புதிதாகச் சொல்ல என்னிடம் ஏதும் இல்லைதான். ஆனால் முக்கிய நிகழ்வுகள்போது ஏதாவது சொல்லாவிட்டால் என்ன செய்தியாளன் நான் ! எனவே மீண்டும் ஊதிவைக்கிறேன்.
திமுக கூட்டணியிலிருந்து விலகிவிடலாம் என நீங்கள் சிந்திப்பதாக செய்தி உலா வருகிறது. எவ்வளவு உண்மை அது எனத் தெரியவில்லை. உண்மையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்.
திமுகவுடன் கூட்டணி அமைத்ததற்காக நீங்கள் கொடுத்த விலை அதிகம். ரொம்பவே அதிகம். உங்கள் இயக்க ஒழுக்க மதிப்பீடுகள், இலக்குக்கள் அனைத்துமே ஒரேயடியாக சரிந்ததற்கு தேர்தல் அரசியல், குறிப்பாக முற்றிலுமாக சீரழிந்துவிட்ட திமுகவுடனான உறவுதான் காரணம் என உறுதியாகச் சொல்லமுடியும். நாம் யாருடன் பழகுகிறோமோ அவர்களின் அனைத்து தீய குணங்களும் நம்மிடம் எளிதில் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன.
அஇஅதிமுகவுடன் இருந்தால் மட்டும் வாழ்ந்திருக்குமா, அடிப்படையில் சீரழிவதற்கானக் கூறுகள் உங்களிடம் இல்லாவிடில் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
அம்மாவுடன் இருந்திருந்தால் அது அதிகம் உங்களை பாதித்திருக்காது. காரணம் நெருங்கவே விடமாட்டார். எல்லோரும் எண்சாண் உடம்பை ஒரு சாணாகக் குறுக்கி தரையில் விழுந்து வணங்கும் குடிபடைகளே, ஓபிஎஸ்சே…சில நாட்களில் உங்களுக்கு நிச்சயம் வெறுத்துப்போயிருக்கும். சரி அடிப்படையில் உங்கள் சிந்தனைகள்தான், இலட்சியங்கள்தான் எப்படி? அவற்றை நம்பியே இம்மடலை எழுதுகிறேன்.
நண்பன் மலைச்சாமிக்குப் பிறகு தீவிரமாகவே குரல் கொடுத்து, சில வேளைகளில் வரம்புமீறியே ஆதிக்க சாதியினருக்கெதிராக்க் குரல் கொடுத்து ஒடுக்கப்பட்ட/இன்னமும் ஒடுக்கப்படும் பறையரின இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஒருங்கிணைக்க முயன்றீர்கள்.
1998 தேர்தல்கள்போது நீங்கள் சிதம்பரத்தில் போட்டியிடுகிறீர்கள். அப்போது உங்கள் தேர்தல் அலுவலகத்தில் இளைஞர்கள் ததும்பி வழிந்தனர். நிற்பதற்குக் கூட இடமில்லை. அந்நிலையிலேயே அவர்களிடம் பேட்டி எடுத்தேன். அவர்களது கட்டுக்கடங்கா உற்சாகம் என்னையும் உடனிருந்த மதுரை இராஜனையும் தொற்றிக்கொண்டது. ஆஹா தமிழக தலித் வரலாற்றில் புதிய திருப்பமெனவே நாங்கள் மகிழ்ந்தோம்.
அந்த நேரத்தில் உங்களையும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் ஒப்பிட்டு கட்டுரை எழுதினேன். ஏழு தொகுதிகளில் திமுக-தமாகா மண்ணைக் கவ்வக் காரணமாயிருந்து அந்த நேரத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தவர் கிருஷ்ணசாமிதான். அவருக்கு நான் அப்போது சற்று நெருக்கமென்றாலுங்கூட தொண்டர்களுடன் மிக இனிமையாக, சகஜமாகப் பழகுவது நீங்கள் என்பதால் உங்கள் மீது சற்று கூடுதல் அன்பும் மரியாதையும்.
தேர்தல்களுக்குப் பிறகு தனக்குக் கிடைத்த கவனத்தில் தன்னையே மறந்தார் டாக்டர். ஏதோ தமிழகத்தின் தலைவிதியைத் தான் நிர்ணயிக்கப்போவது போலவே நடந்துகொண்டார். இரு அமைப்புக்களும் கைகோர்க்கவேண்டும் என்று சொன்னபோது அனைத்து தலித் பிரிவினருக்கும் தானே தலைவர் என்பதுபோல, தரையில் கால் பாவாது மிதந்தார். எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தான் சார்ந்திருக்கும் உட் பிரிவினரின் எண்ணிக்கை எத்தனை, எத்தனை தொகுதிகளில் எத்தனை சதவீதம் என்பதெல்லாம் அந்நேரத்தில் அவருக்குப் புரியவில்லை.
1999ல் மூப்பனாருக்கு எப்படியெல்லாம் சிக்கல்கள் ஏற்படுத்தினார்? அதன் பிறகு மெல்ல மெல்ல உண்மையினை உணரத்தொடங்கினார். ஆனால் காலம் கடந்திருந்தது, நீங்கள் வளர்ந்து வந்த நேரத்தில் உங்களுடன் இணக்கமானதொரு உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தால் அது அவருக்கும் சரி, பொதுவாக தலித்துக்களுக்கும் சரி, நலம் பயந்திருக்கும்.
