சங்கர சுப்பு. மனித உரிமைப் போராளி. மனித உரிமைகள் எங்கே மீறப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர். பல நக்சலைட்டுகளை போலி என்கவுன்டர்களில் இருந்து காப்பாற்றியவர் என்று பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர் சங்கரசுப்பு.
தொடக்கத்தில் எல்லோருமே நன்றாகத்தான் தொடங்குகிறார்கள். அப்படித்தான் சங்கரசுப்புவும் தன் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். ஆனால், பெரிய வழக்குகளில் வரும் பெரும் பணம், அவரை நாளடைவில் பணத்தாசை பிடித்த மனிதராக மாற்றியது. பணமும் புகழும் வந்து சேரத் தொடங்கியதும், சங்கர சுப்பு, நீதிபதிகளை மிரட்டி தனக்கு வேண்டிய உத்தரவுகளை பெரும் அளவுக்கு மாறிப்போனார். பல நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்கையில், சங்கரசசுப்பு நீதிமன்றத்தில் நடந்து கொள்ளும் முறை அவமானகரமாக இருக்கிறது, கோபப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
தொடக்க காலத்தில் மனித உரிமை வழக்ககளில் ஆஜராகி புகழை சம்பாதித்த சங்கரசுப்பு, பின்னாளில் மனித உரிமை வழக்குகளில் ஆஜராவதை, தன்னுடைய இமேஜுக்காக வைத்துக் கொண்டு, பசையுள்ள வழக்குகளில் ஆஜரவாதில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சங்கரசுப்பு. இப்படி பணமும் பசையுமாக சங்கரசுப்புவின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோதுதான், அவர் மகன் சதீஷ் குமார் திடீரென்று காணாமல் போகிறார்.
சதீஷ் குமார் காணாமல் போனதும், திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு, சதீஷ் குமாரின் பைக் ஐசிஎப் ஏரியின் அருகே கிடைக்கிறது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, சதீஷ் குமாரின் உடல், அழுகிய நிலையில், ஐசிஎப் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்படுகிறது. சாதாரண நபராக இருந்தால், மாநில காவல்துறை விசாரிக்கலாம். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வழக்கல்லவா ? உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. 20.06.2011 அன்று வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.
சங்கரசுப்புவுக்கு இருக்கும் புகழ் காரணமாக, அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்குகிறார்கள். நீதிபதிகளும், கருணையோடு வழக்கை அணுகுகிறார்கள். சிபிஐ அமைப்பில் இருந்த ஏறக்குறைய அத்தனை புலனாய்வு அதிகாரிகளும், இந்த வழக்கின் விசாரணைக்காக களமிறக்கப்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, நீதிமன்றம் இந்த வழக்கின் முன்னேற்றம் என்னவென்று கேட்டறிகிறது. உத்தரவுகள் பிறப்பிக்கிறது. இந்த வழக்கில் என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் கேளுங்கள், உங்களுக்கு உடனே செய்து தருகிறோம். என்ன வசதிகள் வேண்டும், எந்த புலனாய்வு அதிகாரிகள் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று நீதிபதிகள் கூறுகின்றனர்.
புலன் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. ஒரு மகனை பறிகொடுத்த பெற்றோர் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை முழுமையான தீவிரத்தோடு நடத்துகிறார்கள்.
சங்கரசுப்புவும் அவர் குடும்பத்தினரும், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், இந்த விசாரணையை திசை திருப்புவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். சதீஷ் குமார் இறந்த ஒரே வாரத்தில், சங்கரசுப்பு தன் வீட்டுக்கு புதிதாக வெள்ளையடிக்கிறார். வீட்டில் இருந்த படுக்கை விரிப்புகள் அத்தனையும் புதிதாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும், போலீசாரின் விசாரணையை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சிகள் செய்கிறார்.
