மீண்டும் ஒரு வழக்கின் மூலமாக தான் ஒரு திமுக உடன்பிறப்பு என்பதையும் தாண்டி, தான் ஒரு திமுகவின் காவலன் என்பதை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சி.டி.செல்வம் நிரூபித்திருக்கிறார்.
சி.டி.செல்வம் ஒரு நீதிபதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு, இந்தியாவில் உள்ள அத்தனை நீதிபதிகளுக்கும் உதாரணமாக தொடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்று சி.டி.செல்வத்தின் நேர்மையை சோதிக்கும் விதமாக ஒரு வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. துளியாவது மனசாட்சி அவருக்கு இருந்திருந்தால், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், சி.டி.செல்வம் ஒரு திமுக உடன்பிறப்பு என்பது முழுக்க முழுக்க அம்பலமான பின்னாலும், துளியும் கூச்சமே இல்லாமல், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அந்த வழக்கு, சவுக்கு தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியால் வெளியிடப்பட்ட 2ஜி டேப்புகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டு, சிபிஐ இயக்குருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் அனுப்பப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்பதே அந்த வழக்கு.
இன்று இந்த வழக்கு சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். ராதாகிருஷ்ணன் எழுந்து ஆஜராகும் முன்னரே, திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் எழுந்தார். “இந்த வழக்கு 2ஜி சம்பந்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த நீதிமன்றம் இதை விசாரிக்கக் கூடாது” என்றார்.
சண்முகசுந்தரம் கையில் இந்த வழக்கில் மனுதாரர் தாக்கல் செய்த மனு, அது தொடர்பான ஏராளமான தீர்ப்புகள் கையில் இருந்தன.
சாதாரணமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகையில் மனுவின் நகல் பச்சையில் ஒன்றும், வெள்ளையில் ஒன்றும் வைக்கப்படும். பச்சை மனு, நீதிபதிக்கு. வெள்ளை நகல் எதிர் மனுதாரராக யார் இருக்கிறார்களோ அவருக்கு. எதிர் மனுதாரராக பலர் இருந்தால் அத்தனை நகல்கள் வைக்க வேண்டும்.
இந்த வழக்கில் எதிர் மனுதாரர், மத்திய புலனாய்வுத் துறை. ஒரு மனுவை இன்று நாம் தாக்கல் செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், மறு நாள் அதற்கான எண் வழங்கப்படும். எண் வழங்கப்பட்டதும், யார் எதிர் மனுதாரராக உள்ளாரோ அந்த அலுவலகத்துக்கு வெள்ளை நகல் அனுப்பப்படும். எந்த துறை சம்பந்தப்பட்ட வழக்கோ, அந்த துறையின் அதிகாரியை அரசு வழக்கறிஞர் அழைத்து வழக்கின் விபரங்களை கேட்டறிவார். மூன்றாவது நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வருகையில், அரசு வழக்கறிஞர் விபரங்களோடு தயாராக வருவார். இதுதான் நடைமுறை.
ஆனால், சி.டி.செல்வம் குற்றவியல் சட்டப் பிரிவு 482ன் கீழ் உள்ள வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு வந்தது முதல், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கும் மேலாகிறது. பல வழக்கறிஞர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். ரிஜிஸ்ட்ரியில் விசாரித்தால், நீதிபதியின் உத்தரவு அப்படியாம். அவர் சொல்லும்போதுதான் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கின் மனு நகல்களோடு வந்திருந்தார். நகல்களைத் தவிர்த்து இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு ஏற்றார்ப் போல பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் எடுத்து வந்திருந்தார்.
நமக்குக் கிடைத்த தகவல்களின் படி, சி.டி.செல்வமே சண்முகசுந்தரத்தை அழைத்து, இந்த வழக்கின் ஆவணங்களின் நகல்களை அளித்திருக்கிறார்.
இந்த சண்முக சுந்தரம் வேறு யாருமல்ல… ? சி.டி.செல்வம் திமுக வழக்கறிஞர்கள் வந்தால் உடனடியாக வேண்டிய உத்தரவுகளை தருகிறார் என்று பல்வேறு முறை சவுக்கு தளத்தில் எழுதப்பட்டுள்ளதல்லவா ? அதே சண்முகசுந்தரம்தான். இவர் முன்னாள் திமுக எம்.பி. இவர் 1996 திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தார். அப்போது ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் லண்டன் செல்ல வேண்டி வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் என்ற முறையில் நானும் செல்வேன் என்ற அரசு செலவில் லண்டன் சென்றவர்தான் இந்த சண்முகசுந்தரம். உலகத்தில் எங்காவது வழக்கின் புலனாய்வுக்கு உடன் சென்ற வழக்கறிஞரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சண்முகசுந்தரம் எதற்காக சென்றார் என்ற கேள்வி எழுமே ? அரசு செலவில் சண்முகசுந்தரம் லண்டன் சுற்றிப் பார்க்க வேண்டாமா ? அதற்குத்தான் இப்படிப்பட்டவர்தான் இந்த சண்முகசுந்தரம்.
