தலைப்பைப் பார்த்ததும், தமிழ் இந்து மற்றும் உயிர்மை இதழ்களில் வருவது போல, பிரக்ஞை பூர்வமான கட்டுரை என்று நினைத்து பயந்து விடாதீர்கள். எளிமையாகவே விஷயத்தை அணுகலாம்.
முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தத் தீர்ப்பின் இறுதியில், “ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் வரைதான். ஆனாலும், அது, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432ன் கீழ் வழங்கப்படும் தண்டனைக் குறைப்புக்கு உட்பட்டது. மேலும், பிரிவு 433 Aன் கீழ் உள்ள கட்டுப்பாட்டுக்கு மீறாமல் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 19.02.2014 அன்று சட்டப்பேரவையில், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை அறிவித்து, பின்வருமாறு அறிக்கை படித்தார். “இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதுதான் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே நாடு முழுக்க சட்ட விவாதங்களும் அறம் சார்ந்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 என்ன கூறுகிறது
432. Power to suspend or remit sentences.
When any person has been sentenced to punishment for an offence, the appropriate Government may, at any time, without Conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced.
ஒரு குற்றத்திற்காக எவரேனும் தண்டிக்கப்பட்டிருக்கும்போது, தண்டிக்கப்பட்டவர் ஒத்துக்கொள்கிற எவற்றின் நிபந்தனைகளின் பேரிலோ, அல்லது நிபந்தனைகள் இல்லாமலோ, உரிய அரசு, எந்த சமயத்திலும் அவருடைய தண்டனை நிறைவேற்றப்படுதலை நிறுத்தி வைக்கலாம். அல்லது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை முழுவதையும் அல்லது, அதன் பகுதி எதையுமோ தள்ளுபடி செய்யலாம்.
433 A என்ன சொல்கிறது ?
Section 433A in The Code Of Criminal Procedure, 1973
433A. 1 Restriction on powers of remission or Commutation in certain cases. Notwithstanding anything contained in section 432, where a sentence of imprisonment for life is imposed on conviction of a person for an offence for which death is one of the punishments provided by law, or where a sentence of death imposed on a person has been commuted under section 433 into one of imprisonment for life, such person shall not be released from prison unless he had served at least fourteen years of imprisonment.
இந்தப் பிரிவு சுருக்கமாக என்ன கூறுகிறதென்றால், ஆயுள் கைதி ஒருவரின் தண்டனை குறைக்கப்படும் நேரத்தில், அவர் குறைந்தது 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
குற்றவியல் சட்டம் 435ன்படி மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற பிரிவுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பிஜேபி, காங்கிரஸ் மற்றும் வட இந்திய சட்டப்புலிகள் அனைவரும் ஒரே குரலில் சொல்வது, மாநில அரசுக்கு இந்தப் பிரிவில் விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. ஜெயலலிதா தவறிழைத்து விட்டார் என்பதே.
பிரிவு 435 என்ன சொல்கிறது என்பதை பார்க்கும் முன்பாக, இந்த பிரிவின் வரலாறை பார்ப்போம்.
41வது சட்டக் கமிஷனின் பரிந்துரையின் படி, இந்த பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
அந்த அறிக்கையின் பத்தி 29.13ல், தற்போதை சட்டப்பிரிவு 435 சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளது.
It has been suggested that there are a few types of cases in which the central government is vitally concerned though the offence is against a law relating to a matter to which the executive power of the State Government extends and as such the authority to suspend, remit or commute the sentence is the State Government. Important instances are offences investigated by the Delhi Special Police Establishment, offences involving misappropriation or destruction of, or damage to, Central Government property and offences committed by Central Government servants in the discharge of their official duties. If a State Government chooses t take a lax view of these offences and to exercise its powers of remission and commutation unduly liberally, it is bound to create difficulties of administration for the Central Government. We feel it desirable that in such cases where the Central Government is obviously concerned in the proper enforcement of the penal provisions, including the execution of sentences awarded by the Court, the State Government should be required to exercise its powers of remission and commutation only in consultation with the Central Government.
