ஆர்,எஸ்.எஸ்சில் மோடி வேகமாக வளர்ந்தார் என்றாலும், அரசியல் அதிகாரம் வேண்டுமென்றால் அது பாரதீய ஜனதாவில் இணைந்தால்தான் என்பதை அவர் உணர்ந்தார். அப் பயணமும் 1987ல் தொடங்கியது. குஜராத் மாநில பாஜக செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிரசாரக் ஆனார் மோடி. அந்த ஆண்டில். பாஜக நிர்வாகிகள் பொதுவாழ்வில் எங்கும் காணப்படுவர். ஆனால் கட்சிப் பொறுப்பாளர் என்றாலும் பிரசாரக் என்பவர் வெளிப்படையாக செயல்படமாட்டார். திரைக்குப் பின்னால்தான் அவரது நடவடிக்கைகள்.
அமைப்புச் செயலராக மோடி இருந்த அந்த எட்டாண்டுகளில் பாஜக வேகமாக வளர்ந்தது. 1985ல் சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அக்கட்சி அடுத்த 10 ஆண்டுகளில் 121 இடங்களை எட்டியது.
கேசுபாய் பட்டேல், மற்றும் ஷங்கர் சிங் வகேலாவிற்குப் பிறகு மூன்றாவது முக்கிய தலைவரானார் நரேந்திர மோடி. கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என அனைத்திலுமே அவருக்கு ஒரு பங்கிருந்தது.
இதே கால கட்டத்தில்தான் மாநிலம் மூன்று இந்து முஸ்லீம் மதக்கலவரங்களை சந்தித்தது. 1985ல் 285 பேர் கொல்லப்பட்டனர், 1990ல் 219 பேர், 1992ல் 441 பேர் என இறந்தோரின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருந்தது.
இரு சமூகங்களுக்கிடையே பூசல்கள் அதிகமாக அதிகமாக இலாபம் பாஜகவிற்குத்தானே. அப்படித்தான் குஜராத்திலும் நடந்தது. பிணக்குக்களை மேலும் கூர்மைப்படுத்த பாஜக 1987ல் நியாய யாத்திரையையும், இரண்டாண்டுகள் கழித்து லோக் சக்தி ரத யாத்திரையும் நடத்தியது. இரண்டு யாத்திரைகளை நடத்துவதிலும் மோடி முக்கிய பங்கு வகித்தார். 1990ல் அன்றைய பாஜக தலைவர் அத்வானி அயோத்தி ரத யாத்திரையை குஜராத் சோமநாதர் ஆலயத்திலிருந்துதான் துவக்கினார். அதன் முதல் பகுதியிலும் மோடிக்குக் கணிசமான பங்கிருந்தது.
அதற்கும் அடுத்த ஆண்டில் புதிய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கன்னியாகுமரியிலிருந்து துவக்கிய ஒற்றுமை யாத்திரையை ஒருங்கிணைத்ததும் மோடிதான்.
பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பின்னணியில் இந்துத்துவம் வீறுகொண்டெழுந்தது. அரசியல் ரீதியாகவும் அவர்கள் வலிமை வாய்ந்ததோர் சக்தியானார்கள். நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசுகளை உருவாக்கும் அளவு இடங்களை வெல்லமுடிந்தது, சில மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தனர்.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையான ஒற்றுமை யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர், வழி நெடுக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது எல்லாமே மோடிதான் என்றாலும், அவரால் மேலிடத்தை அனுசரித்துப் போகமுடியவில்லை.