அதன் பிறகே உங்கள் இயக்கம் அசுர வளர்ச்சியடைந்த்து. இடையில் உங்களுக்கும் இராமதாசுக்கும் நல்லுறவு ஏற்பட்டது. இளையபெருமாளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஒன்றும் சமூக உதவிக்கு பெரிதாக உதவவில்லை. ஆயினும் மருத்துவருக்கு அடிப்படையில் தலித் வன்னியர் ஒற்றுமையில் அக்கறை இருப்பதாகவே தோன்றியது. குடிதாங்கியில் அவரது நிலைப்பாடு கண்டு மகிழ்ந்து தமிழ்க்குடிதாங்கி என நீங்கள் அவருக்கு பட்டமளித்தது மிகையே என்றாலும், அது சரியான அணுகுமுறையாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் பின்னர் நீங்கள் பாஜகவுடனும் கூட்டணி சேர்ந்தீர்கள். அதைவிடவும் சரிவு இருந்திருக்கமுடியாது. பின்னர் திடீரென தமிழ்த் தேசியப் பிரச்சினையைக் கையிலெடுத்தீர்கள். இராமதாசுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்தியபோது அது தமிழினவாதத்தினை மையப்படுத்தியே அமைந்தது, தலித் நிலையினை அல்ல.
இராமதாசின் உள்நோக்கம் என்ன என்பது இப்போது பளிச்செனத் தெரிகிறது. அம்பேத்கர், மார்க்ஸ் படங்களைப் போட்டுக்கொண்டாலும் அவர் அடிப்படையில் சாதி அரசியல் செய்யவே விரும்புகிறார். கன்ஷிராம் போல மிகப்பிற்படுத்தப்பட்டவர்களையெல்லாம் ஒன்றிணைத்து முதல்வராகலாம் எனக் கனவு கண்டார். ஆனால் அவரது சுயரூபம் அம்பலமானவுடன் பாருங்கள், சாதிவெறியராகிவிட்டார் வன்னியர் நலனே தன் நோக்கமென்கிறார், முந்தைய தமிழ்த் தேசியமெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அவருடன் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கைகோர்த்தீர்கள், நேரம் வந்தபோது கழற்றிவிட்டார்.
அது போகட்டும் நீங்கள் தமிழ்த் தேசிய அணியில் ஏன் இணைந்தீர்கள், எனக்கு விளங்கவே இல்லை. பெரியாரே ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் இல்ல என்ற ரீதியில்தானே பேசினார்: திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லீம் அல்லாத, கிறிஸ்துவனல்லாத, ஆதி திராவிடன் (ஷெட்யூல்ட் வகுப்பார்) அல்லாத, திராவிடனே, சூத்திரனே எனத் தெளிவாகவே வரையறுத்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு என்றபோது எங்களுக்கில்லையே என்றார். விடுதலைக்குப் பிறகு, குறிப்பாக 1967ஆம் ஆண்டில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து இடைநிலை சாதியினர் அனைத்து தளங்களிலும் தங்கள் பிடியினை வலுப்படுத்திக்கொண்டே வந்தனர். திமுகவின் மாவட்ட செயலாளர்களெல்லாம் எத் தட்டிலிருந்து வந்தனர்? எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தார் பெரியார். கீழவெண்மணி பற்றிக்கூட பார்ப்பனர் இராம்மூர்த்தியின் சதி என்றல்லவா அலட்சியப்படுத்தினார்.
அவர் தலித் விடுதலை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் என்பது உண்மை. ஆனால் பிராமணரல்லாதார் ஒற்றுமை வலுப்பெறவேண்டி தலித் நலனைப் புறக்கணித்தார் என்பதும் உண்மைதானே.
ஆசானே அப்படியென்றால் சீடர்கள் எப்படியிருப்பார்கள்? அவருக்கிருந்த பரந்த மனப்பான்மை, சமூக அக்கறையில், 20 சதம் கூட அவர்களுக்கில்லை. அந்நிலையில் திராவிட அரசியல் தமிழ்ச் சமூகத்தை அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்திருக்கும் நிலையில், எப்படி, எத் தளத்தில் தலித்துக்களுக்கு இடம் கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கமுடியும்?
ஈழத்திலேயே தலித் மக்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி தொடர்ந்து ரவிகுமார் சுட்டிக்காட்டியிருக்கிறார். அது குறித்து எந்த்த் தமிழியக்கம் வாய் திறந்து பேசியது? தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனவே, எந்தத் தமிழியக்கம் கண்டனம் தெரிவித்தது?
பிரபாகரன் வாழ்க என்றால் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு பல வடிவங்களில் கிடைக்கும் என்பதாலும், தமிழியக்கங்களுடன் கைகோர்ப்பதால் ஓரளவேனும் இடைநிலை சாதியினரின் அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்பதாலும் நீங்கள் அத் திசையில் பயணித்திருக்கலாம். ஆனால் அதனால் உங்கள் மக்களுக்கு எப்பயனும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. தர்மபுரி கொடுமைகள் போது கூட எக்கட்சி பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது? உங்களைத் தவிக்கத்தானே விட்டனர்.
