என்னடா இது சவுக்கு எம்ஜிஆர் விசிறி ஆகி விட்டதா என்று பார்க்காதீர்கள். இது நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் ஒரு அன்னமிட்ட கை.
அதுவும் அன்னமிட்ட கைக்குச் சொந்தக் காரர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள். ஆம் தோழர்களே… அந்த அன்னமிட்ட கைக்குச் சொந்தக் காரர் காவல்துறை அதிகாரி தான்.
அவர் வேறு யாருமல்ல…. ? குடியரசு தினத்தை முன்னிட்டு, சவுக்கிடம் பல்லாங்குழி விருது பெற்றார் அல்லவா ? அதே துக்கையாண்டி தான்.
இவர் இப்போது கூடுதல் டிஜிபி பதவி உயர்வு பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையில், கூடுதல் இயக்குநராக இருக்கிறார்.
இதற்கு முன் சிபி.சிஐடியில் ஐஜியாக பணியாற்றினார். காவல்துறையில் இருக்கும் பல பசுத் தோல் போர்த்திய புலிகள் போலவே இவரும் ஒரு பசுத் தோல் போர்த்திய புலி என்பதை, சவுக்கு தனது வாசகர்களுக்கு ஏற்கனவே தோலை அகற்றிக் காட்டியிருக்கிறது.
அவர் தான் இந்த அன்னமிட்ட கைக்குச் சொந்தமானவர். அவர் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு பெற்றதையும், மகள் திருமணம் முடித்ததையும் கொண்டாடும் விதத்தில் அன்னமிட்டார். யாருக்கு அன்னமிட்டார் ? லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்குத் தான். ஆம் தோழர்களே…
நேற்று சென்னையில் பணியாற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் கறி விருந்து. இந்த விருந்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வாரமாகவே செய்யப் பட்டு வந்தன. இந்த ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காகவே, ஒரு டிஎஸ்பியும் ஒரு ஆய்வாளரும், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் நான்கு காவலர்களிடம் பிரத்யேகமாக இப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது.
பிரியாணி விருந்து போடுவதற்கு எதற்கு டிஎஸ்பி என்று கேட்காதீர்கள்…. கறி சரியாக வேகவில்லை என்றால் “அய்யா“ கோபித்துக் கொள்ள மாட்டார் ?
காவல்துறையில் முக்கிய வழக்குகளில் புலனாய்வு செய்வதற்காக தனிப்படை அமைப்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா ?
அதே போல இந்த டிஎஸ்பியையும், அவருடைய குழுவையும், “பிரியாணிப் படை“ என்று அழைக்கலாம் தானே…. ?
இந்த பிரியாணிப் படை கடந்த வாரம் முழுக்க பம்பரமாய் வேலை செய்தது. பிரியாணிக்கான ஏற்பாடுகளை செய்வது முதற்கொண்டு, பிரியாணி விருந்துண்ணுபவர்களை அழைப்பது முதற்கொண்டு, அத்தனை வேலைகளையும் செய்தது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமையகத்தைத் தவிரவும், நகரப் பிரிவுகள் 1, 2, 3, 4, 5 மற்றும், சிறப்புப் பிரிவு 1 மற்றும் 3 பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் விருந்துக்கு அழைக்கப் பட்டனர்.
மதியம் 1.30 மணிக்குத் தொடங்கிய விருந்து, 3.30 மணி வரை நீடித்தது. கழுத்து வரை பிரியாணி தின்ற பிறகு, எந்த ஊழியராவது மதியத்துக்கு மேல் வேலை செய்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள் ? நல்ல நாளையிலேயே கேட்க வேண்டாம். இது போல பிரியாணி போட்டால் கேட்க வேண்டுமா என்ன ?
இந்த பிரியாணி விருந்தில், அத்துறையில் பணியாற்றும் துப்புறவாளர்கள், தண்ணீர் ஊற்றுபவர்கள், போன்ற விளிம்பு நிலை மக்கள் கலந்து கொண்டது, சவுக்குக்கு சந்தோஷமே…. ஆனாலும், ஊரில் தீண்டத் தகாதவர்களுக்கு விருந்தின் மிச்சம் வழங்கப் படுமே, அது போலவே, விருந்து முடிந்தவுடன் தான் இவர்கள் உண்ண அனுமதிக்கப் பட்டார்கள் என்பது வேதனையான விஷயம்.
