ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டங்களில் இந்த வார்த்தைகள்தான் பிரதானமாக எதிரொலிக்கிறது. பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா தன் பிரதமர் கனவுகளை வெளிப்படையாகச் சொல்லாமல், மத்தியில் அதிகாரம் வேண்டும் என்று மறைமுகமாகச் சொன்னாலும், அதிமுக அடிமைகளின் “அம்மா பிரதமர்” கோஷங்கள் காதைத் துளைக்கின்றன. அதிமுகவின் பொதுக்கூட்டத்துக்கு ஒட்டப்பட்டிருந்த பல்வேறு சுவரொட்டிகளில், ஜெயலலிதா பிரதமராகி விட்டதாகவே எழுதப்பட்டிருந்தன. முப்படைகளின் தளபதி என்றும், பாகிஸ்தான் அம்மாவைக் கண்டு அலறும் என்றும் பல்வேறு சுவரொட்டிகள். இத்தனைக்கும் அதிமுக அடிமைகள் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு துணிந்தவர்கள் அல்ல. பல முறை யோசித்து அஞ்சி அஞ்சித்தான் ஒட்டுவார்கள். ஏனென்றால், ஏதாவதொரு சுவரொட்டியில் இருந்த வாசகங்கள் அம்மாவுக்கு பிடிக்காமல் போய் விட்டால், அன்றோடு சுவரொட்டியை ஒட்டுவதற்கு காரணமாக இருந்தவர் முதல் அவரின் அடிப்பொடிகள் வரை தொலைந்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் கூட துணிந்து விதவிதமான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதுபோதாதென்று, ஜெயா டிவியில், நண்டு சிண்டுகளையெல்லாம் பிடித்து “அம்மா பிரதமராக வேண்டும். அம்மா பிரதமரானால்தான் இந்தியாவிற்கு விடிவுகாலம் வந்துவிடும். அதன்பிறகு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும்” என்ற சொல்லிக் கொடுத்து பேச வைக்கிறார்கள்.
எல்லாம் ஜெயலலிதாவின் உச்சியைக் குளிர வைக்க நடத்தப்படும் நாடகங்கள். இந்த நேரத்தில்தான், ஜெயலலிதா மற்றும் அவருடைய அடிமைகளின் மனவோட்டம் தெரியாமல் டெல்லியில் இருந்து வந்த பிரகாஷ் காரத் மற்றும் ஏ.பி.பரதன் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்படி ஜெயலலிதா கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தற்போது அப்படி அறிவிக்க இயலாது என்று கூறியதாகவும் அதனாலேயே அவர்களை (இடதுசாரிகளை), கடைசிவரை கூட்டணியில் இருப்பதாக நம்ப வைத்து இறுதி நேரத்தில் கழற்றி விட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்த்தால், ஜெயலலிதாவுக்கு பிரதமர் கனவு தலையில் ஏறி நிற்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு அவர் தகுதியானவரா என்பதை அலசுவதே இந்தக் கட்டுரை.
இன்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் எல்லா இடத்திலும், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்று தொடர்ந்து பேசி வருகிறார் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஜெயலலிதா எப்படிப்பட்ட ஊழல் பேர்வழி என்பது நன்றாகத் தெரியும். ஊழலின் மொத்த உருவாக அன்றைய ஜெயலலிதா அரசு இருந்தது. சென்னை, கிண்டியில் உள்ள டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை, ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரராக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்காக அடிமாட்டு விலைக்கு வாங்கியவர்தான் ஜெயலலிதா. அந்த இடத்தில் ஒரு மனையின் விலை 7 லட்சம் என்று வருவாய்த்துறை நிர்ணயம் செய்திருந்தது. அதை விற்பனை செய்வது என்று அரசு முடிவெடுத்ததும், டெண்டர்கள் கோரப்பட்டன. அதற்காக நடத்தப்பட்ட அரசாங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு, முதலமைச்சர் என்ற முறையில் தலைமை வகித்தவர் ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. டெண்டர்கள் விடப்பட்டதும், டெண்டரில் பங்கெடுத்த மற்ற நிறுவனங்கள், நிலத்தை மொத்தமாக வாங்க முன்வரவில்லை. ஆனால் ஜெயலலிதாவின் சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், மொத்த நிலத்தையும் வாங்கிக் கொள்ள முன்வந்தது. ஆனால், அந்த நிலத்திற்கு சசி என்டர்பிரைசஸ் கொடுப்பதாக சொன்ன மனை ஒன்றுக்கு 3 லட்சம்.
