என்னடா சவுக்கு அடிக்கடி சரவணன் பற்றியே எழுதுகிறது என்று யோசிக்கிறீர்களா ? இப்போது நாம் பார்க்கப் போகும் சரவணன், ‘டால்மேன்‘ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் திருவேங்கிமலை சரவணன்.
இந்த சரவணனுக்கு ஏன் சகுனி என்ற பேர் என்று கேட்கத் தோன்றுகிறதா ? காரணம் இருக்கிறது. கட்டுரையின் இறுதியில், நீங்களே, சகுனி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா என்று பாருங்களேன்.
இந்த திருவேங்கிமலை சரவணன், குமுதம் இதழில் ஒரு மூத்த பொறுப்பில் இருந்தவர். திருமணமாகாதவர். பெண்களைப் பார்த்தால் வெளியில் வரும் இவரது நாக்கு, தரையை தொடும் அளவுக்கு தொங்கும் என்று அவருடன் பணி புரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
திருவேங்கிமலை சரவணன்
பெண்களைப் பற்றிய இவரது பார்வை ஒன்றே ஒன்றுதான். பெண்கள் என்றால், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். வேலைக்குச் செல்லக் கூடாது. அதை மீறி வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவருமே, தவறான நடத்தை கொண்டவர்கள். பல ஆண்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள். ஒரு பெண் ஒரு அலுவலகத்தில் ஒரு பதவிக்கு வருகிறாள் என்றால், அவள் தன் உடலால் மட்டுமே வர முடியும். உடலை இன்னொருவனுக்கு அளிக்காமல், எந்த ஒரு பெண்ணும் முன்னுக்கு வர முடியாது. இதுதான் திருவேங்கிமலை சரவணின் பாலிசி.
(டால் மேன் சார். அடிக்கடி கோபாலபுரத்துக்கும், சிஐடி காலனிக்கும் போறீங்களே…. அதற்கும் இது பொருந்துமா சார் ?)
இதுதான் சரவணன் பெண்கள் மீது வைத்திருக்கும் மதிப்பீடு.
சரி பெண்களைப் பற்றித் தான் இப்படி ஒரு பார்வையை வைத்திருக்கிறார். தன்னைப் பற்றி என்ன பார்வை வைத்திருக்கிறார் என்று பார்த்தால், அமெரிக்காவில், ஒரு குழந்தை சிறுநீர் கழித்தால் கூட, அது தன்னால் தான் என்று கூறுபவர். கருணாநிதி எடுக்கும் முக்கிய, முக்காத அரசியல் முடிவுகள் அனைத்துமே தன்னை கலந்தாலோசித்து தான் எடுப்பார் என்று கூறிக் கொள்ளுவார்.
தேர்தல் சமயத்தில், திமுகவோடு புதிய அரசியல் கட்சிகள் ஏதாவது கூட்டணி சேர்ந்தால், அந்தக் கட்சியை தான் தான் திமுக கூட்டணிக்கு அழைத்து வந்ததாக கூறிக் கொள்ளுவார். இந்தக் கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் நபர்கள், இவரின் கதைகளை துளி கூட நம்பவில்லை என்பது நன்றாகத் தெரிந்தாலும், அவர் பாட்டுக்கு அளந்து விட்டுக் கொண்டு இருப்பார்.
மூத்த பத்திரிக்கையாளராக இருக்கிறாரே… நன்றாக எழுதுவாரா என்று கேட்டால், ஒரு வரி கூட உருப்படியாக எழுதத் தெரியாது என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி இத்தனை நாள் தாக்குப் பிடித்தார் என்று கேட்டால், அதற்கு முழுக் காரணம், குமுதம் குழுமத்தின் மேலாண் இயக்குநராக இருந்த வரதராஜன். எம்டியின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற இறுமாப்பில் சரவணன் ஆடிய ஆட்டம் இருக்கறதே… அப்பப்பா.
பாம்புக்கு பால் வார்க்கிறோம் என்பதை அறியாமலேயே, இந்த நச்சுப் பாம்பை வளர்த்து வந்தார் வரதராஜன்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண்களை கிண்டல் செய்து தங்களுக்குள் ஆண்கள் பேசிக் கொள்வது இயல்பானது. அது ஆண்களின் இயல்பு. எத்தனை மோசமாக கிண்டல் செய்து பேசினாலும், அந்தப் பெண்ணின் காதுக்கு போகாத வரை, அதை மன்னிக்கலாம்.
நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அதில் ஒரு பெண்ணின் அவயங்களை அருவெறுக்கத்தக்க வகையில் அனைவரின் முன்னிலையிலும் பேசி இதை நகைச்சுவை என்று கூறி சிரிக்கும் ஒரு நபர், மனவளர்ச்சி குன்றியவர் தானே… ?
அவ்வாறு பேசுவது, தன்னை விட மற்றவர்கள் பணியில் இளையவர்கள் என்பதும், எம்.டிக்கு நெருக்கமாக உள்ளதால், தன்னை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்ற இறுமாப்பு தானே….
குமுதம் எம்.டி வரதராஜனுக்கு, இது பற்றிய தகவல்கள் அரசல் புரசலாக வந்த போதே, விசாரித்து விட்டு, சீட்டைக் கிழித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் பலனை வரதராஜன் நன்றாகவே அனுபவித்தார். சரவணன் போன்ற ஒரு தீய சக்தியை வளர்த்து விட்ட முழுப் பொறுப்பும் வரதராஜனையே சாரும்.
இந்த சரவணன் மானபங்கப் படுத்தப் பட்ட நேர்வுகளைச் சொல்லி மாளாது. அந்தக் கண்றாவிக் கதைகளை அனைத்தையும் எழுதினால் நேர விரயம் என்பதால், சாம்பிளுக்கு ஒரே ஒரு கதையை மட்டும் கேளுங்கள்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பெல்லாம், குமுதத்தில் காலேஜ் ரவுண்டப் என்று கல்லூரிகளைப் பற்றி, அந்த மாணவிகளின் புகைப்படத்தோடு செய்திகள் வரும். இந்த சரவணன் கல்லூரி ரவுண்டப் என்ற பெயரில், பெண்கள் கல்லூரியாக பார்த்துப் பார்த்து ரவுண்டப் அடிப்பார்.
அவ்வாறு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் இதே போல தனது ரவுண்டப்பை தொடங்குகிறார். அதில் அழகாக இருக்கும் மாணவியை நடுப்பக்கத்தில், தனிப் படமாக போடுவார். பிறகு, அந்த மாணவியிடம் தொலைபேசியில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது என்று தனது லீலைகளை தொடருவார். இது பத்தாதென்று, ரீ விசிட் என்ற பெயரில், கல்லூரிக்கே நேராகச் சென்று, மீண்டும் இவரது சரச லீலைகளை தொடர்ந்திருக்கிறார். எல்லா பெண்களுமா சரவணனின் தகிடுதண்டாக்களை நம்புவார்கள் ? தொடர்ந்து போன் மூலமாகவும், நேராகவும் செய்யும் தொந்தரவு தாங்காமல் தங்கள் துறைத் தலைவரிடம் புகார் செய்யவும், துறைத்தலைவர், கல்லூரி முதல்வரிடம் புகார் செய்யவும், கல்லூரி முதல்வர் சரவணனை அழைத்து, இனி கல்லூரி பக்கமே வரக்கூடாது என்று கூறி விட்டார். இதே கதை எத்திராஜ் கல்லூரியிலும் நடந்தது.
குமுதம் இதழின் வரலாறு தெரியுமா ? சிறுகச் சிறுக உழைப்பால் கட்டப் பட்ட பத்திரிக்கை அது.
குமுதம் பத்திரிகையின் தரமற்ற செய்திகள், சினிமாவுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் போன்றவை கடும் விமர்சனங்களுக்கு ஆளானாலும், குமுதம் தமிழகத்தின் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது என்பதும், மிக மிக வெற்றிகரமாக நடந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை தானே… ? தமிழகத்தின் பட்ஜெட்டை விட, குஷ்பூவுக்கு நடந்த குடல்வால் ஆபரேஷனை பெரிய செய்தியாக வெளியிடும் தினத்தந்தி தானே இன்று வரை நம்பர் 1 ஆக இருக்கிறது ?
ஆகவே, நமது விமர்சனங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, குமுதத்தின் சாதுர்யமான வணிகத்தையும், வாசகர்களின் ஆதரவை அமோகமாக பெற்ற திறமையையும் பார்த்தோமேயானால், குமுதம் ஒரு வெற்றிப் பத்திரிகை என்பதில் சந்தேகம் இல்லை.
