முதல்வரான மோடி எப்படி நிர்வாகம் செய்வது எப்படி என்பதை மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டிருந்தார். அதிகாரிகளுடனான விவாதங்களின்போது பொதுவாக அமைதியாகவே இருந்தார், மற்றவர்கள் கூறுவதை அவர் நன்கு உள்வாங்க முயற்சி செய்தார் என்கிறார் அப்போது உயர் பதவியில் இருந்த காவல்துறை தலைவர் ஒருவர்.
இன்னொருபுறம் மூத்த கட்சித் தலைவர்களுடன் பனிப்போரும் தொடர்ந்தது. அவர்கள் இன்னும் மோடியை முதல்வராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். அந்த சமயத்தில் புதுடில்லியைக் காட்டியே அவர்களை மிரட்டினார் மோடி. அமைச்சரவைக் கூட்டங்களில் தான் புதுடில்லி தலைமையால் அனுப்பிவைக்கப்பட்டவர் எனவே தன் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் என வலியுறுத்துவார் என்கிறார் ஒரு முன்னாள் அமைச்சர்.
நரேந்திர மோடி 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாளன்று முதல்வராகப் பொறுப்பேற்கிறார். அன்றுதான் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தாலிபானிய ஆஃப்கானிஸ்தான் மீது தங்கள் போரைத் தொடங்கின. நியூ யார்க் வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒரு மாதத்தில் காபூல், கண்டஹார், ஜலாலாபாத் மீது குண்டுமழை,
ஜிஹாதிகள் பொது எதிரிகளானார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் தொடங்கிவிட்டதாகவும், நாடு, எல்லை என எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜிஹாதிகளை வேரடி மண்ணோடு பிடுங்கி எறியப்போவதாகவும் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார்.
உலகெங்கும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லி எதையும் நியாயப்படுத்தும் போக்கு வலுப்பெற்றது.
இந்தியாவை ஆண்ட பாஜகவும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போர் தங்கள் நிலைப்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகக் கருதியது. தாமதாகவே தங்கள் வாதங்களின் நியாயத்தினை உலகம் உணர்ந்துகொள்ளும் என்று கூறினர்.
அந்த ஆண்டு இறுதியில் இந்திய நாடா:ளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. அதையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் கூடியது.
பத்து இலட்சம் இராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் நிறுத்தியது வாஜ்பேயி அரசு. யுத்தச் செலவினங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது யுத்த வரி விதித்தது.
தேசப் பற்று கொழுந்துவிட்டு எரிந்தது. இது முஸ்லீம்களுக்கெதிரான உணர்வுகளாலும். அனைத்து வித ஆர் எஸ் எஸ் மதிப்பீடுகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஊறிப்போய் இருந்த நரேந்திர மோடிக்கும் மிகவும் உவப்பாக இருந்திருக்கவேண்டும்.
சூரத்தில் லார்சன் டூப்ரோ நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணியாற்றியவர் ஒருவரின் மகளான 12-வயது அனிகாவிற்கு அவரது பள்ளி ஆண்டுவிழாவில், மார்ச் 1ஆம் தேதியன்று நடனமாட அனுமதி கிடைக்கிறது. அலங்கார உடைகளை அணிந்து அனிகா நாட்டியமாடும் முதல் நிகழ்ச்சி அது. எனவே அஹமதாபாத்தில் வசிக்கும் தன் தாத்தாவும் பாட்டியும் நிச்சயம் வரவேண்டும் என விரும்பினாள் அச்சிறுமி. அவர்களும் ஒத்துக்கொண்டனர்.
ஆனால் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன், பிப்ரவரி 27 அன்று, குஜராத் தலைநகருக்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோத்ரா வழியே ஒரு ரயில்வண்டி சென்றுகொண்டிருக்கும்போது அதில் பயணம் செய்த 58 பேர் கொல்லப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும். அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் பத்தாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் பங்குபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அந்த ரயில்வண்டியில்தான் குஜராத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
திட்டமிட்டு ரயில் பெட்டிக்கு ஒரு முஸ்லீம் கும்பல் தீவைத்துவிட்டதாகவே முதல் தகவல்கள் கூறின.
