பயணம் என்பது எப்போதுமே அழகானது.
பாதுகாப்பும் கதகதப்பும் மிக்க சொந்த இடத்தில் இருந்து, தெரிந்த முகங்களில் இருந்து வெளியே சென்று திரும்பும் அனுபவம் அலாதியானது. திரும்ப வரமுடியும் என்ற நம்பிக்கை அளிக்கும் உத்வேகம் பயணத்தை இன்னும் உத்வேகமாக்குகிறது, அது உண்மையல்ல எனினும்.
அன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த இரவில் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு. ”வடக்கே போலாமா?, ஹிமாலயாஸ், ரிஷிகேஷ்… இப்படி?”
இவ்வளவு தான், இந்த ஒரு கேள்வி தான் இந்த பயணத்தை ஆரம்பித்தது. ரிஷிகளும் முனிவர்களும் அலைந்து திரிந்த கங்கை நதிக்கரையில் கால்வைக்க முடியாத வாழ்வென்ன வாழ்வு என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த கேள்வி அளித்த உற்சாகம் அளவேயில்லை. ஒரு விஷயத்தை அதன் கனம் குறையாமல் மனதில் தேக்கி வைத்திருக்கும்போதும், உள்ளூர தொடர்ந்து அதை தேடிக் கொண்டே இருக்கும்போதும் நிச்சயம் அந்த வாய்ப்பு அமைந்துவிடும் என்று மீண்டும் உணர்ந்து கொண்ட தருணம் அது.
பல மாதங்களாக திட்டமிட்டு செய்யும் பயணங்களிலேயே கடைசி நேரத்தில் ஏதாவது சொதப்பல்கள் வந்து குட்டையை குழப்பி நமது திட்டங்களை தவிடு பொடியாக்கும் சூழல்கள் எழுகையில், எவ்வித திட்டமும் இல்லாமல், வெறும் ரயில் முன்பயணத்தோடு கிளம்புகையில் ஒரு விதத்தில் பதற்றம் இருந்தாலும், குறுகுறுப்பாகவும் இருக்கவே செய்தது.
ஒருவாரத்தில் ரயிலில் முன்பதிவு செய்தாயிற்று. பயண ஏற்பாடுகள் என்று பெரிதாக எதுவுமில்லை. புகைப் படங்களில் பனி போர்த்திய மலை என்றறிந்து வைத்திருந்ததால், ஒரு ஸ்வெட்டர், ஒரு சால்வை, நான்கு உடைகள் அவ்வளவு தான். பிறகு மூன்று புத்தகங்களை நண்பரின் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
முந்தைய நாள் இரவு கோவையில் இருந்து கிளம்பி சென்னை வந்து, அங்கிருந்து நண்பரோடு ரயில்நிலையம் சென்று இன்னொரு நண்பரோடு சேர்ந்து கொண்டோம். கோவைக்கும் சென்னைக்கும் இடையிலான வெப்ப அளவு வித்தியாசம் மிக அதிகம். ஆனால் வழியனுப்ப வந்திருந்த நண்பர்கள் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவார்கள் என்றெனக்குத் தெரியாது. சந்தோஷமாய் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு ரயிலேறினோம். ஒரு இரும்பு உருக்காலைக்குள் நுழைவது போலிருந்தது ரயில் அதனுள் தேக்கி வைத்திருந்த வெப்பம். ஆந்திராவை தாண்டி விட்டால், அனல் குறையும் என்று நாங்களாகவே சமாதானம் சொல்லிக் கொண்டோம், அடுத்து வட இந்தியாவில் காத்திருக்கும் அனல் காற்றைப் பற்றி அறியாமல்.
அப்போதுவரை கேதார்நாதுக்கு செல்வோம் என்று துளியும் தெரியாது.
ரயிலில் ஒரு வட இந்தியக் குடும்பம், இரண்டு பெண்கள் அவர்கள் பெற்றோர் மட்டும் அந்தப் பெட்டியில். வழக்கம் போல பரஸ்பர விசாரிப்புகள், தொழில், இடம், குடும்பம், எனப் பயணம் ஆரம்பித்தது. மிகுந்த ஆச்சரியம் மிக்க விஷயங்களாக கோர்வையாக சொல்லிக் கொண்டே வந்தார் நண்பர். இந்த நன்பர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் கடவுள் நம்பிக்கை அற்றவர். இன்னும் ஒருவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் எனினும், அந்தக் கருதுகோளுக்குப் பின்னால் அறிவியல் கலந்த ஒரு தேவை இருக்கிறது என்று உறுதியான நம்பிக்கை கொண்டவர். நானோ இப்படி.