நீங்கள் அத்தகையோர் பின் சென்றதன் விளைவு தலித் மக்களின் நேரடியான, உடனடியான பிரச்சினைகளில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை. பிரபாகரன் தொடர்பில் எத்தனை ஆர்ப்பாட்டங்கள்…ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் தீண்டாமை தொடர்பில் என்ன போராட்டம் நீங்கள் நடத்தினீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். 90களில் நீங்கள் காட்டிய வேகம் இப்போது எங்கே போயிற்று? வடுகபட்டியிலிருந்து தர்மபுரிவரை அவலங்கள் தொடர்கின்றன. இரட்டைக் குவளை, தனி மயானம், பள்ளிகளிலேயே தலித் மாணவர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் புறக்கணிப்பு, சாதித்தூய்மை கெடுகிறதெனச் சொல்லி ஒவ்வொரு பகுதியிலும் இடைநிலை மேல்நிலை சாதியினர் தலித் மக்கள் மீது போர் தொடுக்கின்றனர். அதை எதிர்த்து எந்த விதமான முயற்சிகள் உங்களால் மேற்கொள்ளப்பட்டன? நீங்கள் சளைக்காமல் கொண்டாடிவந்த முத்தமிழறிஞர் அல்லது வீரமணியார் என்னவித உதவியை நல்கினர்?
இப்போது நீங்கள் திமுக கூட்டணியைவிட்டு விலகாவிட்டாலும் அவர்களாகவே உங்களை செட்டை விட்டு விலக்கிவிடுவர் என்று கருதப்படுகிறது. தேர்தல் தோல்வி குறித்து ஆராயவென கூட்டப்பட்ட திமுக பொதுக்குழுவில் ஏறத்தாழ அனைவருமே தலித் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களுடனான கூட்டணி பரவலாக மேல் மற்றும் இடைநிலை சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியதாகக் கூறியிருக்கின்றனர்.
கலைஞரே ஓர் ஏமாற்றுப்பேர்வழி. வேடதாரி. ஆனால் வேடம்போடவேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது, நான் தலித்துக்களின் சம்பந்தி என்று ஜம்பம் பேசவேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. அவரது வாரிசுக்கோ அப்படியான கவலைகள் எதுவுமே இல்லை. எல்லாவற்றையும் துடைத்துப்போட்டவர், எதையும் அறியாதவர் கூட.
ஸ்டாலினுக்கு அரசியல் என்பது பணம் பண்ணும் ஒரு வழி அவ்வளவே. அவரது வாரிசாக உதயநிதி பார்க்கப்படுகிறார். கட்சி விளங்கும் என்பதற்கப்பால், அவர்களிலெவருக்குமே தலித் மேம்பாட்டில் சிறிதளவு அக்கறையும் கிடையாது. அந்நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் உங்களுக்கோ முஸ்லீம் அமைப்புக்களுக்கோ இடமளிப்பதில்லை என முடிவெடுத்துவிட்ட செய்தி உங்களுக்கு வந்த நிலையில்தான், இப்போது வேறு வழியின்றி நீங்களாகவே வெளியேறுவதுபோல காண்பித்துக்கொள்கிறீர்கள் என்கின்றனர்.
எப்படியாயினும் இம்முடிவு மனமார வரவேற்கத் தகுந்த்தே. பாதை தவறிவிட்டீர்கள். மீண்டும் தலித் நலனை மட்டும் முன்னிறுத்தி போராட்டங்களில் இறங்குங்கள். அப்போதும் உங்களுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு ஒன்றும் கிடைத்துவிடப்போவதில்லை. அதனால் என்ன, சமரசமற்றுப் போராடுங்கள்.
கற்பியுங்கள். தற்போது கட்ட பஞ்சாயத்து எனக் கெட்ட பெயர் வாங்கியிருக்கும் உங்கள் தொண்டர்கள் உலகை அறிந்துகொள்ளச் செய்யுங்கள்.
எனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு சிக்கலான நேரத்தில் உங்கள் தோழர்களைத் தான் அணுகினேன்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நட்பிற்காக தலையிட்டு, அந்த நேரத்து சிக்கலை சரிசெய்துகொடுத்தார்கள். ஆனால் பொதுவாக எப்படி அவர்கள் பார்க்கப்படுகின்றனர்?

குறிப்பிடத்தக்க அறிவுஜீவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ரவிகுமார்
ரவிகுமார் போன்ற மெத்தப் படித்த அறிவுஜீவிகள் உங்கள் அருகிலேயே இருக்கும்போது உங்கள் மக்களின் பார்வை மேலும் விசாலமாக, அறிவு ஆழமாக ,ஆயிரம் செய்யமுடியுமே. ரவிகுமார் தன் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமையினை இனிமேலாவது வேகமாக ஆற்றவேண்டும்.
நற்சான்றிதழ் வழங்குவது அல்லது அரசிடம் ஏதாவது ஆகவேண்டியிருந்தால் அதற்கு சிபாரிசு செய்வது மட்டும்தான் உங்கள் அமைப்பின் வேலையா என்ன?
