யாருக்கு இந்த வசவு என்று அதிசயிக்காதீர்கள். எல்லாம் உங்களுக்கு நன்கு தெரிந்த நபர் தான். நேற்று நடந்த குடியரசுத் தலைவர் விருதுகள் விழாவில், ‘டையப்பர்’ விருது பெற்றார் இல்லையா ? அதே சுனில் குமார் தான் இவர். இந்த பதிவின் தலைப்பை சவுக்கு சொல்லவில்லை. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி சொன்னார்.
அப்படி என்ன செய்து விட்டார் சுனில், இப்படி ஒரு வசவை வாங்குவதற்கு ?
மதுரையில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயஸ்ரீ, இவர் டிஎன்பிஎஸ்சி க்ரூப் 1 தேர்வு மூலம், நேரடி டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
90களில் தமிழகத்தில் வனக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பிரிவில் மாமூல் கொட்டோ கொட்டென்று கொட்டும். அங்கே மரம் கடத்துபவர்களிடமிருந்து வசூல் செய்யலாம்.
இந்தப் பிரிவு 96ல் கருணாநிதி ஆட்சியில் மூடப்பட்டது. அதையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு. அரசு டாஸ்டாக் கடைகளை திறந்து சரக்கு விற்கத் தொடங்கிய உடனேயே, கள்ளச் சாராய புழக்கம், பெரும் அளவுக்கு குறைந்து, இந்தப் பிரிவிலும் மாமூல் வரத்து குறைந்தது.
விபச்சாரத் தடுப்புப் பிரிவு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, போன்ற பிரிவுகளிலெல்லாம், பெரும் அளவு வருமானம் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது. ஆகவே, இதையும் அதிகாரிகள் விரும்புவதில்லை.
தமிழ்நாட்டில், மாமூல் கொட்டோ கொட்டென்று கொட்டும் பிரிவுகள் இரண்டே இரண்டு. ஒன்று போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு. மற்றொன்று உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு.
இந்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு இருக்கிறதே….. அப்பப்பா… சொல்லி மாளாது. அவ்வளவு வருமானம்.
ஏன் இந்தப் பிரிவில் மட்டும் இவ்வளவு வருமானம் ?
“கலைஞருக்கு நன்றி. கலைஞரின் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு நன்றி“
சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறேன். ஒரு ரூபாய் அரிசிக்கென்று, ஆயிரக்கணக்கான டன்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப் படுகின்றன.
ஒரு உதாரணத்துக்கு ஒரு டன் அரிசியை நீங்கள் கடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு ரூபாய் அரிசி 3 ரூபாய்க்கு உங்களால் வாங்கப் படுகிறது. அந்த அரிசியை கேரளாவுக்கு கடத்துகிறீர்கள். கேரளாவில் அரிசி என்ன விலை தெரியுமா ? 20 முதல் 25 ரூபாய் வரை.
20 ரூபாய்க்கே நீங்கள் விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு டன்னுக்கு உங்களுக்கு கிடைக்கும் லாபம் 17 ரூபாய். இந்தப் 17 ரூபாயில் எப்படிப் பார்த்தாலும், மாமூல் மட்டும் 10 ரூபாய் போய் விடும். மீதம் உள்ள 7 ரூபாய் உங்களுக்கு லாபம் தானே.. ஒரு டன்னுக்கு 7 ஆயிரம் ரூபாய் என்றால், லட்சக்கணக்கான டன்களை கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு ரூபாய் அரிசியைத் தானே விற்கிறார்கள். அதனால் நமக்கென்ன என்று அலட்சியம் காட்ட முடியாது. அந்த ஒரு ரூபாய் அரிசிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து வழங்கும் மானியம் மட்டும் 12 ரூபாய்க்குப் பக்கமாக வரும். ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் மானியம் என்றால், லட்சக்கணக்கான டன்களுக்கு எத்தனை கோடிகள் என்று யோசித்துப் பாருங்கள். அந்த மான்யங்கள், நமது வரிப்பணத்தில் தானே, ஏழைகள் நலன் கருதி வழங்கப் படுகிறது ?