விசாரணையின் தொடக்கம் முதலாக, சங்கரசுப்பு சொல்லி வந்த குற்றச்சாட்டு, மனித உரிமை போராட்டத்தின் பகுதியாக காவல்துறைக்கு எதிராக தொடர்ந்து வாதாடி வந்ததால், காவல்துறையினர் சில ரவுடிகளின் துணையோடு, தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பது. 07.06.2011 அன்று சதீஷ் குமார் காணாமல் போனாலும், 13.06.2011 அன்றுதான் சதீஷ் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. 13.06.2011 அன்றுதான் முதன் முறையாக காவல்துறை ஆய்வாளர்கள் ரியாஸுத்தீன், கண்ணன் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் தன் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள், அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு. இதற்கு என்ன ஆதாரம் என்றால், ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த அதிகாரிகளுக்கு எதிராக வாதாடி 25 ஆயிரம் அபராதம் விதிக்க வழி செய்திருக்கிறார் சங்கரசுப்பு. இதனால், அவர்கள் சங்கரசுப்பு மீது வன்மம் கொண்டு, அவர் மகனை கடத்திக் கொலை செய்து விட்டார்கள் என்பதே. இந்த அடிப்படையில் இவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார் சங்கரசுப்பு. இவர் சொன்னதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, உண்மை கண்டறியும் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், அவர்கள் உண்மையை மறைக்க முயற்சி செய்யவில்லை என்பது தெரிய வந்தது. இந்த விபரங்கள் சங்கரசுப்புவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சங்கரசுப்பு தொடர்ந்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வழக்கறிஞர்களையும் தூண்டி விட்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தினார் சங்கரசுப்பு. இதற்காக மூன்று நாட்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. ஒவ்வொரு முறை இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போதும், 200-க்கும் குறையாத வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்குள் குழும வைப்பார் சங்கரசுப்பு. கிட்டத்தட்ட நீதிபதிகளை மிரட்டுவது போல.
சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார், மன நிலை சரியில்லாத காரணத்துக்காக தி.நகரில் உள்ள ராஜு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். அவருக்கு அங்கே எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களையெல்லாம் சங்கரசுப்பு, காவல்துறைக்கு தெரியாமல் மறைத்தார். ஆனாலும், விசாரணையில் இந்த விவகாரங்கள் வெளியே வந்தன. மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் சபாபதி என்பவரின் உதவியை நாடி, அவர் நான்கைந்து காவலர்களை அனுப்பி, குண்டுகட்டாக போலீஸ் ஜீப்பில் போட்டு அழைத்து சென்றுள்ளார்கள்.
அடுத்ததாக, சங்கரசுப்பு சொன்ன குற்றச்சாட்டு, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப.இளவரசன் தன் மகனை கொலை செய்திருக்கலாம் என்பது. சுப இளவரசன், சங்கரசுப்பு மகனின் மரணத்துக்கு வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றிருக்கிறார். அவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிய வருகிறது.
அடுத்ததாக சங்கரசுப்பு, ராஜீவ் காந்தி நகரில் ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது. அந்த வீட்டில் வைத்துதான் என் மகனை கொலை செய்துள்ளார்கள் என்று கூறினார். சங்கரசுப்பு முன்னிலையிலேயே அந்த வீடு சோதனையிடப்பட்டது. அந்த வீடு குழந்தைவேலு என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதும், சங்கரசுப்பு மகனுக்கும், அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.
அதே இடத்தில் குரு ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை வைத்து நடத்துபவர், சதீஷ் குமார் காணாமல் போன அன்று வண்டியை தள்ளிச் செல்வதை பார்த்ததாகவும், அவரை கைது செய்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்றும் கூறுகிறார். அவர் சொன்னபடி, அந்த நபரை சென்று விசாரித்ததில் அந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிய வருகிறது. உங்களுக்கு யார் இந்தத் தகவலை சொன்னது என்று கேட்டால், சங்கரசுப்பு பாக்கியராஜ் என்ற வழக்கறிஞர் சொன்னதாக கூறுகிறார். பாக்கியராஜை அழைத்து விசாரித்தபோது, அவர் சங்கரசுப்புவின் ஜுனியராக 1995 முதல் 2004 வரை வேலை செய்தார் என்பதும், பின்னர், அவர் பண விவகாரத்தில் சண்டை ஏற்பட்டு விலகி விட்டார் என்றும், தெரிய வருகிறது. தனது பழைய பகையை மனதில் வைத்தே, சங்கரசுப்பு இந்தத் தகவலை சிபிஐ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
அடுத்ததாக, சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய மற்றொரு வழக்கறிஞர் சந்திரசேகர். ஒரு சூழலில், சங்கர சுப்பு குடும்பத்தினர் அவரை அடித்து விடுகின்றனர். அதனால், அவர் அதை மனதில் வைத்து பழிவாங்கி இருக்கக்கூடும் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. இதையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணையில், அதுவும் உண்மையல்ல என்பது தெரிய வருகிறது. சங்கரசுப்பு குடும்பத்தினரிடம் அடிபட்ட வழக்கறிஞர் சந்திரசேகர், அந்த சம்பவத்துக்குப் பின், சேலத்துக்கு சென்று விட்டார் என்பதும், அவர் சென்னைக்கு திரும்பவேயில்லை என்பதும் தெரிய வருகிறது.
