ஸ்டாலின் காலத்து ரஷ்யாவைக் கிண்டல் செய்யும் நாவல் இது. ஒரு கட்டத்தில் ஒரு கூட்டுப் பண்ணை மேலாளர் ஏதேதோ ஆத்திரமாகப் பேசிக்கொண்டே சற்று வேகமாக மேசைமீது ஓங்கி அடிப்பார். அந்த அடி எதிர்பாராத வகையில் மேசை மேலிருக்கும் ஸ்டாலின் பொம்மை மீது விழ, அது நொறுங்கிவிடும். அப்போது அவரது கோபமெல்லாம் பறந்துபோய்விடும். நடுநடுங்கிப்போவார். யாரை மிரட்டிக்கொண்டிருந்தாரோ அவரை கெஞ்சத் துவங்குவார்.
அதுவாவது ஸ்டாலின் காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை. ஆனால் 20ஆவது காங்கிரசிற்குப் பிறகும், எங்குமே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஸ்டாலினை விமர்சனம் செய்வதில்லை. எல்லாம் ஒரே பூசி மெழுகல், சமாளிப்பு, உங்களுக்கொன்றும் தெரியாது என்ற ரீதியிலான பதில் அல்லது விமர்சிப்பவனை சகட்டுமேனிக்கு சாடுவது – ஸ்டாலினீய அணுகுமுறைதான் மக்களிடமிருந்து போல்ஷ்விக்குக்கள் அன்னியப்படக்காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை.
ஸ்டாலினுடைய பல்வேறு அட்டூழியங்களினாலும், ஸ்டாலினீய அணுகுமுறையின் ஜனநாயக மறுப்பினாலும் சமூக அக்கறை கொண்ட அறிவுஜீவிகளின், பொதுவாக நடுத்தரவர்க்கத்தினரின் ஆதரவை இழக்கிறோம், மேலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நம்பகத்தன்மையினை இழக்கிறோம் என்ற புரிதல் சற்றும் வரவில்லை. இன்குவிலாப் ஜிந்தாபாத் சடங்காகிப் போனது. இடிப்பாரை இல்லாத ஏமரா இயக்கங்கள் மரித்தன அல்லது சிதைந்து போயின. தா.பா.க்கள் தலைவர்களாவது பொது நியதியாகிவிட்டது.
அரசரின் புகழ்பாடி பரிசில் பெற்றுச் செல்லும் புலவர் பாரம்பரியம் கம்யூனிச இயக்கங்கள் மத்தியில் ஆழமாகவே வேரூன்றிவிட்டன, அத்தகய போக்கு இன்று உலக அளவில் அனைத்து சமூகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நெறியாகவும் மாறிவிட்டது.
விடுதலைப்புலிகளின் அழிவிற்கும் இந்தியா, ராஜபக்சே மட்டுமல்ல காரணம். பிரபாகரனை விதந்தோதி, யதார்த்தங்கள் தலைமைக்குப் புரியவிடாமல் செய்து, இயக்கத்தை விமர்சனம் செய்பவர்களை வசைபாடுவது, இயன்றால் நேரடியாகவே அடித்து உதைப்பது என்ற போக்கு கொண்டிருந்த புலம் பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையிலிருந்த லஜ்ஜையின்றி ஜால்ரா தட்டிய அறிவுஜீவிகளும்தான் என்று நான் ஏற்கெனவே ஒரு சவுக்கு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
நீண்டகாலமாகவே பல்வேறு தளங்களில் இச் சீரழிவுப் போக்கினை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். நான் சொல்லி யார் கேட்கப்போகின்றனர்! சவுக்கார் அடிக்கடி சொம்படிச் சித்தர்கள் பற்றி எழுதிவருகிறார். இந்நிலையில் நானறிந்த, நான் மதிக்கும், சில நபர்கள் பற்றி இங்கே சுருக்கமாக எழுதுவது சிலருக்கேனும் பயன் தருமென நினைக்கிறேன்.
