“வாடா தமிழ். என்ன விஷயம் முதல் விஷயம் ?” சொல்லு என்று ஆவலாக வரவேற்றான் பீமராஜன்.
“எல்லோருக்கும் முன்னதா, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிச்சி, தேர்தல் பிரச்சார தேதியையும் அறிவிச்சி, அனைத்து கட்சிகளையும் திக்குமுக்காட வெச்சிட்டாங்க ஜெயலலிதா. மற்ற கட்சிகள் அனைத்தும் அதிர்ந்து போயிட்டாங்க”
“அவங்க மட்டுமா அதிர்ந்து போயிட்டாங்க…. கூட்டணி கட்சிகளும்தான் அதிர்ந்து போயிட்டாங்க” என்றான் ரத்னவேல்.
“கூட்டணி கட்சிகள் அதிர்ந்து போனது உண்மைதான். ஆனா, இடதுசாரிகளோடு பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அது முடிந்ததும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அறிவிக்கப்படும்னு சொன்னாலும், இடதுசாரிகள் வயிற்றில் இந்த அறிவிப்பு புளியைத்தான் கரைத்திருக்கிறது.
ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும், இதே போல கூட்டணிக் கட்சிக்கான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவிச்சது, இவர்கள் மனசுல இன்னும் பசுமையா இருக்கு. இப்படி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளதால, அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம, இடதுசாரிகள் கடும் குழப்பத்துல இருக்காங்க.”
“சரி… வேட்பாளர்கள் என்ன மனநிலையில் இருக்காங்க ? ” என்றான் வடிவேல்.
“அதிமுக வேட்பாளர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள். அவங்களில் பெரும்பாலானோருக்கு, இன்னும் எத்தனை நாள் வேட்பாளரா இருப்போமோன்ற பயம் இருக்கு. பட்டியல் வெளியான அடுத்த நிமிஷத்துல இருந்து, புகார்கள் தயார் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. எந்த வேட்பாளர் தலை உருளுமோன்னு யாருக்கும் தெரியலை. எல்லோரும் அந்த பதட்டத்துலயே இருக்காங்க.
அது போக, பல வேட்பாளர்கள் வலுவானவங்க கிடையாது. எந்த அடிப்படையில் இந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாங்கன்னு எந்நத விபரமும் இது வரைக்கும் தெரியலை. ஆனா, சாதிய சமன்பாடுகள் சரிசமமா இருக்கிற மாதிரி பாத்துக்கிட்டு இருக்காங்க. எட்டு வன்னியர்கள், ஏழு கவுண்டர்கள், தலித்துகள் ஏழு, தேவர் ஏழு, நாடார்கள் 3, முதலியார் 2, மீனவர், ரெட்டியார், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவருக்கு தலா ஒன்னுன்னு ஒதுக்கியிருக்காங்க. “
“சரி… ஜெயலலிதா இவ்வளவு விரைவா, வேட்பாளர்களை அறிவிச்சி, பிரச்சாரத்தை துவக்க காரணம் என்ன ? ” என்றான் ரத்னவேல்.
“ஜெயலலிதா மற்ற கட்சிகளை அப்செட் பண்ணணும் ன்றதுல கவனமா இருக்காங்க. மற்ற கட்சிகள் அத்தனையும் கூட்டணிக்காக அல்லாடிக்கிட்டு இருக்க சமயத்துல, தேர்தலுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே, தெளிவா எந்த கூட்டணின்னு முடிவெடுத்து, வேலையை தொடங்கிட்டாங்க. ஒரு வருடத்துக்கு முன்னாடி, சென்னையை அடுத்த வானகரத்துல நடந்த கூட்டத்துலயே, பாராளுமன்றம்தான் நம் இலக்குன்னு அறிவிச்சாங்க ஜெயலலிதா. அந்த அடிப்படையில, அன்னையில இருந்து தெளிவா காய்களை நகர்த்தி இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்காங்க. “
“பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த அடுத்த முடிவுதான், எழுவர் விடுதலையும் னு சொல்றாங்க… ஆனாலும், இந்த ஏழு பேர் விடுதலையைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழரான நீதிபதி சதாசிவத்தை நாம எல்லோரும் பாராட்டத்தான் வேணும்” என்றான் ரத்னவேல்.
“உண்மைதான். சதாசிவத்தின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கு. ஆனாலும், இந்தத் தீர்ப்பு அவர் அளித்த சிறந்த தீர்ப்புகளில் ஒன்று. இதற்காக அவரை பாராட்டித்தான் ஆகணும்” என்று அவனை ஆமோதித்தான் தமிழ்.
“காங்கிரஸ் அரசாங்கம் சம்மதம் சொன்னதாலதான், சதாசிவம் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியதா சொல்றாங்களே…. ? ” என்றான், வடிவேல்.