இந்த சண்முக சுந்தரம் எழுந்து வாதாடியதும், மனுதாரரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுந்து கடுமையாக ஆட்சேபித்தார். ஒரு மூத்த வழக்கறிஞர் (Senior Counsel) ஒரு மனுவைக் கூட தாக்கல் செய்யாமல், நேரடியாக வந்த இப்படி வாதாடுவதை நான் கேள்விப்பட்டதேயில்லை. இதையும் இந்த நீதிமன்றம் அனுமதிப்பதென்பது, வேதனையளிப்பதாக உள்ளது என்றார்.
எந்த வழக்கிலும், அந்த வழக்கில் சம்பந்தப்படாத நபர் கூட, இடையில் சேர்ந்து வாதாடலாம். அதற்கு ஒரு மனு (Intervention Petition) தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு விசாரணைக்கு வரும்போது நீதிபதி, அந்த மனுவை ஏற்பதா வேண்டாமா என்று உத்தரவிடுவார். அதாவது அந்த வழக்கில் சம்பந்தமில்லா ஒருவரை வாதாட அனுமதிப்பதா வேண்டாமா என்பதை நீதிபதி அனுமதித்த பின்னரே முடிவு செய்ய முடியும். சில நேர்வுகளில் நீதிபதி அனுமதிப்பார். சில நேர்வுகளில் நீதிபதி அனுமதி மறுப்பார். அனுமதி மறுத்தால், வாதாட முடியாது.
சவுக்கு தளத்தை தடை செய்ய சி.டி.செல்வம் உத்தரவிட்ட வழக்கில், சவுக்கு தள வடிவமைப்பாளர் முருகைய்யன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, முருகைய்யன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு எண் வழங்கப்பட்டு, சி.டி.செல்வம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போதும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனே, முருகைய்யன் சார்பாக ஆஜரானார். ராதாகிருஷ்ணன் எழுந்து வாதாடத் தொடங்கியதும், சி.டி.செல்வம், நீங்கள் யாருக்காக வருகிறீர்கள் என்று கேட்டார். கைதான முருகைய்யனுக்காக என்று சொன்னதும், குற்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணையில் பங்கேற்க எந்த உரிமையும் கிடையாது. உங்கள் மனுவை ஏற்க முடியாது, நீங்கள் விசாரணையிலும் பங்கேற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததாடு, ராதாகிருஷ்ணனை வாதாடவும் அனுமதிக்க வில்லை. அந்த வழக்கில்தான் சவுக்கு தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்தார் சி.டி.செல்வம்.
அந்த வழக்கில் சி.டி.செல்வம் என்ன கூறினார் ? ” குற்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணையில் பங்கேற்க எந்த உரிமையும் கிடையாது”. தற்போது சி.டி.செல்வம் விசாரித்து வரும் வழக்கு என்ன ? 2ஜி வழக்கில் ஆவணங்களை அழித்து, ஆவணங்களை திருத்தி, போலி ஆவணங்களை உருவாக்கி, வழக்கின் விசாரணையை திசைதிருப்ப முயற்சி நடந்துள்ளது. அந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்த வழக்கு. இந்த வழக்கில் சண்முக சுந்தரம் யாருக்காக ஆஜரானார் ? கனிமொழி. கனிமொழி யார் ? 2ஜி வழக்கில் குற்றவாளியா இல்லையா ? முருகைய்யனுக்கு இல்லாத உரிமை, கனிமொழிக்கு மட்டும் எப்படி வந்தது ? முருகைய்யனாவது ஒரு மனு தாக்கல் செய்த பிறகு வாதாடினார். கனிமொழிக்காக ஆஜரான சண்முகசுந்தரம், ஒந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்யாமலேயே வாதாடினார். இதையும் செல்வம் அனுமதிக்கிறார். இப்போது தெரிகிறதா செல்வம் யாரென்று ?
சி.டி.செல்வம் வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை வாதாட அனுமதித்ததும், அவர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் உள்ளதால், உயர்நீதிமன்றம் இதை விசாரிக்கக்கூடாது என்றும், விசாரிக்க தடை இருக்கிறது என்றும், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நோக்கமே, 2ஜி விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், 2ஜி விசாரணையை தாமதப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாறாக, 2ஜி விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த வழக்கில் தற்போது விசாரணையை எதிர்நோக்கியுள்ள கனிமொழி, சரத் குமார் ஆகியோரைத் தவிர்த்து, மற்ற சிலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அரசு ஊழியரான ஒரு காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார். அவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்கள் கோரிக்கையே இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பது மட்டுமே என்றார்.