சின்னக்குத்தூசி: அறுபதுகளின் இறுதியில் நான் காங்கிரசில் இருந்தபோது அறிமுகமானவர். அவரை சந்திக்க திருவாரூர் சென்றபோது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஸ்டாலில் அமர்ந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது டீ வந்தது. டீ குடித்தால் உடனே புகைக்கவேண்டுமே. எழுந்தேன். “எதுக்கு தம்மடிக்கவா…எதுக்கா எழுந்துக்கிறீங்க…ஒக்காருங்க ஸ்டாலுக்கு வெளியிலதான் ஒக்காந்திருக்கோம்…புஸ்தகத்துக்கு ஒண்ணும் டாமேஜாவாது..” என்றார் தியாகராஜன்.
அது இல்லே சார், என இழுத்தேன். “என்ன மரியாதையா? ஹ ஹா…என்ன சரஸ்வதியா…கவலைப்படாதீங்கோ. இது லெனின் கடை…தம்மடிக்கக்கூடாதுன்னு அவ்ரு சொல்லல்லியே..” என்று கூறி சிரித்தார்.
தஞ்சை ராமமூர்த்திக்கு நெருக்கமானவராயிருந்தார். காங்கிரஸ் பிளவுபட்டது. ஆடுகள் வேறு வேறு திசையில் சென்றன. நான் அவரது தொடர்பை இழந்தேன். பல ஆண்டுகள் கழித்து சென்னைக்கு நான் வந்தபோது அவர் அலைஓசையில் கன்னாபின்னாவென்று கருணாநிதியை தாக்கிக்கொண்டிருந்தார். அவரை சந்தித்தபோது அது குறித்துக் கேட்டேன். அவர் சற்றும் தயங்காமல், “காங்கிரஸ் போணியாகல்ல….மக்களுக்கெதிரா யார் இருந்தாலும் அவங்களை அட்டாக் பண்ணணும்…அதுதான் நம்ம பாலிசி. நமக்கு வேலூராரு ப்ளாட்ஃபார்ம் கொடுத்திருக்கிறாரு…பயன்படுத்துறேன்,” என்றார்
அது எனக்கு உடன்பாடில்லை. அவரை சந்திப்பதை நிறுத்திக்கொண்டேன். அவருக்கென்று ஒரு இரசிகர் வட்டம் உருவாகியது. ஈவேகி சம்பத்தின் ஆதரவாளர் அந்த அளவில் கருணாநிதிமீது அடங்காக் கோபம் இருந்திருக்கவேண்டும். ஆனால் நாளடைவில் கலைஞர் ஆதரவாளரானார். முரசொலியிலும் இணைந்தார். மனம்போனபடி கருணாநிதியை விமர்சனம் செய்தவர்களைத் தாக்கினார். வை.கோ பிரிந்து சென்றபோது என்னிடம் சராசரி திமுக நபர்போல அவரை வசைபாடினார். ஆனாலும் ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேறிய நேர்ந்தது. அப்போது நக்கீரன் கோபால் தடுத்தாட்கொண்டார். இறுதிவரை அவரை கவனித்துக்கொண்டவர் கோபால்தான்.
மற்றவர்களிடம் எளிமையாகப் பழகுவதைத் தவிர கோபாலிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரே விஷயம் அவர் குத்தூசியைப் பராமரித்ததுதான். (பலருக்கு கோபால் பொருளாதார ரீதியாக உதவுகிறார் எனவும் தெரிகிறது.) ஆனால் சின்னக்குத்தூசி அப் பராமரிப்பிற்காகக் கொடுத்த விலை என்ன?
திமுக விசுவாசம் தொடர்ந்ததென்பதற்கப்பால், நக்கீரனின் பல்வேறு சந்தர்ப்பவாத, இழிவான செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டியதாயிற்று. எனக்குத் தெரிந்து அவர் ஒரு முறை கூட நக்கீரன் செய்வது தவறு என எக்கட்டத்திலும் கூறியதில்லை.
திமுகவை அவர் மனப்பூர்வமாகத்தான் ஆதரித்தார். இன்றைய கட்டத்தில் அரசியல் ரீதியாக அதுவே சரி என்பது அவரது வாதமாக இருந்தது. ஒரு தலைவனிடமும் போய் தலை சொறியமாட்டார். அஞ்சு பைசா லாபம் பெற்றவரல்ல. ஆனால் லட்சக்கணக்கில் சுருட்டியவர்களை விடவும் தீவிரமாக ஆதரிப்பார்.
