நரேந்திர மோடி, இந்தியாவின் எல்லா பிணிகளுக்கும் மருந்து, எல்லா இழிவுகளுக்கும் தீர்வு, அனைத்து சிக்கல்களையும் ஒரு சொடுக்கில் தீர்க்கும் அலாவுதீனின் அற்புத விளக்கு என்று நினைப்பவர்களை இந்தக் கட்டுரை எந்த விதத்திலும் மாற்றப் போவதில்லை.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் மீது கடுங்கோபம் கொண்டு, இந்த நாட்டை இப்படி சூறையாடுகிறார்களே…. கண் முன்னே ஒரு குடும்பம், நாட்டை கபளீகரம் செய்கிறதே… இதற்கெல்லாம் ரன் பட ஹீரோ மாதிரி ஒருத்தன் வரமாட்டானா… வந்து விட்டான்…. அவன்தான் மோடி என்று நினைப்பவர்களுக்கே இந்தக் கட்டுரை.
இந்த நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு கொண்டு, நாடும் மக்களும் நாசமாகப் போய் விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தோடு இந்தப் பிணிகளுக்கு மருந்தென்ன என்று அலைபாயும் மனங்கள் படிக்க வேண்டியது இந்தக் கட்டுரை. எப்படியாவது காங்கிரஸ் அரசை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து, கொதிக்கும் உலையில் விழுந்து விடக்கூடாதே என்று எச்சரிக்கை செய்யவே இந்தக் கட்டுரை.
நரேந்திர மோடி என்பவர் யார்…. அவர் எப்படிப்பட்டவர்…… என்பதை ஆங்கிலத்தில் வெளிவரும் கேரவன் மாத இதழின் இணை ஆசிரியர் வினோத் கே. ஜோஸ், மார்ச் 2012 இதழில் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருந்தார். நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பெரியார் பாசறையிலிருந்து வந்தவர்கள் கூட கூசாமல் கூவும் இந்தச் சூழலில், இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்து வெளியிடுவதில், சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.
முதல் பாகம்.
1498ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாளன்று கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகமான மலிந்திக்கு அருகே நிலைகொண்டிருந்த டா காமாவின் கேப்டன் மேஜர் வாஸ்கோ டா காமாவிற்கு நிம்மதி. மட்டற்ற, மகிழ்ச்சி. நான்கு மாதங்களாக மொசாம்பிக்கிலிருந்து மொம்பாசாவரை ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரையோரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர் ஆங்காங்கே சிற்றரசர்கள் மற்றும் ஆப்பிரிக்க, அராபிய வணிகர்களுடன் கடும் எதிர்ப்பை சந்தித்து அலுத்துப்போயிருந்தார். ஆனால் இப்போதோ போர்த்துகீசியரான அக்கேப்டனுக்கு இந்தியா செல்ல ஒரு வழிகாட்டி கிடைத்துவிட்டார். எனவே மகிழ்ச்சி.
அவ்வாறு டா காமா கப்பல் காப்டனை இந்துமாக்கடல் வழியே கள்ளிக்கோட்டைக்கு அழைத்துச் சென்று, ஆசியாவிற்கான கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்தவர் என்ற புகழைத் தட்டிச்சென்றவர் கஞ்சி மாலம் எனும் குஜராத்காரர். கட்ச் பகுதியிலிருந்து பஞ்சு மற்றும் இண்டிகோவை ஆப்பிரிக்காவரை சென்று விற்று திரும்புகையில் தங்கத்தையும் வைரத்தையும் வாங்கி வந்தார் மாலம்.
வாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியது ஒரு குஜராத்தி என்பதில் வியப்படைய ஏதுமில்லை. கடல் வணிகத்தில் அவர்கள் கைதேர்ந்திருந்தனர். பெர்சியன் வளைகுடா தொடங்கி இன்றைய மலேசியா இந்தோனேசியா வரை அவர்களுக்கு கடல் வழிகள் அத்துப்படி.
வாஸ் கோ டா காமா
போர்த்துகீசியர் இந்தியாவிற்கு வருவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுச் சாலை மற்றும் வாசனை திரவிய மார்க்கம் சந்திக்கும் இடத்தில் குஜராத் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க, அரேபிய மற்றும் ஆசிய துறைமுகங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலனவை குஜராத்திலிருந்துதான் இந்திய துணைக் கண்டம் முழுவதிற்கும் விநியோகிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து சாலை மார்க்கமாக கிழக்கே பீஹாருக்கும், வடக்கே மதுராவுக்கு, தெற்கே மராத்வாடாவிற்கும் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஐரோப்பியர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க, அராபிய, பாரசீக,. ஆப்பிரிக்க சீன வணிகர்கள் குஜராத்தில் தங்கள் தொழிலைத் தொடங்கி நடத்தி வந்தனர்.
