1991-1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலம், தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஊழல், அராஜகம், ரவுடித்தனம், கொலை, கொள்ளை, என்று அராஜகங்களின் மொத்த உருவமாக அந்த ஆட்சி திகழ்ந்தது. ஜெயலலிதா, ப்ரெஞ்சு ராணி மேரி அண்டோனியட் போலத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். ஜெயலலிதா பதவிக்கு வந்த நாள் முதலாகவே, ஊழல்களும் அராஜகங்களும் அரங்கேறி வந்தன. தற்போது போலல்லாமல், ஆட்சியின் தொடக்கம் முதலே, ஜெயலலிதா அரசின் அராஜகங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டாலும், சன் டிவியின் வரவுக்குப் பிறகு, ஜெயலலிதா அரசு மீதான விமர்சனங்கள் மிக மிக கடுமையானது.
சன் டிவி அப்போதெல்லாம், முழுக்க முழுக்க திமுக நிலைப்பாட்டை எடுத்ததோடு, அதிமுக அரசை எதிர்ப்பதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டது. ஜெயலலிதா ஆட்சி நடத்திய விதமும் அப்படி இருந்ததால், சன் டிவியை ஒரு பக்க சார்பு என்று யாரும் குறை கூறியது கிடையாது.
1996ம் ஆண்டு, தேர்தலின்போது, திமுகவின் பிரச்சாரப்பாடல்களில் ஒன்று இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. “ஒரு ரூபா சம்பளம்தானே… ஆனா ஊரெல்லாம் உம்பணம்தானே..” என்பதே அந்தப் பாடல். அந்தப் பாடல் மிகைப்படுத்தப்பட்டதே அல்ல என்ற வகையில், ஜெயலலிதா ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்.
1996 தேர்தலில் திமுகவின் மிக முக்கியமான பிரச்சாரமே, அதிமுகவினர் சுடுகாட்டைக் கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்து விட்டார்கள் என்பதே. இந்த சுடுகாட்டுக் கூரை ஊழல், அந்த அளவுக்கு 1995 மற்றும் 1996ல் அந்த அளவுக்கு பொதுமக்களாலும், ஊடகங்களாலும் விவாதிக்கப்பட்டது. சுடுகாட்டு கூரை ஊழலுக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான ஊழல்கள் வெளி வந்த காரணத்தால், இந்த ஊழல் பெரிய அளவில் பின்னாட்களில் விவாதிக்கப்படவில்லை.
இன்றைய தலைமுறை இந்த ஊழலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இந்தக் கட்டுரையின் முடிவில், கருணாநிதியும் ஜெயலலிதாவும் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
ஜவஹர் ரோஜ்கார் யோஜ்னா என்று ஒரு திட்டத்தை மத்திய அரசு 1995ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்திம் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இது போன்ற திட்டங்களை எடுத்து வருவதன் நோக்கம், நகர்ப்புரங்களில் இருப்பது போல கிராமப்புரங்களில் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதால், அதை ஈடுகட்டும் விதமாகவும், கிராம மக்கள் நகர்ப்புரங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்ப்பதற்காகவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஒரு மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை கருத்தில் கொண்டு, அந்த மாவட்டத்துக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும். ஒதுக்கப்படும் நிதியில் 80 சதவிகிதம் கிராமப் பஞ்சாயத்துகள் மூலமாக ஒதுக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 20 சதவிகிதத்தை மாவட்ட நிர்வாகம் செலவு செய்யலாம். இப்படி அடையாளம் காணப்படும் கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் குறிப்பிட்ட சதவிகிதம் இருந்தே ஆக வேண்டும். இத்திட்டமே, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை கைதூக்கி விடவே. இந்த விதிமுறைக்கான முக்கிய காரணம், ஒரு பின்தங்கிய மாவட்டத்துக்கு ஒதுக்கிய நிதி மற்றொரு மாவட்டத்துக்கு அனுப்பப் பட்டு விடக் கூடாதே என்பதற்காக. உதாரணமாக, பெரம்பலூரில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு குளத்தை தூர் வாருவதற்காக நிதி ஒதுக்கப்படுகிறதென்றால், அந்த தூர் வாரும் பணியை அந்த கிராமத்து மக்களே செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் படி, சமுதாயக் கூடம், கடைகள், பஞ்சாயத்து கட்டிடம், பால்வாடி மையங்கள், அங்கன்வாடிகள் போன்றவை கட்டலாம். இந்த நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டுகையில் பொருட்கள் வாங்குவதற்கு 60 சதவிகித நிதியும், மீதம் உள்ள 40 சதவிகிதம் கூலியாக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதே விதி.
கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய, கிராமப் பஞ்சாயத்தில் இருக்கும் பொறியாளர்கள் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து, சரியாக வேலைகள் நடக்கின்றனவா என்று உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும், கிராம மக்களைக் கொண்டே செய்யப்பட வேண்டும். இடைத்தரகர்களோ, கான்ட்ராக்டர்களோ நுழையக் கூடாது. இது போல பல்வேறு விதிகள் இத்திட்டத்திற்காக விதிக்கப்பட்டிருந்தன.
27.03.1995 அன்று, மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் வளர்ச்சித் திட்ட அலுவலருக்கு பாரதியார் கூட்டுறவு சங்கத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில், “பஞ்சாயத்து யூனியன்கள் மூலமாக சுடுகாட்டுக் கூரை கட்டுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எங்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், சுடுகாட்டுக் கூரை கட்டுவதில் பயிற்சி பெற்றவர்கள். குறித்த காலத்தில் சிறந்த தரத்தோடு சுடுகாட்டு கூரையை எங்களால் கட்டித் தர முடியும்.
ஆகையால், தாமதம் செய்யாமல் உடனடியாக சுடுகாட்டுக் கூரை கட்டும் வேலைக்கான உத்தரவை எங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்குங்கள். எங்கள் கூட்டுறவு சங்கம் பலவீனமான நிதி நிலைமையில் இருப்பதால் உடனடியாக இந்த உத்தரவை வழங்குங்கள்” என்று கடிதம் வருகிறது.
இந்தக் கடிதம் வரும் நேரத்தில், மதுரை மாவட்டத்தில் சுடுகாட்டுக் கூரை கட்டுவதற்கான திட்டமே இல்லை. அதற்கான கருத்துருவோ, கோப்போ மதுரை மாவட்ட நிர்வாகத்தில் கிடையவே கிடையாது. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்தக் கடிதத்தை பாரதி கூட்டுறவு சங்கம் எழுதுகிறது. அந்தக் கடிதம் கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் செல்லாமல், நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் செல்கிறது. அப்போது கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் உமாசங்கர் ஐஏஎஸ். அந்தக் கடிதம் மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம் நேரடியாக வழங்கப்படுகிறது. கடிதத்தை பெற்ற சம்பத் அந்தக் கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார் ” விவாதிக்கவும். இந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மீதம் உள்ள தொகையை இதற்காக பயன்படுத்தியிருக்கின்றனர். நாமும் இதே போல பயன்படுத்தி, வேலைக்கான உத்தரவுகளை பிறப்பிக்கலாமா என்று சரிபார்க்கவும். 150 கூரைகளுக்கான உத்தரவுகளை வழங்கலாம். 100 பஞ்சாயத்துகளுக்கும், 50 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் கூரை கட்ட உத்தரவு வழங்கலாம்” என்று குறிப்பு எழுதுகிறார்.
கூடுதல் கலெக்டராக இருந்த உமாசங்கருக்கோ அதிர்ச்சி. சுடுகாட்டுக் கூரை கட்டுவதற்கான திட்டமே மதுரை மாவட்டத்தில் இல்லை. பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரை நான்தான் திட்ட அலுவலர். கூரை கட்ட வேண்டுமென்றால் நான்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும். எனக்கே தெரியாமல் திடீரென்று யார் திட்டம் போட்டார்கள் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அவரிடம் அந்தக் கடிதத்தை எடுத்து வந்து கொடுத்த பாரதி சங்கத்தின் பிரதிநிதியிடமே அந்தக் கடிதத்தை கொடுத்து, உமா சங்கரிடம் தருமாறு கூறுகிறார்.
உடனடியாக உமாசங்கர் மாவட்ட ஆட்சியர் சம்பத்தை சந்தித்து, என்ன சார் இது, கூரை கட்டுவதற்கான திட்டமே நமது மாவட்டத்தில் இல்லை. எப்படி இது போன்றதொரு கடிதத்தை இந்த நபர் எடுத்து வருகிறார் என்று கேட்கிறார். மாவட்ட ஆட்சியர் சம்பத் தன்னிடம் என்ன கூறினார் என்பதை அப்படியே ஒரு பிரமாண வாக்குமூலமாக உமாசங்கர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மாவட்ட ஆட்சியர் “இங்க பாருங்க… உள்ளாட்சித் துறை அமைச்சர் (டி.எம்.செல்வகணபதி) என்னை அழைத்து, 300 கூரைகளுக்கான உத்தரவை வழங்கும்படி கூறினார். எல்லோரும் செய்கையில் நாம் மட்டும் செய்ய மறுக்க இயலாது” என்று கூறுகிறார். ஆனால் உமா சங்கரோ அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க மறுக்கிறார். சம்பத்தோ, நீ என்ன செய்யறது வெண்ணை, நான் செய்யறேன் பாரு என்று அவரே, அதற்கான புதிய கோப்பை உருவாக்கி, வேலைகளைத் தொடங்குகிறார்.