ஆனால் நக்கீரனைப் பொறுத்தவரை அவருக்கு பொருளாதார ரீதியான கட்டாயம் இருந்திருக்கவேண்டும். அரசியல் ரீதியாக அவர்களது நிலைப்பாடு அவருக்கு ஏற்புடையதாயிருந்திருக்கலாம். ஆனால் பல்வேறு ரசனைக் குறைவான அம்சங்கள் குறித்து ஏன் வாய்மூடி மௌனியாயிருந்திருக்கவேண்டும்? ஏதோ ஒரு பிளாட்ஃபார்ம் என்பதற்காக நக்கீரன் வகையிலான சீரழிவுப் போக்கினை ஆதரிப்பதா, அல்லது பேசாமலிருப்பதா?
கருணாநிதியையோ அல்லது நக்கீரனையோ அவர் எதிர்க்கத் துவங்கியிருந்தால் அவருக்கு மேடை கிடைத்திருக்குமா என்பதும் நியாயமான கேள்வியே. ஆனால் பேசாமல் இருந்ததால் ஒரு சில அவலங்கள் அரங்கேறத் துணைபோயிருக்கிறார் என்பதுதான் பொருள்.
இரா.ஜவஹர்: சின்னக்குத்தூசி வட்டாரத்தில் முக்கியமான நபர். எனக்கும் நெருக்கமானவர். என்னை எவராவது சாடினால் வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிப்பார். கூடுதலாகவே புகழ்வார்.
சொந்த வாழ்வில் அப்பழுக்கற்றவர். எதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளமாட்டார். அவரது பள்ளியில் உருவான சிலரிடமும் இத்தகைய உயரிய குணத்தினைக் காணமுடியும்.
இந்த முன்னிறுத்திக்கொள்ளுதல் எனும் சொற்றொடரை என் பதிவுகளில் அடிக்கடி பார்க்கலாம். அவ்வித அணுகுமுறை எனக்கு சற்றும் ஒவ்வாதது என்பதாலேயே அப்படி அல்லாதவர்கள் புகழை தொடர்ந்து பாடுகிறேன்.
எனக்கிருக்கும் சில பலவீனங்களும் தோழர் ஜவஹருக்கில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக அவருடன் கடுமையாக முரண்படுவேன். எண்பதுகளில் வகுப்பெல்லாம் நடக்கும் அவருடன் மோதுவேன். தீவிர மார்க்சிஸ்ட். மார்க்சீயத்தின் பெயரால் ஸ்டாலின் முதல் மாவோ வரை எல்லாவற்றையும் நியாயப்படுத்துவார். அரசதிகாரத்திற்கெதிரான எந்த முயற்சியையும் மனமார வாழ்த்துவார். முயற்சி எடுப்பவர் எப்படிப் பட்ட நபர், அந்தப் போக்கு சரிதானா என்றெல்லாம் ஆராயமாட்டார். ஆளும் வர்க்கம் பலவீனப்படுகிறதே அது போதும் அவருக்கு. ஏறத்தாழ டி.எஸ்.எஸ். மணியின் நிலைப்பாடு.
அந்த அளவில் ஜவஹர் நக்கீரனை ஏதோ ஒருவகையில் subaltern முன்முயற்சியாக, அடித்தட்டு மக்களின் பிராமணரல்லாதாரின் குரலாகப் பார்க்கிறார். ஓரளவு அதில் உண்மையிருந்தாலும் அது பிராமணரல்லாத இளைஞர்களை வக்கரிக்கவைக்கிறது, கருணாநிதி பற்றி போலியானதொரு பிம்பத்தினை உருவாக்க முயல்கிறது என்பது எவ்வளவு ஆபத்தானதொரு செயல்? அவர் பேசமாட்டார். பத்திரிகை தரத்தை குலைக்கும் வகையில் எத்தனை எத்தனை செய்திகள் நக்கீரனில்?
