கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் சென்னை கிரிக்கேட் வாரிய வளாகத்துக்குள் உள்ள மெட்றாஸ் கிரிக்கெட் க்ளப்புக்கு சொந்தமான அரங்கத்தில், முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம் எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற… நிகழ்ச்சியில், வேட்டி அணிந்து சென்ற காரணத்தால் அவரை அனுமதிக்கவில்லை.
இந்த செய்தியை டைமஸ் ஆப் இந்தியா வெளியிட, தீப்பற்றி எரிந்தது தமிழகம். கொதித்தெழுந்துள்ளார்கள் கலாச்சார காவலர்கள். அய்யகோ…. செத்து விட்டதே தமிழ் பண்பாடு….என்று புலம்போ புலம்பு என்று புலம்புகிறார்கள்.
தமிழனின் நினைவாகவே சதா சர்வகாலமும் வாழ்ந்து வரும் கருணாநிதி, அவரே கேள்வியைக் கேட்டு அவரே பதிலையும் சொல்லிக் கொண்டார்.

க்ளையன்டுகளிடம் ஃபீஸ் வாங்கும்போது, கித்தாப்பாக ஆடையணிந்து கொண்டு, தமிழனுக்காக வேட்டியின் மானத்தைக் காக்க ஆர்ப்பாட்டம் நடத்தும் வழக்கறிஞர்கள்.
கேள்வி :- உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற மூத்த வழக் கறிஞர்களும் வேட்டி கட்டிக் கொண்டு சென்ற காரணத்தால், தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்களே?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் மற்றும் அப்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமனோடு “வேட்டி”அணிந்து கிரிக்கெட் பார்க்கும் கருணாநிதி
பதில்- தமிழர்களின் கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும். பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.”
வைகோ, வழக்கம் போல, சேப்பாக்கம் சம்பவத்தில் தொடங்கி, கிரேக்கத்தில் சென்று அறிக்கையை முடித்தார். ” இன்றைய மேல்நாட்டு கலாச்சாரத்துக்காரர்கள் நாகரிகத்தின் வாசனை அறியாத காலத்திலேயே உலகின் பெரும் பகுதிகளில் ஆடை அணியும் கலையை அங்கு வாழ்வோர் அறியாத காலத்திலேயே மானத்தைப் பெரியதாகப் போற்றிய தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆடை அணியும் நாகரிகத்தைப் பெற்றிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நெய்த பட்டுத் துணிகள் எகிப்துக்கும், கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டது.
அத்தகைய உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருக்கும் தமிழர்களின் பூர்வீக அடையாளமான வேட்டி உடுத்துவதை, ஆடை அணிவதை அனுமதிக்க முடியாது என்று சென்னையில் உள்ள பல்வேறு கிளப்புகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும்.” (இந்த ஆளை ஏன் யாருமே விளையாட்டுக்கு சேத்துக்கு மாட்றாங்கன்னு இப்போதான் புரியுது. சேப்பாக்கத்துல ஆரம்பிச்சு கிரேக்கத்துல முடிக்கிறார் பாருங்க)
ராமதாஸ், திருமாவளவன், ஞானதேசிகன், என பாரபட்சமில்லாமல் இந்த விவகாரத்தில் வளைத்து வளைத்து அறிக்கை விட்டனர். வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். முகநூலிலும், இதர சமூக வலைத்தளங்களிலும், விவாதங்களில் அனல் பறந்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும், இந்து நாளேடுகள் இது குறித்து கேட்டபோது, சம்பவத்தை உறுதி செய்துள்ளார் நீதிபதி ஹரிபரந்தாமன். இச்சம்பவத்தை கண்டித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இது போன்ற உடை கட்டுப்பாடுகள் காலனி ஆதிக்கத்தின் எச்சம் என்றும், உடனடியாக தமிழர் பாரம்பரியத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி. அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால்தான் இது இத்தனை பெரிய செய்தியானது என்பதை மறுக்க முடியாது. இது போன்ற அவமானங்கள், தமிழகமெங்கும் சாமான்ய குடிமகனுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
நீதிபதி மற்றும் தோழர் சந்துரு, இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதியுள்ள கட்டுரையில், வேட்டியோடு சென்ற ஒரு தமிழ் நீதிபதியை அனுமதிக்காத காரணத்தால், தமிழ்க் கலாச்சாரத்துக்கு நேர்ந்த ஆபத்து என்று கூக்குரலிடுபவர்கள், அரைகுறை ஆடைகளோடு, இதே சேப்பாக்கம் மைதானத்தில் அழகிகள் நடனமாடும்போது எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். (http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Why-this-dhoti-despotism-by-folks-in-coats-16072014006016
மிக மிக நியாயமான கேள்வி இது.