எடுத்துக்காட்டாக யாத்திரையில் உடன் வருவோர் அனைவரும் ஒன்றாகத்தான் உணவருந்தவேண்டுமென்று ஜோஷி உத்தரவிட்டாலும் மோடி அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
பெங்களூருவில் திடீரென்று காணாமல் போய்விட்டார் மோடி. அவரும் கர்நாடக மாநிலத் தலைவர் அனந்த் குமாரும் தனியாக எங்கோ சென்றுவிட்டனர். சாப்பாட்டு நேரத்தில் அவரைக் காணாது கோபம் வந்துவிட்டது ஜோஷிக்கு. மறுநாள் காலையில் அனைவர் முன்னிலையிலும் மோடியைக் கண்டித்தார். நீங்கள் நிகழ்ச்சிப் பொறுப்பாளராய் இருக்கலாம், ஆனால் நீங்கள் விருப்பம்போல் செயல்படமுடியாது, கட்சிக்கட்டுப்பாடு முக்கியம் என்று எச்சரித்தார் என்கிறார் யாத்திரையில் பங்கேற்ற இன்னொரு தலைவர்.
யாத்திரையின் முடிவில் மோடி குஜராத்திற்குத் திரும்பினார். தொடர்ந்து தன் விருப்பம் போல் செயல்பட்டார். அதன் விளைவாய் அவருக்கும் ஷங்கர்சிங் வகேலாவிற்குமிடையே மோதல் எழுந்தது. சங்கத்திலேயே மோடிக்கு பத்தாண்டுகள் மூத்தவரான வகேலா அந்தக் காலகட்டத்தில் கட்சியில் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு நபர். கட்சிக்கு நிதி திரட்டுவதிலிருந்து கூட்டணிகள் அமைப்பதுவரை எல்லாம் அவர் வசம்தான் இருந்தது. ஆனால் கேசுபாய் படேல் வகேலாவுக்கும் மூத்தவர். பாஜக குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அவர்தான் முதல்வர் என்ற நிலை. இத்தகைய சூழலில்தான் மோடி குஜராத் திரும்புகிறார்.
கட்சிக்கும் சங்கத்திற்குமிடையே ஒரு பாலமாகச் செயல்பட வேண்டியவர், பல தளங்களில் கட்டளையிடத் தொடங்கியதால் கட்சிக்குள் பிரச்சினைகள். அவர் கடும் உழைப்பாளிதான், ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்துவிடமாட்டார். ஓர் அமைப்புச் செயலாளருக்கு இருக்க வேண்டிய தன்னடக்கம் அவரிடம் இல்லை, கேசுபாய் படேல் மற்றும் வகேலாவிற்கு சமமாகத் தான் கருதப்படவேண்டுமென நினைத்தார் மோடி என்கிறார் அந்த நேரத்தில் பாஜகவின் முக்கிய கருத்தியலாளராகவும் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த கோவிந்தாச்சார்யா.
அமைப்புச் செயலர் எத்திசையில் பயணிக்கவேண்டும் என ஆலோசனைகள் கூறலாம், பொதுவான சில உத்தரவுகள் இடலாம், ஆனால் கட்சியின் அன்றாடப்பணிகளில் அவர் தலையிடமுடியாது. அவை என் பொறுப்பு. ஆனால் தொடர்ந்து தலையிட்டு வந்தார் என்கிறார் வகேலா.
பாஜக எதிர்க் கட்சியாயிருந்தவரை கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் கறார் கருத்தியல்வாதிக்கும் இடையேயான முரண்பாடுகளை மூடிமறைக்க முடிந்தது. பாஜக ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக சமரசங்களை இரு தரப்பும் செய்துகொள்ள முடிந்தது.
வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வயதானவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துவருவது, வாக்குகளைப் வாங்குவதற்கு செய்யவேண்டிய வேறு சில தந்திரங்கள் இவையெல்லாம் பாஜக தொண்டர்களுக்கு கைவராத நேரம் அது.
கேசுபாய் படேல்
அந்நிலையில் கேசுபாய், வகேலா, மற்றும் மோடி இணைந்து செயலாற்றி, ஆர் எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து 1.5 இலட்சம் தொண்டர்களைத் திரட்டி 1995 பிப்ரவரி சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன் பயிற்சி அளித்தனர். அம் முயற்சி அமோக வெற்றி பெற்றது.