உடனே சி.டி.செல்வம், உச்சீநீதிமன்றம் மேற்பார்வை செய்யும் வழக்கில் நான் எப்படி உத்தரவு பிறப்பிப்பது என்றார். இந்த நீதிமன்றத்துக்குத்தான் வானளாவிய அதிகாரம் இருக்கிறதே. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் எதையுமே பின்பற்றாமல், ஒரு இணைய தளத்தை தடை செய்யும் அளவுக்கு அதிகாரம் இருக்கையில், இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாதா ? மனுதாரர் என்ன கேட்கிறார். நியாயமான விசாரணை நடக்க வேண்டும், அதற்கு வழக்கு பதிவு செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார் என்று கூறினார்.
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
அடுத்ததாக சி.டி.செல்வம், அந்த உரையாடல்கள் அத்தனையும் மனுதாரர் கேட்டிருக்கிறாரா ? எல்லா உரையாடல்களையும் கேட்டிருக்கிறேன் என்ற கூடுதலாக ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யச் சொல்லுங்கள் என்று கூறினார். ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்று சமூக அக்கறையுள்ள ஒருவர் புகார் அளிக்கிறார். அதன் தொடர்ச்சியாக வழக்கு தாக்கல் செய்கிறார். அந்தப் புகாரை விசாரிக்க வேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை. இன்னொரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல, நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று கூறவும், அமைதியானார் செல்வம்.
அதன் பிறகு, சண்முக சுந்தரம் தொடர்ந்து வாதாடினார். இறுதியாக, இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால் மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் நடந்தவற்றைப் பார்த்த பிறகு, சி.டி.செல்வம் அரசியல் அமைப்புச் சட்டத்தை காக்க வேண்டிய நீதிபதியா, இல்லை கருணாநிதியின் குடும்பத்தை பாதுகாக்க வந்த தேவதூதனா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
நீதிபதி சி.டி.செல்வத்தைப் பற்றி சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்து விட்டன. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் சி.டி.செல்வம். ஆனால், அவரது தொடர் நடவடிக்கைகள், இந்த வீடியோவைப் போலத்தான் உள்ளது.
இந்த வழக்கு முடிந்ததும், சவுக்கு தளத்தை தடை செய்யும் வழக்கு விசாரணைக்கு வந்தது. சி.டி.செல்வம், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து, சவுக்கு தளத்தை தடை செய்யும் பணிகள் நிறைவடைந்து விட்டனவா என்று கேட்டார். மத்திய அரசு வழக்கறிஞர், பிஎஸ்என்எல் சேவையில் சவுக்கு தளம் தெரிவதில்லை என்றும், மற்ற இணைய சேவையாளர்கள் அனைவருக்கும், சவுக்கு தளத்தை தடை செய்வது குறித்து அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விபரங்களைக் கேட்டறிந்த செல்வம், வழக்கை 26 மார்ச் 2014க்கு தள்ளி வைத்தார்.
ஒரு சாதாரண வழக்கை தொடர்ந்து கண்காணித்து, ஒரு இணையதளத்தை எப்படியாவது தடை செய்தே தீர வேண்டும் என்று முயலும் செல்வம் போன்றவர்களின் நோக்கமே, எதிர்குரலே இருக்கக் கூடாது என்பதுதான். அரசியல்வாதிகள் விமர்சிக்கப்படுகிறார்கள், அதிகாரிகள் விமர்சிக்கப்படுகிறார்கள், திரை நட்சத்திரங்கள் விமர்சிக்கப்படுகிறார்கள், சமுதாயத்தில் எல்லா பிரிவைச் சேர்ந்தவர்களும் விமர்சிக்கப்படுகையில், நீதிபதிகள் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவமும், தன் எஜமானர் கருணாநிதியின் குடும்பத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறானே என்ற ஆத்திரமுமே செல்வத்தை இது போல நடந்து கொள்ள வைக்கிறது. திமுக பிரமுகர்கள் கூட நட்போடு இன்னும் உரையாடும் நிலையில், சவுக்கு மீதான சி.டி.செல்வத்தின் வன்மம் வியப்பை அளிக்கிறது. ஆங்கிலத்தில் More loyal than the King himself என்று கூறுவார்கள். அதைப்போல, ஒரு ராஜாவை விட ராஜாவுக்கு விசுவாசமாக சி.டி.செல்வம் நடந்து கொள்கிறார். கருணாநிதி கூட சவுக்கு விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டிருப்பார். ஆனால், அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி சவுக்கு தளம் மீது கருணாநிதியை விட மிக மோசமான வன்மத்தோடு இருக்கிறார் சி.டி.செல்வம்.
சி.டி.செல்வத்தைப் பார்த்து பாஞ்சாலி சபதத்தில் விதுரனைப் பார்த்து துரியோதனன் கேட்டதைத்தான் கேட்க வேண்டியுள்ளது.
என்ன குற்றங் கண்டாய் ? -தருமம் யார்க் குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமோ? -பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ?
பொய்யுரைத்து வாழ்வார், -இதழிற் புகழுரைத்து வாழ்வார் .
வைய மீதி லுள்ளார், -அவர்தம் வழியில் வந்ததுண்டோ?