மே 26 அன்று வழக்கம் போலவே 18 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை நீதிபதிகளான பி.எஸ்.சவுகான் மற்றும், ஏ.கே.சிக்ரி ஆகியோர் ஜெயலலிதா மீதான வழக்கை ஜுன் 6 வரை தடை செய்து தீர்ப்பு வழங்கினர். இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணம் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை நீதிமன்றத்தோடு இணைக்க (attachment) வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த சொத்துக்கள் தொடர்பான மனுக்கள் விசாரித்து முடிக்கப்படும் வரை, சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கை பல்வேறு வழிகளில் இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதாவின் அனைத்து முயற்சிகளையும் மீறி, இன்று வகை தொகை தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு, ஜெயலலிதாவின் வழக்கை அரசுத் தரப்பில் நடத்த சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா. அவர் தொடர்ந்து நியாயமாக செயல்பட்டு வந்த காரணத்தால், அவரை எப்படியாவது அந்த பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
பி.வி.ஆச்சார்யாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. எந்த மிரட்டல்களுக்கும் அவர் மசியாத காரணத்தால், கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து கொண்டே, சிறப்பு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராகவும் இருக்கக் கூடாது என்று பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. கர்நாடக மாநில ஆளுனரிடமும் மனு அளிக்கப்பட்டது.
ஆச்சார்யா தலைவராக இருக்கும் பிஎம்எஸ் என்ற கல்வி அறக்கட்டளையில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, கர்நாடக லோக் ஆயுக்தாவில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னாளில் அந்த வழக்கை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், வழக்கு தொடுத்தவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
இவருக்கு பின்னால் யாரை வழக்கறிஞராக நியமிக்கலாம் என்று விவாதங்கள் நடைபெற்றபோதுதான், பவானி சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. பவானி சிங், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இல்லாமலேயே நியமிக்கப்படுகிறார். கர்நாடகத்தில் அப்போது இருந்த பிஜேபி அரசு, இந்த நியமனங்களுக்கெல்லாம் ஜெயலலிதாவுக்கு எத்தனை உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனை உதவிகளையும் செய்தது.
பெங்களுரு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்ட போது இவர் நமக்கு இணக்கமான நீதிபதி என்பதை உணர்ந்த ஜெயலலிதா எப்படியாவது, சிறப்பு நீதிபதியாக பாலகிருஷ்ணாவையும், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கையும் நீடிக்கச் செய்தால், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படலாம் என்று முயற்சி செய்தார். அந்த முயற்சிகளின் பகுதியாகத்தான், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு குற்றவாளியாக, என் மீதான வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞராக இவர்தான் வேண்டும் என்றும், என் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக இவர்தான் வேண்டும் என்ற வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஓய்வு பெற்ற நிலையிலும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கி இந்த வழக்கை அவர்தான் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, அவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறியதால், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.
மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்ட நாள் முதலாகவே, அவரை எப்படி அணுகி சரி செய்வது என்று ஜெயலலிதா தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. கர்நாடகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்ட நீதிபதிகள் அதிமுக சார்பில் அணுகப்பட்டனர். மைக்கேல் டி குன்ஹா எங்கே படித்தார், அவரோடு நீதிபதியாக பயிற்சி எடுத்தவர்கள் யார், அவருடைய நண்பர்கள் யார், எந்த சர்ச்சில் வழிபாடு செய்கிறார், அவர் குடும்ப உறுப்பினர்கள் யார், அவரது பலவீனம் என்ன, யார் மூலமாக அணுகுவது என்று. ஆனால், எந்த விதத்திலும் மைக்கேல் குன்ஹாவை அணுக முடியாது என்பதை தாமதமாகவே உணர்ந்து கொண்டனர்.
