டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூஷண் 2ஜி டேப்புகள் வெளியிட்ட 5 பிப்ரவரி அன்று, திமுக தமிழக டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது.
டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று திடீரென்று திமுக மனு அளித்ததற்கு பெரிய பின்னணி உண்டு. இணைப்பு.
ராமானுஜத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதிலிருந்தே, பல்வேறு காவல்துறை அதிகாரிகள் புகைச்சலோடு இருந்தார்கள். நவம்பர் 2013ல் ராமானுஜம் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய சூழலில், உச்சநீதிமன்றம் ப்ரகாஷ் சிங் என்ற வழக்கில் அளித்திருந்த தீர்ப்பில், டிஜிபிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பதவிக்காலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி, ராமானுஜம் ஓய்வு பெறும் நவம்பர் 2013ல், அவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார் ஜெயலலிதா. இந்த உத்தரவையடுத்து, ராமானுஜத்துக்கு, தானாகவே பதவி நீட்டிப்பு கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சிலர் பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின்போது, தமிழக அரசு, ராமானுஜத்தின் நியமனம் சரி என்று வெகு தீவிரமாக வாதிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததையடுத்து, வழக்கு உச்சநீதிமன்றம் சென்று அங்கே நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே மத்திய உள்துறை, ராமானுஜத்தின் நியமனத்தை அங்கீகரிக்காமல் மறுத்த காரணத்தால், ராமானுஜம் ஊதியம் பெற முடியாமல் உள்ளார்.
பல காவல்துறை அதிகாரிகளுக்கு, ராமானுஜம் டிஜிபியாக இருப்பது கூட பரவாயில்லை. ஆனால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருப்பதுதான் பலரது கண்களை உறுத்துகிறது. உளவுத்துறைக்கென்று, பிரத்யேகமாக ஒரு டிஜிபியை நியமித்தார் ஜெயலலிதா. அஷோக் குமார் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டதும், ஜெயலலிதாவுக்கு தினந்தோறும் அனுப்பப்படும் உளவுத்துறை அறிக்கைகள், ராமானுஜத்தின் பார்வைக்கு அனுப்பப் படுவதில்லை என்று ஒரு பேச்சு இருந்தது ஆனால், உளவுத்துறை அனுப்பும் அறிக்கைகளைத் தவிர்த்து, ராமானுஜம் தனியாக தினந்தோறும் உளவுத்துறை அறிக்கைகளை அனுப்பி வருகிறார் என்பது பலருக்கு தெரியாது செய்தி. இப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கையை முழுமையாக பெற்ற அதிகாரியாக ராமானுஜம் இருப்பதால்தான், பல முறை ராமானுஜம் நான் ஓய்வு பெற்று விடுகிறேன் என்று கூறியும், அவரை விடுவிக்க மறுத்து வருகிறார் ஜெயலலிதா.
இது, டிஜிபி பதவி பறிபோன பல்வேறு அதிகாரிகள் உட்பட, பல அதிகாரிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியாவது ராமானுஜத்தை தூக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான் திமுக ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று எடுத்த நடவடிக்கையை பார்க்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, சுப்பாரெட்டி, வேணுகோபால் ரெட்டி, ராஜா சங்கர் மற்றும் சீனிவாஸ் ஆகியோர் மீது, நில அபகரிப்பு வழக்கு டிசம்பர் 2011ல் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும், ஸ்டாலின் நேரடியாக டிஜிபி ராமானுஜத்தை சென்று சந்தித்து, என்னை கைது செய்யுங்கள் என்று கூறினார். இணைப்பு. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்தது, சென்னை மாநகர காவல்துறையின் ஒரு ஆய்வாளர். டிஜிபி அலுவலகத்துக்கு சென்று என்னைக் கைது செய்யுங்கள் என்று சொன்னால், டிஜிபி கைது செய்வாரா ? இப்படி கிறுக்குத்தனமாக செய்த ஸ்டாலினிடம் டிஜிபி ராமானுஜம், ஆய்வாளரை சந்தியுங்கள் என்று கூறினார்.
டிஜிபியை சந்தித்து விட்டு வெளியே வரும் ஸ்டாலின்
ஆனால், ஆய்வாளரை சந்தித்தால் கைது செய்து விடுவார் என்பதை அறிந்த ஸ்டாலின், அவரை சந்திக்காமல், புகார் அளித்த சேஷாத்ரி என்பவரோடு சமாதானம் பேசினார். சமாதானம் பேசி, புகார் அளித்தவருக்கு 1.75 கோடி பணமாகத் தந்தார். பணம் தந்ததும், புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் புகார்தாரர்.
