புதனன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்புவதற்காகவும், நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கவுமே, தேர்தல் பிரச்சாரத்தை விரைவாகத் தொடங்குகிறார் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். “கேள்வி :- தேர்தல் கமிஷன் இன்னும் தேர்தலுக்கான தேதியைக் கூட அறிவிக்க வில்லை; ஆனால் அதிமுக சார்பில், ஜெயலலிதா அவசர அவசரமாக நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதன் காரணம் என்ன ?
ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பாரா?” என்று கிராமத்தில் கூறுவார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டுமென்பதில் நீதிபதி கண்டிப்பாக இருக்கிறார். இந்த நிலையில் வழக்கில் ஆஜராகாமல் தப்பித்துக் கொள்ளப் புதுப் புதுக் காரணங்களை ஜெயலலிதா தேடுகிறார். இதற்காகத்தான் தமிழகச் சட்டப்பேரவையை அவசர அவசரமாகக் கூட்டி அதையே காரண மாகக் காட்டி சில நாட்களைத் தள்ளினார். தற்போது நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக வைத்து ஒரு மாதத்திற்கு மேல் சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்து, அதை நீதிமன்றத்திலே தெரிவித்து, வழக்கில் ஆஜராகாமல் இருக்கப் புது வழி தேடிக் கொண்டிருக்கிறார். வேட்பாளர் அறிவிப்பு – தேர்தல் சுற்றுப் பயண அறிவிப்பு போன்றவை அவசரமாக வெளிவரக் காரணம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குதான் !”
கருணாநிதியின் இந்த அறிக்கை, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மிக மிக நியாயமானது. ஆளுங்கட்சியினர் செய்யும் தவறுகளை விமர்சனம் செய்வதும், இடித்துரைப்பதும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது கடமையும் கூட. ஆனால், இப்படி இடித்துரைக்க கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது ?
கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா, பூச்சி மருந்து ஊழல் தொடர்பான முடிவுகளில் இவ்வாறு தெரிவிக்கிறார்
“இந்தச் செயல்வகை எல்லாம் முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் வாய்மொழி உத்தரவுகளினால் விளைந்ததாகும். மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் இந்த ஆப்பரேட்டர்கள் (கம்பெனிக்காரர்கள்) முதலில் கவரப்பட்டு மீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிவிடப்பட்டு, அவர்கள் “வழிக்குக் கொண்டுவரப்படும் வரை” நிர்பந்தப் படுத்தப் பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று. இந்தக் கட்டாயக் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், தங்கள் கதி சர்வநாசம்தான் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.”
இது பூச்சி மருந்து ஊழல் மட்டுமே. இது போல பல்வேறு ஊழல்களை நீதிபதி சர்க்காரியா விசாரித்து, கருணாநிதி ஊழல் புரிந்திருக்கிறார் என்று ஒரு விரிவான அறிக்கையை அளித்தார்.
இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது, திமுகவினர் அடைந்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. திமுக ஆட்சியின்போது அராஜகங்களில் ஈடுபட்டதால் கடுமையான கோபத்தில் இருந்த காவல்துறையினர், திமுகவினரை, சிறைக்குள் கடுமையாக தாக்கினர். அப்போது சிறையில் இருந்த நக்சலைட்டுகளை மரியாதையோடு நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், திமுகவினரை குறிவைத்து அடித்தார்கள். கடுமையான அடக்குமுறை காரணமாகவும், விழுந்த அடிகள் காரமணாகவும், திமுக தொண்டர் சிட்டிபாபு இறந்தே போனார். சிட்டிபாபு மீது விழுந்த அடிகள், மு.க.ஸ்டாலினுக்கு விழுந்திருக்க வேண்டிய அடிகள். தலைவர் மகன் மீது அடி விழுகிறதே என்று அந்த அடிகளை தான் வாங்கியதாலேயே சிட்டிபாபு இறந்தார்.
அப்படிப்பட்ட கொடுமைகளை திமுக மீது இழைத்த, இந்திரா காந்தியோடு அடுத்த தேர்தலிலேயே கருணாநிதி கூட்டணி வைப்பதற்கான காரணம் என்ன ? சர்க்காரியா அறிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஒரே நோக்கம். பெற்ற மகன் அடி வாங்கியே இறக்கும் சூழலில் இருந்தும், அதற்கு காரணமான அரசியல் கட்சித் தலைவரோடு, கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்று பேசியவர்தான் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதிதான் இன்று ஜெயலலிதா ஊழல் பேர்விழி என்கிறார். ஜெயலலிதா தான் இழைத்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிப்பார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது. ஆனால், கருணாநிதி இழைத்த தவறுகளுக்கு என்ன தண்டனை ? ஊழலைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஜாபர் டேப்புகள், கருணாநிதியின் வண்டவாளத்தை அம்பலமாக்குகிறது. சரத் குமார் மற்றும் ஜாபர் சேட், ஜாபர் சேட் மற்றும் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் இடையே நடந்த உரையாடல்கள் ஏற்கனவே சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கனிமொழி மற்றும் ஜாபர் சேட் இடையே நடைபெற்ற உரையாடல்களை தற்போது பார்ப்போம். முதல் உரையாடல் நடைபெற்ற நாள் 16 பிப்ரவரி 2011. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரம். திமுக எதிர்ப்பு அலை, தமிழகத்தில் பரவலாக வீசத் தொடங்கிய நேரம். குறிப்பாக, ஈழத் தமிழர் விவகாரத்திலும், மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரத்திலும், திமுக அரசின் துரோகங்கள், ஊடகங்கள் மற்றும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நேரம். 2ஜி விவகாரம் புயலாக வீசத் தொடங்கியிருந்தது.