சன்னலுக்கு வெளியே காட்சிகள் மாறி இருந்தது. பாலைவனம் போன்ற பரந்த வெய்யில் வெளி. ஆங்காங்கே சிறிதாகச் சேர்ந்திருந்த சேற்றுக் குளத்தில் ஆனந்தமாக எருமைகள் கழுத்தளவு மூழ்கி அசையாமல் நின்றிருந்தன. முதலில் பத்து, பிறகு இருபது என்றிருந்த எருமைகள் பிறகு நூற்றுக் கணக்கில் காணக் கிடைத்தது. தொலைக் காட்சிகளில் இடம் பெயரும் காட்டு எருமைகளை மட்டுமே பார்த்திருந்த எனக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான எருமைகள் அதிசயமாய் இருந்தது. பெருநகர எல்லைகளைத் தாண்டும்போது, நகர சாயல்கள் அற்று அங்கே வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கே இடப் பெயர்வு இல்லை. எருமைகள் காட்டை மறந்து விட்டிருக்கின்றன. அதன் உள்ளுணர்வில் எங்காவது அது புதைந்திருக்கலாம். ஆனால் நாம் உற்றுக் கவனிக்கும்போது எருமையே ஒரு மிகப் பெரியக் காட்டின் ஒரு துளியாக நம்மால் உணர முடியுமெனத் தோன்றியது. நம் ரோடுகளில் காணக் கிடைக்கும் எருமைகளில் இருந்து அவை சற்றே வித்தியாசமாய் இருப்பதாகத் தோன்றியது. வேறு மாநிலத்துக்குள் நுழைந்து விட்டோம், பாருங்கள் இவ்வளவு எருமைகள் என்றேன். நண்பர், எருமைகள் சரி, இங்கே எந்த ப்ளாட்டுக்களும் இல்லை பாருங்கள், வேறு மாநிலம் தான் என்றார் சிரித்தபடி. இரண்டுமே சரியெனத் தோன்றியது.
வெப்பக் காற்று உள்ளே வீசத்துவங்கி உடம்பெல்லாம் எரியத் துவங்கியது. குளித்தது போல் வியர்வை. புத்தகமும் படிக்க முடியவில்லை. வெப்பத்தோடு போராட்டம் கடுமையாக இருந்தது. இப்படியே மாலை வரை எப்படியோ கழித்த பிறகு நண்பர் முன்பே வாங்கி வந்திருந்த பழங்களை சாப்பிட்டோம். ரயில் பயணத்தில் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது பழங்களை வாங்கிக் கொள்வதுதான். அந்த வெயிலில் அவை அப்படி குளிர்ச்சியாக இருந்தது. சப்போட்டா, மாதுளை, கொய்யா எல்லாம் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் உடல் வெப்பம் தணிந்திருந்தது. கிடைப்பது “டண்டா பானி” தான் எனினும் ஒரு நிமிடத்தில் அவை சுடுநீராகி விடும். அதைத் தான் அருந்த முடியும் வேறு வழி இல்லை.
ஆனால் மிக முக்கியப் பிரச்சினையாக இருந்தது அவசரத்தில் மறந்து போன சிகரெட் பாக்கெட். இருந்ததை ஒருமாதிரி சமாளித்துக் கொண்டே இருந்தாலும் சட்டென்று ஒரு சமயம் ஒன்றுமே இல்லை. எந்த ரயில் நிலையத்திலும் கிடைக்கவும் இல்லை. அப்போதுதான் நண்பர் அந்த ஆலோசனையை முன்வைத்தார். நாம் ஏன் எதாவது இடத்தில் ரயில் நிற்கும்போது வெளியே சென்று வாங்கி வரக் கூடாது ? விஜயவாடா தாண்டி எதோ ஒரு ரயில் நிலையம். சிறியது. எவ்வளவு நேரம் நிற்கும் எனவும் தெரியவில்லை. ரயில் நின்ற நொடியில் குதித்து ஓட ஆரம்பித்தோம். நடைமேடை முடிவில் இருந்த படிகளில் ஏறி இன்னொரு பக்கம் வந்து இறங்கி கிடைத்த வழியில் எல்லாம் நுழைந்து வெளியே வந்து ரோட்டில் இருந்த பெட்டிக் கடையில் வாங்கி மீண்டும் ஏறி, ஓடி இறங்கும் வேளையில் விசில் சத்தம். எப்படியோ சரியான நேரத்தில் உள்ளே வந்து விட்டோம். அந்த சிறிய வெற்றி மிகப் பெரிய ஊக்கமாய் அமைந்தது பின்னொரு சமயம். எப்படியோ – புகைப் பழக்கம் உடலுக்குத் தீங்கானது.