இந்த விவகாரம் நம்மை மீறி நடக்கிறது என்பதை உணர்ந்த உமாசங்கர், இதை இப்படியே விடக்கூடாது, முடிந்த வரை சேதாரத்தை தடுக்கலாம் என்று, 300 கூரைகள் தேவையில்லை. வெறும் 100 கூரைகள் மட்டும் கட்டலாம். மேலும் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டப் பணிகளை வேறு நிறுவனங்களுக்கு அளித்தால் ‘மதுரை மாவட்டத்துக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும். மேலும் இந்த பாரதி கூட்டுறவு சங்கம் அமைந்திருப்பதோ சேலத்தில். மதுரைக்கு இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது சரியல்ல என்று இவர் ஒரு கோப்பை உருவாக்கி அனுப்புகிறார்.
உமாசங்கரின் குறிப்பை மீறி எதுவும் செய்ய முடியாத மாவட்ட ஆட்சியர் சம்பத், 100 சுடுகாட்டுக் கூரைகளை கட்டுவதற்கான உத்தரவை 24.04.2005 அன்று பிறப்பிக்கிறார். இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்னர்தான், எந்த கிராமத்தில் கட்டுவது என்பதையே அதிகாரிகள் கண்டறிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 100 கிராமங்களை அதிகாரிகள் கண்டறிவதற்குள், கடுமையான நெருக்கடி தரப்படுகிறது. ஆகையால் வேறு வழியின்றி, அது வரை அடையாளம் காணப்பட்ட வெறும் 70 கிராமங்களில் சுடுகாட்டுக் கூரை கட்டுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
நடந்த அத்தனை விவகாரங்களையும் ஒரு குறிப்பாக பதிவு செய்கிறார் உமா சங்கர். “நான் மாவட்ட ஆட்சியரோடு விவாதித்தேன். ஆதி திராவிடர்களுக்கான 100 சுடுகாட்டுக் கூரை கட்டுவதற்கான உத்தரவை வழங்கலாம். அந்த சங்கத்தின் பிரதிநிதி என்னை இன்று சந்தித்தார். ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளுக்கு பதிலாக, தகரக் கூரைகளை பதிக்க சம்மதித்துள்ளார். இரண்டுக்கும் ஒரே விலைதான். 50 சதவிகிதம் மட்டும் முன்பணமாக பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளார். ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பணத்தை வெளி நிறுவனங்களுக்கு வழங்கவதால், மதுரைக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட ஆட்சியரோடு விவாதித்தபடி, வெறும் 100 கூரைகள் மட்டும் கட்ட உத்தரவு வழங்கலாம்” இதற்கு மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் அளிக்கிறார். வேலைக்கான ஒப்பந்த உத்தரவு 05.05.1995 அன்று பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால் 27.04.1995 அன்றே பாரதியார் சங்கம் சார்பில், கூடுதல் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பப்படுகிறது. அந்தக்கடிதத்தில், 50 சதவிகித முன்பணம் தந்தால்தான் வேலைகளை தொடங்க முடியும் என்று எழுதப்படுகிறது. வேலைக்கான உத்தரவே வழங்கப்படாமல், இந்த நிறுவனம் முன்பணம் கேட்டு எழுதுகிறது என்றால், எந்த அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு அரசில் செல்வாக்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
26.09.1995 அன்று, உமாசங்கர், இவனுங்க எப்படித்தான் கூரையை கட்டுறானுங்கன்னு பாக்கலாம் என்று நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார். கூடுதல் ஆட்சியர் உமாசங்கரோடு வட்டார வளர்ச்சி அலுவலர், கூடுதல் கோட்டப் பொறியாளர், மற்றும் கோட்டப் பொறியாளர் ஆகியோரும் செல்கின்றனர். 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்ட சுடுகாட்டுக் கூரை மிகவும் தரக் குறைவாக, உரிய கட்டுமானப் பொருட்கள் இன்றி கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. பள்ளம் வெட்டி அடித்தளம் தோண்டப்படவில்லை. மணல் நிரப்பப்படவில்லை. வெள்ளை கூட அடிக்கப்படவில்லை. சினிமாவுக்கு போடப்படும் செட்டுகள் போல, அதை 45 நிமிடத்தில் நிறுவி, மீண்டும் கலைத்து வேறு இடத்தில் நிறுவ முடியும். அப்படிப்பட்ட கட்டுமானம் என்பதை கண்டுபிடிக்கிறார் உமாசங்கர். அதை ஆய்வு செய்த பொறியாளர்கள், இதை கட்டுவதற்கு அதிக பட்சமாக 14 ஆயிரம் மட்முமே ஆகும் என்று கூறுகின்றனர்.
