அகில இந்திய அளவில் தலித் அமைப்புக்கள் குறித்து விரிவாக விவாதிக்கவியலாது. விடுதலைச் சிறுத்தைகள் திமுகவால் அவமானப்படுத்தப்பட்டது பற்றிய சவுக்கு கட்டுரையில் விடுபட்டுப் போன சில அம்சங்கள் மட்டும் இங்கு.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் அரசியலிலிருந்து சற்று விலகி, மக்களுடன் இணைந்து போராடி, அவர்கள் நம்பிக்கையைப் பெற முயலவேண்டும் என சென்ற பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய வழிமுறை தலித் அமைப்பினருக்கு பயனளிக்காது என்றே நினைக்கிறேன்.
இந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் ஆகியும் அம்மக்களின் நிலையில் பெருமைப் பட்டுக்கொள்ளும் அளவு முன்னேற்றமில்லை. பிறப்பால் தலித்தான டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வினத்தாருக்கு கண்ணியமான வாழ்க்கையினை எங்குமே உறுதிசெய்துவிடவில்லை.
இன்னமும் கொடுமை பிராமணீய இந்து மதமே தமிழர்களின் முதல் எதிரி என முழங்கிய பெரியார் ஈவேராவின் வாரிசுகளாகத் தங்களை சித்தரித்துக்கொள்ளும் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து 45 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தும், தலித்துக்கள் இன்னமும் பல பகுதிகளில் தீண்டத்தகாதவர்களாகவே ஒதுக்கப்படுகின்றனர். கீழவெண்மணியை விடுங்கள், சேரிகள் தொடர்வது ஒன்று போதாது தலித்துக்களின் அவல நிலையை எடுத்துக்காட்ட?
டாக்டர் கிருஷ்ணசாமியும் தொல் திருமாவளவனும் தலித் அரசியலுக்கு புதிய அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தேர்தல் நேரங்களில் தம்மக்களின் வாக்குக்களைப் பெற்றுக்கொடுத்து, தங்களை வளப்படுத்திக்கொள்ளும் தலைவர்கள் மத்தியில் தலித் அமைப்பிற்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தந்த இவ்விருவர் பற்றியும் முன்னமேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணைப்பு
1998ல் பள்ளரின மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் அபரிமித செல்வாக்கை நிரூபித்த கிருஷ்ணசாமிக்கு பின் நடந்ததென்னவோ தொடர் சரிவுதான். தோழர் டிஎஸ்எஸ் மணி மூலம் அறிமுகமானவர் கிருஷ்ணசாமி, அவரது புளியங்குடி மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, ஒரு டாக்டர் எங்களை (ஆர்வலர்களை) ஏமாற்றிவிட்டார் நீங்கள் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம் என்றேன். டாக்டர் ராமதாஸ் ஏதோ புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்கப்போகிறார் என்று கனவு கண்ட நேரம் அது. புளியங்குடி மாநாடு கட்டத்தில் கிருஷ்ணசாமி மீது என் போன்றோருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரும் ஏமாற்றிவிட்டார்.
1999ல் கருப்பையா மூப்பனார் இரு தலித் அமைப்புக்களையும் ஓர் அணியில் இணைத்து போட்டியிட்டபோது கிருஷ்ணசாமி சற்று அதிகமாகவே முரண்டுபிடித்தார். அப்போது இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என நான் நொந்தபோது சக பத்திரிகையாளர் ஒருவர், இவர் செய்வதுதான் சரி, திருமா ரொம்பவும் விட்டுக்கொடுக்கிறார், மரியாதையைக் கேட்டுப் பெறவேண்டிய காலமிது எனப் பாராட்டினார்.
ஆனால் அப்பெருமை நீடிக்கவில்லையே. கொடியங்குளத்திலேயே பாதிக்கப்பட்ட மக்கள் சலிப்படைந்தனர். போதிய அளவு அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை. புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் பலர் பிரிந்து போயினர்.
திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டும் மறுத்தார் கிருஷ்ணசாமி. தனது செல்வாக்கு பள்ளரினத்தார் மத்தியில்தான், பள்ளர்கள் தொகையோ ஐந்தாறு சதம் இருந்தாலே அதிகம், அந்நிலையில் பறையரினத்தார் மத்தியில் எழுச்சியுடன் வலம் வரும் திருமாவுடன் கைகோர்ப்பதே புத்திசாலித்தனம் என்பது அவருக்குப் பிடிபடவே இல்லை.