தகவல்களும் வதந்திகளும் காட்டுத்தீபோல் பரவின. புகைப்படங்களையும் வீடீயோக்காட்சிகளையும் பார்த்தவர்கள் கொதித்தனர். விஹெச்பி மற்றும் பஜ்ரங் தள் ’ பழிக்குப் பழி’ வாங்க துடித்தன. மறுநாள் பந்த் அறிவித்தது விஹெச்பி. ஆளும் பாஜகவும் முழுக்கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்தது.
அஹமதாபாதின் முன்னாள் காங்கிரஸ் எம்பி 72 வயதான ஏசான் ஜாஃப்ரி சூரத்திலிருந்த தனது அன்புப் பேத்தியை அழைத்து பந்த் அறிவிக்கப்பட்டுவிட்டது எனவே அவளது நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாது என்ற தகவலைச் சொன்னார் வருத்தத்துடன்.
வசதியான நடுத்தர வர்க்க முஸ்லீம்கள் வாழ்ந்த குல்பர்க் சொசைட்டி வளாகத்தில்தான் ஜாஃப்ரியும் வசித்தார். பந்த் அறிவிக்கப்பட்டபின் சூரத்திற்குப் பயணம் செய்வது ஆபத்து என அவருக்குத் தெரியும். எனவே பிரயாணம் செய்யவேண்டாம் என முடிவெடுத்தார் அவர். மேல்தட்டு முஸ்லீம்கள்
வெறும் கடையடைப்புதானே. அதற்காக வராமல் இருப்பானேன் என சிணுங்கினாள் அனிகா. மீண்டும் 28 அன்று மதியம் தாத்தாவுக்கு ஃபோன் செய்து நீங்கள் இன்னமுமா புறப்படவில்லை என கோபித்துக்கொண்டாள்.
இல்லை குழந்தை, நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது, எங்கு பார்த்தாலும் கும்பல்கள். நீ ஃபோனை வை. அடுத்து என்ன என்பது பற்றி மற்ற பலரிடம் பேசவேண்டும் என்றார் அந்த மூத்த காங்கிரஸ் தலைவர்.
அதற்குள்ளாகவே குல்பர்க் சொசைட்டி வளாகத்தை ஒரு பெரும் கும்பல் சூழ்ந்துகொண்டிருந்தது. பெட்ரோல் வெடிகுண்டுகள்,. சைக்கிள் செயின், கத்திகளுடன் வந்த அவர்கள் கோத்ரா சம்பவத்திற்கு முஸ்லீம்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும், பழிக்கு பழி வாங்கவேண்டும் என கூச்சலிட்டனர்.
வளாகத்தில் வசித்த மற்ற முஸ்லீம் குடும்பத்தினர் பலர் ஜாஃப்ரி வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அவர் முக்கிய தலைவர் என்பதால் பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
ஏறத்தாழ 100 பேரையாவது தொடர்புகொண்டு ஜாஃப்ரி அப்போது பேசியிருப்பார். குஜராத் காவல்துறையின் தலைவர், அஹமதாபாத் ஆணையர், மாநில தலைமை செயலாளர் இப்படிப் பலரைத் தொடர்புகொண்டு நிலைமை பற்றிச் சொல்லி குல்பர்க் எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது என்பதை எடுத்துச்சொன்னார்.
பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த ஒருவர் ஜாஃப்ரி மோடியையும் தொடர்புகொண்டதாகவும், ஆனால் முதல்வரோ உதவ முன்வராதது மட்டுமல்ல கன்னா பின்னாவென்று ஜாஃப்ரியைத் திட்டினார் என்றார்.