மெழுகு போன்ற சருமம் கொண்ட பெண்கள், தலைக்கு முக்காடிட்டு, முகத்தை மூடி, ஆனால் இடையை மட்டும் காட்டும் பெண்கள், எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டிருந்த பெண்கள், ஆண்களை எந்நேரமும் அதட்டிக் கொண்டிருந்த பெண்கள், என்று முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப் பட்டிருந்த குடும்பங்களாக , ரயிலில் வந்த வட இந்தியக் குடும்பங்கள் தென்பட்டன. ஒருவகையில் எப்போதும் அவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் இருக்கப் போகும் வரை தான் அவர்கள் குடும்பம் நிலைத்து ஒரு அமைப்பாக நீடிக்க முடியும் என்பது உண்மை.பல முகங்கள், பல விதமான உடைகள், அணிகலன்கள் என்று வேடிக்கை பார்க்க நிறைய இருக்கிறது ரயிலில்.
இப்படியான பயணத்தின் முதல் நாள் இரவில் நல்ல தூக்கம். வெப்பம் தெரியவில்லை. ஆனாலும் உடைமைகளை இறுக்கிக் கொண்டு அதைப் பத்திரப் படுத்த வேண்டிய தேவை இருந்தது. வடக்கத்தியர்கள் பெரிய பெட்டிகளை பெரிய சங்கிலியால் போட்டு ரயிலோடு பிணைத்திருந்தார்கள். படுத்த நொடியில் உறங்கிப் போனார்கள். அவர்கள் கனவில் சுட்ட ரொட்டியும் சப்ஜியும் வந்திருக்குமோ என்னவோ, அவர்கள் முகங்களில் பெரிய திருப்தியும் ஆசுவாசமும் நிறைந்திருந்தது.
ரிஷிகேஷ் வரை பதிவு செய்தாயிற்று, அதற்குப் பிறகு என்ன செய்வதெனத் தெரியவில்லை. என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டே எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை. காலையில் வெளிச்சம் சன்னல் வழியாக ஊடுருவியதைப் பார்த்து வெகுநேரம் தூங்கி இருக்கிறோம் என எழுந்தால், வேறு யாருமே எழவில்லை. மணி அப்போது ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வட மாநிலம் எதோ ஒன்று பெயர் தெரியவில்லை. எல்லாம் கல் குன்றுகள், மணல் குன்றுகள். ஆங்காங்கே யூக்கலிப்டஸ் காடுகள். எங்குமே குளமோ அல்லது ஆறோ இருப்பதற்கான தடயங்களே இல்லை. அங்கேயும் காடுகளுக்கு உள்ளிருந்து ஓரிரு வண்டிகளில் எதையோ ஏற்றிக் கொண்டு சிறிய மண்பாதைகளில் வந்தபடி இருந்தார்கள். வண்டி என்றால் நம் ஊர் வண்டி போல் அல்ல.
சிறிய ரக காளைகள். திமில் பெருத்து கம்பீரமாய் நடை போடும், அநாயசமாய் சுமையை இழுத்து வரும் நம் ஊர்க்காளைகள் அல்ல அவை. நாம் கருப்பராயனுக்கு நேர்ந்து விடும் கிடாரி ஆட்டைப் போல ஒரு மூன்று மடங்கு. அவ்வளவு தான். அதுபோக எருமையால் இழுக்கப் படும் சற்றே சிறிய வண்டிகள். எங்கே அந்த சுமைகளை இறக்குவார்கள், அருகில் எங்கே சந்தை இருக்கக் கூடும் என்று தெரியவில்லை. அந்த வறண்ட காடுகளுக்குள் இருக்கும் மனிதர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.புகையிலையை மென்றபடி, வெயில் காடுகளுக்குள் அவர்களுக்கென்று ஒரு வேலையைக் கண்டு பிடித்துச் செய்து கொண்டிருப்பவர்கள் ஒருவகையில் நம் நகர வாழ்வின் அதீத சொகுசென்று நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்து சிரிக்கக் கூடும்.