சரி பின்புலத்தை பார்த்து விட்டோம். விஷயத்துக்கு வருவோம். இவ்வளவு மாமூல் கொழிக்கும் பிரிவு என்பதால், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போட்டியென்றால் போட்டி, அவ்வளவு போட்டி. மிக மிக உயர்ந்த அதிகார மட்டத்தில் உங்களுக்கு செல்வாக்கு இருந்தாலே ஒழிய, அந்தப் பிரிவை நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அப்படிப் பட்ட இந்தப் பிரிவில் மதுரை சரகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் தான் ஜெயஸ்ரீ. இவருக்கு என்ன செல்வாக்கு என்று பார்த்தீர்களேயானால், தமிழகத்தின் சர்வ வல்லமை படைத்த, கருணாநிதியே அஞ்சும் நபர் தான் இவரது பின் புலம்.
கருணாநிதியே அஞ்சும் செல்வாக்கு படைத்தவர் வேறு யார். நமது அஞ்சா நெஞ்சன் தான். அஞ்சா நெஞ்சனின் அல்லக்கை, அனைவரையும் விட சக்தி படைத்தவர் அல்லவா ?
அந்த அல்லக்கை பொட்டு சுரேஷ் தான், அக்கா ஜெயஸ்ரீக்கு பின்புலம். அப்போ, அக்காவுக்கு ஏதாவது ஒன்றென்றால், மாமா துடிக்க மாட்டாரா ?
பொட்டு வைத்த முகமோ….. பொட்டு வைத்திருக்கும் முகமோ இல்லை சார். வெறும் பொட்டு வைத்த முகமோ தான்.
இப்படித்தான், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, மாமூலாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த போது, அக்கா ஜெயஸ்ரீக்கு ஒரு சோதனை. சோதனையென்றால் சாதாரணமான சோதனை அல்ல. அப்படி ஒரு சோதனை.
ஆமாம் அய்யா. லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை. 2009 ஜுலை மாதம், லஞ்ச ஒழிப்புத் துறையின் மதுரைப் பிரிவு, நடத்திய சோதனையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கைப்பற்றப் பட்டது.
அந்த சோதனை நடத்திய போது, நல்ல வேளை அக்கா அலுவலகத்தில் இல்லை. திடீரென்று வந்து இறங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், மதுரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்.
சோதனையிட்டதில், பல்வேறு கவர்களில் “S.P, Civil Supplies CID” என்று எழுதப்பட்ட கவர்கள், பணத்தோடு கைப்பற்றப் படுகின்றன.
அந்த கவர்களை தனது கையில் வைத்திருந்தவர் அந்தப் பிரிவின் தலைமைக் காவலர் மைக்கேல் டேவிட். டேவிட், கிளிப்பிள்ளை போல உண்மையை கூறி விட்டார். “அம்மா சொல்லித் தான் சார் வாங்கினேன்“ (அம்மான்னா, அவங்க அம்மா இல்ல சார். ஜெயஸ்ரீ மேடம்) கைப்பற்றப் பட்ட தொகை போக, டேவிட்டின் வீட்டில் மேலும் சில லட்சங்கள் கைப்பற்றப் பட்டன. ஜெயஸ்ரீயின் மேசையை சோதனையிட்ட போது, 45 லட்ச ரூபாய்க்கு, நகைகள் வாங்கியதற்கான ரசீது கிடைத்தது.
இந்த விசாரணை நேர்மையான ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுகிறது. அந்த அதிகாரி, டேவிட்டை, நீதித் துறை நடுவர் முன்னிலையில், “அம்மாவின் வசூல் வேட்டை“ பற்றி விரிவான ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். இவரைத் தவிர, ஜெயஸ்ரீயின் கேம்ப் கிளர்க் இப்படிப் பட்ட நேர்மையான அதிகாரியை விட்டு வைப்பார்களா ? இந்த ஆளை இந்த வழக்கை விசாரிக்க விட்டால், உண்மையான விசாரணை நடக்கும், அதை அனுமதிக்கக் கூடாது என்று, பொட்டு அண்ணன் உடனடியாக களத்தில் இறங்கி, நடமாடும் மஹாத்மா காந்தியான ராமானுஜத்தை, உள் துறை செயலாளர் மாலதி மூலமாக அணுகி, அந்த நேர்மையாக அதிகாரியை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுகிறார்.
அதற்குப் பிறகு, குலோத்துங்க பாண்டியன் என்ற ஒரு மங்குணி அதிகாரி வருகிறார். அவர் மங்குணியாக இருந்தாலும், ஏற்கனவே விசாரித்த அதிகாரி, ஜெயஸ்ரீயின் பெயரை குற்றவாளியாக சேர்த்து விட்டதால், வேறு வழியின்றி விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரைணை நடந்து கொண்டிருக்கும் போதே, நமது டையப்பர் பாய் சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக நியமிக்கப் படுகிறார்.
