2011 செப்டம்பர்-12 அன்று கடவுள் பெரியவர் என ட்விட்டரில் மோடி பதிவிடுகிறார். அன்றுதான் உச்சநீதிமன்றம் குஜராத் கலவரங்கள்போது நிகழ்ந்த 9 மிக மோசமான சம்பவங்கள் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கும் சிறப்புப் புலனாய்வுக்குழு ஈசன் ஜாஃப்ரி படுகொலையில் மோடிக்கு தொடர்பிருக்கிறதா? என்பதையும் ஆய்ந்து குஜராத் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிடுகிறது. அத்தீர்ப்பு மோடிக்கொன்றும் வெற்றி அல்லதான். ஆனால் 2003-ல் அவரை நவீன நீரோ என்று சாடியதே அதைப் போல கருத்தெதுவும் இப்போது கூறவில்லை, ஜாஃப்ரி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி அவரை முதல் குற்றவாளியாக அறிவிக்கவில்லை. அந்த அளவு மோடிக்கு நிம்மதிதானே ?.
அவரது பயணத்தின் அடுத்த கட்டம் துவங்கிவிட்டது என அவர் முடிவு செய்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகி ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவருடைய பிறந்த நாளில், அஹமதாபாத்தில் தனது “நல்லெண்ணத்தை’ எடுத்துக்காட்டும் வண்ணம் மூன்று நாள் உண்ணா விரதத்தைத் தொடங்கினார். ஆயிரக்கணக்கில் மக்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்டனர். பாஜக மூத்த தலைவர்கள் அனைவரையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் தன்னருகே அமருமாறு வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டார் மோடி. தொலைக்காட்சிகளிலும் நாளேடுகளிலும் சத்பாவனா உண்ணாவிரதம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாளேடுகளில் முதல் நாள் முழுப்பக்க விளம்பரம். இந்தி, பஞ்சாபி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, ஒரியா எனப் பல மொழிகளிலும். அதற்கான செலவு குஜராத் அரசுக்குத்தான்.
அஹமதாபாதோடு நிற்கவில்லை அவர். சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் மாநிலத்தின் 26 மாவட்டங்களிலும் ஒவ்வொரு நாள் நல்லெண்ண உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார் மோடி.
2011 நவம்பர் இறுதியில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோன்காத் என்ற மலைப் பிரதேச நகரில் நடத்தப்பட்ட சத்பாவனா நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். கட்டாந்தரை உழப்பட்டு மோடியும் மற்றவர்களும் அமர்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரும் விழா நடப்பது போன்றதொரு சூழல். மக்களை அங்கு அழைத்து வந்திருந்த மாநில போக்குவரத்துத் துறையின் பஸ்கள் நூற்றுக்கு மேல் அங்கே நிறுத்தப்பட்டிருந்தன. தவிர ஏகப்பட்ட ட்ரக்குகள். கொய்யா, ஸ்ட்ராபரி, மாங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அன்று திரண்டிருப்பார்கள். திறந்தவெளி அரங்கெங்கும் பிளாஸ்மா டிவி திரை. மோடியுடன் மேடையில் 60 பேர் இருந்திருப்பார்கள். அமைதியாக எதுவும் பேசாமல் ஏதோ பெரும் தத்துவ ஞானிபோல நடுநாயகமாக தீவிர சிந்தனையில், ஒரு கையால் லேசாகத் தலையைத் தொட்டபடி, இன்னொன்றால் தாடையை வருடியபடி அமர்ந்திருந்தார் மோடி. காலையிலிருந்து மாலை வரை அரசியல்வாதிகளும் மதப் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருந்தனர். அனைவரது பேச்சுக்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் மோடி. தன் முன் குழுமியிருந்தவர்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் எழுந்து 100 மீட்டர் முன்னே வந்தபோது என்னை மோடியின் கண்கள் உற்று நோக்கியதாகத் தோன்றியது.