நீதிமன்றத்திலிருந்து வெளிவரும் ஜெயலலிதா
அதன்பிறகு ஜெயலலிதாவின் கீழ் பணியாற்றிய அரசு அதிகாரிகள், ஒப்புக்காக ஒரு கூட்டத்தைப் போட்டு, இந்த நிலத்தை சசி என்டர்பிரைசஸுக்கே கொடுக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். 07.12.1992 அன்று பிரத்யோகமாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இங்கு வாசகர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். அதே வருடத்தில், செப்டம்பர் மாதம் டான்சி நிலத்துக்கு அருகே இருந்த இதயம் பப்ளிகேஷனுக்கு சொந்தமான நிலத்தை, ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரராக இருக்கும், சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஒரு மனை 7 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அதாவது தனியார் நிலத்திற்கு 7 லட்சம்… அரசாங்க நிலத்திற்கு 3 லட்சம்.
மிக மிக தெளிவாக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய வழக்கு இது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாபு மற்றும் ரெட்டி ஆகியோர், “தப்புதான்….. ஆனா தப்பு இல்ல” என்ற தொனியில் ஒரு தீர்ப்பு வழங்கி, ஜெயலலிதாவை தண்டனையிலிருந்து காப்பாற்றினர்.
1991 – 1996 காலகட்டத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சாதரண மக்கள், தொழிலதிபர்கள் என யாராக இருந்தாலும் சொத்து வாங்கவே முடியாது என்ற நிலை இருந்தது என்ற செய்தி இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாக இருக்கும். எஸ்.டி.சோமசுந்தரம், மதுசூதனன் மற்றும் ஆதிராஜாராம் தலைமையில் மிகப்பெரிய ரவுடிக் கூட்டமே அப்போது சென்னையில் இயங்கி வந்தது. சசிகலாவோ அல்லது அவர் உறவினர்களோ, சாலையில் செல்லும்போது, ஏதாவது ஒரு கட்டிடத்தை பார்த்து ரசித்துவிட்டார்கள் என்றால், அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்தில் கட்டிட உரிமையாளர் விற்றே தீர வேண்டும். மீறினால் வீட்டுக்கு ஆட்டோ வரும். ஆட்டோவில் ரவுடிகள் இருப்பார்கள். விற்க மறுத்தவர்கள் மீது வன்முறை ஏவப்படும். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கே இந்த நிலை ஏற்பட்டது. வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற வாக்கியம் அப்போது மிகப் பிரபலம்.
தற்போது பெங்களூரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் பட்டியலிடப்படும் அத்தனை சொத்துக்களும் அப்போது சம்பாதித்தவைதான். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, அத்தனை சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார் ஜெயலலிதா. இந்த ஜெயலலிதாதான் இன்று கருணாநிதி மற்றும் காங்கிரஸின் ஊழல்கள் குறித்துப் பேசுகிறார்.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை அவர் கையாண்ட விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லும். இன்று வரை அந்தக் கதைகள் உலவுகின்றன. நீதிபதிகளை வளைப்பது, வளையாத நீதிபதிகளை மிரட்டுவது, அவர்கள் உறவினர்கள் மீது கஞ்சா வழக்கு போடுவது, அவர்கள் வீட்டுக்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை ரத்து செய்வது என்று ஜெயலலிதா கடைபிடிக்காத தந்திரங்களே கிடையாது. கொடைக்கானலில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி அனுமதி வழங்கியதை ரத்து செய்து, “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்” என்ற குறளை மேற்கோள் காட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிவாசன் வழங்கிய தீர்ப்பு, பிரசித்தி பெற்றது. அந்த குறளை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அதை அகற்ற மறுத்து விட்டது. நீதிபதி ஸ்ரீநிவாசனின் வீட்டுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. துண்டித்தவர் இந்த ஜெயலலிதா.
