“வாப்பா தமிழ். ஏமாத்தாம கரெக்ட் டையத்துக்கு வந்துட்டியே…. ” என்றார் கணேசன்.
“சரி… இப்போவாவது கூட்டணி நிலவரம் தெளிவாச்சாப்பா ? “
“அண்ணே இந்த நிமிஷம் வரைக்கும் பிஜேபி அணி என்ன பண்ணப் போறாங்கன்ற தகவல் இது வரைக்கும் இல்ல. குழப்பம்தான் நீடிக்குது”
“என்னடா சொல்ற ? திமுக அதிமுக அணி தேர்தல் வேலையை தொடங்கிட்டாங்களே… ? இவங்க என்னடா இப்படி இருக்காங்க ? ” என்றான் ரத்னவேல்.
“மச்சான். இதுதான் இப்போ வரைக்கும் நிலவரம். சேலம் தொகுதியை விட்டே கொடுக்க முடியாதுன்னு பாமக உறுதியா சொல்ட்டாங்க. ஏற்கனவே பாண்டிச்சேரி சிக்கல்லதான் இருக்கு. பிஜேபி தன்னோட கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்க்கு பாண்டிச்சேரியை ஒதுக்கி ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. ஆனா, அதே இடத்தை ராமதாஸோட உறவினர் அனந்தராமனுக்கு வழங்கறேன்னு சொல்லியிருந்தார் ராமதாஸ்.
இப்போ என்.ஆர்.காங்கிரஸ்க்கு அந்த இடம்னு சொன்னதும் டாக்டர் எரிச்சலாயிட்டார். இதை விட சேலம் தொகுதிதான் மிகப் பெரிய சிக்கலா இருக்கு. சேலம் தொடர்பா ரெண்டு தியரி சொல்றாங்க. விஜயகாந்தின் ஜோதிடம் ஐந்து எழுத்தில் உள்ள தொகுதியில் கட்டாயம் நிற்க வேண்டும் என்றும் அதனால் கேப்டன் அடம் பிடிக்கிறார் என்று ஒரு தியரி. இன்னொரு தியரி. தெய்வ மச்சான் சுதீஷூக்கு அந்த இடத்தை ஒதுக்கணும்னு நினைக்கிறார் விஜயகாந்த் ன்றது மற்றொரு தியரி.
மேலும் சேலத்தில் தேமுதிகவுக்கு மூன்று எம்.எல்.ஏக்கள் இருப்பதால், அந்த இடத்தில் வெற்றி வாய்ப்பு நிச்சயம்னு நினைக்கிறார் விஜயகாந்த். அதனால் அந்தத் தொகுதியை விட்டுத் தரவே மாட்டேங்கிறார். இது இறுதி நேரம் வரை இழுபறியாவே இருக்கு.
இதுக்கிடையில ராமதாஸ் தன்னோட முதல் பிரச்சாரக் கூட்டத்துல பேசும்போது, விஜயகாந்தை மனசுல வைச்சு “இங்கே கூடியிருப்பது சிங்கக் கூட்டம். நாம் சிறு நரிகளிடம் பிச்சை கேட்கக் கூடாது. நடப்பது மௌனப் புரட்சி. இதில் புரட்சியாளர் அன்புமணி” ன்னு பேசிட்டாரு.
இந்தப் பேச்சு விஜயகாந்தை ரொம்பவே கோவப்படுத்தியிருக்கு. இதையறிந்த பிஜேபியினர், உடனடியா விஜயகாந்தை தொடர்பு கொண்டு, எல்லா சிக்கல்களையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். பொறுமையாக இருங்கள் னு சொல்லியிருக்காங்க. திங்கட்கிழமை அன்னைக்கு நடந்த பிரச்சாரத்துல கூட, யாரு வேட்பாளரோ அவங்களுக்கு ஓட்டு போடுங்க. வேட்பாளர் இருந்தாலும் மறக்காமல் வாக்களித்து ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பேசினார்.
செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நிலவரப்படி, பாட்டாளி மக்கள் கட்சியில கடுமையான மோதல் நடந்துக்கிட்டு இருக்கு”
“அன்புமணி இந்த முறை ஜெயிக்கலன்னா, சிபிஐ வழக்குகள்ல சிக்கிக்குவோம்னு கடுமையான பயத்துல இருக்காரு. “
“அவரு மேல என்ன சிபிஐ வழக்கு ? அவர் மேல இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பா சிபிஐ வழக்கு இருக்கு. அந்த வழக்கில் தண்டனை கிடைச்சிடும்னு பயப்பட்றார்”
“சரி அதுக்கு என்ன பண்ணப்போறார் அன்புமணி ?”