உத்திரபிரதேசத்தில் என்னவாயிற்று? மாயாவதி சர்வஜன் அரசியல் என்றார். அமோக வெற்றியும் பெற்றார். பகுஜன்னை மறந்தார். ஊழல்வேறு செல்வாக்கு வீழ்ச்சி அடைந்தது. அப்புறம்தான் விழித்துக்கொண்டு தலித் மக்கள் பாதுகாப்பிற்கென சில முன்முயற்சிகள் எடுத்தார். ஆனாலும் தோல்வியே.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலோ ஓர் இடத்தில் கூட வெற்றிபெறமுடியவில்லை. தலித்துக்களிலேயே உட்பிரிவினர் சிலர் பாஜக பக்கம் சென்றுவிட்டனர்.
தலித் பிரிவினருக்கிடையே பூசல்/முரண்பாடுகள் எங்குமே ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இன்னமும் உங்கள் அமைப்பு பறையர் இன அமைப்பாகத் தான் இருக்கிறது. பள்ளரினத்தோருக்காவது புதிய தமிழகமிருக்கிறது, அவர்கள் பொருளாதார சமூக நிலை ஒப்பீட்டளவில் ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது, ஆனால் அருந்ததியர், துப்புரவுத் தொழிலாளர்கள் மிக பலவீனமாகத்தானே இருக்கின்றனர். அவர்களில் எவரும் உங்கள் பக்கம் வரவே இல்லையே. நான் அறிந்தவரை அம்மக்கள் பகுதிகளில் உங்களுக்கு அமைப்பு கூட இல்லை. இந்நிலை மாறவேண்டும்.
திருமா, களப் பிரச்சினை உங்களுக்குத் தான் தெரியும். வீட்டில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு வேதாந்தம் பேசுவது எளிது. ஆனால் என் ஆதங்கத்தை விரிவாகவே சொல்லிவிட்டேன். காலம் நல்ல தீர்வை அளிக்கட்டும்.
அன்புடன்
த.நா.கோபாலன்
மருத்துவர் அய்யா அவர்களுடன் திரு. திருமாவளவன் இருந்தவரை நன்றாகத்தான் இருந்தார், திராவிட கட்சிகளின் கை பாவையாக மாறினார்…தன் தனித்தன்மையை பொதுவான தலித்துக்களிடமிருந்து இழந்து விட்டார்…கருநாகம் கருணாநிதியை விட்டு அவர் வெளியேறினால் நன்றாக இருப்பார்.
தலித்துக்களின் பிணத்தை தோளில் சுமந்து அடக்கம் செய்த “வன்னியரின மருத்துவர் அய்யா” அவர்கள் சாதி வெரியராகிறார்..
தலித் பிணத்தை அடக்கம் செய்யாமல் ரோட்டில் கிடத்தி அரசியல் ஆதாயம் தேடும் திருமா புரட்சியாளர் ஆகிறார் …
அப்படிதானே சவுக்கு???? நல்ல இருக்கு புரட்சி பேசும் சவுக்கு மாதிரியானவர்களின் தலித்துக்களின் “நீதி”
all dalit parties and muslim parties established only community and religion, they are not ready to join another thalith community and another mynority religion, so they only established party only for won community and won religion, therfor how can say they are for eradicate community. every act will be creat react. no one fool , dont try to make fool inthe name of thalith isam
Dalits have been subjected to untold miseries for centuries. Their sufferings continue albeit at a reduced level. They are still not fully liberated. They must have political, religious, social-economic organisations of their own so as to liberate them, convey their voice, express themselves, develop their economic, social presence.
It is unethical to characterise their coming together as casteist.
Those who have not experienced even a miniscule percentage of the sufferings of Dalits always brand Dalit parties with all negative connotations.
No one, but selfish dalits outfits are wholly responsible for their present plight of dalits who are played in the hands of Non-dalits political outfits
ஈழத்தில் முஸ்லீம் கிடக்கிறான் போங்கையா, இங்க உள்ள அரசாங்கம் இந்துக்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அரசாங்கம் தானே, ஈழத்தில் இந்துக்களை கொன்றபோது, இங்குள்ள மனகேட்டவன் ஏன் உதவினான்.
வழக்கம் போல ஊடகங்களில் முஸ்லிம்களை சம்மந்தம் இல்லாமல் குறைகூறி தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்வதுபோல சவுக்கிலும் அது தொடர்கிறது.
எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒன்றும் முஸ்லிம்களைக் குறை கூறவில்லை, அது அவர்களின் குணம் என்ன என்பதைத்தான் கூறினேன். அதுவும் கூட எதற்காக? தலித் உரிமைகள் பற்றிப் பேசும்போது முஸ்லிம்கள் எதற்காக அங்கே வலிய வந்து ஒட்டிக் கொள்ள வேண்டும்? அது தலித் உரிமைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் எங்கின்ற காரணத்தால். இங்கேயும் வந்து முஸ்லிமைக் குறை கூறாதே என்று திசை திருப்பவேண்டாம். தலித்துக்களுடன் இணைத்து முஸ்லிம்களைப் பேசுவதை நிறுத்தி விட்டால், முஸ்லிம்களின் குணம், அல்லது முஸ்லிம் மன்னர்களிடம் இந்துக்கள் அடைந்த கொடுமைகள் பற்றி ஏன் பேசப் போகிறேன்?