ஜாஃப்ரியின் பரிதாபகர நிலை பற்றி உதவிப் பிரதமர் அத்வானியின் அலுவலகத்திற்கும் தெரியவந்து, அத்வானியே மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜாஃப்ரியின் பாதுகாப்பு குறித்து விசாரித்ததாக அப்போது அத்வானியுடன் இருந்த ஒரு மூத்த தலைவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 மணி அளவு வளாகத்தின் மூடப்பட்ட கதவுகளை உடைத்து ஆரவாரத்துடன் உள்ளே புகுந்த கும்பல் நேராக ஜாஃப்ரியின் வீட்டிற்குச் சென்றது. அப்புறமென்ன? கலவரம், களேபரம், வரைமுறையற்ற வன்முறை. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுமாறு ஆண்கள் மிரட்டப்பட்டனர். ஆனால் ஆண்டவனை அழைத்தபின் அவரிடமே அனுப்பிவைக்கப்பட்டனர். அந்தக் கொலைகார கும்பலால். குழந்தைகள் கூட கண்டம் துண்டமாக இரக்கமின்றி வெட்டி எறியப்பட்டனர்.
முதியவர் ஜாஃப்ரி நிர்வாணப் படுத்தப்பட்டார். அவருடைய விரல்களும் கால்களும் சிதைக்கப்பட்ட பிறகு அவர் நெருப்பில் தள்ளப்பட்டார். போலீஸ் ஆவணங்கள்படி குல்பர்க்கில்மட்டும் 59 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் வேறு சில சுதந்திர ஆய்வுகள் 69 அல்லது 70 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியாவும் இன்னும் சிலரும் மாடி அறைக்குச் சென்று தாளிட்டுக்கொண்டதால் தப்பித்தனர்.
மோடியோ இன்றுவரை குல்பர்க் சம்பவம் பற்றி மாலையில் அதிகாரிகளை சந்திக்கும் வரை எதுவுமே தெரியாது என்று சாதிக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் மாநில புலனாய்வுத்துறையின் துணை ஆணையராயிருந்த சஞ்சய் பட் மோடி பொய் சொல்கிறார், உள்துறை அமைச்சகம் முதல்வரிடம் இருந்ததால் அவர் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அன்று முழுதும் தொடர்பில் இருந்தார், நடந்ததெல்லாம் அவருக்குத் தெரியும் என்கிறார்.
தன்னுடன் மோடி பலமுறை அன்று ஃபோனில் தொடர்புகொண்டு பேசியதாகவும், சுமார் 2 மணி அளவில் நேரடியாகவே அவரை சந்தித்து வன்முறை கும்பல் பற்றிக்கூறி, அப்பகுதிமக்கள் காப்பாற்றப்படவேண்டுமென வற்புறுத்தியதாகவும், ஆனால் மோடியோ ஜாஃப்ரி தனது துப்பாக்கியை அடிக்கடி பயன்படுத்துவது வழக்கமா எனக் கண்டுபிடியுங்கள் என பதிலளித்ததாகவும் கூறுகிறார் பட்.
சஞ்சீவ் பட் ஐபிஎஸ்
முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது அவரைப் பார்க்க முன்னாள் முதல்வர் அமர்சிங் சௌத்ரி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் நரேஷ் ராவல் காத்திருந்தனர், அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஈசான்பாய் மிகப் பதட்டத்தில் இருப்பதாகக் கூறினர். நான் சொல்லிவிட்டேன் நீங்களும் உங்கள் பங்கிற்குச் சொல்லுங்கள் என்றேன் என்று பட் குறிப்பிடுகிறார்.
அப்போது எனது ஆட்களில் ஒருவர் எனக்கு ஃபோன் செய்து தன்னைக் காத்துக்கொள்ள ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதாகச்சொன்னார். எனக்கு அதிர்ச்சி. என் அலுவலகத்திற்கும் அப்படி ஒரு அறிக்கை வந்தது. எனக்கு முன்னாலேயே முதல்வருக்கு செய்திகள் சென்றிருக்கின்றன என்று நான் அப்போது உணர்ந்தேன் என்கிறார் சஞ்சய் பட். ஆனால் பட் இன்னும் வேறு சில உயர் அதிகாரிகளின் சாட்சியங்களை மோடி அரசு வன்மையாக மறுக்கிறது.