ஆ.ராசா கைதாகி பத்து நாட்களே ஆகியிருக்கிறது. கலைஞர் டிவி சிபிஐ வளையத்தில் வந்து விட்டது என்ற விவகாரம், கனிமொழிக்கும், திமுகவுக்கும் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அதை திசைத் திருப்புவதற்காக, தமிழக மீனவர்களைக் காப்பாற்ற, இலங்கைத் தூதரகம் முற்றுகை என்ற நாடகத்தை, கருணாநிதியும், அவர் மகள் கனிமொழியும் அரங்கேற்றுகின்றனர். இலங்கைத் தூதரகத்தை கனிமொழி முற்றுகை இடுகிறாராம், கருணாநிதி அரசின் காவல்துறை அவரை கைது செய்கிறதாம். கைது செய்து, பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் வைத்திருக்கிறார்கள்.
அப்படி வைத்திருக்கும்போதுதான், கனிமொழி, ஜாபர் சேட்டோடு உரையாடுகிறார்.
உரையாடலின் ஒலி இணைப்பு
கனிமொழி : ஹாங் சொல்லுங்க.
ஜாபர் சேட் : சொன்னா என்னை உதைப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன். (சிரிக்கிறார்)
கனிமொழி : பரவாயில்ல சொல்லுங்க.
ஜாபர் சேட் : ரெண்டாவது முறையா கஸ்டடியில் இருக்க ஆளுக்கிட்ட நான் பேசிக்கிட்டு இருக்கேன்.
கனிமொழி : நானாவது உங்கள் கஸ்டடியில் இருக்கிறேன்..
ஜாபர் சேட் : மேடம் நான் அந்த அறிக்கையை அப்படியே படிக்கிறேன். சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள். நான் தலைவரிடம் சொன்னேன். அவர் சரி என்றார். நீங்கள் சரியாக இருக்கிறதா? என்று சொல்லுங்கள்.
கனிமொழி : 10.02.2011 அன்று நான் விடுத்த அறிக்கையில் 2007-2008-ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009-ஆம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும், சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டு விட்டது என்றும், அதற்கு வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும், இந்த பரிவர்த்தனைகள் அத்தனையும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டது என்றும் அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டது என்றும், தெரிவித்திருந்தேன். இதற்குப் பிறகும், இந்தக் கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்த விதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போ வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளை சரிபார்த்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. சரத்குமார், நிர்வாக இயக்குநர், கலைஞர் தொலைக்காட்சி.
கனிமொழி : நாமாக முன் வந்து தெரிவித்தது போல ஆகி விடும். நல்லது.
ஜாபர் சேட் : ஆமாம் மேடம்.
கனிமொழி : மீசையில மண் ஒட்டலன்னா கூட,
ஜாபர் சேட் : பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்றால், இவர்கள்தான் வெளிப்படையாக இருக்கிறார்களே.. என்று நினைப்பார்கள்.
கனிமொழி : நாமும் அவர்களை அதற்கு தயார்ப்படுத்துகிறோம் அல்லவா ?
ஜாபர் சேட் : ஆமாம் மேடம். ஒரு பத்து பர்சென்ட் பேர் இது எல்லாம் செட்டப்புன்னு சொல்லுவான். அதை எப்படியும் சொல்லத்தான் போறான். அட்லீஸ்ட் 70 பர்சென்ட் பேரு கலைஞர் டிவி சர்ப்ரைஸ்ட் னு சொல்றதுக்கு பதிலா, நாம ஏற்கனவே திறந்த புத்தகம்னு சொல்றோம்.. வாசிச்சிட்டு போங்கன்னு சொல்றோம். இப்போ படிச்சுட்டு போங்க நாங்க லைப்ரரின்னு சொல்றோம்.
கனிமொழி : ஆமாம்… ஆமாம்…
ஜாபர் சேட் : நான் தலைவர்கிட்ட இந்த ஐடியாவை சொன்னேன். இது முந்தையதை விட பெட்டர் இல்லையா மேடம்…
கனிமொழி : நிச்சயமாக அவர் என்னமோ தமாஷாக பேசிக்கொண்டு இருக்கிறார். இப்போது வருவார்கள்.. அப்போது வருவார்கள். யாருக்கும் தெரியாது.. என்று அவர் கூறுகிறார்.
ஜாபர் சேட் : அவர்கள் (சிபிஐ) முன்னதாகவே சொல்லி விட்டுத்தான் வருவார்கள் மேடம்.
கனிமொழி : ஆமாம்.. அதுவும் சரிதான். நம்ப ஆளுங்களா இருப்பாங்க வேற..
ஜாபர் சேட் : நாளைக்கு எல்லாரும் போட்ருவான்.. சிபிஐ விசாரணைக்கு சரத் குமார் தயாருன்னு…
கனிமொழி : எந்த சரத்துன்னு கரெக்டா போடச் சொல்லுங்க.
ஜாபர் சேட் : நான் என்ன கீழ நாடார் பேரவைன்னு போட்றவா மேடம்.. கீழ இவர் ஊனமுற்ற சரத் குமார்னு சொல்லட்டா மேடம்.
கனிமொழி : ஊனமுற்ற இல்ல… மாற்றுத் திறனாளி..
ஜாபர் சேட் : சாரி மேடம். எங்க ஊர்ல எல்லாம் மேடம்.. எங்க டிபார்ட்மென்டுல ஒரே பேர்ல ரெண்டு பேர் இருந்தானுங்கன்னா அவனுங்களுக்கெல்லாம் அடை மொழி கொடுத்துடுவோம். ஃபார் எக்சாம்பிள் மாலைக்கண் சுரேஷ், ப்ளேடு ரவி அப்படி. அது மாதிரி இவனுக்கு ஒத்தக் கால் சரத்னு குடுத்துடுவோம்.
கனிமொழி : நீங்க கஸ்டடியில எடுத்தாவது அவனை காப்பாத்துவீங்கன்னு நெனைச்சா அதுவும் இல்லாம போயிடுச்சு.