“கூட்டணி புட்டுக்கிட்டு போயிடப் போகுதுன்னு கடுமையான வருத்தத்தில் இருக்கார் அன்புமணி. அவர் அம்மா மூலமா கடுமையான நெருக்கடி குடுத்துட்டு இருக்கார். நான் பிரச்சாரத்துக்கு வரமோட்டேன். நான் தேர்தலில் போட்டியிடப் போறதில்லைன்னு மொதல்ல மெரட்டுனார். அது ஒன்னும் வேலைக்கு ஆகலைன்னு தெரிஞ்சதும், அடுத்ததா நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு மெறட்டுனார்.
ராமதாஸ் இதையெல்லாம் கண்டுக்கல. அவருக்கு, நேத்து கட்சி ஆரம்பிச்சவனெல்லாம் நம்மை கலாய்க்கறானேன்னு சரியான எரிச்சல். அதனால எதையும் கண்டுக்காம இருந்தார்.
உடனே அன்புமணி அடுத்த அஸ்திரத்தை எடுத்தார். “
“என்ன அஸ்திரம்பா அது ? “
“நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு…. “
“அப்புறம்”
“ராமதாஸோட மனைவி சரஸ்வதி அழுததும் மருத்துவர் அய்யாவுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. புதன் கிழமை அன்னைக்கு, செயற்குழுவை கூட்டி, காடுவெட்டி குருவை விட்டு, கேப்டனை மானாங்காணியா திட்டலாம்னு திட்டம் போட்ருந்தார். ஆனா, எல்லாம் புஸ்வானமா போயிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை. தர்மபுரி கூட்டத்தில சிறுநரிகள் சிங்கத்துக்கு பிச்சை போட முடியாதுன்னு ஓவரா பேசிட்டார். இப்போ போயி எப்படி கேப்டன் கிட்ட கெஞ்சறதுன்னு அவருக்கு செம கடுப்பு.
அவரு அமைதியா இருந்தார். அவர் அமைதியை பாத்ததும், அன்புமணியும், ஜி.கே மணியும் அதை சம்மதம்னு எடுத்துக்கிட்டு, சுதீஷுக்கு போன் போட்டு தொடர்ந்து கெஞ்சிக்கிட்டு இருந்தாங்க. இவங்க கெஞ்சறதை பாத்ததும் கேப்டன் ரொம்ப முறுக்க ஆரம்பிச்சிட்டார். இதுதான் தற்போதைய நிலவரம். “
“டாக்டர் நிலைமை ரொம்ப மோசமா ஆயிடுச்சே…. “
“அது மட்டும் இல்ல… அன்புமணி கட்சியை உடைச்சிடுவேன்னு மிரட்டவும் ஆரம்பிச்சிட்டார். இதனால ராமதாஸ் ரொம்பவும் மனம் நொந்துட்டார். அரசியல்ல இருந்து நான் விலகப் போறேன்னு அறிவிக்கிற மன நிலைக்கு வந்துட்டார் டாக்டர்”
“திமுக அணி எப்படி இருக்கு ? ” தெம்பா இருக்காங்களா இல்லையா ? ” என்றான் ரத்னவேல்.
“திமுக அணி வெளிப்படையா தெம்பா இருக்கறதா காண்பிச்சிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலாத்தான் இருக்காங்க. ஆனா பணத்தை அடிச்சு எப்படியும் ஜெயிச்சுடலாம்னு ஒரு பெரிய நம்பிக்கையில இருக்காங்க. “
“சரி பணத்தையெல்லாம் எப்படிப்பா கொண்டு போவாங்க. தேர்தல் ஆணையம்தான் கண்ணுல வௌக்கெண்ணை ஊத்திக்கிட்டு சோதனை பண்றாங்களே.. ? “
“எப்படி இருந்தாலும் மார்ச் மாசம் தேர்தல் வரப்போகுதுன்னு எல்லோருக்கும் தெரியும். திமுக போட்டி போடப் போறதும் உறுதி. திருமங்கலம் ஃபார்முலாவை கண்டுபிடிச்சவங்களுக்கு எப்படி பணத்தை எடுத்துட்டுப் போறதுன்னு தெரியாதா ?
