கத்தரிக்காய் வீதிக்கு வந்தே விட்டது. அரசல் புரசலாக நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்களுக்குள் குசுகுசுப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் வெட்டவெளிக்கு வந்து விட்டது. இந்த விஷயத்தை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளவர், இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞரும், இந்திரா காந்தியின் தேர்தலை செல்லாதாக்கக் கோரிய வழக்கில் ராஜ் நாராயணனுக்காக வாதாடிய வழக்கறிஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சாந்தி பூஷண்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் பட்ட பிரமாண வாக்குமூலத்தில் சாந்தி பூஷண் 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை பட்டியலிட்டு அவர்களுள், 8 பேர் ஊழல் வாதிகள், 6 பேர் நேர்மையானவர்கள், 2 பேரைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார். சாந்தி பூஷண் ஊழல் வாதிகள் என்று நம்பும் எட்டு பேரின் பட்டியலையும் தனது பிரமாண பத்திரத்தோடு சீலிடப் பட்ட உறையில் இணைத்துள்ளார்.
அந்த 16 நீதிபதிகள்
1) நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா
2) நீதிபதி கே.என்.சிங்
3) நீதிபதி எம்.எஸ்.கணியா
4) நீதிபதி எல்.எம்.சர்மா
5) நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலைய்யா
6) நீதிபதி ஏ.எம்.அஹமாதி
7) நீதிபதி ஜே.எஸ்.வர்மா
8) நீதிபதி எம்.எம்.புன்ச்சி
9) நீதிபதி ஏ.எஸ் ஆனந்த்
10) நீதிபதி எஸ்.ப்பி.பரூச்சா
11) நீதிபதி பி.என்.கிர்ப்பால்
12) நீதிபதி ஜி.பி.பட்நாயக்
13) நீதிபதி ராஜேந்திர பாபு
14) நீதிபதி ஆர்.சி.லஹோதி
15) நீதிபதி வி.என்.காரே
16) நீதிபதி ஒய்.கே.சபர்வால்
இந்த 16ல் சாந்தி பூஷண் சொல்லும் ஊழல் நீதிபதிகள் யார் என்பது உச்ச நீதிமன்றம் சீலிடப்பட்ட உறையை பிரித்து படித்தால் தெரியும். தன்னுடைய மகனான பிரஷாந்த் பூஷண் மேல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியே சாந்தி பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதோடு, தனது மனுவையும், தனது மகன் மீதான மனுவையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு மூன்று நீதிபதிகள் அமர்ந்து விசாரிக்கக் கூடாது எனவும், மொத்த உச்சநீதிமன்றமும் அமர்ந்து விசாரிக்க வேண்டுமெனவும், சாந்தி பூஷண் கோரியுள்ளார்.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தொடக்கப் புள்ளி எது தெரியுமா ? பிரசாந்த் பூஷண் டெகல்கா வார இதழுக்கு கொடுத்த பேட்டி தான்.
அந்தப் பேட்டியில் தான் பிரசாந்த் பூஷண், நீதித் துறையில் ஊழல் பல்வேறு வடிவங்களில் உள்ளது. உதாரணத்துக்கு நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தும், அந்நிறுவனத்துக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார், என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
நீதிபதி கபாடியா
அதைத் தொடர்ந்து ஹரீஷ் சால்வே என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்தப் பேட்டியை கொண்டு வருகிறார். உச்ச நீதிமன்றம், அவரையே நீதிமன்றத்தின் நண்பனாக இருக்க கேட்டுக் கொண்டு (Amicus Curiae) அவர் பெயரிலேயே தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரசாந்த் பூஷண் மேல் எடுக்கிறது. இவ்வழக்கு வரும் போது பிரசாந்த் பூஷணுக்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தானாக முன் வந்து எடுக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரிதிலும் அரிதான நேர்வுகளிலேயே எடுக்க வேண்டும், இந்த நேர்வு அப்படிப் பட்ட ஒரு நேர்வு அல்ல என்று வாதாடினார். ஆனால், அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்கிறது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாகத் தான் சாந்தி பூஷண் தன்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்துள்ளார்.
தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா அப்படி என்ன தான் தவறு செய்து விட்டார் ?
பிரசாந்த் பூஷண் அவர் மீது அப்படி என்ன தவறான குற்றச் சாட்டை சுமத்தி விட்டார் ? அதைப் பற்றி விளக்கமாக பார்ப்போம். இந்தியாவின் தலைமை நீதிபதி கபாடியா உண்மையில் தவறு செய்தாரா ? நடந்தவைகளை அப்படியே சவுக்கு உங்கள் முன் வைக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் வேதாந்தா என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனம். சுரங்கம் தோண்டி, அதில் உள்ள தாமிரம் போன்ற உலோகங்களை எடுத்து விற்பனை செய்வதுதான் இந்நிறுவனத்தின் முக்கியப் பணி. இவ்வாறு சுரங்கத் தொழிலில் ஈடுபடுகையில், இந்தியாவின் இயற்கை வளங்களை அழித்து, மலைவாழ் பழங்குடியினரை வீதியில் நிறுத்தும் நிறுவனம் என்று இந்நிறுவனத்தின் மீது குற்றச் சாட்டுகள் உண்டு.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஒரு ஆண்டுக்கான, வரிக்குப் பிந்தைய லாபம் 1000 கோடி என்றால், இது எவ்வளவு பெரிய நிறுவனம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். (கருணாநிதி குடும்பத்தினர் எப்படி இதை விட்டு வைத்தனர் என்பது ஆச்சர்யம்).
இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரிஸ்ஸாவில் உள்ள ஒரு அலுமினியம் ப்ராஜெக்டை தனது துணை நிறுவனமான வேதாந்தா அலுமினா லிமிட்டெட் என்ற கம்பெனிக்கு மாறுதல் செய்கிறது. இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டவர் ஹரீஷ் சால்வே என்ற வழக்கறிஞர். இவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.
உச்ச நீதிமன்றம் 2002ம் ஆண்டில், சுற்றுச் சூழல் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்ககிறது. Centrally Empowered Committee மத்திய அதிகாரக் குழு. இந்தக் குழுவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் செயலர், வனத் துறையில் கூடுதல் இயக்குநர், வால்மீக் தாப்பர் என்ற ரந்தம்போர் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர், மற்றும் ஜிவாரைக்கா என்ற வனத்துறை தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாக போட்டு இந்தக் குழுவை நியமிக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அலுமினா ப்ராஜெக்டை இந்த மத்திய அதிகாரக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்ற நண்பன் ஹரீஷ் சால்வே கூறுகிறார். அதன் படி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு வழங்கிய தடையில்லா சான்று சரியா தவறா என்று ஆராய்ந்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை வழங்கும் படி, மத்திய அதிகாரக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. செப்டம்பர் 2005ல், இந்தக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.
அந்த அறிக்கையில் மத்திய அதிகாரக் குழு, ஸ்டெர்லைட் ப்ராஜெக்டின் இந்தத் திட்டம், வனம், வன விலங்குகள், நீர்நிலைகள், நீராதாரங்கள், சுற்றுச் சூழல், மற்றும் அரிதிலும் அரிதான மலைவாழ் மக்களையும், அவர்களை வாழ்வையும் சூறையாடி விடும் என்று அறிக்கை அளிக்கிறது. மேலும் அந்த அறிக்கையில், நியாம்கரி மலைகள் போன்ற சுற்றுச் சூழலுக்கு ஆதாரமான இடங்களில் இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் படக் கூடாது. தேசிய நலன் மற்றும் பொது நலன் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல் மிக மிக அவசரத் தன்மையோடு, இந்தத் திட்டத்திற்கு தடையில்லா சான்று அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மிகவும் அலட்சியமான முறையில் இந்தச் சான்று வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வை நடத்தியிருந்தால், சுற்றுச் சூழலுக்கும், வனத்துக்கும் எத்தகைய தீமையையும் அழிவையும் இத்திட்டம் ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து, தொடக்கத்திலேயே இத்திட்டத்தை கைவிட்டிருக்க முடியும்.