உடனடியாக உமாசங்கர் ஒரு குறிப்பை எழுதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புகிறார். அந்தக் குறிப்பில், தகர கூரைக்கு பதிலாக தரக்குறைவான ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கல் பயன்படுத்தப்படவே இல்லை. அடித்தளமும் அமைக்கப்படவில்லை. தரக்குறைவான கூரைகளைக் கட்டி, அரசை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். மீதம் உள்ள தொகையை அப்படியே நிறுத்தி வைப்பதோடு, சம்பந்தப்பட்ட பாரதி சங்கத்தை அரசு ஒப்பந்தத்தை எடுக்க முடியாத வகையில் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பெழுதுகிறார். அந்த குறிப்போடு, பொறியாளர்கள் தயார் செய்திருந்த அறிக்கையையும் அனுப்புகிறார்.
அந்தக் கடிதம் மாவட்ட ஆட்சியர் சம்பத்திடம் செல்கிறது. சம்பத் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு, அற்புதமான ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார்.
“உடனடியாக இறுதிப் பட்டியலான 10.50 லட்சத்தை விடுவிக்கவும். இதற்கான மதிப்பீடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மீதம் உள்ள 10.50 லட்சத்தை உடனடியாக தாமதமின்றி விடுவிக்கவும். இது குறித்து சந்தேகம் இருந்ததென்றால், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரிடம் கேட்டுக் கொள்ளலாம்” என்பதே அந்த உத்தரவு.
உமாசங்கர் விடுவாரா. நீ என்ன என்னை செக்கை வழங்கும்படி உத்தரவிடுவது, நான் செக்கை வழங்க மாட்டேன் என்று வழங்க மறுக்கிறார். உடனே பாரதி சங்கத்தினர் மீண்டும் ஆட்சித் தலைவரை அணுகுகின்றனர்.
செப்டம்பர் 95ல், அதிமுக ஒன்றியச் செயலாளர்களான ராமன் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர் உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதிக்கும், மாவட்ட ஆட்சியர் சம்பத்துக்கும் கடிதம் எழுதுகின்றனர். அந்த கடிதத்தில், கழக அரசின் உத்தரவின் பேரில், ஏழை மக்களுக்கு சுடுகாட்டுக் கூரை கட்டித் தர முயல்கையில், உமா சங்கர் என்ற கூடுதல் ஆட்சியர், வேலை செய்ய விடாமல் தடுக்கிறார் என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் எழுதுகின்றனர். இந்தக் கடிதத்தின் விளைவாக, உமாசங்கர் உடனடியாக மாற்றப்படுகிறார்.
உமாசங்கர் ஏற்கனவே ஆய்வு செய்தது, அலங்காநல்லூரில் இருந்த சுடுகாட்டுக் கூரை. மாறுதல் உத்தரவு வந்த சமயத்தில் உசிலம்பட்டி பொறியாளரிடமிருந்து உத்தங்குடியில் கட்டப்பட்ட கூரையும் 14 ஆயிரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. உமாசங்கர் சளைக்காமல் மாறுதல் உத்தரவு வந்த பின்னும், உத்தங்குடி சென்று ஆய்வு செய்கிறார். உத்தங்குடியில் ஆய்வு செய்ததிலும், அலங்காநல்லூரில் கட்டப்பட்டது போலவேதான் இங்கேயும் கட்டப்பட்டது என்பதை கண்டறிகிறார். அதையும் தவிர, மூன்று அடி நீளம் குறைவாக உள்ளதையும் கண்டறிகிறார்.
மாறுதலுக்கு முன்னதாக, உமாசங்கர் மீண்டும் ஒரு விரிவான குறிப்பை 18.10.1995 அன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புகிறார். ஆனால் அந்த குறிப்பு மாவட்ட ஆட்சியரை சென்று அடைவதற்கு முன்னதாகவே, உமாசங்கர் மாற்றப்படுகிறார்.
உமா சங்கர் எழுதிய அந்தக் குறிப்பில், பாரதி கூட்டுறவு சங்கத்துக்கு ஏற்கனவே வழங்கிய முன்பணமே அதிகம். மேலும் 10.50 லட்சத்தை வழங்கினால், பஞ்சாயத்துக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கிறார். மேலும் 13.09.1995 அன்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஜே.டி.ஆச்சார்யலு தன்னை தொலைபேசியில் அழைத்ததாகவும், மேலும் கூரைகள் கட்டுவதற்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் சொல்ல, அதற்கு உமாசங்கர் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், புதிய கூரைகள் கட்டுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஆகையால் மாநில அரசிடமிருந்து நிதி வழங்குங்கள் என்கிறார். ஆச்சார்யலுவோ, மாநில அரசிடமிருந்து நிதி வழங்க முடியாது. நீ ஏன் இன்னும் பாரதியார் சங்கத்துக்கு பணத்தை வழங்காமல் இருக்கிறாய்’ என்று கேட்கிறார். உமாசங்கர், பஞ்சாயத்து பொறியாளர்கள், நடந்த வேலைகளை சரி பார்த்துக் கொண்டுள்ளனர். சரிபார்ப்பு வேலைகள் முடிந்ததும், பணம் பட்டவாடா செய்யப்படும் அதற்கு 10 நாட்கள் ஆகும் என்கிறார். எரிச்சலான ஜே.டி.ஆச்சார்யலு, “மிஸ்டர் உமாசங்கர்.. நான் அரசு செயலாளர் பேசுகிறேன். ஐந்து நாட்களுக்குள் வேலையை முடித்து பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அமைச்சர் எனக்கு நெருக்கடி தருகிறார்” என்கிறார். நடந்த உரையாடல்களை அப்படியே பதிவு செய்கிறார் உமாசங்கர்.
