அன்புள்ள சகோதரர் செல்வம் அவர்களுக்கு,
இவ்வுலகின் கடைசி துதிபாடி நான்தான் என்பது தங்களுக்குத் நன்றாகத் தெரியும்.
இருந்தபோதும் நீங்கள் சவுக்கு வலைத்தளம் தொடர்பான வழக்கை கையாண்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் உங்கள் மீது நடக்கும் விமர்சனங்களும், கேலிகளும், கிண்டல்களும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றன.
இது குறித்து பேசும் அனைவரிடமும், மனிதர்களுக்கே உரிய இரண்டொரு குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் நீதிபதி சி.டி.செல்வம் ஒரு நல்ல நீதிபதியென்றும், சென்னை நீதிமன்றத்தில் உள்ள ஒரு சில சிறந்த நீதிபதிகளில் இவர் ஒருவர் என்றும் கடந்த சில வாரங்களாக நான் பலரிடம் கூறி வருகிறேன். நீதிமன்றத்தில் சவுக்கு தளம் மீது கோபமாக நீங்கள் பேசியதெல்லாம் பொய்யான, தவறான அனுமானங்களின் அடிப்படையிலேயே என்று நான் இது குறித்து பேசுகையில் கூறி வருகிறேன். (இரண்டொரு குறைபாடுகள் என்பது இவர் உத்தரவுகளை வாரி வழங்கும் மூத்த (திமுக) வழக்கறிஞர்கள்.)
ஆனால் இன்று (28.02.2014) அது போல பேச முடியாத நிலையில் இருக்கிறேன். அப்படியே பேசினாலும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
சவுக்குக்கு எதிரான வழக்கு நடத்திய அந்த வழக்கறிஞர்கள் ஜோடி உங்களிடம் தவறான விஷயங்களைக் கூறியதாலேயே இந்த நியாயமற்ற தடை உத்தரவை நீங்கள் பிறப்பித்திருக்கிறீர்கள் என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
ஆனால் உங்கள் முன்னால் குவித்து வைக்கப்பட்ட ஏராளமான பொய்களில் இருந்து, உண்மைகளை தேடிக் கண்டறிய நீங்கள் தவறி விட்டீர்கள். அப்படித் தவறியதன் மூலமாக நீங்கள் பதவியேற்கையில் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்கை நீங்கள் விசாரிக்கக் கூடாது என்ற அடிப்படை விதியை மீறி விட்டீர்கள்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் நேர்மையானவர் என்றும், உங்களுக்கு இந்த விவகாரத்தில் தனிப்பட்ட ஆர்வம் இல்லை என்று நான் நம்பினாலும், நீங்கள் செய்த இவ்வளவு பெரிய தவறை மக்களுக்கு விளக்குவது எளிதான காரியம் அல்ல.
ஆனால், உங்களுக்கு எதிராக சவுக்கு தளத்தில் இருந்த சில கட்டுரைகளின் காரணமாக நீங்கள் பாரபட்சமாக நடந்து கொண்டீர்கள் என்பது உண்மையே. குறிப்பாக, நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தாக்கல் செய்த மனுவுக்குப் பிறகும் தாங்கள் விலகாமல் உத்தரவு பிறப்பித்ததை வேறு எப்படி எடுத்துக் கொள்வது ?.
ஆனால் அந்த லாஜிக்கின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் எந்த நீதிபதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பாகவோ இந்து தொடர்பாகவோ, அல்லது டாட்டா அல்லது ரிலையன்ஸ் தொடர்பாகவே எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. டாடா வாகனத்தில் பயனித்ததற்காகவோ, ரிலையன்ஸ் நிறுவன கடைகளில் பொருள் வாங்கியதற்காகவோ அவர் விசாரிக்கக் கூடாது என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா ?
ஒரு பெண்ணின் போலியான தன்மானம் மற்றும் நீதிபதியின் பாரபட்சம் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், அந்தப் பெண் சார்பாக நின்றதன் மூலம், இரு தரப்பையுமே பெரும் சிக்கலில் ஆழ்த்தி விட்டீர்கள்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, உண்மைகளை வெளிக்கொணர ஒரு முயற்சி எடுத்தீர்கள். ஆனால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு, சவுக்கு தளத்தை தடை செய்திருப்பதன் மூலம், கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகி நிற்கிறீர்கள். உங்களை தவறாக வழி நடத்தியவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டீர்கள்.
திரு.என்.வி.பாலசுப்ரமணியம் ஒரு பழைமைவாத நீதிபதியாக இருந்தாலும், சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கியது போல, இந்த வழக்கிலும் உத்தரவிட்டு உண்மையை வெளிக்கொணரும் வாய்ப்பை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள்.