சத்பாவனா உண்ணாவிரதத்தின்போது நரேந்திர மோடி
அடிமட்ட அலுவலர்களுடன் தொடர்புகொண்டு நேரடியாகப் பேசும் அளவு நிர்வாக இயந்திரத்தின் மீது அப்படி ஒரு இறுக்கமான பிடி. அதே அளவு அவர் செய்தியாளர்களையும் நெருக்கமாகக் கண்காணித்தார்.
2002 மே மாதத்தில் மோடி திருமணமாகாத பிரம்மச்சாரி அல்ல என்ற செய்தி பரவ, காந்திநகரிலிருந்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தர்ஷன் தேசாய் ஜசோதா வட்நகர் அருகே வசிப்பதைக் கண்டறிந்து அங்கு செல்கிறார். அவரையும், அவர் சகோதரரையும், ஜசோதாபென் பணியாற்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் சந்திக்கிறார். ஆனால் சிக்கல் வரக்கூடும் எனப்பயந்து அவர்களில் எவரும் பேட்டியளிக்க மறுக்கின்றனர். அப்பகுதி பா.ஜ.க.வினரும் தர்ஷன் அங்கிருந்து உடனே வெளியேறிவிடுவது அவருக்கு நல்லது என எச்சரிக்கின்றனர்.
தர்ஷன் நினைவுகூர்கிறார்: ”நான் வீட்டிற்குச் சென்று காலணிகளைக் கூட கழற்றியிருக்கமாட்டேன். எனது மொபைல் ஃபோனில் “முதல்வர் உங்களுடன் பேசுகிறார்” என்ற அறிவிப்பு. பின் ”நமஸ்காரம்…சரி என்னதான் உங்கள் திட்டம்?” என்று மோடியின் கேள்வி.
மோடியின் மனைவி ஜசோதா பேன்
”நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே?”
”நீங்கள் எனக்கெதிராக எழுதியிருக்கிறீர்கள்… உங்கள் பத்திரிகை (கலவரத்தின்போது) மோடி மீட்டர் என்று ஒரு பகுதி வெளியிட்டுவந்தது… இன்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.. இன்றைய உங்கள் முயற்சிகள் எங்கெங்கோ செல்லும். அதனால்தான் கேட்கிறேன். நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று…”
நான் மிரண்டுபோகவில்லை…ஆனால் கொஞ்சம் உதறலெடுக்கவே செய்தது… சமாளித்துக்கொண்டு எதுவாயிருந்தாலும் எங்கள் ஆசிரியருடன் பேசுங்களேன் என்றேன். சரி எதற்கும் யோசித்து செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் என்கிறார் தர்ஷன்.
ஆனால் என்னால் மோடியை சந்திக்க முடியவே இல்லை. பல கடிதங்கள் எழுதினேன். பதிலில்லை. அவருடைய பொதுமக்கள் தொடர்பு அலுவலர் ஜக்தீஷ் தக்கார் கூறினார் – “அவ்வளவு எளிதில் அவரை சந்தித்துவிடமுடியாது… யாரை சந்திக்கவேண்டுமென்பதை அவரேதான் முடிவுசெய்வார்.”
ஆனால் நான் விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தேன். அவர் ஒருமுறை சீனா சென்றிருந்தபோது, ஒரு முறை போர்பந்தரில் உண்ணா விரதம் இருந்தபோது இப்படி விடாமல். தக்காரும் என்னிடம் சொல்லுவார் – நான் என்ன செய்ய…உங்கள் கடிதங்களை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்… அவர் ஒன்றுமே பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே…”
சோன்காதுக்குச் செல்லும் முன் இன்னுமொருமுறை தக்காரிடம் நான் அங்கே வரப்போகிறேன். அங்காவது அவரிடம் ஒரு அரைமணி நேரம் பேசமுடியுமா எனக்கேட்டேன்
மோடி பொதுவாக நிருபர்களைத் தவிர்ப்பார் என மற்றவர்களும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர் விரும்பும்போது தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பாராம்.