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னாடியே மொத்த பணத்தையும் பட்டுவாடா பண்ணி முடிச்சிட்டாங்க. இதுக்கு மேல பணம் பட்டுவாடா பண்றதுக்கு எதுவுமே இல்ல. கூட்டணி கட்சிகளுக்கான பணமும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. “
“கில்லாடியா இருக்காங்களே… “
“பின்ன.. அவங்களுக்குத் தெரியாத டெக்னிக்குகளா.. ? அது மட்டும் இல்ல. இப்போ, அதிமுகவுக்கான பணப் பட்டுவாடா காவல்துறை வாகனங்கள் மூலமா நடக்கப்போகுதுன்னு ஒரு புகாரை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்போறாங்க”
“இது எதுக்காக..? “
“தேர்தல் ஆணையம் அந்த வாகனங்களை புடிக்கிதோ இல்லையோ. அது பொதுமக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாங்க”
“அப்படியெல்லாமா பண்ணுவாங்க ? ” என்று அதிசயமாக கேட்டான் வடிவேல்.
“மச்சான். 2011 தேர்தலில், தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை கடைபிடிச்சப்போ, ஜாபர் சேட் யோசனையில் பணம் பட்டுவாடா செய்தது இந்த வழிமுறையிலதான். அதனாலதான் இப்போ புகார் தர திட்டம் போட்டிருக்காங்க”
“சரி.. அழகிரி ஏதோ அதிரடி பேட்டி கொடுத்திருக்கார் போலருக்கே… என்ன மேட்டர் ? ” என்றான் ரத்னவேல்.
“போன வாரமே அழகிரி மதுரை திமுக நிர்வாகிகளா இருந்த மன்னன் முபாரக் மந்திரி ஆகியோரை அழைத்து ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து இரண்டிரண்டு நிர்வாகிகளை வரச் சொன்னார். வந்ததும் அவங்ககிட்ட, ஏற்கனவே போஸ்டர் ஒட்டியதாலதான் பிரச்சினை வந்தது. உங்களையெல்லாம் சஸ்பெண்ட் பண்ணாங்க. அதைக் கேக்கறதுக்கு போனதுக்காக என்னையும் சஸ்பெண்ட் பண்ணாங்க. நீங்கள்லாம் சொன்னீங்கன்னா நான் கட்சித் தலைமைக்கிட்ட மன்னிப்பு கேட்கறேன். னு சொன்னாரு.
அவர் ஆதரவாளர்கள் மன்னிப்பு, எங்க யாருக்கும் தமிழ்ல புடிக்காத வார்த்தைன்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு, ரஜினிகாந்தை சந்திச்சேன். எனக்கு பெரிய அளவில் மன நிம்மதி கிடைச்சது. வைகோவையும் சந்திச்சேன். அவரும் என்னை கட்சியை விட்டு நீக்கியது தவறுன்னு சொன்னாரு. அவருக்கு ஆதரவு கேட்டாரு. நான் உடனடியா எந்த முடிவும் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.
கட்சி முழுமையா ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்கு போயிடுச்சு. இதைப் பயன்படுத்தி யாரு பணம் கொடுத்தாங்களோ அவங்ககிட்ட பணம் வாங்கிட்டு 35 வேட்பாளர்களையும் அறிவிச்சிருக்காரு ஸ்டாலின். கருணாநிதி ஒரு நாளும் இது மாதிரி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மாட்டாரு. இப்படிப் பண்றது கட்சியையே அழிக்கப்போகுது. இப்போ அறிவிக்கப்பட்டிருக்கறதுல, பல பேரு அதிமுகவோட ரகசிய உடன்பாட்டில் இருக்கிறவங்க. திமுகவுக்கு துரோகம் பண்ணவங்க. அறிவாலயம் முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆதரவாளர் கல்யாண சுந்தரம் கட்டுப்பாட்டில் இருக்கு. தலைவருக்கு ஒரு ஃபேக்ஸ் அனுப்பினாக் கூட போய் சேர்றதில்ல. அந்த அளவுக்கு தலைவரை சுத்தி தீய சக்திகள் நிறைஞ்சிருக்கு.