“எந்த விஷயமா இருந்தாலும், அதுல ஏதாவது ஒரு சந்தேகத்தை கிளப்பறதே உனக்கு வேலையாப் போச்சுடா….. ” என்று அலுத்துக் கொண்ட தமிழ், “சரி சொல்றேன் கேளு” என்று தொடர்ந்தான். இந்தியாவை பொறுத்தவரைக்கும், காங்கிரஸ் கட்சி இந்தியாவின் உரிமையாளர். காங்கிரஸ் கட்சி நினைச்சதைத்தான் செய்யும். நினைச்சதுதான் நடக்கும்.
பிஜேபியோட நீண்ட நாளைய கோரிக்கை, அஜ்மல் கசாப்பையும், அஃப்சல் குருவையும் தூக்கில் போடணும் என்பது. இது காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நாளைக்கு தலைவலியாவே இருந்துச்சு. இவங்க ரெண்டு பேரையும் தூக்கில போட்டுட்டா, பிரச்சினை முடிஞ்சுதுன்னு காங்கிரஸ் நினைச்சுதான், ரெண்டு பேரையும் அதிகாலையில தூக்கில போட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் தூக்கில் போடப்பட்டதும், பிஜேபி தொடர்ந்து பேசிக்கிட்டிருந்த ஒரு விஷயம் முடிஞ்சு போச்சு.
காங்கிரஸ் கட்சிக்கு இவர்கள் மூவரையும் சரி, புல்லாரையும் சரி, தூக்கில் போடும் எண்ணம் இல்லை. போடுவதாக இருந்தால், அப்சல் குருவை தூக்கிலிட்டது போலவே, ரகசியமாக அதிகாலையில் தூக்கிலிட்டிருக்க முடியும். ஆனா, அப்படி பண்ணாம, கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், அந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாவது போல பாத்துக்கிட்டாங்க. ஊடகங்களில் வெளியானதும், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு நினைத்திருந்தால், அதிகாலையில் யாருக்குமே தெரியாமல் தூக்கில் போட்டிருக்க முடியும்.
தேர்தல் நேரத்தில், இப்படி ஒரு முடிவை எடுத்தால், ஏற்கனவே பலவீனமாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் என்பது தெரியும். அதனால, உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்திடம், இந்த விவகாரம் சொல்லப்பட்டு, அவர் அளித்த தீர்ப்பே இந்தத் தீர்ப்பு. ஆனா அவரே, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கும் ன்றதை எதிர்ப்பார்க்கல”
“நீதிபதி சதாசிவம் எதுக்காக மத்திய அரசு சொல்றதை கேக்கணும் ? “
“என்னடா இப்படி முட்டாளா இருக்கிற ? வரும் ஏப்ரல் மாதம் சதாசிவம் ஓய்வு பெறப் போறாரு…. ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும் ? அதுக்காகத்தான் லோக்பால் அமைப்பின் தலைவராக அவரை நியமிக்கணும்னு மத்திய அரசு கிட்ட கோரிக்கை வைத்திருக்கிறார். அதுக்காக மத்திய அரசு, சொன்னதையெல்லாம், கேட்டுக்கிட்டு இருக்கார்.
நீதிபதி சதாசிவம் தன்னோட காரியத்துக்காக எது வேணாலும் செய்வார். ஜெயலலிதா கிட்ட காரியம் ஆகணும்னா, சொத்துக் குவிப்பு வழக்கில் உங்களுக்கு ஆதரவா செயல்படறேன்னு சொல்வார். கருணாநிதிக்கிட்ட, ஜெயலலிதா வழக்கை தள்ளுபடி பண்றேன்னு சொல்லுவார். அவருக்கு நியாய தர்மமெல்லாம் கிடையாது… சுயநலம் மட்டும்தான். “
“என்னடா…. இப்படி சொல்ற ? ” என்று வியப்பாகக் கேட்டான் ரத்னவேல்.
“மச்சான்… நான் வழக்கறிஞர்கள் மத்தியில இருக்கிற பேச்சைத்தான் சொன்னேன். நானா எதுவும் சொல்லலை. சென்னை உயர்நீதிமன்றத்தையே தன்னோட கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளணும்னு முயற்சி பண்ணார். வழக்கறிஞர்களோட போராட்டத்தால அது வெற்றி பெறலை.
இப்போ, நீதிபதிகளாகணும்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்ட 12 பேரின் பட்டியலையும் திருப்பி அனுப்பிட்டார். இதுக்கு காரணம் வழக்கறிஞர்களின் போராட்டம். ஆனா, மதுரையில், நீதிபதியாகணும்னு வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் சுந்தர் ஆகியோர் ஏராளமா பணம் செலவு பண்ணியிருக்காங்க. தங்களோட பெயர் அடங்கிய பட்டியல் திரும்ப வந்ததால, அவர்களெல்லாம் கடுமையான கோபத்துல இருக்காங்க.
பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பப் படலைன்னா, பல உண்மைகளை வெளியே சொல்லுவோம். அதுக்கான ஆதாரங்கள் எங்ககிட்ட இருக்குன்னு மிரட்டிக்கிட்டு இருக்காங்களாம்”
“அப்போ நீதிபதி சதாசிவம், லோக்பால் தலைவராகறது, அவ்வளவு எளிது இல்லன்னு சொல்லு ” என்றான் வடிவேல்.
“நீதிபதி சதாசிவம், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஆளுன்றது, பிஜேபிக்கு நல்லாவே தெரியும். அதனால, முதன் முறையா உருவாகப் போற லோக் பால் அமைப்புக்கு அவர் தலைவராகக் கூடாதுன்றதுல, உறுதியா இருக்காங்க. பிஜேபியும், சதாசிவத்தை கடுமையா எதிர்க்கும். இதுக்கு நடுவுல, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு க்ரூப்பும், சதாசிவத்துக்கு எதிராக களமிறங்கியிருக்கு.
இந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்கத்தான், சதாசிவம், நல்ல நீதிபதி மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த மாதிரி தீர்ப்புகளை வழங்கினார். என்ன காரணத்துக்காக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதுன்றதுல சந்தேகம் இல்லை. ஆனா, அதுக்குப் பின்னாடி இருக்கிற அரசியலையும் நாம கவனிக்கனும். “
“சரி பாப்போம்… முருகன், சாந்தன், பேரறிவாளர் மூணு பேரோட தூக்கை ரத்து செய்ததோட, அவர்கள் மூணு பேரையும் முன் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு, குற்றவியல் சட்டத்தின் கீழ் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தலாம் னு சொல்லப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு இப்படித்தான் ரியாக்ட் பண்ணும்னு நெனைச்சாங்களா ?” என்றான் வடிவேல்.
“ஜெயலலிதா இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுப்பாங்கன்னு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவமும் சரி, மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி சுத்தமா எதிர்ப்பார்க்கல.
காங்கிரஸ் தலைவர்களுக்கு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணும்னு கூட தெரியலை. அதிர்ச்சியில உறைந்து போய் இருந்தாங்க. அந்த நேரத்துல ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்துல பேசும்போது, இந்த நாட்டின் பிரதமருக்கே நியாயம் கிடைக்கலன்னு பேசுன பிறகுதான் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோசம் வர ஆரம்பிச்சது. அதுக்கப்புறம், ஞானதேசிகன், நாராயணசாமி, ஜிகே.வாசன் னு போட்டி போட்டுக்கிட்டு, தமிழக அரசை கண்டிச்சு பேச ஆரம்பிச்சாங்க.
மத்திய அரசு அவசர அவசரமா ஆலோசனை நடத்தி, மறு நாளே, உச்சநீதிமன்றத்துல இதை எதிர்த்து மனு தாக்கல் பண்ணி, தடை உத்தரவு வாங்கினாங்க. “
“ஜெயலலிதாவோட ரியாக்சன் என்ன ? ” என்றான் பீமராஜன்.
“ஜெயலலிதா எதிர்ப்பார்க்காத ரியாக்சன், பத்திரிக்கையாளர்கள் கிட்ட இருந்து. தமிழ் பத்திரிக்கைகள், தவிர்த்து மற்ற தேசிய ஊடகங்களு அனைத்தும், ஜெயலலிதாவோட இந்த முடிவை கடுமையா எதிர்த்து விமர்சனம் பண்ணியது ஜெயலலிதாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு. இது தேர்தல் நேரமா மட்டும் இல்லாம இருந்தா இந்நேரம் நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தேசிய ஊடகங்கள் மேல பாய்ந்திருக்கும்.
ஆனாலும், இந்த எழுவர் விடுதலை தொடர்பாக ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிட்டாங்க ஜெயலலிதா. ஒரு பக்கம், காங்கிரஸ் அநாதையா ஆக்கப்பட்டது. இன்னொரு பக்கம் பிஜேபி அணி பலவீனமானது. தமிழக பிஜேபி ஜெயலலிதாவோட விடுதலை முடிவை வரவேற்குது, ஆனா, தேசிய தலைவர்கள் எதிர்க்கிறாங்க.
எல்லா விஷயங்களிலும் வாயைத் திறந்து கருத்து சொல்லும் மோடி, இந்த விஷயத்துல வாயே திறக்கலை. ஜெயலலிதாவோட படம வைரியான திமுக தற்போது தனித்து விடப்பட்டு, என்ன செய்யறதுன்னு தெரியாம முழிக்குது”
“சரி.. கேப்டன் என்ன பண்றார் ? ” என்றான் ரத்னவேல்.