இண்டியா டுடே பேட்டி தொடர்பில் குஷ்புவிற்கெதிராக மிகக் கேவலமான பிரச்சாரத்தை செய்தது நக்கீரன். என்.டி.டிவி நிகழ்ச்சியில் கோபால் பங்கேற்று, இனி தங்கள் பெண்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தாய்மார்கள் ஜியாமெட்ரி பாக்சில் பென்சில், ரப்பருடன் காண்டம் இருக்கிறதா என்பதையும் செக் செய்து அனுப்பவேண்டிய நிலையை குஷ்பு உருவாக்குகிறார் என்றார். இத்தகைய பிற்போக்குவாதத்தையும் பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக ஏற்றுக்கொள்வார் ஜவஹர்!
சின்னக்குத்தூசி விருதுகளுக்கான நபர்களைத் தெரிவு செய்யும் குழுவுக்குத் தலைவரும் அவரே. சொந்த வாழ்வில் எவ்வித நேர்மையுமற்ற பலருடனும் படு இயல்பாக மேடையேறுவார். இப்படிப்பட்டவர்களால் நன்மை விளையுமா தீய சக்திகள் வளர்கின்றனவா?
டி.எஸ்.எஸ் மணி எனக்கு இன்னமும் நெருக்கமானவர். ஜவஹர் பற்றி சொன்னது பல அவருக்கும் பொருந்தும். தான் எவ்விதத்திலும் பயனடையாவிட்டாலும் புரட்சியின் பெயரால் எங்கும் போய் நிற்பார் எவரையும் ஆதரிப்பார். அரசை அசைத்துவிட்டோம் என்ற திருப்தி அது போதும் அவருக்கு.
தியாகு எங்கோ ஆரம்பித்து தமிழ்த் தேசியத்தில் முடிந்திருப்பவர். எளிய வாழ்க்கை. தன்னலமில்லை..ஆனால் மூர்க்கமான விடுதலைப் புலி ஆதரவு. அவரது எழுத்துக்களால், உரைகளினால் எவ்வளவு பேர் வழி தவறியிருப்பார்கள்?
எஸ்.வி.ராஜதுரை (எஸ்.வி.ஆர்.) பலராலும் போற்றப்படும் பெரும் அறிவுஜீவி. ஆனால் ஸ்டாலினீயத்தை விமர்சித்த அளவு அவர் பெரியாரை விமர்சிக்க முன்வரவில்லை. பெரியாரைப் பற்றி ஆய்வு செய்தால் மிகப்பெரும் வாசகர் வட்டம் கிடைக்கிறது என்பதாலோ என்னவோ முழுமூச்சாக பெரியாரிஸ்டானார். வசதியாக பெரியாரை எத்தளத்திலும் விமர்சனம் செய்வதைத் தவிர்த்தார்.
எந்த அளவென்றால் பல்வேறு காரணங்களினால் ஒதுக்கப்பட்ட குத்தூசி குருசாமி எழுத்துக்களின் தொகுப்பை வெளியிடும்போது கூட பெரியார் அவருக்கிழைத்த அநீதி பற்றி மூச்சுவிடவில்லை எஸ்விஆரும் கீதாவும்.
அ.மார்க்ஸ்: அ.மார்க்சிற்கும் மேலே குறிப்பிட்டவர்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. மற்றவர்கள் என்னை ஓரளவு மதிப்பார்கள்! ஆனால் நீண்டகாலம் என்னை சந்தேகித்தவர் மார்க்ஸ். பிராமணக் குடும்பத்தில் பிறந்து மற்றவரை ஏமாற்ற வேடம் போடுகிறேன் என நினைத்தவர்.
ஒரு கட்டத்தில் என் மகன் பெயரை சசிதரன் அம்பேத்கர் என மாற்றினேன். அவனும் உடன்பட்டான். மனைவி பேசாமலிருந்தார். தொலையட்டும் என விட்டுவிட்டார் என நினைக்கிறேன். ஆனால் பெயர் மாற்ற சட்ட பூர்வ சடங்குகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள். என் ஆர்வம் அவ்வளவுதான் விட்டுவிட்டேன்.
