக்கை. இப்படி ஒரு நம்பிக்கையை பெற்ற பிறகு, இத்தளம் பெற்ற ஆதரவினை, வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. உலகெங்கிலும் உள்ள நல்லுள்ளம் படைத்தோர் நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அளித்த ஆதரவை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
சமூகத்தில் அத்தனை விழுமியங்களும் பட்டுப் போய் விட்டன என்று பெரும்பாலானோர் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரத்தில், சவுக்கு தளம், மனித குலத்தின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தது. மிக மிக மோசமான அழிவு காலத்திலும் கூட, நல்லுள்ளங்கள் இருந்தே தீரும், அந்த நல்லுள்ளங்களை, ஆயிரம் கருணாநிதிகள், பத்தாயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் கறைப்படுத்த முடியாது என்பதில் சவுக்கு தளம், தீவிர நம்பிக்கை கொண்டிருந்தது. அந்த நம்பிக்கைக்கு சரியான உதாரணம், சமீபத்தில், சவுக்கு தளத்தை முடக்க, நீதிபதி சி.டி.செல்வம், வழக்கறிஞர் சங்கரசுப்பு, சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் தீட்டிய சதித்திட்டம்.
எப்படியாவது விவாகரத்து கிடைக்க இரண்டு வருடம் ஆகும் என்பதற்காக, தன் கணவனின் கையெழுத்தை போலியாக போட்டு, ஆறே மாதங்களில் முடித்து, விவாகரத்து பெற்ற மகாலட்சுமி, நீதிபதிகளுக்கு ப்ரோக்கராக செயல்பட்டுக் கொண்டு மனித உரிமைப் போராளி என்று வேடமிடும் சங்கரசுப்பு, கயமையின் உருவான கருணாநிதியின் கைத்தடியாக செயல்படும் நீதிபதி சி.டி.செல்வம் ஆகியோர் தீட்டிய சதித்திட்டத்தின் விளைவே, சவுக்கு தள வடிவமைப்பாளர் என்று குற்றம் சாட்டப்பட்ட முருகைய்யனின் கைது மற்றும், ஆச்சிமுத்து சங்கரின் மீது காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டை.
இந்தியாவின் எந்த நீதிமன்றத்துக்கும், எந்த ஒரு நபரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட அதிகாரமேயில்லாத போது, சி.டி.செல்வம், முருகைய்யனையும், சங்கரையும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வாய்மொழி உத்தரவை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று சட்டம் சொன்னாலும், சவுக்கு தளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜு மற்றும், சவுக்கு தளத்தால் பல முறை அம்பலப்படுத்தப்பட்ட ஊழலின் உறைவிடமான ஜார்ஜ் ஐபிஎஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், முருகைய்யனை பாண்டிச்சேரியில் கைது செய்தனர் காவல்துறையினர். ஏற்கனவே முருகைய்யனை விசாரித்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தமே இல்லை என்று தெரிந்தும், வேண்டுமென்றே அவரை கைது செய்தனர். ஒரு இணைய தளத்தில் வரும் கட்டுரைக்கு, முருகைய்யன் அத்தளத்தின் வடிவமைப்பாளராக இருந்தாலும் கூட, எப்படி பொறுப்பாக முடியும்? இதையெல்லாம் நன்றாகத் தெரிந்தே, சி.டி.செல்வம் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை, வரதராஜுவும், ஜார்ஜும், சவுக்கு தளத்தை முடக்க பயன்படுத்திக் கொண்டனர்.
ஜாபர் சேட்டின் உரையாடல்கள் சவுக்கு தளத்தில் வெளியாக உள்ளது என்ற செய்தி, கருணாநிதி மற்றும் சிஐடி காலனியை ஆடிப்போக வைத்தது. அதிரச் செய்தது. அவர்களின் உத்தரவையே சி.டி.செல்வம் சிரமேற்கொண்டு நிறைவேற்றினார்.
நுகர்வுக் கலாச்சாரத்தின் காரணமாக, நல்லவர்களே அருகிப் போய் விட்ட ஒரு சூழலில், எதற்காக சவுக்கு நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான விடை, சமீபத்தில் கிடைத்தது. கைது செய் என்று ஆணவத்தோடு சி.டி.செல்வம் உத்தரவு பிறப்பித்ததும், காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியது. கையில் டேப்பை வைத்துக் கொண்டு, காவல்துறையிடம் சிக்கினால், டேப்பை வெளியிட முடியாதே என்ற ஆதங்கம். எப்படியாவது இதை ஊடகங்களில் வெளியிட்டு விட வேண்டுமே என்ற வெறி. இந்த நேரத்தில் காவல்துறையின் தேடுதல் வேட்டை. சம்பந்தமே இல்லாமல் நண்பர் முருகைய்யன் சிறையில் உள்ளாரே என்ற வேதனை.
இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழலில், உலகெங்கும் இருந்து குவிந்த ஆதரவு இருக்கிறதே…. அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அதை அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். அன்பு உள்ளங்களின் அன்பும் ஆதரவும் நெகிழச் செய்தது. ஒரு நண்பர், செலவுக்கு பணம் வைத்துக் கொள் என்று அவசர அவசரமாக ஓடி வந்து கொடுத்தார். இன்னொரு நண்பர், எங்கேயும் போகாதே, இங்கே வா என்று வீட்டுக்கு அழைத்து தங்க வைத்தார். பத்திரிக்கை உலக தோழர்கள், பதறிப் போய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்டனர். தங்கள் பத்திரிக்கைகளில், கைது குறித்து செய்தி வெளியிட முடியாத வேதனையை பகிர்ந்து கொண்டனர். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவி வந்து குவிந்தது. சுருக்கமாக சொன்னால், காவல்துறை நினைத்தே பார்த்திராத இடங்களில் இன்னும் குறைந்தது 20 வருடங்களுக்கு தங்கியிருக்க முடியும். அத்தனை உதவிகள்.
இது ஒரு புறமிருக்க, வழக்கறிஞர்கள் செய்த உதவி இருக்கிறதே…. அதை அளவிடவே முடியாது. விவரிக்கவும் முடியாது. செல்வம் போன்ற நீதிபதிகளை பகைத்துக் கொண்டால், தங்கள் தொழிலுக்கே ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தும், வழக்கறிஞர்கள், முருகைய்யனை வெளியே எடுக்க வேண்டும், சவுக்கு தளத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதில், கடும் முனைப்போடு பணியாற்றினார்கள்.
குறிப்பாக, வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், விஜயலட்சுமி, ராஜ்குமார், லோகநாயகி, போன்றவர்கள் ஒரு சிறு உதாரணமே. இவர்களைப் போல இன்னும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், முருகைய்யனை காப்பாற்றுவதில், பெரும் முயற்சி எடுத்தார்கள். மேலும் சிலர், திரை மறைவில் இருக்க விரும்புவதால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு, அன்பழகன் அவர்கள் செய்த உதவிகளை என்றென்றும் மறக்க இயலாது. அவரின் மக்கள் செய்தி மையம் இணைய தளத்தில், சவுக்கு தளத்தை முடக்க எடுக்கப்படும் முயற்சிகளை அவ்வப்போது வெளியிட்டதோடு, அநியாயமாக நடந்து கொண்ட நீதிபதி சி.டி.செல்வம் மீது, குடியரசுத் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகாரும் அனுப்பினார்.
சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை, வெறுமனே கமென்டுகளை போட்டு விட்டு, விலகிச் செல்வதே வழக்கம் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட சம்பிரதாயமான நட்பைத் தாண்டி, நடைமுறையான பல்வேறு உதவிகளைச் செய்த நட்புகளை மறக்கவே முடியாது. குறிப்பாக அருமை நண்பர்கள், அன்பழகன் வீரப்பன், கிஷோர் கேசாமி,
சாத்தப்பன் போன்றோர் வழக்கறிஞர்களோடு தொடர்பில் இருந்ததோடு, சமூக வலைத்தளங்களில், சவுக்கு தளத்தை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக அம்பலப்படுத்தினர். அத்தோடு நில்லாமல், குடியரசுத் தலைவர், மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு, நீதிபதி சி.டி.செல்வம் மீது புகார்களை, உலகெங்கும் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப உதவி செய்தனர்.
இந்த பட்டியல் முழுமையான பட்டியல் அல்ல. சவுக்கை எப்போதும் ஆதரித்து, ஆசி வழங்கி, அன்போடு உச்சி முகர்ந்து வாழ்த்தும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பெயர்களை குறிப்பிடுவதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் இல்லாவிட்டால் சவுக்கு உருவாகியிருக்காது. செயல்பட்டுக் கொண்டும் இருக்காது.
ஒரு தறுதலைப்பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது…. எப்போது பார்த்தாலும், போலீஸ் தேடுவது போலவே இருக்கிறானே…. என்று அங்கலாய்க்காமல், உண்மையைப் புரிந்து கொண்டு, நெருக்கடியான நேரத்தில் ஒத்துழைப்பு அளித்த, குடும்பத்தினருக்கு நன்றி கூறாமல் இருக்க இயலாது..
இப்போது சொல்லுங்கள்…. சவுக்கு தளத்தை முடக்க நினைக்கும் சக்திகள் வெற்றி பெற்று விடுமா என்ன ? இத்தனை அன்பு உறவுகளின் ஆதரவு தொடர்ந்து இருக்கையில், சவுக்கு தளத்தை யார் முடக்கி விட முடியும் ?
என் அன்பார்ந்த உறவுகளே…. சவுக்கு தளத்தை தொடர்ந்து நடத்துவோம்…. இணைந்து பயணிப்போம்… ஜனநாயகத்தையும், இந்த சமூகத்தையும் காப்போம். நாம் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது.
பாரதியாரின் இந்தப் பாடலை, சவுக்கு சி.டி.செல்வத்துக்கு காணிக்கையாக்குகிறது.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே