நீண்ட தாமதத்திற்குப் பிறகு, மறுக்கப் படாமல் நீதி கிடைத்திருக்கிறது. ராமன் வனவாசம் சென்ற 14 ஆண்டுகள் போல 14 ஆண்டுகள் கழித்து அந்த நீதி கிடைத்திருக்கிறது.
கிடைத்த இந்த நீதி, சாதாரணமானது அல்ல, மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக ஏழை மக்களின் வாழ்வில் விளக்கேற்றவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் கிடைத்திருக்கக் கூடிய நீதி.
ஆம் தோழர்களே, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின், துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி ஆலையை மூட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தை வந்தடைந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.
முதலில், குஜராத் மாநிலத்தில் இந்த நிறுவனம் ஆலையை தொடங்க விண்ணப்பிக்கிறது. அங்கே பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, கோவா வுக்கு செல்கிறது. அங்கேயும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினார்கள். அடுத்து மகாராஷ்ட்ரா செல்கிறது. அங்கே ஆலை தொடங்க அனுமதி வழங்கப் பட்டு, ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் தொடர்ந்த போராட்டங்களினால், ஆலை தொடங்க வழங்கப் பட்ட அனுமதி ரத்து செய்யப் படுகிறது.
எந்த ஊரில் இளிச்ச வாயன்கள் நிறைய இருக்கிறார்கள் என்று பார்த்த வேதாந்தா நிறுவனம், தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்கிறது. 1991-96 காலகட்டத்தில் ஆணவத்தின் உச்சியில் இருந்த செல்வி.ஜெயலலிதா, அவரே நேரடியாக தூத்துக்குடி சென்று, இந்த ஆலை தொடங்க அடிக்கல் நாட்டுகிறார். அந்தக் காலகட்டத்தில் தான், யார் எதிர்ப்பு தெரிவித்தாலும், தடா என்ற கொடிய சட்டம் பாயுமே. வீட்டுக்கு ஆட்டோ வருமே … பொது மக்களின் எதிர்ப்பு கடுமையான போராட்டங்களால் அடக்கப் பட்டது.
ஆலை கட்ட அனுமதி வழங்கப் பட்ட 4 மாதங்களிலேயே, ஆண்டுக்கு 1,40,000 டன் காப்பர் தயாரிக்க அனுமதி வழங்குகிறது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம். அனுமதி வழங்கும் போது, சுற்றுச் சுழல் பாதுகாக்கப் பட்ட பகுதிகள் அமைந்திருக்கும் 25 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு அப்பால் அந்த ஆலை அமைய வேண்டும் என்ற கட்டுப் பாடு விதிக்கப் படுகிறது.
ஆனால் ஸ்டெர்லைட் 16 கிலோமீட்டர்களுக்குள்ளாகவே ஆலையையும் உற்பத்தியையும் தொடங்குகிறது. இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப் பாட்டு வாரியம், இந்நிறுவனத்திற்கு மேலும் மற்றொரு வகையான Blister Copper என்பதை ஆண்டுக்கு 40,000 டன்கள் தயாரிக்க அனுமதி வழங்கியது.
இந்தச் சூழலில் தான், 1996ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, சுற்றுச் சூழலுக்கான மையம் ஒரு வழக்கை தொடர்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வழக்குகள், ஸ்டெர்லைட்டின் தூத்துக்குடி ஆலைக்கு வழங்கப் பட்ட அனுமதியை எதிர்த்து தொடரப்படுகின்றன.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, 1997 ஜுலை மாதத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருந்த ரமேஷ் பிளவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியான சல்பர் டையாக்சைட் என்ற வாயுவை சுவாசித்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகின்றனர். இந்தத் தகவலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுகிறது.
இந்தச் சூழலில், ஸ்டெர்லைட் நிறுவனம், ஒரு தந்திரமான காரியத்தைச் செய்கிறது. சசிகுமார் என்ற ஒருவரை, இந்த வழக்கில் தொழிலாளர்கள் சார்பாக உள்ளே நுழைக்கிறது. அந்த சசிக்குமார், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் வேலை பெற்ற தொழிலாளர்கள் சார்பாக வருகிறார். அவர் நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் ஒரு சிறந்த தொழிற்சாலை என்றும், நிறைய பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது என்றும், சுற்றுச் சூழலை நன்கு பாதுகாக்கிறது என்றும் சமர்ப்பிக்கிறார்.
1998ம் ஆண்டு, National Environmental Engineering Research Institute தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் என்ற நிறுவனத்தை, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது. அந்த மத்திய அரசு நிறுவனம், இத்தொழிற்சாலைக்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கியது தவறு என்று அறிக்கை சமர்ப்பிக்கிறது.
ஒரு பன்னாட்டு நிறுவனம், எப்படி அரசுகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்க முடியும் என்பதற்கு சான்று, நீதிமன்றத்தில், மத்திய அரசு நிறுவனம் அளித்த அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகிய மூன்றும் ஒன்று கூடி எதிர்த்தது தான். ஆனால், இந்நிறுவனத்தில் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் 23.11.1998 அன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த மேல் முறையீடு, தள்ளுபடி செய்யப் பட்டது.
மீண்டும் இந்த மனு 23.12.1998 அன்று விசாரணைக்கு வந்த போது, 26.12.1998 முதல் 28.02.1999 வரை பிரிசோதனை அடிப்படையில் இத்தொழிற்சாலை மீண்டும் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் அணுகி, முழுவதும் இயங்க அனுமதி கேட்ட போது, நீதிமன்றம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், இந்நிறுவனத்தை ஆராய்ந்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபின் இயங்க அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டது.
ஆனால், அதற்குப் பிறகு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு இறங்கு முகமே இல்லை. 2007-2008ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் லாபம் 1000 கோடி ரூபாய்கள்.
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கொடுத்த ஆணையில், சுற்றுச் சூழல் பாதுகாக்கப் பட்ட பகுதிகள் என்று அறிவிக்கப் பட்ட 25 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்குள் ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த கட்டுமான உற்பத்தி பணியையும் மேற்கோள்ளக் கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து, வந்தீவு, கசுவார், கரைச்சள்ளி மற்றும் விலாங்குச்சள்ளி ஆகிய நான்கு பாதுகாக்கப்பட்ட தீவுகள் 25 கிலோ மீட்டர்களுக்குள் உள்ளன. இத்தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது அல்ல என்ற நிலையில், 25 கிலோ மீட்டர்களுக்குள்ளாக இந்த தொழிற்சாலையை ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்திருக்கிறதென்றால், அது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அகந்தையை மட்டுமே காட்டுகிறது.
மேலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்குள்ளாக்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் இடத்தில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என்ற அடிப்படை விதியும் காற்றில் பறக்க விடப் பட்டு, இத்தொழிற்சாலைக்கு, தான்தோன்றித் தனமாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்த சூழலிலும், மராட்டிய மாநிலத்தில், 200 கோடி ரூபாய் செலவழித்து கட்டுமானப் பணிகளை தொடங்கிய பின் அனுமதி ரத்து செய்யப் பட்ட ஒரு திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்கப் படும் முன்னர், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல முறை யோசித்திருக்க வேண்டும். ஆனால் பொது கருத்துக் கேட்புக் கூட்டம் கூட நடத்தப் படவில்லை. பொது கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினால், பொது மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான், அவசியமான இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது தவிர்க்கப் பட்டுள்ளது என்று எண்ண வேண்டியுள்ளது.