2011ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட்ட ஐந்தாவது ஒளிரும் குஜராத் மாநாட்டில் பங்குபெற நூறு நாடுகளிலிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் காந்திநகரில் கூடினர். அது வெறும் விளம்பரம் மட்டுமல்ல. குஜராத்தில் முதலீட்டைப் பெருக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சி. 450 பில்லியன் டாலர் அளவு முதலீடு செய்வதாக முதலாளிகள் வாக்குறுதி அளித்தனர். விளம்பரமும் கிடைத்தது. ஒரே ஒரு உச்சி மாநாட்டின் வழியே அந்த அளவு முதலீட்டுக்கான வாக்குறுதி வேறு எந்த வளரும் நாட்டிற்கும் அளிக்கப்பட்டதே இல்லை. எல்லோரும் வாய் பிளந்தனர். மாற்றி மாற்றி பெருந்தலைகள் குஜராத்திற்கும் அதன் முதல்வருக்கும் புகழ்மாலை சூட்டினர்.
மாநாடு புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மஹாத்மா ஆலயத்தில்தான் நடந்தது. காந்திஜிக்குத் தான் என்ன மாதிரியான அஞ்சலி பாருங்கள்!. மேடையிலேயே ஏகப்பட்ட கூட்டம். 80 பேர் மூன்று வரிசையில் அமர்ந்திருந்தனர். ஆனால் அனைவரது கவனமும் நடுநாயகமாக அமர்ந்திருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மீதுதான். சந்தனக்கலர் சூட், வழக்கமான விளிம்பில்லாத பல்கரி மூக்குக்கண்ணாடி, கச்சிதமாக செதுக்கப்பட்டிருந்த நரைத்த தாடி. பார்த்தவுடனேயே அவர் செயல்வீரர் என்பதை எடுத்துக்காட்டும் தோற்றம். ஒவ்வொருவர் பேசியதையும் மிகக் கவனமாகக் கேட்டார். சில நேரங்களில் மெலிதாக புன்னகைக்கவும் செய்தார். மாநாட்டை நடத்துவதில் முக்கிய பொறுப்பேற்றிருந்த ஜப்பான் மற்றும் கனடா நாட்டு தூதுவர்கள் அவரின் இரு புறமும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே இந்தியாவின் மிகப் பிரபலமான முதலாளிகள் ரத்தன் டாட்டா மற்றும் முகேஷ் அம்பானி. மேலும் 36 வேறு முதலாளிகள், தலைமை நிர்வாகிகள், மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ருவாண்டாவின் பிரதமரும் அங்கிருந்தார், இந்திய அமெரிக்க வர்த்தகக் கழகத்தின் தலைவர் அடுத்த மாநாட்டில் தனது நாடும் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.
ஆப்கோ வோர்ல்ட்வைட் எனும் அமெரிக்க பொதுத் தொடர்பு நிறுவனம் ஒளிரும் குஜராத் மாநாட்டினை உலகளாவிய முதலீட்டு நிகழ்வாக விளம்பரப்படுத்துவதில் பெரும் வெற்றி கண்டதற்காக இரண்டு பன்னாட்டு விருதுகளைத் தட்டிச்சென்றது. 2003 தொடங்கி நடைபெற்ற ஐந்து மாநாடுகளின் விளைவாக மாநிலத்தில் மொத்தமாக 920 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி பெறப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநாடுகளின் வெற்றியை வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்தே கணிக்கக்கூடாது.
சரியாகச் சொல்வதானால் வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி முழுத்தொகையும் குஜராத்தை வந்தடையவில்லை. மோடியோ 60 சதவீதம் வரை வந்தாகிவிட்டது என்கிறார். மாநில தொழில் துறை புள்ளி விவரங்கள்படி 25 சதவீதம்தான் வந்து சேர்ந்திருக்கிறது. அப்படியே வைத்துக்கொண்டாலும் 920 பில்லியன் டாலரில் 25 சதம் என்பது கணிசமான தொகைதானே. அது போக ஒளிரும் குஜராத் மாநாடுகள் உண்மையில் சாதித்ததற்கும் சாதிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படுவதற்கும் இடையில் பெரும் வேறுபாட்டை யார் கவனிக்கின்றனர் ? அவரவர் வியப்பிலல்லவோ மூழ்குகின்றனர்? அத்தகைய வியப்பினை பரந்துபட்ட அளவில் உருவாக்கியதே மோடியின் சாதனை எனலாம். அத்தகைய இடையறா பிரச்சாரத்தின் காரணமாய் இந்திய அரசியலும் தலைகீழாய் மாறிவிட்டது.