இதை இத்தகைய வெற்றிப் பத்திரிகையாக ஆக்கிய பெருமை இருவரைச் சேரும். ஒருவர் எஸ்.ஏ.பி என்று அழைக்கப் படும் எஸ்.ஏ.பி.அண்ணாமலை. மற்றொருவர், பிவிபி என்று அழைக்கப் படும் பி.வி.பார்த்தசாரதி.
பிவிபி மற்றும் எஸ்ஏபி
அண்ணாமலை எழுத்து தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்வார். பார்த்தசாரதி வியாபாரம் தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்வார்.
பிவிபி, காலையில் வாசலில் 9 மணிக்கு அமர்ந்து கொள்வார். அதற்கு மேல் தாமதமாக அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு கடும் டோஸ் கிடைக்கும். ஊழியர்களுக்கு இலவசமாக மதிய உணவு உண்டு.
சென்னை அயனாவரத்தில் ஊழியர்களுக்காக குடியிருப்பு கட்டிக் கொடுத்த ஒரே ஊடக நிறுவனம், குமுதம் தான்.
எஸ்ஏபி, குமுதம் இதழ் வெளிவரும் நாட்களில் காலை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை மின்சார ரயிலில் செல்லுவார். குமுதம் யாராவது படித்துக் கொண்டிருந்தால், அவர் அருகில் அமர்ந்து கொண்டு, எந்தப் பக்கத்தை முதலில் படிக்கிறார். எந்தப் பக்கத்தை தவிர்க்கிறார் என்பதை கவனிப்பார். ஏதாவது ஒரு தொடரை நிறைய பேர் படிக்காமல் தவிர்ப்பதை கவனித்தால், அடுத்த வாரமே, அந்தத் தொடர் நிறுத்தப் படும்.
பிவிபி, எஸ்ஏபி இருவரின் நட்பு என்பது, பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போன்றது. ஆ.ராசா சாதிக் பாட்சா நட்பு போன்றது. கனிமொழி நீரா ராடியா நட்பு போன்றது. (தமாஷுக்கு பாஸு.) அவ்வளவு நெருங்கிய நட்பு. எந்தவித ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் நெருக்கமான நட்பு பாராட்டி, குமுதத்தை மிகப் பிரம்மாண்டமான நிறுவனமாக வளர்த்தவர்கள்.
இப்படி உழைத்து உழைத்து உருவாக்கியதுதான் குமுதம் குழுமம். எஸ்ஏபி, பிவிபிக்கு பிறகு, அடுத்த தலைமுறையிடம் குமுதம் இதழ் ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற சூழலில், யார் பொறுப்பேற்பது என்று கேள்வி வருகிறது. எஸ்ஏபி ன் மகன் ஜவஹர் பழனியப்பன், அமேரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் இதய மருத்தவராக பணி புரிகிறார். அமெரிக்காவில் இவர் மிகப் பிரபலமான இதய மருத்துவர். அமேரிக்க குடியுரிமை பெற்றவர். இவருக்கு, மருத்துவர் தொழிலை விட்டு விட்டு, இந்தியாவுக்கு வந்து பத்திரிக்கை நடத்த விருப்பமில்லை. அதனால், பிவிபியின் மகன் வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைக்க தனது முழு சம்மதத்தையும் தெரிவிக்கிறார்.
வரதராஜன் அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். அவருக்கும் இந்தியாவுக்கு வந்து பத்திரிகை தொழிலை ஏற்க விருப்பமில்லை. இருப்பினும், வேறு வழியின்றி, தயக்கத்தோடே இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், குமுதத்தை விரிவு படுத்துகிறார். சிநேகிதி, தீராநதி, ஜோதிடம், பக்தி என்று புதிய இதழ்களை கொண்டு வருகிறார். இது போல, பல்வேறு புதிய இதழ்களை துவக்கி, விகடன் குழுமம் போலவே, குமுதத்தை ஒரு நிறுவனமாக மாற்றுகிறார்.
எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இப்படியே எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தால், ஒரு சுவராசியம் வேண்டாமா ? அதற்காகத் தானே சகுனி என்ற கேரக்டர் இருக்கிறது.
சரவணன் என்ற மாமா மனிதர், மன்னிக்கவும், மாமனிதர், தன்னுடைய சரச சல்லாப லீலைகளை நிறுத்திய பாடில்லை.