நீதிபதி ஸ்ரீநிவாசன்
பெங்களுரில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா 17 ஆண்டுகளாக இழுத்தடித்து வரும் போக்கே ஜெயலலிதா எதையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது. 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியம் அளித்தவர்களை மிரட்டி, பிறழ் சாட்சியங்களாக மாற்றியதோடு, அந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி நல்லம நாயுடுவை நீதிமன்றத்திலேயே அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தும் வேலையையும் செய்தார்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த வழக்கில் விதவிதமான மனுக்களை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. பதவியிலிருந்து ஓய்வு பெற இருந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று ஒரு மனு, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கே நீடிக்க வேண்டும் என்று ஒரு மனு என்று மனுக்கள் மேல் மனுக்கள் போட்டுக் கொண்டு இருக்கிறார். ஒரு குற்றவாளி தொடர்ந்த வழக்கை அனுமதித்து உச்சநீதிமன்றமும் இன்று வரை, அதை விசாரித்துக் கொண்டிருக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கு காரணமாகவே, சொத்துக் குவிப்பு வழக்கு இன்று வரை உயிரோடு இருக்கிறது.
கர்நாடக அரசு தலைமை நீதிபதியை கலந்தாலோசிக்காமல் நீதிபதி நியமனம் செய்யப்பட்டு விட்டார் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, முறையாக சிறப்பு நீதிபதி மைக்கேல் டி. கன்ஹா நியமிக்கப்பட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா விரும்பியபடி, அவர் கேட்ட பெட்ரோமாக்ஸ் லைட்டான அரசு வழக்கறிஞர் பவானி சிங்கே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நான்தான் வழக்கறிஞராக இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்த பவானி சிங்குக்கு, முக்கிய வாதங்கள் நடக்கும் நேரத்தில் “திடீரென்று” உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமாட்டார். இதனால் வழக்கு இழத்தடிக்கப்படுவதை உணர்ந்து ஆத்திரம் அடைந்த நீதிபதி, பவானி சிங்கின் சம்பளத்தையே அபராதமாக விதித்தார். அதன்பிறகும், ஜெயலலிதா அன் கோ- வின் ஆட்டம் ஓயவில்லை. நீதிபதி விதித்த அபராதத்தை எதிர்த்து பவானி சிங் உயர்நீதிமன்றம் சென்றார். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், வேறு வழியில்லாமல், தற்போது அவர் “நலிந்த உடல்நிலையோடு” இந்த வழக்கில் வாதாடிக் கொண்டிருக்கிறார்.
சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதம் நடந்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளிவரலாம். இப்படிப்பட்ட கத்தியை தலைக்கு மேல் தொங்கவிட்டுக் கொண்டுதான் பிரதமர் கனவிலும் மிதந்து கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா.
சரி. அப்போது ஜெயலலிதா ஊழல் செய்தார். இப்போது திருந்தி விட்டார் என்று அதிமுக அடிமைகள் கூறக்கூடும். அது ஒருவகையில் உண்மைதான். ஜெயலலிதா பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார். முன்புபோல் அவர் முட்டாள்தனமாக தவறு செய்வது இல்லை. இப்போது விஞ்ஞான பூர்வமாக செய்கிறார். 2001-ஜெயலலிதாவின் ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஊழல் தலை விரித்தாடுகிறது. விளிம்பு நிலை மக்களை இந்த ஊழல் பெரிய அளவில் பாதிக்காத காரணத்தால், வெளியே தெரியாமல் இருக்கிறது. தொழில் அதிபர்களைக் கேட்டுப் பாருங்கள். ஊழல் எப்படியெல்லாம் புரையோடிப் போயிருக்கிறது என்று சொல்லுவார்கள்.