சில காவல்துறை அதிகாரிகள், துக்கையாண்டியைப் பற்றி சவுக்கில் எழுதுவது குறித்து வருத்தத்தையும், கோபத்தையும் தெரிவித்தார்கள். அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்று கூறினார்கள். அவர் நேர்மையான அதிகாரி அல்லவே அல்ல என்பது சவுக்குக்கு நன்கு தெரியும். மற்றவர்கள் வெளியில் தெரிந்து செய்வதை, இவர் மறைமுகமாகவும், தந்திரமாகவும் செய்கிறார், அவ்வளவு தான்.
அதே அதிகாரிகள் இந்தக் கட்டுரையைப் பற்றி, பிரியாணி போட்டதற்கெல்லாம் குற்றம் சாட்டுவதா என்று கடிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. இந்தக் கட்டுரையை முழுமையாக படித்து விட்டு, அந்த அதிகாரிகள் சவுக்குக்கு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
பசித்தவர்க்கு உணவிடுவதென்பதை தமிழ்ச் சமுதாயம் மிகப் பெருமையாகவே கருதி வந்திருக்கிறது. உணவென்று வந்த சிவனடியாருக்கு உணவளிக்க அரிசி இல்லை என்பதற்காக, நட்ட விதை நெல்லை, எடுத்து கழுவி, காய வைத்து, குத்தி, அரிசியாக்கி, விருந்து படைத்த சான்றுகள் நம் இலக்கியங்களில் உண்டு.
ஆகையால் உணவிடுவது தவறில்லை. ஆனால் யாருக்கு ? யார் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்கள் ? அரசு ஊதியம் வாங்கிக் கொண்டு, போலிப் பயணப்பட்டியல் தயாரித்து அரசு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய நிதியை மாதந்தோறும் கபளீகரம் செய்து, கொழுத்த இரை உண்டு நகர முடியாமல் புரண்டு கொண்டிருக்கும் மலைப்பாம்புகளைப் போல இருப்பவர்கள்.
பசித்தவனுக்கு பத்து பைசா கொடுக்க மறுப்பவர்கள். நான், எனது குடும்பம், என்பதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர்கள்.
இவர்களுக்கா கறி விருந்து ? தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம் போன்ற நாட்களில், நட்சத்திரங்களும், சமூகத்தில் முக்கியமானவர்களும், அனாதை விடுதிகளுக்குச் சென்று, அந்தக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கி வந்தார்கள் என்று நாம் செய்தித் தாள்களில் படித்திருக்கிறோம். அச்செய்தியை படித்த உடனேயே, நாம் இதெல்லாம் “ஸ்டண்டுப்பா“ என்று அலட்சிய வார்த்தையையும் உதிர்த்திருக்கிறோம். ஸ்டண்டாகவே இருக்கட்டும். ஆனால், தாய் தந்தைப் பாசத்தை அறியாத, அந்த அநாதைப் பிஞ்சுகள் முகத்தில் ஏற்படும் ஒளியைப் பார்த்திருக்கிறீர்களா ? அந்த ஒளியைக் காணவே, எத்தனை ஸ்டண்டுகளை வேண்டுமானாலும் இந்த நட்சத்திரங்கள் நடத்தட்டுமே… !
சவுக்குக்கு, ஓரிரு முறை, சேலத்தில் உள்ள லோட்டஸ் என்ற அனாதை விடுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, உணவு வழங்கும் அந்த விஐபிக்கள் அமர்ந்திருக்கும் போது, உணவு உண்ணும் அந்தக் குழந்தைகள், இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு, உணவு அளித்த விஐபியை வாழ்த்தி விட்டு, அவருக்காகவும் இறைவனை வேண்டி விட்டு, உணவு உண்டு முடிந்ததும் அந்த விஐபிக்கு முத்தம் கொடுப்பார்கள் பாருங்கள்….. அப்பப்பா …. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நாட்கள் உணவிடலாம் அய்யா.
சேலம் லோட்டஸ் உறைவிடத்தில்
இது போன்ற அனாதை விடுதிகளுக்கு துக்கையாண்டி உணவளித்திருக்கலாம் தானே… ? அந்தக் குழந்தைகளின் வாழ்த்தை விடவா, லஞ்ச ஒழிப்புத் துறையின் சுயநலமிகள் வாழ்த்தி விடுவார்கள் ?
