பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொகுத்துச் சொல்லியிருக்கும் சாட்சியங்களைப் பற்றிய மேலும் பல விபரங்கள் வருமாறு:-
சிவசங்கர் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், “நான் சேலம் மாவட்டம், ராசிபுரத்தில் வசிக்கிறேன். எனது தாயார் லட்சுமியம்மாள் பெயரில் திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 3.84 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை சசிகலா பெயரைச் சொல்லி ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்திற்கு ராம்ராஜ் அக்ரோ மில் நிறுவனத்தின் பெயரில் கிரயம் செய்து கொண்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
சாமிநாதன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பையனூரில் தனக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்து வி.என்.சுதாகரன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொண்டதைச் சுட்டிக் காட்டினார்.
“சிட்கோ” நிறுவன மேலாளர் கோவிந்தராஜன் கொடுத்துள்ள சாட்சியத்தில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு 1 .12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யும்படி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது; அதைப் பரிசீலனை செய்த அப்போதைய சிட்கோ தலைவர் சுலோச்சனா சம்பத், “நிலம் ஒதுக்கீடு செய்யும்படி” பரிந்துரை செய்தார்; அதையேற்று அப்போது “சிட்கோ” நிர்வாக இயக்குனராக இருந்த பாண்டே ஐ.ஏ.எஸ்., ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 590-க்கு நிலம் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “சிட்கோ”வுக்குச் சொந்தமான 3 கிரவுண்டு நிலத்தை சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு வழங்கும் படி விண்ணப்பம் கொடுக்கப்பட்டது; விதிமுறைப்படி நிலம் கேட்டு யார் விண்ணப்பித்தாலும், 3 நபர் “கமிட்டி” ஆய்வு செய்து, நிலம் வழங்கப் பரிந்துரை செய்தால் மட்டுமே வழங்க வேண்டும். ஆனால் விண்ணப்பம் கொடுத்த ஒரே நாளில் விதிமுறை மீறி டி.வி. நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக “சிட்கோ” நிறுவன மேலாளர் சந்திரன் சாட்சியம் அளித்தார்.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றிய பவானி கொடுத்துள்ள
சாட்சியத்தில், வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவை பங்குதாரராகக் கொண்டு இயங்கி வரும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வங்கியில் இருந்து ரூ.1.50 கோடி கடன் 1992ம் ஆண்டு வழங்கப்பட்டது என்று எடுத்துரைத்துள்ளார்.
இந்தத் தொகையிலிருந்துதான் “அமிர்தாஞ்சன் மாளிகை” வாங்கப்பட்டது. இது மைலாப்பூர்”லஸ் கார்னர்”
பகுதியிலே உள்ள ஒரு பிரசித்தி பெற்ற மாளிகை. இந்த இடம் ராமாயி அம்மாள் என்பவருக்குச் சொந்தமானது. அதிலே உள்ள கட்டிடம் அவருடைய சகோதரர் நாகேஸ்வர ராவ் என்பவருக்குச் சொந்த மானது. இந்தக் கட்டிடத்தைக் காண்பித்து, நாகேஸ்வர ராவ் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி யிருந்தார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியிலிருந்து தான் இந்தக் கடனும் பெறப்பட்டிருந்தது.
இதை வங்கி அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்ட ஜெயலலிதா தரப்பினர், உடனடியாக அந்த மாளிகையைப் பார்வையிட்டு, எவ்வளவு கடன் பாக்கியிருக்கிறதோ, அந்தத் தொகையை மட்டுமே வங்கியில் செலுத்தி, அந்த இடத்தை மிரட்டி, கட்டாயப்படுத்தி, விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். நாகேஸ்வர ராவ் இந்த இடத்தை
வேறொருவரிடம் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அதனை நிறைவேற்ற விடாமல், ஜெயலலிதா தரப்பினர், குறைந்த விலைக்கு நாகேஸ்வரராவை மிரட்டி வாங்கிக் கொண்டனர்.