அகில இந்திய அதிகாரிகளின் நடத்தை விதிகளின் படி (All India Services Conduct Rules) வாய் மொழியாக உயர் அதிகாரிகள் வழங்கும் அத்தனை உத்தரவுகளும் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், எந்த அதிகாரியும் இந்த விதியை பின்பற்றுவதே இல்லை.
ஆனால் உமாசங்கர் அத்தனை விஷயங்களையும் அப்படியே பதிவு செய்கிறார். கூடுதலாக, பாரதி சங்கத்துக்கு, பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தவறானது. ஆகையால் சரிவர வேலைகளை முடிக்காத அந்த நிறுவனத்துக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார்.
இதையெல்லாம் விட பெரிய கூத்து என்ன தெரியுமா ? சுடுகாட்டுக் கூரை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்ற பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்படவே இல்லை என்பதுதான். அந்த கூட்டுறவு சங்கங்களின் முகவரியில் பெயர்ப்பலகையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
1991 – 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒரு நூதனமாக கொள்ளையடிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பெரும்பாலானவை, காதி கிராம கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப் பட வேண்டும் என்பது. இந்த விதிமுறையைப் பயன்படுத்தி, செயல்படாமல் இருந்த நூற்றுக்கணக்கான சங்கங்களை அதிமுக அமைச்சர்கள் கைப்பற்றினர். அந்த சங்கங்களுக்கு புதிதாக ஒருவரை நியமித்து, அவர் மூலமாக டெண்டரில் பங்கெடுத்து, காகித அளவில் இருக்கும் சங்கங்கள் மூலமாக தரம் குறைந்த பொருட்களை அரசுக்கு வழங்கி கொள்ளை லாபம் பார்த்தார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் இந்திராகுமாரி கைத்தறி அமைச்சராக இருந்த காலத்தில் கோ ஆப்டெக்ஸுக்காக பட்டுப்புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அப்போதும் இதே போல போலி கூட்டுறவு சங்கங்கள் மூலாக பெங்களுரில், நடைபாதையில் விற்கப்படும் போலி பட்டுப்புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அந்த பட்டுப்புடவைகள் தரமானவையா என்பதை ஆய்வு செய்து சான்றளிக்கும் வேலை, கோ ஆப் டெக்ஸில் பணியாற்றும் கைத்தறி ஆய்வாளர்களுடையது. நான்கு கைத்தறி ஆய்வாளர்கள், பெங்களுருக்கு கடத்திச் செல்லப்பட்டு, அந்த நடைபாதை பட்டுப்புடவைகள் தரமானவை என்று சான்றளிக்குமாறு வற்புறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் முடியாது என்று மறுத்த காரணத்தால், பின்னி மில்லின் பட்டுப்புடவைகள் வாங்கப்பட்டு, அந்தப் புடவையில் இருந்த பின்னி மில் லோகோவை பத்து நாட்கள் உட்கார்ந்து கிழித்தோம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணைக்கு வந்தபோது தெரிவித்தார்கள்.
அந்த வழக்கெல்லாம் நீதிமன்றத்துக்கு செல்லவேயில்லை என்பது வேதனை. அந்த ஊழலில் ஈடுபட்ட இந்திராகுமாரி இன்று திமுகவில் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு அம்பலத்துக்கு வந்தது ஒரு சுவையான கதை. கோபாலன் என்ற சமூக ஆர்வலர், மதுரை சுடுகாட்டு ஊழல் தொடர்பாக வந்த பத்திரிக்கை செய்திகளை தொகுத்து, ஒரு புகார் மனுவாக தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறார். தலைமை நீதிபதி, அந்தப் புகாரைப் படித்துப் பார்த்து, இதில் பெரிய ஊழல் நடந்திருப்பதை புரிந்து கொண்டு, உடனடியாக அந்த மனுவை பொது நல வழக்காக எடுக்க உத்தரவிட்டு, அரசு மற்றும் உமாசங்கரை எதிர் மனுதாரராக சேர்க்கிறார்.
உமாசங்கர் நடந்த உண்மைகளை அப்படியே ஒரு வாக்குமூலமாக தாக்கல் செய்கிறார். தமிழக அரசுக்கு மிகவும் தர்மசங்கடம் ஏற்படுகிறது.