தமிழ்க் கலாச்சாரம் வேட்டியிலா அடங்கியுள்ளது ? தமிழ் மொழி பள்ளிகளில் இல்லை. கல்லூரிகளில் இல்லை. அரசு அலுவலகங்களில் இல்லை. ஆங்கிலப் பள்ளிகளுக்கு இருக்கும் மரியாதை தமிழ்ப் பள்ளிகளுக்கு இல்லை. இன்று ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழ் இளைஞனுக்கு வேலை இல்லை. இந்த அவல நிலைகளையெல்லாம் எதிர்த்துப் பொங்காத அரசியல் கட்சிகள், வேட்டிக்காக பொங்குவதை நினைத்தால் இவர்கள் எவ்வளவு போலித்தனமானவர்கள் என்ற எண்ணமே வருகிறது.
வேட்டி அணிந்தவரை உள்ளே அனுமதிக்க மறுத்த கிரிக்கெட் கிளப்பின் செயல், காலனியத்தின் எச்சம் என்று கூறி பொங்குகின்றனர். நீதிபதி ஹரிபரந்தாமன் கூட, இதை கடுமையாக கண்டிக்கிறார்.
காலனியத்தின் எச்சமாக துருத்திக் கொண்டு இன்று நிற்பது எது தெரியுமா ? நீதித்துறைதான். ஆங்கிலேய காலத்தில் எப்படி நீதித்துறை செயல்பட்டதோ, அதில் கொஞ்சமும் மாறுபடாமல்தான் இன்றும் நீதித்துறை செயல்பட்டு வருகிறது. நீதிபதிகள் நடந்து செல்கையில் அவர்கள் முன்பாக, வெள்ளித்தடியேந்திய டவாலிகள். ஸு ஸு என்று கத்திக் கொண்டு செல்வது தமிழ்க் கலாச்சாரமா ? குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் இந்த டவாலிகள், நீதிபதி நீதிமன்றம் செல்லும் வரையில் ஸு ஸு என்று கத்தி முடித்து விட்டு, நீதிமன்ற ஹாலின் வாயிலிலேயே நின்று, வழக்கு முடிந்து வெளியே வரும் வழக்கறிஞர்களிடம் கையேந்துகிறார்களே இது தமிழ்க் கலாச்சாரமா ?
நீதித்துறையைப் போல போலி அடையாளங்களை போற்றிப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை பார்க்கவே முடியாது.
மை லார்ட், லார்ட்ஷிப் என்று நீதிபதிகளை அழைப்பது தேவையில்லை, யுவர் ஆனர் அல்லது சார் என்று அழைக்கலாம் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியாவே தீர்மானம் இயற்றிய பிறகும், இன்றும் வழக்கறிஞர்கள் லார்ட்ஷிப் என்றுதானே அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ? இப்படி லார்ட்ஷிப் என்று அழைக்காமல், ஹானரபிள் கோர்ட் என்று ஒரு வழக்கறிஞர் வாதாடுகையில் குறிப்பிட்டாரேயானால், அவர் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது, உறுதி. அதுவும், வாசுகி போன்ற நீதிபதி முன்பாக, மூத்த வழக்கறிஞர்கள் லார்ட்ஷிப் என்று அழைக்கையில் அவர் முகத்தில் ஏற்படும் பூரிப்பைப் பார்க்க வேண்டுமே…..