குமுதம் சிநேகிதியின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர் லோகநாயகி என்பவர். இவர் பொறுத்துப் பொறுத்து பார்த்து, சரவணனின் அக்கிரமங்கள் எல்லை மீறிப் போவதை கவனித்து, சரவணன் வரதராஜனின் செல்லப் பிள்ளை என்பதை அறிந்தும், சரவணன் மீது, எழுத்து பூர்வமான புகாரை வரதராஜனிடம் அளிக்கிறார். என்னதான் சரவணன் செல்லப்பிள்ளையாக இருந்தாலும், வரதராஜன், தன்னிடம் பணியாற்றும் பெண் ஊழியரை காப்பாற்றுவது தனது கடமை என்பதையறிந்து, சரவணனை அழைத்து விசாரிக்கிறார்.
கருணாநிதி வீட்டில் எந்த நேரம் வேண்டுமானாலும், அழைப்பில்லாமல் உள்ளே செல்பவர், திமுகவில் எம்எல்ஏ சீட் வேண்டுமென கேட்டவர், ஜாபர் சேட்டின் நெருங்கிய நண்பர், இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் படைத்த, திருவேங்கிமலை சரவணனையா விசாரிப்பது ? கொதிக்கிறார் சரவணன். என்னையா விசாரிக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கறுவுகிறார்.
அவ்வாறு கறுவிக் கொண்டே, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அமெரிக்காவிலிருந்து டாக்டர் இந்தியா வருகிறார். தன் சகுனி வேலையை தொடங்க சரவணனுக்கு இது வாய்ப்பாக அமைகிறது.
டாக்டர் ஜவஹர் பழனியப்பன்
வழக்கம் போல இந்தியா வந்தவுடன், சிறிது நாட்கள் குமுதம் அலவலகத்தில் செலவிட்டு விட்டு, நண்பர்களோடு அளவளாவும் ஜவஹர் பழனியப்பனுக்கு, அந்த இந்திய விசிட், நிம்மதியை தரவில்லை.
சகுனி, பழனியப்பனை சந்தித்து, “சார் உங்க அப்பா உழைச்சு உழைச்சு கட்டிய சாம்ராஜ்யத்தை ஒரே நாளில் உங்கள் கையை விட்டு எடுக்க வரதராஜன் ப்ளான் போடுகிறார் சார்“ “அநேகமா அடுத்த முறை நீங்க இந்தியா வரும் போது, நீங்க ஆபீஸ் உள்ள நுழைய முடியுமோ இல்லையோ தெரியலை சார். உங்களுக்கா இந்த நெலைமை ன்னு நெனைக்கும் போது, எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருது சார். சரக்கடிச்சா போதை வரமாட்டேங்குது, என்னால தாங்க முடியல சார்“ என்று கூறுகிறார்.
அதற்கு ஜவஹர் பழனியப்பன் என்ன கூறியிருப்பார் ?
“என்ன கொடுமை சரவணன் இது ? “ (குமுதம் பாணியிலேயே ஹி.ஹி.ஹி)
இதையும் சொல்லி விட்டு, “சார் நான் உங்களுக்கு விசுவாசமா இருக்கேன், உங்களுக்கு சப்போர்ட்டா பேசுனேன்ற ஒரே காரணத்துக்காக, என் மேல, ஒரு மோசமான பெண்ணை வைத்து செக்சுவல் ஹராஸ்மேன்ட் கம்ப்ளெயின்ட் கொடுக்க வச்சுருக்கார் சார். “ என்று கூறுகிறார்.
இதையடுத்து, ஜவஹர் பழனியப்பன், வரதராஜனிடம், சரவணன் மீது அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகார் கொடுத்த லோகநாயகிக்கு, இந்த டெவலப்மென்டுகள் தெரிந்ததும், இனி தனது புகாரில் நடவடிக்கை எடுக்கப் படாது என்ற முடிவுக்கு வந்ததும், நேரடியாக சென்னை மாநகர ஆணையாளர் கண்ணாயிரத்திடம், சென்று புகார் ஒன்றை அளிக்கிறார்.