தொடர் தோல்விகளுக்குப் பின்னர் மாயாவதி பாணியில் நான் தேவர்களுக்கெதிரானவன் அல்ல என்று கூட பிரச்சாரம் செய்தார் கிருஷ்ணசாமி. இன்னமும் கூட அவர் பள்ளரே அல்ல என ஒரு சாரார் பிரச்சாரம் செய்ய இவர் அந்த அடையாளத்தை வலுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். இதையெல்லாம் செய்வார். ஆனால் திருமாவுடன் இணைந்தால் அரசியல் ரீதியாக செல்வாக்கு கூடுவது மட்டுமல்ல இரு பிரிவினருக்குமிடையே நிகழும் உரசல்களும் குறையும் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இன்னுஞ்சொல்லப்போனால் நாங்கள் பட்டியலினத்தவரல்ல என்று சொல்லி தீவிர தேவேந்திர குல வேளாள சாதீயம் பேசுவோரின் நம்பிக்கையைப் பெற முயல்கிறார் அவர். மற்றபடி தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறியோ மாறாமலோ தனது செல்வாக்கை நிரூபிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார் இந்த டாக்டர்.
கொடியங்குளம், தாமிரபரணி மற்றும் பரமக்குடி படுகொலைகளுக்கு காரணமாக அரசியல்வாதிகளோடு கைகோர்ப்பதில் டாக்டருக்கு எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.
மக்கட்தொகை எண்ணிக்கையிலும், பரவலிலும், சாதகமான சூழலிருந்தும் எந்த அளவு சாதுர்யமாக திருமாவளவன் நடந்துகொள்கிறார்? தமிழ்த் தேசியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அளவு மற்ற தலித் பிரிவினருடன் இணக்கம் காண முற்படவில்லை. பள்ளரின அமைப்புக்கள் இணங்கிவரத் தயங்குவதாக வைத்துக்கொண்டாலும், அருந்ததியர்களுடன் இன்னும் நெருக்கமான உறவு கொள்ள ஏன் திருமா மறுக்கிறார்? அத்தகைய உறவு சமூக ஒற்றுமையை மேம்படுத்தும், வாக்கு ரீதியாகவும் கூட ஓரளவு பயனை அளிக்கலாமே.
அருந்ததியர் நிலை மிகப் பரிதாபகரமானது. எண்ணிக்கை அளவிலும் மற்றபடி சமூக அங்கீகார அளவிலும் மிகப் பலவீனமானவர்கள். அவர்களை அரவணைத்துக்கொள்ள, அவர்கள்து தலைவர்கள் சிலருக்காவது முக்கியத்துவம் கொடுக்க, திருமா முன்வரவேண்டும்.
அருந்ததியரை தன் கட்சியில் இணைப்பதற்கும், அவர்களை பொறுப்புகளுக்கு கொண்டு வருவதற்கும் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பள்ளர் மற்றும் பறையர்களை விட மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள அருந்ததியர்களை கைதூக்கி விட்டு அவர்கள் வாழ்வை மேம்படுத்தவதற்கு மாறாக, அவர்களின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கையைக் கூட எதிர்க்கும் நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது.
பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை குறித்து இவ்வாறு கூறுகிறார் “இடஒதுக்கீடு என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வாகாது. இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் பயன்பெற முடியும். மொத்த இடஒதுக்கீட்டில் தனியார் துறை, அரசு ஒதுக்கீடு என இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டாலும்கூட அது அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 விழுக்காட்டு மக்களுக்கே பயன் அளிக்கக் கூடியதாகும். ஆக, இடஒதுக்கீடு என்பதிலேயே முழுமையான ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில்தான் உள்ஒதுக்கீடு கோரிக்கைகள் முன் வைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்”. இவ்வாறு, அருந்ததியர்களின் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் தங்களின் பறையர் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகளும் கவனமாக இருந்தனர். தலித்துகளுக்கு இருக்கும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் 98 சதவிகிதத்தை ஆக்ரமித்துக் கொண்டு, அந்த இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் பள்ளர்களும் பறையர்களும் மட்டுமே. இட ஒதுக்கீட்டு முறையால் கூட பயனடைய முடியாத பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை மீட்டெடுப்பது தலித் இயக்கங்களின் கடமை அல்லவா ? ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
தலித்துகள் என்ற பொது அடையாளத்துடன் களம் காண வேண்டிய தலித் அமைப்புகள், பள்ளருக்கென்று ஒரு கட்சி, பறையருக்கென்று ஒரு கட்சி, ஒதுக்கப்பட்ட அருந்ததியர்கள் என்று துண்டு துண்டாக பிரிந்து கிடக்கிறார்கள்.
விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், பெரியாரியவாதிகளுடன், அப்புறம் திமுகவுடன், இவர்களுடனெல்லாம் திருமாவளவன் காட்டும் நெருக்கம், மற்ற தலித் பிரிவினருடன் காட்டவேண்டாமா? அதல்லவோ அவரது முதற்கடமை? பந்தா குறைவு பழகுதற்கு இனியவர் என்பதெல்லாம் சரி ஆனால் தனது அரசியல் பாதையை சரிவர தீர்மானித்துக்கொண்டதாகத் தெரியவில்லையே !!!