சில வழக்குகளில் தண்டனைக் குறைப்புக்கு மாநில அரசிடம் அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசு முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள் உண்டு என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரிக்கும் வழக்குகள், மத்திய அரசில் நிதி மோசடி செய்த வழக்குகள், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்குகள், மத்திய அரசுப் பணி தொடர்பான குற்றங்கள் குறித்த வழக்குகள் போன்றவை முக்கிய வழக்குகள். ஒரு மாநில அரசு, இது போன்ற முக்கிய வழக்குகளின் முக்கியத்துவத்தை கருதாமல், அவ்வழக்கை எளிதாகக் கருதி, தண்டனைக் குறைப்பு செய்யுமேயானால், மத்திய அரசு சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலாது. அதனால், மத்திய அரசு சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் சரி வர நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு தண்டனை குறைப்பு செய்தால், அது மத்திய அரசின் கலந்தாலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும் என்று கருதுகிறோம்.
இது சட்டக் கமிஷனின் 41வது அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரை. இந்த பரிந்துரையை ஏற்று, கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம்தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435.
அந்த பரிந்துரையின் படி ஏற்படுத்தப்பட்ட பிரிவு 435 இதுதான்.
435. State Government to act after consultation with Central Government in certain cases.
(1) The powers conferred by sections 432 and 433 upon the State Government to remit or commute a sentence, in any case where the sentence is for an offence-
(a) which was investigated by the Delhi Special Police Establishment constituted under the Delhi Special Police Establishment Act, 1946 (25 of 1946 ), or by any other agency empowered to make investigation into an offence under any Central Act other than this Code, or
(b) which involved the misappropriation or destruction of, or damage to, any property belonging to the Central Government, or
(c) which was committed by a person in the service of the Central Government while acting or purporting to act in the discharge of his official duty, shall not be exercised by the State Government except after consultation with the Central Government.
(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.
இதில் 435 (1) பகுதி 1 மற்றும் 2 வேறு வேறு. இரண்டையும் தனித்தனியாக பார்க்க வேண்டும்.
முதல் பிரிவு 435 (1) (a) to (c) என்ன கூறுகிறதென்றால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்குகளிலும், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட, அல்லது மத்திய அரசின் நிதி மோசடி செய்யப்பட்ட வழக்குகளிலும், மத்திய அரசு ஊழியராக உள்ளவர் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும், உள்ளவர்களை விடுதலை செய்யும் முன்னர், மாநில அரசு, மத்திய அரசோடு கலந்தாலோசனை செய்த பிறகே விடுதலை செய்ய வேண்டும்.
இது முதல் பகுதி.
இரண்டாவது பகுதி என்ன சொல்கிறது ?
மற்ற தண்டனைப் பிரிவுகளோடு சேர்த்து மத்திய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரிவுகளில் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டவர்கள், போன்ற வழக்குகளில், மாநில அரசு ஒருவரை முன் விடுதலை செய்யுமேயானால், மத்திய அரசும் ஒரு முன் விடுதலைக்கான உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே அப்படி முன் விடுதலை செய்ய இயலும்.
இதுதான் இரண்டாவது பிரிவு. முதல் பிரிவுக்கும் இரண்டாவது பிரிவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. முதல் பிரிவு, மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறது. இரண்டாவது பிரிவு மத்திய அரசு விடுதலை உத்தரவை பிறப்பித்தால் மட்டுமே விடுவிக்க முடியும் என்கிறது.
இரண்டு பிரிவுகளும் என்ன, எதற்காக என்பதை விளக்கங்களோடு பார்ப்போம். மத்திய அரசுக்கு சொந்தமான சாஸ்திரி பவன் கட்டிடம் இருக்கிறது. தமிழகத்தில் அந்த கட்டிடத்துக்கு ஒருவர் வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தி விடுகிறார். தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கிறது. விசாரித்து அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அவருக்கு வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டும், குண்டு வைத்ததற்கு 15 ஆண்டும் தண்டனை வழங்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். மாநில அரசு அவரை எப்போது விடுவிக்க முடியும் ? ஒன்பதாவது ஆண்டில் மாநில அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதி வேண்டும். ஏனென்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வெடிமருந்துச் சட்டத்தின் படியான 10 வருட தண்டனையை அவர் முடிக்கவில்லை. அதனால், மத்திய அரசு எழுத்துபூர்வமான உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே அவர் விடுதலை செய்யப் பட முடியும். இது இரண்டாவது பிரிவு.