தலைவரை அந்த தீய சக்திகள்கிட்ட இருந்து காப்பாத்தறதுதான் நம்ப மொதல் வேலை ன்னு உணர்ச்சிபூர்வமா பேசியிருக்காரு”
“சரி… இப்படியெல்லாம் பேசப் போறாருன்னு கலைஞருக்கும் மத்தவங்களுக்கும் தெரியுமே.. எதுவும் நடவடிக்கை எடுக்கலையா.. ? “
“திங்கட்கிழமை காலையில இருந்து தயாநிதி மாறன், தயாளு அம்மாள்னு பல உறவினர்கள் தொடர்ந்து பேசியிருக்காங்க. நான் அன்பு பேசறேன். நான் சொன்னா கேக்க மாட்டீங்களா மாமா ன்னு உருக்கமா பேசியிருக்காரு”
“அது யாருய்யா அன்பு… ? “
“தயாநிதி மாறனோட செல்லப் பேரு அன்பு. அவரும் ரொம்ப ட்ரை பண்ணியிருக்காங்க”
“இவனுங்க ரெண்டு பேரு சண்டையில மூணு பேரை கொலை பண்ணிட்டு இப்போ எப்படி கொஞ்சிக் குலாவறாங்க பாத்தியா ? ” என்றான் வடிவேல்.
“அதுதான் கருணாநிதி குடும்பம். அதை விடு. மீதி கதையை கேளு. தயாளு அம்மாள் ரொம்ப உருக்கமா, இத்தனை முறை பிரச்சினை வந்தப்போவெல்லாம் நாந்தானே சரி பண்ணியிருக்கேன். இந்த ஒரு முறை கேளுப்பா ன்னு உருக்கமா பேசியிருக்காங்க”
“அவங்களுக்குத்தான் அல்சைமர்ஸ் வியாதி இருக்கே…. ” என்று சிரித்தான் ரத்னவேல்.
“அதெல்லாம் நீதிமன்றத்துக்கும், ஊருக்கும். கம்முன்னு இருடா” என்று அவனை கடிந்து கொண்டு தொடர்ந்தான் தமிழ்.
“தயாளு அம்மாள் பேசியதுக்கு அழகிரி, இதுல நீங்க தலையிடாதீங்க. இனி நானா ஸ்டாலினா ன்னு பாக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. இனிமே இதை நான் சும்மா விட மாட்டேன் னு சொல்லிட்டாரு. அடுத்து தலைவர் பேசச் சொன்னாருன்னு சொல்லி, சண்முகநாதன் பேசியிருக்காரு. அவர் சொல்றதையும் அழகிரி கேக்கல.
அதையெல்லாம் கேக்காமத்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாரு. பேட்டி கொடுக்கும்போது, ஜெயலலிதா கட்சியை நல்லா நடத்தறாங்கன்னு பாராட்டிப் பேசினாரு. திமுகவில் ஓரங்கட்டப்பட்டவங்களையும், அதிருப்தியாளர்களையும் விரைவில் சந்திப்பேன்னு சொல்லியிருக்காரு. திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் அகிலன் என்பவரை 21ம் தேதி அழகிரி சந்திக்க இருக்கிறாரு.
“சரிப்பா… அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறதா ஒரு பேச்சு இருந்ததே.. என்ன ஆச்சு” என்றார் கணேசன்.
“அண்ணே .. தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்னு அழகிரியோட ஆதரவாளர்கள் வலியுறுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா, அழகிரிக்கு அப்படி ஆரம்பிக்க தயக்கம் இருக்கு. ஆரம்பிச்சிட்டு, தனிமைப் பட்டுடுவோமோன்னு பயம் இருக்கு. ஆனா, திமுக வேட்பாளர்களுக்கு எதிரா வேலை செய்யறதுக்கான ஏற்பாடுகளையும் செய்துக்கிட்டு வர்றார். மதுரையில் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வலுவா இருக்காங்க. அவங்களை பயன்படுத்தலாம்னு நினைக்கிறாரு”
“சரி.. ரஜினியை எதுக்குடா சந்திச்சாரு.. ஆதரவு கேக்கவா.. ? ” என்றான் பீமராஜன்.
“கேளம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான 35 ஏக்கர் இருக்காம். அதை அழகிரியோட மகன் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்திருக்கார். அது குறித்து பேசப் போனதும், ரஜினியும் கொடுக்க சம்மதிச்சிட்டதா சொல்றாங்க. மே மாதம் முடிந்ததும் பத்திரப்பதிவு இருக்குமாம்.
