XXX என்ற முகவரியில் உள்ள வீடு பூட்டி சீல் வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையினர், அந்த வீட்டை சீல் வைக்கும் பணியை உறுதி செய்வார்கள். நீதிமன்றப் பதிவாளர், இந்த உத்தரவின் நகலை, மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
இந்தத் தீர்ப்பு உடனடியாக செயல்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட காவல்துறையினர், சாட்சிகள் முன்னிலையில், அந்த கட்டிடத்தை சீல் வைத்து, அது தொடர்பாக ஒரு அறிக்கையை நீதிமன்றத்திலும் சமர்ப்பிப்பார்கள்.
இப்படித்தான் நினைத்தார் சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை முடக்க உத்தரவு போடுகையில். ஒரு இணைய தளத்தை முடக்குவது அத்தனை எளிதல்ல என்பதை இப்போதாவது உணர்ந்திருப்பாரா என்பது தெரியவில்லை.
இத்தளத்தை முடக்க உத்தரவிட்டதும் பெருகிற அன்பும் ஆதரவும் நினைத்துப் பார்க்க முடியாதது. இப்படி அன்பும் ஆதரவும் பெருகுவதற்கு காரணம், ஒவ்வொருவரும் இந்த தளத்தை அவர்களது தளமாக நினைக்கிறார்கள். இந்தத் தளம் செழித்து நீடூழி வாழ வேண்டும் என்று தாங்கள் பெற்ற பிள்ளைகளை வாழ்த்துவது போல வாழ்த்துகிறார்கள். பெற்ற பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டால் எப்படிப் பதறுவார்களோ, அப்படிப் பதறுகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள தோழர்கள், பிற மாநிலங்களில் உள்ள நண்பர்கள், தமிழகத்தில் உள்ள நண்பர்கள், பத்திரிகையாளர்கள், என அனைவரும், பதறிப்போய் என்ன உதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
ஒரு வார்த்தை கூட அனுமதிக்கு காத்திராமல் பல்வேறு இணைய முகவரிகளை பதிவு செய்து, அந்த முகவரிகள், www.savukku.net நோக்கித் திரும்பும்படி செய்து வருகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், சிடி செல்வத்தின் பெயரிலேயே மூன்று இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டு, சவுக்கு தளத்தை நோக்கித் திருப்பப்பட்டுள்ளன.
அலுவலகத்தில் பணியாற்றும் மென்பொறியாளர்கள் பலர், சவுக்கு இணைய தளத்தின் மொத்த டேட்டாவையும் பேக் அப் எடுத்து தங்கள் கணினியில் சேமித்து வைத்து விட்டுத் தகவல் சொல்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் பலர், இங்கே யாருமே கண்டுபிடிக்க முடியாத சர்வர்கள் உள்ளன. அவற்றில் இடம் வாங்கித் தருகிறேன். இது போல நான்கைந்து சர்வர்களில் சவுக்கை நிறுவலாம் என்கின்றனர். அத்தனை சர்வர்களுக்கு செலவு செய்ய பணமில்லை என்றால், அதைப் பற்றி உனக்கென்ன கவலை ? எத்தனை சர்வர்கள் வேண்டும் என்று மட்டும் சொல் என்கிறார்கள்.
இன்பாக்சில் பல தோழர்கள் வந்து, எங்கிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் வெளிநாட்டில் இருக்கிறேன். ஒரு நாளுக்கு முன்னதாக சொல்லி விட்டால் பணம் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டியதுதான் முக்கியம் என்று கூறுகிறார்கள்.
இது கருத்துச் சுதந்திரத்தை முடக்க எடுத்த நடவடிக்கை, திமுகவின் தூண்டுதலில் கழக உடன்பிறப்பு சி.டி.செல்வம் எடுத்த நடவடிக்கை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். இந்த சதிச்செயலை முறியடித்து சவுக்கு தளத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார்கள்.
தனது அதிகாரம் என்ன, எதை செயல்படுத்த முடியும், எதை செயல்படுத்த முடியாது என்பதைக் கூட உணராத நீதிபதியாக சி.டி.செல்வம் இருந்து வருகிறார். எத்தனையோ நீதிபதிகள் இருந்தாலும், அவர்கள் மோசமானவர்களாக இருந்தபோதும் கூட, பொதுவெளிகளில் அவர்கள் மோசமாக விமர்சிக்ப்பட்டதில்லை. மிக மிக மோசமான வகையில் சி.டி.செல்வம் இணைய வெளிகளில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இது சரியா, தவறா என்ற வாதத்துக்குள் செல்ல விரும்பவில்லை.