கரன் தாபர் அப்படித் தான் 18 மாதங்கள் முயன்று, வாரா வாரம் கடிதம் எழுதியும் பயனளிக்காமல், பிறகு அருண் ஜேட்லிமூலமாக சி.என்.என் ஐ.பி.என் பேட்டிக்கு ஒத்துக்கொள்ள வைத்த கதையைச் சொன்னார்.
ஆனால் தாபரின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை 2007-ல் நடந்த அப்பேட்டி 30 நிமிடத்திற்கு ஏற்பாடு. ஆனால் மூன்றே நிமிடங்களில் முடிந்தது.
அவரது திறமையைப் பற்றி பலரும் வானளாவப் புகழ்வதைக் குறிப்பிட்டு ஆனாலும் உங்களை பலரைக் கொலை செய்தவர் என்கிறார்கள், முஸ்லீம்களை உங்களுக்குப் பிடிக்காது என்கின்றனர்… உங்கள் பிம்பம் குறித்து ஏன் இத்தகைய சிக்கல் என்று தாபர் கேட்டபோது தயங்கித் தயங்கி ஏதோ பதிலளித்தார் மோடி.. பேசப் பேச அவருக்கு கோபம் தலைக்கேறியது நன்றாகவே தெரிந்தது… ஒரு கட்டத்தில் அவரது குர்தாவில் மாட்டப்பட்டிருந்த மைக்கைப் பிடுங்கி வீசி எறிந்து வெளியேறினார்.
நண்பரானீர்கள், நானும் பேட்டிக்கு ஒத்துக்கொண்டேன். ஆனால் உங்களுக்கென்று சில கருத்துக்கள் இருக்கின்றன அதையே திருப்பி திருப்பிச் சொல்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறார் மோடி.
சி.என்.என்., ஐ.பி.ன். மூன்று நிமிடங்களில் முடிந்துபோன அப்பேட்டியை 33 முறை ஒளிபரப்பினர். மறு நாள் மோடி கரன் தாபரை ஃபோனில் அழைத்து என்னை வைத்து பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களா எனக்கேட்டார்.
நான் தான் உங்களிடம் சொன்னெனே பேட்டியை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பதே நல்லதென்று என தாபர் பதிலளித்தார். மோடி சமாதானமடைந்து விட்டது போலப் பேசினார். இன்னொரு முறை பேட்டி நிச்சயம் என்றார்… நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூட சொன்னார். ஆனால் ஐந்தாண்டுகளாக கரன் தாபர் தலைகீழாக நின்றும் எதுவும் நடக்கவில்லை. ஆறு வாரங்களுக்கொரு முறை சந்திக்க வாய்ப்புக்கோரி கடிதம் எழுதுவாராம். நேரமும் பேப்பரும் பேனா மையும் விரயமானதுதான் மிச்சம். பதிலே இருக்காது.