182 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 121 உறுப்பினர்களைப் பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அதற்கு முந்தைய தேர்தல்களில் 67 இடங்களில் மட்டுமே கட்சி வென்றிருந்தது. ஆட்சியை இழந்த காங்கிரஸ் 1995ல் 45 இடங்களிலேயே வெற்றிபெற முடிந்தது.
கேசுபாய் முதல்வரானார். மோடி அவருக்கு நெருக்கமாகத் தொடங்கினார். இது வகேலாவுக்கு ஆத்திரமூட்டியது. அவ்விருவரும் தனக்கெதிராக அணி அமைக்கின்றனர் என்ற ஐயம் அவருக்கு.
காலை உணவின்போதும் சரி, இரவிலும் சரி, முதல்வருடனேயே இருந்த மோடி, நான் ஏதோ கேசுபாய்க்கெதிராக ஆள்பிடிக்கிறேன், ஆட்சியைக் கவிழ்க்கப்போகிறேன் என அவரிடம் ஓதினார் என்று இப்போது குற்றஞ்சாட்டுகிறார்.
ஆனால் இறுதியில் அப்படித்தான் வகேலா செய்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சரி பாதிப்பேரை மத்திய பிரதேசத்தில் ஒரு சுற்றுலாத்தலத்தில் அடைத்துவைத்து தன்னை முதல்வராக்காவிட்டால் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
தலைமை தலையிட வேண்டியதாயிற்று. வாஜ்பேயி அஹமதாபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கேசுபாய் விலகி, சுரேஷ் மேத்தா முதல்வரானார். தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கி புகாருக்குள்ளாகிய, மோடி குஜராத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு பாஜகவின் தேசிய செயலரானார். பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகார், மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிரிவுகளை மேற்பார்வையிடும் பொறுப்பளிக்கப்பட்டது.
ஆனால் வகேலாவிற்கு இறங்குமுகமே. யாரும் எதிர்பாராத வகையில் 1996 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்தார். தனது தோல்விக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ், மோடி மற்றும் கேசுபாய் படேலே காரணம் எனக் குற்றஞ்சாட்டி கட்சியிலிருந்து வெளியேறினார். அதிருப்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரசின் ஆதரவில் புதிய அரசையும் அமைத்தார் வகேலா.
குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும் ஒருவிதத்தில் மோடிக்கு நன்மையாகவே அமைந்தது. புதுடில்லியில் இருந்த பாஜக தலைமையகத்தில் நாள்தோறும் பல தலைவர்களுடன் உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. வகேலாவைப் பற்றி நான் சொன்னதை யாரும் நம்பவில்லை. இப்போது பார்த்தீர்களா என்ன நடந்ததென்று என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எல்லோரிடமும் சொல்லிவந்தார்.
1998ல் வாஜ்பேயி பிரதமரான சில நாட்களிலேயே மோடிக்கு மீண்டும் பதவி உயர்வு. அகில இந்திய பாரதீய ஜனதாவின் அமைப்புச் செயலரானார் – அதாவது ஆர்.எஸ்.எஸ்சிற்கும் கட்சித் தலைமைக்குமிடையேயான இணைப்பு நிர்வாகி.
மோடிக்கு முன் பாஜகவிலும் சரி அதன் முந்தைய அவதாரமான ஜனசங்கத்திலும் சரி, அவற்றின் ஐம்பதாண்டு கால வரலாற்றில் மூவரே அகில இந்திய அளவில் அமைப்புச் செயலாளர்களாக பணியாற்றியிருக்கின்றனர்.