11ம் ஆண்டில் அவரை மாநில அரசு விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதி வேண்டுமா என்றால், மத்திய அரசை கலந்தாலோசித்தால் மட்டும் போதும். ஏனென்றால், மத்திய அரசின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் அவரின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. அதனால், மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால், அதே நேரத்தில் மத்திய அரசிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். இது முதல் பிரிவு.
ஏன் மத்திய அரசிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று இப்படி ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டதென்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் உள்ளவர்களை மாநில அரசு விடுதலை செய்து விட்டால், மத்திய அரசுக்கு எதுவுமே தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காகவே, இந்த பிரிவு.
இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அவர் போலி நிதி நிறுவனம் நடத்தி மாட்டிக் கொள்கிறார். அவர் மீது மாநில அரசு இந்திய தண்டனைச் சட்டம் 420ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்கிறது. அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை என்று வைத்துக் கொள்வோம். அவரை மாநில அரசு 5 ஆண்டுகளில் விடுதலை செய்ய முடியுமா என்றால் முடியும். இந்த நேர்விலும், மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும். ஏன் என்றால், அவர் மத்திய அரசு ஊழியர். கலந்தாலோசனை மட்டுமே போதும். மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது.
ஒருவர் பாஸ்போர்ட் மோசடி செய்து மாட்டிக் கொள்கிறார். அவர் மீது சென்னை மாநகர காவல்துறை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது. அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை என்று வைத்துக் கொள்வோம். அவரை மாநில அரசு விடுவிக்க முடியுமா என்றால், முடியவே முடியாது. மாநில அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும், பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட அவரை, மத்திய அனுமதி இல்லாமல் விடுவிக்க முடியாது. இதுதான் சட்ட நிலைமை.
இப்போது ராஜீவ் வழக்குக்கு வருவோம். நளினி உள்ளிட்டோர் என்னென்ன சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா ?
வெடிபொருட்கள் சட்டம்
ஆயுதச் சட்டம்
பாஸ்போர்ட் சட்டம்
வெளிநாட்டவர் சட்டம் (Foreigners Act)
வயர்லெஸ் மற்றும் டெலிக்ராஃப் சட்டம்
இது அத்தனையும் மத்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் வரும் சட்டப் பிரிவுகள். இப்போது ஜெயலலிதா எப்படி இவர்களை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுவிக்க முடியும் ? மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாதுதானே ? ஜெயலலிதா தவறிழைத்து விட்டாரா ?
மேற்கூறிய சட்டப்பிரிவுகளுக்கு அதிகபட்ச தண்டனை எத்தனை ஆண்டுகள் தெரியுமா ? 10 ஆண்டுகள். வெளிநாட்டவர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம், வயர்லெஸ் சட்டத்துக்கெல்லாம் அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகள்.
நளினி உள்ளிட்டோர் எத்தனை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் ? 23 ஆண்டுகள். பத்து ஆண்டுகளில் மேற்கூறிய அனைத்து சட்டங்களுக்கான தண்டனையும் முடிந்து விட்டது. தற்போது நளினி உள்ளிட்டோருக்கு எஞ்சியிருப்பது, கூட்டுச் சதி எனப்படும் 120-B மற்றும் கொலைக்கான 302 மட்டுமே. தடா சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 120-B மற்றும் 302 பிரிவுகளின் கீழ் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் தண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். 433A என்ற பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை செய்யக்கூடாது. நளினி உள்ளிட்டோர் 23 ஆண்டுகளை முடித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பிரிவு 435ன் படி, மாநில அரசுக்கு உள்ள ஒரே தடை, இந்த வழக்கை சிபிஐ விசாரித்த காரணத்தால், மத்திய அரசோடு “கலந்தாலோசிக்க வேண்டும்” என்பது மட்டுமே. இது வெறும் ஆலோசனை மட்டுமே என்பதை ஏற்கனவே பார்த்தோம். மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதன் உண்மையான பொருள், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே. நிச்சயமாக, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்த்தோம்.