குஜராத்தில் எப்போதுமே தொழில் துறைக்கு சாதகமான சூழல் நிலவி வருவதன் காரணமாய் அது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாய்த் திகழ்கிறது. அந்த மாநிலத்தில் முதலீடு செய்வதை மாபெரும் சாதனையாகக் காட்டுவதில்தான் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வாறாக இயல்பாகவே வணிகத்திலும் தொழிலிலும் திறம்படைத்த குஜராத்தியரின் ஆற்றலை தன் ஆளுமையின் வீச்சை உயர்த்த அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
அம்மாநிலத்தில் 1200 முஸ்லீம்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டு பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அந்நேரம் முதல்வராயிருந்தும் அப்படுகொலைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால் நரேந்திர மோடியும் பலரின் கொலைகளுக்குக் காரணமானவர், ஃபாசிஸ்ட், இந்துத்துவ வெறியர் என்றெல்லாம் சில காலம் வசை பாடப்பட்டார். ஆனால் இப்போது அவை காணாமல் போய்விட்டன. தற்போது அவர் ஒளிரும் தலைவர், வளர்ச்சிக்கு வித்திடுபவர். இந்திய முதலாளிகளுக்கு அவர்தான் இந்தியாவின் அடுத்த தலைவர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவரைத் தடுத்து நிறுத்த எவருமில்லை, இந்தியாவுக்கு பொருத்தமான தலைமை நிர்வாகி. ஆம் அப்படித்தான் டாடா, அம்பானி, மிட்டல் போன்றோர் மோடியைப் பாராட்டியிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் மோடிக்கும் முதலாளிகளுக்குமிடையே சிறப்பான உறவு கிடையாது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மோடி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார்தான். ஆனாலும்கூட கலவரங்களால் பொருளாதாரம் சந்தித்த பின்னடைவுக்காக தொழிலதிபர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
2002 பிப்ரவரியில் முஸ்லீம்கள் மட்டுமா குறிவைக்கப்பட்டனர்? இல்லையே. ஆயிரம் வாகனங்கள் தீக்கிரையாகின, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ஓப்பல் அஸ்ட்ரா கார்களை ஏற்றிக்கொண்டு துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த ட்ரக்கும் கொளுத்தப்பட்டவைகளில் ஒன்று. அகில உலக அளவில் பரபரப்பான செய்தியானது அச் சம்பவம். கலவரங்களில் 20 பில்லியன் ரூபாய் அளவு தொழில்துறை இழந்ததாக சிலர் கணக்கிட்டிருக்கின்றனர்.
மோடி முதல்வராகும் முன்பு கூட குஜராத் இந்தியத் தொழில்துறையின் கேந்திரமாக இருந்து வந்தது. ஆனால் கலவரங்களின் விளைவாய் அங்கே அந்நிய முதலீடுகள் வீழ்ந்தன. அந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் ஏறத்தாழ வறண்டேவிட்டது. தொழிலதிபர்கள் பலர் பகிரங்கமாகவே தங்கள் கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். ஹெச்.டி.எஃப்.சியின் தலைமை நிர்வாகி தீபக் பாரேக் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற புகழை இழந்துவிட்டதென்றும், குஜராத்தில் நடந்தது குறித்து தான் வெட்கப்படுவதாகவும் கூறினார்.
ஏ.எஃப்.எல் எனும் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் குஸ்தார் குஜராத்தில் நிகழ்ந்தது ஏறத்தாழ ஓர் இனப்படுகொலையே என்றார். கணினித் தொழில் நுட்பத்துறை ஜாம்பவான்கள், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியும் விப்ரோவின் அஜீம் பிரேம்ஜியும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். 2002 ஏப்ரலில் அகில இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தேசியக் கூட்டத்தில் பேசும்போது எரிசக்திப் பிரிவின் தலைவர் தெர்மாக்ஸ் நிறுவனத் தலைவர் அனு ஈகா குஜராத் முஸ்லீம்களின் துயரம் பற்றி ஆவேசமாகப் பேசி முடித்தபோது, கரவொலி நிற்க நீண்ட நேரமானது.
கலவரப் பின்னணியில் மோடி பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு குஜராத் மிக முக்கியமாக இருந்தது. தொழிலதிபர்களின் நம்பிக்கையைப் பெறுவது மோடிக்கும் அவசியமாக இருந்தது. தன் பாணியிலியே அவர் அதனையும் சாதித்து முடித்தார்.