2001ல் எப்படி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மனம் வந்தது என்று நாம் கேட்டுக்கொண்டிருந்தது போக இப்போது மோடியே நல்லவர், வல்லவர் என்று நற்சான்றிதழ் அளிக்கிறார் திருமாவளவன். திமுக தலைவர், திருமாவளவனை தன்னுடைய முகவராக, கூட்டணித் தலைவர்களை அழைப்பதற்கு பயன்படுத்துவதைக் கூட, தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க இது ஒரு வழி என்பதாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு, விஜயகாந்த், ஞானதேசிகன், கம்யூனிஸ்டுகள் என்று சளைக்காமல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புரட்சித்தலைவியை விட கலைஞர் சற்று மரியாதையாக நடத்துகிறார், தான் தலித் வீட்டில் பெண்ணெடுத்தவர், பெரியாரை நேரடியாக அறிந்தவர் என்பதை அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதைத் தாண்டி அவருடன் கூட்டணி அமைப்பதால் தலித் மக்களுக்கு என்ன பயன் ? ஏதோ ஓரிரண்டு இடங்கள் கூட வரவேற்கத் தகுந்ததே. தனியாக நின்றால் அதுவுமில்லைதான். ஆனால் தனியே நின்று மற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருடன் அணி அமைத்து ஓரளவேனும் வாக்கு வங்கியை நிரூபித்தால் கூடுதல் மரியாதை கிடைக்கும் என்பதே பொதுக் கருத்து. இன்னும் சொல்லப்போனால், திருமாவளவன் மற்றும் கிருஷ்ணசாமியை தன்னோடு வைத்திருப்பதன் மூலம், திமுக தலைவர் கருணாநிதி, தலித்துகள் தனிப்பட்ட சக்தியாக வளர விடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூட சொல்லலாம்.
அதைவிடவும் முக்கியமானது திருமா தலித்துக்கள் பிரச்சினையில் மேலதிக அக்கறை காட்டுவது. இரட்டைக் குவளை முதல் சேரி வரை ஆயிரத்தெட்டு அவலங்கள். ஒவ்வொன்றிற்காகவும் போராட்டம் நடத்தவேண்டாமா? தருமபுரி கலவரம் வரை அவர் அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. பிராமணரல்லாதார் நம்பிக்கையினை பெறுவதில் காட்டிய ஆர்வத்தில் 50 சதத்தைக் கூட அவர் தம் மக்கள் பிரச்சினையில் அண்மைக்காலங்களில் காட்டவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தலித்துகளின் பிரச்சினையில் செலுத்த வேண்டிய அக்கறையை அவர் ஈழம் உள்ளிட்ட இதர விஷயங்களில் செலுத்தியதன் மூலம், இன்றும் தீர்க்கப்படாமல் உள்ள தலித்துகளின் ஏராளமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தவறினார். உத்தப்புரம் விவகாரத்தை இடது சாரிகள் கையில் எடுப்பதற்கு முன்னதாக திருமாவளவன் எடுத்திருக்க வேண்டாமா ? அந்த தீண்டாமை சுவரை உடைக்கும் முதல் அடி விடுதலைச் சிறுத்தைகளுடையதாக இருந்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் தலித்துகளின் பிரச்சினைகள், மற்ற யாவருக்கும் முன் விடுதலை சிறுத்தைகளுக்கல்லவா தெரிய வேண்டும் ?
இவற்றுக்கப்பால் எங்களைப் பொறுத்தவரை சேரிகள் இன்னமும் தொடர்வதே மிகப்பெரிய அநீதி. அவற்றை அகற்றுவது என்பது எளிதல்லதான். பெரியாரின் பெயரால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இடைநிலை சாதியினர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அடையாள அரசியல் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு, இவற்றின் விளைவாய் அவர்கள் மத்தியில் சாதீய உணர்வுகள் கூடுதல் வலிமை பெற்றிருக்கின்றன. எனவை சேரி அகற்றல் மிகப் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்கும். ஆனால் அதுவே உடனடித்தேவை.
பஞ்சமி நிலமீட்பெல்லாம் நடக்கக்கூடிய காரியமே இல்லை. கூட்டம்போட கைதட்டல் வாங்க உதவும் அவ்வளவே. சொல்வதிலோ கேட்பதிலோ தவறில்லை. ஆனால் யதார்த்ததில் அது நடைபெறும் வாய்ப்பு மிகக் குறைவு.
இந்நிலையில் சேரிகளை அகற்ற என்ன செய்யமுடியும் என்பதை மட்டும் ஆர்வலர்கள் அதிகாரிகள் நிபுணர்கள் இவர்களுடன் அமர்ந்து ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, ஆலயப் பிரவேசத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒரு சிங்கிள் பாயிண்ட் அஜெண்டாவாக சேரிகளுக்கெதிரான போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் நடத்த முன் வரவேண்டும்.
இதெல்லாம் சாத்தியம்தானா? சாத்தியமில்லை எனக் கருதப்படுபவையை சாதிக்க முற்படுவோரே பெரும் தலைவராக உருவாகின்றனர்.
சவுக்கு உதவியுடன் த.நா.கோபாலன்