ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவின் போது, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப் படுவது வழக்கம். இந்தப் பதக்கங்கள், அதிகாரிகளின் சட்டையில் மாட்டிக் கொள்வதை விட, வேறு எந்தப் பயனையும் அளிப்பதில்லை என்று பல்வேறு உயர்அதிகாரிகள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
அதனால், கொடுக்கும் பதக்கத்திற்கு பதிலாக, அவரவர் தேவைகளுக்கேற்ப, அத்தியாவசியமாக பொருட்களையே சுதந்திர தின விருதுகளாக சிறந்த அதிகாரிகளுக்கு வழங்கலாம் என்று சவுக்கு தீர்மானித்து, அவ்வாறே விருதுகளை அறிவிக்கிறது.
முதல் விருது, வேற யார்… ? நம்ப ஜாபர் சேட் தான்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு போனாக ஆயிரக்கணக்கான போன்களை ஒட்டுக் கேட்டு கேட்டுக் கொண்டிருந்தால் காது என்ன ஆகும் ? அது ஐபிஎஸ் படித்த காதாக இருந்தாலும், காது காதுதானே ? இவ்வாறு தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்டதன் விளைவாக, ஜாபருக்கு காது மந்ததமாக ஆகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதனால் இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருதாக, ஜாபருக்கு, காது கேட்கும் கருவி ஒன்று குடியரசு நாளை முன்னிட்டு வழங்கப் படுகிறது.
இரண்டாவது விருது. லத்திக்கா சரண்.
லத்திக்கா தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி.
வழக்கமாக காவல்துறை இயக்குநராக இருப்பவர்கள் காவல்துறை அதிகாரியைப் போல நடந்து கொள்வார்கள். ஆனால், லத்திக்கா சரண், அறிக்கை நாயகியாக மாறி விட்டிருக்கிறார். அரசியல் வாதியைப் போல, ஏதாவது விவகாரம் என்றால் உடனே அறிக்கை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். செங்கல்பட்டு அகதிகள் முகாமில், காவல்துறை அதிகாரி என்ற ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா அகதிகளை மிருகத்தனமாக தாக்கப் பட்டார்கள் என்ற செய்தி வந்த போது, தடியடியே நடக்கவில்லை என்ற அரசியல்வாதி போல பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அளித்தார். சமீபத்தில், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் இயக்கத்தினர் நடத்திய சாலை மறியலின் போது, காவல்துறையினர் அவர்களை மிருகத்தனமாக தாக்கினர். இத்தருணத்தின் போதும், அறிக்கை நாயகி, தடியடியே நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.
அதனால் மேலும் பல்வேறு அறிக்கைகள் எழுதும் வகையில், அறிக்கை நாயகி லத்திக்கா சரணுக்கு ஒரு பேனா பரிசாக அளிக்கப் படுகிறது.
லத்திகா,
இது உன் பேனா…
அதை என் பேனா என்பேனா ?
உன் முன்னால் வேற
டிஜிபி நிற்பானா ?
நின்ற பிறகு
சென்னையில் அவன் இருப்பானா ?
இருந்தாலும் அவனை நான்
விடுவேனா ?
உனக்கே உரித்தான
ரகசிய நிதியை நான்
வேறு யாருக்கும் தருவேனா ?
தந்தால் அது சரிதானா ?
லத்திக்காவின் பதவியில் ஒரு சிறப்பு இருக்கிறது. தன்னை விட பணியில் மூத்தவர்களை ஓரங்கட்டி விட்டு, இந்தப் பதவியை பிடித்திருக்கிறார். அதனால் அவருக்கு ஒரு இலவச கவிதை.