ஒரு கடிதத்தை பொது நல வழக்காக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இறுதியில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுகிறது. தங்களது தீர்ப்பில் நீதிபதிகள், “கிராமப்புர ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில், அந்த ஏழை மக்களையே புறந்தள்ளி விட்டு, ஏதோ ஒரு கண் தெரியாத அழுத்தத்தின் காரணமாக, வேண்டிய கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டள்ளது கண்கூடாக தெரிகிறது. அந்த கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களும் ஏழைகள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை, ஏனென்றால், உள்ளுர் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த கட்டிடம் கட்ட இரும்பு கதவு மற்றும் சிமின்ட் கூரைகளுக்கான கச்சாப் பொருட்களை இந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அரசு வழங்கியுள்ள உத்தரவின் மூலமாக, உள்ளுர் தொழிலாளர்களுக்கு சென்றிருக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டுறவு சங்கங்களின் பெயரைப் போட்டு வேலைக்கான அரசாணை வழங்கப்பட்ட பின்னால், அரசு அதிகாரிகள் அந்தத் திட்டத்தின் விதிகளைப் எப்படி பின்பற்ற முடியும் ? வேறு என்ன முடிவை எடுத்து விட முடியும் ? அவர்கள் கோடிட்ட இடத்தில் கையொப்பமிட வேண்டும் என்பதல்லவா அது ? ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதோ நடந்திருக்கிறது என்பதும், ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட தகுதியில்லாத சிலரை சென்றடைந்திருக்கிறது என்பதும் எங்கள் மனதில் பதிந்து விட்டது. இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.
சிபிஐ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வழக்கு என்று பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் அகில இந்தியப் பணி அதிகாரிகள் என்பதால், அவர்கள் மீது வழக்கு தொடர, அரசு அனுமதி வேண்டும். 2001ம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா அரசு பதவியேற்ற நிலையில், பெரும்பாலான அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பல மாவட்டங்களில் பதிவு செய்த வழக்குகள், வீணாகிப் போயின.
இறுதியாக ஒரே ஒரு வழக்கில்தான் வியாழனன்று, சிபிஐ நீதிமன்றம் டி.எம்.செல்வகணபதி, ஜே.டி.ஆச்சார்யலு ஐஏஎஸ், சத்யமூர்த்தி ஐஏஎஸ் மற்றும் பாரதி என்ற தனி நபர் ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எந்த சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு என்று பட்டி தொட்டியெங்கும் பேசி 1996ல் திமுக வெற்றி பெற்றதோ, அந்த சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கின் முக்கிய கதாநாயகனான டி.எம்.செல்வகணபதியை கூச்ச நாச்சமேயின்றி திமுகவில் சேர்த்துக் கொண்டார் கருணாநிதி. சேர்த்துக் கொண்டதோடு, காலங்காலாக திமுகவில் இருந்தவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு, கட்சித் தாவிய செல்வகணபதிக்கு இரண்டு முறை மாநிலங்களவை எம்.பி பதவியை அளித்தார். அதற்கு விசுவாசமாக, 2ஜி வழக்கு தொடர்பான அனைத்து வேலைகளையும் டெல்லியில் கவனித்துக் கொண்டார் செல்வகணபதி.
1996ல் ஆட்சியை பிடித்த கருணாநிதி, ஊழல் வழக்குகளில் பூர்வாங்க விசாரணை நடத்தி, முழு விசாரணை நடத்த வேண்டிய வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ சிபி சிஐடிக்கோ அனுப்பும் பணியை விழிப்புப் பணி ஆணையம் செய்து வந்தது. உமாசங்கரை விழிப்புப் பணி ஆணையகத்தில் இணை ஆணையராக நியமித்தார் கருணாநிதி. உமா சங்கரும், தன் பணியை திறம்பட செய்தே வந்தார். சட்டப்படி அங்கேயும் பணியாற்றினால் கருணாநிதிக்கு பிடிக்குமா என்ன ? தனக்கு வேண்டிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கக் கூடாது என்று உமா சங்கருக்கு நெருக்கடி அளிக்கிறார். அப்போது விழிப்புப் பணி ஆணையராக சோமநாதன் என்ற அதிகாரி இருந்ததாக நினைவு. ஒரு வருடம் முடியும் முன்பாகவே, உமா சங்கர், அந்தப் பணியிலிருந்து மாற்றப் படுகிறார்.
அதன் பிறகு திமுக ஆட்சியிலும் தொடர்ந்து பந்தாடப்பட்டார். 2001ல், மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், டம்மியான பதவியில் ஐந்தாண்டுகள் நியமிக்கப்பட்டார். 2006ல் கருணாநிதி ஆட்சி மீண்டும் வந்ததும், தினகரன் ஊழியர்கள் எரிப்பு சம்பவம் நடந்தது. கேடி சகோதரர்களோடு, கருணாநிதிக்கு பிணக்கு ஏற்பட்டது. கேடி சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று முடிவெடுத்த கருணாநிதி, ஜெயலலிதா அரசு கேபிள் நிறுவனம் துவங்கியதற்கு எதிராக ஆளுனரை சந்தித்து மனு அளித்த, அதே கருணாநிதி, அரசு கேபிள் நிறுவனத்துக்கு உயிரளிக்க, உமா சங்கரை நியமித்தார்.