தன்னோட ஆதரவாளர்களை பாத்து விவாதிச்ச பிறகு போட்டி வேட்பாளர்களை போடுவதா வேண்டாமான்னு முடிவு பண்ணலாம்னு இருக்கார் அழகிரி”
“அப்போ திமுகவுக்கு சிக்கல்தான்னு சொல்லு”
“திமுகவுல அழகிரிக்கு மட்டும் சிக்கல் இல்ல. ஸ்டாலினுக்கும் சிக்கல்தான்”
“என்னடா சொல்ற…. ? திமுகவை மொத்தமா கைப்பத்திட்டார். அவர் கையிலதான் கட்சியும் இருக்கு, கருணாநிதியும் இருக்கார். அவருக்கு என்ன சிக்கல் ? ” என்றான் பீமராஜன்.
“மச்சான் ஸ்டாலினுக்கு இப்போ பயத்தை உண்டு பண்றது அவர் மகன் உதயநிதி வாங்கிய ஹம்மர் கார் கேஸ்தான். உதயநிதி சட்டவிரோதமா அலெக்ஸ் என்ற நபரிடமிருந்து கார் வாங்கினார். அலெக்ஸ் மேல சிபிஐ வழக்கு பதிவு செய்ததுமே ஸ்டாலினுக்கு செம டரியல் ஆயிடுச்சு.
“எப்படியாவது அந்த வழக்கை முடிச்சு தன் பையனை அதில இருந்து காப்பாத்தணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தார். இந்த நேரத்துல அலெக்ஸை சிபிஐ திடீர்னு கைது பண்ணிட்டாங்க. சிபிஐ இரண்டு நாட்கள் அலெக்ஸை கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. கஸ்டடியில் அலெக்ஸ் என்ன சொன்னாருன்னு ஸ்டாலினுக்கு ஒன்னுமே தெரியலை. ஆனா, ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு பயங்கர பயம்.
ஸ்டாலினோட வழக்கறிஞரும், நக்கீரன் காமராஜும் நெருங்கிய நண்பர்கள். அதன்படி, நக்கீரன் காமராஜ்கிட்ட இந்த விபரத்தை சொன்னதும், ஸ்டாலினை காப்பாத்தற மாதிரி 07.03.2014 நக்கீரன்ல இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார் காமராஜ்.
தி.மு.க தலைமைக்கு அடுத்தடுத்து தெரியவந்த காங்கிரசோட மூவ்களோ பயங்கர ஷாக்கா இருந்திருக்குது. ஸ்டாலின் மகன் உதயநிதி, வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செஞ்ச ஹம்மர் கார் சம்பந்தமான கேஸை மத்திய காங்கிரஸ் அரசு வேகப்படுத்துற நடவடிக்கையில் இறங்கிடிச்சிங்கிற தகவல்தான் ஷாக்காக்கின தகவல். காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதா போன வருசம் மார்ச் மாசம் தி.மு.க அறிவிச்ச மறுநாளே, மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த கார் விவகாரம் தொடர்பாகத்தான் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. இப்ப, திருச்சி மாநாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி இல்லைன்னு முடிவானதும், கார் விவகாரத்தை சி.பி.ஐ மூலமா தீவிரமாக் கிடிச்சி காங்கிரஸ். டெல்லியிலிருந்து சென்னை வரைக்கும் சி.பி.ஐ. தீயா வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி.”
சட்டவிரோதமாக வாங்கிய ஹம்மர் காருடன் உதயநிதி
சிபிஐ ரெய்ட் நடந்த அன்று ஸ்டாலின் வீடு
“”விவரமா சொல்லுப்பா…”…
“”வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி செய்து கொடுத்தவர் பெயர் அலெக்ஸ். தலைமறைவா இருந்த அவரை டெல்லியில் அரெஸ்ட் செஞ்ச சி.பி.ஐ, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தங்களோட அலு வலகத்துக்குக்கொண்டு வந்து, செமத்தியா விசாரிக்க ஆரம்பிச்சிடிச்சி. ஒருகட்டத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள், மு.க.ஸ்டாலின்தான் தன் மகனுக் காக வெளிநாட்டுக் கார் வாங்கித் தரச்சொன்னாருன்னும், அதை விலை குறைத்துக் கணக்குக் காட்டச் சொன்னாருன்னும் ஸ்டேட்மெண்ட் கொடுன்னு அலெக்ஸை டார்ச்சர் பண்ணியிருக்காங்க. அவர் ஒப்புக் கொள்ளலைன்னதும் சரியா அடி விழுந்திருக்குது. ஸ்டாலினை உனக்குத் தெரியுமா தெரியாதான்னு அலெக்ஸைத் தோண்டித்துருவியிருக்காங்க.”
“”என்ன சொன்னாராம்?”