சங்கர் சிங் வகேலா
அம்மூவருமே மூத்த சங்கத்தலைவர்கள். அவர்கள் ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்ப்பார்கள். அமைதியாகத் திரைக்குப் பின்னால்தான் தங்கள் பணியை ஆற்றுவர். ஆனால் ஊடக ஒளிவட்டத்தை விட்டு மோடியால் விலகவே முடியவில்லை. 1999 கார்கில் போர், பின்னர் தோல்வியடைந்த வாஜ்பேயி-முஷாரஃப் பேச்சுவார்த்தைகளின் போது அடிக்கடி மோடி செய்தியாளர்களை சந்தித்தார், தொலைக்காட்சி சானல்களில் இந்தியாவின் வலிமை பற்றி, மேன்மை பற்றி மார்தட்டிக்கொண்டு தனது தேசபக்தியை பறைசாற்றினார். இவ்வாறு அதீத தேசபக்தி, வெறி அவரது ஆளுமையின் முக்கிய கூறாயிற்று. பாகிஸ்தானை எப்படி சமாளிக்கவேண்டும் என ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரைக் கேட்டபோது, தயங்காமல் மோடி, “சிக்கன் பிரியாணி கொடுத்தல்ல. அவர்களின் துப்பாக்கி இரவைகளுக்கு நமது குண்டுகளே பதிலாக அமையும்,” என்றார்.
அந்தக் கட்டத்தில் தனது ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றுக்கொள்ள வகேலா அரசு கவிழ்ந்தது, கேசுபாய் மீண்டும் முதல்வரானார்.
ஆனால் கேசுபாயை துரதிர்ஷ்டம் துரத்தியது, இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது. போதாக்குறைக்கு கட்ச் பகுதியில் நிகழ்ந்த பூகம்பத்தின்போது கேசுபாய் படேல் அரசு விரைந்து நிவாரண நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்று அதிருப்தி பரவியது.
தான் புதுடில்லியிலிருக்க சஞ்சய் ஜோஷி, ஹரேன் பாண்டியா, கோர்த்தன் ஜடாஃபியா போன்ற இளம் தலைவர்கள் கேசுபாய்க்கு நெருக்கமானதால் குஜராத் அரசியலில் தான் ஓரங்கட்டுப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மோடி கேசுபாய் படேலுக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கினார்.
கேசுபாய் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசுகிறார். இந்துத்துவாவை வளர்ப்பதில் அவருக்கு அக்கறை இல்லை என மோடி தங்களிடம் தொடர்ந்து புகார் கூறியதாக அக் காலகட்டத்தில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். “முதலில் எப்படி வகேலாவிற்கு எதிராக மற்றவர்களைத் திருப்பினாரோ அதேபாணியில் கேசுபாய்க்கெதிராக தலைமையின் காதுகளில் ஓயாமல் ஓதிவந்தார் அவர்.
இறுதி வெற்றி மோடிக்கே. கேசுபாய் சரியில்லை என தலைமை மோடியை குஜராத் முதல்வராக்கியது. தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எம்வி காமத்திற்கு அளித்த பேட்டியில் தன்னை அவ்வாறு கட்சி முதல்வராக்கியது தனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததுபோலவும், வாஜ்பேயின் முடிவால் மனம் நெகிழ்ந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு தொலைக்காட்சி புகைப்படக்காரரின் இறுதிச் சடங்கில் தான் இருந்தபோது திடீரென்று பிரதமர் வாஜ்பேயியிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்தபோது வாஜ்பேயி, சிரித்துக்கொண்டே “பஞ்சாபி சாப்பாடு சாப்பிட்டு குண்டாகிவிட்டீர்கள். மெலியவேண்டும். எனவே டில்லியை விட்டு வெளியேறுங்கள் என்கிறார். எங்கே போவது என ஒன்றும் விளங்காதவராய் மோடி கேட்கிறார். குஜராத்துக்குத்தான் என்கிறார் பிரதமர். குஜராத் மாநிலத்திற்கு மட்டும் நான் பொறுப்பேற்கவேண்டுமா அல்லது வேறு ஏதாவது மாநிலமும் சேர்த்தா என்கிறார் மோடி தொடர்ந்து.