இந்தப் புகார் விபரம் தெரிந்தவுடன், சரவணன் மாமா ஜவஹர் பழனியப்பனை அணுகி, “சார் வரதராஜன் குமுதத்தை அபகரிப்பதை நான் தடுக்கிறேன் என்பதற்காக இது போல பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார். நீங்கள் உடனடியாக அவர் மீது ஒரு புகார் கொடுங்கள்“ என்று கூறுகிறார். அதற்கு ஜவஹர் சம்மதிக்கவில்லை. “நீங்களே ஒரு புகார் கொடுங்கள்“ என்று கூறுகிறார்.
உடனே, சரவணன் மாமா வரதராஜன் அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒரு புகார் கொடுக்கிறார். இந்தத் தகவலை அவரைப் போன்ற மற்றொரு மாமா ஜாபர் சேட்டிடமும் தெரிவிக்கிறார். ஜாபர் சேட், உடனடியாக கண்ணாயிரத்திடம், வரதராஜனை கைது செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
ஜாபர் சேட்டின் அடிமை கண்ணாயிரம், உடனடியாக வரதராஜனை கைது செய்கிறார். வரதராஜனை கைது செய்யும் போது, எஃப்ஐஆரே போடவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. என்ன வழக்கு என்பதே தெரியாமல், கைது செய்ய உத்தரவிடும் கண்ணாயிரம், எந்த அளவுக்கு ஜாபருக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதை பாருங்கள்.
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், வரதராஜன் என்பவர், ஒரு பெரும் பத்திரிக்கையின் மேலாண் இயக்குநர். சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர். அப்படிப்பட்ட ஒரு நபரையே எஃப்ஐஆரே இல்லாமல் கைது செய்கிறார்கள் என்றால், உங்களுக்கும் சவுக்குக்கும் என்ன கதி என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
வரதராஜனை கைது செய்து, ஒரு காரில் வைத்து, அவர் வீட்டுக்கு சென்று சோதனை செய்து, ஒரு துப்பாக்கியை கைப்பற்ற வேண்டும் என்று, காவல்துறை அலை அலை என்று அலைகிறது. ஆனால், மிகச் சாதுர்யமாக அன்று செயல்பட்ட, குமுதம் ரிப்போர்ட்டர் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு பேர், அந்த காரை விடாமல் தொடர்ந்து சென்றதால், காவல்துறையின் சதி நிறைவேறவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், விழித்த காவல்துறை, ஜவஹர் பழனியப்பனை அழைத்து, நிதி மோசடி என்று ஒரு புகாரை பெற்று, எஃப்ஐஆர் பதிவு செய்கிறார்கள்.
வரதராஜன் கைது செய்யப் பட்ட போது
பல்வேறு அரசியல் தலைவர்கள், மற்றும், அதிகாரிகளில் தலையீட்டினால், அன்று இரவே, சொந்த ஜாமீனில் வரதராஜன் விடுவிக்கப் பட்டார்.
சரி, புகாரே இல்லாமல் வரதராஜன் கைது செய்யப் பட்டார். எழுத்து பூர்வமான புகார் கொடுத்த லோகநாயகியின் புகார் என்ன ஆனது ? அது சென்னை மாநகர ஆணையாளர் கண்ணாயிரம் என்கிர ராஜேந்திர வல்லம்பருக்கே வெளிச்சம்.
இதற்குப் பிறகு, ஆடுகள் நனைகிறதே என்று ஒரு ஓநாய் ஊளையிட்டது. அது வேறு யாரும் அல்ல. ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து ஊளையிட்ட கருணாநிதிதான். கருணாநிதிக்கும் குமுதத்துக்கும் ஏழம் பொறுத்தம். ஏற்கனவே, பல முறை, திமுகவினரை விட்டு குமுதம் அலுவலகத்தின் மீது பல தாக்குதல்களை நடத்தியிருக்கும் கருணாநிதி, இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா. மேலும், சரவணன் மாமா, ஜவஹரை கருணாநிதியை அழைத்துச் சென்று சந்திக்க வைத்தால் விடுவாரா என்ன.
இது தொடர்பாக கருணாநிதி சட்டசபையில் பேசியது, நீண்ட உரையாக இருந்தாலும், நகைச்சுவை உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்து, சவுக்கு அதை அப்படியே பிரசுரிக்கிறது.
“குமுதம் புகழ்பெற்ற வார இதழ்களில் ஒன்று. இந்த இதழை ஆரம்பித்து அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்த செல்வாக்கு மிக்க மூத்தவர்கள் மறைந்து விட்டார்கள்.