அடுத்து ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி இவர். இவரின் அண்ணன் தம்பிகள் இருவரும் சேர்ந்து பிச்சை நாயுடு பெயரை சொல்லிக் கொண்டு, தமிழகம் முழுக்க கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டத்தில் தனது தெய்வ பக்தியை வெளிப்படுத்தும் வகையில், ஒரு கோயில் வேறு கட்டி வருகிறார். அவரது பக்தி நியாயமானதே. அந்த நியாயமான பக்தியை அவரது சொந்தக் காசில் அல்லவா வெளிப்படுத்த வேண்டும். ஆனால் சொந்தக் காசில் வெளிப்படுத்த மாட்டார். அதனால் தானே அய்யா அவர் பிச்சை நாயுடு..
தமிழகத்தின் முக்கிய காவல்நிலையங்களில் நிலம் தொடர்பான தகராறுகள் எங்கெங்கேல்லாம் இருக்கிறதோ, அங்கே பிச்சை நாயுடுவின் சகோதரர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும் காவல்நிலையத்துக்கு பிச்சை நாயுடுவே தொலைபேசியில் பேசி, தேவையான உதவிகளை செய்து வருகிறார். வசூல் வேட்டையிலும் உதவுகிறார். மேலும், தற்போது, ப்ளஸ் டூவில், ஒழுங்காக படிக்காமல், திருட்டுத் தனமாக அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்று, பொறியியல் முடித்த பிச்சை நாயுடுவின் மகன் சந்தீப்புக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக வேறு கட்டைப் பஞ்சாயத்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆகையால் இவ்வளவு சிறப்பாக கட்டைப் பஞ்சாயத்து செய்யும், ராதாகிருஷ்ணனுக்கு, இந்த ஆண்டு குடியரசு தின விருதாக, ஒரு கட்டை வழங்கப் படுகிறது.
அடுத்த விருது, ஆன்டெனா தலையர் என்று அன்போடு அழைக்கப் படும் சங்கர் ஜிவால்.
இந்த சங்கர் ஜிவால், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் மீது, பொய் வழக்குகள் போட்டு, அவர்களை வதைப்பதில் மிகச் சமர்த்தர். செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாம்களில் உள்ள அகதிகளை வெளியில் விடாமல், அவர்களை வெளியே விட்டால், பெரும் கலவரம் நடக்கும் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி, நீதிமன்ற பிணையில் வந்த பின்னும் அவர்களை முகாம் என்னும் சிறையில் அடைத்து வதைத்து வருபவர்.
பதவி உயர்வு வந்த பின்னும், வேறு பணியிடத்திற்கு போகாமல், உளவுத் துறையிலேயே தொடர்ந்து ஜாபர் சேட்டின் ஒட்டுக் கேட்புப் பணிகளுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருபவர்.
அரசு ஒட்டுக் கேட்டால், போதுமான அளவில் சிறப்பாக ஒட்டுக் கேட்க முடியாது என்ற காரணத்தால், சொந்தமாக ஒரு ஒட்டுக் கேட்பு நிறுவனத்தையே தொடங்கியவர்.
மேலும், தன் தலையிலேயே, ஒட்டுக் கேட்பதற்கான அனைத்து ஆன்டென்னாக்களையும் வைத்துக் கொண்டு, ஒரு நடமாடும் ஒட்டுக் கேட்பு நிலையமாக திகழ்பவர்.
இவ்வாறு அவர் வெளிப்படையாக இருப்பதால், மரத்தில் உள்ள காகங்கள் மற்றும் பறவைகள் எச்சமிட்டோ, காகங்கள் செத்த எலியை இவர் தலை மீது போட்டோ, இவரின் ஆன்டென்னாக்களை சேதம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அதை தடுக்கும் வண்ணம், இந்த ஆண்டின் குடியரசு தின விருதாக, இவருக்கு ஒரு ஹெல்மெட் வழங்கப் படுகிறது.
அடுத்த விருது பெறுபவர் மாலதி.
கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் உள்துறைச் செயலாளராகவும், பிறகு தலைமைச் செயலாளராகவும் இருப்பவர். வழக்கமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே குடியரசு தின விருதுகள் வழங்கப் படும். ஆனால், நமது வீட்டில் சின்னக் குழந்தைகள் சொன்ன பேச்சை கேட்டால் நாம் பரிசு கொடுப்பதில்லையா ? அது போலத் தான், விதிவிலக்கு அளித்து, ஐஏஎஸ் அதிகாரியான மாலதிக்கு இந்த முறை குடியரசு தின விருது.
உள்துறை செயலாளராக இருந்த போதே, ஜாபர் சொன்ன பேச்சை தட்டாதவர். ஜாபர் செய்யும் சட்டவிரோத ஒட்டுக் கேட்பை கண்டு கொள்ளாமல் ஜாபருக்கு ஒத்து ஊதி வருபவர். ஜாபர் செய்யும் போலி என்கவுன்டர் கொலைகளை, ஜாபரை விட அதிகமாக நியாயப் படுத்துபவர். ஜாபர் என்ன சொன்னாலும் கேட்கும் மாலதி மிக மிக நல்ல பிள்ளையாய் இருப்பதால், சொல் பேச்சு கேட்கும் மாலதியின் நற்குணத்தை பாராட்டி மாலதிக்கு குடியரசு தின விருதாக ஒரு டெட்டி பேர் பொம்மை பரிசு.
நல்ல பிள்ளை இல்லையா ? அதனால் கூடுதலாக அந்த நல்ல பிள்ளையை பாராட்டி, வண்ணக்கிளி படத்தில் வந்த ஒரு பாடல்.
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத் தான் நல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்கு சட்டை சீனப் பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா
அப்போ..கலகலனு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா
அடுத்து கமிஷனர் கண்ணாயிரம்.
காவல்துறையில் அதிகாரிகளுக்கு எடுப்பு வேலை செய்வதை பக்கெட் தூக்குவது என்பார்கள். கண்ணாயிரத்தை போன்ற ஒரு சிறந்த எடுப்பை நீங்கள் பார்க்கவே முடியாது. ஜாபர் காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும் (இது அதிகப்பிரசிங்தித் தனம் இல்லையா ?) அளவுக்கு ஜாபருக்கு மிகுந்த விசுவாசமான பக்கெட்டாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஜாபர் உத்தரவிட்டதன் காரணமாக, டிஐஜி தரத்தில், மிகுந்த மோசமான குற்றச் சாட்டுக்கு உள்ளான ஒரு தரங்கெட்ட அதிகாரியை (இது பற்றித் தனிக் கட்டுரை வருகிறது) காப்பாற்றுவதற்காக பல்வேறு தகிடுதண்டாக்களை செய்து அந்த அதிகாரியை காப்பாற்றினார். அந்த அதிகாரி, விரைவில் ஐஜியாக பதவி உயர்வு பெற இருக்கிறார்.
இது தவிரவும், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, வழக்கறிஞர்கள் சிலர் கருப்பு கொடி காட்ட திட்டமிட்டிருப்பதை அறிந்த கண்ணாயிரம், திமுகவின் மகாத்மா காந்தி, வி.எஸ்.பாபுவை மூலமாக நூற்றுக்கணக்கான ரவுடிகளை உயர்நீதிமன்ற வளாகத்தில் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து வரச் செய்து, வழக்கறிஞர்களையும் பத்திரிக்கையாளர்களையும் தாக்க ஏற்பாடு செய்தவர்.
ஜாபர் சேட்டுக்கு மிகச் சிறந்த பக்கெட்டாக செயல்பட்டு வரும் ராசேந்திர வல்லம்பர் எனப்படும், ராஜேந்திரனுக்கு இந்த ஆண்டு குடியரசு தின பரிசாக ஒரு பக்கெட் அளிக்கப் படுகிறது.
அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநர் துக்கையாண்டி.
இவர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் நிலுவையில் இருக்கும் ஒரே வழக்கு, பெங்களூரில் நடந்து வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.