இந்தியாவில் பலமுறை மதக்கலவரங்கள் நிகழ்ந்திருந்தாலும் கூட 2002ல் தான் கலவரக் கொடுமைகளை தொலைக்காட்சியில் பார்க்கமுடிந்தது. வெறியூட்டப்பட்ட இளைஞர்கள் எவ்விதத் தடையுமின்றி ஆயுதங்களுடன் அலைந்தனர். முஸ்லீம்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டுமென அவர்கள் ஆர்ப்பரித்ததை எல்லோருமே பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.
கலவரங்கள் தொடர வெளிநாட்டு அரசுகள் தங்கள் கவலையைத் தெரிவித்தன. நிலை கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டுமென பிரதமரிடம் தெரிவித்தன. வாஜ்பேயிக்கும் மோடிக்கும் அவ்வளவு சுமுக உறவொன்றுமில்லை.
வாஜ்பேயி பிராமணர். மேல் தட்டு ரசனைகள் உடையவர், கவிதை எழுதுவார். மோடி கொஞ்சம் அவ்வளவாக நாகரிகம் தெரியாத கரடுமுரடான ஆசாமி என்பது அவர் கணிப்பு என்கிறார் மோடிக்கு நெருக்கமான ஒருவர். ஆனால் மோடியை மாற்றுவதும் எளிதல்ல. அத்வானியே ஆட்சேபிப்பார். ஆர் எஸ் எஸ் இன்னமும் கடுமையாகவே ஆட்சேபிக்கும் என்பது வாஜ்பேயிக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் கட்சிக்குள்ளிருந்து கண்டனங்கள் எழவே செய்தன. முன்னாள் ஹிமாச்சல பிரதேச முதல்வரும் வாஜ்பேயி அரசில் அமைச்சராக இருந்தவருமான சாந்தகுமார், “குஜராத் கலவரங்கள் எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. வெறுப்படைய வைத்துவிட்டது, முதலில் விஹெச்பி மீதும் பஜ்ரங் தள் மீது நடவடிக்கை தேவை, மக்களைக் கொன்று வாக்குக்கள் சேகரிக்க முயல்வோர் இந்துக்களே அல்ல, இப்படிக் கலவரங்களில் இறங்கி இந்துத்துவாவை வலுப்படுத்த நினைப்போர் இந்துக்களின் எதிரிகள் என்றார் காட்டமாக.”
கோவாவில் நடக்கவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் சாந்தகுமார் அவ்வாறு கூறியிருந்தார். பதறிப்போய்விட்டது ஆர்.எஸ்.எஸ். இப்போதுதான் ஒரு சங்க பிரச்சாரக் முதல்வராயிருக்கிறார். அவரை பாஜக மிதவாதிகள் வெளியேற்றிவிடக்கூடாது என்பதில் சங்கம் உறுதியாயிருந்தது. பாஜக தலைமைக்கும் அம்முடிவு தெரிவிக்கப்பட்டது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என எச்சரித்தார் அத்வானி. பாஜகவின் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சாந்தகுமாரை வரவழைத்து கண்டித்து அனுப்பினார்.
வேறு வழியின்றி சாந்தகுமார் கிருஷ்ணமூர்த்தியிடமும், விஹெச்பியின் நடவடிக்கைகள் இந்து சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது எனக்கூறியதற்காக விஹெச்பிக்கு பொறுப்பேற்றிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடமும் எழுத்துமூலம் மன்னிப்பு கோரினார்.
இன்னொரு புறம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த மதச் சார்பற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு கவிழ்ந்துவிடுமே என்ற அச்சம் சிலருக்கு.
இப்பின்னணியில் முன்னாள் பாஜக தலைவரும் ஆர்.எஸ்.எஸ்சின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவருமான குஷாபாவ் தாக்கரே வாஜ்பேயி அரசு கவிழ்ந்தாலும் சரி,மோடியை விட்டுக்கொடுக்கக்கூடாது என கட்சித் தலைமைக்கு சொல்லி அனுப்பினார் என்கிறார் இன்னொரு தலைவர்.