வழக்கறிஞர்கள் பிழைப்புக்காக லார்டுஷிப் என்று அழைப்பதைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், நீதிமன்றத்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்கள் எதற்காக இவர்களை லார்ட்ஷிப் என்று அழைக்க வேண்டும் ? சென்னை உயர்நீதிமன்றத்தின் அத்தனை ஊழியர்களும், நீதிபதிகளை லார்ட்ஷிப் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்பது உங்களுக்குத் தெரியுமா ?
வழக்கறிஞர்கள் கோட் அணிந்து நீதிமன்றம் வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், நீதிமன்றத்தில் அமரும் பென்ச்சு க்ளர்க் எதற்காக கோட் அணிய வேண்டும் ? கிறுக்குத்தனமாக இல்லை ? நீதிபதி ஹரிபரந்தாமனுக்கு, இந்த கிறுக்குத் தனங்களெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
வெயில் தாங்காத வெள்ளைக்காரன், கோடைக்காலத்தில் பணியாற்ற விரும்பாமல், நைனிட்டால், சிம்லாவில் ஓய்வெடுத்ததை புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திர இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு எதற்காக ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை ? மற்ற அரசு அலுவலகங்கள் வருடம் முழுவதும் இயங்குகையில், வழக்குகளை தீர்ப்பதில், எருமை மாட்டின் வேகத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அவசியமா ? கோடை விடுமுறை மட்டும் இல்லை. தசரா விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை. சனி ஞாயிறு விடுமுறை. இப்படியெல்லாம் விடுமுறை விடச்சொல்வது தமிழ்க் கலாச்சாரமா ?
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொருவருக்கும் தகுதியான அலுவலக உதவியாளர்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா ? எட்டு. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அலுவலக உதவியாளர்கள் எட்டு பேரை பணியமர்த்திக் கொள்வதற்கு இந்த நீதிபதிகளுக்கு யார் உரிமை கொடுத்தது ? தமிழகத்தில், தலைமைச் செயலாளர் உட்பட, யாருக்குமே எட்டு அலுவலக உதவியாளர்கள் கிடையாது தெரியுமா ?
இந்தியா முழுக்க அரசுத் துறைகளுக்கு, துப்புறவுத் தொழிலாளர்கள் முதல், உயர் அதிகாரி பதவி வரை, வெளிப்படையாக மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஒன்று வேலை வாய்ப்பகம் மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக செய்யப்படும் அனைத்துத் தேர்வுகளும் சட்டவிரோதம் என்று பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. இந்தத் தீர்ப்புகளையெல்லாம் கரைத்துக் குடித்தவர்கள்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளார்கள். இவர்களுக்குத் தெரியாத சட்டமில்லை.
ஆனால், தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள், சொந்த ஊர்க்காரர்கள் என்று அலுவலக உதவியாளர்களாக, எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் இன்று வரை நியமனம் செய்து கொண்டு இருப்பவர்களே இந்த நீதிபதிகள். இதற்கு நீதிபதி ஹரிபரந்தாமனும் விதிவிலக்கல்ல. இது தொடர்பான சவுக்கு கட்டுரை. நீதிபதிகள், தங்கள் சுருக்கெழுத்தர்களை, உதவியாளர்களை, வாகன ஓட்டுனர்களை, அலுவலக மற்றும் இல்ல உதவியாளர்களை, விரும்பியபடி, விரும்பும் நபர்களை நியமித்துக் கொள்ளலாம் என்பது காலனிய எச்சமா இல்லையா ? அரசுப் பணி நியமனம் தொடர்பான அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்துக்கள் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்து, அரசுப் பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை என்பது, அவசியம் என்று, பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ள நிலையில் தனக்குத் தெரிந்த நபரை, அரசு ஊழியராக நியமனம் செய்ய பரிந்துரை செய்த ஹரிபரந்தாமன் காலனிய எச்சம் பற்றிப் பேசலாமா ?