தலித்துக்களைக் கொடுமைப்படுத்தியது மேல்சாதி, இடைச்சாதி இந்துக்கள். ஆனால் முஸ்லிம்கள் அப்படி இல்லை. அவர்களை எந்த இந்துவும் கொடுமைப்படுத்தியதாக எங்கும் என்றும் சரித்திரம் இல்லை. அப்படி இருக்க எங்கெல்லாம் தலித் உரிமைகள் பேசப் படுகின்றனவோ அங்கெல்லாம் முஸ்லிம்களை இணைத்துப் பேசுவது உள் நோக்கம் கொண்டது. காலப் போக்கில் ஏதோ தலித்துக்களையும், முஸ்லிம்களையும் ஒரு சேர, மேல்சாதி, இடைச் சாதி இந்துக்கள் கொடுமைப் படுத்தியது போன்ற ஒரு தவறான கருத்தை உருவாக்கும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ள வேண்டிய கட்டாயம் உண்மையை மதிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நான் இந்தத் தளத்தில், தலித்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே தட்டில் வைத்துப் பேசும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் இன்று தமிழ் இந்து வலைத்தளத்தில் இதே கருத்தினை ஒட்டி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கர், இந்து சமுதாயத்தில் இருக்கும் அதே சமூகத் தீமைகள் முஸ்லிம் சமுதாய்த்திலும் இருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார், எனவே ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்பது தவறு, முஸ்லிம்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டுமே கேட்க வேண்டும், முஸ்லிம்களில் இருக்கும் எல்லா சாதியினருக்கும் தில்லி ஜும்மா மசூதியில் காஜி ஆகும் உரிமை தரப்பட வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும் எப்படி முஸ்லிம் மதத்தில் அவுரங்கசீப் காலத்தில் இருந்தே சில சாதியினர் ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் கூறி இருக்கிறது. கோபாலன், சவுக்கு சங்கர் ஆகியோர் மட்டுமல்ல திருமா கூட நிச்சயம் அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை எல்லா முஸ்லிம்களுக்கும் பங்கிட எடுக்கப்படும் மறைமுக நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ள வேண்டும்.
http://www.tamilhindu.com/2014/07/dalit_islam/
///திமுகவுடன் கூட்டணி அமைத்ததற்காக நீங்கள் கொடுத்த விலை அதிகம். ரொம்பவே அதிகம். உங்கள் இயக்க ஒழுக்க மதிப்பீடுகள், இலக்குக்கள் அனைத்துமே ஒரேயடியாக சரிந்ததற்கு தேர்தல் அரசியல், குறிப்பாக முற்றிலுமாக சீரழிந்துவிட்ட திமுகவுடனான உறவுதான் காரணம் என உறுதியாகச் சொல்லமுடியும். நாம் யாருடன் பழகுகிறோமோ அவர்களின் அனைத்து தீய குணங்களும் நம்மிடம் எளிதில் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன.
அஇஅதிமுகவுடன் இருந்தால் மட்டும் வாழ்ந்திருக்குமா, அடிப்படையில் சீரழிவதற்கானக் கூறுகள் உங்களிடம் இல்லாவிடில் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
அம்மாவுடன் இருந்திருந்தால் அது அதிகம் உங்களை பாதித்திருக்காது. காரணம் நெருங்கவே விடமாட்டார். எல்லோரும் எண்சாண் உடம்பை ஒரு சாணாகக் குறுக்கி தரையில் விழுந்து வணங்கும் குடிபடைகளே, ஓபிஎஸ்சே…சில நாட்களில் உங்களுக்கு நிச்சயம் வெறுத்துப்போயிருக்கும்///
கோபாலன் அவர்கள் நல்ல சிந்தனையைக் கொண்டவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், இந்த வரிகள் அவரது சிந்தனையைக் கொச்சைப் படுத்தும் வகையில் திரிக்கப் பட இடமிருக்கிறது. கருணானிதியுடன் சேர்ந்தால் கெட்ட வழக்கம் ஒட்டிக் கொள்ளும், ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் அப்படி இல்லை என்ற படியான கருத்து ஏற்புடையது அல்ல. அது என்ன தீட்டுப் போல? நான் இதைப் பட்டவர்த்தனமாகச் சொல்ல விரும்பவில்லை.
கருணானிதி ஜெயலலிதா இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர். இருவரும் ஊழலில் சிறந்தவர்கள். அப்படி இல்லாவிட்டால், ஜெயலலிதாவால் 40 தொகுதிகளிலும் 200 முதல் 500 ரூபாய் வரை ஒரு வாக்குக்குக் கொடுத்திருக்க முடியுமா?
கருணானிதி, ஜெயலலிதா இருவரில் சமுதாயத்திற்குத் தீங்கு யாரால் அதிகம் என்றால் அது ஜெயலலிதாவால்தான். ஏனெனில் அவரிடம் இருக்கும் அதீத அகந்தை அவரை மக்களிடம் இருந்து பிரிக்கிறது, ஜனநாயக நடவடிக்கைகள் சிறிதும் இல்லாது செய்கிறது. தன்னைத் தவிர வேறு எவருக்கும் சிந்திக்கவோ செயலாற்றவோ உரிமை இல்லை என்றிருக்கும் ஒருவருடன் உறவு பாராட்டுவது என்பது சமுதாயத்துக்கே கேடு விளைவிக்கும்.
you may mis understood the saying. TNG said “காரணம் நெருங்கவே விடமாட்டார்.”. It’s true. By all means
இனம் என்பது Race
தேவரினம், பறையரினம், பள்ளரினம் என்பதெல்லாம் பூசி மெழுகும் பணி அல்லது பாணி.