இந்த ஊழலுக்கு ஒத்துப்போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே நல்ல பதவிகளில் வைக்கப்படுகிறார்கள். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து காப்பாற்றுவதையும், நூறு ரூபாய்-இருநூறு ரூபாய் என லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., போன்ற சுண்டெலிகளை பிடிப்பதையும் மட்டுமே கடமையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை ஒழுங்குபடுத்த பல கோடிகள் கைமாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. 44 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல், சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டியுள்ள ஈஷா யோக மையத்தின் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தும், அந்தக் கட்டிடங்களை இடிப்பதில் மிகுந்த தயக்கம் காட்டுகிறார் ஜெயலலிதா. தேர்தல் செலவுகளுக்காக, ஒவ்வொரு அமைச்சரும் 100 கோடி ரூபாயை வசூல் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதமே உத்தரவு போடப்பட்டதாக தகவல் சொல்கின்றன தலைமைச் செயலகப் பட்சிகள்.
ஊழல் நிலவரங்கள் இப்படி என்றால், நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் பஞ்சம் இல்லை ஜெயலலிதா ஆட்சியில். கருணாநிதி கட்டிய தலைமைச் செயலக கட்டிடத்தில் நடந்ததாக கூறப்பட்ட ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், கடந்த மூன்று ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நீதிபதி தண்டமாக சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு, கடமையைச் செய்யாமல் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் மின்வெட்டை சரி செய்து, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்குவேன் என்றவர், மூன்று ஆண்டுகள் முடிந்தும், இன்னும் மத்திய அரசையும் கருணாநிதியையும் மின் வெட்டுக்கு குறை கூறிக் கொண்டிருக்கிறார். திமுக ஆதரவு அதிகாரிகளான ஞானதேசிகனும், ராக்கேஷ் லக்கானியும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் அமர்ந்து கொண்டு, உள்ளடி வேலைகள் செய்வதைக் கூட அறிந்து கொள்ள முடியாத ஏகாந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. இந்த மின்வெட்டால் ஏற்பட்டுள்ள தொழில் நசிவுகள் விவரிக்க முடியாதது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் எந்தப் புதிய தொழில்களும் தொடங்கப்படவில்லை. கர்நாடக முதல்வர் சித்த ராமைய்யா கோவை வந்து 10 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடுகளை பெற்றுச் செல்கிறார். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டு இந்தியாவின் இதர எந்த மாநிலத்திலும் அதன் முதல்வரை, தொழில் அதிபர்களும் அங்கு மாநிலத்தில் முதலீடு செய்பவர்களும் எளிதில் சந்திக்க முடியும். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவருடைய தோழி சசிகலாவைத் தவிர வேறு யாரும் சந்திக்க முடியாது. அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் இதுதான் நிலை. தமிழகத்தில் தொழில் துறை அமைச்சர் என்பவர் எதற்கு இருக்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடிமைகளாகவே மாறிப் போயிருக்கிறார்கள். 1995-என்று நினைவு. எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதை எழுதினார். அந்த கதை எதிர்காலத்தில் நடப்பதை கருவாக வைத்து எழுதப்பட்டது. ஒரு ஐநூறு ஆண்டுகள் கழித்து நடக்கப்போகும் கதை. ஆசியாவில் ஒரு இனத்துக்கு மட்டும் முதுகெலும்பே இல்லை. அந்த இடத்தில் மட்டும் எப்படி இப்படி ஒரு இனம் உருவானது, அதன் பரிணாம வளர்ச்சியின் பின்னணி என்ன என்று ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவரது ஆராய்ச்சியில் பூர்வாங்க முடிவுகள், தென்னிந்தியாவில்தான் அந்த இனம் தோன்றியது என்று கண்டுபிடிக்கிறார்.