அன்பார்ந்த துக்கையாண்டி…. இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இன்று தேதி ஒன்று. புதிதாக திருமணமான உங்கள் மகளையும், மருமகனையும் அழைத்துக் கொண்டு, நீங்களும், உங்கள் மனைவியும், ஏதாவதொரு அனாதைக் குழந்தைகள் ஆசிரமத்திற்கு சென்று, இதே போல, (சொந்தக் காசில்) விருந்து கொடுங்கள் அய்யா. அந்தக் குழந்தைகளின் மனதில் உள்ள சந்தோஷத்தைப் பாருங்கள். பிறகு நீங்களே சவுக்கை அழைத்து நீ சொன்னது சரி என்று சொல்லுவீர்களா இல்லையா என்று பாருங்கள். இன்றும் ஒன்றரை ஆண்டுகள் உங்களுக்கு அரசுப் பணி இருக்கிறது.
துக்கையாண்டியை ஒரு பிரியாணி மாஸ்டர் என்று அழைக்கும் அளவுக்கு, பிரியாணி விருந்து வைப்பதில் மன்னன்.
எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு இருக்கிறதல்லவா ? அந்த வழக்கை சிபி.சிஐடியில் ஐஜியாக இருக்கும் போது துக்கையாண்டி தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அந்த வழக்கில் நெடு நாட்கள் துப்புத் துலங்காமலேயே இருந்தது.
அவ்வழக்கில் சம்பந்தப் பட்ட பானு என்ற பெண்மணி உளறியதால், வழக்கில் துப்பு துலங்கியது. துலங்கியதும், மேலும் சிலர் கைது செய்யப் பட்டார்கள். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சவுக்கோடு, சிபி.சிஐடி லாக்கப்பில், இரண்டு பேர், காலில் விலங்கிடப்பட்டு ஜட்டியோடு உட்காரவைக்கப் பட்டு இருந்தார்கள். அவர்களிடம் எத்தனை நாட்களாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பத்து நாட்களாக வைத்திருக்கிறார்கள். எதற்கு என்று கேட்டதற்கு, விஜயன் என்பவர் கொலை செய்யப் பட்டது தொடர்பாக வைத்திருக்கிறார்கள். அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். பத்து நாட்களாக அடி பின்னி விட்டார்கள் என்றார்கள். இதுதான் சிபி.சிஐடி போலீசாரின் விசாரணையின் லட்சணம்.
அந்த வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டதும், இதே போல துக்கையாண்டி பிரியாணி விருந்து வைத்தார். அந்த விருந்துக்காக, ரகசிய நிதியிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவிடப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. லஞ்ச ஒழிப்புத் துறை பிரியாணிக்கு ரகசிய நிதி எடுக்கப் பட்டதாக தகவல்கள் இல்லை என்றாலும், துக்கையாண்டி, தனது சம்பளத்திலிருந்து செலவழித்திருப்பார் என்பதில் சவுக்குக்கு நம்பிக்கை இல்லை.
அந்த ஒன்றரை லட்ச ரூபாய் ரகசிய நிதி, வயிற்றுக்கில்லாதவர்களும், ஏழைகளும், சாக்கடையில் அடைப்பை எடுப்பவர்களும், குப்பை அள்ளுபவர்களும் கட்டும் வரிப்பணத்திலிருந்து ஒதுக்கப் பட்டதல்லவா ? வயிற்றுக் கில்லாதவர்கள் கட்டும் வரி பணத்திலிருந்து, உண்டு கொழுத்தவர்களுக்கு விருந்து வைப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவுக்கு மோசமான ஒரு விஷயமாகவே சவுக்கு பார்க்கிறது.
அடுத்த விஷயம், இந்த விருந்து நடைபெற்ற நேரம். சிபி.சிஐடி விருந்தாவது, அலுவலக நேரம் முடிந்து, மாலையில் நடைபெற்றது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை பிரியாணி விருந்து என்பது, பகல் நேரத்தில் நடைபெற்றது. இந்த விருந்தில் கலந்து கொள்ள, லஞ்ச ஒழிப்புத் துறையின் நகரப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அரசு வாகனத்தில், அரசு ஓட்டுனரை வைத்து ஓட்டி, அரசு டீசலில் வந்தார்கள்.
இந்த ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு ஊதியம் இருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் ? அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள், அரை மணி நேரத்தில் மதிய உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்றுதானே, மாவட்ட அலுவலக நடைமுறை நூல் சொல்கிறது ?
இத்தனை அயோக்கியத்தனங்களை அரங்கேற்றும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஊழியர்களை ஊழல் வழக்கில் சிக்க வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது ?
இதே போல பிரியாணி விருந்து போட்டு அரசுப் பணத்தை விரயமாக்கிய மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி, நாஞ்சில் குமரன்.
