சவுக்கு தளத்தை முடக்க, சென்னை உயர்நீதிமைன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் பல்வேறு நபர்கள் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதும், அதன் விளைவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சி.டி.செல்வம் முன்பு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்ததும், சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்த வழக்கு, நீதிபதி சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தள வடிவமைப்பாளர் முருகைய்யன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், நீதிபதி சி.டி.செல்வம் குறித்தே, சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்திருப்பதால், சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று, தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மனு நிலுவையில் இருக்கையில் சி,டி.செல்வம் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
நான் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மாட்டேன் என்றும், தற்போது தீர்ப்பு தரப்போகிறேன் என்றும் கூறினார் சி.டி.செல்வம். முருகைய்யன் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இப்படி ஒரு மனு நிலுவையில் இருக்கையில், தீர்ப்பு வழங்குவது, முறையற்ற செயல், அது நீதிப் பிறழ்வாகும் என்று வாதிட்டார். அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத சி.டி.செல்வம், சவுக்கு தளத்தை, சென்னை மாநகர காவல்துறை பத்து நாட்களுக்குள், முடக்கியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டார். சவுக்கு தளத்தால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், இது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும், ஏற்கனவே ஐந்து வழக்கறிஞர்கள் புகார் அளித்திருப்பதாகவும் அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சவுக்கு தளம் நடத்தப்படும் நோக்கம் குறித்து, வாசகர்கள் நன்கு அறிவீர்கள். உங்களுக்கு மீண்டும் விளக்க வேண்டியதில்லை. நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும். முன்னை விட பெரிய வீச்சோடு இத்தளம் செயல்படும். இது உறுதி.
இத்தகைய நெருக்கடியான சூழலில், இத்தளம் தொடர்ந்து செயல்பட ஒரே காரணம், அன்பான உறவுகளான வாசகர்களின் தொடர்ந்த ஆதரவும் அன்பும் மட்டுமே. இந்த அன்புக்கு, சவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாகத்தான், இத்தளம் தொடர்ந்து நடத்தப்படும்.
இது நீதிக்கான போர். இதில் நாம் நிச்சயம் வெல்வோம். இறுதி வெற்றி நமதே….
மிஸ்டர் சி.டி.செல்வம்……
பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…..!!!!!!