“”தெரியும்னு சொல்லியிருக்காரு. எப்படித் தெரியும்னு சி.பி.ஐ கேட்க, அவர் துணை முதல்வரா இருந்தப்ப நிறைய பேனர்களிலும் போஸ்டர்களிலும் பார்த்திருக்கேன். அதனால தெரியும்னு அலெக்ஸ் சொல்ல, அடி செமத்தியா விழுந்திருக்குது. அடுத்ததா, உதயநிதியைத் தெரியுமான்னு கேட்டப்பவும், தெரியும்னு சொன்ன அலெக்ஸ், அவரை சினிமாவில் பார்த்திருக்கேன்னு சொல்லியிருக்காரு. அப்பவும் சரமாரியா அடி விழுந்திருக்குது. நேரில் இரண்டு பேரையும் பார்த்ததில்லைன்னும் தெரியாதுன்னும், அலெக்ஸ் சொல்லியிருக்காரு. சி.பி.ஐ கேட்டபடி ஸ்டேட்மெண்ட் தரலை. இப்ப, ரிமாண்ட் செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அலெக்ஸ் இருக்காரு. சி.பி.ஐ. இந்தளவுக்கு தீவிரமா செயல்பட்டதோட பின்னணியிலே மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு முக்கிய பங்கு இருக்குதுன்னு ஸ்டாலினுக்குத் தெரிய வந்திருக்குது’
இதுதான் நக்கீரன்ல வந்த செய்தி. சிபிஐ அதிகாரிகள் அலெக்ஸை விசாரிச்சப்போ, ஒரு அடி கூட அடிக்கலை. ஆனா, ஸ்டாலினை காப்பாத்தறதுக்காக கூசாம பொய்யை எழுதினாங்க நக்கீரன்ல.
ஒரு பக்கம் இப்படி செய்தி வெளியிட்டுட்டு, இன்னொரு பக்கம் ஸ்டாலின் சிறையில் இருந்த அலெக்ஸை சந்திக்க தன் தொழில் கூட்டாளி ராஜா சங்கரை அனுப்பியிருக்கார். அவரை சந்திச்சு, சிபிஐகிட்ட, உதயநிதி பத்தி எந்தத் தகவலையும் சொல்லக் கூடாதுன்னும், அதுக்கு பதிலா என்ன வேணுமோ செஞ்சுக் குடுக்கறேன்னும் சொல்லியிருக்காங்க.
அலெக்ஸும் சரின்னு சொன்னதும், ராஜா சங்கர் கேரளாவுல அலெக்ஸ் சகோதரர்கிட்ட பணம் கொடுத்திருக்கிறார். பணம் கிடைச்ச தகவல் அலெக்ஸூக்கும் பணம் வந்து சேந்த தகவல் வந்துடுச்சி. ஸோ அலெக்ஸ் ஹேப்பி அண்ணாச்சி”
“ஸ்டாலினும் ஹேப்பி தானே… ? ” என்றான் வடிவேல்
“ஸ்டாலின் அவ்வளவா ஹேப்பின்னு சொல்ல முடியாது. ஸ்டாலின் மகனுக்கு இது மாதிரி வர்ற தொல்லைகள் அனைத்துக்கும் காரணம் கனிமொழிதான்னு உறுதியா நம்பறார் ஸ்டாலின். கனிமொழிக்கு டெல்லியில் ஏராளமான செல்வாக்கு இருக்கு. அந்த செல்வாக்கை வச்சுத்தான் நம்ப குடும்பத்துக்கு கனிமொழி தொல்லை குடுக்கறாங்கன்னு கடுப்புல இருக்கார் ஸ்டாலின். “
“அப்போ இந்த குடும்பப் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாதுன்னு சொல்லு”
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா கடுப்புல இருக்காறாமே…. என்ன மேட்டர் ? ” என்றான் வடிவேல்.
“ஆமா.. விடுதலைச் சிறுத்தைகளுக்கு தேர்தல் செலவுக்காக 20 கோடி தர்றதா மொதல்ல பேச்சு. 20 கோடியும் ஒரு சீட்டும் தர்றதா ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் திமுகவில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி இன்னொரு சீட் வேணும். அதை ரவிக்குமாருக்குத்தான் கொடுக்கணும்னு கடுமையா நெருக்கடி கொடுத்திருக்கார். கி.வீரமணி நடுவுல பஞ்சாயத்து பண்ணி விடுதலை சிறுத்தைகளுக்க இன்னொரு சீட் தரணும்னு ஏற்பாடு பண்ணியிருக்கார். வேற வழி இல்லாம இன்னொரு சீட் திமுக கொடுத்துட்டாங்க. அதான் சீட் குடுத்துட்டாங்களே, பணம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.