அவரது வேண்டுகோளின்பேரில் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் சிறப்புக்கூட்டம் ஒன்று புதுடில்லியில் 2003 ஏப்ரலில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்று மோடியுடன் ஜாம்ஷிட் கோத்ரெஜ், ராகுல் பஜாஜ் மற்றும் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் தருண் தாசும் அமர்ந்திருந்தனர். ஆனால் இன்னமும் வாழ்த்துப்பா சகாப்தம் துவங்கியிருக்கவில்லை. அதற்கு முந்தைய மாதத்தில் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் மோடி பேசும்போது ஓர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் குறுக்கிட்டதை நினைவுகூர்ந்த கோத்ரெஜ் தேர்தலில் வென்றது சரி, ஆனால் அனைத்து குஜராத்தியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவேண்டும் என்றார்.
பஜாஜோ மேலும் ஒரு படி சென்று பொருளாதாரரீதியில் 2002ஐ முழுவதுமாக குஜராத் இழந்துவிட்டது என்றார். தொடர்ந்து மோடியைப் பார்த்தவாறே கூறினார் ”காஷ்மீர், வடகிழக்கு, உத்திர பிரதேசம், பீஹார் போன்ற பகுதிகளில் ஏன் முதலீடு செய்யப்படுவதில்லை தெரியுமா? உட்கட்டமைப்புப் பற்றாக்குறை மட்டுமல்ல… அங்கெல்லாம் நிலவும் பாதுகாப்பற்ற சூழலும்தான்… அப்படி ஒரு நிலை குஜராத்தில் உருவாகக்கூடாது… இதை நான் குறிப்பிடக் காரணம் கடந்த ஆண்டு அங்கு நடந்த துரதிருஷ்டவசமான சம்பவங்களே… அது மட்டுமல்ல உங்கள் தலைமையில் அம்மாநில அரசு இயங்குவதால் உங்கள் கொள்கைகள் என்ன, இலட்சியங்கள் என்ன, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதையெல்லாம் அறிய விரும்புகிறோம்… நாங்கள் எந்தக் கட்சி அரசானாலும் அதனுடன் இணைந்து செயல்படத் தயார்… அதே நேரம் சமூகத்திற்கு எது நல்லது என்பது குறித்து எங்களுக்கும் சில கருத்துக்கள் உண்டல்லவா… எனவேதான் உங்களை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்…”
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மோடி, மைக்கைப் பிடித்தபோது பொங்கிவிட்டார், “நீங்களும் போலி மதச்சார்பின்மை பேசும் உங்கள் நண்பர்களும் குஜராத்துக்கு வாருங்கள்… வந்தால்தான் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும், உண்மை புரியும். குஜராத் மிக அமைதியான மாநிலமாகும்,” என்றவர் கோத்ரெஜ்ஜையும் பஜாஜையும் பார்த்து பொரிந்து தள்ளினார்: மற்றவர்களுக்கு குஜராத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற வன்மம் இருந்தால் புரிந்துகொள்ளமுடியும்… உங்களுக்கென்ன ஆயிற்று?” என்றார்.
அதோடு நிற்கவில்லை மோடி. அவருக்கு நெருக்கமான கௌதம் அடானி, கடில்லா மருந்து நிறுவன உரிமையாளர் இந்திரவதன் மோடி, நிர்மாவின் கர்சன் படேல், பகேரி என்ஜினியர்ஸ் குழுமத்தின் அனில் பகேரி உள்ளிட்டோரைத் தூண்டிவிட்டு மறுமலர்ச்சி குஜராத் குழு என்ற அமைப்பை உருவாக்க வைத்தார். கூட்டமைப்பு மோடியை அவமானப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த குஜராத்தையே அவமானப்படுத்திவிட்டதாகக் அந்தக்குழு குற்றம் சாட்டியது. அத்துடன் தாங்கள் கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்தது. மேலும் அக்கூட்டத்தில் மோடிக்கு பரிந்து பேசாமல் மாநில நலனைப் புறக்கணித்த குஜராத் பிரிவும் ஒட்டு மொத்தமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டும் என்று மறுமலர்ச்சி குஜராத் என்ற குழு வலியுறுத்தியது.
தொழிற்சாலைக் கூட்டமைப்புக்கு எக்கச்சக்க தர்மசங்கடம் உருவானது. நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைப்பிலிருந்து வெளியேறும் சூழல். அதன் விளைவாய் மேற்கிந்தியாவில் கூட்டமைப்பு மிக பலவீனப்பட்டுவிடும். அது மட்டுமல்ல அன்றைய பாரதீய ஜனதா அரசு தன் பங்கிற்கு கூட்டமைப்பு நிர்வாகிகளைத் தவிர்க்கத் தொடங்கியது. தொழிற்சாலைகளின் சார்பாக எதையும் எடுத்துக்கூறமுடியவில்லை என்றால் அப்புறம் கூட்டமைப்பினால் என்னதான் பயன்?
