‘அய்யா சாமீ… தர்ம தொரை… பிச்சை போடுங்கய்யா….‘ ரெண்டு நாளா சாப்பிடலய்யா… ‘ இது போன்ற குரலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.
ஆனால் கடந்த 15.01.2011 அன்று கோபலபுரத்தில் இதே தொனியில் சற்று வேறுபாடான குரல்கள் ஒலித்தன. ‘அய்யா சாமீ… தர்மதொர…. இந்த போஸ்ட விட்டு மாத்தாதீங்கய்யயா… நான் சரியாவே கொள்ளையடிக்கலய்யா…. தயவு செய்து நல்ல போஸ்டிங் போடுங்கய்யா….. இன்னும் மாமூல் வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா.. ஒங்களுக்கு விசுவாசமா இருக்கேன்யா…‘ ‘நல்லா ஒட்டுக் கேக்கறேன்யா… எனக்கு ரெண்டு மெடல் கொடுங்கய்யா.. ‘ என்ற குரல்கள் கோரசாகவும், தனித் தனியாகவும் ஒலித்தன.
இவர்கள் தான் இந்தக் குரல்களுக்குச் சொந்தக் காரர்கள்.. இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து இன்னும் சிலர் பிச்சையெடுத்தார்கள். நம்ப குஷ்பூ அக்கா, ராமநாராயணன், டாக்டர் மயில்வாகனன் நடராஜன் போன்றோர். ஆனால் அவர்கள் பிச்சை எடுத்ததில் சட்டச் சிக்கல் இல்லை.
மற்றவர்கள் பிச்சை எடுத்ததில் என்ன சட்ட சிக்கல் ? இருக்கிறது. மற்ற ஐவரும், அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு பிச்சை எடுத்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு பிச்சை எடுப்பது தவறு என்று, 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் சொல்கிறது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 11 கீழ் கண்டவாறு கூறுகிறது.
11. Public servant obtaining valuable thing, without consideration from person concerned in proceeding or business transacted by such public servant
Whoever, being a public servant, accepts or obtains or agrees to accept or attempts to obtain for himself, or for any other person, any valuable thing without consideration, or for a consideration which he knows to be inadequate, from any person whom he knows to have been, or to be, or to be likely to be concerned in any proceeding or business transacted or about to be transacted by such public servant, or having any connection with the official functions of himself or of any public servant to whom he is subordinate, or from any person whom he knows to be interested in or related to the person so concerned, shall be punishable with imprisonment for a term which shall be not less than six months but which may extend to five years and shall also be liable to fine.
சுருக்கமாக தமிழில் சொல்வதானால், ஒரு அரசு ஊழியர், அவர் அலுவல் ரீதியாக பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடிய ஒருவரிடமிருந்து, மதிப்புள்ள எந்தப் பொருளை பெற்றாலும், ஐந்தாண்டுகள் அபராதத்தோடு கூடிய சிறைத் தண்டனைக்கு ஆளாவார்.
இதே சட்டத்தின் பிரிவு 13 (1) (d) (ii) மற்றும் (iii) என்ன கூறுகிறது தெரியுமா ?
(ii) by abusing his position as a public servant, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or
(iii) while holding office as a public servant, obtains for any person any valuable thing or pecuniary advantage without any public interest; or
ஒரு அரசு ஊழியர் அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்து, அவருக்கோ, வேறு யாருக்கோ, மதிப்புள்ள ஒரு பொருளையோ, கையூட்டையோ பெறுவாரேயானால், அல்லது
ஒரு அரசு ஊழியர் பதவியில் இருக்கும்போது, பொது நலன் இல்லாமல், அவருக்கோ, வேறு யாருக்கோ, மதிப்புள்ள ஒரு பொருளையோ, கையூட்டையோ பெறுவாரேயானால்
அவர் கிரிமினல் குற்றத்தை புரிந்தவராகிறார். இதற்கு தண்டனையாக அபராதத்தோடு ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது.
இந்த பிச்சைக் காரர்கள் இப்போது இந்த சட்டத்தின் படி தண்டிக்கப் பட வேண்டியவர்களா இல்லையா ? இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் பூர்வாங்கமாக பார்க்கும் போது (prima facie) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போதுமான முகாந்திரம் இருக்கிறது அல்லவா ?
இதனால் சவுக்கு என்ன செய்தது… இன்று இந்த ஐவரும் இந்த சட்டப் பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலாநாத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பப் பட்டது.
இது போன்ற வழக்கில் சட்ட ரீதியான நடைமுறை என்னவென்றால், வழக்கு பதிவு செய்ய வேண்டியதுதான். முதலில் எஃப்ஐஆர் போட்டு விட்டு, அதன் பின்னர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த நேர்வில் என்ன நடக்கும் தெரியுமா ? லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலாநாத், இந்த புகாரில் யார் யார் குற்றம் சாட்டப் பட்டிருக்கிறார்களோ அவர்களிடமே ‘இது போல ஒரு புகார் வந்துள்ளது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கேட்பார். அவர்கள், இந்த புகாரை எவன் அளித்தானோ, அவன் மீதே நடவடிக்கை எடுங்கள் என்று அறிவுரை கூறுவார்கள். போலாநாத்தும் அதன் படியே நடப்பார்.
ஆனால், சவுக்கு இதற்கெல்லாம் சளைத்தா என்ன ? அடுத்த கட்டமாக வழக்கு பதிவு செய்யச் சொல்லி போலாநாத்துக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகாதா என்ன ?