தமிழகம் வந்த அந்த விஞ்ஞானி, பல்வேறு ஆராய்ச்சிக்குப் பின், 20ம் நூற்றாண்டில், தமிழகத்தை ஆட்சி செய்த ஆட்சியாளரின் காலத்தில்தான் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று அவர் ஆராய்கையில், 1991ம் ஆண்டு முதல்வராக இருந்தவர், அனைவரையும் காலில் விழ வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அப்போது தமிழகத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பழக்கம் ஒட்டிக் கொள்ள, காலில் விழுவதற்கு முதுகெலும்பு தடையாகவும் அவசியமற்றதாகவும் இருந்ததால், நாளடைவில் இயற்கை அந்தப் பகுதியில் இருந்த மனிதர்களுக்கு முதுகெலும்பு தேவையில்லை என்பதால், அது இல்லாமல் போய் விட்டது என்று எழுதியிருப்பார். அந்த அளவுக்கு காலில் விழும் கலாச்சாரத்தை வளர்த்து, வேரூன்றித் தழைத்தோங்க செய்தவர் ஜெயலலிதா.
1996-ம் ஆண்டு, தேர்தலில் படு தோல்வி அடைந்த பின், ஜெயலலிதாவின் முழு நீள பேட்டியை விஜய் தொலைக்காட்சிக்காக எடுத்து ஒளிபரப்பினார் ரபி பெர்னார்ட். அது வரை, சன் தொலைக்காட்சியின் ஸ்டார் நிருபராக இருந்த ரபி பெர்னார்டு, அந்த பேட்டிக்குப் பிறகு அதிமுக அடிமைகளில் ஒருவராக மாறிப் போனார். அந்தப் பேட்டியின் போது, இப்படி காலில் விழும் கலாச்சாரத்தை வளர்க்கிறீர்களே இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிறதே என்று கேட்டபோது ஜெயலலிதா சொன்னது, “நான் யாரையும் காலில் விழச் சொல்வது இல்லை. ஆனால், அவர்களாக விழும்போது ஒரு பெண்ணான நான் எப்படி அவர்களை தூக்கி விட முடியும்” என்பதே.
அதற்குப் பிறகு 2001 மற்றும் 2011 ஆட்சிக்காலங்களிலும், ஜெயலலிதாவின் காலில் விழும் கலாச்சாரம் நின்றிருக்கிறதா என்பதை சொல்லவேண்டியதேயில்லை. தன்னை விட வயதில் மூத்தவர்களைக் கூட காலில் விழவைத்து அதில் அற்பத்தனமாக இன்பம் காண்கிறார் ஜெயலலிதா. பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும், சுயமரியாதையை விட்டு, கூச்ச நாச்சமின்றி ஜெயலலிதாவின் காலிலேயே விழுந்து கிடக்கின்றனர் அ.தி.மு.க. அடிமைகள். இப்படி சகட்டுமேனிக்கு அனைவரும் காலில் விழுவதால், தன்னை கடவுளுக்கு நிகராக ஜெயலலிதாவை கருதிக் கொள்ள வைத்திருக்கிறது.