ஒரு வேட்டி கட்டிய தமிழனை அனுமதிக்க மறுத்து விட்டார்களே என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்பிரமணியிடம் பேசும் நீதிபதி ஹரிபரந்தாமன், அலுவலக உதவியாளரை நியமனம் செய்தது குறித்துப் பேசுவாரா ?
தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் என்பது, ஒரு பார்ப்பன மடம். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முன்னால், “பிராமணாளுக்கு மட்டும்” என்று நடத்தப்பட்ட ஹோட்டல்கள், விடுதிகள் போன்ற ஒரு இடமே கிரிக்கெட் கிளப். நகம் வெட்டாதவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூட அவன் ஒரு புதிய விதியை நியமிப்பான். பிடிக்காவிட்டால் நீங்கள் ஏன் போக வேண்டும் ? அது அரசுக்கு சொந்தமான பொது இடமா என்ன ?
இது குறித்து கோபப்படும் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள், உச்சநீதிமன்றத்திலிருந்து நாளை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வருகையில் வேட்டி கட்டிக் கொண்டு செல்லுவாரா ? “நான் ஒரு தமிழன். வேட்டிதான் கட்டுவேன்” என்று ஆர்.எம்.லோதாவிடம் பிடிவாதம் பிடிப்பாரா ? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்ல. உச்சநீதிமன்றத்திலிருந்து எந்த நீதிபதி வந்தாலும், கோட்டையும் சூட்டையும் போட்டுக் கொண்டு சத்தம் போடாமல் பின் வரிசையில் அமர்கிறாரா இல்லையா நீதிபதி ஹரிபரந்தாமன் ? உச்சநீதிமன்ற நீதிபதி வந்தால், கோட் சூட் போட்டுக் கொண்டுதான் அவரை விமான நிலையத்தில் இருந்து வரவேற்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவரை சந்திக்கச் சென்றால் கூட கோட் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதா ? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ளதா ? நீதிபதி ஹரிபரந்தாமனின் நீதிமன்றத்தில் அமரும், பென்ச்சு க்ளர்க், கோட் போட்டுக் கொண்டுதான் அமர வேண்டும் என்பது தமிழ்க் கலாச்சாரம் கட்டளையிடுவதா ?

சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இக்பால் கலந்து கொண்ட ஒரு தனியார் விழாவில் நீதிபதி ஹரிபரந்தாமன்

12 ஆகஸ்ட் 2012 அன்று நடைபெற்ற மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்பில் கோட்டணிந்து அமர்ந்திருக்கும் ஹரிபரந்தாமன்
இந்த நீதிபதிகள், “தேவனே” “மை லார்ட்ஷிப்” என்று அழைக்கத் துளியும் தகுதியில்லாதவர்கள். திமுக ஆட்சிக் காலத்தில் கேடி சகோதரர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், எந்திரன் படம் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போது, கேடி சகோதரர்கள் நீதிபதிகளுக்கென்று நடத்திய பிரத்யேக திரையிடலில், ஒன்றிரண்டு நீதிபதிகளைத் தவிர, குடும்பத்தோடு கலந்து கொண்டு, கேடி சகோதரர்களின் கரங்களை வலுப்படுத்தியவர்கள்தான் இந்த நீதிபதிகள்.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், சென்னை கிரிக்கெட் கிளப், மற்றும் ஐபிஎல் ஆகியவற்றுக்கு எதிராக பல பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளும், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் விசாரணைக்கு வந்த நாளன்றே தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக இருக்கும் பி.எஸ்.ராமன்தான் தொடர்ந்து இந்த வழக்குக்காக ஆஜராவார். பி.எஸ்.ராமன் ஆஜரானாலே நீதிபதிகள் பம்முவார்கள்.