ரெண்டு சீட்டையும் வாங்கிட்டு செலவுக்கு பணம் இல்லாம விடுதலை சிறுத்தைகள் இப்போ முழிச்சிக்கிட்டு இருக்காங்க”
“ரவிக்குமார் மேல சொத்துக்குவிப்பு புகார் வந்திருக்காமே.. என்னடா மேட்டர் அது ? ” என்றான் பீமராஜன்.
“கோவையைச் சேர்ந்த ஒருவர் இந்தப் புகாரை ரவிக்குமார் மேல கொடுத்திருக்கார். 49 லட்சம் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்ததாகவும், கும்பகோணத்தில் அவர் மனைவி பேர்ல வாங்கிய 6 ஏக்கர் நிலத்தை கணக்கில் காட்டலன்னும் அந்தப் புகார் சொல்லுது.
பள்ளி அமைக்கப் போறேன்… எழுத்தாளர்கள் தங்கி படைப்புகளை உருவாக்குவதற்காக அந்த இடத்தை வாங்கியிருக்கேன் என்று ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். அது வெறும் 6 ஏக்கரா இருந்தாலும் மேலும் ஒரு 6 ஏக்கர் அரசு நிலத்தை ரவிக்குமார் அபகரிச்சிருக்கார். லஞ்ச ஒழிப்புத் துறையும் உளவுத்துறையும் இந்தப் புகார் போனதுமே விசாரணையை தொடங்கிட்டாங்க.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு பதிவு செய்யப் போறதா சொல்றாங்க. இந்த வழக்கு ரவிக்குமாருக்கு தேர்தலிலும் பின்னடைவை ஏற்படுத்தும்னு சொல்றாங்க”
“ஏம்ப்பா சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிச்சதுல முணு முணுப்பு இருப்பதா சொல்றாங்களே… ? கேள்விப்பட்டியா ? ” என்றார் கணேசன்.
“அண்ணே… சிபிஎம் போட்டியிடறதே ஒரு அடையாள போட்டிதான். தோக்கப் போறாங்கன்னு எல்லோருக்குமே நல்லாத் தெரியும். அதுல கூட அரசியல் பண்ணி சீட் வாங்கிய வாசுகி மீதுதான் கட்சியில பல பேர் கடுமையான கோவத்துல இருக்காங்க. “
“அவங்க கட்சியோட பொலிட் ப்யூரோ உறுப்பினராச்சே… அவங்க மேல என்ன கோவம் ? “
மார்க்சியம் படிக்கும் பூர்ஷ்வா கம்யூனிஸ்ட்
“அண்ணே… கருணாநிதி தன் மகள் கனிமொழியை முன்னிலைப் படுத்தி அவங்களை எம்.பியாக்கினார் இல்லையா… கிட்டத்தட்ட அந்த கதைதான் வாசுகியோட வளர்ச்சி.
வாசுகியோட பெற்றோர்களான உமாநாத் மற்றும் பாப்பா உமாநாத் கட்சிக்காக செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அதைப் பயன்படுத்திக்கிட்டு, வெகு விரைவா பொலிட் ப்யூரோவுக்கு போன நபர் வாசுகி.
வாசுகி 18 வருஷத்துக்கு முன்னாடி கட்சிக்கு வந்தாங்க. ரொம்ப சீக்கிரமாவே மாவட்டக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டாங்க. மாவட்டக் குழுவுல இருந்து, மாவட்ட செயற்குழுவுக்கு போனாங்க. அதற்குப் பிறகு அவங்களை மாநிலக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தப்போதான் பிரச்சினை ஆரம்பிச்சிச்சு. அப்போவே இவங்க மேல கடுமையான எதிர்ப்பு இருந்துச்சு.
