யார், யாரை வெளியே போகச் சொன்னது ? அந்த விபரங்கள் தானே இந்தக் கட்டுரையே….
ஒரு விஷயத்தை முதலில் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு பில்டப் கொடுக்க வேண்டாமா ? முதலில் பில்டப்.
சூப்பர் ஸ்டாரின் பாட்சா படத்தை பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில், சாதாரண ஆட்டோக்காரனாக, அமைதியாக இருந்து வரும் ரஜினி, தனது தங்கையை ஒரு ரவுடி, அவமானப் படுத்தியதைப் பார்த்ததும், வெகுண்டெழுவார். அந்தக் காட்சிக்கு, ஜெராக்ஸ் கடைக்காரர், மன்னிக்கவும், இசையமைப்பாளர் தேவா, சிறப்பான பின்னணி இசை அமைத்திருப்பார். தன்னை தாக்க வரும் நபரை, ரஜினி ஒரே ஒரு அடி அடிப்பார். அந்த நபர் பறந்து சென்று, அருகில் உள்ள தெரு விளக்குக் கம்பத்தில், மோதி, கீழே விழுவார்.
ரஜினி அமைதியாக செல்லலாம் என எத்தனிக்கும் போது, மற்றொரு பைட்டர், கத்தியை விரிப்பார். கத்தியை விரிக்கும் ஓசையை கேட்ட ரஜினி, அந்த பைட்டரை வாயில் ரத்தம் வரும் அளவுக்கு ஒரு கும்மாங்குத்து குத்தி விட்டு, திரும்பி தன் தம்பியைப் பார்த்து, “உள்ளே போ“ என்பார். தம்பி தயங்கி நிற்கையில், “உள்ளே போ“ என்று கண்கள் சிவக்க, உரத்த குரலில் சொல்வார். பின்னணி இசை டெம்போ உச்சஸ்தாயில் இருக்கும். அந்த சீன், பாட்சா படத்தில் மிகப் பிரபலமான ஒரு சீன்.
அதே போல ஒரு சீன் நடந்தது. எங்கே என்றால், சென்னை 28, ராஜா அண்ணாமலை புரம், குமாரசாமி ராஜா சாலை, என்சிபி.21 என்ற கட்டிடத்தில் நடந்தது. அந்த இடம், ஒரு சினிமா ஸ்டுடியோ என்று தானே நினைக்கிறீர்கள் ? அதுதான் இல்லை. அந்த இடம் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் அலுவலகம். ஒரே ஒரு மாற்றம். “உள்ளே போ“ என்பதற்கு பதிலாக “வெளியே போ“ என்ற டயலாக் ஒலித்தது. “வெளியே போ“ என்று சொன்னவர், டிஜிபி போலா நாத். வெளியே போன நபர்……
வேறு யார்…. சவுக்கு தான்….
ஆனால், இந்த சம்பவம் நடந்த போது, பின்னணி இசை அளிக்க, தேனிசைத் தென்றல் தேவா இல்லை. அதற்கு பதில், ஒரு டிஎஸ்பியும், ஒரு இன்ஸ்பெக்டரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இசையமைக்கத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காவல்துறையின் எல்லா பிரிவுகளிலும், நிர்வாகப் பிரிவு ஆய்வாளர் மற்றும், நிர்வாகப் பிரிவு டிஎஸ்பி என்ற பதவிகள் தவறாமல் இருக்கும். இந்தப் பதவிக்கான வேலை என்னவென்றால், “பக்கெட்“ வேலை தான் வேறு என்ன ?
ஒரு உதாரணத்துக்கு,
அந்த இன்ஸ்பெக்டருக்கும், டிஎஸ்பிக்கும் வழக்கு விசாரணை, புலனாய்வு என்று எந்த வேலையும் கொடுக்கப் பட மாட்டாது. காலையில் மற்ற அனைவரும் வருவதற்கு முன்பு, அலுவலகம் வந்து விட வேண்டும். இயக்குநர் கார் வரும் போது, போர்ட்டிக்கோவில் நின்று, இயக்குநர் கார் நின்றதும், கார் கதவை திறந்து விட வேண்டும். இயக்குநர் அவர் அறைக்குச் சென்றதும், அவர் அறைக்குச் செல்ல வேண்டும். இயக்குநர், அன்று என்ன வேலைகள் என்று சொல்லுவார்.