சோன்காத் நிகழ்ச்சியில் எத்தனை ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன, குழந்தைகள் பள்ளிகள் நிறுவப்பட்டிருக்கின்றன, போர் வெல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் ஒருவரை மாற்றி ஒருவர் பட்டியலிட்ட வண்ணமிருந்தனர். பெரிய அளவில் கூடியிருந்த மக்கள் அதையெல்லாம் இரசித்ததாகத் தெரியவில்லை. அவ்வப்போது யாராவது ஒருவர் மேடையிலிருந்து பாரத் மாதா கீ ஜே, குஜராத் கீ ஜே, மோடி கீ ஜே என்று முழங்குவார், மக்களும் திருப்பிச் சொல்வர். ஒரு சிலர் மோடியை வாழ்த்திப் பாடுவார்கள். முரசறைவோம் முரசறைவோம் நல்லிணக்கத்திற்காக முரசறைவோம்… முரசறைவோம் முரசறைவோம் முதல்வருக்காக முரசறைவோம்… என்று கோஷமிடுவார்கள். அந்தப் பாட்டும் டியூனும் கேட்க சகிக்காது. ஆனால் பாடி முடித்தபின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்த அற்புதமான பாட்டை எழுதி மெட்டமைத்தது இந்த மாவட்ட கலெக்டர் ஆர்.ஜே.படேல் தான் என்று பெருமை ததும்பச் சொன்னார். அப்போதும் மோடி அமைதியாக முகத்தை வைத்திருந்தார். அந்த இறுகிய முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
சல்வைகள், பூச்செண்டுகள், மோடியின் ஓவியம் என்று பல பரிசுகளைக் கொண்டு வந்திருந்த மக்கள் அங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். இரு பெண்கள் அவரது உருவத்தை நூலில் நெய்து கொண்டு வந்திருந்தனர். அவரை சந்திக்கும் வாய்ப்பே பெரும் பேறு என அவர்கள் நினைப்பது நன்றாகவே தெரிந்தது.
ஐந்து மணிக்கு உண்ணாநோன்பை முடிக்கும் முன் அவர் என்னிடம் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்து நான் இருக்கையை விட்டு எழுந்தேன். சோன்காத் பேருந்து நிலையத்தில் காங்கிரசார் நடத்தும் போட்டி உண்ணாவிரதத்தை சென்று பார்க்கலாம் என நினைத்தேன்;. ஆனால் நானெழுந்ததைக் கவனித்த மோடி என்னைப் பார்த்து கையசைத்தார். என்ன சொல்ல முயல்கிறார் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவரது உதவியாளர் தக்கார் அவரருகே சென்று மண்டியிட்டார். மோடி அவரிடம் எதோ சொல்ல எழுபது வயதான தக்கார் வேக வேகமாக மூச்சிறைக்க என்னை நோக்கி ஓடி வந்தார். அவர் விழுந்துவிடுவாரோ என நான் அச்சப்பட்ட நேரத்தில் என் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி சாஹிப் உங்களுக்கு பேட்டியளிக்கத் தயாராய் இருக்கிறார். ஆனால் இங்கு முடியாது. எதிர்வரும் வெள்ளியன்று காந்திநகர் அலுவலகத்திற்கு வருகிறீர்களா எனக்கேட்டார் தக்கார். நான் மோடியைப் பார்த்தேன். கையசைத்தபடி தலை ஆட்டினார் அவர்.
அப்புறம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தையும் பார்வையிட்டேன். இரண்டாயிரம் பேர் இருந்திருப்பார்கள். அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்துணி அழுக்கேறி இருந்தது. சிறிய மேடை. கிட்டத்தட்ட 40 தலைவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். முன்னாள் முதல்வர் அமர்சிங் சவுத்ரியின் மகனும் மத்திய அரசில் இணை அமைச்சருமான துஷார் சௌத்ரி தலைமை வகித்தார். நான் அவரிடம் கேட்டேன் – மோடி செய்வதையெல்லாம் நீங்களும் செய்தாகவேண்டுமா? வேறு வழிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கமுடியாதா?
“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? நாங்கள் ஒன்றும் மோடியை இமிடேட் செய்யவில்லை. மோடிக்கு நல்லெண்ணம் ஏதுமில்லை என்பதை வலியுறுத்த இதுவே சரியான தருணம். மாநிலத்தை வளர்த்துவிட்டதாக வாய் கிழியப் பேசுகின்றார். ஆனால் உண்மை என்ன? சோங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதி. அவர்கள் மத்தியில் சிக்கிள் செல் அனீமியா எனும் வியாதி பரவலாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 160 பேர் இறந்திருக்கின்றனர். அவர்களுக்காக மோடி என்ன செய்துவிட்டார்? ஆனால் நேபாளத்தில் 15 நாட்களுக்கு முன்பு ஒரு சிறிய பூகம்பம். 30 பேர்தான் இறந்தனர். உடனேயே அங்கே நிவாரணத்திற்காக நிதி என்கிறார். இத்தகைய முரண்பாடுகளை சுட்டிக்காட்டவே இச்சந்தர்ப்பத்தினை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்” என்றார் துஷார்.