ஜாபர் சேட் : மேடம் யு ஆர் தி ஒன்லி கார்டியன் ஏஞ்சல் டு ஹிம். நான் சிறு அளவில் உதவி செய்கிறேன். அவ்வளவுதான்.
கனிமொழி : பாவம் ஆனா. நீங்க வேற..
ஜாபர் சேட் : நான்தானே மேடம்.
கனிமொழி : நீங்களும் அவரும்… ரெண்டு பேரும் சேத்து. இங்க பி.எஸ் ஸ்கூல்ல வச்சிருக்காங்க.
ஜாபர் சேட் : அது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா.. அல்லது வேறு இடம் ஏற்பாடு செய்யச் சொல்லவா ?
கனிமொழி : இல்ல இல்ல. இட்ஸ் ஓகே. மரமெல்லாம் இருக்கு.
ஜாபர் சேட் : லன்ச் எப்படி மேடம்?
கனிமொழி : அவங்க ஏற்பாடு செய்வாங்கள்ல..
ஜாபர் சேட் : அது ஓகே மேடம். உங்களுக்கு ?
கனிமொழி : போதும்… போதும். இதுவே போதும். நான் மட்டும் தனியாக சாப்பிட்டால் ஒரு மாதிரியாக இருக்கும் அல்லவா ?
ஜாபர் சேட் : இந்த கல்யாண மண்டபத்துக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா ஆர்கனைஸ் பண்ணச் சொல்லிடலாம்.
கனிமொழி : நீங்கதான் ஏற்பாடு செய்வீங்களா.. இவங்க பண்ண மாட்டாங்களா?
ஜாபர் சேட் : அவங்கன்னா யாரு டி.எம்.கே.லயா?
கனிமொழி : ஆமாம்.
ஜாபர் சேட் : நோ… நோ… கஸ்டடியில இருக்கும்போது, லன்ச் வழங்குவது அரசின் கடமை. உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம். இது குறித்து நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு அரசு வழங்கும் தொகை வெறும் பத்து ரூபாய்.
கனிமொழி : எங்கயுமே சாப்பாடு வாங்கிக் கொடுக்க முடியாதே…
ஜாபர் சேட் : ஆமாம். அதனாலதான் எங்க ஆளுங்க இது மாதிரி நெறய்ய அரெஸ்ட் இருக்கும்போது, வெளியில போய் வாங்கித் தர்றாங்க. சரவண பவனை மொட்டையடிச்சிடுவானுங்க.
கனிமொழி : அது நல்ல விஷயம்தான்.
ஜாபர் சேட் : ஆமாம். எங்க ஆளுங்க போயி நீ குடுக்குறியா… இல்லை உனக்கு சாப்பாடு தரவான்னு கேப்பானுங்க.
கனிமொழி : பத்து ரூபா ரொம்ப அநியாயம் இல்ல?
ஜாபர் சேட் : ஆமாம் மேடம். நீங்க ஏதாவது பண்ணுங்க…
கனிமொழி : பேசாம நீங்களே ஒரு கிச்சன் ஆரம்பிச்சிடுங்களேன்..
ஜாபர் சேட் : மேடம் என்னோட ஆலோசனையும் அதுதான். காவல்துறையினருக்கும், கைதாகுபவர்களுக்கும் சேர்த்து. ஆனால், டி.ஜி.பி. ஒத்துக் கொள்ள மாட்டேன்னுட்டாங்க.
கனிமொழி : ஆமாம் அது நல்ல யோசனை.
ஜாபர் சேட் : நான் டி.ஜி. ஆகும்போது பண்ணிட்றேன் மேடம். நீங்க மறக்காம என்னை டி.ஜி.பி. ஆக்குங்க.
கனிமொழி : நீங்கதான் என்னோட எதிர்காலத்தை சொல்றேன்னு இருக்கீங்களே…
ஜாபர் சேட் : நான் சொல்லிட்டேன் மேடம்.. என்னது. மன்னர் வழி ஆட்சிதான்.
கனிமொழி : அதெல்லாம் வேண்டாம். நான் வீட்டுக்கு வந்ததும் அதுல பேசறேன்.
ஜாபர் சேட் : ஓகே மேடம்.
உரையாடலை பார்த்து விட்டீர்களா ? கலைஞர் டிவி சினியுக் நிறுவனத்திடமிருந்து வாங்கிய 200 கோடி ரூபாய் சாதாரண பணப்பரிவர்த்தனை அது லஞ்சம் அல்ல என்பதுதான், ஆனால், ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக நடக்க வேண்டிய ஜாபர் சேட், எப்படி ஒரு ப்ரோக்கர் போல, பேசுகிறார் பாருங்கள். மத்திய புலனாய்வுத் துறை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு விசாரணையை திசைத்திருப்ப, எப்படி ஒரு அறிக்கையை ஜாபர் சேட் தயாரித்து, அந்த அறிக்கைக்கு கருணாநிதியிடம் ஒப்புதல் வாங்கி விட்டு, கருணாநிதியின் மகளிடம் எப்படி ஒப்புதல் பெறுகிறார் பாருங்கள். சொல்லியதோடு, பொதுமக்களை முட்டாளாக்க இந்த அறிக்கை உதவும் என்பதை எப்படி பெருமையோடு சொல்கிறார் பாருங்கள். சிபிஐ வருவதென்றால் முன்னதாகவே சொல்லி விட்டுத்தான் வருவார்கள் என்றும் கூறுகிறார். கனிமொழி வருபவர்கள், நம்ப ஆட்களாகத்தான் இருப்பார்கள் என்கிறார். சிபிஐ விசாரணைக்கு கலைஞர் டிவி தயார் என்று ஊடகங்கள் எழுதும், இதன் மூலமாக, பொதுமக்களின் கருத்தை திசைத்திருப்பலாம் என்றும் கூறுகிறார் ஜாபர் சேட்.
மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகியிருக்கும் ஒருவரிடம் ஒரு காவல்துறை அதிகாரி பேசுவது எத்தகைய சட்ட விரோதம் ? எத்தகைய விதி மீறல் ? அதைத் தொடர்ந்து என்னை டிஜிபி ஆக்குங்கள் என்று எப்படி வெட்கமே இல்லாமல், ஜாபர் சேட் கேட்கிறார் பாருங்கள் !!!! கனிமொழி தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மட்டும் சிறப்பு உணவை ஏற்பாட செய்கிறேன் என்கிறார் ஜாபர் சேட். எத்தகைய நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது புரிகிறதா ? எத்தகைய அயோக்கியர்கள் இவர்கள்…. ?
மன்னர் வழி ஆட்சி என்பதால், அடுத்த முதல்வர் கனிமொழி என்றும் எப்படி சொல்கிறார் பாருங்கள். இத்தகைய ஆபாகமான அதிகாரிகளைத்தான் கருணாநிதி நம்பியிருந்தார். இத்தகைய அயோக்கியத்தனமான அதிகாரி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட போதுதான், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தார் கருணாநிதி. 16.02.2011 அன்று, கலைஞர் டிவி சார்பாக ஜாபர் சேட் படித்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கிறார் கனிமொழி. இரண்டே நாட்களில், கலைஞர் டிவி அலுவலகத்தை சோதனையிடுகிறது சிபிஐ.
சோதனையிட்ட அன்று கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து என்ன பேசுகிறார் என்று கேளுங்கள்.
சோதனை நடந்ததே எனக்குத் தெரியாது. நான் அலுவலகத்துக்கு போகவேயில்லை. கலைஞர் டிவியின் நிலைபாடு என்ன என்பது, சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேல் விளக்கம் வேண்டியதில்லை.
ஒரு நாளுக்கு முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பாக சொல்லி விட்டுத்தான் வருவார்கள், அறிக்கையில் எந்த சரத்குமார் என்று தெளிவாகப் போடுங்கள், பொதுமக்களை தயார் செய்வதற்காக இந்த அறிக்கை தயார் செய்கிறோம் என்று ஜாபர் சேட்டோடு விவாதித்த கனிமொழி, சோதனைகள் நடந்த அன்று எப்படிப் பேசுகிறார் பாருங்கள்.
அடுத்த உரையாடல், இதை விட மோசமானது.
உரையாடலில் இணைப்பு
ஜாபர் சேட் மற்றும் கனிமொழி இடையே அடுத்த உரையாடல். 23 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற உரையாடல்.
ஜாபர் சேட் : முரசொலி ஆபீஸ்ல…. அங்க கேட்டேன். என்னய்யா… மக்கள்லாம் என்ன பேசிக்கிறாங்கன்னு கேட்டேன்.
கனிமொழி : ம்ம்.
ஜாபர் சேட் : என்னன்ணே எல்லாம் அதான் பேசறாங்க. தலைவர் தங்கமான தலைவரு.. அவரைப்போயி இவ்வளவு கெட்ட பேர் வாங்கிக் கொடுத்துட்டாங்க. அவர் பண்ண சாதனையெல்லாம் இப்போ இதாயிடுச்சு இப்போ.
கனிமொழி : ம்ம்.
ஜாபர் சேட் : என்னய்யா இப்படி முட்டாள்த்தனமா பண்ணியிருக்கான். நான் சொன்னேன்யா அப்ப இருந்தே.. ஏலம் உட்டுட்டுப் போ… ஏலம் உட்டுட்டுப் போன்னு. அவன் கேக்கல.
கனிமொழி : ம்ம். எப்படி. ஹவ் தே வொர்க் இல்ல..
ஜாபர் சேட் : ஆமாம் மேடம்.. தட்ஸ் வெரி வெரி… நான் அதிர்ந்து விட்டேன்.
கனிமொழி : ஏற்கனவே.. இட் வாஸ் கொயிட்.. ஸ்கூல் எஜுகேஷன் மினிஸ்டரா இருந்தப்போ. ஒன்… திங் ஆப் செலிபிரேஷன் வில் பி தேர் நோ…
ஜாபர் சேட் : எங்க.. இருந்தப்போ… திருச்சியில.
கனிமொழி : ஆங்… நோ.. நோ… எதுவும் சொல்ல மாட்டாங்க… பட்.
ஜாபர் சேட் : மூட் தெரியுமில்ல மேடம்.
கனிமொழி : திஸ் ஈஸ்… எப்படி இப்படி வொர்க் பண்றாங்க.. நாம எதுக்கெடுத்தாலும் பிராமின்ஸை திட்டறோம்… இவங்க எப்படி வேலை பாக்கறாங்க.
ஜாபர் சேட் : நாம அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு அவங்களை வீழ்த்துவோம். நேத்து திரும்ப டிவி மேட்டர் வந்தது.
கனிமொழி : ம்ம்.
ஜாபர் சேட் : திரும்ப. தலைவர் என்ன சொன்னார்னா யாருமே என்கிட்ட இதை சொல்லலையேன்னு சொன்னார்.
கனிமொழி : அய்யய்யோ…
ஜாபர் சேட் : தீக்கதிர்ல ஒரு மோசமான கட்டுரை வந்திருக்கிறதே. அதுல இந்த வோல்டாஸ்… கீல்டாஸ் எல்லாம் இருக்கு. இதெல்லாம் எனக்கு யாருமே சொல்லல. எல்லாத்தையும் மறைச்சிட்டீங்கன்னு சொன்னாரு. இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கு. அதையெல்லாம் சரி பண்ணியாச்சு. எல்லாம் சரியாயிடுச்சு. என்னென்ன பண்ணனுமோ பண்ணியாச்சு.
கனிமொழி : அது அவங்களுடையதே இல்லல்ல… வேற யாருடையதோ அல்லவா அது.