அதற்குப் பிறகுதான் வேறு வழியின்றி, உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை தாமதப்படுத்தும் வேலையில் இறங்கினர். இதனிடையே, தங்களுடைய பேட்டையான தமிழகத்தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தையும் பயன்படுத்தினர். வழக்கில் உள்ள சொத்துக்கள் தொடர்பாக பெங்களுருக்கு வழக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கை, தற்போது விசாரணைக்கு எடுத்து வந்து, சாதகமான நீதிபதியாக அறியப்படும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் மூலமாக இணைப்பு ஒரு வசதியான தீர்ப்பைப் பெற்று, இதைப் பயன்படுத்தி பெங்களுரு வழக்க தாமதப்படுத்தலாம் என்று முயன்றனர். தொடர்புடைய கட்டுரை ஆனால், துரதிருஷ்டவசமாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பெங்களுரு சிறப்பு நீதிமன்றமோ, கர்நாடக உயர்நீதிமன்றமோ, கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, பெங்களுரு சிறப்பு நீதிமன்றமும், கர்நாடக உயர்நீதிமன்றமும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. “வழக்கை தாமதப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இது போன்ற மனுக்களுக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காத நிலையில், குற்றவாளிகளோடு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கைகோர்த்துக் கொண்டு உள்ளது. இப்படி இருந்தால் சட்டத்தை எப்படி பாதுகாப்பது ?” இணைப்பு என்று கடும் கண்டனங்களை பதிவு செய்தது.
பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்திலோ, வழக்கு இறுதி வாதம் என்ற நிலையை எட்டியிருந்ததால், மேற்கொண்டு தாமதம் செய்ய முடியவில்லை. இந்த சூழலில்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை இணைப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, வழக்கு விசாரணையை தாமதப்படுத்தலாம் என்று நினைத்தார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பினாமிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களை இணைக்க லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனு தவறானது, தங்கள் நிறுவனங்களின் சொத்துக்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்து உத்தரவு வழங்காமலேயே, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கிறார். அந்த நிறுவனங்களின் மனுக்கள், இந்த வழக்கின் போக்கையை மாற்றக் கூடியன. ஆகையால், இந்த நிறுவனங்களின் மனுக்களை விசாரித்து முடித்த பிறகே, சொத்துக் குவிபபு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில்தான், பிஎஸ்.சவுகான் மற்றும் ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு மே 26 அன்று, ஜூன் 6 வரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இத்தடை உத்தரவு ஜுன் 16 வரை நீட்டிக்கப்பட்டது.
அதன் பிறகு, சவுகான் தலைமையிலான அமர்வு மாறி, நீதிபதி கள் விக்ரம்ஜித் சென் மற்றும் சிவ கீர்த்தி சிங் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் கெட்ட நேரமா என்று தெரியவில்லை. நீதிபதி விக்ரம்ஜித் சென், இதற்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் கர்நாடக தலைமை நீதிபதியாக இருந்தபோதுதான், அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்ததும், அரசு வழக்கறிஞர் இல்லாமல் வழக்கு தேங்கி நின்றதும். ஜெயலலிதாவின் தில்லாலங்கடி வேலைகள் அத்தனையும் விக்ரம்ஜித் சென்னுக்கு அத்துப்படி. ஆனாலும் அவர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் “நான் இந்த வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா ?” என்று கேட்டதும், ஆட்சேபணை இல்லை என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து விசாரணை தொடங்கியபோதுதான், ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அமரேந்திர சரண், ஜெயலலிதா தற்போது தொடுத்துள்ள வழக்கு காலாவதியாகி விட்டது, இவர்கள் குறிப்பிடும் நிறுவனங்களின் சொத்துக்களை, இணைக்க வேண்டி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன என்று தெரிவிக்கிறார்.
ஜெயலலிதா தரப்புக்கோ அதிர்ச்சியோ அதிர்ச்சி. முழுகும் நிலையில் இருக்கும் நபருக்கு கிடைத்த மரத்துண்டாக நினைத்துக் கொண்டிருந்த கடைசி அஸ்திரமும் காலாவதியாகிப் போன அதிர்ச்சி.
ஜெயலலிதா தமிழக முதல்வர். அவருக்கு கீழேதான் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு காரியத்தை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் அடிமைகளுக்கு எப்படி துணிச்சல் வரும் ? இது சாத்தியமா என்று மிகுந்து வியப்பாக இருந்து. என்ன நடந்தது என்று விசாரித்தால்தான், சுவையான செய்திகள் வெளிவந்தன.
அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்தவுடன், அவர் இடத்துக்கு ஜெயலலிதாவின் தேர்வான பவானி சிங் நியமிக்கப்பட்டார். பவானி சிங் நியமிக்கப்பட்டபோது, அவர் விதித்த நிபந்தனை, “நான் மெயின் வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும்தான் ஆஜராவேன். அது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் சில்லரை வழக்குகளில் நான் ஆஜராக மாட்டேன்” என்று அப்பாடக்கர் போல கூறினார். அந்த நேரத்தில் இது பெரிய விவகாரமாக யாருக்கும் தோன்றவில்லை. அதனாலென்ன… ? பரவாயில்லை என்று கூறி விட்டார்கள்.
சரி. பவானி சிங் ஆஜராக மாட்டேன் என்று கூறி விட்டால், இவ்வாறு தாக்கல் செய்யப்படும் இதர மனுக்களுக்கு யார் ஆஜராவது ? ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த பி.வி.ஆச்சார்யாவின் ஜுனியர் வழக்கறிஞர், இந்த மனுக்கள் சார்பாக ஆஜராவது என்று முடிவானது.
மே 26 அன்று சவுகான் மற்றும் சிக்ரி தலைமையிலான அமர்வு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை விதித்த அன்றே, ஆச்சார்யாவின் இளைய வழக்கறிஞர், பெங்களுரு சிறப்பு நீதிபதியிடம் சொத்துக்களை இணைப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே, ஜெயலலிதா தரப்பின் மீது கடுமையான கோபத்தில் இருந்த மைக்கேல் குன்ஹா, உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.
எப்படியாவது அம்மாவைக் காப்பாற்றலாம் என்று தலைகீழாக நின்றாலும், லஞ்ச ஒழிப்புத் துறையால், ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு வழியே இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில், குற்றவாளி (மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்) வழக்கை தாமதப்படுத்துவதற்காக இப்படியொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இருக்கிறது. ஆகையால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைபாட்டை நான் வழிமொழிகிறேன் என்று திமுக சார்பில் ஆஜரான சண்முக சுந்தரமும் சொன்னார். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் ரத்து செய்தது.
செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பு வழங்கியதும், மறுநாளே, புதன்கிழமை அன்றே மேலும் ஐந்து நிறுவனங்கள் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்டீஸ், மீடோ அக்ரோ, ராம்ராஜ், மற்றும் சைனோரா ஆகிய ஐந்து நிறுவனங்கள், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு மனுவை தாக்கல் செய்தன.
உச்சநீதிமன்றத்திலும் தடை இல்லை. இந்த நிறுவனங்கள் எதற்காக மனு தாக்கல் செய்துள்ளன என்பது நீதிபதி மைக்கேல் குன்ஹாவுக்கு தெரியாதா என்ன ? நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த காரணத்துக்காக ஐந்து நிறுவனங்களுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி. அந்த நிறுவனங்களின் சார்பாக ஆஜரான ஒரு மனுதாரரைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். 1995 முதல் 2014 வரை வராமல், திடீரென்று இப்போதுதான் உங்களுக்கு உங்கள் கம்பெனி தொடர்பாக ஞாபகம் வந்துள்ளதா என்று கேட்டார் ? அந்த நபர் திரு திருவென்று விழித்தார். “இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை ?” என்று கேட்டார். எனக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை என்றார் அந்த நபர். (20 வருசமாவா ?) மருத்துவ சான்றிதழ் எங்கே என்று கேட்டார் நீதிபதி. உடனே அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இடைமறித்து, அவர் சித்த மருந்து உட்கொண்டு, மஞ்சள் காமாலையை சரி செய்தார் என்றதும் நீதிபதி அதற்கு மேல் பேசவில்லை.
இந்த நிறுவனங்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், அபராதம் விதித்த தீர்ப்பின் நகல்களை வழங்குங்கள் என்று கேட்டனர். நீதிபதி அபராதம் செலுத்தி விட்டு தீர்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார். இந்த அபராதத்தை எதிர்த்துத்தான் உயர்நீதிமன்றம் செல்லப்போகிறோம் என்று கூறியதற்கும் மைக்கேல் குன்ஹா அசரவில்லை. அபராதத்தை கட்டினால் தீர்ப்பின் நகல் என்று கூறி விட்டார். மனு தாக்கல் செய்த வழக்கறிஞர்களின் கதியைப் பார்த்ததும், ஜெயலலிதாவின் தரப்பு ஆடிப்போய் இருந்தது.
நாளை முதல் நீங்கள் உங்கள் தரப்பு வாதங்களை தொடங்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரைப் பார்த்துக் கேட்டதும், இனி முரண்டு பிடித்தால் சிக்கல் என்பதை உணர்ந்த பி.குமார், வாதங்களை தொடங்கினார்.
இனி உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ, கர்நாடக நீதிமன்றத்தின் வாஸ்து சரியில்லை, நீதிபதியின் குரல் சரியில்லை, அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி சரியில்லை என்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் தடை பெறுவது நடவாத காரியம். இன்னும் வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஜெயலலிதா சார்பாக எத்தனை நாட்களுக்கு வாதாட முடியும் ? அதிகபட்சமாக இருபது நாட்கள் வாதிடலாம். மேலும், இந்த சிறப்பு நீதிமன்றத்தில் வேறு வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை, ஒரு வழக்கறிஞர் என்னதான் பேச முடியும் ? ஆனாலும் பி.குமார் சளைக்காமல், பல்வேறு தீர்ப்பு நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு, நீதிபதி நொந்து போகும் அளவுக்கு அந்த தீர்ப்புகளை அவருக்கு படித்துக் காட்டுகிறார் என்கிறார்கள். பொறுமை இழக்கும் நீதிபதி, ஒரு கட்டத்தில், நீங்கள் உங்கள் வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு அடுத்து மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோருக்கு, நெடுநாட்கள் வாதாட சலுகைகளை நீதிபதி அளிப்பாரா என்று தெரியவில்லை.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரே, கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வழக்குகளை கவனிக்கும் அனைத்து வழக்கறிஞர்களும், இப்படிப்பட்ட மன உளைச்சல்களுக்குத்தான் ஆளாகிறார்கள். இந்த வழக்கு விசாரணை பெங்களுரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, வாசலில் செல்போன்களோடு 10 பேர் இருப்பார்கள். வழக்கில் இடைவெளி ஏற்படுகையில், அவர்கள் பி.குமாரை போனில் பேசச் சொல்கிறார்கள். அந்த தொலைபேசியை பேசிவிட்டுத் திரும்ப வரும் பி.குமாரின் முகத்தில் சவக்களை தென்படுவதாக சொல்கிறார்கள். நீதிமன்றம் என்றால் என்ன, அங்கே விசாரணை எப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ளாத ஜெயலலிதா, வழக்கறிஞர்களை காய்ச்சி எடுப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கை பொறுமையாகவும், நிதானமாகவும் கையாண்டிருந்தால், ஜெயலலிதாவிடம் இருக்கும் பணம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதும், லஞ்ச ஒழிப்புத் துறையின் காவல் துணைக் கண்காணிப்பாளரும், இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரியுமான ஜி.சம்பந்தத்தை வைத்து வழக்கின் சிறப்பு நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அந்தக் கடிதத்தில் சம்பந்தம், இந்த வழக்கு சரியாக புலனாய்வு செய்யப்படவில்லை என்றும், கூடுதல் விசாரணை செய்யப் போகிறேன் என்றும் ஒரு கடிதம் எழுதுகிறார். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கூடுதல் புலயாய்வு செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை சம்பந்தம் கேட்கவில்லை. நான் கூடுதல் புலனாய்வு செய்யப் போகிறேன் என்று நீதிமன்றத்துக்கு தகவல் மட்டுமே தெரிவித்துள்ளார்.
அப்போது அரசு வழக்கறிஞராக இருந்த பி.வி.ஆச்சார்யா, நான் அரசு வழக்கறிஞராக இருக்கையில் இப்படி ஒரு கடிதம் எனக்குத் தெரியாமலேயே நீதிமன்றத்துக்கு நேரடியாக எழுதப்பட்டுள்ளது என்று கூறியதும், நீதிபதி எரிச்சலடைந்து புலனாய்வு அதிகாரி சம்பந்தத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். யார் உத்தரவில் இப்படியொரு கடிதத்தை அனுப்பினீர்கள் ? எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் நீதிபதிக்கு நேரடியாக இப்படியொரு கடிதத்தை அனுப்பினீர்கள் என்று கேட்டதும், சம்பந்தம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இந்த வழக்கில் சரிவர புலனாய்வு நடைபெறவில்லை என்றும், கூடுதல் புலனாய்வு நடத்த வேண்டும் என்று தனக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே இப்படியொரு புலனாய்வை தான் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஆச்சார்யா, லஞ்ச ஒழிப்புத் துறை குற்றவாளியை காப்பாற்றுவதற்காக இப்படியொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தத்தை கண்டித்த நீதிபதி, அவரது கடிதத்தை தள்ளுபடி செய்தார்.
ஜெயலலிதா தரப்பு கொடுத்த மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களை தாங்க முடியாமல் பி.வி.ஆச்சார்யா ஆகஸ்ட் 2012ல் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் இது போல ராஜினாமா செய்யும் வரை காத்திருந்து, பவானி சிங் போன்ற அடிமை நியமிக்கப்பட்ட பிறகு, கூடுதல் புலனாய்வுக்கு அவர் மூலமாகவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தால், சிறப்பு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்திருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு எல்லா உதவிகளையும் செய்திருப்பார். கருணாநிதி அரசு, ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இணைப்பு ஜெயலலிதா லண்டனில் ஹோட்டல் வாங்கியது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்திருக்குமேயானால், சதாசிவம், இப்படியொரு வழக்கில் கூடுதல் புலனாய்வு நடத்தினால் மட்டுமே உண்மைகள் வெளிவரும், ஆகையால் உடனடியாக கூடுதல் புலனாய்வு நடத்த வேண்டும் என்று ஒரு தீர்ப்பை அளித்திருப்பார். லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்த 17 ஆண்டுகளுக்கு இந்த வழக்கின் புலனாய்வை தொடர்ந்திருக்க முடியும்.
ஆனால், வண்டு முருகன் போன்ற அறிவு ஜீவிகளின் அறிவுரையின்படி, அவசரக்குடுக்கைத்தனமாகவும், நான்தான் தமிழக முதல்வராயிற்றே…. உலகமே எனது காலுக்குக் கீழே என்ற அகந்தையின் காரணமாகவும், இன்று முட்டுச் சந்தில் வந்து நிற்கிறார் ஜெயலலிதா.
எந்தக் காரணத்தையும் சொல்லி இவ்வழக்குக்கு தடை பெற முடியாத ஒரு சூழல். வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இனி இந்த வழக்கிலிருந்து எப்படி விடுபடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார் ஜெயலலிதா.
அரசு மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் ஒரு மயான அமைதி நிலவுகிறது. இந்த வழக்கைப் பற்றி விவாதிக்க யாரும் தயாராக இல்லை. அடுத்து என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிமுக அடிமைகள் ஜெயலலிதா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என்று உறுதியாக நம்புகிறார்கள். “அம்மா அப்படியெல்லாம் விட்ற மாட்டாங்க சார். எப்படியும் அந்த மைக்கேல் ஜட்ஜை சரி கட்டிடுவார் பாருங்க” என்கிறார் ஒரு அடிமை. இன்னொரு அடிமை, “சாரி… திடீர்னு ஒரு நாள் ஃபயர் ஆக்சிடென்ட் ஆகி எல்லா ரெக்கார்டும் எரிஞ்சு போகும் சார். ரெக்கார்டே இல்லாம எப்படி சார் தீர்ப்பு குடுப்பாங்க” என்கிறார். ஜுனியர் விகடன், நக்கீரன் போன்ற இதழ்களின் அட்டைப்படக் கட்டுரைகள், ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு என்று வெளியிடும் செய்திகளைப் பார்த்து உள்ளுக்குள் பீதியடைந்தாலும், “அம்மா லாஸ்ட் மினிட்ல ஏதாவது பண்ணுவாங்க பாருங்க சார்” என்கிறார்கள்.