1991 – 1996
இந்த அடிப்படையிலேதான் அவர் தன் கூட்டணிக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் நடத்துகிறார். தமிழகத்தில் அடிமைகள் போல கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த சி.பி.எம்., மற்றும் சி.பி.ஐ. கட்சிகளின் மாநிலக் குழுத் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க நினைத்தாலும் அது முடியாது. கடந்த ஆறு மாதங்களாக, ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு, தா.பாண்டியனும், ஜி.ராமகிருஷ்ணனும் காத்திருந்தும் பலனில்லை. பிரகாஷ் காரத் வந்த பிறகுதான் இவர்களுக்கு அனுமதி கிடைத்தது என்பதே இதற்கு சான்று. அகில இந்தியத் தலைவர்களான பிரகாஷ் காரத் மற்றும் ஏ.பி.பரதன் ஆகியோர் வந்தபோது, அவர்களோடு சேர்ந்து மாநிலக் குழு தலைவர்கள் ஓரமாக நின்று ஜெயலலிதாவை பார்த்துக் கொண்டார்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஒரு பாரம்பரியம் மிக்க கட்சியை காலடித் துடைப்பானைப் போல நடத்தினார் ஜெயலலிதா. தன்னோடு கூட்டணி வைத்த அனைத்து கட்சிகளையும் ஜெயலலிதா இப்படித்தான் நடத்தியிருக்கிறார். ஜெயலலிதாவின் தலைக்கேறி நிற்கும் ஆணவத்தைத் தவிர அவருடைய இந்தப் போக்கிற்கு வேறு எந்தக் காரணமும் கற்பிக்க முடியாது.
ஜெயலலிதா ஊடகங்களை அணுகும் முறை, ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. கருணாநிதி தினந்தோறும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் என்றால், ஜெயலலிதா ஒரு நாளும் சந்திப்பது கிடையாது. எந்த ஒரு விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்க அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒரு பத்திரிகையாளர் கூட இருக்கமாட்டார். அ.தி.மு.க. என்ற கட்சிக்குள்ளும், அ.தி.மு.க. தலைமையில் நடத்தப்படும் அரசாங்கத்திலும் என்ன நடக்கிறது என்பதை உத்தேசமாகவே பத்திரிக்கையாளர்கள் கணிக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல, 1991-ம் ஆண்டு முதலே ஜெயலலிதா பத்திரிகைகளை இப்படித்தான் நடத்துகிறார். இந்த லட்சணத்தில் வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன் என்று இந்த முறை முதலமைச்சராக பதவியேற்றபோது வாக்குறுதி வேறு. ஏதாவது எதிர்த்து எழுதினால், அப்படி எழுதிய பத்திரிகை மீது வழக்கு தொடரமட்டும் தவறுவதில்லை. இப்படிச் செய்து ஊடகங்களின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
2011 தேர்தல் முடிவுகள் அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயலலிதா. இதுதான் கடைசி
பத்திரிகைளின் நிலையே இப்படி என்றால் பொதுமக்கள் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிமுக அமைச்சர்களால் ஜெயலலிதாவை நினைத்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. சந்தித்தாலும் சுதந்திரமாக பேச முடியவில்லை. ஜெயலலிதா கேட்கும் கேள்விக்கு வாயை பொத்திக் கொண்டு பவ்யமாக அவர் விரும்பும் பதிலைச் சொல்வதைத் தவிர வேறு எந்த உரிமைகளும் அந்த அடிமைகளுக்கு இல்லை. தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. கூட சுதந்திரமாக கருத்து சொல்ல முடியவில்லை என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஒரு அ.தி.மு.க. எம்.பி தனிப்பட்ட முறையில் பேசுகையில், “மன்னார்குடி மாஃபியா இருந்தது ஒரு வகையில் வசதியாக இருந்தது. அம்மாவிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், மன்னார்குடி கூட்டத்தில் யாராவது ஒருவரை பிடித்து சொல்லி விடுவோம். இப்போது அதுவும் போய் விட்டதால், எங்களால் முதல்வரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்கிறார்”