சாதி என்று பட்டவர்த்தனமாக எழுதுவதும் சொல்வதும் மட்டுமே சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்துக்களை வலுப்படுத்தும்.
சாதி என்ற சொல் கெட்ட வார்த்தை அல்ல. அதுதான் சரியான சொல். அதைச் சொல்லக் கூச்சமாக இருந்தால், குலம் என்று சொல்லுங்கள். இனம் என்று சொல்வது வரலாற்றுப் பிழை ஆகி விடும். காலப் போக்கில் பல இனம் கொண்டதுதான் ஒரு மதம் என்ற தவறான எண்ணம் தோன்றி விடும்.
_நீதிக் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே அதை முன்னிறுத்தி நடத்தியவர்கள், செட்டியார், முதலியார், நாயுடு, நாயர், ரெட்டியார், என்று நிலப் பிரபுத்துவ மேல் சாதியினர் மட்டுமே. அந்தக் கட்சி ஆங்கில அரசின் கைக் கூலியாக முதல் வட்டமேஜை மானாடு, இரண்டாம் வட்ட மேஜை மானாடுகளில் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிராக ஆங்கில அரசுக்கு ஜால்ரா அடிக்க உருவாக்கப் பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் போராளியாக ஒரு கிறிஸ்தவர் கூட இல்லை. ஆனால், நீதிக் கட்சியின் சார்பில் வட்ட மேஜை மானாடுகளில் கிறிஸ்தவப் பிரதினிதியாகக் கலந்து கொண்டவர் சர் ஏ.டி. பன்னீர்செல்வம். இவர் சவுக்கு சங்கரின் ஆருயிர் அபிமானியான சி.டி.செல்வத்தின் தாத்தா!
ஆக, ஈ,வெ,ராவின் பாரம்பரியம் தலித் மேம்பாட்டுக்க்காக உருவானது அல்ல. பிராமணர் அல்லாத மேல்சாதியினருக்காக உருவாக்கப் பட்டது. அதிலே தலித் மட்டும் அல்ல, வன்னியரோ, தேவரோ, கொங்கு வேளாளக் கவுண்டரோ என்று எந்தப் பிற்படுத்தப்பட்ட சாதியும் கூடக் கிடையாது.
////திமுக பொதுக்குழுவில் ஏறத்தாழ அனைவருமே தலித் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களுடனான கூட்டணி பரவலாக மேல் மற்றும் இடைநிலை சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியதாகக் கூறியிருக்கின்றனர்.///
திருமாவுக்கான திறந்த மடலில் முஸ்லிம்களை எதற்காக வலியத் திணிக்கிறீர்கள்? இந்தப் போக்கு சமீபகாலத்தியப் போலி மதச் சார்பின்மைவாதிகளிடம் வெகுவாக மலிந்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுப் பிழையாக அமையும் என்பதை கட்டுரையாளர் போன்றவர்கள் உணரவேண்டும்.
ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அங்குள்ள முஸ்லிம்கள்.
உலகில் எங்கு பார்த்தாலும் தங்களது முஸ்லிம் என்ற அடயாளத்தை எள்ளளவும் பிற அடையாளங்களோடு இணைக்க அனுமதியாதவர்கள்,
இங்கு மட்டும் அரசியல் காரணத்துக்காக, தலித்துக்களுடன் “வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடிதான் என்னையும் வண்டியில் ஏற்றிக் கைது செய்து ஸ்டேஷனுக்குக் கொண்டு போங்கள்” என்பது போல முஸ்லிம்கள் ஒட்டிக் கொள்கிறார்கள். அதையும் அப்படியே கிளிப்பிள்ளை போல எழுதுகிறீர்கள்.
தலித்துகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தீண்டாமை, பொருளுடமை-சொத்துரிமை-கல்வி மறுப்பு, சமுதாயத் தீட்டு எனப் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தவர்கள்.
முஸ்லிம்கள் அப்படி அல்ல.
முஸ்லிம் அரசர்களிடம் கொடுமையை அனுபவித்தவர்கள் இந்துக்கள் மட்டுமே.
முஸ்லிம் அரசுகள் பிரிட்டிஷ் அரசிடம் தோற்ற பின்னர், 1900+ ஆண்டுகளில், இந்துக்களோடு சேர்ந்து சுதந்திரப் போரில் பங்கு கொண்டாலும், கிலாபத் இயக்கம் முதலியவற்றைத் துவக்கித் தமது தனித்தன்மையை விடாதவர்கள். இன்னமும் கூட அப்படிப்பட்ட ஒரு நிழல் யுத்தத்தைத்தான் முஸ்லிம்கள் நடத்தி வருகின்றனர்.
தலித்துகளுக்கான உரிமைப் போராட்டங்களை நீர்த்துப் போகும் விதமாக அவர்களுடன் முஸ்லிம்களை இணைத்துப் பேசுவது தலித்துகளுக்குச் செய்யப் படும் அனீதி. துரோகம் கூட.