ஜாபர் சேட் : எது மேடம்?
கனிமொழி : அதுதான் சட்டப்படி அது அவங்களுடையதே இல்லை அல்லவா (வோல்டாஸ் கட்டிடம் டாட்டாவுக்கு சொந்தமானது அல்ல என்கிறார்)
ஜாபர் சேட் : சட்டப்படி இல்லைதான்.. ஆனால் ட்ரில் மற்றும்.. அது இல்லாமல் தீக்கதிரில் விரிவாக எழுதியிருக்கிறார்களே… ட்ரில் பற்றி
கனிமொழி : ட்ரில் என்றால் என்ன ?
ஜாபர் சேட் : டாட்டா ரீட்டெயில் இன்ஃப்ரா ஸ்டரக்சர்
கனிமொழி : ஓ.. ஓ.கே.
ஜாபர் சேட் : வோல்டாஸ் அதன் துணை நிறுவனம் அல்லவா ?
கனிமொழி : ஆமாம்…
ஜாபர் சேட் : இந்த நீரா ராடியாவை வாயிலேயே சுடணும்.
கனிமொழி : இன்னைக்கு யாரோ கேட்டாங்க. அவரது இடத்தில் யாராக இருந்தாலும். அவர்கள்தான் அதற்கு வழி வகை செய்து தந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கும். அந்த இடத்தில் இருந்த இவருக்கு தொலைபேசித் துறை ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது..
ஜாபர் சேட் : அதைத்தான் நானும் சொல்கிறேன்..
கனிமொழி : நம்மையெல்லாம் அலர்ட் செய்திருக்க வேண்டுமல்லவா ?
ஜாபர் சேட் : எனக்கு என்னவென்றால், நீங்கள் அவரோடு பேசுகிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் உங்களுக்கு உடனடியாக சொல்லியிருப்பேன். அது இல்லாமல் அவருக்குத் தெரியும்.
கனிமொழி : அப்படியா.. ?
ஜாபர் சேட் : ஆமாம். அவர்கள் சொல்கிறார்கள். நான் உங்களுக்கு சொன்னேன் அல்லவா ? அவரது தொலைத்தொடர்புத் துறை தலைவர் உளறுகிறார் என்று?
கனிமொழி : ம்ம்..
ஜாபர் சேட் : அவருடைய அலுவல்ரீதியான தொலைத் தொடர்பை டேப் செய்திருக்கிறார்கள்.
கனிமொழி : வெகுளியாக இருப்பதற்கான விலையையும் கொடுக்கத்தானே வேண்டும்.
ஜாபர் சேட் : அவர் வெகுளிதான். அதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரைப் போன்ற நண்பர்கள் இருக்கும் போது. ஒரே ஒரு அறிக்கையில் மொத்த விஷயத்தையும் திசை திருப்பி விட்டார்.
கனிமொழி : அது இயல்புதானே… அவர் அரசியல்வாதி அல்லவா ? எல்லாவற்றிற்கும் பிறகு. அது புத்திசாலித்தனமான அறிக்கையும் கூட. நான் சில சேரிகள் அல்லது கிராமத்திற்கு… அல்லது ஒரு சேரியில் சென்று, இது பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க வேண்டும்.
ஜாபர் சேட் : அது ஏதோ உரம் அல்லது யூரியா என்று சொல்வார்கள்.
கனிமொழி : என்ன பண்ணுவது.. ஏதாவது பண்ணி இதை சரி பண்ண வேண்டும் அல்லவா? அவருக்கும் தெரியும்.
ஜாபர் சேட் : தலைவரின் பிரச்சினை என்னவென்றால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தெரியவே தெரியாது என்கிறார்.
கனிமொழி : எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு.. குறிப்பாக சொல்ல வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஜாபர் சேட் : மேடம்.. நாம் தலைவரிடம் சொன்னோம். குறிப்பாக அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக ஒரு பெரிய சோர்சிடமிருந்து…. நாம் அதில் 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம். இன்று, தீக்கதிர் பற்றி கேட்கும்போது… வேகமாக கேள்வி கேட்டார். எங்கிருந்து பணம் வருகிறது… யாரிடமிருந்து என்ன கான்ட்ராக்ட் என்று கேட்டார். நான் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சொன்னேன். இல்லை… இல்லை… நீ இது பற்றி சொல்லவேயில்லை என்று சொன்னார். நான் சொன்னேன், அது பற்றிச் சொல்லியிருக்கிறேன். இப்போது அவை அனைத்தையும் விற்று விட்டோம் என்று சொன்னேன். அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னார். நான் என்ன பண்றது?
கனிமொழி : டிவியைப் பற்றியும் அவர் அதேதான் சொல்கிறார் அல்லவா?
ஜாபர் சேட் : ஆமாம். டிவியை பற்றியும் யாரும் எனக்குச் சொல்லவில்லை. உடனே டிவியை க்ளோஸ் பண்ணுங்கள் என்கிறார்.
கனிமொழி : அச்சச்சோ… எப்படிப் பண்றது? டெலிவிஷனையா?
ஜாபர் சேட் : ஆமாம்…
கனிமொழி : அதுவும் நல்ல யோசனைதான்.
ஜாபர் சேட் : நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.. அதுவாகவே போய்விடும்.
கனிமொழி : அதற்கு அருகில்தான் இருக்கிறோம். டிவியை மூடி விட்டால், நான் பணமில்லாமல் இருக்க வேண்டியது இருக்காது அல்லவா ?
ஜாபர் சேட் : நான் இன்று மாலை டெல்லி வருகிறேன்.
கனிமொழி : அப்போது உங்களை நாளை பார்க்கிறேன். முடிஞ்சா… ஏதாவது… நீங்களும் ஒரு அளவுக்கு மேல சொல்ல முடியாது.
