“எங்கப்பா தேர்தல் நேரம் அதுவுமா காணாமப் போயிட்ட… ? ” என்று அலுப்பாக கேட்டார் கணேசன்.
“அண்ணே நிலைமை தெரியாதா அண்ணே. ஒரு மாசமாச்சு வீட்டுக்கு போயி”
“சாரிப்பா… மறந்துட்டேன். செய்தியாவது இருக்கா… ? “
“இருக்குண்ணே. நெறய்ய இருக்கு”
“திமுக வேட்பாளர்கள் பட்டியலை பாத்தியா டா… ? என்ன சிறப்பு அதில ? ” என்றான் பீமராஜன்.
“திமுக முழுக்க முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்துடுச்சு என்பதைத்தான் இந்தப் பட்டியல் காட்டுது. இப்போ திமுக அறிவிச்சிருக்க 35 வேட்பாளர்களும் ஸ்டாலினோட ஆட்கள். அழகிரியை ஏற்கனவே கட்டம் கட்டி வெளிய அனுப்பிட்டாங்க.
மீதி இருக்கறது கனிமொழி மட்டும்தான். கனிமொழி தன்னோட ஆதரவாளர்களுக்கு அஞ்சு சீட் வேணும்னு எவ்வளவோ மன்றாடிப் பாத்தாங்க. ஆனா, ஒரு சீட் கூட தர முடியாது. இதுல தலையிடாதன்னு தெளிவா சொல்லிட்டார் ஸ்டாலின்.
கிட்டத்தட்ட இது ஸ்டாலினோட தேர்தல்னு ஆயிடுச்சு. அனைத்து வேட்பாளர்ளையும் ஸ்டாலினே தேர்ந்தெடுத்தார். டிகேஎஸ் இளங்கோவன் மட்டும்தான் ஸ்டாலின் விரும்பாத வேட்பாளர்”
“சரி….. புடிக்காம எதுக்காக சீட் குடுத்தார் ? “
“கருணாநிதி குஷ்புவுக்கு மட்டும் ஒரே ஒரு சீட் வேணும்னு கேட்டிருக்கார். ஆனா, ஸ்டாலினுக்கு கொடுக்க விருப்பம் இல்ல. மா.சுப்ரமணியத்துக்கு கொடுக்கலாம்னு ஸ்டாலின் நெனைச்சார். ஆனா, ஸ்டாலினோட இன்னொரு தீவிர ஆதரவாளரான ஜெ.அன்பழகன், அதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சார். டிகேஎஸ்.இளங்கோவன் கனிமொழி அணின்னு, ஸ்டாலினுக்கு அவரை புடிக்கவே புடிக்காது. அவர் ஏற்கனவே நின்ன வட சென்னையை கொடுத்தா, ஜெயிச்சாலும் ஜெயிச்சிடுவார்னு, அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத தென் சென்னையை கொடுத்திருக்கார். இப்படி கொடுத்ததன் மூலமா கருணாநிதி, குஷ்பு ன்னு ஒரே கல்லுல பல மாங்காய் அடிச்சிருக்கார்.”
“சரி.. எல்லோரும் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்குத்தான் வாய்ப்புன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தாங்க. டி.ஆர்.பாலுவுக்கு எப்படி கொடுத்தாங்க ? ” என்றான் ரத்னவேல்.
“டி.ஆர்.பாலுவுக்கும் பழனி மாணிக்கத்துக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம். பழனி மாணிக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு எதிரிகளை சந்தித்து வந்தார். அங்கே இதற்கு முன்னால் இருந்த மாவட்ட செயலாளர் கோ.சி.மணி, முன்னாள் எம்.எல்.ஏ காந்தி, திருவோணம் எம்.எல்.ஏ என பலர் வந்து சென்னையில் பழனி மாணிக்கத்துக்கு எதிரா புகார் தெரிவிச்சாங்க.
அதையெல்லாம் மீறி கொடுக்க முடியாதுன்னுதான் பாலுவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சது. பாலு பணமும் நிறைய்ய செலவு பண்ணுவாருன்னு எதிர்ப்பாக்கறாங்க.