///எனக்கு விளங்கவே இல்லை. பெரியாரே ஆதிதிராவிடர்கள் தமிழர்கள் இல்ல என்ற ரீதியில்தானே பேசினார்: திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லீம் அல்லாத, கிறிஸ்துவனல்லாத, ஆதி திராவிடன் (ஷெட்யூல்ட் வகுப்பார்) அல்லாத, திராவிடனே, சூத்திரனே எனத் தெளிவாகவே வரையறுத்திருக்கிறார். ///
கட்டுரை ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக இல்லை
சரி, அது கிடக்கட்டும். யார் சூத்திரன்? என்ற தலைப்பில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய நூல் இதைத் தெளிவாக விவரிக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய பெருந்தொண்டில் எள்ளளவும் எள் முனையளவும் கூட பெரியாரோ, னீதிக் கட்சியோ, திகவோ திமுகவோ அதிமுகவோ செய்ய வில்லை. இன்று தலித்கள் அடைந்திருக்கும் அத்தனை உரிமைகளும் அண்ணல் அம்பேத்கர் பெற்றுத் தந்தவையே, அவர் பெற்றுத் தந்த உரிமைகளின் அடிப்படையில் அமைந்தவையே.
னீதிக் கட்சி ஏற்பட்ட நாளில் இருந்தே, அந்தக் கட்சி பாடுபட்டது பிராமணரல்லாத, தலித்துக்களும் அல்லாத சாதியினருக்காக மட்டுமே. அதன் தலைவர்களில் ஒருவர் கூடத் தலித் இல்லை. திராவிடர் கழகமும் அப்படியே. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கான உரிமைகளுக்காக மட்டுமே திமுகவும் அதிமுகவும் முன்னெடுத்துச் செயலாற்றின என்பதுதான் உண்மை.
திருமாவும் சரி, கிருஷ்ணசாமியும் சரி, இன்னமு சில புதிதாக முளைத்த தலித் தலைவர்களும் சரி இதை நன்கு உணர்ந்தே இருக்கின்றனர். ஆனால் தேர்தல் அரசியல் அவர்களைத் திசை மாறச் செய்கிறது.
கட்டுரையாளர், 1996 இல் 10 சட்டமன்றத் தொகுதிகளை திருமாவின் கட்சிக்குத் திமுக ஒதுக்கியதை மறந்து விட்டார். அத்தனைத் தொகுதிகள் அந்தக் காலக் கட்டத்தில் மிக அதிகம், அதிலும் த.மா.கவுடன் கூட்டணி இருந்த போது, அவர்களுக்குப் பிரிவினை செய்தபின்னர் என்பதை நோக்க வேண்டும்.
///பெரியார். கீழவெண்மணி பற்றிக்கூட பார்ப்பனர் இராம்மூர்த்தியின் சதி என்றல்லவா அலட்சியப்படுத்தினார்///
என்ன கொடுமை சரவணா இது?
கீழ வெண்மணிக் கொடுமையைச் செய்த முதலாளி கோபால கிருஷ்ண நாயுடு!
ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சாதி அய்யா!!
அப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, பெரியார் என்ற சாதி மறுப்புப் (!) போராளிக்குச் சங்கடம் வரக் கூடாதே என்று அண்ணா கருணானிதியையும், மாதவனையும் கொண்ட இரு அமைச்சர் கொண்ட குழுவை அமைத்ததுடன் அத்தனை பத்திரிகைகளையும் நாயுடு என்ற சாதிப் பெயர் எங்கும் வரக் கூடாது என்று கேட்டுக் கொண்டதையும், அப்போது கண்டு பிடிக்கப் பட்டதே “ஜாதி இந்து” என்ற சொல்வழக்கும் என்பதை முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல முற்போக்காளர்கள் அனைவரும் மறைத்தே வருகின்றனர். பாவம் பொதுவுடமைக் கட்சியின் ராமமூர்த்தி அவர்கள். இன்னமும் அவர் சாதியை சொல்கிறார்களே அன்றி, 48 பேரை உயிரோடு கொளுத்தியவன் நாயுடு என்று சொல்வதில்லை!
தலித் தலைவர் கள் தான் தற்போது நாட்டில் பெரும்பாலும் சாதி அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன ர்
“எனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு சிக்கலான நேரத்தில் உங்கள் தோழர்களைத் தான் அணுகினேன்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், நட்பிற்காக தலையிட்டு, அந்த நேரத்து சிக்கலை சரிசெய்துகொடுத்தார்கள்.” aiya ithukkuthan ‘katta panchayat” enru peyar. ningal jalra adipathil niyayam irukkirathu.
அய்யா த.நா.கோ போன்ற மார்க்கிய அறிவு ஜிவிகள் ஏன் வெற்றி பெறவில்லை என்பதனை பற்றி ஆய்ந்து முதலில் கட்டுரை எழுதட்டும்.பெரியார் ஓரு தலித் விரோதி என நான் அறிந்த வரையில் எந்த புத்தகமாட்டும் தெரிவிக்கவிலை இத்தளத்தை தவிரஉண்மையான திராவிட இயக்கங்கள் முக்கியமாக திமுக படுந்தோல்வி அடைந்தாலும் அதனை மேலும்குழிதோண்டி அதன் சித்தாங்களை புதைகக மீடியாக்கள் அனைத்தும் முயல்வது விந்தையாக உள்ளது ஆனால் ஓன்று அவ்வியக்கம் விதைத்த விதைகள் வாயிலாக ஓன்று மீள வேண்டும் இல்லையெனில் தமிழினம் மெல்ல அழியும என்பது மீடியாக்கள் அனைத்தும் அறிந்த உண்மை
vaikai selva….என்ன தான் சொல்ல வருகிராய்….ஊர்குருவி என்ற பெயரில்?