இவ்வாறு மிதவாதிகளுக்கும் சங்க பிரமுகர்களுக்குமிடையே கடும் கருத்து மோதல். இறுதியில் தாக்கரே-அத்வானி-மோடி-அருண் ஜெட்லி கூட்டணி வென்றது. வாஜ்பேயியால் எதுவும் செய்யமுடியவில்லை என்கிறார் அத்தலைவர்.
சிலர் அச்சப்பட்டதைப்போல் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம்,திமுக, தெலுங்கு தேசம் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் என எந்தக் கட்சியும் அரசிலிருந்து விலகவில்லை.
ஏப்ரல் 12 அன்று பாஜகவின் தேசிய செயற்குழு கோவாவில் கூடும் முன்பே மிதவாதிகள் தோற்றுவிட்டனர் எனலாம். மோடி ஆதரவாளர்களை எதிர்கொள்ளும் திராணி வாஜ்பேயிக்கு இல்லை. மோடி பதவிவிலக வேண்டும் என கட்சிக்குள் சொல்லிவந்த அவர் ஆர்.எஸ்.எஸ்சின் நெருக்குதலுக்குப் பணிந்தார். தனது சுய பிம்பத்தையே மாற்றி அமைக்கும் வகையில் அவர் கோவாவில் பேசினார்: இந்தோனேசியா, மலேசியா, இப்படிப் பல இடங்களில் வாழும் முஸ்லீம்கள் மற்ற மதத்தாருடன் இணக்கத்துடன் வாழ விரும்புவதில்லை. மற்றவர்களுடன் கலந்து பழகுவதில்லை. அவர்கள் அமைதியையும் விரும்புவதில்லை… மதச்சார்பின்மை குறித்து நமக்கெவரும் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. முஸ்லீம்களும் கிறித்தவர்களும் இங்கு வரும் முன்பே இந்தியா மதச்சார்பற்ற சமூகமாக இருந்தது…”
இவ்வாறாக நாட்டின் பிரதமர், ஒரு மாநில முதல்வரிடம் தோற்றுப்போக வேண்டியிருந்தது. அதன் பிறகு வாஜ்பேயிக்கு மோடியைக் கண்டாலே அச்சம்.
2002 டிசம்பரில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றபோது, வாஜ்பேயியும் மற்றவர்களும் முதலிலேயே வந்து போய்விடவேண்டும், இறுதிக் கட்ட பிரச்சாரம் தன் தலைமையில்தான் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ஏனெனில் வெற்றிக்கு வேறு எவரும் உரிமை கொண்டாடிவிடக்கூடாது என்பதில் மோடி உறுதியாயிருந்தார்.
பிரச்சாரத்திற்காக அஹமதாபாத் சென்றபோது வாஜ்பேயி சற்று பதட்டமாகவே இருந்தார், பிரதமர் விஜயத்தின்போது முதல்வரும் மற்றவர்களும் அவரை வரவேற்கக் காத்திருப்பார்கள்… என்னை அவர் வரவேற்க வருகிறாரா என்பதை விடுங்கள்… அவர் பொதுக்கூட்டத்தில் என்ன சொல்லித் தொலைக்கப்போகிறாரோ என்று கவலையாயிருக்கிறது என்றார். தன்னுடன் பயணித்தவர்களிடம். சிரித்துக்கொண்டேதான் வாஜ்பேயி அப்படிச் சொன்னார். ஆனால் அவர் உண்மையிலேயே கவலைப்பட்டதாகத் தெரிந்தது என்கிறார் உடனிருந்த ஒருவர்.
வாஜ்பேயி மட்டுமா மிரண்டார். ஒட்டுமொத்த கட்சியும் மிரண்டு போய் இருந்தது. தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியையே தழுவியது. ஆனால் மோடியோ வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தார். வெல்லவேண்டுமென்றால் அது மோடி பாணியில்தான் எனப் பலரும் சிந்திக்கத் தொடங்கினர். மிதவாதிகளுக்கு இருந்த இடம் மேலும் சுருங்கியது.