காங்கிரஸ் மட்டும் ஒற்றுமையாக இருக்குமானால் மோடியைத் தோற்கடிக்க முடியும் என்றார் அவர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது அந்த மேடையிலயே தெரிந்தது. அதில் அமர்ந்து இருந்த ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டி. அவர் இந்த கோஷ்டி… இவர் அந்த கோஷ்டி… என ஒரு தொண்டர் என் அருகில் கிசுகிசுத்தார். சோலங்கி,அஹ்மது படேல்,வகேலா என இப்படி ஆளாளுக்கு ஒரு பிரதிநிதி..
நான் மோடியின் நிகழ்ச்சிக்குத் திரும்பினேன். எல்லாம் ஒழுங்காக சீராக நடைபெற்று வந்தது. வாழ்த்துக்கள்… பரிசு மழைகள் என எல்லாம் முடிந்து இறுதியில் மோடி உரை. அவர் எதிர்காலம் பற்றியே பேசினார்.,
தனது கைகளில் மூன்று துண்டு சீட்டுக்கள் வைத்திருந்தார். மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் அச்சீட்டுக்களில். பாலம், சாலைகள், ஏரி, ஒவ்வொன்றாகச் சொல்லி 200 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் என அறிவித்தார். முடிவில் வளர்ச்சி வளர்ச்சி, வளர்ச்சி என உரத்த குரலில் முழங்கினார்.
வளர்ச்சி என்றால் உலகம் குஜராத்தைப் பார்க்கிறது. குஜராத் என்றால் வளர்ச்சி என்று புரிகிறது. வளர்ச்சி-குஜராத், குஜராத்- வளர்ச்சி என மாற்றி மாற்றி கைகளை உயர்த்தி தொடர்ந்து முழங்கினார் மோடி.
மக்கள் மயங்கிப் போயிருந்தனர் என்றால் அதில் மிகையில்லை. அவர்களது உற்சாகம் பீறீட்டுக் கிளம்பியது. அவர்கள் மோடியால் சோன்காந்த் ஒரேயடியாக மாறப்போவதாக முழுமையாக நம்பினர் என்பது தெரிந்தது. நானிருக்கிறேன், கவலைப்பட வேண்டாம் என்ற ரீதியில் மோடி பேசினார்.
அண்மையில் சீனா சென்று வந்ததைப் பற்றிப் பேசினார். மாநிலம் அதைப் போல் வளர வேண்டுமென்பதே தனது இலட்சியம் என்றார். குஜராத்திலிருந்து ஐரோப்பாவிற்கு கத்தரிக்காய் ஏற்றுமதி செய்யப்படுவது பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். உலகிலுள்ள பெரும் பெரும் கார் நிறுவனங்கள் குஜராத்தில் கார் தயாரிக்க அனுமதி கேட்டு அனுப்பியிருக்கும் கடிதங்கள் தன் மேசையில் குவிந்து விட்டதாகச் சொன்னார்.
இன்னமும் குஜராத்தில் பிரச்சினை இருக்குமானால் அதற்கு ஒரே காரணம் மத்தியில் ஆளும் காங்கிரசே என்றார். முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளை கையில் வைத்துக் கொள்ளாமல் சுயமாகப் பேசினார். நம்பிக்கையுடன் பேசினார். சரளமாகப் பேசினார். எல்லோரும் அமைதியாக, கவனமாக, சிலர் வாய் பிளந்து கண்ணிமைக்காமல் அவரது சண்டமாருதத்தில் தங்களை இழந்துவிட்டிருந்தனர்.
