மோடி ஒரு தீவிர இந்துத்துவ அரசியல்வாதி என்ற புகழிலிருந்து வளர்ச்சிக்கு வித்திடுபவர் என்ற ஒரு பிம்பம் உருவாகத்தொடங்கியது 2008ல். அந்த ஆண்டு அக்டோபரில் டாட்டாவின் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து குஜராத்துக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் குஜராத் பக்கம் திரும்பவைத்தது. இரண்டாண்டுகளாக மக்களின் கார் என விளம்பரப்படுத்தப்பட்ட நானோ மேற்குவங்கம் சிங்கூரில் தான் தயாரிப்பதாக இருந்தது. அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் துவங்கின. ஆனால் விளை நிலங்களை தொழிற்சாலைக்காக வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. போராட்டங்களெல்லாம் வெடித்தன. இரண்டாண்டுகள் மல்லுக்கட்டியும் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு டாட்டா குழுமம் சிங்கூர் ஆலை மூடப்படும் எனவும் அது குஜராத்தில் அமைக்கப்படும் எனவும் ரத்தன் டாட்டா அறிவித்தார்.
சிங்கூர் ஆலை மூடப்படுவதாக டாட்டா அறிவித்தவுடனேயே குஜராத்திற்கு வந்துவிடவும் என ரத்தனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் அப்புறம் பாருங்கள் ஆலை இங்கே வந்துவிட்டது என்று அடிக்கடி பெருமை அடித்துக்கொள்வார் மோடி.
சிங்கூர் இல்லை என்றான பிறகு நான்கு மாநில அரசுகள் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் மிக வேகமாக செயல்பட்டது மோடிதான் எனவும் டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் ரத்தன் கூறுகிறார்.
மற்ற அரசுகளும் ஆர்வம் காட்டியது உண்மைதான். ஆனால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருந்தன. ஆனால் குஜராத்தில் எல்லாம் அசுரவேகத்தில் நடந்தது. பத்தே நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்கிறார் ரத்தன்.
ஒப்பந்தம் டாட்டா குழுமத்திற்கு மிக சாதகமாக இருந்தது. நானோ தொழிற்சாலை அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை 20 ஆண்டுகளுக்கு தன் வசமே வைத்துக் கொள்ளலாம். அது கடனாகக் கருதப்படும். அதன் பிறகு 0.1 சத வட்டியில் அக்கடனை அடைக்கத் துவங்கலாம். இத்தகைய ஒப்பந்தத்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு, டாட்டாவிற்கு எவ்வளவு இலாபம் என்பதைக் கணக்கிடுவது கடினம். ஆனால் நிச்சயமாக 22 பில்லியன் ரூபாயை நானோவிற்காக முதலீடு செய்யும் குழுமம் அதைவிடப் பல ,மடங்கு தொகையினை வரி-கடன் ஏற்பாட்டில் மீட்டுவிடும் என்கின்றனர் வல்லுநர்கள்.
குஜராத் தொழிற் வளர்ச்சி நிறுவனத்தின் வசமிருந்த இரண்டு பகுதிகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுமாறு டாடாவிற்குக் கூறப்பட்டது. அவர்களோ மூன்றாவதாக சனந்த் என்ற இடத்தில் விளை நிலம் ஒன்றையே விரும்பினர். விவசாயிகளிடமிருந்து எப்படி நிலங்களை வாங்குவது என்ற வித்தையெல்லாம் மோடிக்குக் கைவந்ததாகும். மேற்குவங்க கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் போல சொதப்ப மாட்டார். இருந்தாலும் நானோ விஷயத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிட்டால் தனது அரசுக்கு ரொம்பவே தர்ம சங்கடம் என்பது அவருக்குத் தெரியும். எனவே மிக கவனமாகவே கையாண்டார்.