ஜாபர் சேட் : நான் என்ன மேடம்.. நான் சொன்னேன். இதுல சில பி.ஆர். வொர்க் பாக்கலாம். சி.ஏ.ஜி. அறிக்கையிலேயே நமக்கு சாதகமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை ஹைலைட் பண்ணணும். நீங்க பண்ண வேண்டியதுதானே என்றார். இப்பதான் நமக்கு ஆள் கிடைச்சிருக்கான். டெல்லியில ஆள் கிடைக்கிறதே கஷ்டம். டெல்லியில நமக்கு எஸ்டாபிளிஷ்மென்டே கிடையாது. இப்பதான் ஒருத்தன் கிடைச்சிருக்கான். ஸ்டார்ட் பண்றோம் மெதுவா.
கனிமொழி : எனக்குத் தெரியல… நான் வந்து இறங்குன உடனே… ஆல். செல்வ கணபதியிலேர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சில பேர் வந்து. எப்படி நீங்க வந்து கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஆட்சேபணை இல்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டாங்க.
ஜாபர் சேட் : நீங்க அத பாஸ்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம் இல்ல.
கனிமொழி : என்னங்க நீங்க. ஒன்னும் பேசாம சும்மா போறது கூட பிரச்சினையா போகுதுங்க. வெறும் வதந்தி கூட பிரச்சினையாகுது.
ஜாபர் சேட் : ஒரு நிமிஷம் மேடம். வேறு தொலைபேசியில் பேசுகிறார். கொஞ்ச நேரம் கழிச்சு பேசச் சொல்லுங்க. எஸ் மேடம்.
கனிமொழி : என்ன பண்றதுன்னே தெரியலை.
ஜாபர் சேட் : யாராவது ஒருத்தராவது சொல்ல வேண்டும் மேடம். இல்லையென்றால்,இதெல்லாம் பெரிய பிரச்சினையாகும்.
கனிமொழி : என்ன விஷயம் என்றால், அவர்கள் கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சுஷ்மா சுவராஜ் ஒரு புத்திசாலி. அவர் பிரதமரிடம் மென்மையாக நடந்து கொள்வார். அவரே, தேவைப்பட்டால் பிரதமரையே ஜே.பி.சி. சம்மன் செய்யச் சொல்வோம் என்று கூறுகிறார்.
ஜாபர் சேட் : ம்ம்.
கனிமொழி : இப்போ காங்கிரஸ் உறுதியாக இருக்கிறார்கள். உறுதியாக அது வேண்டாம் என்று. எப்படி இப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி விட்டார்கள். இறுதியாக எல்லார் பெயரும் இதில் இழுக்கப்படும். பிரதமரையே அழைத்து விட்டால் யாரை அழைக்க மாட்டார்கள். காங்கிரஸில் நாராயணனும் அப்படித்தான் சொல்றாங்க. தேர்தலை வைத்துக் கொண்டு எப்படீங்க?
ஜாபர் சேட் : நேத்து தலைவரிடம் அதுதானே சொன்னோம். இதைவிட தெளிவாக தலைவரிடம் எப்படி சொல்ல முடியும்? டெல்லியில் என்ன நடந்தாலும் சரி, உடனடியாக சி.எம்.மிடம் அதைச் சொல்ல வேண்டும். உங்களுக்கு சொல்லத் தயக்கமாக இருந்தால், வேறு யார் மூலமாவது, அதைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நாராயணசாமி மூலமாக சொல்ல வேண்டும்.
கனிமொழி : செல்வகணபதி மூலமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஜாபர் சேட் : அது நல்ல யோசனை அப்படியாவது செய்யுங்கள்.
கனிமொழி : அவரு கொஞ்சம் கச கசன்னு பேசிட்றாரு.. நானே கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். சேலத்துக்கு போனப்போ, என்னை ராங் ரூட்லயெல்லாம் இழுத்துட்டு போயி ஒரு மாதிரி பண்ணிட்டாங்க. நான் தலைவர்கிட்ட இதைப் பத்தியெல்லாம் சொல்லல. ஆனா, இப்போ அவர் அப்பாகிட்ட பேசும்போது, எல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்டாரு.
ஜாபர் சேட் : ஓ… செல்வகணபதி எதைப் பற்றிப் பேசவும் தயங்க மாட்டார்.
கனிமொழி : நான் சற்று கவனமாக இருக்க வேண்டும். சரி நாளை உங்களை பார்க்கும் போது பேசுகிறேன்.
ஜாபர் சேட் : நானும் எம்.பி.யாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பதினொன்றரைக்கெல்லாம் உங்களுக்கு லீவ் விட்டு விடுகிறார்கள்.
கனிமொழி : ஜாலி இல்ல… உங்களுக்குத்தான் நேரம் காலமேயில்ல.
உரையாடலை பார்த்து விட்டீர்களா… ? இந்த உரையாடல் நடைபெற்றது 23 நவம்பர் 2010ல். அப்போது ஆ.ராசா கைதாகவில்லை.
ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடு, ஏலம் விடு என்று நான் சொன்னேன். ராசா கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னதாகக் கூறுகிறார் ஜாபர் சேட். தீக்கதிரில் வோல்டாஸ் பற்றி ஒரு கட்டுரை வந்திருப்பதாக கூறுகிறார் ஜாபர் சேட்.
இது பற்றி 28 பிப்ரவரி 2011 அன்று, ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து விடுங்கள். பிறகு தொடர்ந்து விவாதிப்போம். “சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல் வணிகர் தரகர் நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார். இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பது தான். இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது. பின்னர், மேற்படி நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் ராசாத்தியின் பினாமியாக கருதப்படும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, 350 கோடி ரூபாய் மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு அடிமாட்டு விலையான 25 கோடி ரூபாய்க்கு இதனை விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றி தான் ராசாத்தியும், ரத்தினமும், ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார். சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார். அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த எஸ்டேட் கனிமொழி எஸ்டேட் என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம் 16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, செளத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்! அவரே தான் இவர்! சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன். சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம். விண்ட்ஸர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் கனிமொழி எஸ்டேட் என்று தான் அழைக்கிறார்கள். யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா? இப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா ?”