இதைக் கூறுவதன் மூலம், ஜெயலட்சுமியையும் மகாலட்சுமியையும் நான் ஒப்பிடவில்லை. ஆனால் இந்த வழக்கின் முடிவு மகாலட்சுமிக்கு ஜெயலட்சுமியின் இறுதி நிலைமையை ஏற்படுத்தும் என்பதை வெகு விரைவில் நாம் கண் முன்னே காண இருக்கிறோம்
1975ம் ஆண்டை திரும்பிப் பாருங்கள் சகோதரரே… பெட்ராம் ஹாலிலோ, அல்லது ஜெரோம் டிசோஸா வளாகத்திலோ சுற்றித் திரிந்தபோது, உங்களின் ஆசிரியர்களில் ஒருவர் History repeats itself என்ற தத்துவத்தை விளக்கியிருப்பார்.
சரியாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு லட்சுமி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி பின்னால் சிறை செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் மயிரிழையில் History repeats itself என்ற விதியை நீங்கள் மீறி விட்டீர்கள்.
நீதிமன்றத்தில் உங்கள் Body languageஐ பார்க்கையில் உங்களுக்கு உடல் நலக்குறைவோ அல்லது வேறு சொந்த பிரச்சினைகளோ இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால், ஊடகம் கருணை காட்டாத தேவதை என்பதை மறந்து விடாதீர்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாகவே பேச வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள். வாள் முனையை விட, பேனா முனை வலியது.
நான் உன் கருத்தோடு உடன்படவில்லை. ஆனால், என் கருத்தை மறுக்கும் உனது உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பேன் என்ற வால்டேரின் வாக்கை நினைவில் வையுங்கள் சகோதரரே.
போராளிகள் அமைதியான சமூகத்தில் உருவாவதில்லை. அடக்குமுறை சமுதாயத்திலேயே உருவாகிறார்கள். சவுக்கு தளத்தை தடை செய்ததன் மூலம், உங்கள் பெயரிலேயே தளம் பதிவு செய்து, அது சவுக்கு தளத்தை நோக்கி செல்லும் வகையில் பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம், சவுக்கு தளத்தை அகில இந்திய அளவில் புகழ் பெற வைத்து விட்டீர்கள்.
அறிவுரை கூறுவது எனக்குப் பிடிக்காது, ஆனால் என் எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளாவிட்டால் உங்கள் நலம் விரும்பி என்ற முறையில் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன்.
ஒவ்வொரு நாளும் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, உங்களின் நல்ல செயல்களை துடைத்தெறிந்து, நீதிமன்ற வளாகத்தில் உங்களை பார்க்கையில் அடிமை போல முதுகை வளைத்து வணக்கம் செய்யும் சாதாரண வழக்கறிஞரின் பார்வையில் உங்கள் மரியாதையைக் குலைத்து உங்களை சீரழிக்கும் அந்த இரண்டு திமுக வழக்கறிஞர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது போக தங்களை தற்போது ஏமாற்றி தடை உத்தரவைப் பெற்ற மற்றொரு வழக்கறிஞர் ஜோடியிடமும் எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களின் ஒவ்வொரு செயலையும் 2ஜி ஊழலோடு இணைத்துப் பார்க்கும் ஊடகங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் நீதிபதியாக இருப்பது யாரையும் பாதுகாக்க அல்ல…. இறைவனின் விருப்பத்தாலும், தங்களின் உழைப்பு மற்றும் விதியினாலும்தான்.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், சவுக்கு இணையதளம் தொடர்பாக அளித்த தீர்ப்பை திருத்துங்கள். அதன் மூலம் 2ஜி ஊழலின் நிழலில் இருந்து வெளியே வாருங்கள். உங்களை மக்களுக்கான நீதிபதி என்றே எல்லோரும் அழைக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கான நீதிபதி என்று அல்ல.
நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், எதேச்சையாக ஒரு நாளில் எதிர்பாராமல் நாம் சந்தித்து, ஒரு மாலை வேளையில் நம் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்களுடன் தேநீர் அருந்தும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.
அன்புடன்
மணிகண்டன்
குறிப்பு
அந்தப் புகைப்படத்தில் செல்வம், கருணாநிதியை சந்தித்து தன்னை நீதிபதியாக்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இன்றைய சூழலில் நீதிபதியாக விரும்பும் பல வழக்கறிஞர்களும், ஏன் தற்போது நீதிபதியாக இருக்கும் இரண்டு நீதிபதிகள் கூட வழக்கறிஞர் சட்ட அறை எண் 196ல் மண்டியிட்டுக் கிடந்தது எனக்குத் தெரியும். அந்த நீதிபதிகள் தங்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து உத்தரவு வரும்வரை தங்கள் திறமையை நம்பாமல் தவறான வாசலில் தவம் கிடைந்தார்கள் ஆனால் சி.டி.செல்வம் ஒரு கேவலமான மனிதர் என்று நான் நம்பவில்லை. ஒரு சாதாரண வலைத்தளத்தை தடை செய்வதற்காக 2ஜி நாயகனோடு கைகோர்க்க மாட்டார் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
இரண்டாவது குறிப்பு
பல்வேறு வாசகர்கள், ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழியாக்கத்தை கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதால், மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படுகிறது