சி.டி.செல்வம் இப்படி விமர்சிக்கப்படுவதற்கு முழு முதல் காரணமும் அவரே. சவுக்கு தளம் சாமான்யனின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு வாகனமாக இருந்து வந்தது. அவர்களின் மனசாட்சியாக இருந்தது. பெரும் பான்மையான ஊடகங்கள், நிறுவனமயப் படுத்தப்பட்டு, வணிக நோக்கம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக சமரசம் செய்து கொண்டுள்ள நிலையில், அந்த ஊடகங்களின் தவறுகளையும் சுட்டிக் காட்டும் பணியை செய்து வந்த சவுக்கு தளத்தை அவர்கள் தங்களின் கோபத்தின் வடிகாலாகப் பார்த்தார்கள். விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பிரபலமான இதழ்கள் எழுதும் அத்தனையும் உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டிருந்த நிலையில், அந்த ஊடகங்கள் தங்கள் வியாபார நலனைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை….. லாபம் குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக எத்தகைய சமரசத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்ற நிலையில், இந்த இணைய ஊடகத்தை தங்கள் குரலாகவே பார்த்தார்கள் வாசகர்கள்.
இணையவெளியில் உள்ள வாசகர்களும், நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் மிகுந்த மரியாதை கொண்வர்களே. வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக, வேறு ஏதாவது ஒரு சூழலில் ஒரு கட்டுரையை நீக்க வேண்டும், அல்லது தளத்தை முடக்க வேண்டும் என்று ஒரு நேர்மையான நீதிபதி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தால், இன்று வாசகர்கள் இப்படி பொங்கியெழ மாட்டார்கள். ஆனால், நீதிபதி சி.டி.செல்வம் தன்னை நீதிபதியாக அடையாளப்படுத்துவதை விட, திமுக உடன்பிறப்பாகவும், கருணாநிதியின் ஏவலாளாகவும் அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்பினார். நான் ஒரு திமுக காரன், திமுக நலன்களை பாதுகாப்பேன் என்பதில் அவர் எந்த தயக்கமும் இல்லாமல் தெளிவாக இருந்தார். அந்த நலன்களைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாகவே, சவுக்கு தளத்தை தடை செய்துள்ளார் என்ற விபரம் அப்பட்டமாக தெரியும்போது, அவர்களின் கோபம் மிக மிக நியாயமானதே.
ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு கிருஷ்ணசாமி Vs யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் தெளிவு படுத்தியுள்ளது. நீதிபதிகள் வர்மா, கஸ்லிவால், ராமசாமி, கே.ஜே.ரெட்டி மற்றும் எஸ்.அகர்வால் அடங்கிய அந்த அமர்வின் தீர்ப்பு பின்வருமாறு.
“the holder of office of the Judge of the Supreme Court or the High Court should, therefore, be above the conduct of ordinary mortals in the society. The standards of judicial behaviour, both on and off the Bench, are normally high. There cannot, however, be any fixed or set principles, but an unwritten code of conduct of well-established traditions is the guidelines for judicial conduct. The conduct that tends to undermine the public confidence in the character, integrity or impartiality of the Judge must be eschewed. It is expected of him to voluntarily set forth wholesome standards of conduct reaffirming fitness to higher responsibilities”
சமுதாயத்தின் சாதாரண விஷயங்களில் இருந்து ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியோ, உயர்நீதிமன்ற நீதிபதியோ, மேம்பட்டவராக இருக்க வேண்டும். நீதிபதிகளின் நடத்தைக்கான அளவுகோல் நீதிமன்றத்தில் இருக்கையிலோ, அல்லது வெளியில் இருக்கையிலோ, மிக மிக உயர்வானது. இதற்கென்று எழுத்து பூர்வமான விதிகள் கிடையாது, ஆனால், எழுதப்படாத மரபுகளும், விதிகளும் நிச்சயம் உண்டு. ஒரு நீதிபதியின் கேரக்டர், நேர்மைத் தன்மை, அவரின் பாரபட்சமற்ற தன்மை போன்றவை பொதுமக்களின் பார்வையில் கேள்விக்குள்ளாக்கப் படும் சூழலை தவிர்க்க வேண்டும். ஒரு நீதிபதி தானாக முன்வந்து, அப்பழுக்கற்ற நடத்தைக்கும் உயர்ந்த பொறுப்புகளுக்கான தகுதி தனக்கு உண்டு என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
The actual as well as the apparent independence of judiciary would be transparent only when the office holders endow those qualities which would operate as impregnable fortress against surreptitious attempts to undermine the independence of the judiciary. In short, the behaviour of the Judge is the bastion for the people to reap the fruits of the democracy, liberty and justice and the antithesis rocks the bottom of the rule of law.
நீதியை தூய்மையாக வைத்திருப்பதற்கு, ஒரு நீதிபதி, அப்பழுக்கற்ற நடத்தை, கேள்வி கேட்க முடியாத நேர்மைத் தன்மை, நெறிமிகுந்து நடத்தை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். இதிலிருந்து வழுவுவது சட்டத்தின் ஆட்சியையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையுமே கேள்விக்குள்ளாக்கி விடும். சாதாரண மனிதர்களுக்கு உள்ள பலவீனங்கள், சறுக்கல்கள், பலவீனமான நடத்தை போன்றவற்றைக் கொண்டுள்ள களி மண் மனிதர்களாக நீதிபதிகள் இருக்கக்கூடாது. அரசியல், பொருளாதாரம் என்று எந்த அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுக்காத அப்பழுக்கற்ற, உறுதியான மனிதர்களாக நீதிபதிகள் திகழ வேண்டும். அப்போதுதான் நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிடும் சக்திகளைத் தடுக்க, நீதிபதிகள் இது போன்ற தகுதிகளோடு குறுக்கீடுகளை தடுக்கும் கோட்டையாக இருக்க முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதியின் விளைவுகளை மக்களுக்கு வழங்கும் கோட்டையாக நீதிபதியின் நடத்தை திகழ வேண்டும். இது தவறினால், சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும்.
இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின்படியா சி.டி.செல்வம் நடந்து கொள்கிறார்… நடந்து கொண்டார் ? நீதிபதி நியமன ஆணை வந்த பிறகு, உலகில் எந்த நீதிபதியாவது அரசியல் கட்சித் தலைவரை சந்திப்பாரா ? முதன் முறையாக அப்படி கருணாநிதியை சந்தித்தவர்கள்தான் சி.டி.செல்வம் மற்றும் ராஜா இளங்கோ. ராஜா இளங்கோ ஆந்திர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விட்டார். மாற்றப்பட்டும் ராஜா இளங்கோ சும்மா இருக்கவில்லை. பல ஆயிரம் கோடியை சுருட்டிய சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜுவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, அவர்கள் திமுக வழக்கறிஞர்களை அணுகி, அதன் மூலம் செட்டிங் செய்யப்பட்டுதான், ராஜா இளங்கோ ராமலிங்க ராஜுவுக்கு பிணை வழங்கப்பட்டது இணைப்பு. அதன் பிறகு, சி.டி.செல்வம் வழித்தோன்றலாகத்தான், தற்போது நீதிபதி வேலுமணி, ஜெயலலிதாவை சந்தித்தார்.
இப்படிப்பட்ட நடத்தை கொண்டவரான சி.டி.செல்வத்தின் மீது எப்படி மரியாதை வரும் ? நியமன ஆணை வந்ததும் திமுக தலைவரை சந்தித்த சி.டி.செல்வத்தின் மீது பாரபட்சமற்ற நீதிபதி என்றோ, நேர்மையான நீதிபதி என்றோ எப்படி நம்பிக்கை வரும் ? திமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளில், விசாரணையே இன்றி இடைக்காலத் தடை விதிக்கையில் சி.டி.செல்வத்தை எந்த கண்ணாடி கொண்டு பார்க்க முடியும் ? 120 நாட்கள் தப்பி ஓடிய அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சி.டி.செல்வத்தை யார் நம்புவார்கள் நேர்மையான நீதிபதி என்று…. ?
இந்த தார்மீகக் கோபமே இன்று வெளிப்படுகிறது. மை லார்ட், யுவர் ஹானர், என்றெல்லாம் அழைப்பது, ஒரு தார்மீகத்தின் அடிப்படையில். ஜனநாயத்தில் ஒரு சில அமைப்புகளை இப்படி வைத்திருந்தால்தான் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் என்ற அடிப்படையிலேயே. சட்டத்தின் ஆட்சியை காற்றில் பறக்கவிட்டு விட்டு, கழகத் தொண்டர் போல ஒரு நீதிபதி நடந்து கொண்டாரென்றால், அவர் இதை விட மோசமான நிலைமையையே சந்திக்க நேரிடும்.
ஓரு சிறிய வட்டத்துக்குள், இணைய வெளியில் மட்டும் தெரிந்து வந்த சவுக்கு தளத்தை இன்று உலகறியச் செய்திருக்கிறார் சி.டி.செல்வம்.
ஊடகங்களில் சவுக்கு தடை குறித்து வந்த செய்திகள்.
3) ஐபிஎன் லைவ்
4) தி இந்து
5) இந்தியா டுடே
9) இந்தியா டுடே
10) சிஃபி இணைய தளம்
இவையெல்லாவற்றையும் விட மிகப்பெரிய அங்கீகாரம் என்ன தெரியுமா ?
இந்த மின்னஞ்சல்தான்.
Sir,
First time i’m sending you reply after reading your blog for 6 months.
i’m a visually challenged person. initially i thought you are also a
lier trying to enter politics by finding faults on each and everybody.
later only, i understood you are not only against the evil in
politics, but you are against all evils present in this society. the
informations you share came to light in media after many days only. 2g
tape is the latest example and i don’t think IPL betting secrets and
dhoni’s involvement will never be revealed by media. but i trust you
completely and support you from my heart. i always wonder how you
collect the most dark secrets from any carner of india. still,
whatever method you use, i support you since i believe your intention
is correct and evil can be defeated only by evil tricks. all the best.
continue your good work and we all will stand by your side.
arvind
இப்படிப்பட்ட ஆதரவுகள் இருக்கையில் உங்களால் என்ன செய்து விட முடியும் சி.டி.செல்வம் ? உங்களால்தான் இத்தளம் அகில இந்திய மற்றும் உலகப்புகழை அடைந்து வருகிறது. உங்களுக்கு சவுக்கு வாசகர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.