அந்த நேரத்தில் என் மகன் சென்றவிடத்திலெல்லாம் சசிதரன் அம்பேத்கார் என அறிமுகப்படுத்திக்கொள்வான் . இது குறித்து என் நண்பர் ஒருவர் மார்க்சிடம் பெருமையாகச் சொன்னபோது, ”இதெல்லாம் சும்மா ஒரு பம்மாத்துவேலை…ஏன் துணிச்சலிருந்தால் வீராச்சாமி எனப் பெயர் வைக்கவேண்டியதுதானே… அம்பேத்கர் என்ன அம்பேத்கர்..பெருமைக்காக..” என்றிருக்கிறார். அது சரியோ என்னவோ, பெயர் நிலைக்கவில்லை. என் மகன் அதை மறந்தே போயிருப்பான்.
மார்க்ஸ் பெரியாரியம் குறித்து நடத்திய சந்திப்பில் நான் பெரியாரை விமர்சிக்க நிலை இன்னமும் மோசமானது.
நான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சனம் செய்தது வேறு கோபம். நான் சொல்வது 90களில். மனித உரிமை தொடர்பில் சில தன்னார்வக் குழுக்களுடன் நெருங்கிப் பணியாற்றியதால் நான் ஒரு என்.ஜி.ஓ ஏஜெண்ட் என்று கூடப் பார்த்தார்.
ஆனால் நாளடைவில் இறுக்கம் தளர்ந்தது. அண்மையில் மதுரை காமராசர் பல்கலைக் கழக பிரச்சினை தொடர்பான கருத்துக் கேட்புக் குழுவில் இருவரும் இருந்தோம். மிக கண்ணியமாகப் பழகினார். அவர் என்னுடன் அக்குழுவில் பணியாற்ற ஒத்துக்கொண்டதே எனக்கு வியப்புத்தான்.
பின்னாளில் விடுதலைப்புலிகள் குறித்த அவரது மதிப்பீடு மாறியது. பெரியார் பற்றி மாற்றம் ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனால் முஸ்லீம்கள் பிரச்சினையில் அவரது நிலைப்பாடுகள் ஆரோக்கியமானதே அல்ல. அவரும் புதுவை கோ.சுகுமாரனும் இணைந்து அநீதி இழைக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக அயராமல் துணிச்சலுடன் குரல் கொடுத்திருக்கின்றனர், சிலரை போலீசாரிடமிருந்து மீட்டெடுப்பதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால் இந்துத்துவத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இருவருமே அடிப்படைவாதிகளை அவ்வப்போது ஆதரிக்கின்றனர். இந்துத்துவ பரிவாரத்தினை கண்டிக்கும் தீவிரம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை விமர்சிக்கும்போது இருக்காது. இன்னும் சொல்லப்போனால் பகிரங்கமாகவே ஜவாஹிருல்லாவை பாராட்டுகின்றனர். அவரோ பௌமியான் சிலை தகர்ப்பை, பொதுவாக வஹாபியத்தை, ஆதரிப்பவர். இத்தகைய அணுகுமுறை முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் தவறான சிந்தனைகளை உருவாக்குவது மட்டுமல்ல, இந்துக்கள் மத்தியில் முற்போக்குவாதிகள் போலி செக்யூலரிஸ்டுகள் என்ற ஒரு கணிப்பினை வலுப்படுத்துவதாகவும் அமைகிறது.
நான் மிக மதிக்கும் தலித் அறிவுஜீவி ரவிகுமார் ஓர் அரசியல்வாதியானது மட்டுமல்ல அவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சவுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. அதற்கும் அப்பால் தன்னின இளைஞர்களின் அறிவுத்தேடலை ஊக்குவிக்க அவர் ஏதும் செய்தார் என நினைக்கவில்லை.
பேராசிரியர் பிரபா கல்விமணி : சற்றும் தன்னலமற்ற மக்கள் தொண்டர், முற்போக்கு சிந்தனையாளர், அடித்தட்டு மக்கள் வாழ்வில் ஸ்தூலமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பவர் என்றால், நாம் அனைவரும் தலைவணங்கவேண்டிய ஒரு நபரென்றால் அவர்தான். ஆனால் அவரும் ஒதுக்கப்படவேண்டிய பதர்களுடனெல்லாம் உறவாடுவார். அவர்களுக்கு நாம் தேவையில்லாமல் நம்பகத்தன்மையினை உருவாக்குகிறோம் என அவருக்குத் தோன்றாது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். என் பட்டியல் முழுமையானது அல்ல. நினைவுக்கு வந்தவர்கள் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறேன். அதுவும் முற்போக்காளர்களைப் பற்றி மட்டுமே.
