தஞ்சாவூர் பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி “சோழர் காலம் பொற்காலமாக இருந்தது. தமிழகத்தில் பொற்கால ஆட்சியை முதல் அமைச்சர் கருணாநிதி நடத்தி வருகிறார். ராஜராஜ சோழனாக இருக்கும் உங்கள் பொற்காலத்தில் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இந்த விழா எடுத்தால் ஆட்சிக்கு வர முடியாது என்று சொன்னார்கள். அந்த எண்ணங்களை எல்லாம் எல்லாம் தகர்த்து எரியும் முயற்சியாக வந்து இருக்கிறீர்கள். யார் எடுத்தால் என்ன ? பெரியார் வழியில் வந்தவன். அண்ணா வழியில் வந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் விழாவிற்கு வந்து இருக்கும் உங்களை வணங்குகிறேன்“
முதலில், பெரியார் வழி வந்தவருக்கு மூட நம்பிக்கை பழக்கம் இருக்கலாமா ? வாய்க்கு வாய் பெரியார் காட்டிய வழி, அண்ணா காட்டிய வழி என்று கூறும் கருணாநிதி, பெரிய கோவிலின் முதன்மை வழியில் நுழையாமல், சிவகங்கை பூங்கா வழியாக பெரிய கோயிலில் நுழைந்த மர்மம் என்ன ? இதுதான் பகுத்தறிவுக்கு அடையாளமா ?
கருணாநிதிக்கு 1989-90ல் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா ? கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை விட்டு, வண்டி கிளம்பியவுடன், வீட்டின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலைப் பார்த்து, கருணாநிதி, ரகசியமாக கும்பிடுவார் என்பதுதான். இது தவிரவும், வீட்டில் ரகசியமாக நடைபெறும் யாகங்களிலும், கருணாநிதி பங்கேற்பது வழக்கம் என்றே அந்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
புட்டபர்த்தி சாய்பாபா வழங்கிய மோதிரத்தையே தயாளு அம்மாள் அவர் கையால் பயபக்தியோடு பெற்றுக் கொண்டதை வேடிக்கை பார்த்தவர் தானே இந்தக் கருணாநிதி.
சரி. இப்போது அடுத்த விஷயத்திற்கு வருவோம். பொன்முடி, ராஜராஜனின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறாரே ? ராஜராஜன் எப்படிப் பட்ட ஆட்சியை நடத்தினான் என்பதைப் பற்றி வரலாற்று ஏடுகள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.
ராஜராஜன் காலத்தில் அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன.
சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு” அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.
சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது “சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு”[6] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது.
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.
ராஜராஜ சோழனின் மிகச் சிறந்த சாதனையாக தஞ்சை பெரிய கோயில் கருதப் படுகிறது.
சரி. இப்போது கருணாநிதியையும், ராஜராஜனையும் ஒப்பிடுவோம். ராஜராஜன் காலத்தில் அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப் பட்டது. கருணாநிதி காலத்தில் மூத்த ஆண் வாரிசுக்கு அரசுரிமை வழங்கப் பட இருக்கிறது.
ராஜராஜன் காலத்தில் அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. கருணாநிதி குடும்பத்துப் பெண்களுக்கு கருணாநிதி மீது இருக்கும் செல்வாக்கு, ஊரறிந்தது.
அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரை திருமணம் செய்து கொண்டனர். கருணாநிதிக்கு எத்தனை மனைவி என்பது உங்களுக்கே தெரியும்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். கருணாநிதி காலத்தில் நடனத்திலும், இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்ற பெண்கள், கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொண்டு புரிகிறார்கள்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களை பார்த்தால் விளங்கும். கருணாநிதி காலத்தில் கூத்தாடிகள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது கருணாநிதி அவர்களுக்கு வாரி வழங்கியுள்ள அரசு நிலங்களையும், வரிச்சலுகைகளைப் பற்றிய அரசாணைகளைப் பார்த்தால் தெரியும்.
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும், அமைப்பையும் ஏற்று ஆட்சி புரிந்தார்கள். கருணாநிதி, சாதிய அடுக்கமைவுக்கு ஏற்றவாறு, அதை பாதுகாக்கும் வகையில், குடும்பத்தையும் நடத்துகிறார், ஆட்சியையும் நடத்துகிறார்.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி போன்ற பிராமணர்களே, இன்றும் கருணாநிதியை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.
சோழர் காலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், நூற்றுக்கணக்கான நடிகைகளும், துணை நடிகைகளும், விழா நடத்தி அதில் நடனமாடி கருணாநிதியை களியூட்டுவதற்காக இருக்கிறார்கள்.
சோழர் காலத்தில் ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். கருணாநிதி ஆட்சியில், அதிகாரிகள் என்ற போர்வையில் ஏராளமான அடிமைகள் வேலை செய்கிறார்கள்.
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். கருணாநிதி தொடக்க காலத்திலேயே முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலைஞர் கருணாநிதி நகர் என்று நகரங்களுக்கு பெயரிடப் பட்டதோடு, கலைஞர் நகரம், கலைஞர் நினைவு சமத்துவபுரம் என்று பல்வேறு ஊர்களுக்கு கருணாநிதியின் பெயர் வைக்கப் பட்டது.
இப்பெயர்களுடன் ராஜராஜன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.
கருணாநிதி முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தோடு, செம்மொழிக் காவலர், தமிழறிஞர், தமிழினக் காவலர், தமிழர் தலைவர், கலைஞர், டாக்டர், கூத்தாடிகளைக் காத்த காத்தாடி, தொல்காப்பிய நாயகன், முத்தமிழ் வித்தகர், மூதறிஞர், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர், குறளோவிய நாயகர், தொல்காப்பிய பூங்காவின் வாட்ச் மேன், போன்ற பல பட்டங்களை பெற்றிருந்தார்.
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது.
சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது.
கருணாநிதி குடும்பத்தின் வணிக முயற்சிகள், தமிழகத்தை தாண்டி, சுவிட்சர்லாந்து, கேமன் தீவுகள் என்று பல்வேறு இடங்களில் பரவியுள்ளன.
ராஜராஜனின் மிகப் பெரிய சாதனை தஞ்சை பெரிய கோயில். கருணாநிதியின் மிகப் பெரிய சாதனை, புதிய தலைமைச் செயலக கட்டிடம்.
கருணாநிதி படையெடுத்துச் செல்லாமலேயே, ஈழத் தமிழினத்தை தனது உண்ணாவிரதம் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவுமே அழித்தார்.
இப்போது சொல்லுங்கள். இது ராஜராஜன் ஆட்சி தானே…. …. ?
ராஜராஜன் சிலையைப் பற்றி கருணாநிதி வருத்தப் பட்டு பேசியது குறித்து, கவிஞர் இன்குலாபின் கவிதையோடு, இக்கட்டுரையை நிறைவு செய்கிறது சவுக்கு..
ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா ? நாளங்கள் உண்டா ?
சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
இம்மன்னன்
எதைச் செய்து கிழித்துவிட்டானாம் ?
ஈழம் கொண்டானாம்…
சாவகம் வென்றானாம்…
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவரடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்