விவாதத்தை வளர்க்காமல் ராமனுக்கு ஆதரவாக வழக்கை தள்ளுபடி செய்வார்கள். பி.எஸ்.ராமனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தள்ளுபடி செய்தால் கூட புரிந்து கொள்ளலாம். அதிகபட்மாக நீதிபதிகள் என்ன எதிர்ப்பார்ப்பார்கள் தெரியுமா ? கிரிக்கெட் மேட்ச் நடக்கையில், பெவிலியனில், நீதிபதிகளின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அமரும் வகையில் ஓசியில் பாஸ். இது மட்டுமே.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக தொடரப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் தள்ளுபடி செய்ய கூறப்பட்ட காரணம், விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்பதே. அந்த வழக்கு விளம்பரத்துக்காகவே தொடரப்பட்டிருக்கட்டுமே….. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் பதில் மனு தாக்கல் செய்யட்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தால் வானம் இடிந்து விழுந்து விடுமா ? அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தால், நீதிபதி ஹரிபரந்தாமனை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்த துணிச்சல் இருந்திருக்குமா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ?
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை லீசுக்கு வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. மொத்த இடம் 11 காணி 8 க்ரவுண்டு, 949 சதுர அடி. இது போக, 15 கிரவுண்டு மற்றும் 1104 சதுர அடி சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு. மொத்த இடம், 12 காணி, 23 கிரவுண்டு, 2053 சதுர அடி.
சேப்பாக்கத்தில் உள்ளது அரசு நிலம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இடம் 1995ம் வருடம் குத்தகைக்கு விடப்படுகிறது. 20.04.1995 முதல் 20 ஆண்டுகளுக்கு குத்தகை. வருடத்துக்கு இந்த மொத்த இடத்துக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா ? 53 ஆயிரத்து சொச்சம். மாதத்துக்கு அல்ல. வருடத்துக்கு. 1995 முதல் 2000ம் ஆண்டு வரை, அதாவது முதல் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே இந்த வாடகை. அதன் பிறகு வாடகை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசு உத்தரவு.
இன்று வரை இந்த வாடகை மறுபரிசீலனை செய்யப்படாமல், 1995ல் விதிக்கப்பட்ட அதே ஆண்டு வாடகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கொடுத்து வருகிறது என்ற செய்தி உங்களுக்குள் என்ன உணர்வை ஏற்படுத்துகிறது ?
1995 ஆண்டு உள்ள சந்தை நிலவரத்தை வைத்துப் பார்த்தாலே, இவ்வளவு பெரிய நிலத்துக்கு 53 ஆயிரம் என்பது மிக மிக சொற்பத் தொகை. ஆனால், இப்படி குறைந்த விலைக்கு, குத்தகைக்கு கொடுத்ததற்காக அரசு கூறும் காரணம், விளையாட்டை வளர்ப்பதற்காக என்பதே. இந்த சென்னை கிரிக்கெட் கிளப்பில், மதுபான விடுதி மற்றும், உயர்தர அசைவ உணவகம் நடைபெறுகிறது என்பதும், தமிழகத்தின் முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், ஆகியோரின் பிடித்தமான மதுபான விடுதி இதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா ? மேலும், உயர் உயர் அதிகாரிகளுக்கு, சென்னை கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினர் பதவி இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?
நீங்கள் ஒரு விவசாயி. வங்கியில் விவசாயக் கடன் வாங்குகிறீர்கள். விதைக்கிறீர்கள். சரியாக விளையவில்லை. நட்டமாகிறது. கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருகிறீர்கள். நியாயமான கோரிக்கை. அது போல, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கு போதுமான வருமானம் வரவில்லை. அதனால், குத்தகை தொகையை உயர்த்தவில்லை என்று அவர்கள் சொன்னால் அதில் நியாயம் உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும், பல கிரிக்கெட் போட்டிகள் மூலம் 2011-12ம் ஆண்டில் கிடைத்த வருமானம் மட்டும் ரூ849.44 கோடி. இது மொத்த வருமானம். செலவைக் கழித்தால், நிகர லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா ? இதில் செலவு போக, நிகர வருமானம் ரூ382.36 கோடி.