சென்னை, புழல் சிறையில் உள்ள ஒரு கைதி, தனக்கு சதீஷ் குமாரை கொன்றது யார்? என்று தெரியும் என்று கூறுகிறார். அதிகாரிகள் அவரை விசாரித்ததும், தண்டனை சிறையில் உள்ள பொழிலன் என்பவரின் வழக்கை சங்கரசுப்பு நடத்தியதாகவும், அவருக்கு அந்த வழக்கில் தண்டனை கிடைத்ததாகவும், அதன் காரணமாக அவர் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறார். அந்த நபர் யாரென்றால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர் பொழிலன். அவர் கொடைக்கானல் டிவி டவர் குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை பெற்றவர். அந்த தகவல் முழுக்க முழுக்க பொய் என்பதும் தெரிய வருகிறது. விசாரணைக் கைதியிடம் ஏன் இப்படிப் பொய் சொன்னாய்? என்று கேட்டதற்கு, சங்கரசுப்புதான் அப்படி சொல்லச் சொன்னதாக கூறினார்.
வழக்கு விசாரணை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சங்கரசுப்பு, ஒரு வோடபோன் சிம் கார்டை எடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் தருகிறார். அந்த சிம் கார்டு, தனது மகன் சதீஷ் குமாரின் வண்டியில் இருந்தததாக கூறுகிறார். சதீஷ் குமாரின் பைக், கண்டெடுக்கப்பட்ட பிறகு, திருமங்கலம் காவல் நிலைய போலீசாரால், முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. அதன் பின் சிபிஐ விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியதும், சிபிஐ அதிகாரிகளும், அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்கிறார்கள். இத்தனை பேர் சோதனை செய்த பிறகு கிடைக்காத ஒரு சிம் கார்டு, சங்கர சுப்பு கையில் கிடைக்கிறது. 29.08.2011 அன்று அந்த சிம் கார்டை எடுத்து சென்று சிபிஐ அதிகாரிகளிடம் கொடுக்கிறார். அந்த சிம்கார்டை பயன்படுத்திய நபர், தன் மகனை கொன்றிருக்கக் கூடும் என்று கூறுகிறார். காவல்துறை அதிகாரிகள் விசாரித்ததில், அந்த சிம்கார்ட் மல்லிகா, என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த சிம்கார்டை முன்னாள் நக்சலைட் சிவலிங்கம் என்பவர் சிறையில் பயன்படுத்தியது தெரிய வருகிறது. சிவலிங்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர். அவருக்கு வயது 74. அவர் சிறையிலிருந்து வெளியே வந்து என்ன வேலை செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? சங்கரசுப்பு மகனை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான போஸ்டர்களை தயாரித்து ஒட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சங்கரசுப்பு சொன்னதற்காக சிவலிங்கமும் அழைத்து விசாரிக்கப்படுகிறார். அவர், அய்யா, நான் மார்ச் மாதம் சங்கரசுப்பு அய்யாவை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். நான் அந்த சிம்கார்டை சிறையில் பயன்படுத்தியது உண்மை. ஆனால், அந்த சிம்கார்டை வெளியில் எடுத்து வரவேயில்லை. சிறையிலிலேயே விட்டு வந்து விட்டேன் என்று கூறுகிறார். சிவலிங்கத்தை விசாரித்த விபரத்தை, சங்கரசுப்புவிடம் தெரிவிக்கிறார்கள். மனித உரிமைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சங்கரசுப்பு என்ன சொன்னார் தெரியுமா ? “இப்படி விசாரிச்சா எப்படி சார் சொல்லுவான் ? கட்டி வைச்சு அடிச்சாதான் சார் சொல்லுவான். என்னா விசாரிக்கிறீங்க நீங்க” என்று சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார். 74 வயதான ஒரு நபரை, கட்டி வைத்து அடிக்க வேண்டுமாம்…..!!!!