இதைத்தான் ஜெயலலிதா செய்திருக்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432ன் கீழ் விடுதலை செய்தால், பிரிவு 435ன் கீழ் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 161ன் கீழ் மாநில அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது ?
161. Power of Governor to grant pardons, etc, and to suspend, remit or commute sentences in certain cases The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends.
இந்த உறுப்பின்படி, மாநில ஆளுநருக்கு, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட வழக்குகளில், தண்டனைக் குறைப்பு, தண்டனை ரத்து, உள்ளிட்ட அதிகாரங்கள் உண்டு.
மாநில ஆளுனர் எடுக்கும் முடிவு, அமைச்சரவையின் பரிந்துரைக்குட்பட்டது. இந்த அதிகாரத்தின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை, இரண்டு ஆண்டுகள் கழித்துக் கூட விடுதலை செய்யலாம். இது மாநில அரசின் முழு அதிகாரம். இதில் தலையிட நீதிமன்றத்துக்குக் கூட உரிமை இல்லை.
இது மாநில அரசின் பிரத்யேக அதிகாரம் என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, மாறுராம் என்ற வழக்கில் 1980ம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ளது. குற்றவியர் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aன் படி ஒருவரை 14 ஆண்டுகள் கழித்த பிறகே விடுதலை செய்ய முடியும். ஆனால் அரசியல் சட்டப் பிரிவு 161 மற்றும் 72ல் எப்போது வேண்டுமானாலும் விடுதலை செய்யலாம் என்று இருக்கிறதே என்ற அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒய்.வி.சந்திரசூட், பி.என்.பகவதி, ஃபைசாலி சையத் முர்தாஸா மற்றும் ஏ.டி.கோஷல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தங்கள் தீர்ப்பில்,
வி.ஆர்.கிருஷ்ணய்யர்
Doubtless, the President of India under Art. 72 and the State Government under Art. 161 have absolute and unfettered powers to grant pardon, reprieves, remissions, etc. This power can neither be altered, modified or interfered with by any statutory provision. But, the fact remains that higher the power, the more cautious would be its exercise. This is particularly so because the present enactment has been passed by the Parliament on being sponsored by the Central Government itself. It is, therefore, manifest that while exercising the powers under the aforesaid Articles of the Constitution neither the President, who acts on the advice of the Council of Ministers, nor the State Government is likely to overlook the object, spirit and philosophy of s. 433A so as to create a conflict between the legislative intent and the executive power. It cannot be doubted as a proposition of law that where a power is vested in a very high authority, it must be presumed that the said authority would act properly and carefully after an objective consideration of all the aspects of the matter. So viewed, I am unable to find any real inconsistency between s. 433A and Articles 72 and 161 of the Constitution of India as contended by the petitioners.
மாநில ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161 கீழும், குடியரசுத் தலைவருக்கு பிரிவு 72ன் கீழும், தண்டனையைக் குறைக்க, ரத்து செய்ய, மன்னிக்க அளவில்லாத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. இந்த அதிகாரத்தை, எந்த சட்டத்தாலும், விதிகளாலும், மாற்றவோ, குறைக்கவோ, தலையிடவோ முடியாது. எவ்வளவு அதிகமான அதிகாரம் உள்ளதோ, அந்த அளவுக்கு, இதை கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரிவு (433A) மத்திய அரசால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆகையால் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்புகளின் கீழ், அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுனரோ, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aன் நோக்கத்தையும், உணர்வையும் புரிந்து கொண்டு, அதிகார முரண் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். எந்த அமைப்பிடம் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ, அந்த அமைப்பு, அந்த அதிகாரத்தை, கவனமாகவும், எல்லா கோணங்களையும் கணக்கில் கொண்டு, அந்த அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் ஊகிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433A மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் முரண் உள்ளது என்பதை ஏற்பதற்கில்லை.