வேறு வழியின்றி சிஐஐ வெள்ளைக் கொடி காட்டியது. தலைமை நிர்வாகி தருன் தாஸ் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட அருண் ஜேட்லியை சந்தித்து மோடி கூட்டத்தில் பேசப்பட்டவைக்கு வருத்தம் தெரிவித்தார். இரண்டு மணிநேரம் ஜேட்லி தாஸைத் துளைத்தெடுத்துவிட்டார் – நீங்கள் யார், என்ன பேசினீர்கள், ஏன் அப்படிப் பேசினீர்கள், உங்கள் நோக்கமென்ன… இப்படியாக… இறுதியில் சரி மோடியைத் தான் விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் அப்போது சிஐஐ பிரச்சினை குறித்துப் பேசுவதாகவும் வாக்களித்தார் ஜேட்லி.
குஜராத் தொழிலதிபர்கள் விலகாமலிருக்க வேண்டுமானால் சிஐஐ முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஜேட்லி மூலம் சொல்லி அனுப்பினார் மோடி.
ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தருண் தாசுக்கு. சில நாள்களுக்குப் பிறகு பிசினஸ் டுடே இதழுக்கு பேட்டி தருண் தாஸ் குறிப்பிட்டார்:
மன்னிப்புக் கடிதத்துடன் மோடியை சந்திக்கப் புறப்பட்டபோது என் மனைவி கடுமையாக ஆட்சேபித்தார். எப்படி நீங்கள் இதைச் செய்யலாம், அனு ஈகா, அஜீம் பிரேம்ஜி, ஜாம்ஷிட் கோட்ரெஜ் எனப் பல பார்சி, முஸ்லீம் அதிபர்கள் பலர் நமக்கு நெருக்கமான நண்பர்கள் என்றார். நான் என்ன செய்ய? பதவி விலகலாம் அவ்வளவுதான். ஆனால் நான் அதைச் செய்யப்போவதில்லை. மற்ற உறுப்பினர்களின் நலனைக் காப்பது என் கடமையல்லவா என்று பதிலளித்தேன்.
அதே நேரம் அதை மன்னிப்புக் கடிதம் என்றும் வர்ணிக்கமுடியாது, ஒரு விளக்கக் கடிதமே, ஆனால் ஊடகங்கள் அதை மன்னிப்புக் கடிதம் என்றே சொல்லும் என்பது எனக்குத் தெரியும், என்றும் அப்பேட்டியில் தருண் தாஸ் கூறினார்.
பிப்ரவரி 6 கூட்டத்தின் விளைவாய் உங்களுக்கு நேர்ந்த மன வலி எங்களுக்குப் புரிகிறது…அதற்காக நாங்கள் மிக வருந்துகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மூன்று மாதங்கள் கழித்து உலக பொருளாதார அமைப்பு World Economic Forum அதனுடைய கூட்டம் ஜூரிச்சில் நடந்தபோது மோடி பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கவும் சிஐஐ ஏற்பாடு செய்தது.
காலம் செல்லச் செல்ல மோடி தொழிலதிபர்கள் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றுவிட்டார், முதலில் பஜாஜ், கோத்ரெஜ் போன்றோர் அவருக்குக் கண்டனம் தெரிவித்தபோது அவர்களில் அநேகர் பார்சிகளாய் இருந்தனர். கலவரங்களின் பின்னணியில் சிறுபான்மையினரான பார்சிகளும் அவரது அரசைப் பார்த்து அஞ்சத் தொடங்கிவிட்டனரோ எனப் பலருக்கும் தோன்றியது. பார்த்தார் மோடி, ஒளிரும் குஜராத் மாநாடு ஒன்றில் பிரதமர் வாஜ்பேயியை ரத்தன் டாடாவிற்கு பரிசு ஒன்றை வழங்கச் செய்தார். அப்புறமென்ன? எல்லாம் சரியாகிவிட்டது… இப்படித்தான் மோடி பலவற்றை சமாளித்தார்… அவர் ரொம்பவும் புத்திசாலி… மெல்ல மெல்ல தனது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொண்டார் என்கிறார் ஒரு முன்னாள் சிஐஐ மூத்த அதிகாரி.
தொடரும்
மொழிபெயர்ப்பு : த.நா.கோபாலன்.
நன்றி தி கேரவன் மாத இதழ்