இது குறித்த விரிவான அறிக்கைய பரிசீலித்து, உச்ச நீதிமன்றம், இத்திட்டத்திற்கு 22.09.2004 அன்று வழங்கப் பட்ட தடையில்லா சான்றை ரத்து செய்து, இத்திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக தடை செய்யுமாறு மத்திய அதிகாரக் குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், சுற்றுச் சூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பே, இந்த திட்டத்திற்கான பணிகளை வேதாந்தா நிறுவனம் தொடங்கி விட்டது என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
26.10.2007 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தின் முன் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கை அப்போது விசாரித்தது, தற்போதைய தலைமை நீதிபதி கபாடியா அடங்கிய டிவிஷன் பென்ச். சஞ்சய் பாரிக் என்ற வழக்கறிஞர், இந்திய பழங்குடியின மக்கள் சார்பாக ஆஜராகிறார். ஆனால் மத்தியக் குழுவின் அறிக்கையையோ, சஞ்சய் பாரிக்கின் வாதத்தையோ கேட்க மறுத்த கபாடியா, எடுத்த எடுப்பில், வேதாந்தாவுக்கு எந்த விதிகளின் அடிப்படையில் தடையில்லா சான்றும், சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதியும் வழங்க வேண்டும் என்று விவாதிக்கிறார்.
விவாதித்து விட்டு, வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் சொல்வதையும், வேதாந்தா நிறுவனத்திற்கு சுரங்கம் தோண்ட அனுமதி கொடுத்த ஒரிஸ்ஸா மாநில அரசின் வழக்கறிஞர் சொல்வதையும் கேட்டு விட்டு, இந்த திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தையும் கேட்டு விட்டு, மலைவாழ் மக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை கேட்க மறுத்து நீதிமன்றத்தின் ஜுனியர் நண்பனாக நியமிக்கப் பட்டிருந்த வழக்கறிஞர் உதய் லலித் என்பவர் வாதத்தையும் கேட்டு விட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
23.11.2007 அன்று இவ்வழக்கின் தீர்ப்பை நீதியரசர் கபாடியா வழங்குகிறார். அத்தீர்ப்பில், இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா அலுமினா லிமிடெட் என்ற நிறுவனம் நார்வே நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல் ஆகிய குற்றங்களை புரிந்து தடை செய்யப் பட்டு உள்ளதால், வேதாந்தா அலுமினா லிமிடெட்டுக்கு இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்குவது முறையாக இருக்காது. அதே நேரத்தில் வேதாந்த அலுமினா லிமிடெட்டின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இத்திட்டத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தடையேதுமில்லை. !!!!!!!
ஒரு துணை நிறுவனம் தடை செய்யப் பட்டிருந்தால் அது நீதிமன்றத்தால் தகுதியிழப்பு செய்யப் படும் போது, அதே நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கலாமா ?
மத்திய அதிகாரக் குழு தனது அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா ? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே இது குறிப்பிடப் பட்டிருக்கிறது.
