இந்த கட்டுரையின் தலைப்பை இப்போது உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.
சுயமரியாதை என்ற முழக்கத்தோடுதான் திராவிட இயக்கம் தொடங்கியது. சுயமரியாதை மாநாடு என்று சுயமரியாதைக் காகவே மாநாடு நடத்திய இயக்கம் திராவிட இயக்கம். ஆனால் தங்களைத் தவிர யாருக்குமே சுயமரியாதை கிடையாது என்பது போலத்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. அப்படி சுயமரியாதை இல்லாமல் மற்ற கட்சிகளை திராவிட இயக்கங்கள் நடத்துவது சரியே என்று தோன்றும் அளவுக்கு, அவர்களும் தங்கள் சுயமரியாதை சட்டையை கழற்றி வைத்து விட்டு தவழ்கிறார்கள்.
தற்போதைய கூட்டணி பேரங்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து, தமிழகத்துக்கு விடுதலையே கிடையாது என்ற உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்களை வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்தது கிடையாது. கம்யூனிஸ்டுகளைப் போன்ற மிகப் பெரிய தேசபக்தர்கள் ஒருவரும் கிடையாது. ஆனால், இன்று அதிமுகவால் ஒதுக்கப்பட்டு சிறுமைப்பட்டு நிற்கிறது செங்கொடி இயக்கம். மொழிவாரி மாநிலம் பிரிவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் மதராஸ் ராஜதானியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம். 1964ம் ஆண்டு இடது வலது என்ற பிரிவினைக்கு பின்னாலும் கூட வலுவான இயக்கமாகவே இருந்து வந்தனர் இடதுசாரிகள்.
எந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், முதலில் வீதிக்கு வருவது செங்கொடி இயக்கமே. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று எப்போதும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே.
உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இயக்கங்களை கண்ட கம்யூனிஸ்டுகள் இன்று அதே தாராளமயமாக்கலால் நீர்த்துப் போய், தங்கள் விழுமியங்கள் அனைத்தையும் இழந்த நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நிறுவுவது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து சோரம் போனதன் விளைவே, இன்று இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.
மதவாத சக்திகளைத் தடுப்பது என்ற ஒற்றைக் முழக்கத்தை வைத்துக் கொண்டு, கூச்சமே இல்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். நேற்று பிறந்த ஆம் ஆத்மி கட்சிக்கு கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் கூட, 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.
அதிமுகவோடு கூட்டணி வைத்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக, இடதுசாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துகொண்ட சமரசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி அரசை சட்டப்பேரவையில் கடுமையாக விளாசி எடுத்தனர் கம்யூனிஸ்டுகள். குறிப்பாக சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதி எழுந்தாலே காதுகளை கூர்மையாக்கிக் கொள்வார் கருணாநிதி. எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அரசை விமர்சித்து, கேள்வி கேட்டு குடைந்து எடுத்த கம்யூனிஸ்டுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக மவுனச் சாமியார்களாக மறு அவதாரம் எடுத்தனர். மக்களின் நிலத்தை அபகரித்த ஜெயலலிதாவுக்கு எதிராக, சிறுதாவூர் விவகாரத்தைக் கையில் எடுத்து, விசாரணை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், அந்த அறிக்கை குறித்து மூன்று ஆண்டுகளாக வாயே திறக்கவில்லை. 110 விதியின் கீழ் மட்டுமே அறிக்கை படித்து சட்டப்பேரவையில் எந்த விவாதமும் இல்லாமல் அவையை நடத்தும் ஜெயலலிதாவை ஒரு முறை கூட கண்டிக்காமல் மவுனம் காத்து வந்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் கூட அம்மா மனம் நோகுமே என்று அமைதியாக அம்மா துதிபாடல்களை காது குளிரக் கேட்டு மகிழ்ந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியும் அதை சட்டையே செய்யாத ஜெயலலிதா, பிரகாஷ் காரத்தையும், ஏ.பி.பரதனையும் சந்திக்க நேரம் அளித்ததோடு, அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிர்ச்சியடையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சிறுமை பட்டு நின்றனர். டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராகி டெல்லிக்குப் போய், கார்ப்பரேட் நிறுவனங்களையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துக் கட்டப்போவது போல, அந்த எம்.பி பதவிக்காக அம்மாவின் காலடியில் செங்கொடியை சமர்ப்பித்தனர். இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டதெல்லாம் எதற்காக ? மக்களவைத் தேர்தலில் எப்போதும் போடும் பிச்சையை இந்த முறையும் ஜெயலலிதா போடுவார் என்ற நம்பிக்கையிலேயே. ஆனால், நம்பவைத்து கழுத்தறுப்பதில், ஜெயலலிதாவுக்கு நிகரே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்க மறுத்த கம்யூனிஸ்டுகளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணமே, 40 தொகுதிகளுக்கும் முதலில் வேட்பாளரை அறிவித்தது. அறிவித்ததும் கம்யூனிஸ்டுகள் வேறு அணிக்குப் போய் விடாமல் தடுக்கவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும், வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அறிவிப்பு. இதையும் நம்பிய கம்யூனிஸ்டுகள் வாராது வரும் மாமணிக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
பேச்சுவார்தை என்று கூறி விட்டு, மகிழ்ச்சியோடு பிரிவோம் என்று தெரிவித்த பிறகுதான், தாங்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளோம் என்பதையே உணர்ந்தனர். இத்தனை அவமானங்களையும் மென்று விழுங்கிவிட்டு, கூச்சமே இல்லாமல் தற்போது திமுக அணிக்கு போகலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.