அதாவது முதல்வராகச் சொல்கிறார் என்பது அப்போது அப்பிராணி மோடிக்கு விளங்கவில்லையாம். நீங்கள் தேர்தலில் போட்டியிட்டாகவேண்டும் என்கிறார் வாஜ்பேயி. அப்போதுதான் உறைக்கிறது மோடிக்கு. அவசர அவசரமாக மறுக்கிறார். ”இல்லை இல்லை அது என் வேலை இல்லை…தவிரவும் குஜராத்தை விட்டு வெளி வந்து ஆறு வருடங்களாகிவிட்டன. அங்கே என்ன நடக்கிறது, என்ன பிரச்சினைகள் என்பது எனக்குத் தெரியாது. நான் என்ன செய்யப்போகிறேன்…” ஆனால் ஐந்தாறு நாட்கள் கழித்து வேறு வழியில்லாமல் தலைமையில் கட்டளைக்கு அடிபணிந்ததாக மோடி காமத்திடம் கூறுகிறார்.
ஆனால் மற்ற பல மூத்த தலைவர்கள் புதுடில்லி தலைமையகத்தில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து முதலமைச்சர் பதவிக்காக பலரிடமும் மனுப்போட்டுக்கொண்டிருந்தார் என்கின்றனர்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை ஒருபோதும் முதல்வராக்க மாட்டார்கள் என்பது மோடிக்கு நன்கு தெரியும். தான் செய்வதே சரி என்று அகங்காரத்துடன் அலைபவர், தேவையில்லாமல் சிண்டு முடிபவர் என்பதே அவரைப் பற்றிய பொதுக்கருத்தாக இருந்தது. அத்தகைய சூழலில் தலைமை சொன்னால்தான் எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதாலேயே அத்தகைய பிரச்சாரத்தில் இறங்கினார் என்கின்றனர் அன்றைய நிகழ்வுகளை நன்கறிந்தவர்கள்.
பத்திரிகை ஆசிரியர்கள் சிலரிடமும் கேசுபாய்க்கெதிரான செய்திகளைப் பரப்பி வந்தார் மோடி. அவுட்லுக் குழுமத் தலைவர் விநோத் மேத்தா தனது சுயசரிதையில் மோடி தன்னை அவுட் லுக் அலுவலகத்தில் சந்தித்து குஜராத் அரசை மோசமாகக் காட்டும் சில ஆவணங்களைக் கொடுத்தார் என்கிறார். அதற்குப் பிறகு விரைவிலேயே மோடி குஜராத் முதல்வராகிவிட்டார். முன்னாள் அகில இந்திய பாஜக தலைவர் குஷாபாவு தாக்கரே மற்றும் மூத்த புதுடில்லி தலைவர் மதன் லால் குரானாவும் அஹமதாபாத் சென்று சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தித்தான் மோடியை முதல்வராக்கமுடிந்தது.
ஆர்.எஸ்.எஸ்சிற்கு அது குறிப்பிடத்தகுந்த வெற்றி எனலாம். ஏனெனில் முதல்முறையாக சங்கத்தின் முழுநேர பிரசாரக் முதல்வராகிறார். அடுத்த ஓராண்டிலோ மீண்டும் சட்டமன்றத் தேர்தல்கள். அதில் எப்படியும் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதே மோடியின் முக்கிய நோக்கமாயிருந்தது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விளையாடவே நான் இங்கு வந்திருக்கிறேன். வேகமாக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மென்கள் எனக்குத் தேவை என்றார் செய்தியாளர்களிடம் மோடி. ஆனால் அந்த ஒரு நாள் போட்டி 11 வருடங்களுக்குப் பிறகு இன்றும் விளையாடப்படும் டெஸ்ட் தொடராக மாறும் என யாருக்கும் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தொடரும்.
மொழியாக்கம் : த.நா.கோபாலன்
நன்றி : தி கேரவன் மாத இதழ்.