எல்லா இடங்களிலும் மின்சாரக் கம்பங்கள் இருந்தது. சில இடங்களில் காணக் கிடைத்த மண் குடிசைகளிலும் அந்த விடியற்காலையில் குண்டு பல்புகள் மஞ்சளாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்கே இறங்கி நடந்து சென்றால் என் தாத்தாவுக்கும் தாத்தாவை எதோ ஒரு ஓட்டுக் குடிசையின் மண் திண்ணையில் கண்டுபிடிக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.
சாயா, காப்பி, வெஜ் பிரியாணி, பூரி, டண்டா பானி, என ரயில்வே கேண்டீன் பணியாளர்கள் சத்தம் போட்டு அனைவரையும் எழுப்பிவிட்டுக் கொண்டிருக்க,. பத்தில் நான்கு பேர், அதுதான் முதல் தடைவையாக பல் விளக்கிக் குளிப்பது போன்ற பாவனையில் துண்டு, பேஸ்ட், பிரஷ். சோப்பு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பெருமித நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர் கொண்டு வந்திருந்த ஆற்றுக்கல் வேணு சித்தர் மூலிகைப் பல்பொடியைப் போட்டு பல்விளக்கி , பிறகு முகம் கழுவி, ஒரு காப்பியைக் குடித்துவிட்டு பிறகும் நல்ல உறக்கம்.
வேறு வேறு நிலையங்களில் மக்கள் ஏறுவதும் நம்முடைய பெர்த்தில் முதலில் நுனியில், பிறகு ஓரளவு பின்னால், பிறகு சாய்ந்து, பிறகு இம்சை அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருப்பது போல ஆக்கிரமித்து நம்மை ஏதோ அவர்கள் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதைப் போல அடிக்கடி தோரணையாய் முறைத்துக் கொண்டிருந்தார்கள். நல்ல வேலையாக நமக்கு மூன்று பெர்த்துகள் இருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏறியது ஒரு குஜராத்திக் குடும்பம். அவர்கள் ஏறியதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். கனவன்மார்களுக்கு வேலை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது. பெண்கள் ஓயாமல் தட்டில் எதை எதையோ பறிமாறிக் கொண்டே இருக்க , சலசலவென்று பேசிக் கொண்டே இருந்தார்கள். இந்த உணவை அவர்கள் முடிக்கும் நேரத்தில் அடுத்த வேளை உணவு என்ன என்பதைப் பர்றிப் பேசினார்கள். கைகழுவி விட்டு வந்து புது தட்டை எடுத்து புது உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பயணம் என்பது உணவாலானது.
பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் உடைகளை இறுக்கமாக அணியலாமா, பொது இடங்களில் எப்படியான உடைகளை அணியலாம் என்றெல்லாம் இங்கே உரையாடிக் கொண்டிருக்கிறோம். பயந்தபடிக்கு தான்.
ஆனால் தெற்கே இருந்து வடக்கே போகப் போகத்தான் உடைகள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை எனத் தெரியவருகிறது. இந்தி சினிமாவில் மட்டுமல்ல, வெளியிலும் அவர்கள் அப்படித்தான் உடை உடுத்துகிறார்கள். தான் எப்படித் தெரிகிறோம் என்கிற உள்ளுணர்வு நம்மைப் போல அவர்களுக்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை. எதை இங்கே ஆபாசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அது அங்கே தினசரி வாழ்வில் உள்ளுறுத்தல் இல்லாமல் அணியக் கூடிய உடையாக இருக்கிறது. அதனால் ஆண்கள் சலனமில்லாமல் இருக்கிறார்களா என்பதெல்லாம் அவர்களுடைய பிரச்சினை. தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஏன் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்று மத்திய அரசு மாநில அரசை கேள்வி கேட்டிருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா தெரியவில்லை. நமக்கெதற்கு வம்பு.