டாடா தெரிவு செய்திருந்த பகுதியில் மிகப் பெரிய நில உடைமையாளர் ரவூபா வகேலா. அவர்தான் மற்ற உடைமையாளர்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் காங்கிரஸ்காரர். நினைத்திருந்தால் பல சிக்கல்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் பேச்சுவார்த்தையை அரசியலாக்கவில்லை. ரத்தன் டாடாவும் மோடியும் இணைந்து தொழிற்சாலை ஒப்பந்தம் குறித்து அறிவிப்பதற்கு முதல் நாள் வரை நாங்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தோம். யாருக்காக அந்த நிலம் வாங்கப்படுகிறது என்பதைக் கூட தொழிற்வளர்ச்சி கழகம் எங்களிடம் தெரிவிக்கவில்லை. இரகசியமாகவே வைத்திருந்தனர். விலை நிர்ணயப் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. இறுதியாக இரவு பத்து மணி அளவில் கழகத்தின் செயலாளர் மஹெஸ்வர் சாகு விஷயத்தை உடைத்தார். ”நாளை காலை ரத்தன் டாடாவே வருகிறார். நானோ கார் இங்கே உற்பத்தியாகப்போகிறது… தேவையில்லாமல் சிக்கல்களை உருவாக்கி விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார். எங்களுக்கே மிகுந்த உற்சாகம். டாடா நம்மூரிலா என்று. குஜராத்திகளுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு என்னவெனில் நாங்கள் எங்கள் நிலங்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றி விடுவதில்லை…எல்லாவற்றிலும் இலாப நஷ்டக் கணக்குதான் பார்ப்போம்…..கேட்கப்படும் நிலங்களை விற்றுவிட்டாலும் நானோ தொழிற்சாலை உருவாகும்போது ஒட்டியுள்ள நிலங்களின் விலையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகுமே…ஒரே மணி நேரத்தில் எங்களுக்கு மிக சாதகமான விலையில் விற்றுவிட்டோம்,” என்றார் வகேலா.
முதலில் நாங்கள் என்ன விலை என்பதைச் சொல்லுவோம். அப்போதுதான் எந்த அளவு லாபம் இருக்கும் என்பதை அவர்கள் கணக்குப் போட்டுக் கொள்ள முடியும். அதன் பிறகு அந்தந்தப் பகுதி பெரும்புள்ளிகளுக்கு உரிய கௌரவம் அளித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.. எல்லாம் சரியாகிவிடும் என்கிறார் சாகு.
டாடா ஆலைப் பகுதிக்கு ஒட்டி அமைந்திருந்த தனது 30 ஏக்கர் நிலத்தையும் விற்ற பிறகு மோடியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார் வகேலா. அந்த சந்திப்பன்று, சனந்திலேயே பெரும் பணக்காரர் இப்போது இன்னமும் பணக்காரராகிவிட்டார் என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி வெளியிட்டது.
“நான் நுழைந்தபோது என்னை எழுந்து நின்று வரவேற்றார் முதல்வர். வாங்க வாங்க ராவுபாய்.. உங்கள் இலட்சுமி கடாட்சம் எனக்கும் கிடைக்கட்டும்…சனந்தை நாம் மாற்றிவிடவேண்டும்…அங்கே செல்வம் கொழிக்கவேண்டும்…உலகம் வியக்கவேண்டும்…” என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார் என்கிறார் வகேலா.
தொடர்ந்து ஃபோர்டும் பேஜாட்டும் தத்தம் தொழிற்சாலைகளுக்கு இடம் கேட்டு குஜராத் அரசை அணுகினர். தொழிற்வளர்ச்சிக் கழகம் 2,200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. இரு நிறுவனங்களுக்கும் கணிசமான நிலம் ஒதுக்கி டாடாவுக்கு அளித்ததைப் போல் சலுகைகளையும் வாரி வழங்கியது மோடியின் அரசு. இழப்பீடுத் தொகைகூடக் கூட சனந்தில் துவக்கத்தில் இருந்த எதிர்ப்பும் குறைந்தது.
சந்தை மதிப்பை விட பத்துமடங்கு அதிகமான விலையில் நிலங்கள் வாங்கப்பட்டன. டாட்டா வருகைக்கு ,முன்னர் ஒரு ஏக்கர் அப்பகுதியில் 3 இலட்ச ரூபாய்க்கு விற்றதென்றால் அரசே 30 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கியது. உரிய தொகையும் ஒரே வாரத்தில் உடைமையாளர்களைச் சென்றடைந்தது.