இதை விட ஆச்சர்யமான அதிர்ச்சி சங்கர சுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் சொன்ன அடுத்த விஷயம். தன்னோடு கூடவே இருந்து, ஏராளமான உதவிகளை செய்து வரும் வழக்கறிஞர் ரஜினிகாந்தும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்து விட்டார்கள் என்பதுதான். ரஜினிகாந்த் ஏற்று நடத்தும் பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு சங்கரசுப்புவைத்தான் அமர்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமார் காணாமல் போனதும், சங்கரசுப்புவின் மனைவி முதலில் ரஜினிகாந்தைத்தான் உதவிக்கு அழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமாரின் இறுதிச்சடங்கு செலவுகளை முழுக்க முழுக்க ஏற்றது, ஆம்ஸ்ட்ராங்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சங்கரசுப்பு, ரஜினிகாந்தும், ஆர்ம்ஸ்ட்ராங்கும் சேர்ந்து தன் மகனை கொலை செய்துவிட்டார்கள் என்று சொன்னார். சங்கரசுப்பு எப்படிப்பட்ட மனிதர் என்பதை இப்போது ஒரளவிற்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதா?
அடுத்ததாக சங்கரசுப்பு, காவல்துறை அதிகாரிகள் சிலர் போலீஸ் ஜீப்பில் தன் வீட்டை தொடர்ந்து கண்காணித்தார்கள் எனவே, அவர்கள்தான் தன் மகனை கடத்திச் சென்றிருக்கக்கூடும் என்றார். அதையும் விசாரித்ததில், சாதாரணமாக ரோந்துக்கு வரும் காவல்துறை வாகனம் அது, அந்த இடத்தில் இரண்டு நாட்கள் நின்றிருந்தது என்பது தெரிய வந்தது.
சங்கரசுப்புவின் மனைவி, தன் மகனோடு சட்டக் கல்லூரியில் படித்த தினேஷ் குமார் என்பவர், தன் மகன் ஒரு குடிகாரன் என்று எல்லோரிடமும் பரப்பி வருவதாகவும், அவன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த தினேஷ் குமாரை விசாரித்ததில், சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் குடிகாரர்தான் என்றும், ஆல் இந்தியா சுற்றுலா சென்றபோது, ஒரு க்ளாஸ் ப்ராந்தி தரவில்லை என்பதற்காக மணிகண்டன் என்வரை, அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. சதீஷ் குமாரோடு அந்த டூரில் யாருமே பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் இருந்த கவிதா என்ற வழக்கறிஞரை, சதீஷ்குமார் பின்னாலேயே தொடர்ந்து சென்று தொந்தரவு செய்ததாகவும், அவர் தொந்தரவு பொறுக்க முடியாமல், கவிதா, பெண் வழக்கறிஞர் சங்கத்தில் புகார் செய்ததாகவும், அதன் சங்கத் தலைவர் சாந்தகுமாரி, சங்கரசுப்புவை அழைத்து விஷயத்தை சொல்லி கண்டித்ததாகவும் கூறினார்.
சங்கரசுப்புவின் மனைவி மயிலம்மாள், சிபிஐ அதிகாரிகளிடம், திலீபன் என்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதன் அடிப்படையில் அதை விசாரித்ததில் அது முழுக்க முழுக்க பொய் என்பது தெரிய வருகிறது.
அடுத்ததாக மயிலம்மாள், சீனிவாசன் என்ற நபர் தங்களிடம் டிரைவராக பணியாற்றியதாகவும், அவர்தான் தன் மகனை கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதை விசாரித்ததில், மாதம் 4500 ரூபாய் சம்பளத்துக்கு அந்த சீனிவாசன், சங்கர சுப்பு வீட்டில் வேலை பார்த்துள்ளார் என்றும், ஒரு முறை, சதீஷ் குமார், தேர்வில் ஃபெயிலானது குறித்து அவருடைய தாயார் மயிலம்மாவிடம் தெரிவித்ததற்காக, தன்னை அடித்து விட்டதாகவும், அதோடு தான் வேலையை விட்டு நின்று விட்டதாகவும் கூறுகிறார்.