“மச்சான் கேப்டன் டெல்லி விசிட்ல இருந்து ஆரம்பி டா” என்றான் ரத்னவேல்.
“அதுல என்னடா இருக்கு. கேப்டன்தான், மக்களோட குறைகளை எடுத்துச் சொல்றதுக்காக டெல்லி போனேன்னு சொன்னாரே… ” என்று கிண்டலாக சிரித்தான் தமிழ்.
“விளையாடாதடா….. என்ன மேட்டர்னு சொல்லு” என்று அவனை கடிந்து கொண்டான் வடிவேல்.
“கேப்டனோட டெல்லி பயணம், கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு முன்னாடியே திட்டமிடப்பட்டிருக்கு. மூன்று மாசத்துக்கு முன்னாடி, பிரதமரோட அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்காங்க. ஆனா, பிரதமர் அலுவலகத்துல அதை கண்டுக்கல”
அப்புறமா ஜி.கே. வாசன் முயற்சி பண்ணித்தான் இந்த அப்பாயின்ட்மென்டை வாங்கித் தந்திருக்காரு. இப்போ கேப்டன் டெல்லி போனதோட உண்மையான காரணம், பிஜேபியை மிரட்றதுக்காகத்தான்”
“எப்படி சொல்ற… இதை வைச்சு பிஜேபியை எப்படி மிரட்ட முடியும். அவங்களுக்கு என்ன பிரச்சினை ? ” என்றான் வடிவேல்.
“என்னடா… அரசியல் அரிச்சுவடி தெரியாதவனா இருக்கற ? சமீபத்தில் மோடி சென்னை வந்துட்டுப் போன போது, கேப்டன் கிட்ட, ஒரு முறை மோடியை சந்திச்சிடுங்கன்னு கெஞ்சி பாத்தாங்க. அவரு ரொம்பவும் முறுக்கிக்கிட்டே இருந்ததும், மோடி சொன்னதன் அடிப்படையில, தேமுதிகவை பிஜேபி தலைமை உதாசீனப்படுத்த தொடங்கிட்டாங்க.
திமுக ஒரு பக்கம் கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு. பிஜேபி ஒரு பக்கம் கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு. இதனால, ரொம்ப தெனாவட்டா திரிஞ்சிக்கிட்டு இருந்த கேப்டனுக்கு திடீர்னு என்ன பண்றதுன்னு தெரியலை. சரி இந்த நேரத்துல பிரதமரை சந்திச்சா, பிஜேபி நம்பளை பாத்து பம்முவாங்க. அப்படியே பிஜேபி தலைவர்களையும் டெல்லியில சந்திச்சுட்டு, அமெரிக்காவுல மைக்கேல் சாக்ஸன் கூப்டாக, சப்பான்ல சாக்கி சான் கூப்டாக ன்னு சீன் போடலாம்னு பாத்தாங்க.
ஆனா, பிஜேபி தலைவர்கள் கண்டுக்கவேயில்ல. இதனால கேப்டன், தமிழக மக்களின் பிரச்சினைகள் பத்தி விவாதிக்கப் போனதா சொல்லி, பிரதமரை பாத்தாரு”
“ஏம்ப்பா… இதைத்தானே கேப்டன் கட்சியோட ஏழு எம்.எல்.ஏக்கள் செய்தாங்க. அவங்களும் தொகுதி மக்களின் பிரச்சினையைப் பேசத்தானே ஜெயலலிதாவை பாத்தாங்க… அதுக்கு ஏன் கேப்டன் கோபப்பட்டாரு ?” என்றான் ரத்னவேல். அனைவரும் சிரித்தனர்.
“என்னதான்யா சொல்றாரு கேப்டன்.. கடைசியா எங்கதான் போகப்போறாரு ? ” என்றான் வடிவேல்.
“மச்சான். கேப்டனும் அவர் மனைவியும் நம்ப மிகப் பெரிய ராஜதந்திரின்னு நெனச்சிக்கிட்டு இருக்காங்க. பயங்கரமான ப்ளான் போட்டு அரசியல் காய் நகர்த்தகல்கள் பண்றோம் னு நெனைச்சிக்கிட்டு இருக்காங்க. இவங்களோட நடவடிக்கையால, தேசிய கட்சிகள் உள்ளிட்ட பெரிய கட்சிகள் கடுமையான எரிச்சலடைஞ்சு, ஓவராப் பண்றாங்க. இவங்களை கழட்டி விட்டுடலாம்னு முடிவெடுத்துட்டாங்க.