“சுத்தமான, சுகாதாரமான மனிதர்கள் வாழுவதற்கு ஏற்ற ஒரு சூழலில் வாழ வேண்டும் என்ற உரிமை, வாழும் உரிமையின் ஒரு பகுதியே ஆகும். இதை உத்தரவாதப் படுத்த, ஒரு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சுற்றுச் சூழலுக்கும், சுகாதாரமான சூழலுக்கும் ஏற்ற ஒரு கொள்கையை வடித்தெடுக்க வேண்டும்.“
“ஒவ்வொரு குடிமகனுக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 உத்தரவாதப் படுத்தியுள்ள தரமான வாழும் உரிமை, அடிப்படை உரிமையாகும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த உரிமையை பறிக்கும் எந்த ஒரு நபரின் நடவடிக்கையையும் செயலையும், கடுமையாகவே பார்க்க வேண்டும். “
“அரசின் எந்த ஒரு பிரிவானாலும், நல்ல விஷயங்களையும், பொது மக்களின் நலமையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். அரசின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கும், அதிகாரம் படைத்த அத்த அதிகாரிகளும், அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம், பொது மக்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே என்பதை உணர வேண்டும்“
“காற்றையும், நீரையும் மாசு படுத்தும் விவகாரங்களை நீதிமன்றங்கள் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்கள் முன் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களைப் பார்க்கையில், ஸ்டெர்லைட் நிறுவனம், அத்தொழிற்சாலை வெளிப்படுத்தும் மாசுப் புகையினால், காற்றை மாசுப் படுத்துவதால், அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்துவதை காண முடிகிறது. தொடர்ந்து, கட்டுப் பாடற்ற முறையில், காற்றை மாசுபடுத்தி, இயற்கை அன்னையின் மீது தாரைப் பூசும் இந்நிறுவனத்தை, இந்த ரிட் மனுக்களை அனுமதிப்பதன் மூலமாகவாவது, இப்போதாவது நிறுத்தத் தான் வேண்டும். “
“ஸ்டெர்லைட் நேர்வை எடுத்துக் கொள்ளும் போது, அந்நிறுவனம் காற்றையும் நிலத்தையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், அத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல்நலத்துக்கும், பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக உள்ளது. உண்மை தான். இத்தொழிற்சாலையின் அனுமதியை ரத்து செய்தால், இந்தத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் தான். ஆனால், இத்தொழிற்சாலை தொடர்ந்து நடைபெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை எங்கள் முன் உள்ள ஆவணங்கள் தெளிவாக உணர்த்துவதால் நாங்கள் இந்த முடிவை எடுத்தே ஆக வேண்டும்.”
என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றே சவுக்கு கருதுகிறது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் எலிப்பி தர்மா ராவ் மற்றும் பால் வசந்தகுமார் ஆகிய இருவருக்கும், சவுக்கின் வணக்கங்களும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு.
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மட்டும் நீங்கள் உங்கள் தீர்ப்பின் மூலமாக காப்பாற்ற வில்லை. இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு இந்தப் பூமியை பத்திரமாக விட்டுச் செல்லும் ஒரு அரிய பணியை ஆற்றியிருக்கிறீர்கள்.
ஏன் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால், இந்த வேதாந்தாவின் இயக்குநர் குழுவில் இயக்குநராக இருந்தது யார் தெரியுமா ? இன்று வேதாந்தாவுக்கு எதிராக போராடும் ஆதிவாசிகளை வேட்டையாடும் பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் தான் அது.
அது மட்டுமின்றி, இந்தியாவின் தலைமை நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார் என்பதும், அந்நிறுவனத்திற்கு சாதகமாக அவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்ற விஷயமும் தெரிந்தும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்க அசாத்திய துணிச்சலும், நீதியுணர்வும் வேண்டும்.
இப்போது புரிகிறதா… ஏன் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ?
மாண்புமிகு உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானதும், பல அரசாங்கங்களை ஆக்கவும் அழிக்கவும் வல்ல வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதே…
இந்த தேசத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க உத்தரவிட்ட எலிப்பி தர்மாராவும், பால் வசந்த குமாரும் நீதிமான்களா ? ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, அந்நிறுவனத்துக்கு சாதகமாகவும், பழங்குடி மக்களுக்கு எதிராகவும் தீர்ப்பி வழங்கிய இந்திய தலைமை நீதிபதி கபாடியா நீதிமானா ?
எலிப்பி தர்மாராவ் மற்றும் பால் வசந்த குமார் அவர்களே… இந்த தேசம் என்றென்றும் உங்களுக்கு கடமைப் பட்டுள்ளது.
பின்குறிப்பு.
நேற்று (புதன் கிழமை) நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களை அவரின் அறையில் சந்தித்த வேதாந்தாவின் வழக்கறிஞரிடம், எலிப்பி தர்மாராவ் அவர்கள், தன்னை இது போல அறையில் சந்திக்க வரக் கூடாது என்றும், நீதிமன்றத்தில் தான் சந்திக்க வேண்டும் என்றும், அதுவும், நீதிபதி பால் வசந்தகுமாரோடு அமர்வில் இருக்கும் போது தான்
சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வேதாந்தாவின் வழக்கறிஞர்,வாயை மூடிக்கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கூறுகின்றன.