எதிர்கால அரசியலுக்கு இதுபோன்ற சத்பாவனா நிகழ்ச்சிகள் உதவும் என்று மோடி நம்பியதைப்போல், குஜராத்தில் பிரம்மாண்டமாக எழுந்து வரும் கட்டிடங்கள் தன் ஆட்சியின் மேன்மையினை எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் என அவர் நம்பியிருக்கவேண்டும்.
மாநிலத்தின் அனைத்து திசைகளிலும் கட்டிடங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள், சீனர்கள், அரசுப் பொறியாளர்கள் சேர்ந்து கொண்டு கட்டிடங்களுக்குத் திட்டமிடுவதும் கட்டி முடிப்பதுமே முழுநேர தொழிலானதுபோல ஒரு தோற்றம் உருவாகி இருந்தது. ஆனால் சந்தித்த எவரும் அதுபற்றி பேட்டியளிக்க மறுத்துவிட்டனர். உங்களிடம் பேசியது தெரிந்தாலே என் வேலைக்கு உலைதான்… ஆளை விடுங்கள்… தகவல்கள் வேண்டுமானால் தருகிறோம்… ஆனால் பெயரை வெளியிட்டு விடாதீர்கள் என்ற ரீதியில்தான் எல்லோரும் பேசினர். எத்தனை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மோடியின் உத்தரவுகளே அமலாக்கப்பட்டன.
2007- ஒளிரும் குஜராத் மாநாடு நெருங்கிய நேரத்தில் சபர்மதி ஆற்றுப் பகுதி வளர்ச்சித் திட்டத்தினை அறிவித்தார் அவர். அஹமதாபாத்தின் குறுக்கே பாய்கிறது சபர்மதி. அதன் இரு கரைகளிலும் குடிசைவாசிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றனர். ஆனால் மோடியின் திட்டப்படி லண்டன், பாரிஸ் போல ஆற்றின் கரைகளில் கண்களைப் பறிக்கும் புதிய நகரம், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடிசைகளை அகற்றி அலுவலகங்கள், வணிக மையங்கள், சந்தைகள், பூங்காக்கள் அமைக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு ஃப்ரான்ஸ் நாட்டு கட்டிடக் கலைஞர் கண்ட கனவு அது. ஆனால் பத்தாயிரம் பேராவது குடிபெயரவேண்டும். ஆனால் வரைபடங்களோடு திட்டம் நின்றுவிட்டது. 1990-களில் மறுபடி அது விவாதிக்கப்பட்டது. 2001 பூகம்பம் குறுக்கிட்டது.
ஆனால் இப்போது அத்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாயிருந்தார் நரேந்திரமோடி. அதிலும் கலவரங்களால் உருவான களங்கத்தைத் துடைத்தெறிந்து தன்னை வளர்ச்சிக்கான தலைவராகக் காட்டிக்கொள்ள சபர்மதி திட்டம் உதவும் எனக் கருதினார் அவர்.
2007- மாநாட்டில் திட்டத்தின் விவரங்களை விளக்க மிகப்பெரிய திரையைத் தயார் செய்யச் சொன்னார். 12 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம். அதனை தூக்கிச் செல்லவே இருபதுபேருக்கும் மேல் தேவைப்பட்டது. அது ஒரு மாடல் கூட அல்ல. ஒரு வரைபடம் அவ்வளவே. பலருக்கு அது பிடித்திருந்தது. ஆனால் மோடிக்கல்ல. என்ன படம் இது வெறும் சாம்பல் நிறத்தில்… இன்னமும் இதைக் கவர்ச்சியாக்கவேண்டும். பல வண்ணங்களில் என்றார்.