இயல்பான எதிர்வினை. நான் பிராமணன் என்பது. அது குறித்து நான் ஏதும் சொல்ல இயலாது. அத்தகைய பார்வை என்னிடம் இருக்கிறதா என்பதை மற்றவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.
அடுத்து, நீ என்ன கிழித்தாய்? சமரசம் செய்துகொண்டாலும், மற்றவர்கள் ஏதாவது ஒரு தளத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர் ஓரளவேனும். எந்த விதமான தாக்கத்தை நீ ஏற்படுத்தினாய்? உருப்படியாய் என்ன செய்தாய்? எண்பதுகளில் நிறைய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அதைப் பற்றியெல்லாம் நீ இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால் நான் இணைந்து பணியாற்றியவர்களுடன் முரண்பட்டபோது ஒதுங்கிவிட்டேன். ஒடுங்கியும்விட்டேன் என்பதும் உண்மை. பிழைப்பே பிரதானமானது. எனவே மற்றவர்களைக் குறைசொல்ல எனக்கு அருகதை இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
ஆயினும் இன்றளவில் ஆத்ம சுத்தியோடு என்னை ஏற்றுக்கொள்பவர் சவுக்கு சங்கர்தான். என்னை அவர் சந்தேகிப்பதில்லை. நான் சொல்வது சரியாக இருக்கும் என்றே பலநேரங்களில் நினைக்கிறார், அதற்கேற்பவே நடந்தும்கொள்கிறார். அவரது அணுகுமுறை தவறு என நான் நினைக்கும்போது தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் கண்டிக்கிறேன். ஏற்புடையதாயிருந்தால் ஒத்துக்கொள்கிறார். இல்லையென்றால் மன்னியுங்கள், என்று அவர் போக்கில்தான் செல்வார்.
ஆனால் இப்போதெல்லாம் அவரது விமர்சன்ங்கள் வரையறைக்குட்பட்டே இருக்கிறது. தனது பொறுப்பை உணர்ந்தே செயல்படுகிறார். வரம்பு மீறினால் இருவருக்கும் இழப்பே. அப்படி ஆகிவிடாது என்றே நம்புகிறேன்.
வாழ்வின் இறுதியில் ஆர்வலன், சமூக மாற்றத்தை விரும்புபவன் என்ற முறையில், ஓரளவேனும் திருப்திப் பட்டுக்கொள்ள அவர் உதவுகிறார். நான் சொல்ல விரும்பும் செய்திகள் ஆயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைய காரணமாயிருக்கிறார். எனவே அவருக்கு கோடானுகோடி நன்றி. அது மட்டுமல்ல, அவருக்கிருக்கும் கட்டாயங்களை மீறி, குற்றம் காணுமிடத்தில், கொதித்தெழுகிறார். இதுவே அவரிடம் காணும் தனிச் சிறப்பு.
அது இன்றைய கால கட்டத்தில் மிக முக்கிய பண்பு. அத்தகைய சீரிய சிந்தனை வளரட்டும். புனிதப்பசுக்கள் அனைத்தும் கொல்லப்படட்டும்.
–த.நா.கோபாலன்
நானும் இதை சரியான மதிப்பீடு என்றே கருதுகிறேன். ஐயா அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை கவனியாமல் மனம் போன போக்கில் கருத்திடுவதைப் பார்த்தால் வருத்தம்தான் மேலோங்குகிறது.
சவுக்கிலே வந்திருக்குன்னா அது சரியான மதிப்பீடாக தான் இருக்கும்.
veena ponavan ellam serthu oru katturiya?? comediy paa? ivanga ellarum oru 5 paisakku udavara mathri irupaangala??? kirukku pasanga..
Dear Mr.Gopal. Your article looks like an Jew’s word. They will find the difference between two people or groups, make the difference into conflict, will ignite the conflicts with aversion, turn this aversion into hostility & finally fighting & killing each other. But Jew used to monitor all the things happening around him. Your article is a kind of create a hate policy between people. There are difference in characters between people. If you are good social activist, you should accept it. No one is perfect in this world. But don’t initiate the problems.