ஆனா, பழனி மாணிக்கத்தோட ஆதரவாளர்கள், இன்னைக்கே போராட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் அருகே டி.ஆர்.பாலு படத்தை செருப்பால அடிச்சி, கொடும்பாவியெல்லாம் எரிச்சிட்டாங்க. தேர்தல்லயும் பாலுவுக்கு எதிரா தீவிரமா வேலை பாப்பாங்க”
“அண்ணன் அழகிரி ரொம்ப கோவத்துல இருக்காரோ ? ” என்றான் வடிவேல்
“கொஞ்ச நஞ்ச கோவம் இல்ல. கடுமையான கோவத்துல இருக்காரு. தன்னை முழுமையா புறக்கணித்ததற்கு தன்னோட எதிர்ப்பை காட்டணும்னு முடிவெடுத்திருக்கார். தென் மாவட்டங்களில் தன்னோட ஆதரவாளர்களை தூண்டி விட்டு, திமுக வேட்பாளர்களை எப்படியாவது தோக்கடிக்கணும்னு தீவிரமா இருக்கார். தனிக்கட்சி தொடங்கும் யோசனை இல்லன்னு சொன்னாலும், போட்டி வேட்பாளர்களைப் போட்டு, திமுக வேட்பாளர்களை தோக்கடிக்கணும்னு முடிவெடுத்திருக்கார்”
“சரி… இது ஸ்டாலினுக்குத் தெரியாதா… அவர் ஏன் இப்படி ஒரு ரிஸ்கை எடுக்கிறார் ? “
“ஸ்டாலினைப் பொறுத்தவரை, 40 தொகுதிகளில் தோற்றாலும் பரவாயில்லை. டெல்லியில் அதிகாரத்தை வைச்சு ஒன்னும் பண்ணப் போறதில்லை. மேலும் டெல்லியில் செல்வாக்கு வளர்ந்தால் அது கனிமொழியின் கையை ஓங்க வைக்கும்னு நினைக்கிறாரு. 40 தொகுதிகளிலும், தோற்றால், தமிழகத்தில் கட்சி முழுமையா தன்னோட கட்டுப்பாட்டில் வந்துடும். அப்படி வந்துடுச்சுன்னா, 2016 தேர்தலை சந்திக்க எளிதா இருக்கும்னு நினைக்கிறார். அந்த அடிப்படையிலதான், எல்லா முடிவுகளையும் எடுத்து வர்றார்”
“வைகோவை எதிர்த்து யார் போட்டி போடப்போறாங்க திமுகவுல ? ” என்றான் ரத்னவேல்.
“வைகோ விருதுநகரில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வலுவான ஒரு ஆளை நிறுத்தணும்னு கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனுக்கு கட்டளை இடப்பட்டிருந்தது. ஆனா, அவரால நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியலை. ஏனோ தானோன்னு ஒருத்தரை போட்டிருக்காங்க”
“சரி. திருமாவளவனை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்துனதுக்கு என்ன காரணம் ? “
“கருணாநிதிக்கு தன் மகள் கனிமொழியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸோடு சேர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். காங்கிரஸோடு கூட்டணி என்பதை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தான் நேரடியாக கூட்டணியை வலியுறுத்தினால் ஸ்டாலின் கோபப்படுவார் என்று, திருமாவளவனை விட்டு, காங்கிரஸ் கூட்டணியை வலியுறுத்தச் சொன்னார்.
ஸ்டாலினோடு சந்திப்பு நடந்த எல்லா நேரங்களிலும் திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியை வலியுறுத்திக்கிட்டே இருந்தார். இது ஸ்டாலினுக்கு சுத்தமா புடிக்கலை. இதனாலத்தான் திருமாவளவனை கூட்டணியை விட்டு வெளியேத்தனும் ன்ற முடிவுக்கு வந்துட்டார். திருமாவளவன் இப்படிப்பட்ட அவமானத்தை சுத்தமா எதிர்ப்பார்க்கல.
அதுக்கு அப்புறம்தான் கருணாநிதி தலையிட்டு, இரண்டாவது சீட் கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணார்”
“சரி.. பிஜேபி அணியில என்ன நடக்குது ? அங்க இன்னும் கொழப்பம் நீடிப்பதா சொல்றாங்களே… ? ” என்றான் வடிவேல்.
“பிஜேபி அணியில் பெரிய குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. பாட்டாளி மக்கள் கட்சியும், விஜயகாந்தும், ஒரே தொகுதிகளுக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு தரப்பும் விட்டுக் கொடுப்பதா இல்ல. ரொம்பவும் எரிச்சலடைந்த பிஜேபி தலைமை, ஒரு கட்டத்துல பாமகவை கழட்டி விடுங்கன்னு சொல்லிட்டாங்க”
“மருத்துவர் அய்யா என்ன முடிவுல இருக்கார் ? “
“மருத்துவர் அய்யா ஒரே குழப்பத்துல இருக்கார். பிஜேபி அணிக்கு போலாம்னு அவர் முடிவெடுத்ததுக்கு அன்புமணிக்கு தர்றேன்னு சொன்ன மாநிலங்களவை உறுப்பினர் பதவி முக்கிய பங்கு வகித்திருக்கு. தேமுதிக பிஜேபி அணிக்கு வந்தது, வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு சுத்தமா புடிக்கலை. கூட்டணி வைத்தாலும், தேமுதிக வேட்பாளர்களை தோக்கடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க”
“சரி.. வைகோ என்ன பண்றார். எல்லாருக்கும் முன்னாடி பிஜேபி கூட்டணியில இணைஞ்சாரே…. ? “
“எல்லாருக்கும் முன்னாடி இணைஞ்சதாலதான் இன்னைக்கு திரிசங்கு சொர்கத்துல நிக்கிறாரு. கூட்டணியில வேகமா இணைஞ்சாலும், அவர் கேட்ட தொகுதிகள் 12. ஆனா, 5 அல்லது 6தான் தர முடியும்னு தெளிவா சொல்லிட்டாங்க.
இதனால பிஜேபி தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை வீட்டுக்கு அழைச்சு விருந்து குடுத்து, நாங்க பெரிய கட்சி, எனக்கு நெறய்ய சீட் ஒதுக்கணும். தமிழக தலைவர்கள் என்னை மதிக்க மாட்றாங்க. நீங்க கொஞ்சம் ரெக்கமன்ட் பண்ணி எனக்கு நெறய்ய சீட் ஒதுக்கச் சொல்லுங்கன்னு கெஞ்சியிருக்காரு. வைகோவவோட ஸ்டைலே எப்படின்னா, நான்தான் உங்களுக்கு விசுவாசமான ஆளுன்னு ஓவரா சீன் போடுவாரு.
உலகத்துல யாராவது, இன்னொரு கட்சியோட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக, கமிட்டி போட்டு, வேலை செய்வாங்களா. இது மாதிரியான நடவடிக்கைளாலத்தான், அவர் தனது மரியாதையை தொடர்ந்து இழந்துக்கிட்டு வர்றார். தான் ஒரு ஆளுமை இல்லாத தலைவர்ன்றதை வைகோ தொடர்ந்து நிரூபிச்சிக்கிட்டே வர்றார்”
“கேப்டன் பிரச்சாரத் தேதிகளை அறிவிச்சிட்டாரே…. ” என்றான் பீமராஜன்.
“அவர் யாருக்காக பிரச்சாரம் பண்ணப்போறாருன்னு யாருக்குமே தெரியலை. அவருக்கும் தெரியலை. கூட்டணியோ, வேட்பாளர்களோ முடிவாகாத நிலையில், இப்படி பிரச்சாரத்துக்கு யாருக்காக கிளம்பறாருன்னு யாருக்குமே புரியலை. பிஜேபியோடு பேச்சுவார்த்தைகளில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமத்தான் இருக்கு. இறுதித் தகவலின்படி, கேப்டன் பிஜேபி கூட்டணியில இருந் வெளியேறப் போறார். காங்கிரஸ் கட்சி மேல நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
இவங்க இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்கன்னா, பச்சமுத்து, அவர் பங்குக்கு 7 சீட் வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கார். “
“அவருக்கு ஏழு சீட்டா ? என்னய்யா அநியாயமா இருக்கு”
“என்ன அநியாயம். தேர்தல் செலவில் முக்கால்வாசியை அவர் ஏத்துக்கறார். கேப்டன் கேக்கும் கோடிகளை அவர்தான் கொடுக்கறார். அப்போ அதிகமா கேக்கத்தானே செய்வார் ? “
“கல்வித் தந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். சரி.. காங்கிரஸ் அனாதையாயிடுச்சா… அவங்க கதி அவ்வளவுதானா ? தனியா விட்டுட்டாங்களா… ? ” என்றான் ரத்னவேல்.
“எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஸ்டாலின் காங்கிரஸ் வேண்டாம்னு தீர்மானமா இருக்கார். இந்த நிலையில, கனிமொழி மேல வருமானத்துக்கு அதிகமா சொத்துக் குவித்தது தொடர்பா கிஷோர் என்பவர் மத்திய புலனாய்வுத் துறைக்கு புகார் அனுப்பியிருக்காரு.
அந்தப் புகார் டெல்லி சிபிஐக்கு கிடைத்ததுமே காங்கிரஸ் சுறுசுறுப்பா ஆயிடுச்சு. அந்தப் புகாரை சென்னையில் உள்ள எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் கொடுத்து பூர்வாங்க விசாரணையை தொடங்க இருக்குறாங்க.
இந்தத் தகவல் திமுக தலைமைக்கும் தெரிஞ்சுதான் இருக்கு. ஸ்டாலினுக்கும் இது தெரியும். ஸ்டாலினுக்கு இது தெரிஞ்சுதான் அவர் சிபிஐ விசாரணை நடக்கட்டும் ன்ற முடிவுல இருக்காரு”
“என்னடா சொல்ற…. கனிமொழி மேல வழக்கு போட்டா ஸ்டாலின் நடக்கட்டும்னு சொல்றாரா…. ? “
“ஆமா.. வெளிப்படையா பாத்தா, ஸ்டாலின் தைரியமான ஆளா தெரிஞ்சாலும் ஸ்டாலின் பெரிய தொடை நடுங்கி. கனிமொழி ஒரு சாதாரண பொதுக்கூட்டம் போட்டா கூட அதைப் பாத்து பயந்து, கனிமொழி வளந்துடுவாரோன்னு அதைக் கூட ரத்து பண்ற ஆளுதான் ஸ்டாலின். இன்னைக்கு இல்லன்னாலும், எப்பவாவது கனிமொழி வளந்து நமக்கு சிக்கல் கொடுப்பாருன்னு ஸ்டாலின் உறுதியா நம்பறாரு.
அதனால கனிமொழி சிக்கல்ல மாட்டட்டும்னு நினைக்கிறாரு ஸ்டாலின்”
அந்த அடிப்படையிலதான் கனிமொழி மேல வழக்குகள் வரணும், கனிமொழி சிறைக்கு போகணும்னு உறுதியா இருக்காரு. காங்கிரஸும் இந்தப் புகாரை தீவிரமா விசாரிக்க ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டு இருக்கு. வரக்கூடிய நாட்கள் தேர்தலில் திமுகவுக்கு ரொம்ப நெருக்கடியா அமையும்”
“சரி. திமுக நெருக்கடியை சொல்லிட்ட. அதிமுகவுக்கு என்ன நெருக்கடி ? அந்த கட்சியோட நிலைமை எப்படிடா இருக்கு ? ” என்றான் பீமராஜன்.
“40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிச்சு, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, எப்படியாவது ஜெயிச்சுடலாம்னு அம்மா கனவு காண்றாங்க. தமிழகத்துல எத்தனை சாதிகள் இருக்கோ, எத்தனை சாதிச்சங்கங்கள் இருக்கோ, அத்தனை பேரையும் அழைச்சு போட்டோ எடுத்துக்கறாங்க. அவங்க அத்தனை பேருக்கும் என்ன இன்ஸ்ட்ரக்சன்னா, வெளியில போனதும், அம்மா பிரதமராகனும், அப்போதான் இந்தியா சுபிட்சமா இருக்கும். இல்லன்னா இந்தியாவே அதலபாதாளத்தில் வீழ்ந்துடும் னு. அவங்களும், வெளியில வந்து சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்றாங்க. இந்த மாதிரி அல்லு சில்லு அடிமைகள் தரும் ஆதரவு, தன்னை பிரதமராக்கும்னு நெனைக்கிற அளவுக்கு ஜெயலலிதாவோட பிரதமர் கனவு கலர் கலரா தெரியுது.
ஆனா, ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய தலைவலியா சொத்துக் குவிப்பு வழக்கு அமையப்போகுது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருச்சு. இப்போ வழக்கறிஞர்களோட வாதம் மட்டுமே எஞ்சியிருக்கு. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தான் ஏற்கனவே வாங்கிய 50 கோடிக்கு விசுவாசமா, வழக்கை தாமதப்படுத்த அத்தனை நடவடிக்கைகளும் எடுத்துக்கிட்டு இருக்கார்.
வாதங்கள் தொடங்க இருக்கும் நேரத்தில், ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் னு நீதிமன்றத்துக்கு வராம டபாய்ஞ்சுட்டாரு. இந்த மாதிரி சாக்கு போக்குகள் எத்தனை நாளைக்கு போகும்னு தெரியலை.
அரசுத் தரப்புக்கு உதவியா இருக்கக்கூடிய பேராசிரியர் அன்பழகன் தரப்பு, அவருக்கு பதிலா நாங்க வாதாட்றோம் னு சொன்னாங்க. நீதிபதி வழக்கை தள்ளி வைச்சுட்டாரு.
திங்களன்று உச்சநீதிமன்றம் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீதான வழக்குகள், தினந்தோறும் நடத்தப்பட்டு, ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை, பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவும் கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். ஒரு வருடத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்றால், 17 ஆண்டுகளாக நடக்கும் வழக்கை எத்தனை விரைவாக முடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
இனியும் ஜெயலலிதா ஏதாவது புதிய மனுவோடு உச்சநீதிமன்றம் சென்றால், திங்கட்கிழமை தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அது நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கு. “
“அப்போ அம்மா பாடு கஷ்டம்தான்னு சொல்லு ? “
“கஷ்டம்தான்”
“தமிழகத்தில் முடிவுகள் எப்படிப்பா அமையும் ? ” என்றார் கணேசன்
“அண்ணே… இன்னும் கூட்டணியே தெளிவாக முடிவாகாத நிலையில், நாம எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா, இது வரை நடந்த தேர்தல்களிலேயே வித்தியாசமான தேர்தலா இது அமையும்.
சமூக வலைத்தளங்கள் இந்த தேர்தலில் மிகப்பெரிய பங்கை ஆற்றப் போகுது. மற்ற எல்லா ஊடகங்களையும் தங்களுக்கு சார்பாக கட்சிகள் பயன்படுத்துவது போல, சமூக வலைத்தளங்களையும் ஏறக்குறைய எல்லா கட்சிகளும் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கு. சமூக வலைத்தளங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவா இருக்கக் கூடியவர்கள் ஆதரவா கருத்துக்களை பரப்புவது போல, பணம் கொடுத்து, ஒரு கட்சிக்கு சாதகமாக கருத்துக்களை பரப்புவதும் இந்த தேர்தலில் நடைபெற்று வருது.
தேர்தல் ஆணையத்தில் இந்த சமூக வலைத்தளங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தனியா விவாதம் நடைபெற்றிருக்கு. இப்போதைக்கு கண்காணிப்போம். பணம் கொடுத்து சமூக வலைத்தளங்களை கட்சிகள் பயன்படுத்துவது தெரிய வந்தாலோ, குறிப்பாக புகார் வந்தாலோ, நடவடிக்கை எடுக்கலாம்னு முடிவெடுக்கப்பட்டிருக்கு.”
என்று சொல்லி விட்டு, “போலாம்ணே” என்றான் தமிழ்.
“என்னப்பா இவ்வளவு சீக்கிரமா கௌம்பலாம்னு சொல்ற… வேற செய்திகள் இல்லையா ? “
“அண்ணே.. இது தேர்தல் நேரம். நானே கடுமையான நெருக்கடியில இருக்கேன்றது உங்களுக்குத் தெரியாதா ? அடுத்த வாரம் கரெக்டா வர முயற்சி பண்றேன்” என்று சொல்லி விட்டு, மறைந்தான் தமிழ்.
Mr.Savukku, request you to please continue the TASMACTAMIL article continuously.
ஏப்பா தமிழு எங்கையா போன? எப்பையா வருவ? வேகமா வாய்யா! உனக்கு எதிரா எவன் கேஸ் போட்டாலும் நீ பயப்படாம எங்கள பாக்க வா!