கட்டிடக் கலைஞர்களுக்குக் கடுங்கோபம். இவருக்கு ஏதாவது வரைபடங்கள் பற்றித் தெரியுமா… விதவைக் கோலத்தில் இருக்கிறது இந்தப் படம் என்கிறாரே… ஆனால் என்ன செய்ய அவர்தான் பாஸ்… சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும்… மறுபடி திரையை இறக்கி நாற்பது ஆட்களைவைத்து அந்தப் படத்தை வண்ணங்களால் நிரப்பினார்கள். மொட்டையடித்து வெள்ளைச் சேலைக் கோலத்தில் இருந்த விதவை சர்வாலங்கார பூஷிதையாக ஒரு மணப்பெண்ணைப் போல் மாறி நின்றாள் என்கிறார் ஒரு மூத்த அதிகாரி. எத்தனை அபத்தமாகத் தோன்றினாலும் சொன்னால் செய்துமுடிக்கவேண்டும். எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. அதுதான் மோடி பாணி.
அஹமதாபாத்துக்கு 30 கிமீ தொலைவில் புதிய நகரம், முதலீட்டாளர்களுக்கென அனைத்து வசதிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஷாங்ஹாய், டோக்கியோ லண்டன் இவற்றையெல்லாம் விஞ்சும் அளவு 886 ஏக்கர் பரப்பளவில் 124 அடுக்குமாடிக் கட்டிடங்கள், 75 மில்லியன் சதுர அடி அலுவலகங்களுக்காக கண்கவர் நகர் உருவாகிக்கொண்டிருக்கிறது. தற்போது மும்பையில் இயங்கும் முதலீட்டு நிறுவனங்களை 2017 வாக்கில் அங்கே வரவழைத்துவிட வேண்டும் என்பதுதான் மோடியின் இலட்சியம். கிழக்கு சீன கட்டிடக் கலை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் பெருமளவில் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள்தான் இன்றைய ஷாங்ஹாய் நகரை வடிவமைத்தவர்கள். வரைபடங்களும் அங்கிருந்துதான். அதே மாடல்கள். ஒரு பிரம்மாண்ட கண்ணாடிப் பெட்டி நகரம் உருவாகிறது. முதலீட்டு நிறுவனங்கள், ஹெட்ஜ் நிதி, தகவல் தொழில்நுட்பம், காப்பீடு இவற்றின் வழியே 425 பில்லியன் டாலர் புரளப்போகிறது. 11 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு. இவற்றில் ஒரு கணிசமான பகுதியை ஈர்ப்பதில் குறியாயிருக்கிறார் மோடி.
பன்னாட்டு முதலீட்டார்களுக்கான அதி நவீன தொழில்நுட்ப நகரம் Gujarat International Finance Tec-City (or “GIFT City”) கிஃப்ட் சிட்டி என்றழைக்கப்படும் சபர்மதி ஆற்றங்கரைத் திட்டத்தின் இரண்டாவது பகுதிப் பணி நடைபெற்று வருகிறது. பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களையும் வரவைக்க முடியும் என மோடி நம்புகிறார்.
GIFT CITY
வைர வடிவிலான 80 மாடி கட்டிடம், வளைந்து நெளியும் பாம்பைப் போன்ற நாக கோபுரம் இவையெல்லாம் வேகமாக எழுந்துகொண்டிருக்கின்றன. பத்து லட்சம் தொழிலாளர்கள் இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட இன்னொரு வல்லுநர் நான் ராபர்ட் மோசஸா அல்லது ஆல்பர்ட் ஸ்பீயரா என்று எனக்கே தெரியாது. எப்படியும் ஸ்பீயராகி விடக்கூடாதென்றார் நகைத்துக்கொண்டே. நியூயார்க் நகரை உருவாக்கியவர் மோசஸ். கடும் எதிர்ப்புக்களிடையே பல பெரும் கட்டிடங்களை அங்கே உருவாக்கியவர். ஸ்பீயர்? ஹிட்லரின் பிரதான கட்டிடக்கலைஞர்!