சூழ்நிலையை ஒத்து விமர்சனங்கள் பிறக்கின்றன. அவற்றை வைத்து அதை எழுதுபவரின் தகமை தீர்மானிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு குறித்திருந்த குற்றச்சாட்டு சரியானதல்ல. அது மிக ஆழமாக ஆராயப்படவேண்டிய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். அங்கு தப்பு தவறு நடக்க சந்தற்பம் இருந்தாலும், அவைகள் உள்ளிருப்பாளர்களால் புரியப்படாமலில்லை. இருந்தும் இறுதி குறித்த ஒரு திட்டமிடப்பட்ட புரிதலுடன் நகர்த்தப்பட்டு இந்தியாவின் திட்டமிட்ட சதியால் சர்வதேச உதவியுடன் திசைமாற்றப்பட்ட ஒரு வரலாற்று தோல்வி. விடுதலைப்புலிகள் அதை புரிந்துகொள்லவில்லை என்ற குற்றச்சாட்டு வாதத்துக்காக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும். சூழ்நிலை சம்மதிக்கவில்லை என்பது இப்போதும்கூட நெருடலாகவே இருந்து வருகிறது.
சில விமர்சனத்துக்குரிய சிலரது செயற்பாடுகள் அவரவது சிந்தனை சார்ந்து வெளிவருவதுண்டு. அது செயற்பாட்டாளராக இருக்கலாம் விமர்சிப்பவராகவும் இருக்கலாம்
சில கட்டங்களில் எதிராக உள் மனது வாக்களித்தபோதும், அந்த நேரத்தின் சூழ்நிலையை கருதி மாற்றியமைக்க முடியாமல் போவதுண்டு.
கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் விசி ரவிக்குமார், தியாகு ஆகியோரை ஓரளவு படிப்பாளிகள் என்ற ஏற்றுக்கொளுமை இருந்தாலும் பாகுபாடற்ற விமர்சனம் செய்யக்கூடிய அறிவாளிகள் அல்ல என்பது சரியே. அவர்கள் தாம் சார்ந்த அமைப்புக்களின் கொள்கை சார்ந்த கருத்துக்களையே முன்னிறுத்தி வந்திருக்கின்றனர்,
காலம்தான் சில விடயங்களை தீர்மானிக்கிறது, விமர்சனம் செய்வது இலகுவானது என்பதே எனது கருத்து.
felt like being in a mental hospital.
எழுதிய கமெண்ட்டை, எழுதியவரே டெலிட் செய்ய வசதி உள்ளதா?
Gobalan சார் அப்போ இந்த லோகத்திலேயே தாங்களும், சங்கர் அவர்களும் தான்100% உத்தமர்கள்ன்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்.
மனுஷ்யபுத்திரன் தி.மு.காவை நேரடியாக ஆதரிக்கும் வரை சங்கர் அவர்களுக்கு அவரின் பித்தலாட்டங்கள் எதுவும் தெரியவிலலை. அதன் பிறகு தான் மனுஷ்யபுத்திரன் அயோக்கியர் ஆனார். நீங்களும் முடிந்தால் கருணாநிதிக்கு ஆதரவாக ஒரு முறை எழுதி பாருங்கள். அப்போது தான் உங்களை பற்றிய உண்மையான செய்தியையும் எழுதுவார்.
உங்கள் மகனாரின் பெயரை “அம்பேத்கர்” என்று பெயர் மாற்ற சட்ட பூர்வ சடங்குகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள், அதனால் மாற்ற முடியவில்லை.. இந்தியாவில் அம்பேத்கார் என்று பெயர் மாற்றுவதில் அவ்வளவு சிக்கலா???? நம்பி விட்டேன் … சங்கர் அவர்களுக்கு தான் எல்லா சட்டங்களும் அத்து படி ஆயிற்றே, அவரை கேக்கலமே…..!
அப்போ இந்த லோகத்திலேயே தாங்களும், சங்கர் அவர்களும் தான்100% உத்தமர்கள்ன்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்.
aiya gopala
“Pirapokkum ella uyirkum sirappovva
seitholil verrumaiyan”
krual kelvipattathillaya? bramanan aka piranthathu etho kurram pola pesukirire. avvalavuthan umathu arivu aalam!