தேர்தல்தோறும் அணி மாறும் பாட்டாளி மக்கள் கட்சியை விட மோசமான நிலையில் இன்று செங்கொடி இயக்கம் இருக்கிறது.
திருமாவளவனின் நிலை இன்னும் மோசம். திமுகவுக்காக அவர் செய்து கொள்ளாத சமரசங்களே கிடையாது. திருமாவளவன் செய்து கொண்டதிலேயே மிகப் பெரிய சமரசம், கருணாநிதியின் உத்தரவின் பேரில் ராஜபட்சேவை சந்தித்தது. ராஜபட்சேவை திருமாவளவன் சந்தித்தது குறித்து, பழ.கருப்பையா ஒரு அற்புதமான கட்டுரையை எழுதினார். அடி வயிற்றை முறுக்கவில்லையா ?
தமிழகத்தில் உருவான தலித் இயக்கங்களிலேயே நம்பிக்கை தரக்கூடிய இயக்கமாக உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். க்ரோக்கடைல் பேன்ட்டும், லூயி பிலிப் சட்டையும், வெளிநாட்டு சென்டும் அணியும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நேரெதிராக எளிமையின் உருவமாக இருந்தார் திருமாவளவன். தனக்கு ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி சீட் என்ற அளவில், தலித்துகளை பகடைக்காயாக பயன்படுத்தி வந்த தலித் தலைவர்கள் மத்தியில், தலித்துகளுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உள்ளார்ந்த உண்மையோடு களமிறங்கியவர் திருமாவளவன். ஈழ ஆதரவு, தலித்துகளுக்கு அதிகாரம், தலித்துகளை வாக்கு வங்கியாக கருதும் நிலையை மாற்ற வேண்டும் என்று ஒரு அற்புதமான தலைவராக உருவானவர் திருமாவளவன். ஆனால் இன்றைய திருமாவளவனின் வீழ்ச்சி மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.
வட தமிழகத்தில் மிகப்பெரிய சத்தியாக விடுதலைச் சிறுத்தைகள் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சக்தியை ஒருங்கிணைத்து தன் பின்னால் வைத்துள்ளார் திருமாவளவன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், திருமாவளவனை உரிய மரியாதை இல்லாமல் மிக மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளது திமுக. தலித்துகளுக்கு ஒரு போதும் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்பதை இப்போது கூட திருமாவளவன் உணரவில்லை. ஈழம் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த விடாமல் காவல்துறையை வைத்து மிரட்டியது, சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பியது, பல்வேறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் அடைத்தது, கட்சி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்தது என்று திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இழைத்துள்ள துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
ஆனால், தன் சுயமரியாதையை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான தலித்துகளின் சுயமரியாதையும் இன்று கருணாநிதியின் காலடியில் அடகு வைத்துள்ளார் திருமாவளவன். நம்பிக்கைக்குரிய ஒரு தலித் தலைவரின் இந்த வீழ்ச்சி காலத்தின் கோலமே.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் கூட்டத்தில் இப்படிப் பேசினார் அண்ணா “நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிகுடித்தனம், தனி முகாம், தனிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.”
இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… திருமாவளவனுக்கு முழுமையாக பொருந்தும். திராவிடக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட, இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து களம் காண வேண்டிய நேரம் இது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும், மீண்டும் திராவிடக் கட்சிகளின் தயவையே நாடுகிறார்கள் எனும்போது, இதற்கு மாற்றே கிடையாதா என்ற அயர்ச்சியே ஏற்படுகிறது.
ஆம் ஆத்மி போன்ற கட்சிகளோடு விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் இணைந்து களம் கண்டால், இந்த திராவிட கட்சிகளை ஓட ஓட விரட்ட முடியும். ஆனால், அது ஒரு போதும் நடக்கப்வோவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
இந்தக் கட்டுரைக்கு மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் எதிர்வினையாற்றுவார்.