அப்போதெல்லாம் மாதந்தோறும் பிரியாணி விருந்து நடக்கும். ஊழியர்களுக்கு, பிரியாணி விருந்தென்றால், அவ்வளவு சந்தோஷம். அந்த விருந்துக்கான காரணம், நாஞ்சில் குமரனும், மற்ற அதிகாரிகளும், ரகசிய நிதியிலிருந்து அடிக்கும் கொள்ளைக்கு கைமாறாகத் தான் என்பது எந்த ஊழியர்களுக்கும் புரியாது. சவுக்கு இந்த விஷயத்தைப் பற்றி விளக்கிக் கூறினாலும், அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் “அவங்கல்லாம் ஆபிசருங்கம்மா. அவங்க இதாவது தர்றாங்களேனு சந்தோஷப் படும்மா“ என்று சவுக்குக்கே சமாதானம் சொல்லுவார்கள். இதுதான் அத்துறை ஊழியர்களின் மனநிலை. இது போல அடிக்கடி பிரியாணி விருந்து நடந்து வந்த போது, நாஞ்சில் குமரன் மாறுதலாகி, உபாத்யாய் வருகிறார்.
உபாத்யாயிடம், பயந்து பயந்து, பொன்னுச்சாமி என்ற டிஎஸ்பி இந்த பிரியாணி விபரத்தை சொல்லியவுடன், உபாத்யாய் என்ன சொன்னார் தெரியுமா ? எதற்காக பிரியாணி… ? இவர்கள் சம்பளம் வாங்கவில்லை ? அரசுப் பணத்தை இது போல பிரியாணி போட்டு செலவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? என்று சத்தம் போட்டார். இன்றோடு இதை நிறுத்துங்கள் என்று உத்தரவிட்டார். உபாத்யாய் இருந்த வரையில் பிரியாணி போடப் படவே இல்லை.
இதே போல உபாத்யாய், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த போது, ரகசிய நிதியை தேவையற்ற முறையில் செலவி செய்யாமல், சேமித்து, 1.74 லட்சம் தொகையை சேர்த்து வைத்திருந்தார். உபாத்யாய் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மாற்றப் பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப் பட்டு, நாஞ்சில் குமரன் மதுவிலக்கு அமல் பிரிவின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் படுகிறார்.
அந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்ட பத்தே நாட்களில், நாஞ்சில் குமரன் 1.74 லட்சத்தையும் ஆட்டையைப் போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
உபாத்யாய் அந்த பணத்தை செலவழிக்காமல் சேமித்து வைத்தவர். அவர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு காரணமாக பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். லத்திக்கா சரணை விட பணியில் மூத்தவரான அவர் இன்று வரை டிஜிபி பதவி உயர்வு அளிக்கப் படாமல், அவரது அலுவலகத்தில் ஒரு ப்யூன் கூட இல்லாத வகையில் மாநகர போக்குவரத்துக் கழககத்தின் விஜிலென்ஸ் அதிகாரியாக வைக்கப் பட்டுள்ளார்.
நாஞ்சில் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையாளராகி ஓய்வு பெற்றார்.
இது போன்ற நேர்வுகள் எல்லாம், நேர்மையாக பணியாற்றுபவர்களுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தும் சக்தி படைத்தவை. ஏன் நான் நேர்மையாக இருக்க வேண்டும் ? நான் நேர்மையாக இருப்பதால் எனக்கு மட்டும் எதற்கு இவ்வளவு துன்பம் என்றெல்லாம் தோன்றும்.
ஆனாலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உலகமே எதிர்த்து நின்ற போதும், மிக மிக அதிகாரம் வாய்ந்த தேவாலயம் மரண தண்டனை விதித்த போதும், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றானே கலிலியோ… …
‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற கொள்கை தவறு, மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே மரண தண்டனை விதிக்கப் பட்டானே சாக்ரடீஸ்…..
தேவாலயம் மிகுந்த அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், கடவுள், வானத்தைப் படைத்தார், பூமியைப் படைத்தார், வெளிச்சத்தை படைத்தார், பின்பு மனிதனை படைத்தார் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் தோன்றினான் என்று உரக்கச் சொன்னானே சார்லஸ் டார்வின்….
அவர்களைப் பற்றி நாம் இன்றும் பேசிக் கொண்டிருப்பதற்காக காரணம், அவர்கள் மனசாட்சிப் படி, உண்மையை பேசியதுதான்.
சுயநலத்திற்காக சோரம் போனவர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் மறைக்கப் படுவார்கள்.