இந்த விவரங்களை நாகேஸ்வரராவே தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்ததை ரமேஷ் என்ற வங்கி அதிகாரி
அவருடைய சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார். ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள வங்கியில் ஜெயலலிதா 13.1.1993 அன்று ரூ.6.30 லட்சம், 29.1.1993 அன்று ரூ.3.50 லட்சம், 8.1.1994 அன்று ரூ.6.20 லட்சம், 24.12.1994 அன்று ரூ.9.00 லட்சம் என்று மொத்தம் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்துள்ளதாக பாராமார்க் என்பவர் சாட்சியம் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் கொடுத்துள்ள சாட்சியத்தில், 9.89 ஏக்கர் நிலம் சசிகலா பெயரில் கிரயம் செய்யப்பட்டுள்ள தையும்; அதில் சசிகலாவின் கணவர் நடராஜன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும்; சசிகலா பெயரில் 13.57 ஏக்கர் நிலம் மூன்று பேரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதையும்; முகமது ஆயூப் கொடுத்துள்ள சாட்சியத்தில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சசிகலா பெயரில் மூன்று பேரிடம் 13.57 ஏக்கர் நிலம் வாங்கி கிரயம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதையும்; தமிழகத்தில் வாங்கிய சொத்துக்களை நேரடியாகப் பதிவுத் துறை அலுவலகம் சென்று பதிவு செய்யாமல், சம்மந்தப்பட்ட பகுதி சார்பதிவாளரை வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா தன் வீட்டிற்கே வரவழைத்து அங்கேயே பத்திரப் பதிவு செய்துள்ளதையும்;
யார் யார் பெயரில் எவ்வளவு நிலம் பதிவு செய்யப் பட்டுள்ளது என்ற புள்ளி விவரங்களையும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ரிவர்வே ஆக்ரோ நிறுவனம் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் மூலம் 948.80 ஏக்கர் நிலத்தை பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கி வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் பெயரில் கிரயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பையனூரில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் இருந்த நிலங்கள் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அன்றைய மார்க்கெட் விலையை விட அடிமாட்டு விலைக்கு நிலம் வாங்கி இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா பெயரில் அந்த நிலம் பதிவு செய்துள்ளதை பவானி சிங் விளக்கினார்.
ராமையாவுக்குச் சொந்தமான நிலம் ரூபாய் ஒரு லட்சம், காந்தபாயிக்குச் சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து
4 ஆயிரத்து 500; வசந்தபாயிக்குச் சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 500, அசோக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலம் ரூ.2.84 லட்சம் – என்று மொத்தம் ரூ.17 லட்சத்து 26 ஆயிரம் கொடுத்து நிலங்களை வாங்கி சசிகலா பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளதை அரசு வழக்கறிஞர் எடுத்துக் கூறினார்.
சிறுதாவூரில் அமானுல்லாவுக்குச் சொந்தமான 11.8 ஏக்கர் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கும்; கோபிநாத் என்பவருக்குச் சொந்தமான 10.86 ஏக்கர் நிலம் ரூ.1.80 லட்சத்திற்கும்; அமானுல்லாவுக்குச் சொந்தமான 7.44 ஏக்கர் நிலம் ரூ.1.10 லட்சத்திற்கும்; முனியன் என்பவருக்குச் சொந்தமான 3.03 ஏக்கர் நிலம் ரூ.1.07 லட்சத்திற்கும்; வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ள தையும்; பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான, ஒவ்வொன்றும் 3,197 சதுர அடி கொண்ட 3 கட்டிடங்கள் ரூ.15 லட்சம் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதையும்; புள்ளி விவரத்துடன் பவானிசிங் தெரிவித்தார்.
மெடோ ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்காக பலரிடம் ரூ.16 லட்சத்து 94 ஆயிரத்து 250 என்ற விலையில் 113.21 ஏக்கர் நிலம் வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமராஜ் ஆக்ரோ நிறுவனத்திற்காக காந்தி என்பவருக்குச் சொந்தமான 18.58 ஏக்கர் நிலம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்து வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது; லட்சுமி என்பவருக்குச் சொந்தமான 3.84 ஏக்கர் நிலம் ரூ.76 ஆயிரத்து 800க்கும், அசோகன் என்பவருக்குச் சொந்தமான 8.01 ஏக்கர் நிலம் ரூ.1 லட்சத்து 62
ஆயிரத்து 200க்கு வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக வாடே ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 943 சதுர அடி கொண்ட கட்டிடம் ரூ.90 லட்சத்திற்கு வாங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லெக்ஸ் பிராபர்ட்டிஸ் நிறுவனத்திற்கு ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டிடம் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்தார்.
தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜகோபால் கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டு வாங்கேணி, நீலாங்கரை, பையனூர், திருவல்லிக்கேணி, கிண்டி உள்பட பல பகுதிகளிலும், நெல்லை, தஞ்சாவூர், கொடைக்கானல், கொட நாடு, ஆந்திர மாநிலம் உள்பட பல இடங்களிலும் நிலம் மற்றும் கட்டிடங்கள் வாங்கிக் குவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரியில் உள்ள மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகளுக்குச் சொந்தமான 1,190 ஏக்கர் நிலங்களை சிவா என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர், தனது பெயரில், “ஜெனரல் பவர் ஆப் அட்டர்னி” செய்து கொண்ட பின், சென்னையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், ரியர்வ்யூ அக்ரோ பார்ம் என்னும் நிறுவனத்தின் பெயரில், அதனைக் கிரயம் செய்து கொடுத்ததாக, ராஜகோபால் சாட்சியம் அளித்துள்ளார். ரியர்வ்யூ அக்ரோ பார்ம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார்? சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோராவர்.