இது ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு. இத்தீர்ப்பு இன்று வரை மாற்றப்படவில்லை. இதுதான் இன்றைய சட்டம்.
ஜெயலலிதா அவசரப்பட்டு விட்டார், அவசரப்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், இவர்கள் இந்நேரம் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று முதலைக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி 2008ம் ஆண்டு என்ன செய்தார் தெரியுமா ?
“பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகச் சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15.9.2008 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும், 60 வயதும் அதற்கு மேலாகவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி, விடுதலை அளிப்பதென ஆளுநர் ஒப்புதல் பெற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலிருந்தும் 22 பெண் கைதிகள் உட்பட 1405 ஆயுள் தண்டனைக் கைதிகள் 15.9.2008 அன்று விடுதலை செய்யப்படுவார்கள்”
இது தமிழக அரசு 12.09.2008 அன்று வெளியிட்ட அறிவிப்பு. வெறும் ஏழே ஆண்டுகள் சிறைவாசம் முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 433Aவுக்கு எதிராக, கருணாநிதி அன்று விடுதலை செய்தார். இதற்கு சுவையான பின்னணி இருக்கிறது. 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட சமயத்தில் வந்த ஒரு கட்டுரையை பார்ப்போம்
“மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா!’ என்பது போன்ற போஸ்டர்கள் மதுரையில் அண்மையில் அமளிதுமளிப் பட்டன.
“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனைத் தெரியும்.. ஆனால் யார் இந்த மருது? அந்த மருதுவை மீட்டவர் யார்?” என்றெல்லாம் மதுரை மக்கள் குழம்பிக் கொள்ளவில்லை. மருது என்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் `உள்ளே’ சென்று தற்போது சிறை மீண்டிருப்பவர்களில் ஒருவர் என்பது மதுரை மக்களுக்கு நன்றாகவே தெரியும். மருதுவை வாழ்த்தி வரவேற்று அச்சடிக்கப்பட்ட சில போஸ்டர்களில் அவருக்கு `நல்லமருது’ என்று அமர்க்களமான அடைமொழியும் தரப்பட்டிருந்தது.
அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழாண்டு சிறைத்தண்டனை முடித்த கைதிகளை விடுவிக்க அரசு உத்தரவிட்டது. அந்த ஹோதாவில் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் விடுதலையாகி உள்ளனர். இவர்களது விடுதலையைக் கொண்டாடும் விதத்தில்தான் மதுரை முழுக்க இப்படி போஸ்டர்கள். இதில் நாம் நுழையும் முன்னால், 1997-ல் மதுரையை உலுக்கிய லீலாவதி படுகொலையை நம் மனக்கண் முன் ஒருமுறை ஓடவிட்டுக் கொள்வோமே!
மதுரையில் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் சௌராஷ்டிரா சமூகத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் லீலாவதி. வறுமை காரணமாக பத்தாவது வரை மட்டுமே படித்தவர் இவர். தன் இருபதாவது வயதில் ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரான குப்புசாமி என்பவரைக் கைப்பிடித்தார் லீலாவதி. அதுவரை தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருந்த லீலாவதியை மெல்ல பொதுவுடைமைப் பாதைக்குத் திருப்பினார் கணவர்.
கணவரின் வழிகாட்டலால் கைநெசவுத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவற்றின் உறுப்பினராக மாறிய லீலாவதி, 1987-ல் சி.பி.எம். கட்சியின் உறுப்பினர் ஆனார். அதன்பின் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், மாவட்டப் பொருளாளர் என பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.