அது மட்டுமில்லாம ஜெயலலிதாவோட முடிவு மற்ற அணிகளை பலவீனமாக்கவும், எதுக்காக கேப்டனை புடிச்சி தொங்ணும்னு பிஜேபியிலயே முடிவெடுத்துட்டாங்க”
“இப்போ கேப்டன் என்னதான் முடிவுல இருக்காரு ? “
“தற்போது சிங்கப்பூர் போயிருக்காரு. காங்கிரஸ் கூட சேர்வது தற்போது தற்கொலைக்கு சமமானது ன்றதால, பிஜேபி பக்கம் போலாமான்ற முடிவுல இருக்காரு. இந்த நிலையில, பாட்டாளி மக்கள் கட்சி பிஜேபி அணியில இருக்கறதும், கேப்டன் அந்தப் பக்கம் போறதுக்கு பெரிய முட்டுக்கட்டையா இருக்கு”
“அதுல என்னடா முட்டுக்கட்டை ? “
“பா.ம.க ஏற்கனவே அறிவிச்சச 10 தொகுதிகளை மாற்ற முடியாது. அது தவிரவும், அனைத்து சமுதாய கூட்டமைப்புக்கு மேலும் 4 தொகுதிகள் வேணும்னு கேக்கறாங்க. இது பிஜேபி தலைமைக்கு உடன்பாடா இல்ல. அதனால, இப்போ பாமகவை கழட்டி விட்டுட்டு, தேமுதிகவை மட்டும் உள்ள இழுக்கலாமான்னு நினைக்கிறாங்க.
மேலும், தேமுதிக கடந்த தேர்தல்களில் வலுவாக வாக்குகள் பெற்ற தொகுதிகள் வட தமிழகத்துல இருக்கு. அதனால விஜயகாந்த் பாமக வைத்திருக்கும் பல தொகுதிகளைக் கேட்பார். இது பெரும் சிக்கலில் முடியும் ன்றதை பிஜேபி புரிஞ்சுதான், பாமகவை கழட்டி விடலாம்னு நினைக்கிறாங்க”
“பாமக இந்த தேர்தலிலும் தோத்துட்டா கட்சியே இருக்காதே… என்ன தைரியத்துல இப்படிப் பண்றாங்க ?”
“என்ன தைரியத்துல பண்றாங்கன்றதுதான் யாருக்கும் புரியலை. பிஜேபி அணியில இருந்து கழட்டி விடப்படப் போறது தெரிஞ்சு, முதல் கட்டமா, அதிமுக பக்கம் லேசா தூது விட்டுப் பாத்திருக்காரு மருத்துவர். இதை தெரிஞ்சுக்கிட்டுதான், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர், வேல்முருகன் அவசர அவசரமா போய் முதல்வரை சந்திச்சார். இது பாமக அந்த அணியில் இடம் பெறுவதை தவிர்த்துடும். பாமகவுக்கு இக்கட்டான நிலைமைதான். “
“திமுக மாநாடு பத்தி சொல்லுப்பா ” என்றார் கணேசன்.
“கொஞ்சம் பழைய செய்திதான் அண்ணே. இருந்தாலும் சொல்றேன். திமுக மாநாடு, தங்களுக்கு உண்மையில் செல்வாக்கு இருக்கா இல்லையான்றதை தங்களுக்குத் தாங்களே நிரூபிச்சிக்கவும், விஜயகாந்த்துக்கு நாங்கதான் பெரிய கட்சின்றதை உணர்த்தவும்தான் இந்த மாநாடு.
வழக்கமாகவே திமுக மாநாடுகள் நிதி வசூல் பண்றதுக்காகத்தான் நடக்கும். இந்த முறையும் அதே மாதிரி நிதி வசூல்தான் நடந்திருக்கு. 106 கோடியை தேர்தல் நிதியா கொடுத்திருக்காங்க. இந்த நிதியில் வழக்கறிஞர்கள் அணி மட்டும் 88 லட்சமும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஏழரை கோடியும் தந்திருக்காங்க. இவங்களுக்கெல்லாம் இந்த நிதி எங்க இருந்து வந்துச்சு, எப்படி வசூல் பண்ணாங்க, ரசீது இருக்கான்னு ஒரே ஒரு முறை வருமான வரித்துறை விசாரணை நடத்தினா, அத்தனை பேரோடு ஊழல் முகத்திரையும் கிழிக்கப்படும்.