இந்த நிலங்களை குறைந்த மதிப்பீட்டில், குறைவான முத்திரைத் தாள் கட்டணத்தில் பதிவு செய்து கொடுக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு மறுத்த போது, சென்னையில் இருந்து வந்திருந்த சார்பதிவாளர் ஒருவர், இது மேலிட விவகாரம் என்பதால் மறுக்காமல் பதிவு செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியதாகவும், தான் மறுத்து விட்டதாகவும், சாட்சியம் அளித்தார். அதனால் அங்கே பதிவு செய்யாமல், பவர் பத்திரம் தயார் செய்து கொண்டு, அவை ராஜகோபால் பொறுப்பிலே இருந்த சென்னை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாட்சியங்களை எடுத்துரைக்கும்போது, அரசு வழக்கறிஞர் பவானி சிங், போயஸ் கார்டன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தை தனது தாயின் பெயரிலான “சந்தியா நாட்டிய கலா நிகேதன்”” என்கிற டிரஸ்டின் பெயரில் வாங்கியதை மேலெழுந்தவாரியாகச் சொன்னார். “சந்தியா நாட்டிய கலா நிகேதன்” என்கிற டிரஸ்டின் ஒரே டிரஸ்டி ஜெயலலிதாதான் என்பதை அரசு வழக்கறிஞர் கூறவில்லை. ஆனால், நீதிபதி குன்ஹா அவர்களே, “அந்த டிரஸ்டில் ஜெயலலிதாதானே ஒரே டிரஸ்டி, அதனால்தானே அந்த இடத்தை அவர் கையெழுத்துப் போட்டு வாங்கினார்” என்று அவராகவே கேட்டு, அதற்கு பவானி சிங் “ஆமாம்” என்று தெரிவித் திருக்கிறார்.
ஊட்டியில் 898 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கொடநாடு தேயிலைத் தோட்டம், ஆங்கிலேயரான கிரேக் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவர் அதை விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதை வாங்க அடிசன்ஸ், எஸ்ஸார் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. அந்தத் தகவல் கிடைத்ததும், கும்பல் ஒன்று தேயிலைத் தோட்ட மேனேஜரை, நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து மிரட்டி, கொடநாடு தேயிலைத் தோட்டத்தை சென்னையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குத் தான் விற்க வேண்டும் என்று கூறினர். அது குறித்து கிரேக் ஜோன்ஸ், காவல் நிலையத்தில் 23-10-1995 அன்று புகார் கொடுக்க, மறுநாளே அதையும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் மிரட்டி, திரும்ப வாங்கச் செய்துவிட்டார். அப்போது பத்து கோடி ரூபாய் மதிப்பிலான, அந்தத் தேயிலைத் தோட்டத்தை ரூ. 7.5 கோடிக்கு உடையார் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்தனர். ஆனால் இரண்டொரு மாதங்களில் கொட நாடு தேயிலைத் தோட்டம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. சாட்சியங்கள் தெரிவித்த இந்த விவரங்களையும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் எடுத்துரைத்தார்.
தஞ்சை நகரின் வ.உ.சி. நகரில், தான் வாழ்ந்து வந்த வீட்டை ரூ.11 லட்சத்திற்கு வி.என்.சுதாகரன் பெயரில் கிரயம் செய்து கொடுத்ததாக கணபதி பிள்ளை என்பவர் அளித்துள்ள சாட்சியத்தை பவானி சிங் எடுத்துக் கூறினார். தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட – நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பேருந்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்தும் பொறுப்பு மும்பையில் உள்ள பஸ் பாடி பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ.23 லட்சம் செலவு செய்து சொகுசுப் பேருந்தாக அதனை மாற்றியதுடன், 2 ஏ.சி. இயந்திரம், சோனி டி.வி.,
வி.சி.ஆர்., அமெரிக்கன் டாய்லட், கிரானைட் மார்பிள் ப்ளோரிங் மற்றும் தேக்கு மரத்திலான மர வேலைப்பாடுகள் செய்து கொடுத்ததாகவும், பேருந்தை நவீனப்படுத்தும் பணியை அப்போது தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவரின் மேற்பார்வையில் செய்த தாகவும், தயாரிக்கப்பட்ட பேருந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்குக் கொண்டு சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்ததாகவும் மும்பையைச் சேர்ந்த குருதேவ் சிங் அளித்துள்ள சாட்சியத்தைப் பவானிசிங் படித்துக் காட்டினார். அந்த சொகுசுப் பேருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் விளக்கினார்.
