இவர்கள் யார் என்பது தெரியுமா ? இவர்களை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களை இவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். உங்கள் அந்தரங்கங்களும் தெரிந்திருக்கலாம். உங்களுக்கு யார் மீது கோபம், யாருடன் நீங்கள் நெருக்கம், யாரை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது அத்தனையும் இவர்களுக்கு தெரியும்.
நீங்கள் என்று குறிப்பிடுவது, சவுக்கு வாசகர்கள் மட்டுமல்ல. சமுதாயத்தின் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் அனைவரும் தான். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஆகிய உங்கள் அனைவருக்கும் இந்த நபர்கள் சவாலானவர்கள் தான்.
பில்டப் போதுமல்லவா ? இந்த இருவரும் தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் . காவல்துறையில், Technical Sub-Inspector of Police என்று ஒரு பதவி உண்டு. இந்த இருவரில் ஒருவர் தொழில் நுட்ப உதவி ஆய்வாளர் மற்றவர் தொழில் நுட்ப ஆய்வாளர். இவர்கள் இருவருக்கும் ஏ.சி கார்கள் வழங்கப் பட்டுள்ளன. டிஎஸ்பிக்களுக்கு கூட வண்டி இல்லாத நிலையில் இவர்களுக்கு மட்டும் எப்படி ஏசி கார் என்ற வியக்காதீர்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் ஏ.சி கார் என்றால், ஜாபர் சேட்டின் கண்களும் காதுகளும் இவர்கள் தான்.
முதல் நபர் பெயர் சேகர்.
96 முதல் 2001 வரை நடந்த திமுக ஆட்சியின் போது, ஜாபர் சேட்டோடு மிகுந்த நெருக்கமாகிறார் இந்த சேகர். விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். இந்த சேகர் ஒரு Bugging Expert. Bugging என்றால் ஒட்டுக் கேட்பது என்று உளவுத்துறை வட்டாரங்களில் பொருள். நீங்கள் ஜாபர் சேட்டோடு மோதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் மொபைல், லேண்ட் லைன், உங்கள் மனைவியின் மொபைல், நீங்கள் நெருக்கமாக பேசும் நண்பரின் மொபைல் போன், அத்தனையும் ஒட்டுக் கேட்பில் வரும். சேகரின் பணி, தொலைபேசியில் ஒட்டுக் கேட்பு கருவி மட்டும் பொருத்துவது அல்ல. உங்கள் காருக்குள், உங்கள் படுக்கை அறைக்குள், அலுவலக அறைக்குள் ஒட்டுக் கேட்பு கருவியை பொறுத்துவதிலும், சேகர் கை தேர்ந்த நிபுணர்.
இது போக ஜிபிஎஸ் என்று அழைக்கப் படும், க்ளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற கருவியை உங்கள் வாகனத்தில் பொருத்தி நீங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறீர்களோ, அதை கண்டு பிடிக்கும் வகையில் ஜிபிஎஸ் கருவியை பொருத்துவதிலும் சேகர் எக்ஸ்பெர்ட்.
அடுத்த முறை இந்த நபரை உங்கள் வீட்டுக்கு அருகிலோ, வாகனத்தின் அருகிலோ பார்த்தீர்கள் என்றால் என்ன செய்வது என்பது உங்களுக்கே தெரியும்.
அடுத்த நபர் யார் தெரியுமா ? அவர் பெயர் குமரேசன்.
ஜாபர் சேட்டின் மிக மிக நம்பிக்கைக்கு உரியவர். இவருக்கு முழு நேர பணி தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது மட்டுமே. சென்னை நகரில் 3 இடங்களில் ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது. ஒன்று டி3டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். மற்றொன்று, சென்னை அடையாறில் உள்ள அவுட்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். மூன்றாவது, டிஜிபி அலுவலகத்தின் உள்ளே இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில். பார்ப்பதற்கு பழைய கட்டிடமாக தெரிந்தாலும் இந்தக் கட்டிடத்தின் உள்ளே தான் தமிழகத்தின் பல்வேறு ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் தொலைபேசியையே கருணாநிதியின் உத்தரவுப் படி ஒட்டுக் கேட்டு, அந்த உரையாடலை அப்படியே அவரிடம் போட்டுக் காட்டிய பிறகே, சிஐடி காலனி பக்கமே 15 நாட்கள் செல்லாமல் கோபித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. முதலமைச்சரின் மனைவி உரையாடலை ஒட்டுக் கேட்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட ஒரு நபர் மற்ற யாரையாவது மதிப்பாரா ? ஜாபர் சேட்டைத் தவிர வேறு எந்த அதியாரியையும் இந்தக் குமரேசன் மதிப்பது கிடையாது. குமரேசன் மிக மிக தலைக்கனம் பிடித்த நபர் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். டிஜிபி அலுவலகத்தில் யாராவது ஒரு உயர் அதிகாரி, குமரேசனை பகைத்துக் கொண்டால் அவ்வளவுதான். அன்றே அந்த அதிகாரியின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வளையத்தில் வந்து விடும். அவரின் ரகசியங்களை தெரிந்து கொண்டு, உன் ரகசியம் எனக்கு தெரியும் பார் என்று, அந்த நபரை மறைமுகமாக மிரட்டுவது, குமரேசனின் ஸ்பெஷாலிட்டி.
ஜாபர் சேட் எள் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே, எண்ணையாக மாறக் கூடிய அளவுக்கு ஜாபர் சேட்டுக்கு குமரேசன் விசுவாசமான மனிதர் என்று கூறப் படுகிறது.
இப்படித் தான் ஒரு முறை நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, அந்த விபரத்தை குமரேசன் காமராஜுக்கு தெரிவித்ததாகவும், கடும் கோபமடைந்த காமராஜ், நேரில் வந்து ஜாபர் சேட்டிடம் சத்தமிட்டதாகவும், அது போல நான் செய்யவேயில்லை என்று ஜாபர் சேட் சத்தியம் செய்ததாகவும் கூறப் படுகிறது.
டி3டி டெக்னாலஜிஸ் முதலாளி நாராயண யாதவுடன், இந்தக் குமரேசன் மிகுந்த நெருக்கம் என்று கூறப் படுகிறது.
முக்கிய பிரமுகர்கள் பெரும்பாலானோர் உரையாடலை ஒட்டுக் கேட்பதால், குமரேசன் யாரையும் மதிக்காமல் சகட்டு மேனிக்கு பேசுகிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இவருக்கு மட்டும மாதம் 20 ஆயிரம், ரகசிய நிதியிலிருந்து ஜாபர் சேட் வழங்குவதாக கூறப் படுகிறது.
இந்த நபரையும் நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நபர்கள், ஒட்டுக் கேட்பது தொடர்பாக உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விபரம் வந்தவுடன், சவுக்கு வாசகர்களுக்கு படைக்கப் படும்.