என்னுடைய பெர்த்தில் என்னைத் தவிர எல்லோருமே சவுகரியமாக அமர்ந்திருந்தார்கள். சஞ்சலமின்றி பெண்கள் வந்து அமர்ந்தார்கள். ஒரு சமயத்தில் நான் அனைவரும் சென்ற பிறகு கால் நீட்டிப் படுத்த நேரத்தில் ஒரு பெண் தன் கைக்குழந்தையை எடுத்து வந்து காலருகே அமர்ந்து கொண்டார். சற்று நேரத்தில் அவருடைய பாதி எடையை என் கால்மீது இறக்கியும் வைத்து விட்டார். எரிச்சலுடன் எழுந்து அவரைப் பார்த்த போது, அவர் முகத்தில் தெரிந்த பாவனை சற்றே கெஞ்சுதல் போலத் தெரிந்தபடியால் பல்லைக் கடித்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தேன். நானே குடும்பஸ்த்தனாகி குடும்பமாகப் பயணம் செய்வது போல ஒரு எண்ணம் வந்ததும் அதிர்ச்சியும் அச்சமும் இன்னபிற குழப்பங்களும் சேர்ந்து கொண்டது. நல்ல வேளையாக(!) ஒரு செயின் பறிப்பு சம்பவம் எங்கள் பெட்டியில் நடந்ததால் யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்க , நம் தமிழ் ஆட்கள் தடதடவென்று அவனைப் பிடிக்க ஓட… விளக்கு வெளிச்சத்தில் இந்தப் பெண் இடம் மாறி அமர்ந்தார். ஒரு மாதிரி கொஞ்சம் ஆசுவாசமும் இடைவெளியும் கிடைத்தது.
மறுநாள் காலை பத்து மணி முதலே கடுமையாக வீசத் தொடங்கியது அனல் காற்று. நேரம் ஆக ஆக, தாள முடியாத அளவுக்கு அனல் வீசியது. எதைத் தொட்டாலும் சுட்டது. டண்டா பாணி என்று ரயில்வே பணியாளர்கள் கொண்டு வரும் குளிரூட்டப்பட்ட குடிநீர், பத்து நிமிடங்களில் குளிரை இழந்தது. தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் வெயிலின் கடுமை தாளாமல் சுணக்கத்தோடு முணங்கிக் கொண்டிருக்க, வட இந்தியர்கள், அந்த வெயிலை லாவகமாக தலையில் முக்காடு போட்டு, மூலையில் சாய்ந்து சமாளித்துக் கொண்டிருந்தார்கள். வெயிலின் கொடுமையில், ஜீன்ஸ் அணிந்த பக்கத்து கம்ப்பார்ட்மென்ட் பெண்கள் அவ்வப்போது கடந்து சென்றாலும், அடித்த வெயிலுக்கு அந்த குளுமை போதவில்லை. வெய்யில் நேரத்தில் இரண்டு நிமிட ஏ.டி.எம் குளிர் போல, வெளியில் வந்ததும் வியர்க்குமே அப்படி.
விடிந்தால் ஹரித்துவார். அதற்குப் பிறகு என்ன என்று தெரியவில்லை. ஆனால் மேல் பர்த்தில் படுத்திருந்த தெலுங்கு ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவர், என்னுடைய டி.டி.கோஸாம்பி புத்தகம் பார்த்து பேச்சுக் கொடுத்தார். பெரியார், ஆர்.எஸ்.எஸ்., மோதி, அத்வானி, காங்கிரஸ் என்று பலவற்றைப் பேசி நண்பர்களாகி இருந்தோம்.
விடிகாலையில் அரையிருட்டில் வேறெந்த ரயில் நிலையத்தைப் போலவும் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஹரித்துவாரில், முழுக்க முகத்தை மூடி, மூட்டை முடிச்சுக்களோடு அமர்ந்திருந்த பெண்களைத் தாண்டி வெளியே வந்தோம். நம் ரூர்க்கி வெங்கட், எஙளுக்கு ரிஷிகேஷ் ரயிலைப் பற்றி விசாரிக்க வந்தவர், என்னுடன் என் ஆசிரமத்துக்கு வருகிறீர்களா, நீங்கள் கிளம்ப வசதியாக இருக்கும் என்றார். அவர் கங்கையைத் தூய்மைப் படுத்தும் ஒரு திட்டத்தில் பங்கு கொண்டிருப்பவர். அவர் மீது நல்ல அபிப்பிராயம் இருந்ததால் அவருடனும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடனும் ஆட்டோவில் ஏறி ஷாந்தி கஞ்ச் என்ற ஒரு தனியார் இந்து நிறுவன மடத்துக்கு சென்றோம். வழியெங்கும் கங்கை. குறைந்த பட்ச உடைமைகளோடு மக்கள் சாரை சாரையாக அந்த நேரத்திலும் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் தூரத்து மாநில கிராமத்தவர்கள். கங்கை அவர்கள் நெடுநாளைய கனவாக இருக்கலாம். வேடிக்கை பார்த்தபடி அந்த மடத்துக்கு சென்று கொண்டிருந்தோம்.
ஆனால் அந்த மடம் சென்ற போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தொடரும்.