வேதாந்தா அலுமினா லிமிடேட் நிறுவனம் அனுமதி கேட்கும் திட்டமானது, நியாம்கரி மலைகளில் பாக்சைட் அள்ளுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. லாஞ்சிகர் என்ற வன விலங்குகள் வாழும் பகுதியும், யானைகள் பகுதி என்று அறிவிக்கப் பட்ட பகுதியும் இந்த சுரங்கம் தோண்டப் படும் பகுதியில் இருப்பதனாலும், புதிதாக உருவாக்கப் பட இருக்கும் வனவிலங்க சரணாலயம் இதே இடத்தில் வருவதனாலும், தோங்கிரியா, காந்தா போன்ற மலைவாழ் இன மக்கள் இந்த இடத்தில் வசித்து வருவதனாலும் இத்திட்டத்திற்க அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இரண்டு நதிகளுக்கு நீராதாரமாக இந்த நியாம்கரி மலை இருப்பதனாலும் இந்த அனுமதி வழங்கப் படக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை விவாதித்து விட்டு, நீதிபதி கபாடியா தனது தீர்ப்பில் என்ன எழுதுகிறார் தெரியுமா ? லாஞ்சிகர் தாலுகாவில் கடுமையான வறுமை நிலவுகிறது. அங்கே சரியான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை பள்ளிகள் இல்லை. ஜிடிபி வளர்ச்சி 8 முதல் 9 சதவிகிதத்துக்கு அற்புதமாக வளர்ந்துள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அதனால் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் இரண்டையும் சரி சமமாக பாவித்து இந்நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். (நல்ல வேளை கபாடியா நிதி அமைச்சராகவோ, சுற்றுச் சூழல் அமைச்சராகவோ இல்லை)
தங்களுக்கு எது வேண்டும், தங்கள் வாழ்கை முறையை பாதுகாப்பது எது, இந்த சுரங்கத் திட்டம் எப்படி தங்கள் வாழ்க்கையை சூறையாடும் என்று பழங்குடியின மக்கள் தாக்கல் செய்திருந்து மனுவை காது கொடுத்துத் கேட்கத் தயாராக இல்லாத நீதியரசர் கபாடியா, மலைவாழ் மக்களின் ஏழ்மையைப் பற்றி எப்படிப் பேச முடியும் ? மேலும், இத்தனை ஆண்டுகளாக அந்த மலைகளில் வாழ்ந்து வந்த அந்த மக்கள் அழிந்தா போய் விட்டார்கள் ? அந்த மக்களின் வறுமை நிலையை அவர்களுக்கு எதிராகவே பயன் படுத்தும் தந்திரத்தை எப்படி மன்னிப்பது ? வன விலங்குகளையும், சுற்றுச் சூழலையும், நீராதாரங்களையும், மலைவாழ் மக்களையும் அழித்துவிட்டு கட்டப் படும் மருத்தவமனைகளும், பள்ளிக் கூடங்களும் யாருக்காக ? இறந்த மலைவாழ் மக்களின் பிணங்களை பாடம் செய்து வைக்கவா ?
இதை விட மோசமான விஷயம் என்னவென்றால், இப்போது விவாதிக்கப் பட்ட வழக்கு 58.943 ஹெக்டேர் வன நிலங்களில் அலுமினா நிறுவனம் பாக்சைட் சுரங்கங்கள் தோண்டுவதற்கான தடையில்லா சான்று பற்றியது. 08.08.20008 நாளிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நியாம்கரி மலைப்பகுதியில் 606.749 ஹெக்டேர் நிலத்தில் பாக்சைட் சுரங்கம் தோண்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மத்திய அரசு தடையில்லா சான்று வழங்கும் முன்பே வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளின் படி, ஒரு நீதிபதி ஒரு நிறுவனத்தின் பங்குகளை தான் வைத்திருப்பதைப் பற்றி வெளிப்படையாக சொல்லி, அதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கா விட்டால், அந்த நீதிபதி, அந்த வழக்கை விசாரிப்பதில் தவறொன்றும் இல்லை என்று உள்ளது. நீதிபதி கபாடியா இந்த வாதத்தையும் எடுத்து வைக்க முடியாது. ஏனென்றால் நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தான் பங்குகள் வைத்திருப்பதை வெளிப்படையாக அறிவித்தது 26.10.2007ல். ஆனால், 2005ம் ஆண்டு முதல் இந்த வழக்கை கபாடியா விசாரித்து வருகிறார். மேலும், கபாடியா ஸ்டெர்லைட் பங்குகளை வைத்திருப்பதைப் பற்றி தானாக முன்வந்து சொல்லவில்லை. வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகவில்லை, ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனம் லிஸ்ட் ஆகி இருக்கிறது, ஏனென்றால், நானே அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறேன் என்றுதான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
மலைவாழ் மக்களில் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பாரீக் தான் கபாடியா இந்த வழக்கை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சஞ்சய் பாரீக்கை பேசவே கூடாது என்றும் மலைவாழ் மக்களின் நலனை நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள இரு வழக்கறிஞர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று கபாடியா உத்தரவிட்ட பிறகு எப்படி அவர் எதிர்ப்பு தெரிவிக்க முடியும் ? மேலும், நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள ஹரீஷ் சால்வே வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞராகவும் இருக்கும் போது அவர் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார் ?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.வெங்கடாச்சலைய்யா ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதி தான் பாரபட்சமானவனா இல்லையா என்பதை, தனது மனதில் தோன்றுவதை வைத்து முடிவு செய்யக் கூடாது, சம்பந்தப் பட்ட கட்சிக்காரரின் மனதில் என்ன தோன்றும் என்பதை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சார்பாக அளிக்கப் பட்டிருக்கும் இது போன்றதொரு தீர்ப்பு, பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்குகளை எந்த அளவுக்கு விலை உயர்த்தும் என்பது பங்குச் சந்தையைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.