உதாரணத்துக்கு சில வேலைகள்.
1) இயக்குநர் வீட்டில் வளரும் நாய்க்கு, தடுப்பூசி போட வேண்டும்.
2) இயக்குநரின் மனைவிக்கு மேக்கப் சாதனங்கள் வாங்க வேண்டும்.
3) மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இயக்குநரின் மகளுக்கு, ஆராய்ச்சிக்காக ஒரு பிணம் வேண்டும்.
4) இயக்குநர் வீட்டு பாத்ரூமில் லைட் எரியவில்லை. புது பல்பு போட வேண்டும்.
5) இயக்குநரின் மகள் சினிமாவுக்குப் போவதற்கு டிக்கெட் வேண்டும்.
இந்தப் பட்டியலில் துளி கூட மிகைப் படுத்தல் இல்லை தோழர்களே…. இவை அத்தனையும் நடந்தவை.
இதுதான் வேலை. இந்த வேலைகளுக்கான பணத்தை எந்த இயக்குநரும் கொடுக்க மாட்டார்கள். அதற்காகவென்றே தானே இருக்கிறது ரகசிய நிதி.
இப்படிப் பட்ட டிஎஸ்பியும், இன்ஸ்பெக்டரும் தான் அன்று போலாநாத்தின் அறையில் நின்று கொண்டிருந்தார்கள்.
போலாநாத்… இவர் இன்று தமிழகத்தில் இருக்கும் டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி. தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்கநராக இருக்கிறார்.
இவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப் பட்டதற்கே ஒரு பின்னணி உண்டு.
ராமானுஜம் 01.01.2009 முதல் 06.10.2009 வரை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்தார். அவர் இருந்த காலத்தில், தான் பணியாற்றும் இடத்தில், ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தான் பசுத்தோல் போர்த்திய புலி என்பது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் வழக்கில் சிறிய அதிகாரிகளை பிடிக்காமல், பெரிய அதிகாரிகளைப் பிடிக்க முயலுங்கள் என்று அவரது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநகர போக்குவரத்து கழக, மேலாண் இயக்குநர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், ஒரு வருவாய் கோட்டாட்சியர், குடிநீர் வழங்கல் வாரியத்தின், பொறியியல் இயக்குநர் போன்ற பெரிய பதவிகளில் உள்ளவர்கள் சிக்கினார்கள் என்பதே உண்மை.
இது போல, லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக பணியாற்றத் தொடங்கியதும், அரசுக்கு பெரும் தலைவலியாகியது. அப்புறம் என்ன சார். அமைச்சர்களுக்கெல்லாம் வாங்கிக் கொடுப்பதே இந்த அதிகாரிகள் தான். அவர்களைப் போய் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன துணிச்சல் ?
இதனால், கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இயக்குநராக இருந்த ராமானுஜத்திற்கு மேலே போலாநாத்தை நியமிக்கிறார்கள். போலாநாத், சொன்ன வேலையை ஒழுங்காக செய்தார்.
அவருக்கு உத்தரவிட்ட படியே, பெரிய பதவிகளில் உள்ள ஊழல் அதிகாரிகள் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யாமல், உயர் உயர், உயர் அதிகாரிகளான, கிராம நிர்வாக அலுவலர்கள், (VAO), வருவாய் ஆய்வாளர்கள் (Revenue Inspectors), பில் கலெக்டர்கள் போன்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் மட்டும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், போலா நாத் இயக்குநரான நாள் முதல், சுத்தமாக வேலையே இல்லை என்றும், ‘ரிப்போர்ட் கொடுங்கள், வி.ஆர் போடுங்கள், ட்ராப் போடுங்கள், அதிரடி சோதனை நடத்துங்கள் ’ என்பது போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக, இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த போலோ நாத்தும், ஒரு பசுத் தோல் போர்த்திய புலி தான். இவருக்கும், ஒரு நேர்மையான அதிகாரி என்ற பெயர் (தப்பான) உண்டு. ஆனால், இந்த போலா நாத், ரகசியமாக, மிகுந்த நம்பகமான நபர்களிடம் மட்டும் தனது வசூல் வேட்டையை நடத்தி வந்திருக்கிறார் என்ற தகவலும் தெரிய வந்தது.