டையப்பர் பாய் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த உடனேயே, ஜாபர் சொன்ன வார்த்தை “நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்“ என்பதுதான்.
அப்புறம் என்ன ? அக்கா ஜெயஸ்ரீக்கு சுக்கிர திசை தான். நத்தை 2 மீட்டர் தூரம் சென்று, 20 மணி நேரம் கழித்து, வந்து சேரும் வேகத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. இந்த விசாரணை வேகம் பிடிக்காதவாறு, டையப்பர் பாய் பார்த்துக் கொண்டார்.
ஜெயஸ்ரீ அக்காவை ஐபிஎஸ் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டுமென்று, பொட்டு மாமா விருப்பப் பட்டார். அந்த விருப்பத்தை அவரது அடிமை ஜாபரிடம் சொன்னார். ஜாபர் உடனே அவரது அடிமை டையப்பர் பாயிடம் சொன்னதும், எஃப்ஐஆர் நிலுவையில் இருக்கும், ஜெயஸ்ரீயை ஐபிஎஸ் அந்தஸ்துக்கு உயர்த்துவது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தடையேதும் இல்லை என்று கடிதம் அனுப்பப் பட்டது. அதன் விளைவாக ஜெயஸ்ரீ ஐபிஎஸ் அதிகாரி ஆகிறார்.
எப்பூடி…..
இப்படியே, ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று பாடிக் கொண்டிருந்தாலும், ஜெயஸ்ரீ மனதிற்குள் நிலுவையில் இருந்த அந்த எஃப்ஐஆர் உறுத்திக் கொண்டே இருந்தது. பொட்டுவை அழைத்து, “என்னங்க இது, நீங்க இப்படி தென் தமிழ்நாட்டுக்கு முதல்வரா இருக்கும் போதே, என் மேல இந்த எஃப்ஐஆர் இன்னும் பென்டிங்கா இருக்கு“ என்று அன்போடு கடிந்து கொண்டார்.
வந்ததே கோபம் பொட்டுவுக்கு…. உடனடியாக ஜாபரை போனில் அழைத்தார். “என்னண்னே…. இன்னும் அந்த கேசு முடியலையாமே… மேடம் ரொம்ப வருத்தப் பட்றாங்க. நீங்களே முடிச்சுட்றீங்களா… “ என்று கேட்கிறார்.
ஜாபர் உடனே… “அண்ணே, பொட்டண்னே…. இதுக்கெல்லாம் எதுக்கு அண்ணன் கிட்ட போய் சொல்றீங்க. ரெண்டு நாள் டைம் குடுங்க. அந்த எஃப்ஐஆர க்ளோஸ் பண்ணிட்டு, உங்களுக்கு போன் பண்றேன்“ என்று கூறுகிறார்.
கூறி விட்டு, டையபர் பாய்க்கு போன் பண்ணுகிறார். வழக்கை முடித்து விட்டு தகவல் கூறுங்கள் என்று கூறுகிறார். அவர் உத்தரவுப் படியே, ஜெயஸ்ரீ மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து அறிக்கை அரசுக்கு அனுப்பப் படுகிறது.
சரி…. இவ்வளவு கூத்துக்களும் நடந்து கொண்டிருக்கிறதே…. அந்தத் துறையில் போலா நாத் என்று ஒரு இயக்குநர் இருக்கிறாரே… அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஒரு கேள்வி எழுகிறதல்லவா ? அவரைப் பற்றிய தனிப் பதிவு விரைவில் வெள்ளித் திரையில்.
சவுக்கு வாசகர்கள் சவுக்கு போலவே சரியான அதிகப்பிரசங்கிகள். இரண்டு பேர், ஜெயஸ்ரீயின் ஊழலைப் பற்றி, நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களே, ஜெயஸ்ரீயின் மேசையிலிருந்து நகை வாங்கியதற்கான ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளனவே…. அவையெல்லாம் என்ன ஆவது என்று கேட்பீர்கள்.
குடியரசுத் தின விருதாக ஒரே ஒரு டையப்பர் தானே வழங்கப் பட்டுள்ளது ?
இதே சுனில் குமார் தான், விசாரணை என்ற பெயரில் உமாசங்கரை வதைத்து, அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியவர். இன்னும் உமாசங்கர் மீதான வழக்கு ஆதாரங்களே இல்லாத நிலையிலும், முடிக்கப் படாமல், நிலுவையில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அந்த காவல்துறையின் உயர் அதிகாரி, சுனிலைப் பற்றி, “இந்தப் பொழப்பு பொழைக்கறதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்.”