அவர்களின் பிரதிநிதியாக நடத்த முன்வந்த ஜவஹர் பழனியப்பன், வெளிநாட்டில் இருந்து அதை ஒருவரிடம் ஒப்படைத்து நடத்தி வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் யாரிடம் ஒப்படைத்தாரோ அவரிடம் சில விளக்கங்களை கேட்டார்.
இதனால் ஏற்பட்ட தகராறு குறித்து ஞானசேகரன் இங்கு குறிப்பிட்டார். அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் முயன்று வரதராஜன் என்ற நண்பரை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுவாக பத்திரிகைகளை ஒடுக்குவது, வழக்கு தொடர்வது, சட்டசபை கூண்டில் நிறுத்துவது போன்றவற்றை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
பத்திரிகைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு நீதி தேடி தருவதில் ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது.
வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரை உடனடியாக விடுதலை செய்யும் நிலைமை இல்லை என்றாலும் அவர் சிறை புக வேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை என்று அரசு வக்கீல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் ரிமாண்ட் செய்யாமல் சில நிபந்தனைகளோடு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
வழக்கு பற்றி தெரியாது. சில நண்பர்கள் ஒரு சமாதான முயற்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
ஒரு பிரச்சனை காரணமாக ஒரு பெரிய பத்திரிகை நடைபெறுவதில் தடங்கல், முட்டுக்கட்டை வந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கிறேன். ஏற்கெனவே சில பத்திரிகைகளில் புகைச்சல்கள், பிரச்சனைகள் வந்த போது அதிகாரிகளை அனுப்பி சமரச உடன்பாடு ஏற்படுத்தி பத்திரிகை விழுந்து விடாமல் பார்த்துக் கொண்ட அந்த வரலாறு திமுகவுக்கு உண்டு.
அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றபோது ஒரு பிரபல பத்திரிகையில் தொழிலாளர் பிரச்சனை காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால், அண்ணா அந்த பத்திரிகையில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுச் சென்றார்.
அமெரிக்கா சென்ற பிறகும் தொலைபேசியில் அதை வலியுறுத்தினார். நான், நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் தொழிலாளர்களை அழைத்து மறைந்த என்.வி.நடராஜன் மூலம் சமரசம் பேசி அந்த நிறுவனத்தை நடத்த வழிவகுத்து கொடுத்தோம்.
அதற்கு பிறகு குடும்ப சண்டை காரணமாக ஒரு பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமோ என்ற நிலை வந்த போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குகனை அனுப்பி சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு அந்த பத்திரிகை அதிபர் நன்றிக் கடிதம் அனுப்பினார். இப்போதும் அது என்னிடம் இருக்கிறது.
திமுக பற்றி குமுதம் இதழில் சில கருத்து வேறுபாடுகள், கேலி சித்திரங்கள் வரும். அதைப் பார்த்து ரசிப்பவன் நான், ஆத்திரப்படுபவன் அல்ல.
பங்குதாரர்களிடையே ஏற்பட்ட சண்டையா அல்லது முதலாளி- தொழிலாளி தகராறா என்பதை ஆராய்ந்து ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னால் சட்ட ரீதியாகவோ, போலீஸ்துறை மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன். அதற்காக உத்தரவிட முடியாது.
அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டால் அதை திரும்ப பெற முடியும். ஆனால் வழக்கை எப்படி நடத்துவது என்று சொல்ல முடியாது.
ஜவஹர் பழனியப்பன், வரதராஜன் இருவரிடையே சமரசம் உண்டாகும் வகையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எங்கே நியாயம் இருக்கிறதோ அந்த நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு குழு அமைத்தாவது அதற்கான ஏற்பாடுகளை குமுதம் வாழ வேண்டும் என்பதற்காக நிச்சயமாக இந்த அரசு செய்யும்“ என்றார் கருணாநிதி
தனது நிறுவனத்தில் உள்ள பங்குத் தகராறை சரி செய்ய முடியாத இந்து என்.ராம் ஜவஹருக்கும், வரதராஜனுக்கும் சமரசம் செய்து வைக்கிறார். அந்த ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் அமலுக்கு வரவேண்டும் என்று உடன்பாடு.
ஆனால் ஒன்பது மாதங்கள் ஆகியும், இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படாமல் இருக்கிறது.