தற்போது இந்திய தலைமை நீதிபதி கபாடியா 22 லட்சம் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார். இதில் ஸ்டெர்லைட் பங்குகளின் அளவு எத்தனை எவ்வளவு என்பது தெரியவில்லை.
வேதாந்தா நிறுவன வழக்கில் நீதிமன்றம் ஹரீஷ் சால்வேயை நீதிமன்றத்தின் நண்பனாக நியமித்த பிறகு, வேதாந்தா நிறுவனம் சார்பாக ஒரு வழக்கை நடத்த ஒப்புக் கொள்கிறார் ஹரீஷ் சால்வே. ஒப்புக் கொண்ட பிறகு, உதய் லலித் என்ற வழக்கறிஞரை வேதாந்தா வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக ஹரீஷ் சால்வேவே நியமிக்கிறார். வேதாந்தா நிறுவனத்துக்கு வழக்கறிஞராக மாறிய விஷயத்தை நீதிமன்றத்துக்கு தெரியாமல் மறைத்து விட்டு, பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக வழக்கு தொடுத்துள்ளார் ஹரீஷ் சால்வே.
வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே
இதே போல் யூனிசான் ஹோட்டல்ஸ் என்ற நிறுவனம் 92 ஹெக்டேர் வன நிலத்தில் வீடு கட்டுவது தொடர்பான வழக்கில் நீதிமன்ற நண்பனாக (Amicus Curiae) இருந்த ஹரீஷ் சால்வே, யூனிசால் ஹோட்டல் சார்பாக வழக்கறிஞராக இருக்க சம்மதித்தார்.
இதே போல, உத்தரப் பிரதேசத்தில் நோய்டா மாகாணத்தில் சிலைகள் கட்டுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்த ஹரீஷ் சால்வே, மற்றொரு வழக்கில், உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜராகி வாதாடினார்.
இவ்வாறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்து கொண்டு, அந்த வழக்கில் சம்பந்தப் பட்ட கட்சிக் காரருக்கு மற்றொரு நேர்வில் ஆஜராவது என்பது, வழக்கறிஞர்கள் நடத்தைக்கு எதிரானதாகும்.
இவரைப் போன்ற வழக்கறிஞர்கள் தான், நீதிபதிகளுக்கு இடைத் தரகர்களாக இருந்து செயல்படுகிறார்கள். இது போன்ற வழக்கறிஞர்களைத் தான் நீதிபதிகள் நம்புகிறார்கள்.
இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்று பிரசாந்த் பூஷண், டெஹல்கா பத்திரிக்கையில் கொடுத்த பேட்டிக்காகத் தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ள பிரசாந்த் பூஷணின் தந்தை சாந்தி பூஷண், இந்திய நீதித்துறையில் உள்ள தவறுகளை திருத்த முனைவதற்காக தனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றால், தான் மகிழ்ச்சியோடு சிறை செல்லத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
வெளிப்படையாக விவாதிக்கப் படத் தொடங்கியிருக்கும், நீதித்துறையின் ஊழல்கள், சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஒரு திருப்பு முனை என்றே சவுக்கு பார்க்கிறது.