பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களும், 2013ல் காலியாக உள்ள ராஜ்ய சபை இடத்தில் அன்புமணி ராமதாஸுக்கு மன்னிக்கவும், சின்ன அய்யாவுக்கு ஒரு இடமும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த இடங்கள் ஒதுக்குவது குறைவே என்றாலும்,தற்போது உள்ள அரசியல் சூழலில், அரசியல் அனாதை ஆவதை தவிர்க்கும் பொருட்டு, கொடுத்ததை வாங்கிக் கொண்டு கரை சேரலாம் என்று ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொள்முதல் செய்வதற்கான அனைத்துக் கட்சிக் குழுவில் கலந்து கொண்ட கோ.க.மணி (ஜி.கே.மணி இல்லை. கோ.க.மணி, தமிழார்வமாம்) இன்று கலந்து கொண்டார். நேற்று, கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியிடம் 28 தொகுதிகள் என்ற எண்ணிக்கையையும், எந்தெந்த இடங்கள் என்ற விபரத்தையும் எழுதிக் கொடுத்ததில், அன்புமணிக்கு ராஜ்ய சபா இடம் என்ற ஒரே ஒரு மாறுதலோடு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்தனுப்பிய காகிதத்தை, கோ.க.மணி கருணாநிதியிடம் இன்று ரகசியமாக வழங்கினார் என்றும், அந்த காகிதத்தை பார்த்த கருணாநிதி, தனது சம்மதத்தை கோ.க.மணியிடம் தெரிவித்தாகவும் தெரிகிறது.
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி குழுக் கூட்டத்தில் கருணாநிதி அருகில், கோ.க.மணி
இதற்கான வெளிப்படையான அறிவிப்பு, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகே வெளியிடப் படும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இத்தனை இடங்கள் ஒதுக்கி ஒப்பந்தம் நடைபெற்று விட்டது, அதனால், உங்களுக்கு இத்தனை இடங்கள் தான் தர இயலும் என்று, காங்கிரஸ் கட்சியை கிடுக்கிப் பிடி போடவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்றும் தெரிகிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களும், திமுக வட்டாரங்களும் இத்தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளன.
அன்பு மணி ராமதாஸுக்கு ராஜ்ய சபை சீட் கேட்டதற்கான பின்னணி, “நைனா… என்னை எம்பியாக்கு நைனா.” என்று அன்புமணி தனது தந்தையுடன் மிகுந்த அடம் பிடித்ததே என்று தெரிகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமலேயே, மத்திய அமைச்சராகி ஐந்து வருடங்கள் பிழைப்பை ஓட்டிய அன்புமணி, மீண்டும் எம்.பியானால், காங்கிரஸ் கையில் காலில் விழுந்தாவது அமைச்சராகி விடலாம் என்று உத்தேசித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.