சராசரியாக ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நிகர லாபமாக (NET PROFIT) சம்பாதிக்கும் தொகை ஒரு ஆண்டுக்கு 100 கோடி.
ஆண்டுக்கு நிகர லாபம் 100 கோடி. ஆனால் செலுத்தும் வாடகையோ 50 ஆயிரம் ரூபாய். வயிறு எரிகிறதா இல்லையா தோழர்களே. இந்த அயோக்கியத்தனத்தை தட்டிக் கேட்க வேண்டியது, நீதிமன்றமா இல்லையா ?
1995ல், 50 ஆயிரம் வாடகையை நிர்ணயித்தது ஜெயலலிதா அரசு. அதன் பிறகு 1996 முதல் 2001 வரை கருணாநிதி அரசு. 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா. மீண்டும் 2006 முதல் 2011 வரை கருணாநிதி. 2011 முதல் இன்று வரையில் மீண்டும் ஜெயலலிதா. இவர்களில் யாராவது ஒருவருக்கு இந்த 50 ஆயிரம் வாடகையை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை எப்போதாவது இருந்திருக்கிறதா ?
அரசை ஏமாற்றி, ஒரு பார்ப்பன கூட்டம், தொடர்ந்து கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கழக அரசுகள்தான் இன்று வேட்டியை பிரச்சினையாக்கி தமிழர் நலனை தூக்கி நிறுத்துவதாக நாடகமாடுகின்றன.
தமிழ் கூறும் நல்லுலகின் ஒரே அறங்காவலர் கருணாநிதி வேட்டிக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து வெகுண்டெழுந்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், இந்த ஊழல்கள் மற்றும், கிரிக்கெட் பெயரில் நடத்தப்படும் சங்கர மடத்தின் தலைவர் என்.சீனிவாசனை கருணாநிதி கண்டித்தாரா ? ஒரு போதும் கண்டிக்க மாட்டார். ஏனென்றால், 2ஜி வழக்கில், கலைஞர் டிவி வாங்கிய 200 கோடி தொகை சிக்கலானபோது, அவருக்கு கை கொடுத்து உதவிய ஆபத்பாந்தவன் என்.சீனிவாசன் என்ற பார்ப்பனரே.
60 கோடியை என்.சீனிவாசனிடமிருந்து விளம்பரத்துக்கான முன்பணமாக பெற ஏற்பாடு செய்து விட்டேன் என்று கருணாநிதியின் கண்களும் காதுகளுமாக திகழ்ந்த ஜாபர் சேட் பேசுவதை கேளுங்கள்.
இவர் எப்படி என்.சீனிவாசனின் கைப்பாவையாக இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக பேசுவார் ?
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை திருத்த வேண்டிய பொறுப்பில் இருந்து, அதைச் செய்யத் தவறிய ஜெயலலிதாவின் 110 வீராவேச உரையைப் பாருங்கள்.
வேட்டி அணிந்தவர்களை சங்க கட்டட வளாகத்திற்குள் அனுமதிக்காத தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்தின் செயல்பாடு, தமிழர் நாகரிகத்தையும், தமிழர் பண்பாட்டினையும் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற விதிகளுக்கும் முரணானதாகும். இது ஒரு sartorial despotism. அதாவது உடை தொடர்பான எதேச்சதிகாரம் ஆகும்.
இது குறித்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் அனுப்புமாறு தமிழ்நாடு அரசின் சங்கங்கள் பதிவாளருக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.