கட்சி சார்பா டிவியில பேட்டி கொடுத்ததும் சில கட்டுரைகள் எழுதியதையும் தவிர இவங்க கட்சிக்காக எதுவுமே செய்ததில்லை. கட்சிக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிச்ச பல தொண்டர்கள் இருக்கிறப்போ இவங்களுக்கு எதுக்கு சீட்டுன்னுதான் சிபிஎம்ல பரபரப்பா பேச்சு இருக்கு”
“தோக்கப் போற சீட்டுக்கு இவங்க எதுக்கு போட்டி போட்றாங்க ? “
“அதுதான் யாருக்குமே தெரியலை. இவங்களுக்கு கட்சியில பின்னாடி இருந்து ஆதரவு தர்றது, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சம்பத். இவங்க ஆதரவுலதான் இந்த அம்மா எல்லா எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிட்டு ஜெயிச்சிக்கிட்டே இருக்காங்க”
“எப்படி இருந்தாலும் இவங்க ஜெயிக்கப் போறது இல்லையே… ” என்றான் வடிவேல்.
“இல்லடா.. கூட்டணி உடையாம இருந்திருந்தா இந்த அம்மா எம்.பி ஆயிருப்பாங்க”
“என்னடா சொல்ற ? “
“ஆமாம் மச்சான். சிபிஎம் வலுவா கருதக் கூடிய மதுரை தொகுதி எனக்கு வேணும்னு இந்த அம்மா ஜி.ராமகிருஷ்ணன் மூலமா முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இப்போ கூட்டணி உடையவும்தான் வட சென்னையில போட்டியிட்றாங்க.
இந்த அம்மாவாலதான் சிபிஎம்மின் அற்புதமான தலைவர் டபிள்யு.ஆர்.வரதராஜன் இறந்தார்னு இது வரைக்கும் கட்சியில பல பேர் நம்பறாங்க. அவர் மேல இல்லாத ஒரு அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி அவரை தற்கொலை வரைக்கும் தள்ளியதற்கு வாசுகி ஒரு முக்கிய காரணம்.
இதையடுத்து, சன் டிவி ராஜா மேல பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு ஆதரவாகவும், சன் டிவியை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் அறிவிச்சிட்டு, கடைசி நேரத்துல வாபஸ் வாங்கியதுக்கு வாசுகியே முக்கிய காரணம். அதுக்குப் பிறகு அந்தப் பிரச்சினையை மக்கள் கலை இலக்கிய கழகம் கையில எடுத்தாங்க. இது மாதிரி பல்வேறு குற்றச்சாட்டுகள் வாசுகி மேல இருக்கு.
ஏ.சி காரை விட்டு இறங்காத பூர்ஷ்வா கம்யூனிஸ்ட்டுன்னுதான் வாசுகிக்கு கட்சிக்குள்ளயே பேரு”
“தேர்தல் அரசியலில் இறங்கி மாறி மாறி கூட்டணி வைக்கிற கட்சியில இந்த மாதிரி அசிங்கங்கள் சகஜம்தானே… ? விடுடா. சி.டி.செல்வம் தன்னை பார்ப்பன சக்திகள் ஒடுக்கப் பாக்கிறாங்கன்னு சொல்றாராமே… ? “
“ஆமாம் மச்சான். சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை தடை செய்யணும்ன சொன்னதில் இருந்தே அவர் மேல பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. பொதுமக்கள் விமர்சிப்பது போக, பல நீதிபதிகளே அவரை விமர்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இதையடுத்து அவர் தலைவர் கருணாநிதி பாணியிலேயே, எனக்கு எதிராக பார்ப்பனர்கள் சதி செய்கிறார்கள்னு புது கதையை வர்றவங்ககிட்டயெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காறாம் சி.டி.செல்வம். இவருக்கு மாறுதல் உத்தரவு வருதுன்ற தகவல் உயர்நீதிமன்றத்துல வலுவா வலம் வரவும், பார்ப்பனர்கள் சதி செய்து என்னை மாற்றப் பார்க்ககிறார்கள்னு சொல்லிக்கிட்டு இருக்காறாம். “
“சரி சவுக்கு தளம் மேல போடப்பட்ட தடை உத்தரவு என்ன ஆச்சு ? போன வாரத்துக்குள்ளவே தளத்தை தடை செய்யணும்னு கெடு விதிச்சிருந்தாரே செல்வம்… என்ன ஆச்சு ?”
“அவர் நூறு தடை உத்தரவுகள் பிறப்பிச்சாலும், சவுக்கு தளம் இயங்கியே தீரும்னு சொல்றாங்க.
“ஆணவத்தோட இயங்கிய பல பேரு, வரலாற்றில் இடம் தெரியாம போயிருக்காங்க. அவங்க வரலாறை செல்வம் படிக்கலைன்னு நினைக்கிறேன். பாப்போம். போலாமாப்பா… ” என்று கணேசன் எழுந்ததும், சபை கலைந்தது.