இந்த வழக்கைத் தவிர இந்தக் குழுவில் எந்த வேலையும் இல்லை. இந்த ஒரே வழக்கை கவனிப்பதற்காக, துக்கையாண்டிக்கு மாதந்தோறும் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப் படும் ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். இது போக ரகசிய நிதியும் வழங்கப் படுகிறது.
ஒரே வழக்கைத் தவிர வேறு வேலைகள் இல்லாததால், துக்கையாண்டி, சாதிச் சங்க பிரதிநிதிகளை அடிக்கடி சந்தித்து பேசி பொழுதை போக்குகிறார். அப்படியும் பொழுது போகவில்லை என்றால், குருமாராஜை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அவரோடு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார்.
இவருக்கு அடுத்தவர் இடத்தை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்றாலும், அந்த வேலையையும், இவரிடம் கான்ஸ்டபிளாக உள்ள மணி மற்றும் இவரது மனைவி பார்த்துக் கொள்வதால், இவருக்கு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் வேலையும் கிடையாது.
எவ்வித வேலையும் இல்லாமல் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டு, பொழுது போக்க வழியில்லாமல் சிரமப்படுகிறார் துக்கையாண்டி.
அதனால், அவரது பொழுதை போக்க மிகுந்த உதவிகரமாக இருக்கும் வண்ணம், இந்த ஆண்டின் குடியரசுத் தலைவர் விருதாக துக்கையாண்டிக்கு ஒரு பல்லாங்குழி வழங்கப் படுகிறது.
பல்லாங்குழியை நீங்களே விளையாடலாம் துக்கையாண்டி. கம்பேனிக்கு ஆள் வேண்டுமென்றால், சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை இல்லாத நாட்களில், குருமாராஜை கூப்பிடுங்கள் சார்.
அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி சுனில் குமார்.
இந்த சுனில் குமார் என்றைக்கு, ஜாபர் சேட்டிக் பேச்சைக் கேட்கத் தொடங்கினாரோ, அப்போது தொடங்கியது இவருக்கு சனி. நாள்தோறும் ஜாபர் சேட், இவரை மிரட்டும் மிரட்டல் கொஞ்ச நஞ்சமல்ல.
ஜாபர் சேட்டின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நல்ல அதிகாரிகளை பழி வாங்குகிறார். மோசமான அதிகாரிகளை காப்பாற்றுகிறார். ஜாபர்சேட் பெயரைக் கேட்டாலே நடுங்குகிறார்.
தனக்கு ஒரு அடுக்கு மாடி ஃப்ளாட் மற்றும் ஒரு வீட்டு மனையைத் தவிர எந்த சொத்துமே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த உமாசங்கர் போன்ற அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை முடுக்கி விட்டு, அந்த அதிகாரியை கடும் அலைகழிப்புக்கு ஆளாக்கியவர். ஆனால் சாதாரண இன்ஸ்பெக்டர்களாக இருந்து கொண்டு, ஒரே நாளில் 1.5 கோடி ரூபாயை கட்டியதன் மூலம், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ட்ராலி பாய்சின் மீதான புகாரை இவர் விசாரிக்காமல், லத்திக்காவுக்கு அனுப்பி தனது விசுவாசத்தை காட்டி கொண்டவர்.
ஜாபர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக, அர்ச்சனா ராமசுந்தரத்தின் கணவர் ராமசுந்தரத்தின் மீது ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டு, அவரை அரசுப் பணியை விட்டே ஓட வைத்தவர்.
ஜாபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் நடுங்குவதாகவும், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்து விடுவதாகவும் தெரிகிறது. இதனால், ஜாபரிடம் இருந்து போன் வரும் நாளிலெல்லாம் இவர் ஆடை மாற்றுவதாகவும் தெரிகிறது.
இவ்வாறு இவர் ஆடை மாற்றுவதை தவிர்க்கும் விதத்தில், இந்த ஆண்டின் குடியரசு விருதாக, சுனில் குமாருக்கு ஒரு டையபர் பரிசாக அளிக்கப் படுகிறது.
Classified…