தமிழர் உடையான வேட்டி அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் இது போன்ற நடைமுறை சென்னையில் உள்ள சில கிளப்புகளில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், உரிய சட்ட முன் வடிவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும், அதன் அடிப்படையில் தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் இனி வருங்காலங்களில் மன்றங்கள் ஈடுபடுமேயானால், அந்த மன்றங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்”
எத்தகைய போலித்தனமான அறிவிப்பு பார்த்தீர்களா ? நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வேட்டியை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்படுமாம்.
“வேலை வெட்டி இல்லாத கருணாநிதியை புறந்தள்ளி
பட்டாபட்டி போடும் தமிழனின் மானத்தை பாதுகாத்து,
தமிழ் பாரம்பரியத்தைக் காப்பாற்றிய வேட்டித்தாய்
என்று இன்றுமுதல் நீ அன்போடு அழைக்கப்படுவாய்”.
என்று சட்டப்பேரவையிலேயே அடிமைகள் கூக்குரலிடும். அந்த கூக்குரலைக் கேட்டு, ஜெயலலிதா புன்முறுவல் பூப்பார். தமிழகமே, வேட்டி பாதுகாக்கப்பட்டது என்று புளகாங்கிதம் அடையும்.
50 ஆயிரம் வாடகை கொடுத்து விட்டு, வருடத்துக்கு 100 கோடியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அள்ளிச் செல்லும். ஐபிஎல் போட்டிகள் நடக்கும் சமயத்தில் நீதியரசர்கள், பி.எஸ்.ராமனிடம் டிக்கெட் கேட்பார்கள். அவர் பெவிலியன் பாஸ் பெற்றுத் தருவார். நீதியரசர்களின் குடும்பத்தினர் குதூகலத்தோடு ரசிப்பார்கள்.
இதுதான் தொடர்ந்து நடக்கும்.
ஒரு தனிப்பட்ட கிளப்பில், தனி நபர் உறுப்பினர்களுக்கான கிளப்பில், அவர்கள் விதிமுறைகளை மீறச் சொல்லி வற்புறுத்தி, அது நடக்காமல் போனதால், பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் சொல்லி, அதை தமிழகம் முழுக்க பெரிய செய்தியாக்கிய நீதிபதி ஹரிபரந்தாமனின் செயலுக்கும், அய்யர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று ஆட்டுக்கால் பாயா வேண்டும் என்று அடம் பிடிப்பதற்கும் வேறுபாடு உள்ளதா என்ன ?
பின் குறிப்பு : நீதியரசர் ஹரிபரந்தாமனோடு தனிப்பட்ட முறையில் சவுக்குக்கு அறிமுகம் உண்டு.
பின் நவீனத்துவ குறிப்பு : நீதிபதி ஹரிபரந்தாமன், சென்னை கிரிக்கெட் கிளப்பின் காவலரோடு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கோட் அணிந்த மூன்று நபர்கள், ஹரிபரந்தாமனின் விவாதத்தை பார்த்த பிறகு, அவரை ஏளனமாக பார்த்தபடி கடந்து சென்றார்கள். அவர்கள் நீதிபதி அக்பர் அலி, நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா.
அட அடிமைகளா.. இன்னும் எவ்வளவு நாளைக்குடா எங்கள போன்ற சாதாரண மக்களை இப்புடி வறுத்தெடுக்க போறீங்க??
This is a tactic by fovwrnmenr to divert mugalivakkam tragedy.
I think it is very well written article with good point. Unfortunately, tamil people only find problems. They dont get the message in this article.
//ஒரு தனிப்பட்ட கிளப்பில், தனி நபர் உறுப்பினர்களுக்கான கிளப்பில், அவர்கள் விதிமுறைகளை மீறச் சொல்லி வற்புறுத்தி, //
இப்படியொரு விதிமுறையே கிரிகெட் வாரிய விதிகளில் இல்லை என்று நேற்று முதல்வர் சட்டசபையில் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
In 1995, the President of TNCA was A.C.Muthiah (Chettiar) and not N.Srinivasan. As a journalist, you should get facts straight first and then throw the muck. Besides, it is known Jaya and TNCA under N.Srinivasan are not in good terms. To have some respectability, please do not bring in “paarpaan” caste flag unnecessarily.