ஜெயலலிதாவின் ஆணவம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதை அவரின் பேச்சுக்களும் அறிக்கைகளும் வெளிப்படையாக தெரிவிக்கின்றன. “நான்” “எனது அரசு” என்பது, ஒரு நபரின் ஆணவமும், தன்னைத் தானே காதலிக்கும் நார்சிஸ்ட் தன்மையையும் குறிக்கின்றன என்கிறார்கள் மனவியல் அறிஞர்கள். ஆணவத்தோடு சேர்ந்த ஜெயலலிதாவின் அற்பத்தனம்தான், குடிநீர் பாட்டில்கள், மிக்சி,கிரைண்டர்கள், மடிக்கணினிகள் போன்றவற்றில் தன் படத்தையும் இரட்டை இலைச் சின்னத்தையும் அச்சிட்டுக் கொள்வது. எம்.ஜி.ஆர் சமாதியில், இரட்டை இலைச் சின்னத்தை பொறித்துக் கொள்வது. இந்தப் பொருட்களிலெல்லாம் தன் படத்தை ஜெயலலிதா போட்டுக் கொள்வதென்றால், ஜெயராம் சம்பாதித்த சொத்துக்களை விற்று, அதில் வரும் பணத்தில் பொதுமக்களுக்கு இலவசங்கள் கொடுக்கும்போது போட்டுக் கொள்ளலாம். ஆனால், தற்போது கொடுக்கப்படும் இலவசங்கள் அனைத்தும் வழங்கப்படுவது மக்களின் வரிப்பணத்தில் அல்லவா ? மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் பொருட்களில் தன் படத்தை போட்டு ஆதாயம் தேடுவது ஜெயலலிதாவின் அற்பத்தனத்தைத்தானே அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
தற்போது நடைபெறும் பிரச்சாரமும் மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் மகாராணியின் நகர்வலம் போலத்தான் இருக்கிறது. எங்கே சென்றாலும் ஹெலிகாப்டரில் செல்வது, குளிரூட்டப்பட்ட வாகனத்தில் அமர்ந்து கொண்டு, அட்டையில் எழுதி வைக்கப்பட்ட வாசகங்களை, அழைத்து வரப்பட்ட கூட்டத்தின் முன் வாசிப்பது… அவர்களைப் பார்த்து “செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா ?” என்று கேட்பது… இதற்கு மேலும் ஜெயலலிதாவிற்கு வெற்றி கிடைத்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதற்கு அச்சாரமாக அமைந்துள்ளன.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் செய்து வந்த பிரச்சாரம் பொய் என்பதையும் ஜெயலலிதாவின் நிர்வாகம் நிரூபித்து வருகிறது. “கடந்த இரண்டரை வருடங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. 3500 கொலை சம்பவங்கள், 1000க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள், 690 வழிப்பறி சம்பவங்கள், 652 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன” என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது அல்ல. காவல்துறைக்கு பதவி உயர்வுகளையும், அளவில்லாத நிதியையும் வாரி வாரி வழங்கும் ஜெயலலிதாவுக்கு திருப்தி ஏற்படுவது போல உயர் அதிகாரிகள் நடிக்கும் நடிப்பை அப்படியே நம்பி ஏமாறும் நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறார்.
தனக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் தள்ளிப் பழி தீர்த்துக் கொள்ள காவல்துறையை பயன்படுத்தி வருகிறார். மன்னார்குடி மாஃபியாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக பணம் திருடி விட்டார்கள் என்ற காரணத்துக்காக நில அபகரிப்பு வழக்குகளை சகட்டு மேனிக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. அவர்கள் அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட தகுதியானவர்கள் என்றாலும், பொய் வழக்கில் ஒருவரை சிறையில் அடைப்பது அதிகார துஷ்பிரயோகமா இல்லையா ?