கேடி சகோதரர்கள், அரசு கேபிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை ரவுடிகளை விட்டு, மாவட்டந்தோறும் அறுத்தெறிந்தனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார் உமா சங்கர்.
“இதயம் இனித்து கண்கள் பனித்ததும்” உமாசங்கர் தூக்கியெறியப்பட்டார். தூக்கியெறியப் பட்டதோடு அல்லாமல், அவர் மீது சாதிச் சான்றிதழ் மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, எனக்கு உள்ள மொத்த சொத்துக்களும் இதுதான். இதற்கு மேல் ஒரு அங்குலம் சொத்து இருந்ததாக நிரூபித்தால், நான் குடும்பத்தோடு அண்ணா சாலையில் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சவால் விட்டார். இன்றைக்கு வரை, அவர் மீது சொத்துக் குவிப்பு புகாரை நிரூபிக்க இயலவில்லை. ஆனால், அவர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இன்று வரை நிலுவையில் வைத்திருக்கிறது.
நேர்மையான அதிகாரிகளை எந்த அரசுமே விரும்புவதில்லை. அது திமுகவாக இருந்தாலும் சரி. அண்ணா திமுகவாக இருந்தாலும் சரி. கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதா, ஜெயலலிதா ஒரு புடவை கட்டிய கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை. அதிகார மையங்களுக்கு வளைந்து நெளிந்து நடந்து கொண்டால், வளமையாக வாழ்வதோடு மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்தான். நல்ல பதவிகளில் அதிகாரத்தின் உச்சத்தில் வாழலாம்தான். ஆனாலும், பைத்தியக்கார பட்டத்தோடு, பிடிவாதமாக நெருக்கடியிலும், பிரச்சினைகளின் நடுவிலும் வாழ்ந்தே தீருவேன் என்று இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் ஜெயலலிதாக்களுக்கும், கருணாநிதிக்களுக்கும் பிரச்சினை.
சுடுகாட்டுக் கூரை விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த பல வழக்குகள் அனுமதி கிடைக்காமலும், நீதிபதிகளின் குளறுபடிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது செல்வகணபதி தண்டிக்கப்பட்டுள்ள வழக்கு இந்த வழக்குகளில் கடைசி வழக்கு. இந்த தண்டனை காரணமாக, செல்வகணபதி தனது எம்.பி பதவியை இழந்துள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், செல்வகணபதியின் அரசியல் வாழ்க்கை தற்காலிகமாக அஸ்தமித்துள்ளது. இந்த ஊழலின் முக்கிய சூத்திரதாரியான மதுரை மாவட்ட ஆட்சியர் சம்பத் ஐஏஎஸ் மீது துளியும் ஆதாரமில்லை என்று அவரை வழக்கிலிருந்து விடுவித்தார் அசோக் குமார் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி. இந்த ஊழலை ஊற்றி மூடுவதில் காவல்துறை, நீதித்துறை, அரசு நிர்வாகம் என்று அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கொண்டுள்ளனர்.
ஒரு ஊழல் வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்து, அதில் சம்பந்தப்பட்டவர்கள் இறக்கும் வரையில் தீர்ப்பளிக்காத நிலையில்தான் நமது நீதித்துறை உள்ளது. வேதனைப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத கையறு நிலையில்தான் இருக்கிறோம்.
மயானத்திலிருந்து 18 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த அழுகுரல் அடங்கியதில் மகிழ்ச்சியே.
கலங்காதே மனமே!