கடலூரில் 3.5 ஏக்கர் நிலத்தில் கெமிக்கல் தொழிற் சாலை ரூ.30 லட்சத்திற்கும், அதே பகுதியில் ஜேம்ஸ் பேட்ரிக் என்பவருக்குச் சொந்தமான நிலம் ரூ.50 லட்சத்திற்கும் வாங்கப்பட்டு, குற்றவாளிகள் பெயரில் இயங்கி வரும் நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பவானிசிங் தெரிவித்தார். அதன் அருகில் மேலும் 3 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டது.
சென்னை தியாகராயர் நகரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான 4 கிரவுண்ட் நிலத்தை ரூ. 90 லட்சத்திற்கு வி.என்.சுதா கரன் வாங்கிப் பதிவு செய்துள்ளது தொடர்பான சாட்சியத்தையும்; கனரா வங்கி அதிகாரி கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா கடந்த 1992ம் ஆண்டு ரூ.1 கோடியும், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா ரூ.25 லட்சமும் வங்கியில் மூன்றாண்டுகளுக்கு டெபாசிட் செய்ததாக அளித்துள்ள விபரத்தையும் அரசு வழக்கறிஞர் எடுத்துச் சொன்னார்.
கம்பெனிகளைப் பதிவு செய்யும் அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் அளித்துள்ள சாட்சியத்தில்; ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராபர்ட்டீஸ், ரிவர்வியூ ஆக்ரோ பார்ம், சிக்னோரா பிசினஸ், மெடோ ஆக்ரோ பார்ம், பீன் பீச், ராமராஜ் ஆக்ரோ பார்ம், சூப்பர் – டூப்பர் டி.வி, இண்டோ கெமிக்கல்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய கம்பெனிகள் எந்தெந்தத் தேதிகளில் யார் யார் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளன? அதன் தலைவர், நிர்வாக இயக்குனர்கள் யார்? பங்குதாரர்கள் யார்? என்னென்ன தொழில்கள் செய்யப்படுகின்றன? என்பன உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து புள்ளி விவரங்களோடு விளக்கியதையும்;
தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் (ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.) இது தொடர்பாக சாட்சியம்
அளித்துள்ளதையும்; விவசாயிகளிடம் வாங்கிய நிலங்கள் அனைத்தும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் கம்பெனிகள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும்; கடந்த 1992 டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ரிவர்வே ஆக்ரோ கம்பெனி பெயரில் பலரிடமிருந்து 426.62 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சாட்சிகள் கூறியுள்ளதையும் நீதிமன்றத்திலே அரசு வழக்கறிஞர் பவானி சிங் படித்துக் காட்டினார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஐந்தாண்டுகள் இருந்தபோது முதல் 27 மாதங்களுக்கு மட்டுமே மாதம் ஒரு
ரூபாய் வீதம் ரூ.27 சம்பளம் வாங்கினார் என்றும்; ஆனால், ரூ.14 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை அவர் கட்டியுள்ளார் என்றும்; மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.90 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ தங்கம், ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும்; பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் குறித்து மதிப்பீடு செய்யும்படி தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட வாசுதேவன் கொடுத்துள்ள சாட்சியத்தில்; எண் 36, போயஸ் கார்டன் வீட்டில் 23 கிலோ 113 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 57 ஆயிரத்து 253 என்றும், வைர ஆபரணங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 என்றும் இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 43 என்று மதிப்பீடு செய்துள்ள விபரத்தை தெரிவித்திருந்தார்.
மேலும் வாசுதேவன் தன்னுடைய சாட்சியத்தில், எண் 31 ஏ. போயஸ் கார்டன் வீட்டில் ரூ.47 லட்சத்து61 ஆயிரத்து 816 மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் மற்றும் ரூ. 55 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 116 வெள்ளிப் பொருள்களையும் மதிப்பீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
செவாலியே சிவாஜிகணேசன் சாலையில் உள்ள கிரி சண்முகம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 13 வகையான பொருள்களின் மதிப்பு ரூ.11 லட்சத்து 94 ஆயிரத்து 382 என்றும்; என்னென்ன ஆபரணங்கள் எவ்வளவு எடை கொண்டது, அதன் மதிப்பு எவ்வளவு என்றும்; புள்ளி விவரங்களுடன் அரசால் நியமனம் செய்யப்பட்ட மதிப்பீட்டாளர் வாசுதேவன் தெரிவித்திருக்கிறார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் வெளிக் கொணர்ந்த சாட்சியங்கள் இவை மட்டுமா?
(தொடரும்)