ஒரு வேளை இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தால், அவர் தனது எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும். சிறை செல்ல வேண்டி வரும். அதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. சென்ற முறை செய்தது போல, ஓ.பன்னீர் செல்வம் என்ற அடிமையை முதல்வராக்கி வைத்து விட்டு நிழல் ஆட்சி நடத்த முடியாது. இப்போது காலில் விழும் அடிமைகள், ஜெயலலிதா சிறை சென்றால், இதே விசுவாசத்தோடு இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. ஜெயலலிதா தொடுத்த நில அபகரிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலாவின் கணவர் நடராஜன், வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.
பிஜேபி மற்றும் சங் பரிவார்களில் உள்ள பார்ப்பன சக்திகளின் ஆட்டம் மோடியிடம் செல்லுபடியாகவில்லை என்றே கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள். இதன் காரணமாக, சோ ராமசாமியோ, குருமூர்த்தியோ, ஜெயலலிதாவுக்கு இந்த வழக்கில் தலையிட்டு உதவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
மேலும் மோடி எதற்காக ஜெயலலிதாவுக்கு உதவ வேண்டும் ? நாடெங்கும் மோடி அலை அடித்த நிலையில், எல்லா அலைகளையும் புறந்தள்ளி, 37 தொகுதிகளில் வென்ற ஒரு வலுவான கட்சியையும், தலைமையையும் அழிப்பதல்லவா மோடியின் நோக்கமாக இருக்கும் ? மோடி எப்படி ஜெயலலிதாவை காப்பாற்றுவார் ?
சரி. காங்கிரஸ் கட்சி காப்பாற்றுமா ? 2002ம் ஆண்டில், தேர்தல்கள் எதுவும் இல்லாதபோது, யாரோ சொன்ன அறிவுரையைக் கேட்டு, ஜெயலலிதா, சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று நாடு முழுக்க பிரச்சாரம் செய்வேன் என்றும், சொனியாவை மேலும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்ததையும் சோனியா இன்று வரை மறக்கவில்லை. அந்த காரணத்தால்தான், அகமது படேல் பதவியில் இருந்த கடைசி நாள் வரை, சொத்துக் குவிப்பு வழக்கை உற்று கவனித்து வந்தார். அகமது படேலின் தலையீடு இருந்த காரணத்தால்தான், முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தால், ஒரு கட்டத்துக்கு மேல் ஜெயலலிதாவுக்கு உதவ முடியவில்லை.
இன்றைய நிலையில் ஜெயலலிதா மீதான சுருக்கு இறுகித்தான் வருகிறது. அதிகபட்சம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்குள், ஜெயலலிதாவின் எதிர்காலம், அவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவிலேயே முடிவு செய்யப்படும்.
ஜெயலலிதா செய்து வரும், யாகங்களும், பூஜைகளும், பரிகாரங்களும் அவரை காப்பாற்றுமா என்பற்கு காலம்தான் விடை சொல்லும்.
ஊர்க்குருவி and savukku are same? both are desperate to see that jaya escapes from this case. dont worry guys. as long as media supports jaya like the way it does now nothing will happen to madam.
/இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களையெல்லாம் செய்து ஜெயலலிதா தப்பிக்க வில்லையே என்ற சவுக்கின் ஆதங்கம் வியப்பாக இருக்கிறது./ WELL SAID. we all know where savukku’s allegiance is. hehehe.
ஏங்க இப்படி விபரம் தெரியாத கொழந்த மாதிரி எழுதறீங்க ? நம்மூருல எந்த பெரிய அரசியல்வாதி ஊழல் குற்றத்துக்காக ஜெயிலுக்குப்போயிருக்காரு ? அம்மாவாவது ஜெயிலுக்குப்போறதாவது ! கண்ண தொறந்து வச்சிக்கிட்டே கனவு காணுவீங்க போல ?