”சுடுகாட்டு கூரை ஊழல் விவகாரத்தில், சென்னை, சி.பி.ஐ., நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளதால், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளேன்; அதற்கான கடிதத்தை, ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பியுள்ளேன்,” என, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள், தமிழக அமைச்சர் செல்வகணபதி கூறினார். தன் பதவியை, அரசு பறிக்கும் முன்பே, தானாக முன்வந்து, அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து, தர்மபுரியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இது, எனக்கு சோதனையான மற்றும் சவாலான காலம். சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில், எனக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், என் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, ராஜ்யசபா தலைவருக்கு, இன்று (நேற்று) கடிதம் அனுப்பி உள்ளேன்.பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பலர் மீது வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வது வருத்தம் அளிக்கிறது.சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில், 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 323 அரசு தரப்பு சார்ந்த ஆவணங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.எதிர்தரப்பு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிப்பவன். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட, 71 சாட்சிகளில், ஒரு சாட்சிகள் கூட, நான் லஞ்சம் பெற்றதாக
கூறவில்லை.இதே போல், எந்த ஆவணத்திலும் என் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குறிப்பிடப்படவில்லை. எனவே, சென்னை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
சுடுகாட்டு கூரைஅமைப்பது தொடர்பாக, அப்போதைய, ஜெயலலிதா அரசால் நிறுவப்பட்ட உயர்மட்ட குழுவின் படியே அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், என் தன்னிச்சையான முடிவு எதுவும் இல்லை.நாகப்பட்டினத்தில் சுடுகாட்டுக்கு, கூரை அமைத்த ஊழலில், 23 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, என் மீது குற்றச்சாட்டு உள்ளது.ஒரு பணியை நிறைவேற்றும் போது, அப்பணியை கண்காணிக்க வேண்டியது, அதிகாரிகள் மட்டுமே. மதிப்பீடு குறைவாக இருந்தால், அப்பணி குறித்து அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.அமைச்சராக இருந்த போது, இத்திட்டத்தில் கையெழுத்து மட்டும் தான் போட்டேன்.கடந்த 2004ல், தலைமை செயலர் சங்கர், ‘சுடுகாட்டு கூரை அமைப்பது தொடர்பாக, யாரும் தவறு செய்யவில்லை’ என, கடிதம் எழுதியதால், பல மாவட்டங்களில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில், எங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பார்த்தால், உண்மை புரியும். இவ்வழக்கில், இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்ய, அரசுஅதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடப்பது, ஜனநாயகத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடு.இந்த தீர்ப்பில் அரசியல் தலையீடு இருக்குமா என தெரியவில்லை. இவ்வழக்கில், என்னுடன் சேர்ந்த ஐந்து பேர் தண்டனை பெற்றுள்ளனர். நீதிமன்றமே, ‘இவ்வழக்கில் கூட்டு சதி இல்லை’ என, கூறிய நிலையில், ஐந்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒரு வழக்கை தவிர, என் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்கிலும், ‘நான் குற்றமற்றவன்’ என்பதை நிரூபித்துள்ளேன். இவ்வழக்கிலும், என் மீது குற்றம் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்.என் ராஜினாமா முடிவு குறித்து, கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளேன்.இவ்வாறு செல்வகணபதி கூறினார்.
பணமும் சட்டத்தில் நுழையக்கூடிய ஓட்டைகளும் இருக்கும்வரை இந்த ஆடுகளை ஒன்றுமே செய்யமுடியாது.
அப்படியே கருணாநிதி பேசியதுபோலவே செல்வகணபதியும் பேசி தன்னை பரிசுத்தமானவராக நிலைநிறுத்திக்கொண்டார்
மீசைக்கார நண்பன் செல்வகணபதி அம்மாவின் நிழலில் நின்று சுடுகாட்டில் குளல் ஊதி சங்கம் வளர்த்தார். அம்மாவின் அனுக்கிரகம் இடம்மாறி அம்மணமானபோது நவக்கிரகங்களில் நிழல்க் கிரகமான சாயக்கிரகம் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறினார். இன்றையை சுற்றுவட்டத்தை அசுர குரு என்ற அம்மா சுவீகரித்துக்கொண்டபோது கால் யுகமான 18 ஆண்டுகள் கழித்து சுடுகாட்டின் அழுகுரல் அடக்கிவிட்டது மீசைக்கார நண்பனை சாயாக்கிரகம் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மீசைக்கார நண்பன் நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறார். இருந்தும் அவர் நீதிக்கு மதிப்பளித்து வெளியேறுவதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அவருக்கு இப்போ தேவையெல்லாம் ஏதாவது ஒரு கிரகத்தின் அரவணைப்பு அது காவியாக இருக்கலாம், கையாகவும் இருக்கலாம். கிரகங்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை என்பதுதானே விதி
Stll, regrets are there as by escaping of Mr,Sampath.
Despite Mr.Uma Shakar’s recent Christianity activities, we salute him for his past achievements whihc are really brave.
நேர்மையான அதிகாரிகளை எந்த அரசுமே விரும்புவதில்லை. அது திமுகவாக இருந்தாலும் சரி. அண்ணா திமுகவாக இருந்தாலும் சரி. கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதா, ஜெயலலிதா ஒரு புடவை கட்டிய கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை.
”………….ஆனாலும் பைத்தியக்காரப்பட்டத்தோடு பிடிவாதமாக நெருக்கடியிலும்,பிரச்னைகளின் நடுவிலும் வாழ்ந்தே தீருவேன் என்று இருப்பவர்களும் ……” (சஙகர், உமாசங்கர், சகாயம், சந்துரு, புகழேந்தி, இராதாகிருஷ்ணன், உபாத்யாயா) இருக்கத்தான் செய்கின்றனர்.