தோழர் லீலாவதி
குப்புசாமி – லீலாவதி தம்பதியருக்கு கலாவதி, துர்கா, டான்யா என மூன்று மகள்கள். மதுரை வில்லாபுரத்தில் 32 ஒண்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்பில் ஒரே ஓர் அறையில் இந்த ஐவரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவே நெசவுத்தறி. அதைச் சுற்றி பெட்டி படுக்கைகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள். இரவில் தறிக்குக் கீழே தூக்கம். லீலாவதி நெசவு செய்வார். குப்புசாமி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில்தான் வந்தது மதுரை மாநகராட்சித் தேர்தல். வில்லாபுரம் பகுதி வேட்பாளராக லீலாவதியை கட்சி நிறுத்தியது. மக்கள் செல்வாக்கால் 59-வது வார்டில் அமோக வெற்றி பெற்றார் லீலாவதி. வில்லாபுரம் பகுதிக்கு எப்படியாவது குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினார் லீலாவதி. அந்த வார்டில் 58 இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும் என்றார். இது அந்தப் பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்த சிலரை கொதிநிலைக்குக் கொண்டு சென்றது.
1997-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி! அன்று காலையில் வழக்கம்போல மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய லீலாவதி, தனது மூன்று மகள்களுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தார். பின்னர் காலை உணவு தயாரிப்பதற்காக எண்ணெய் வாங்க, பாட்டிலை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பலசரக்குக் கடைக்குக் கிளம்பினார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததுதான் தாமதம். ஒரு கொலைகாரக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாள்களால் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே சடலமானார் லீலாவதி.
இந்தக் கொலை தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதானார்கள். இவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதில் முத்துராமலிங்கம் இறந்து விட்டார். பாம்பு முருகன் விடுதலையாகிவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இனிதே விடுதலையாகி உள்ளனர். பரோலில் சென்றபோது விதிகளை மீறியதால் அண்ணாதுரை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்த மூன்று பேரின் விடுதலை, சி.பி.எம். கட்சியினரைக் கோபத்தில் முகம் சிவக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ள சி.பி.எம். கட்சி மாநிலச் செயலாளர் என். வரதராஜன், அந்தக் கடிதத்தில், `மக்கள் பிரச்னைக்காகப் போராடியதன் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொலை செய்யப்பட்டவர் லீலாவதி. அவரது வழக்கில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டது வேதனைக்குரியது. இந்த நிகழ்வு எங்களது கட்சித் தோழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த மூவரின் தண்டனைக் குறைப்பு உத்தரவை அரசு ரத்து செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், `லீலாவதி கொலை வழக்கு விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யாரை வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கூறியதோ அவரையே அரசு நியமித்தது. அந்த வகையில் தன் கட்சியினர் தண்டிக்கப்பட தி.மு.க. அரசு காரணமாக இருந்தது. தற்போது அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ஏழாண்டு தண்டனையை நிறைவு செய்தவர்கள்’ எனக் கூறியிருந்தார்.
மருது, சோங்கு முருகன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் விடுதலை பற்றி லீலாவதி குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்? இதை அறிந்து கொள்ள அவரது குடும்பத்தினரை நாம் சந்திக்க முயன்றோம். லீலாவதியின் ஒரு மகள் அரசு ஊழியராகப் பணியாற்றும் நிலையில், இன்னொரு மகள் சென்னையில் ஒரு மருத்துவ மையத்தில் வேலை செய்கிறார். ஒரு மகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பப் பிரச்னை காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், லீலாவதியின் கணவர் குப்புசாமியை அவர் வேலை செய்யும் பாத்திரப் பட்டறையில் நாம் சந்தித்தோம். ஆரம்பத்தில் பேசவே தயங்கிய அவர் பின்னர் பேசினார்.