நில அபகரிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் கணவர் (?) நடராஜன்
உரிய மேற்பார்வை இல்லாத காரணத்தால், காவல்துறை அதிகாரிகள் தங்கள் மனம் போன போக்கில் காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு புள்ளிவிபரங்களைக் காட்டி அவரை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, ஆயிரக்கணக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் பலரை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். போலி என்கவுன்டர்களில் பலரை சுட்டுக் கொன்று, அதன் மூலம் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை ஜெயலலிதா நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். லாக்அப் மரணங்களுக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளையும், போலி என்கவுன்டரில் கொலை செய்யும் அதிகாரிகளையும் பாதுகாத்து அவர்களுக்கு பதவி உயர்வும் விருதும் கொடுத்து கவுரவித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
வீரப்பனைக் கொன்ற அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதற்காக, நீதிமன்ற உத்தரவுகளைக் கூட காற்றில் பறக்க விட்டுவிட்டு, சட்டவிரோதமாக பதவி உயர்வுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஆணவம், தான்தோன்றித்தனம் என்று கிட்டத்தட்ட ஒரு துக்ளக்கின் தர்பாரைத்தான் ஜெயலலிதா நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஜெயலலிதாதான் இன்று பிரதமர் கனவுளோட உங்கள் முன்னால் வருகிறார். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். இவரை ஒப்பிடும்போது, குடித்து விட்டு பேசினாலும், “கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன்” என்று மக்களிடம் கெஞ்சும் விஜயகாந்தே தேவலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
தற்போது பிரதமர் கனவோடு வலம் வரும் ஜெயலலிதா எதற்காக பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்? இந்தியாவை வல்லரசாக்கவா? இல்லை தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று அலைகிறார். சொத்துக் குவிப்பு வழக்கு, தற்போது மேல் முறையீட்டில் இருக்கும் பிறந்தநாள் பரிசு வழக்கு, வருமான வரி கட்டத் தவறிய வழக்கு என்று நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை வாங்கிக் கொண்டு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. அடிமைகள் தற்போது ஜெயலலிதா காலில் விழுவதைப் போல, அம்பானிகளையும், மிட்டல்களையும், டாட்டாக்களையும், அடானிகளையும், சிங்கானியாக்களையும், பிர்லாக்களையும் காலில் விழ வைத்து ஆணவ ஆனந்தம் கொள்ளவே இப்படி ஆலாய்ப்பறக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தயவோடு மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த 13 மாத காலம் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டிருந்தார். அதை ஏற்காத அத்வானிக்கு “செலக்டீவ் அம்னீஷியா” என்ற நோய் இருக்கிறது என்றார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கை போயஸ் தோட்டத்தின் வாசலில் காக்க வைத்தார். ஊழலின் மொத்த உருவான சேடப்பட்டி முத்தையாவை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
அப்போது செய்த இந்த தான்தோன்றித்தனங்களை இப்போதும் செய்யமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? ஜெயலலிதா ஒரு போதும் மாற மாட்டார். மீண்டும் அவருக்கு 40 எம்.பிக்களை அளிப்பது என்பது கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமாகும்.
2011 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கருணாநிதி குடும்பத்திடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற ஜெயலலிதா ஒரு கருவியாக பயன்பட்டார். பாசிச சக்திகளை வீழ்த்துவதற்காக முதலாளித்துவத்தின் வடிவமான அமெரிக்காவுடன், சோசலிஷ ரஷ்யா கைகோர்த்த தந்திரத்தைப் போலத்தான் அது. ஆனால் கடந்த மூன்றாண்டு கால ஆட்சி நமக்கு அளித்திருக்கும் பாடம் தேர்தல் நேரத்தில் நம் மனதில் இருக்க வேண்டும். அந்த பாடத்தை நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும்.
செய்வீர்களா…. ? நீங்கள் செய்வீர்களா ?
(அடுத்த அலசல் திமுக அணி)
ippa than nan intha website pathen kandippa ivarkalai odukuvatharku nam oru anniya niraka vendam
kandipaga unkalai vanthu santhikendren nall nanbarkalodu
Super ,But how to bring this message to the innocent public, and to the ADMK slaves?
very good article! really good one
அருமை
(y)
nalla alasal ana claimax sari illa