Dear Vijay Ramachandran…Anbarasu comments Ravi Teja and not savukku…
உண்மை….இதை பதிய அனுமத்திருக்க கூடாது…
ஊர்குருவி என்ற பெயரில் எழுதுவது ‘வைகை செல்வன்’ தானா? அதாவது முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்னா ?
சாதியை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து பதவியைப்பிடித்து பதவி மூலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையை பெற்றெடுத்து விடலாம் என்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை. எவ்வளவுக்கெவ்வளவு சாதியை எதிர்த்து அரசியல் செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சாதி வெறியும் விகிதாசாரத்தில் அதிகமான மக்கள் செல்வாக்கு கொண்ட திராவிட கட்சிகளால் வளர்க்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
கல்வி கடினமான உழைப்பு பொருளாதார மேம்பாடு ஆகியவைகள் மூலம் ஒடுக்கப்பட்டசமுதாயத்திலிருந்து சமநிலைக்கு வருபவனை தீண்டாமை நெருங்குவதில்லை. கல்வி கற்றவன், பொருளாதாரத்தில் முன்னேறியவன் சாதிக்கு அப்பாற்பட்டவனாக பார்க்கப்படுகிறான், மதிக்கப்படுகிறான்.
இங்கு சாதியை, தீண்டாமையை வெல்லவேண்டுமானால் கோசம்போட்டு அரசியல் அங்கீகாரத்துடன் வென்றுவிடலாம் என்பதெல்லாம் ஒருவிதமான புரட்சிகரமான சிந்தனைக்கு மட்டுமே உதவும். வேலை வெட்டியற்ற பாரதிகூட தனது கற்பனை வளத்தை வார்த்தை ஜாலமாக்கி மனநிறைவடைந்து பாடல்களாக்கி குளப்பி விட்டிருக்கிறார்.
அந்த சிந்தனைகள் புதினங்களாக படிப்பதற்கும், ஏமாற்று சினிமா முதலாளிகள் மூலம் சினிமா படமாக எடுத்து பணம் பண்ணுவதற்கு இதமாக இருந்தாலும் யதார்த்த வாழ்வுக்கு ஒத்துப்பொகக்கூடியதல்ல.
திருமாசரி கிருஷ்ணசாமி அல்லது இராமதாஸ் ஆகியோர் அரசியல் இயக்கம் தொடங்கியபோது இருந்த விழாக்கால எழுச்சி ஒரு தற்காலிகமானதே, நாளடைவில் தொண்டர்களில் பதவி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் சோர்ந்து முடங்கி விடுவதற்கான சந்தற்பங்கள் நிறையவே கூடுகட்டி வாழுகின்றன.
அரசியல் சாக்கடையை விட்டு சமூக இயக்கமாக இருந்து கல்வி பொருளாதாரத்தை வளப்படுத்தும் போராட்டத்தை முன்னிறுத்தினால் சமுகம் முன்னேறும் வாழ்க்கைத்தரம் உயரும். அதற்கு திருமாவோ கிருஷ்ணசாமியோ தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.
கருணாநிதியுடன் இணைந்து அரசியல் செய்பவனும் கமலஹாசனுடன் இணைந்து சினிமாவில் நடிப்பவனும் காணாமல் போய்விடுவார்கள் என்பது விதி.
சோனியாவை வாழ்த்தி திருமா பேசியபோது, திருமாவின் பேச்சை சோனியா காது கொடுத்து கேட்க விரும்பாமல் கருணாநிதியுடன் அழவழாவிக்கொண்டிருந்த காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவுடன், கருணாநிதியுடன் இணைந்து தாழ்த்தப்பட்டோரை விடுவிக்கலாம் என்று அரசியல் செய்பவர்கள் தனிக்கட்சி தொடங்கவேண்டிய தேவையில்லை.
அரசியலாக இருந்தாலும் காங்கிரஸின் வீழ்ச்சி, கருணாநிதியின் படுவீழ்ச்சி, போதையின் மூலத்தின் உருவாகி காலத்தால் உண்டாக்கப்பட்டவை. என்ன இருந்தாலும் காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.
திருமாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அருமையான தரமான பதிவு….
நீங்கள் திருமாவை திட்டுவதிலோ, வசைபாடுவதிலோ தவறில்லை. ஆனால் நாகரீகம் தேவை, அவர் செய்த தவறுகள் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பகிரவும், தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாமே!
இதில் என்ன அநாகரீகம் கண்டு விட்டீர்..தரம் தாழ்ந்த வார்த்தைகள்..எங்குமே காண படவில்லையே….தேர்தல் அரசியலை முன் வைத்து கட்சி நடத்தாமல்,தலித் மக்களின் மீதான அவலங்களுக்காக குரல் கொடுங்கள் என்கிறார் …இதில் என்ன தவறு
விஜய ராமச்சந்திரன், இது வேறு ஒருவர் போட்ட கமெண்டுக்கு நான் போட்ட பதில்.