நல்ல சூடு.
//பின் நவீனத்துவ குறிப்பு : நீதிபதி ஹரிபரந்தாமன், சென்னை கிரிக்கெட் கிளப்பின் காவலரோடு விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், கோட் அணிந்த மூன்று நபர்கள், ஹரிபரந்தாமனின் விவாதத்தை பார்த்த பிறகு, அவரை ஏளனமாக பார்த்தபடி கடந்து சென்றார்கள். அவர்கள் நீதிபதி அக்பர் அலி, நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா.//
இந்த செய்தியை உங்களுக்கு கூறியவர், அதே நேரத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை கூற தவறவிட்டார் போலும். நீதியரசர் ஹரிபரந்தாமனோடு கிளுப்பினுள் அனுமதிக்கபடாதவர் வழக்கறிஞர் G.R. சுவாமிநாதன் — இந்த செய்தி அணைத்து ஊடகங்களிலும் வந்தது, அனைவரும் அறிவர்.
வெளியில் வராத செய்தி என்ன தெரியுமா? G.R. சுவாமிநாதனை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்தவர் உங்கள் நீதிபதி மற்றும் “தோழர்” சந்துரு. வேட்டி அணிந்திருந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட G.R. சுவாமிநாதனை வாசலில் அம்போ என விட்டுவிட்டு pant போட்ட சந்துரு உள்ளே சென்றுவிட்டார்.
நீங்கள் முதுகெலும்பு உடையவரானால் “பின் நவீனத்துவ குறிப்பு” டன் இந்த நிகழ்வையும் இணைப்பீர்கள் என நம்புகிறேன்.
இத்தனை தீர்கமாக ஆதாரங்களுடன் எந்த மொக்கை ஊடகங்களாவது எழுதியதா ? இல்லை. சவுக்கு ஏன் எம் போன்றோரின் கணிப்பில் உச்சத்தில் இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். நிச்சயமாக இந்த விவரங்கள் “ஜெ” விடம் மறைக்கப்பட்டிருக்கும்.
இப்போதாவது இந்த விவரங்களை கொண்டு இந்த கொள்ளை கூட்டத்தை கட்டு படுத்துவாரா ? இல்லை …வழக்கப்படி ம்ம்ம்ம்…பார்ப்போம்.
கிறிஸ்டியன் ஸ்கூல் , அவங்களுக்குன்னு ஒரு விதிமுறை சட்டம் இருக்கு … திருநீறு அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக்கூடாதுன்னு சொன்னா, ஒத்துக்கொள்வீர்களா ?
அது எவ்வளவு தவறான முன்னுதாரமோ , அதேதான் வேட்டிக்கும்….
இக்கடுரையில் சாதி வெறி அப்பட்டமா பல் இளிக்குது. பார்ப்பனரத் தவிர வேறு ஏவர் எது செஞ்சாலும் அங்க சாதி யோ மதமோ வெளிய வறாது. அதெல்லாம் தனிப்பட்ட ஆள் செஞ்ச தப்பு ஆயிடும். ஜாபர் ஸேட் தணிப்பட்ட ஆள். மவுளிவாக்கத்தில் தரமற்ற வீட்டை கட்டியவன் ஒரு தணிப்பட்ட ஆள். தமிழ்நாட்டை திராவிடம் பேசி கொள்ளை அடிப்பவர் எல்லாம் தணிப்பட்ட ஆள். ஆனா சீணிவாசனப் பத்தி பேசும்போது மட்டும் சவுக்குக்கு சாதி அரிப்பு வந்துடும். இவர்க்கு ஆதரவா பார்ப்பன குடும்பத்துல பிறந்து விட்டோமே என்று தவிய தவிக்கும் ஒரு கம்யூனிஸ்ட். இவர்கள் நாட்டை திருத்த போறாங்களாம். நல்ல தமாசு.