புகாரை வாபஸ் பெற்றாலும், மிரட்டியது உண்மை என்பதால் வழக்கு தொடரும் என்பது காவல்துறை. ஆனால், ஸ்டாலின் நீதிமன்றத்தை அணுகி, அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தார். இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, தற்போது நிலுவையில் உள்ளது. அடுத்த விசாரணை ஏப்ரல் 26க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினைப் பொறுத்தவரை, தனக்கோ, தனது குடும்பத்துக்கோ, ஏதாவது சிக்கல் என்றால் துடி துடித்து விடுவார். உதயநிதிக்கு சிக்கல் என்றால், ஸ்டாலின் தன் தூக்கத்தை தொலைத்து விட்டு, அந்த சிக்கல் முடியும் வரை உறங்க மாட்டார். அப்படி உதயநிதி ஸ்டாலின் மாட்டிய இரண்டு சிக்கல்கள்தான், இந்த நில அபகரிப்பு வழக்கும், ஹம்மர் காரை திருட்டுத் தனமாக வாங்கிய வழக்கும். நில அபகரிப்பு வழக்கை சமரசம் மூலமாக முடித்த ஸ்டாலின், கார் இறக்குமதி வழக்கை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று முயற்சித்தார். கள்ளத்தனமாக உதயநிதி வாங்கிய ஹம்மர் காரை மீண்டும் சிபிஐ அதிகாரிகளிடமே ஒப்படைக்க முயற்சி செய்தார். எப்படியாவது தன் மகனை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், அந்த சிபிஐ வழக்கில் இவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதன் பிறகு ஸ்டாலின் கடைபிடித்த தந்திரம்தான் முக்கியமானது. நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு புகார்கள் சென்னை மாநகர ஆணையாளரிடம் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், எப்போது வேண்டுமானாலும் புதிய வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து வந்தன. புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது, தனக்கும் தன் குடும்பத்துக்கும் எப்போதும் ஆபத்து என்று ஸ்டாலின் நினைத்தார். இந்த அடிப்படையில் ஒரு ரகசிய சந்திப்பு ஸ்டாலினின் நண்பர் ராஜா சங்கருக்கும், சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜுக்கும் நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்கு உதவி செய்தவர் சென்னை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையாளர் வரதராஜு. இது போன்ற ப்ரோக்கர் வேலைகளை செய்வதில் வரதராஜுக்கு நிகர் வரதராஜுவே. வரதராஜு, பழைய புறநகர் ஆணையர் ஜாங்கிட்டின் ரைட் லெப்ட் சென்டர். ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சீட்டின் விலையை குறைத்ததில் பெரும் உதவி செய்தவர் ஜாங்கிட். ஆனால், தனது எதிரியின் கையாளாக இருந்த வரதராஜுவைத்தான் ஜார்ஜ் நம்புகிறார். ராஜா சங்கருடனான சந்திப்பை ஏற்பாடு செய்ததே, ஜாங்கிட் மூலமாகத்தான் என்பது ஜார்ஜுக்குத் தெரியாது.
ஜார்ஜின், கண்கள் மற்றும் காதுகளாக வரதராஜு மாறிப்போனதால், ஜார்ஜுக்கு, வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. வரதராஜு சொல்வது மட்டுமே ஜார்ஜுக்கு தகவல். இப்படி ஒரு சூழலால் வரதராஜு ஜார்ஜை தனது கைப்பாவையாக மாற்றி வைத்திருக்கிறார்.
ஜாங்கிட் பின்னால் எட்டிப் பார்க்கிறாரே… அவர்தான் வரதராஜு
வரதராஜு எப்படிப்பட்ட தில்லாலங்கடி பாருங்கள். வரதராஜுனின் மகனும் மகளும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் ஒரு மருத்துவ சீட்டின் விலை 75 முதல் 60 லட்சம். கடவுளே வந்தாலும், ஐந்து பத்து லட்சம் குறைவாகத் தருவார்களே ஒழிய, இலவச சீட் என்பது யாருக்கும் கிடையாது. ஜாங்கிட்டின் பரிந்துரையின் பேரில் சீட்டுக்கான தொகை குறைக்கப்பட்டு 60 லட்ச ரூபாய்க்கு இரண்டு பிள்ளைகளுக்கும் சீட் “வாங்கியவர்தான்” இந்த வரதராஜு. எப்படி இரண்டு பிள்ளைகளுக்கும் சீட் பெற்றாய் என்று வருமானத்துக்க அதிகமான சொத்து சேர்த்த வழக்கு ஒன்று பதிவு செய்தால், வரதராஜுவின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும்.
சரி. மெயின் கதைக்கு வருவோம். ஜார்ஜ் மற்றும் ஸ்டாலின் நண்பர் ராஜா சங்கர் இடையே நடந்த சந்திப்பில், ஸ்டாலின் கேட்ட உத்தரவாதம், நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்கள் வந்தால், வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்த வேண்டும். முதலில் திமுக தரப்புக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது.