கம்யூனிஸ்டுகள் பலவகை. காரல் மார்க்ஸ், ஸ்டாலின், போல் பாட், நல்ல கண்ணு, தா பாண்டியன், இப்படிப் பலரும் உலகின் கண்களில் கம்யூனிஸ்டுகளாகத் தெரிகின்றனர். பேராசானுக்குப் பிறகு உண்மையான கம்யூனிஸ்டுகள் யார் என்பதில் நிறைய குழப்பமிருக்கிறது. அத்தகைய விவாதங்களுக்கப்பால், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடவில்லை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உருவாகிவிடவில்லை, கம்யூனிசப் புரட்சிகளாகக் கருதப்பட்டவை காலப்போக்கில் கரைந்தே போயின, ஏதோ கியூபாவில் மட்டும் சோஷலிச அமைப்பு திண்டாடித் திணறி உயிர்பிழைத்திருக்கிறது.
இத்தகைய பின்னடைவுகள் குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை அதையெல்லாம் ஆராயப்போவதில்லை. அஇஅதிமுகவால் கம்யூனிஸ்டுகளும் திமுகவால் விடுதலைச் சிறுத்தைகளும் அவமானப்படுத்தப்பட்டது குறித்த சவுக்கு கட்டுரைக்கு எதிர்வினை என்று கூட இல்லை… கூடுதலான சில தகவல்களுடன் அந்நிகழ்வுகள் குறித்த என் பார்வையே இது.
வழக்கத்திற்கு மாறாக பகடியையும், தடாலடித் தாக்குதலையும் குறைத்தே சவுக்கார் எழுதியிருக்கிறார். அத்தகைய அணுகுமுறை அவரது மதிப்பீடுகளை வெளிப்படுத்துகிறது. இப்படி கம்யூனிஸ்டுகள் குறித்தும் தலித் அமைப்பினர் குறித்தும் உண்மையிலேயே அக்கறை கொண்டோர் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கின்றனர், இரு அரசியல் அமைப்புக்களும் தழைத்தோங்கவேண்டிய சூழலும் இருக்கிறது. அவசியமும் இருக்கிறது. ஆயினும் அவை இப்படித் தேங்கித் தேங்கி நம்மைத் தேம்பவிடுவானேன்? சீரழிவானேன்?
உட்கட்சி ஜனநாயகத்தை ஏறத்தாழ முற்றிலுமாகவே மறுத்து., கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு மடமாகவே ஆக்கி, நடுத்தரவர்க்கத்தினரின் வெறுப்பை சம்பாதித்து, பொதுவாகவே மக்களிடமிருந்து முற்றிலும் அன்னியப்படமுழு முதற் காரணமாயிருந்த ஸ்டாலினை நிராகரிக்காதவரை எந்தக் கம்யூனிஸ்ட் அமைப்பிற்கும் எதிர்காலமே இல்லை.
அது தவிர காரல் மார்க்ஸ் காலத்திற்குப் பின் உலகப் பொருளாதார சூழலில் பாரதூர மாற்றங்கள் நிகழ்ந்து, நசித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடுத்தரவர்க்கம் இன்று கோலோச்ச, ஆள்வோருக்கு நெருக்கமாக, நெருக்கமாகிவிடத் துடிக்க, பாட்டாளி வர்க்க புரட்சி என்பதே பகற்கனவாகிவிட்டது. அது வெறும் சூத்திரமாகவே இருக்கிறது. அத்தகையதொரு கொடுமையான சூழலில் தேர்தல் பாதைக்குத் திரும்பவேண்டிய அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு. அதன் விளைவாய் எழுந்த சவால்களை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக சமாளிக்க முயல்கின்றனர். எங்குமே பூர்ஷ்வா ஜனநாயக முறையில் பெருவாரியான வாக்குக்களைப் பெற்று ஆட்சிக்கு வர இயலவில்லை. பூர்ஷ்வா ஊடகங்களின் பிரச்சாரம் ஒரு புறமென்றால் ஸ்டாலினீயத்தால் உருவான அவப்பெயரை அகற்ற உருப்படியான முயற்சிகளை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளாதது இன்னொரு புறம். எங்கும் கட்சித் தலைமையிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே ஸ்டாலினீயத்தை நிராகரிக்க மறுக்கின்றனரோ என்ற ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு.
இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிகளைக் கணிசமாகவே கண்டுவந்திருக்கின்றனர் கம்யூனிஸ்டுகள். உலகிலேயே வாக்குப் பெட்டி மூலமாக ஆட்சிக்கு வந்த பெருமை கேரளாவின் நம்பூதிரிபாடு அரசுக்குண்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தில் சிபிஎம் ஆட்சியிலிருந்தது. மீண்டும் மீண்டும் திரிபுராவிலும். விடுதலை பெற்ற பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே சென்னை இராஜதானியிலும் பிரதான எதிர்க்கட்சியானார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன?
எர்ணாக்குளம் மணக்கால் சங்கரன் நம்பூதிரி பாட்
அநியாயமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்டு கலைக்கப்பட்டது நம்பூதிரிபாடு அரசு. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்கள் வாழ்நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்திற்கும் வழி வகுத்தது. ஆனால் இன்று பல்வேறு ஊழல் புகார்களுக்குள்ளானவர் சிபிஎம்மின் மாநிலச் செயலர், அதன் வன்முறை பற்றியும் அடாவடித் தனங்கள் பற்றியும் கதைகதையாய்ச் சொல்லுகின்றனர், மலப்புரத்தை உருவாக்கி அடிப்படைவாதத்தை ஊக்குவித்ததே அவர்கள்தான், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மாநில வெறியைத் தானே அவர்கள் ஊற்றி வளர்த்தனர்? இப்படிப் போகிறது அவலங்கள் பட்டியல்.
மேற்குவங்கத்தில் மிகப் பெரிய அளவில் நிலச்சீர்திருத்தங்கள் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற்று, எமர்ஜென்சி கொடுமைகள், நக்சல் புரட்சி அனைத்தையும் எதிர்கொண்டு நீண்ட காலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களின் அராஜகம், மமதை வீழ்ச்சிக்கு வழிகோலியது. நான் மேற்குவங்கத்தைச் சேர்ந்த எவரை சந்தித்தாலும் கேட்கும் முதல் கேள்வியே ஆட்சி எப்படி, கம்யூனிஸ்டுகள் எப்படி என்பதுதான். பத்து வருட காலமாகவே யாரைக் கேட்டாலும் காட்டமான தாக்குதல் அல்லது ஒரு இகழ்ச்சிப் புன்னகை அதுவே எதிர்வினையாக இருக்கும். இவர்களெல்லாம் கம்யூனிஸ்டு விரோதிகள் என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.
நிலச்சீர்திருத்ததிற்குப் பின்னாலான சிக்கல்கள் குறித்து விரிவான கட்டுரைகளைப் படித்தும் எனக்கு விமர்சனங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. ஆனால் மமதாவின் வெற்றி நமது கனவுகளைத் தகர்த்துவிட்டது. தொடர்ந்து மிக மோசமான ஆட்சி, அராஜகம், ஜெயலலிதா பாணி எடுத்தேன் கவிழ்த்தேன் போக்கு இவற்றையும் மீறி திரிணாமூல் நாடாளுமன்றத் தேர்தல்களில் மிக அதிக இடங்களை வெல்லவிருக்கிறது. எந்த அளவு மக்கள் மனம் நொந்திருந்தால் இன்றைய அவலங்கள் எவ்வளவோ மேல் என மக்கள் நினைப்பார்கள்?
திரிபுராவில் கூட ஒரு முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் கரன்சி மெத்தையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கரன்சிகள் மீது படுத்து உறங்கும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளுர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி
மஹாராஷ்டிராவிலும் குஜராத்திலும் வேண்டுமானால் பொதுத்துறை ஜவுளி ஆலைகள் அழிக்கப்பட, கம்யூனிஸ்டுகள் பலவீனமடைந்தனர் எனலாம். மற்ற இடங்களில்? அயோத்தியா அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஐ வெற்றி கூட பெற்றிருக்கிறது. ஆனால் உ.பியில் அது இன்று பெயரளவில்தான்.. பீஹாரில் ஏதோ கொஞ்சம். ஏனிப்படி?
இதற்கெல்லாம் தனியாக ஒரு புத்தகமே எழுதவேண்டும். இவ்வளவு விரிவாக எழுதியதே கூட தமிழ்நாட்டில் ஒன்றும் அசாதாரண சூழலில்லை பொதுவாகவே தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பின்னடைவுகளையே சந்தித்துவருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே.
1952 சட்டமன்றத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றவர்கள், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கம்யூனிஸ்டுகள் வலிமையுடன் திகழ்ந்த பகுதிகள் அங்கே சென்றுவிட்ட பின்னணியில், அடுத்த தேர்தல்களில் எண்ணிக்கை வீழ்வது சரி…ஆனால் 62லிருந்து நான்கா? அதுவும் முதல் முதலாகப் போட்டியிட்ட திமுக 13 இடங்களில் வெல்லும்போது? அதன் பிறகு எழவே முடியவில்லையே கம்யூனிஸ்டுகள். எம்மண்ணில் மாவீரன் சீனிவாசராவ் சவுக்கடி சாணிப்பால் கொடுமைக்கு முடிவு கட்டினாரோ எங்கு ஒப்பீட்டளவிலாவது அம்மக்கள் தன்மானத்துடன் வாழமுடிகிறதோ அங்கே, 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரத்திற்குப் பிறகும், கம்யூனிஸ்டுகள் பெரும் சக்தியாக உருவாகவில்லையே.
ஆங்கிலத்தில் அனிமல் ஃபார்ம், டார்க்னஸ் அட் நூன் போன்று ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரலும் தோழர்களை ஆத்ம பரிசோதனைக்கு உந்தியிருக்கவேண்டும். ஆனால் மௌனத்தாலேயே அப் புதினம் கொல்லப்பட்டது. ஜெமோவின் காழ்ப்புணர்வுகளையெல்லாம் தாண்டி தொழிற்சங்க அரசியிலில் உள்ள பிரச்சினைகளை அவர் சிறப்பாகவே எடுத்துக்காட்டியிருக்கிறார். அவை விவாதிக்கப்படாத நிலையில் இப்போது நாம் சிபிஎம்-சிபிஐ பிளவுகளுக்கான காரணங்கள் அல்லது நக்சலைட்டுகள் இவற்றையெல்லாம் பேசாமல். இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எப்படி நடந்துகொள்கின்றன, ஏன் இன்றைய அவல நிலை என்பதை மட்டும் இங்கே நோக்கலாம்.
தா பாண்டியனைப் பற்றி அதிகம் பேச ஒன்றுமில்லை. சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லியாயிற்று. ஓரிரு குறிப்புக்கள் மட்டும் இங்கே. இராஜீவ் படுகொலைக்குப் பிறகு அவர் ஏறத்தாழ காங்கிரசின் ஊதுகுழலாகவே மாறியிருந்தார்.
93-94ல் 33,000 இலங்கைத் தமிழ் அகதிகள் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். வழக்குக்கள் ஆர்ப்பாட்டங்கள் பின்னணியில் அது நிறுத்தப்பட்டது. கல்விச் சலுகைகள் மறுக்கப்பட்டன. அகதிகளை வைத்து பிரதமர் நரசிம்மராவ் வழிப்பறிக்கொள்ளைகள் நடத்தி தன் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார் என்றெல்லாம் ஜெ புகார் கூறினார். சிறப்பு முகாம்களில் அப்பாவிகள் பலர் அவதிப்பட்டனர், அக்காலகட்டத்தில் அம்மக்களுக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கு நடத்தியபோது அதைப் புலி ஆதரவு கருத்தரங்கம் என்று கட்டுரையே எழுதினார் பாண்டியனார்.
நல்ல கண்ணுவிற்குப் பிறகு வழிநடத்த தலைமை வறட்சி. அவரை அணைத்துக்கொண்டார்கள். சரி. ஆனால் என்ன ஆயிற்று. கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியர்களிடமும் பின்னர் ஜெவிடமும் ஒட்டுமொத்தமாகக் கட்சியை அடகே வைத்துவிட்டார். நீங்கள் மூன்றாவது அணியை மையமாக வைத்து யோசிக்கிறீர்கள். மோடி பிரதமராக முடியாத சூழலில், பா.ஜ.க. ஆதரவோடு ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் தில்லியில் அடிபடுகிறதே? என ஒரு செய்தியாளர் கேட்டபோது, ”சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும் சந்தோஷம்தான்!” இதற்கு மேலும் ஒரு கம்யூனிஸ்ட் வீழ்ச்சியடைய முடியுமா என்ன?
நல்லகண்ணு ரொம்ப நல்ல மனிதர். அதுதான் சிக்கலே. கட்சியில் இருந்த முரண்பாடுகளை உறுதியுடன் களைய முற்படாமல், எளிய வழியாக, தனிக்கடை நடத்தி போணியாகாத நிலையில் மீண்டும் தாய்க் கட்சிக்கு வந்த தா.பா.வை செயலராக்கினார். மிகச் சிறந்த பேச்சாளர் என்பதற்காக கட்சியை அவரிடம் ஒப்படைத்துவிடுவதா?
நல்லவராயிருந்து பயனென்ன? சரியான திசையில் கட்சியை வழிநடத்தும் மன உறுதியில்லையே, என என் நண்பரொருவர் நல்லகண்ணு குறித்து வருந்துவார். சிபிஎம் உட்கட்சிப் பிரச்சினையில் கூடுதல் கடுமை காட்டும் என்பதால் நான் சில இளைஞர்களை சிபிஐயில் சேருமாறு தூண்டினேன். சேர்ந்த சில மாதங்களிலேயே பல்வேறு சிக்கல்கள். பெருந்தலைகள் இளைஞர்களின் ஆர்வத்தை வரவேற்கவில்லை. மாறாக அவர்கள் செயல்பாடு தங்களுக்கு ஆபத்து என நினைத்து ஒதுக்கிவைக்க முயன்றனர். நல்ல கண்ணுவிடம் பஞ்சாயத்திற்கு போனால், இதுதான் கட்சிக் கட்டுப்பாடு, அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூற, அவர்கள் வெறுத்துப்போய் கட்சியைவிட்டே விலகிவிட்டனர்.
தளி ராமச்சந்திரன் என்ற சிபிஐ எம்.எல்.ஏ மீது அப்பகுதி மக்களின் நிலங்களை அபகரித்தார், க்ரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தளி பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரித்தால் தளி ராமச்சந்திரனின் நடவடிக்கைகள் தெலுங்குப் பட வில்லனையும் விஞ்சும் வகையில் உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தளி ராமச்சந்திரன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிறகும் கூட, அவரை சிபிஐ கட்சி இடைநீக்கம் கூட செய்யவில்லை. இவையனைத்தையும் நல்லக்கண்ணு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவைக்கு சிபிஐக்கு ஓர் இடத்தை விட்டுத் தர திமுக முன்வந்தபோது அது நல்லகண்ணுவிற்காகத்தான். ஆனால் அவர் ஒதுங்கிக்கொண்டு ராஜாவுக்கு விட்டுக்கொடுக்கிறார். ராஜாவிற்கு புதுடில்லி அரசியல்வாதிகளை நன்கு தெரியும் என்பதைத் தாண்டி அவருக்கும் தமிழகக் கட்சிக்கும் தொடர்பென்ன,. எத்தனை முறை இங்கே வருகிறார்.. தொண்டர்களுடன் சகஜமாகப் பழகுகிறார், என்றெல்லாம் நல்லகண்ணுவோ மற்றவர்களோ கேட்டதாகத் தெரியவில்லை ? எனக்கு வேறு உருப்படியான பணியிருக்கிறது, ஆங்கிலம் சரளமாகப் பேசமுடியும், இந்தியும் தெரியும், நீங்கள் போங்கள் என்கிறார். அவரும் வாயெல்லாம் பல்லாகப் போய்விட்டார், முதலில் திமுக ஆதரவில் பின்னர் அ இஅதிமுக ஆதரவில். இதைப் பற்றியெல்லாம் கட்சி கூச்சப்படுவதே இல்லை. எப்படி மதிப்பார்கள் கட்சியை?
ஒப்பீட்டளவில் சிபிஎம் கட்டுக்கோப்பான கட்சியே. ஆனால் உ.ராவின் கதி நமக்குத் தெரியும். சவுக்கு எழுதியதைத் தாண்டி வேறு சில பரிமாணங்கள் அவரது கதையில் உண்டு. நான் அதை விவாதிக்கப்போவதில்லை. அர்ப்பணிப்பு மிகுந்த அத்தோழரை, அவரது சொந்த வாழ்வின் சிக்கல்கள் தெரிந்திருந்தும், அப்படி அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தள்ளியிருக்கலாமா? அவர் இறந்தபோது கொதித்த பல தோழர்கள் சில வாரங்களிலேயே அடங்கிப்போனார்கள். அதாவது கட்சித் தலைமையினை கேள்விக்குள்ளாக்குவது பாவகரமான காரியம் என்ற எண்ணம் அங்கே வேரூன்றியிருக்கிறது.
தேவையில்லாமல் அணு உலை பிரச்சினையில் பெரும் ரகளை செய்து காங்கிரசை முலாயம் சிங் போன்றோரின் பிடிக்குத் தள்ளி, இடது சாரி சக்திகளுக்கு இருந்த சிறிய அந்த வெளியையும் இழந்து, பின்னர் நடந்த தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்திப்பதற்கும் காரணமான தலைமை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கவேண்டும். இல்லையே..ஏதேதோ சொல்லி பூசி மெழுகினர்.
ஒரு கொசுறுத் தகவலென்னவெனில் சிபிஎம்முக்கு வலுவான தளங்களான கேரளாவிலிருந்தோ மேற்கு வங்கத்திலிருந்தோ தலைமைக் குழுவுக்குச் செல்ல எவரும் விரும்புவதில்லை….காரணம் அத்தகைய பகுதிகளில் தமக்கிருக்கும் செல்வாக்கினை இழக்க அவர்கள் விரும்புவதில்லை…எனவே கட்சி எங்கே பலவீனமாக இருக்கிறதோ அங்கிருந்து வருவோரால்தான் பொலிட் பீரோவே உருவாக்கப்படுகிறது.
பிரகாஷ் காரத் அல்லது யெச்சூரியின் ஆளுமைகளும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவையே ஆனால் அவர்களுக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு? எத்தனை போராட்டங்களை அவர்கள் நடத்தியிருக்கின்றனர்? வெறும் அறிவுஜீவி சாதனைகள் மூலமாகவே ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகிவிடலாமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை டிகே ரங்கராஜனுக்கு மாநிலங்களவை இடம் வேண்டுமென்பதற்காக முதலில் கருணாநிதியிடமும் பின்னர் ஜெயலலிதாவிடமும் மண்டியிட்டனர். தன் குடும்பத்தினருடன் தன்னை சந்தித்து நன்றி சொன்னார் ரங்கராஜன் என்று கலைஞர் அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தினார்.
ராஜாவும் ரங்கராஜனும் மாநிலங்களவையில் முழங்கி என்னவிதமான மாற்றங்கள் உருவாயின. இதற்கெல்லாமா சமரசம் செய்துகொள்வது?
தேர்தலின்போது கூட்டணி அமைத்திருந்தாலும் பின்னர் சற்று விலகிநின்று விமர்சனம் செய்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்கள் தங்கள் விசுவாசத்தை நிலைநாட்ட தா.பாவோடு போட்டிபோடுவதில்லை. தலித் பிரச்சினையில் முன்னெப்போதையும்விட அதிக அக்கறை காட்டுகின்றனர். பாராட்டத்தக்கதே. ஜி.ஆருக்கும் சொந்த அஜெண்டாவெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. மகனுக்கோ மகளுக்கோ பதவி வாங்க அலைவதில்லை. ஆனால் அவர்கள் மத்தியில்தானே திருப்பூர் கோவிந்தசாமி தோன்றி எல்லாவற்றையும் கேலிக்கூத்தாக்கினார். தேர்தலில் வென்று பெரிதாக சாதிக்கப்போவது எதுவுமில்லை எனத் தெரிந்தும் மாறி மாறி கூட்டணி தேடுவானேன்?
ஜெ சிறுபான்மையினர் வாக்குக்களை இழக்க விரும்பாததாலேயே இடதுகளுடன் கூட்டு என்று நாடகமாடுகிறார் எனத் தெரிந்தும் அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது எப்ப்டிச் சரியாகும்? சுத்தமாக அந்த அம்மா கை கழுவிய பிறகும் பாலபாரதி அய்யோ இப்படிச் செய்கிறீர்களே நியாயமா என்று இறைஞ்சுகிறார்.
சரி…இனி என்னதான் செய்யலாம்? சிபிஐ தேய்ந்துகொண்டே இருக்கிறது. புல்லுருவிகள் பலர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். ஏதோ ரெண்டு காண்ட்ராக்ட், நாலு காசு, மே தினக் கொடியேற்றம் அவ்வப்போது விவசாயிகளுக்காக ஏதாவது போராட்டம், அவ்வளவுதான். நல்லகண்ணுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்துவிடமுடியாது.
அமைப்புரீதியாக கூடுதல் வலிமையுடையது சிபிஎம். பெரு மற்றும் சிறு நிறுவனத் தொழிலாளர்களை அணிதிரட்டியும் விவசாயத்தொழிலாளர்களுடன் இணைந்தும் இப்போது தலித் மக்களுக்காகக் குரல் கொடுத்தும் ஓரளவு தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயல்கின்றனர். ஆனால் அது மட்டுமே போதாது. இப்போது தனித்துப் போட்டியிடிப்போகின்றனர். எங்கே அவர்களால் வென்றுவிடமுடியும்?
சவுக்கு கேட்பதுபோல் மற்ற பலரும் வருந்துவதுபோல் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்ட திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக எவரும் கம்யூனிஸ்டுகளைப் பார்ப்பதே இல்லையே. ஏன் இந்த அவல நிலை? மாற்றாக இருக்க முயலாததுதான்,
இன்றைய சூழலில், தேர்தல் அரசியல் மூலமாகத்தான் ஆட்சியைக் கைப்பற்றமுடியும். ஆனால் அவ்வாறு மக்கள் ஆதரவைப் பெறுவதைத் தடுக்க கார்ப்பரேட் ஊடகங்கள் உள்ளிட்ட ஆளும் வர்க்க அடிவருடிகள் இயன்றதனைத்தையும் செய்வர். அதனை மீறி மக்களின் நம்பிக்கையைப் பெற போராட்டங்களில் இறங்குவதுதான் ஒரே வழி. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து குறிப்பிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, மனம் தளராமல், அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாமல் போராடவேண்டும்.
கம்யூனிஸ்டுகள் கேவலம் ஓரிரு சீட்டுக்களுக்காக தங்களை எக்கட்டத்திலும் அடமானம் வைக்கமாட்டார்கள், விற்க மாட்டார்கள், சமூக நலனைத் தவிர வேறெதிலும் அவர்களுக்கு நாட்டமில்லை என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உருவாகவேண்டும். அப்படி உருவாக ஒரு பத்தாண்டுகளுக்காவது தேர்தல் அரசியலிலிருந்து விலகி மக்களுடன் ஐக்கியப்படவேண்டும்.
இது பகற்கனவுதான். ஆனால் இப்படிப்பட்ட கனவுகாணும் தலைவர்கள் தோன்றாமலா போய்விடுவார்கள்?
(தலித் அமைப்புக்கள் பற்றி அடுத்த பகுதியில்)
த.நா.கோபாலன்
மூத்த பத்திரிக்கையாளர்