ஆனா, மத்தியில் ஆளும், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட, அத்தனை கட்சிகளும், இதே உத்தியை கடைபிடிக்கிறதால, யாருமே இந்த விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறதில்ல. சிபிஎம் கூட இந்த காரணத்துனாலதான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கணும்னு கோரிக்கை வைச்சாங்க”
“சரி… திமுக மாநாட்டுல வேற என்ன சிறப்பு செய்திகள் னு சொல்லு”
“மாநாட்டுக்கான செலவுகள் ஏறக்குறைய 50 கோடியைத் தாண்டிடுச்சு. இதில் பெரும் தொகையை ஆ.ராசா ஏத்துக்கிட்டதா சொல்றாங்க. ஆ.ராசாவுக்கு தேர்தலில் டிக்கெட் நிச்சயம் என்றாலும், 2ஜி விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், கட்சி தனக்கு பின்னால் இருக்க வேண்டும் னு நினைக்கிறார். அதனால எல்லா செலவுகளையும் பின்னால் இருந்து கவனிச்சிக்கிட்டார். ஆனா, செலவுகளை செய்தது, கே.என். நேரு போல, ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுச்சு.
மாநாடு நடக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, திருச்சியில் உள்ள அத்தனை லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், என்று அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. பல ஓட்டல் உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே, ஒரு லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள், கார்கள், வேன்கள் என்று அத்தனையும் வாடகைக்கு மொத்தமாக எடுக்கப்பட்டன.
ஆனா இவ்வளவு செலவு பண்ணாலும், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையில வேஸ்டாப் போச்சேன்ற வருத்தத்துல இருக்காங்க உடன்பிறப்புகள்.
ஜெயலலிதா, வேட்பாளர்களை அறிவிச்சி, வேக வேகமா பணிகளைத் துவக்கிய நிலையில், திமுக இன்னும் வேலைகளையே ஆரம்பிக்காம, விஜயகாந்தின் கடைக்கண் பார்வை கிட்டாதான்னு ஏங்கிக்கிட்டு இருக்காங்க.”
“சரி.. திமுகவுல அண்ணன் தம்பி பஞ்சாயத்து முடிஞ்சுதா ? “
“அந்த பஞ்சாயத்து இப்போதைக்கு முடியுமா ? திமுக அறக்கட்டளையில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை நிர்வகிக்கும் இரண்டு அறக்கட்டளைகளிலும், ஸ்டாலினோட ஆதரவாளர்கள் நிரப்பப்பட்டிருக்காங்க. கல்யாணசுந்தரம், மா.சுப்ரமணியம் எல்லாம், ஸ்டாலின் ஆட்கள். இது அழகிரியை கடுமையா கோபப்படுத்தியிருக்கு. இந்த அறக்கட்டளையில் தன்னோட ஆதரவாளர்களை நியமிக்கணும் ன்றதுதான் அவரோட முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கையை திமுக ஏற்காவிட்டால், அறக்கட்டளையில் நடந்த ஊழல்களை விரைவில் வெளியிட இருக்கார்”
“ஜெயலலிதா பிரச்சாரத்துல இறங்கிட்டாங்க. அதிமுக பிரச்சார அணியெல்லாம் தயாராயிட்டுதா ?” என்றான் பீமராஜன்.
“இந்தத் தேர்தலில், தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் நடத்த சரத்குமாரின் மனைவி ராதிகா முன் வந்திருக்காங்க. ஆனா அதுக்கு ஈடா 50 கோடி தரணும்னு சரத்குமார் கோரிக்கை வைச்சிருக்கார்”
“எதுக்குய்யா 50 கோடி ? “
“ராதிகா அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், சன் டிவியில் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் நிறுத்தி விடுவார்கள். அதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். அதை ஈடு செய்யும் விதமாக, பணம் தரணும்னு சொல்லியிருக்காங்க. ஜெயலலிதா, ஜெயா டிவியில ப்ரைம் டைம்ல ஸ்லாட் தர்றேன்னு சொன்னதுக்கு, சன் டிவி அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடையாது. அதனால, பணமாத் தந்தா உதவியா இருக்கும்னு சொன்னதுக்கு, ஜெயலலிதா பாக்கலாம்னு சொல்லியிருக்காங்க”
“சரி… அந்த டேப் விவகாரம் என்னப்பா அப்படியே அமுங்கிப் போச்சு ? எந்த விசாரணையும் நடக்கலையா ? “
“டேப் விவகாரம் அமுங்கிப் போகலை. சிபிஐ பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருக்காங்க. விரைவில் இந்த விவகாரத்தில் ஜாபர் சேட் சம்மன் அனுப்பி அழைக்கப்படுவார். இதோடு, சிபிஐயால் வீடு சோதனையிடப்பட்ட காமராஜும் இந்த முறை சிக்கலில் மாட்டுவார்னு சொல்றாங்க. தொடர்ந்து இந்த உரையாலை பதிவு செய்தது சிபிஐ அதிகாரிகள்னு நக்கீரன்ல செய்தி வெளியிட்டு வர்றார்.
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கூட, “இது சம்பந்தமா சி.பி.ஐ., ஐ.பி., ரா என புலனாய்வு நிறுவனங்களும் உளவு நிறுவனங்களும் அவசர மீட்டிங் போட்டு பேசியிருக்குது. பதிவு செய்த பேச்சுகள் லீக் ஆகுதுன்னா அது உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாயிடும். இதை நாம சீரியஸா கவனிக்கணும். 2ஜி டேப் எப்படி ரிலீஸ் ஆனதுன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்லி அது சம்பந்தமா டெக்னிக்கலா இறங்குனப்ப, சி.பி.ஐ.யி லிருந்துதான் இது லீக் ஆகியிருக்குங்கிறது உறுதியாகியிருக்குது. தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக இது லீக் ஆகியிருந்தா, இதன் மூலம் லாபமடையக்கூடிய அரசியல் தலைமைகளுக்கும் சி.பி.ஐ.யில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவங்களுக்கும் தொடர்புண்டா, பதவியில் இருக்கும்போது எத்தனை முறை சந்திப்பு நடந்திருக்குது, இப்ப பொறுப்பில் இருப்பவங்களுக்கும் இதில் தொடர்புஉண்டா இதையெல்லாம் நாம சீரியஸா கவனிக்கணும்னு அந்த மீட்டிங்குகளில் பேசப்பட்டிருக்குது.”
இப்படி ஒரு செய்தியை காமராஜ் வெளியிட்டிருந்தார்”
“ஏம்ப்பா…. ஐபி, ரா அதிகாரிகள் மீட்டிங்ல நடக்கிறதெல்லாம் கரெக்டா தெரியிற காமராஜுக்கு அவர் வீட்டுக்கு சிபிஐ ரெய்ட் வர்றது மட்டும் எப்படிப்பா தெரியாம போச்சு ? ” என்றார் கணேசன்.
“அண்ணே.. என்னண்ணே நீங்க. நக்கீரன்ல வர்றதையெல்லாம் போய் சீரியசா எடுத்துக்கிட்டு”
“சரி.. ஜாபர் சேட் என்னப்பா பண்றார் ? ” என்றார் கணேசன் தொடர்ந்து
“அண்ணே… 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் ஜாபர் சேட் உளவுத்துறையில் இருந்தது வரை, தமிழகத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்ட அனைவருமே, கையில் ரெண்டு மூணு செல்போன் வைச்சிருப்பாங்க. போன்ல பேசறதுக்கே பயந்தாங்.
ஆனா, இப்போ, காலச்சக்கரத்தோட சுழற்சி ஜாபர் சேட்டை போனைக் கண்டாலே அலற வைக்குது. மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் தன்னை கண்காணிக்கிது என்று, ஜாபர் பயந்து போய் இருக்கார். போனை தொடறதே இல்லை.
அவர் குடும்பத்தினர் அவரோடு பேசுவதே, பொது தொலைபேசியிலன்னா பாத்துக்கங்களேன்.. “
“என்னப்பா எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே.. ? “
“அண்ணே… தீதும் நன்றும், பிறர் தர வாரா. சிபிஐ விசாரணையில இருந்து தப்பிக்கிறதுக்கு, நாராயணசாமியோட மகன், வாசுவை அணுகியிருக்கார். வாசு மூலமா, நாராயணசாமியை அணுகி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவிடம் ஜாபர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கு. “சரி பாக்கலாம்” னு சிபிஐ இயக்குநர் சொன்ன பதில், ஜாபரை மகிழ்ச்சியடைய வைச்சிருக்கு. ஆனா, சிபிஐ இயக்குநர், எந்த விசாரணையிலும் குறுக்கிடுவது இல்லைன்ற விஷயம் ஜாபருக்கு தெரியாது. இந்த விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கினால், ஜாபர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கு. அவருக்கு தோளோடு தோள் நின்று உதவும், காமராஜும், முதன் முறையா கம்பிக்குள் வெளிச்சத்தைப் பார்ப்பார். சிபிஐ அதிகாரிகள்தான் வெளியான உரையாடலை பதிவு பண்ணாங்கன்னு எதை வச்சு எழுதுனீங்கன்னு, காமராஜிடம் விசாரணை நடத்தப்படும்”
“நீ சொன்னது சரிதாம்பா… தீதும் நன்றும், பிறர் தர வாரா” என்றார் கணேசன்.
“சிபிஐக்கு நியமிக்கப்பட்ட டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் ரிலீவ் ஆயிட்டாங்களா ? ” என்றான் வடிவேல்.