எங்கே ஜெ வுக்கு சிரை தண்டனை கிடைக்குமோ என்ற கவலை தெரிகிறது
சபாஷ் ஜட்ஜ் மைக்கேல் ஜி ….
ஆனால், வண்டு முருகன் போன்ற அறிவு ஜீவிகளின் அறிவுரையின்படி, அவசரக்குடுக்கைத்தனமாகவும், நான்தான் தமிழக முதல்வராயிற்றே…. உலகமே எனது காலுக்குக் கீழே என்ற அகந்தையின் காரணமாகவும், இன்று முட்டுச் சந்தில் வந்து நிற்கிறார் ஜெயலலிதா………………………..பேசாம முத்தமிழ் வித்தவரிடம் Idea கேட்டிருக்கலாம்.
நீங்க சொன்ன தவறை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் ஜெ சரி செய்துவிடுவார், அவருக்கு கிடைக்கும் தண்டனை அவருக்கு ஒரு அனுதாபத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்தும். தமிழக மக்கள் இன்னும் வளரணும்.
ஏழைகளுக்கு நீதி காலம் கடந்தும் கிடைக்காது!ஜெயா,கருணா ,சோனியா,காவி கோஷ்டிகளுக்கு ,எவ்வளவு காலம் ஆனாலும் தண்டனை கிடைக்காது!சவுக்கு போன்ற கொஞ்சம் நல்லவர்களை C .T .செல்வம் ,காவல்துறை எல்லாம் புரட்டி புரட்டி நீதி, கவனிப்பு எல்லாம் கொடுக்கும் !இதுதான் இந்தியா!-நம்பிக்கை நாகராஜ் ,துபாய்.
Worst Govt in TN history was JJ Govt in 1991-96.
இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களையெல்லாம் செய்து ஜெயலலிதா தப்பிக்க வில்லையே என்ற சவுக்கின் ஆதங்கம் வியப்பாக இருக்கிறது.
தப்பு செய்தது யாராக இருப்பினும் கருணா நிதியோ, கனிமொழியோ, ராசாவோ, ஸ்டாலினோ, செல்வகணபதியோ, ஜெயலலிதாவோ, செல்வகணபதியோ, சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ, ராபார்ட்வதேராவோ, கட்காரியோ, எடியூரப்பாவோ, மோடியோ யாராகினும் நீதி மன்றத்தால் தண்டிக்கப் படவேண்டும் என்று எண்ணுவதும் எழுதுவதுமே நல்லவர் செயல்.
பனையும் காகமும்
————————————-
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்
ஒரு உற்சாகமான பிரளயத்தின்போது
பித்தம் தலைக்கேற சித்தம் மயங்கி
வளர்ப்பு பிராணி பப்பியின்
பிறந்தநாள் விளம்பர பதாகையை
பந்தாவாக ஏற்றி வைக்க
அடிப் பனைமரத்தில் அடடித்த ஆணி
கபாலம் வரை கறள் ஏறி
மரத்தையே விழுத்திவிடும் என்று
பல்லிகூட ஜோசியம் சொல்லவில்லை.
.
புளியமர இடுக்குக்குள் ஒளிந்திருந்து
வடை தின்று நரியை ஏமாற்றிய
அண்டங் காகம்
ஒரு நூற்றாண்டை அண்மித்து
பறக்கும் திறன் இழந்து
கண் பஞ்சடைந்தபோதும்
தன் குல குஞ்சுகளுக்காக
உடைந்த சிறகை சிலுப்பி
அடி வானத்தின் விடிவெள்ளியை நோக்கி
பறக்க தயாராவதாக விடுப்பு காட்டுகிறது.
.
பனைமரம் வீழ்ந்துவிட்டால்
புளியமரம் மவுசு ஏறிவிடும் என்பது
அண்டங்காகத்தின் அபார நம்பிக்கை,
கரியமில வாயுவின் அடர்த்தியால்
புளியமரத்தின்கீழ் புல் பூண்டு முளைப்பதில்லை
காகங்கள் மட்டும் கம்பீரமாக
கிளைகள் அனைத்திலும் கூடுகள் அமைத்துவிட்டன
பனைமரம் நிழல் கொடுக்காததால்
அங்கேயும் புற்கள் இல்லை
பனையில் கூடுகட்ட குருவிகளால் முடியவில்லை.