இப்போது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் இந்தியா வந்திருக்கிறார். வந்ததும் அவர் சந்தித்த நபர்கள்
ஜாபர் சேட்
நக்கீரன் கோபால்
நக்கீரன் காமராஜ்.
இவர்களை சந்தித்து, மேலும் ஒரு வழக்கில், வரதராஜனை சிக்க வைத்து, மீண்டும் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த நடவடிக்கைக்கு, லொடுக்கு பாண்டி என்கிற சுப.வீரபாண்டியனும், குஞ்சாமணி என்கிற வீரமணியும் மிகுந்த முனைப்பு காட்டுவதாகவும் தெரிகிறது.
டாக்டர் ஜவஹர் அவர்களே… ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்த்தீர்களா… ?
கருணாநிதியை நம்புகிறீர்களே… உங்கள் நிறுவனத்தை எத்தனை முறை கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது கூட, ரவுடிகளை வைத்துத் தாக்கியிருக்கிறார், குமுதம் இதழ்கள் எத்தனை முறை எரிக்கப் பட்டிருக்கின்றன என்பதை உங்கள் நிறுவனத்தின் பழைய ஊழியர்களை அழைத்துக் கேட்டுப் பாருங்கள். உங்கள் தந்தை எஸ்ஏபி, அவர் கழுத்தை அறுத்தாலும், கருணாநிதியிடம் சரணடைந்திருக்க மாட்டார். பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து தாக்கிய நபரிடமே, சரணடைவதை விட சுயமரியாதை அற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும் ? உங்கள் தந்தை இன்று இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாரா என்பதை யோசித்துப் பாருங்கள் ஜவஹர் சார்.
இன்று ஆத்திரம் உங்கள் கண்களை மறைக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் சிந்தனையை மழுங்கடிக்கிறது. அதனால்தான், பத்திரிக்கையாளர்களுக்கு தீராத இழுக்கையும், மாறாத சிறுமையையும் தேடித் தந்த காமராஜை சந்தித்திருக்கிறீர்கள். அய்யா, நீங்கள் உழைத்து செல்வந்தரான மருத்துவர். காமராஜ், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வாங்கி செல்வந்தர் ஆனவர். அவரையா சந்திக்கிறீர்கள் ?
இன்று திருவேங்கிமலை சரவணனை இப்படி நம்புகிறீர்களே….. இதே திருவேங்கிமலை சரவணன், நேற்று வரை வரதராஜனுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும் தானே ? நாளை உங்களுக்கு எதிராக, கருணாநிதியுடன் கூட்டு சேரமாட்டார் என்று உறுதியாக உங்களால் கூற முடியுமா ?
நீங்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதால், இந்தியச் சட்டங்களின் படி, உங்களால் பத்திரிக்கையின் முதலாளியாக இருக்க முடியாது. இதைப் பயன்படுத்தி, அமைதிப்படையில் சத்யராஜ் எம்எல்ஏ ஆவது போல, உங்கள் பத்திரிக்கையை உங்களிடம் இருந்து தந்திரமாக அபகரிக்க திருவேங்கிமலை சரவணன் திட்டமிடுவதை நீங்கள் அறிவீர்களா டாக்டர் ?
உங்கள் கோபம் குறையாமல் இருந்தாலும், பழிவாங்கும் உணர்ச்சி நீங்காமல் இருந்தாலும், அதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதய மருத்துவத்தில் நிபுணர். நீங்கள் சந்தித்த, கோபால், காமராஜ், ஜாபர் சேட், சரவணன் ஆகியோரை பரிசோதித்துப் பாருங்களேன்… இதயமே இருக்காது..
கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொறியாதீர்கள் டாக்டர்.
சவுக்குக்கு நெஞ்சு வலி வந்தா, இலவசமா சிகிச்சை செய்வீர்களா டாக்டர் ? ஏனா நாடு போற போக்கப் பாத்தா, எப்போ நெஞ்சு வலி வரும்னே தெரியல டாக்டர். உங்களிடம் சிகிச்சை பெறும் அளவுக்கு சவுக்குக்கு என்றுமே பணம் வராது. அதனால, ஃப்ரீயா ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்.
இப்போது சொல்லுங்கள், திருவேங்கிமலை சரவணனை சகுனி என்று அழைப்பது பொருத்தம் தானே… ?