படித்து விட்டீர்களா ? இப்போது தொடர்ந்து பார்ப்போம். சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடம்தான் வோல்டாஸ் கட்டிடம். இந்த கட்டிடம் 17 பேருக்கு சொந்தமானது. 17 பேருக்கு கூட்டாக சொந்தமான இந்தக் கட்டிடத்தை டாடா குழுமத்தைச் சேர்ந்த வோல்டாஸ் நிறுவனம் 1975ம் ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்த லீஸ் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, அந்த 17 பேர் லீஸை புதுப்பிக்க மறுத்த காரணத்தால், டாடா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. சம்பந்தப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் போகாமலேயே வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், திடீரென்று, 2008ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டில், இந்த 17 பேரும், சரவணன் என்பவருக்கு அதிகார பத்திரம் வழங்குகின்றனர்.
இந்த சரவணன், இந்த வோல்டாஸ் நிறுவனத்தை, 10.09.2008 மற்றும் 27.04.2009 ஆகிய நாட்களில் சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்து தருகிறார். இந்த சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் 1992ம் ஆண்டு, டாக்டர் சண்முகநாதன் என்பவரால் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனம், சில ஆண்டுகளுக்குப் பிறகு செயலிழந்து எவ்விதமான பரிவர்த்தனையும் இன்றி முடங்கிக் கிடந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் பெயரில்தான் வோல்டாஸ் நிறுவனத்தின் கட்டிடம் பதிவு செய்யப்படுகிறது.
உதகமண்டலத்தில் உள்ள, 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட்டும், இதே சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்யப்படுகிறது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். “சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, செளத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார். அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒரே முகவரி தான்! அவரே தான் இவர்! சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன். சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்.”
நீரா ராடியா – ராசாத்தி அம்மாள் உரையாடலின் இணைப்பு
இப்போது ஜாபர் சேட் கனிமொழி உரையாடலுக்கு வருவோம். வோல்டாஸ் விவகாரம் பற்றி தனக்குத் தெரியாது என்று கருணாநிதி கோபப்பட்டதாக சொல்லும் ஜாபர் சேட், தனக்குத் தெரியாமல் அனைத்தையும் மறைத்து விட்டதாக கருணாநிதி கூறுவதாக கூறுகிறார். ஆனால், எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக கூறுகிறார். அதற்கு கனிமொழி, சட்டப்படி வோல்டாஸ் கட்டிடம் டாடாவுக்கு சொந்தமானதே அல்ல என்று கூறுகிறார்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ? சட்டப்படி அந்தக் கட்டிடம் வோல்டாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாக இல்லாமல் இருந்தால், இவர்களுக்குத் தர வேண்டுமா ? யார் அப்பன் வீட்டு சொத்து அது ? எத்தனை பேராசை இவர்களுக்குப் பார்த்தீர்களா ?
அடுத்த பகுதி மிக முக்கியமானது. “மேடம்.. நாம் தலைவரிடம் சொன்னோம். குறிப்பாக அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக ஒரு பெரிய சோர்சிடமிருந்து…. நாம் அதில் 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம். இன்று, தீக்கதிர் பற்றி கேட்கும்போது… வேகமாக கேள்வி கேட்டார். எங்கிருந்து பணம் வருகிறது… யாரிடமிருந்து என்ன கான்ட்ராக்ட் என்று கேட்டார். நான் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சொன்னேன். இல்லை… இல்லை… நீ இது பற்றி சொல்லவேயில்லை என்று சொன்னார். நான் சொன்னேன், அது பற்றிச் சொல்லியிருக்கிறேன். இப்போது அவை அனைத்தையும் விற்று விட்டோம் என்று சொன்னேன். அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னார். நான் என்ன பண்றது ?”
அந்த பவர் ப்ளான்ட் தொடர்பாக பெரிய சோர்சிடமிருந்து 50 சதவிகிதம் பெற்றுக் கொண்டோம் என்று கூறுகிறார் ஜாபர் சேட். இவர் பெற்றுக் கொண்டோம் என்று கூறுவதே, ஏதோ, இவர் கருணாநிதியின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே பேசுகிறார். அந்த பெரிய சோர்ஸ் யார் என்பது தீவிரமாக விசாரணை செய்யப்பட வேண்டிய விவகாரம். அடுத்ததாக ஜாபர் சேட்டிடம் கருணாநிதி, என்ன காண்ட்ராக்ட், எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாகவும், அனைத்தையும் அவரிடம் விளக்கிச் சொல்லி விட்டதாகவும் கூறுகிறார். பிறகு அனைத்தையும் விற்று விட்டதாகவும் கூறுகிறார். இது அனைத்தும் கருணாநிதிக்கு தெரியும் என்றும் கூறுகிறார்.