அடுத்ததாக, தன் மகனின் வண்டியில் காஞ்சி ஹோட்டலில் தங்கியதற்கான ரசீது இருந்தது என்று ஒரு ரசீதை கொடுக்கிறார். அந்த ரசீது குறித்து விசாரித்ததில், சுந்தரம் என்பவர், தன் வீட்டு விசேஷத்திற்காக, அந்த அறையில் தங்கியதாக கூறுகிறார். அவருக்கு சங்கரசுப்பு யாரென்றே தெரியாது. இந்த ரசீதும், திருமங்கலம் காவல் நிலையத்தினர், சிபிஐ அதிகாரிகள் கண்ணுக்கு படாமல், சங்கரசுப்பு கண்ணுக்கு மட்டும் எப்படி பட்டது என்பது மர்மத்திலும் மர்மம்.
இதையெல்லாம் விட மிகப் பெரிய மர்மம் ஒன்றை சங்கரசுப்பு திட்டமிட்டு சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து மறைத்தார். அது என்னவென்றால், சதீஷ் குமார் காணாமல் போவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, EYES தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி முருகைய்யா என்பவரை, சங்கரசுப்பு, அவர் மனைவியுடன் போய் சந்தித்து, தன் மகனை பின் தொடர ஆட்களை நியமிக்கும்படி கேட்டுள்ளார் அவரும் சம்மதித்துள்ளார். பின்னர் அந்த திட்டத்தை சங்கரசுப்பு கைவிட்டுவிட்டார்.. சதீஷ் குமார் காணாமல் போன 07.06.2011 அன்று, மாலை ஏழு மணிக்கு முருகைய்யாவை தொடர்பு கொண்ட, சதீஷ் குமாரின் தாயார் மயிலம்மாள், தன் மகனை உடனே பின் தொடர ஆட்களை அனுப்பும்படி கேட்கிறார். அவர், இரவாகி விட்டதால், ஆட்கள் யாரும் இல்லை என்று கூறி, மறுநாள் ஆட்களை அனுப்புவதாக கூறுகிறார். அதன் பின் சதீஷ் குமார் காணாமல் போய் விடுகிறார்.
தனியார் புலயாய்வு நிறுவனத்தை அணுகிய விஷயத்தை கடைசி வரை சங்கரசுப்பு சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கவேயில்லை. இது குறித்து அவரிடம் நேரடியாக விசாரித்தபோது மழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்து, விஷயத்தை அறிக்கையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்ததும், சங்கரசுப்பு கடும் கோபமடைகிறார். விசாரணையை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்று பதட்டமடைகிறார். அந்த விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று, சிபிஐ அதிகாரிகள் ஒழுங்காக விசாரிக்கவில்லை, கொலை செய்த காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றுகிறார்கள் என்று நீதிமன்றத்தில் பெரும் பிரச்சினை எழுப்பப்படுகிறது. அதை விசாரித்த நீதிபதிகள் என்னதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டு அதிகாரிகள் இதை விசாரித்தால், விசாரணை ஒழுங்காக நடைபெறாது அதனால் வட இந்திய அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சங்கரசுப்பு. வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று மிரட்டியதால், வேறு வழியின்றி நீதிபதிகள், தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல், முழுக்க முழுக்க வட இந்திய அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கூடுதல் டிஜிபி சலீம் அலி தலைமையில், விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரிக்க சிரமப்படுகையில், மொழி தெரியாத வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வார்கள்? இதுதான் சங்கரசுப்புவுக்கு வேண்டும். வட இந்திய அதிகாரிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். இறுதியாக, சதீஷ் குமார் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்ற முடிவுக்கு வருகிறார்கள். கவிதா என்ற பெண் வழக்கறிஞரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவர் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சங்கரசுப்புவிடம் ஜுனியராக பணியாற்றிய அரிஸ்டா என்ற பெண்ணுக்கும் தொல்லை கொடுத்துள்ளார். அவரும், சதீஷ் குமாரை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதீஷ் குமார் விலை மாதர்களிடம் செல்லத் தொடங்கியுள்ளார். மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று, அந்த மருந்துகளின் தாக்கத்தால் சதீஷ் குமாருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளது. 29.05.2011 அன்று விடியற்காலை 2.47 மணிக்கு, செக்ஸ் மருத்துவர் உபயதுல்லா பேக் என்பவருக்கு, செக்ஸ் பிரச்சினை தொடர்பாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் சதீஷ் குமார். இது போன்ற குழப்பமான மனநிலையில், ஐசிஎப் குளக்கரையில் அமர்ந்து சதீஷ் குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு அறிக்கை அளித்து விடுகிறார்கள்.