“அந்த மூன்று பேரையும் சட்டப்படி விடுவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? அதற்கு மேல் நான் பேசவும் கூடாது. பத்திரிகைகள்தான் பேச வேண்டும். லீலாவதியை நாடு முழுவதும் கொண்டு சென்றது பத்திரிகைகள்தானே? இது சமூகப்பிரச்னை. இதில் நான் ஏதாவது சொல்லி, அதைத் தனிப்பட்ட பிரச்னையாக மாற்ற விரும்பவில்லை. அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து கருத்துச் சொல்வதும் சரியாக இருக்காது” என்றவர், “உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதன்படி பொறுப்புக்கு வந்தவர்களில் ஒருவர் லீலாவதி. அப்படி பொறுப்புக்கு வந்து இந்திய அளவில் முதலில் பலியானவரும் அவர்தான். மக்கள் சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், பெண்கள் அதிகாரத்துக்கு வரத் தயங்குவார்கள்” என்றார் அவர்.
குடும்பச் சூழல் குறித்துக் கேட்டபோது.. “பித்தளைப் பாத்திரம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். பொருளாதாரரீதியாக எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார் கசப்பான புன்னகையுடன்.
`மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விடுதலை தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் போகிறதா?’ என அக்கட்சியின் நகரச் செயலாளர் அண்ணாதுரையிடம் கேட்டபோது.. “எங்கள் கருத்தை மாநிலச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறோம். மாநில நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள்” என்றார் அவர்.
மக்களுக்காகப் பாடுபட்ட லீலாவதி கொலை சம்பவத்தை மதுரை மக்கள் முற்றாக இன்னும் மறக்காத நிலையில், இன்னொரு பக்கம் சிறை மீண்டவர்களை வாழ்த்தி வரவேற்கும் வண்ணமயமான போஸ்டர்கள் என்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது.
திமுகவுடன் கூட்டணி அமைத்து கும்மியடித்த கம்யூனிஸ்ட்கள் இந்த விசயத்தில் என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்ய முடியாது. மதுரையின் அதிகாரம் முதல் அமைச்சரை விட மிகவும் பெரிது.”
இதுதான் கருணாநிதி. கருணாநிதிக்கு, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161ன் கீழ் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் தெரியும். அந்த அதிகாரத்தினை பயன்படுத்தித்தான், தன் மகனுடைய நண்பர்கள், அடியாட்களை விடுவிப்பதற்காக 1405 பேரை ஒரே நாளில் விடுவித்தார். ஆனால், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யாதது மட்டுமல்ல, ஏப்ரல் 2000த்தில், நளினியை தவிர்த்து மற்ற மூவரையும் தூக்கிலிடலாம் என்று தீர்மானம் இயற்றியவர்தான் இந்தக் கருணாநிதி. மூவர் தூக்கு விவகாரம் தொடர்பாக சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையின் இணைப்பு.
தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு, முழுக்க முழுக்க சரியான முடிவு. சட்டரீதியான முடிவு.
இந்த முடிவை கருணாநிதி இன்னும் 100 வருடங்கள் ஆகியிருந்தாலும் எடுத்திருக்க மாட்டார். இதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவுக்கு நன்றிகள் குவிகின்றன. வாழ்த்துக்கள் குவிகின்றன.
இந்த நன்றிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் முழுமையாக தகுதியானவர் செல்வி ஜெயலலிதா. 23 ஆண்டுகள் வெளியுலகைப் பார்க்காமல் சிறையில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், இந்த முடிவின் தாத்பரியம் என்னவென்று. வெளியிலிருந்து கூக்குரலிடுபவர்களுக்குப் புரியாது. நளினி சிறையிலிருந்து முன் விடுதலை செய்யப்பட்டால், அவர் குடியிருக்கும் பகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து என்று அறிக்கை அளித்தவருக்கும், நளினி அறையிலிருந்து செல்போனை கைப்பற்றியதாக பொய் வழக்கு போட்டு, நளினியை நிரந்தரமாக சிறையில் இருக்க ஏற்பாடு செய்தவருக்கும் அந்த வேதனை புரியாது.
எழுவர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை விமர்சித்து கருணாநிதி இப்படிக் கூறினார்.
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்”
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
கருணாநிதி அவர்களே… ஜெயலலிதாவுக்கு நீங்கள் சொன்ன குறள் பொருத்தமானதல்ல…
இந்தக் குறள்தான் பொருத்தமானது.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.