ஹீராபூரைச் சேர்ந்த 71 வயதான பிக்குபாய் பரோட் என்பவர் தனது 40 ஏக்கர் நிலத்தை அரசுக்கு விற்று, கிடைத்த இலாபத்தில் அருகாமையிலேயே 80 ஏக்கர் நிலங்கள், இரண்டு பங்களாக்கள் மூன்று கார்கள் என வாங்கிக் குவித்தார்.
ஃப்ளாட்டெல்லாம் சரி வராது… காற்றே வராதே.. எனவே என் மகன்களுக்கு பங்களாக்கள் வாங்கிக்கொடுத்துவிட்டேன் என்றார் பரோட்.
கட்டுரையாளர் நானோவைப் பற்றிக் கேட்டபோது, புன்னகையுடன் எங்கள் நிலங்களில்தான் அத் தொழிற்சாலை இருக்கிறதென்றாலும் எதற்கு அது ? எங்களால் ஆடியே வாங்க முடியும் என்றால் எங்களுக்கு அவ்வளவு சின்ன கார் நானோ எதற்கு?” என்றார்.
வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தலைவராக மோடியை சித்தரிக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய கட்டம் சனந்த் வெற்றிகள். தொழிலதிபர்களிடம் அல்லது பொதுமக்களிடம் உரையாற்றும்போது சனந்த் பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை மோடி.
ஆனால் அவருக்கு சிக்கல்கள் உருவான இடங்களும் உண்டு. பவ்நகர் மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மஹுவாவில் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்குவதில் அப்படிப் பிரச்சினைகள் எழுந்தன.
சிஐஐ எனப்படும் அகில இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்போடு மோடி மோதிய நேரத்தில் அவருக்கு ஆதரவாக கலகக் கொடியேற்றியவரும் மோடிக்கு நெருக்கமானவருமான நிர்மா நிறுவன அதிபர் கர்சன் படேலுக்கு மஹுவாவில் சிமெண்ட் ஆலை அமைக்க 700 ஏக்கர்நிலம் ஒதுக்கப்பட்டது.
பிரச்சினை என்னவெனில் அந்த 300 ஏக்கரில் நல்ல நஞ்சை விளைநிலங்களும் ஏரிகளும் அடக்கம். அவற்றால் அண்டையிலுள்ள கிராமங்களில் வாழும் 50,000 விவசாயிகளின் பாசனம் மற்றும் ஆடு மாடுகளின் தேவைகளுக்கு அப்பகுதியையே நம்பி இருந்தனர். எனவே நிர்மா திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். நிர்மாவும் சரி அரசும் சரி எதிர்ப்பை அலட்சியம் செய்தனர். பிரச்சினை வளர்ந்துகொண்டே போனது. மஹூவாவிற்கான பாஜக எம் எல் ஏ கனுபாய் கல்சாரியா தலைமையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. 11,000 விவசாயிகள் இரத்தக் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 400 கிலோ மீட்டர் நடைப் பயணம் தலைநகருக்கு.
நிர்மா சிமென்ட் ஆலைக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்திய பிஜேபி எம்.எல்.ஏ
ஒதுக்கப்பட்ட பகுதி தரிசு நிலமே எதுவும் விளைவதில்லை என நிர்மாவும் மாநில அரசும் வாதாடின. போராட்டங்களின் பின்னணியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது. மூன்று முறை மஹூவா சட்டமன்ற உறுப்பினராகவிருந்த கல்சாரியா அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார். கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் விவசாயிகளைப் பொறுத்தவரை அது குறிப்பிடத் தகுந்த வெற்றியாய் அமைந்தது. இப்போது மோடி பொதுமக்கள் நலனைக் காற்றில் பறக்கவிட்டு பெரு நிறுவனங்களுக்கு நிதியையும் நிலத்தையும் வாரி வழங்குகிறார் எனக் குற்றஞ்சாட்டி விவசாயிகளை அணிதிரட்டுகிறார் கல்சாரியா.
2002 கலவரங்களுக்குப் பிறகு அவரது அரசு அதன் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது என விமர்சனம் செய்வோர் குஜராத்திற்கும் குஜராத்தியர்க்கும் எதிரானவர்கள் என அம்மக்களை நம்பவைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டார் மோடி.