// எதை இங்கே ஆபாசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அது அங்கே தினசரி வாழ்வில் உள்ளுறுத்தல் இல்லாமல் அணியக் கூடிய உடையாக இருக்கிறது. அதனால் ஆண்கள் சலனமில்லாமல் இருக்கிறார்களா என்பதெல்லாம் அவர்களுடைய பிரச்சினை.
உங்கள் வீட்டில் உங்கள் அக்காவோ அல்லது தங்கையோ இப்படி உடை அணிந்தால், உடனே அவர்களை பார்த்ததும் அவர்கள் மேல் பாய்ந்து விடுவீர்களா? தெருவில் நீங்கள் சந்திக்கும் அணைத்து பெண்களையும் உங்கள் சஹோதரி போல் நினைத்தால் உங்கள் மனம் சஞ்சல படாது. உங்கள் பார்வை வக்கிரமாய் இருந்தால், பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் உங்களுக்கு அசிங்கமாகத்தான் தோன்றும்.
seems this is written in bad taste on a false propoganda.. next part will reveal who is being targeted..
nice traveling story. expecting more
taasmaac thamizh engappaa?
Generally compared to Tamilnadu, families from AP onwards have larger members and they do not worry about sharing seats though they did not reserve it. When TN had a size of 2-4 , AP,Bihar,UP had 10 members . Hence those who go north try to go through second a/c or third a/c by even borrowing money, as everyone will come and sit in the second class reserved coaches. All these facts are known to everyone travelling north.
Write about vanniyars.Nowadays you dont write about my vanniyar caste useless fellow
சவுக்கிடம் நாங்கள் ” பயண கட்டுரையை ” எல்லாம் எதிர் பார்க்க வில்லை .நியூ சவுக்கு எப்பொழுது இருந்து வந்ததோ அப்போது இருந்தே ” சூட்டை ” காணோம் .உங்கள் நிலைமை புரிந்தாலும் மீண்டும் “டாஸ் மார்க் தமிழ் ” வது தொடர வேண்டும் .
தமிழ் ,திராவிடம் என்று குண்டு சட்டிக்குள்,நாம் குதிரை ஓட்டிட்டு , தமிழ்நாடு தாண்டி போனா ,இப்டிதான் பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்தது போல இருக்கும்!வட,பிற இந்தியர்கள் நம்மைவிட,எல்லாத்திலேயும்,நல்லதோ,கேட்டதோ,வித்யாசமா தான் இருப்பாங்க!நான் முதன் முறையா டெல்லி போனப்ப தான் நம்மை எப்டி நம்ம தமிழ் உணர்வாளர்கள் ,வீனாக்கிட்டங்க என்று தெரிஞ்சது!யாதும் ஊரே~!யாவரும் கேளிர்!எழுதிய நாம்,, தமிழர் ,தமிழ் என்று எவ்ளோ வீண் ஆனோம்!உருப்படியா எதாச்சும் எழுதுங்கப்பா!-நம்பிக்கை நாகராஜ்-துபாய்
துப்பரியும் சவுக்கு where ?
Guys Wait. My guess is this article should be one criticizing Brahmins and Hindus. Do you think Savukku will publish an article good about Brahmins and hindus? If so then it is “Good Days are coming”
கொய்யால. செட்டை. நாங்க என்ன சீரியலா பாக்குறோம் .தொடருமாம்ல.
Day by day savukku is becoming a comedy site.
சவுக்கு என்ன பக்தி மார்க்க கட்டுரை வெளியிடுகிறது. துப்பரியும் சாம்புவாய் வலம் வந்த சவுக்கின் சவுக்கை யார் பிடிங்கியது.? அந்த பி. டி கத்திரிக்காய்யை நடுரோட்டில் போட்டு நசுக்குங்கள். எப்படி இருந்த சவுக்கு, பிறரின் இப்படி, அப்படி கட்டுரைகளை எழுதிக்கொண்டிருகிறது. சவுக்கின் இணைய டிஆர்பி ரேட் குறையுது…
பார்த்துங்க அம்புடுதான், சொல்லிபுட்டேன்…
அருமை…ஆவலாக உள்ளேன்
Great experience….
வெகு காலம் முன்பு நான் டெல்லிக்கு முதல் முதலாக பயணம் செய்த அதை உணர்வுகளை நீங்கள் எழுதியது தந்தது. இது கிட்ட தட்ட இதே கலவையான சம்பவங்கள்தான் . ஆச்சரியமான ஒற்றுமைகள். ஒருவேளை எல்லா வட இந்திய பயணமும் இப்படித்தான் இருக்கும் போல. மேல படிக்க ஆவலாக உள்ளேன்.