இதையடுத்து, மீண்டும். நீதிமன்றத்தில் பிரச்சினை கிளப்புகிறார் சங்கரசுப்பு. நீதிமன்றம், முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னாள் மும்பை ஆணையர் சிவானந்தன் உள்ளிட்ட ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கிறது. இந்த புலனாய்வுக் குழு இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த புலனாய்வுக் குழுவுக்கு மாதந்தோறும் ஆகும் செலவு 40 லட்சம் ரூபாயைத் தாண்டுகிறது.
இந்த விசாரணை தொடங்கியதிலிருந்து துளியும் அதற்கு ஒத்துழைக்காமல், விசாரணையை திசை திருப்புவதிலேயே முனைப்பாக இருந்தார் சங்கரசுப்பு என்பது நமக்கு தெளிவாக தெரிய வருகிறது. எதற்காக இந்த விசாரணையை திசை திருப்புவதில் முனைப்பாக இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருவதால், காவல்துறை அதிகாரிகளாலும் சுதந்திரமாக விசாரணையை நடத்த முடியவில்லை. சங்கரசுப்புவின் தூண்டுதலால் வழக்கறிஞர்கள் கூட்டமாக நின்று தகராறு செய்வதால், நீதிபதிகளும் வேறு வழியின்றி, இந்த வழக்கை விசாரித்து உத்தரவு போட்டுக் கொண்டே வருகிறார்கள். இதனால் நீதிமன்றத்தின் நேரம் விரயம் ஆவது மட்டுமல்ல, ஒரு விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுவதும் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்களை தூண்டி விட்டு தகராறு செய்வாரே என்ற அச்சத்தில், சங்கரசுப்பு முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்து, விசாரணையை திசை திருப்புவதை, நீதிபதிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இந்த வழக்கில் தனக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்காத நீதிபதிகளை ஒவ்வொரு முறையும் தகராறு செய்து மாற்றியுள்ளார் சங்கரசுப்பு. இந்த வழக்கில் இது வரை பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விலகிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை என்ற பெயரில் மாதந்தோறும், மக்களின் வரிப்பணம் 40 லட்ச ரூபாய் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீதிபதிகளும் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். நாட்டில் எத்தனையோ கொலைகள் கண்டுபிடிக்கப்படாமல், அப்படியே நிலுவையில் இருக்கின்றன. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை கூட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கெல்லாம் இப்படி ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறதா நீதிமன்றம் ? 2ஜி வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரிக்க வேண்டிய அளவுக்கு, சதீஷ் குமார், மகாத்மா காந்தியா? பகத்சிங்கா? அல்லது சமூகப் போராளியா? ஊழல் ஒழிப்பு போராளியா? சொல்லப்போனால், இந்த விசாரணையில் தெரிய வந்த விவகாரங்களை வைத்துப் பார்க்கையில், சராசரியை விட மிக மிக மோசமான நபராகவே சதீஷ் குமார் இருந்துள்ளார். அப்படிப்பட்ட நபரின் கொலையும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது சாதாரணமாக, எல்லா வழக்குகளையும் போலத்தான் விசாரிக்கப்பட வேண்டும்.
எதற்காக இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு என்பதை, நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வீணாகும் மக்கள் வரிப்பணம் ஒவ்வொரு ரூபாய்க்கும், சென்னை உயர்நீதிமன்றமும், இதை விசாரிக்கும் நீதிபதிகளுமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நியாயமான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.