அதே போல இப்போது அவரது ஆட்சியில் மாநிலம் அசுர வளர்ச்சியடைந்துவிட்டதாக, அது ஓர் அதிசயம் என்று மற்ற மாநிலத்தாரையும் ஊடகங்களையும் நம்பவைப்பதில் வெற்றி கண்டுவருகிறார் அவர். திறமையான நிர்வாகம், அதிவேக முன்னேற்றம், வியத்தகு பொருளாதார வளர்ச்சி இப்படியாக மோடியின் குஜராத்தைக் காட்டும் புள்ளி விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.
மின் சக்தி உபரி மாநிலம் என அடிக்கடி கூறிக்கொள்வார். அது ஓர் அதிசயம் என பிசினஸ் ஸ்டாண்டர்ட் முதல் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வரை புளகாங்கிதத்துடன் எழுதும். ஆனால் ஆர் எஸ் எஸ் சின் விவசாயிகள் அமைப்பே கடந்த பத்தாண்டுகளாக தங்களுக்குப் போதிய மின்சாரம் கிடைப்பதில்லை என ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர். அரசு புள்ளிவிவரங்கள் படியே 2000-2010 காலகட்டத்தில் விவசாயத்திற்கென்று விநியோகிக்கப்பட்டு வந்த மின்சாரம் 43 சதத்திலிருந்து 21 சதமாக வீழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன. 3.75 இலட்சம் விவசாயிகள் தங்கள் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு கேட்டு தவம் கிடக்கின்றனர்.
மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ச்சியைவிட சற்று கூடுதல்தான். ஆனால் குஜராத் நீண்டகாலமாகவே தொழிற்துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். மோடியின் கீழ் மாநிலம் கண்டுள்ள வளர்ச்சியானது அதற்கு முந்தைய இரு தசாப்தங்களில் காணப்பட்டதைவிடவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவு அதிகமானதல்ல.
அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தான் முன்னணியில் இருப்பதாக படம் காட்டுவார் மோடி. ஆனால் 2000-09ல் அகில இந்திய அளவில் அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை 4வது இடமே. 2011லோ அது இன்னமும் வீழ்ந்து, மஹாராஷ்டிரா, புதுடில்லியை ஒட்டிய தலைநகர் பகுதி, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவிற்குப் பிறகு ஆறாவது இடத்தில் இருக்கிறது குஜராத். அம்மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள அந்நிய முதலீட்டைவிட ஏறத்தாழ 9 மடங்கு கூடுதல் முதலீடு மஹாராஷ்டிரத்தை சென்றடைந்திருக்கிறது.
தேசிய திட்டக்கமிஷனின் தகவல்கள் படி குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்திருப்பினும், ஏழ்மையைக் குறைப்பதில் அது பீஹார், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், ஆந்திராவிற்குப் பின்னரே அது நிற்கிறது. 2011 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிக் குறியீடுகள் அறிக்கை படி குஜராத் பல தளங்களில் பின் தங்கியே இருக்கிறது ஐந்து வயதுக்குழந்தைகளில் 44 சதமானோர் வளர்ச்சி குன்றிக் காணப்படுகின்றனர், இது உத்திரப்பிரதேச நிலையைவிட மோசமாகும்.
இந்தப் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மோடி ஆட்சி மோசமானது எனக் கூறிவிட முடியாதுதான். ஆனால் ஏதோ பொருளாதார அதிசயத்தை அவர் சாதித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்வது வெறும் மாயை, விளம்பரம். ஆனால் மற்ற மாநிலங்களைத் தூக்கி சாப்பிட்டுவிட்டது குஜராத் என்பதான பிரச்சாரத்தால் கவரப்படுவோர் உண்மையை சுட்டிக்காட்டுபவர்கள் மோடியை அவதூறு செய்யவே இப்படியெல்லாம் எழுதுகின்றனர் என்று நினைக்க வைப்பதில் மோடி வெற்றி கண்டிருக்கிறார் என்பதும் உண்மையே.
தொடரும்.
தமிழாக்கம்: த.நா.கோபாலன்
நன்றி : தி கேரவன் மாத இதழ்.
I like