நரிகூட காகத்துக்கு பயந்து
வனாந்திரத்தை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டது.
அண்டங்காகம் தன் பரிவாரங்களுடன்
பனை மரத்தின் வீட்சியை மட்டுமே
கூர்ந்து கும்மிருட்டிலும் நாசாரமாக கரகரக்கிறது.
.
ஊர்க்குருவி.
அடிமை,ஜட்ஜுகள் பணத்திக்கு ஆசைபடும் ஜட்ஜுகள்,இதுகூட உதவமாட்டார்களா என்ன .கருணாநிதி இந்திரா அம்மையாரை சரணாகதி அடைந்தது போல ‘இதுவும்'(அம்மா)மோடியேகதி என்று சரணடைந்தாலோ,பாண்டிசேரி ஜட்ஜு போல பணபேரம் பேசியோ..காரியத்தை முடித்துக்கொள்ள மாட்டார் என்றா நினிக்கிரீர்கள்.நமது”ஜட்சுகளைப்பற்றி நமக்குதேரியாததா .
நீதிமன்ற போக்கின் பிரகாரம் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு பாதகமாக அமையும் என்ற நிலைப்பாட்டை அனைத்து ஊடகங்களும் மறைமுகமாகவேனும் செய்தியாக வெளியிடுவதால் கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற மனநிலைக்குத்தான் யாரும் வரமுடியும், கட்டுமரம் கருணாவும் இரவிரவாக கண் முழித்து அதே கருத்தையோற்றி தொடர் கட்டுரைகள் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்ததையும் கவனத்தில் கொள்ளமுடியும்.
ஆனால் ஜெயலலிதா தண்டனை பெற்று அதிகாரங்கள் பறிக்கப்படுவாராயின், ஒரு குற்றவாளி நீதி நியாயப்படி தண்டனை பெற்றவராகிவிட்டாலும் இன்னுமொரு நரகாசுரனையொத்த சமூகவிரோதி அந்த இடத்தை அபகரிக்க காத்திருக்கிறான் என்ற பயம் நடுங்க வைக்கிறது,
ஜெயலலிதா மட்டுமல்ல ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சியம் தண்டனை பெறவேண்டியவர்களே,
அதிமுக வில் அடுத்தகட்ட தலைவர் என்று எவரும் இல்லை, அந்த வெற்றிடம் பெரு முதலை காண்டாமிருகம் நரகாசுரன் கருணாநிதிக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் பலரைப்போன்று என்னுள்ளும் எழுந்திருக்கிறது.
தவிர இந்த தீர்ப்பாவது இன்னொரு திருட்டு அரசியல்வியாதி உருவாவதை தடுத்ததாக அமையட்டும்.
எது எப்படியிருந்தாலும் கீழ்க்காணும் உரையாடல் நல்ல நகைச்சுவை.
//எனக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை என்றார் அந்த நபர். (20 வருசமாவா ?) மருத்துவ சான்றிதழ் எங்கே என்று கேட்டார் நீதிபதி. உடனே அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இடைமறித்து, அவர் சித்த மருந்து உட்கொண்டு, மஞ்சள் காமாலையை சரி செய்தார் என்றதும் நீதிபதி அதற்கு மேல் பேசவில்லை.//
போச்சே போச்சே….
Amma Court aarambichirukalamo…!!!
Amma unavagam, amma thanneer, amma pharmacy, ivalavu senju kadaisiyal la “ammavku theerpu” la kottai vittutanungale paya pullainga…
வெட்கக்கேடு, இந்த கட்டுரை நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை விட, ஜெயலலிதா தெரியாமல் மாட்டிக் கொண்டாரே என்று அவருக்காக வருத்தப்டும் தொனியில் தான் உள்ளது. இந்த நாட்டில் நீதி செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே சவுக்கு அவர்களே வருத்தம் வேண்டாம் இதிலும் ஜெயலலிதா தப்பிப்பார்.
thrilling. ivvalavu thrilling naan padikka villai ithuvarai