அண்மையில் சாந்தகுமாரை கட்டுரையாளர் சந்தித்தபோது அவரும் மோடி ஆதரவாளராய் மாறிவிட்டிருந்தார். பழைய நிகழ்வுகளை இப்போது கிளறவேண்டாம். இப்போது உள்ள குஜராத்தைப் பாருங்கள். கடந்த மாதம் நான் மோடிஜியை சந்தித்தேன். இங்கு நீங்கள் நிகழ்த்தி உள்ள சாதனைகளை நாடு முழுதும் நாம் சாதித்துக் காட்டவேண்டும் என்றேன். வளர்ச்சியும் வேண்டும், இந்துத்துவாவையும் வளர்க்கவேண்டும். அது சாத்தியமே என நிரூபித்திருக்கிறார் மோடி. இந்திய அளவில் நாங்கள் ஒரு நாள் அம்முயற்சியில் வெற்றி பெறுவோம் என்றார்.
பாழடைந்திருக்கிறது குல்பர்க் சொசைட்டி வளாகம் இப்போது. கதவு பெயர்ந்து கிடக்கிறது. வெறிச்சோடிக்கிடக்கிறது அப்பகுதியில் இருக்கும். வீடுகளில் ஜன்னல்களில்லை, கதவுகளில்லை. அந்தப் பகுதி திறந்த வெளிக் கழிப்பறையாகிவிட்டது. ஜாஃப்ரியின் வீட்டுச் சுவர்களில் செடிகொடிகள் படர்ந்திருந்தன. இன்னமும் புகை படிந்த சுவடுகள். வீட்டிற்குள் நுழைந்தபோது கும்மிருட்டு. ஏதோ ஒரு நாய் வள்ளென்று குரைத்தது. துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வீடு முழுக்க சுற்றிப்பார்த்தேன். பேய்வீடாகத்தான் அது காணப்பட்டது. 2002ல் அடுத்து என்னவோ என்று நடுநடுங்கிக் கொண்டிருந்த கொல்லப்படவிருந்த, மக்களின் அச்சமும் இன்னும் அந்த வீட்டில் உறைந்திருந்தது. அதை என்னால் இப்போதும் உணரமுடிந்தது.
குல்பர்க் கொடூரத்திற்கு மறுநாள் உடல்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு ட்ரக்கில் ஏற்றி துதேஸ்வர் எனும் இடத்தில் உள்ள முஸ்லீம் சமாதிக்குக் கொண்டு சென்றனர். பெரிய குழி வெட்டி 179 பேரை புதைக்கவேண்டியிருந்தது. தொடர்ந்து இறந்த உடல்களை சுமந்த ட்ரக்குகள் வந்த வண்ணம் இருந்ததைக் கண்டு அத்த மயானக் காப்பாளர் ஹஜ்ரா பீவியின் மகன் கேட்டிருக்கிறான்: என்னம்மா ஏதாவது பூகம்பமா என்று. அதற்கு பீவி ஆம், பூகம்பம்தான் பெரும் பூகம்பம் என பதிலளித்தாராம்
தொடரும்
மொழிபெயர்ப்பு : த.நா.கோபாலன்.
நன்றி : தி கேரவன் மாத இதழ்
ALl rumours..no confirmed news from Savukku… What ever he feels he copies from other sites and pastes it here…. typical 3rd grade journalism…. Negativite publicity can be used once..like he did once… after that it should be a biased news or reports… Eg: look at the article above.. no evidences all rumours…. “appadi therindhadhu” :ippadi therindhadhu” ….. peru ketupoiruchu Savukku.. i’ve recoomed you for plenty of my friends..then you used to be WIkileaks now it’s like you are just leaking…. need efforts Sankar
Shocking and so scary we are about to be ruled by this maniac if this is true. Congress shd take the blame and so shd media for the hype. Every Indian shd read this and take informed decision to vote
God save us