சபர்மதி புதிய குஜராத்தை நிர்மாணிக்கிறது என்றால் மஹாத்மா ஆலயத்தின் மூலம் காந்தியின் பாரம்பரியத்தில் தனக்கும் பங்குண்டென்கிறார் மோடி. காந்தியை கட்டோடு வெறுக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் மஹாத்மா ஆலயத்தை எழுப்பவேண்டும் என்பதே நோக்கம். அது போக காந்திக்கும் அக்கட்டிடத்திற்கும் தொடர்பிருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.
காந்தியின் சிலை, பெரிய இராட்டை மாடல், பின்னால் ஜன்னல் இல்லாத இன்னொரு பிரம்மாண்ட கட்டிடம்.. மோடி என்றால் எல்லாமே பிரம்மாண்டம்தான். உள்ளே மாநாட்டரங்குகள். ஏற்கெனவே ஒரு ஒளிரும் குஜராத் மாநாடு இங்கே நடைபெற்றிருக்கிறது. நான் அங்கே சென்றபோதெல்லாம் தொழிலதிபர்கள், காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் இவர்களையே சந்திக்க முடிந்தது. என்னே மஹாத்மா ஆலயம்?
காந்தி ஆசிரமம்
சோனாகாத்தில் எனக்கு வாக்குறுதியளித்திருந்தபடி மோடியை சந்திக்க நேரமும் ஒதுக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் நான் ஜக்தீஷ் தக்காரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால் பாசிடம் கேட்டுவிட்டு சிலமணி நேரங்களில் என்னைத் தொலைபேசியில் அழைத்து மன்னிக்கவும். மோடிஜீ சந்திக்கவியலாது என்கிறார் எனத் தகவல் சொன்னார். நான் விடவில்லை. சில மாதங்கள் என் முயற்சியைத் தொடரத்தான் செய்தேன். கடிதங்கள் எழுதினேன், குறுஞ்செய்திகள் அனுப்பினேன், தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்… ஊஹூம் எதுவும் பலிக்கவில்லை. ஏன் மோடி தன் முடிவை மாற்றிக்கொண்டார் எனக்குத் தெரியவே இல்லை.
சோன்காத்தில் ஒத்துக்கொண்டு இப்போது மறுக்கிறாரென்றால் உங்களைப் பற்றி தகவல்கள் திரட்டியிருக்கிறார் எனப்பொருள். கோர்தன் ஜடாஃபியா போன்றவர்களை நீங்கள் சந்தித்தீர்களா என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். நான் சந்தித்திருந்தேன். “அதுதான் சிக்கல். தகவல் போயிருக்கும்…கடும் கோபம் வந்திருக்கும்…அப்புறம் கலவர சுற்றுலா சென்றீர்களா?” அதாவது கலவரம் தொடர்பான இடங்களுக்குச் சென்றீர்களா என்று கேட்கிறார் அச் செய்தியாளர். ஆமாம் போயிருந்தேனே. முடிந்தது கதை. எப்படி பேட்டி கொடுப்பார்? மோடியைப் பற்றி எழுத விரும்பினால் முதலில் அவரையல்லவா சந்திக்கவேண்டும்… அப்புறம் அவர் விரும்புவதைத் தான் எழுதவேண்டும்… அதைவிட்டுவிட்டு யார் யாரையோ பார்த்திருக்கிறீர்கள்… அவருக்குத் தெரிந்துவிட்டது நீங்கள் போலி மதச்சார்பின்மை பேசுபவர் என. அவர் மீது உங்களுக்குக் காழ்ப்புணர்ச்சிகள் பல இருக்கும்… இந்நிலையில் அவர் ஏன் உங்களை சந்திக்கவேண்டும் என சற்று கோபமாகவே கேட்டார் அந்த நபர்.
தொடரும்
தமிழாக்கம் : த.நா.கோபாலன்
நன்றி : தி கேரவன் மாத இதழ்