எவ்வளவு இலகுவாக, ஊழல் பேரங்களை விவாதிக்கிறார்கள் பார்த்தீர்களா ? டாடா நிறுவனம் இந்தியாவின் ஒரு திமிங்கல நிறுவனம். அந்த நிறுவனம் 300 கோடி ரூபாய் பெருமானமுள்ள ஒரு நிலத்தை கருணாநிதி குடும்பத்துக்கு சும்மா தூக்கிக் கொடுத்து விடாது. அப்படிக் கொடுத்தால், 3000 கோடிக்கு ஆதாயம் பெற்று விடுவார்கள். அப்படி டாடா நிறுவனம் பெற்ற ஆதாயங்களின் ஒன்றுதான், தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு, டாடா சப்ளை செய்த லோ போர்ட் பேருந்துகள். தமிழக அரசு பேருந்துகள் கொள்முதல் செய்தபோது, அதில் குறைந்த விலைக்கு பேருந்துகளை வழங்க முன் வந்தது, அசோக் லைலேண்ட் நிறுவனமே. ஆனால், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அடுத்த இடத்தில் இருந்த டாடா நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தது. இந்த விவகாரம், நீரா ராடியா டேப்புகளில் விவாதிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இணைப்பு
1997ம் ஆண்டு திமுக அரசால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு 2001ம் ஆண்டு, அப்போதைய ஜெயலலிதா அரசால், தூத்துக்குடியில் 10,000 ஏக்கர் பரப்பளவில் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்க திட்டமிடப்பட்டது. 2002ம் ஆண்டு, அப்பகுதி மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டத்தை கைவிட்டார் ஜெயலலிதா. 2007ம் ஆண்டில், சுற்றுச் சூழலை கடுமையாக பாதிக்கும் இந்தத் திட்டத்தை கருணாநிதி மீண்டும் தொடங்கினார் இணைப்பு. தூத்துக்குடி பகுதியின் மீண்டும் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இத்திட்டத்தை கருணாநிதியும் கைவிட்டார்.
இந்த நெருக்கத்தின் அடிப்படையிலேதான், ரத்தன் டாடா, ஆ.ராசாவை வானளாவப் புகழ்ந்து, தன் கைப்பட கடிதம் எழுதுகிறார். டாடா நிறுவனத்துக்கு 2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் (Dual license) ஒதுக்கீடு செய்த வகையில் மட்டும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22,535.6 கோடி என்கிறது மதிப்பீடு.
ஆனால், வேதனை அளிக்கும் வகையில், 2ஜி வழக்கை விசாரிக்கும் சிபிஐ, டாடா நிறுவனத்தையோ, வோல்டாஸ் சொத்து குறித்தோ, போலிப் பாதிரி ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் குறித்தோ எந்த விசாரணையும் நடத்தவில்லை. தனக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை ஜப்பானை சேர்ந்த டோக்கோமோ நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்த ரத்தன் டாட்டா எவ்விதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை.
இப்படிப்பட்ட முடைநாற்றமெடுக்கும் ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி ஊழலைப் பற்றிப் பேசலாமா ?
இதையெல்லாம் சவுக்கு “சொன்னா ஒதப்பீங்க”
குறிப்பு 1
இந்த உரையாடல் வெளியானதும் அதிமுக அரசு என்ன செய்திருக்க வேண்டும் ? உடனடியாக ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து, டாடா நிறுவனத்தோடு, திமுக அரசு செய்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஜாபர் சேட் மீது புதிய வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், உரையாடல்கள் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்தும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நியாயமாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்பது மட்டுமல்ல….. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு இது எத்தகைய ஆதாயத்தை அளிக்கும் ? ஆனால், எதுவுமே செய்யாமல் இருப்பதால்தான், ஜெயலலிதா அரசு முட்டாள் அரசு.
குறிப்பு 2
சவுக்கு தளத்தை முடக்குவதன் மூலம், எப்படியாவது திமுகவை காப்பாற்றி விட வேண்டும் என்று, தனக்கு விசுவாசமான, மாநகர உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவின் துணையோடு, புதிய வழக்கை பதிவு செய்து, காவல்துறையை கைது வேட்டையில் ஈடுபட அனுப்பி வைத்திருக்கும் நீதி நாயகர் சி.டி.செல்வத்துக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.
“திமுகவுக்கு நான் ஹெல்ப் பண்றேனோ இல்லையோ…. நீங்க நல்லா பண்றீங்க சார்…”
சரி புடின் நெல்சன் சொல்வது போல் பார்பனர்கள் ஆதிக்கசக்திகளின் அழிவு வேலைகள் தான் இவை எல்லாம். கருணாநிதியும் அவர் குடும்ப வாரிசுகளும் ஊழல் புரியாதவர்கள் என்று இவர் கருதினால் இந்த பார்பனர்கள் அரசியல் அதிகாரம் உள்ள கருணாநிதியையே இப்படி சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறார்கள் என்றால் சாதாரண மக்களை, பட்டியல் இன மக்களை எப்படி எல்லாம் சூழ்ச்சி செய்து படிக்கவிடாமல்,வேலை பெறவிடாமல்,பொருளாதார முன்னேற்றம் வரவிடமுடியாமல் செய்வார்கள். ஏன் இந்த புடின் நெல்சன் இதற்காக குரல் கொடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடி நாட்டில் பார்பனர்கள் இருக்கவே கூடாது.இவர்கள் இருந்தால் பொய்,புரட்டு,சூழ்ச்சிகள் செய்து பட்டியல் இன மக்களை, பாமர, பூர்வகுடி மக்களை வஞ்சகமாக அழித்துவிடுவார்கள் என்று போராடலாமே? ஒரு இயக்கம் ஆரம்பித்து பார்பனர்களை நாட்டைவிட்டு விரட்டலாம்.
இது கற்பனையான ஒரு நாவலாசிரியரின் புனை கதை போன்ற உரையாடல் மாதிரி தான் தெரிகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி உரையாடல் பொய்யாக திரிக்கப்பட்டது என்று தீர்ப்பு வந்து உள்ளதே அது மாதிரி இது ஒரு சித்திரிக்கப்பட்ட பொய்யாக புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பது விரைவில் வெளி வரலாம் ஒரு பெரிய அரசியல் கட்சியை அதுவும் திராவிட கட்சியை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு [துக்ளக் சோ போன்றவர்கள் ] செய்து வரும் ஒரு மிக பெரிய சதி வலை ஆக கூட இருக்கலாம் அல்லவா.? மெய்பொருள் காண்பது அறிவு எல்லாமே ஊக செய்திகள் தான் போல தெரிகிறது