“அர்ச்சனா ராமசுந்தரத்தை விடுவிப்பதில்லைன்ற முடிவில் தமிழக அரசு இருக்கு. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அவரை விடுவிப்பதில்லைன்ற முடிவில் இருக்காங்க”
“அடுத்த டிஜிபி யாருப்பா ? ராமானுஜத்தை திமுக டிஜிபியா தொடர நிச்சயமா விட மாட்டாங்க”
“அநேகமா, தற்போது உளவுத்துறை டிஜிபியா இருக்கும் அஷோக் குமாருக்கு இதற்கான வாய்ப்புகள் இருப்பதா சொல்லப்படுது. மாநில அரசு, முத்துக்கருப்பனை டிஜிபியா நியமிச்சாக் கூட, தேர்தல் ஆணையம், அவரை ஏத்துக்காது. அதனால, தற்போது முதல்வரின் நற்பார்வையில் இருக்கும் அஷோக் குமாருக்கு அந்த வாய்ப்பு அமையலாம்”
“சரி நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
“அண்ணே…. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளா உள்ள, நீதிபதிகள் தனபாலன், கர்ணன், கே.கே.சசீதரன் மற்றும் சி.டி.செல்வம், ஆகியோர் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கு”
“சி.டி.செல்வம்தானே சவுக்கு தளத்தை முடக்க கடுமையா முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கார் ? “
“ஆமாம்ணே… அவரேதான். டேப் வெளியானதுனால கடுமையான பாதிப்படைஞ்ச திமுக தலைமை, சவுக்கு தளத்தை முடக்கியே தீரணும்னு சி.டி.செல்வத்துக்கு உத்தரவு போட்டிருக்காங்க. அதனால, அவரும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒண்ணும் முடியலை. மாநில காவல்துறை, ஒத்துழைக்கலன்னு அவர் கடுமையா எரிச்சலடைஞ்சாரு. மத்திய புலயாய்வுத் துறையான, சிபிஐ விசாரணைக்கு சவுக்கு தளத்தை உட்படுத்தணும்னு நாளை உத்தரவு பிறப்பிக்க இருக்காரு. மேலும் இவர் உத்தரவின்படி, ஆச்சிமுத்து சங்கர் என்பவர் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் க்ரைம் காவல்துறை பதிவு பண்ணியிருக்காங்க. எப்படியாவது, அவரை உள்ள தள்ளணும்னு, செல்வம் குறியா இருக்கார்.”
“சவுக்கு தளம் சிபிஐ அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையேப்பா… ? “
“உங்களுக்குத் தெரியுது. செல்வத்துக்கு தெரியலையே… என்ன பண்றது… ? அவர் மேல கடுமையான புகார்கள் குவிஞ்சுக்கிட்டு இருக்கு. ஏற்கனவே, அவர் திமுக வழக்கறிஞர்களுக்கு சாதகமா செய்லபட்றாருன்னு பல்வேறு புகார்கள் போயிருக்கு.
சமீபத்துல, திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு இவர் முன்னாடி வந்தப்போ, அரசு வழக்கறிஞரை வாதாடவே விடாம, எடுத்த எடுப்பிலேயே விலக்களிச்சு உத்தரவு போட்டாரு
கருணாநிதியின் வழக்கை சி.டி.செல்வம் விசாரித்தததை எதிர்த்து, வழக்கறிஞர் சத்தியசந்திரன் என்பவர் அளித்த புகார் மனு
நான் ஏற்கனவே, கேசி.பழனிச்சாமியோட மகன், கேசிபி சிவராமன் மீது இருந்த நில அபகரிப்புப் புகாரில், நிபந்தனை இல்லாம ஜாமீன் வழங்கினார், அந்த வழக்கின் எப்ஐஆரை ரத்து பண்ண சி.டி.செல்வம் முயற்சி எடுத்தார் என்பதை சொன்னேன் ஞாபகம் இருக்கா ? “
“ஆமாம்பா.. நீதிபதி வீட்டில் சென்று கே.சி.பழனிச்சாமி சந்திச்சார்ன்ற விவகாரத்தையும் சொன்ன”
“அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யணும்னு, கேசிபி.சிவராமன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசில் அரசு தலைமை வழக்கறிஞரா இருந்த பி.எஸ்.ராமன் கேசிபி சிவராமனுக்காக வாதாடினாரு. வாதாடினாருன்னு சொல்றதை விட வாயை திறந்தாருன்னு சொல்லணும். அவர் வாயை திறந்ததும், சி,டி.செல்வம், குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும், தடை விதித்து உத்தரவு போட்டார். வழக்கில் சம்பந்தப்பட்டவங்கள்லாம் வாயடைச்சு போயிட்டாங்க.
எப்படா சி.டி.செல்வம் இந்த நீதிமன்றத்தை விட்டுப் போவாருன்னு, தவமா தவமிருக்கிறாங்க”
“எப்படியோ நல்லது நடந்தா சரி.. ” என்று கணேசன் எழுந்தார். அவர் எழுந்ததும் சபை கலைந்தது.