சிறைத் துறையின் கூடுதல் டிஜிபியாக இருந்த போது, கைதிகளுக்கு மளிகை சாமான்கள் வழங்கும் ஒரு பருப்பு வியாபாரியிடம், மாதந்தோறும் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு, அவருக்கு சிறைக்கு மளிகை பொருட்கள் வழங்கும் கான்ட்ராக்டை கொடுத்தார் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப் பட்ட போலா நாத்தைத் தான் சவுக்கு திங்களன்று சந்திக்கச் சென்றது.
இந்த அதிகாரிகளுக்கெல்லாம் எப்போதுமே ஒரு ஆணவம் உண்டு. அது என்னவென்றால், தங்களை விட, மற்ற அனைவருமே முட்டாள்கள் என்பது. ஏனென்றால், இவர்கள் ஐபிஎஸ் படித்திருக்கிறார்களாம். மற்றவர்கள் படிக்கவில்லையாம்.
அதே ஆணவத்தில், போலாநாத், சவுக்கு அவரை சந்திக்க வருகிறது என்று அப்பாயின்ட் மென்ட் கேட்டதும், ‘சரி இந்தப் பயல் வழிக்கு வந்து விட்டான். அய்யா, தர்மதொர சஸ்பென்ஷன கேன்சல் பண்ணுங்கய்யா… உங்களுக்கு புண்ணியமா போகும்…. ஒங்க புள்ளக் குட்டியெல்லாம் நல்லா இருக்கும்’ என்று சவுக்கு கேட்கும் என்ற எண்ணத்திலேயே, இருந்திருக்கிறார்.
சவுக்கு சரியாக 10.50க்கு அந்த அலுவலகத்திற்கு சென்ற போது, சவுக்கை சந்தித்த போலாநாத்தின் உதவியாளர், போலாநாத்திடம் தகவல் சொல்லி விட்டு, அவர் கூடுதல் இயக்குநர் துக்கையாண்டியை சந்தித்து விட்டு, பிறகு போலாநாத்தை பார்க்கவும் என்று கூறியதாக, தகவல் சொன்னார்.
சவுக்கு, இயக்குநர் போலாநாத்தைத் தவிர வேறு ஒருவரையும் பார்க்க இயலாது என்பதை தெரிவித்ததும் போலாநாத் உள்ளே அழைத்தார்.
“சொல்லுங்கள் என்ன வேண்டும்“ என்றார் போலாநாத்.
18.01.2011 அன்று, பிச்சைக்காரர்கள், பிச்சை எடுத்ததைப் பற்றி கொடுத்த புகாரை குறிப்பிட்டு, அந்தப் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ற தகவலை தெரிவிக்கக் கேட்கும் கடிதம் ஒன்றை போலாநாத்திடம் அளித்து, அந்த விபரத்தை வாய்மொழியாகவும் சொல்லிய உடனே… போலாநாத்தின் முகத்தில், அடக்க முடியாத கோபம் வந்ததை பார்க்க முடிந்தது.
“இதைப் பற்றி என்னிடம் வந்து கேட்க உனக்கு என்ன துணிச்சல் ? “ சவுக்கு, “அய்யா, நான் கொடுத்த புகார் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் எனக்கு தெரியப் படுத்த வேண்டும்“ என்று கூறியதும், போலாநாத், “உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை“ என்றார்.
“அய்யா, விஜிலேன்ஸ் மேனுவல் (கையேடு) படி, நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்“ என்று குறிப்பிட்டதும், போலாநாத், கடும் சினமடைந்தார். “உனது தலையெழுத்தே எனது கைகளில் இருக்கிறது. உன்னை முடித்து விடுவேன். மேலும் பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதே…“ என்று மிக உரத்த குரலில் கூறினார்.
இதையடுத்து சவுக்கு, போலாநாத் அமரச் சொல்லாமலேயே, அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தது. அமர்ந்தது கண்டதும் மேலும் சினமடைந்த போலாநாத், “யாரைக் கேட்டு அமர்கிறாய்… நான் உன்னை அமரச் சொல்லவே இல்லையே…“ என்று மேலும் உரத்த குரலில் கத்தினார்.
சவுக்கு அமைதியாக, “இது உங்கள் சொந்த அலுவலகம் இல்லை. அரசு அலுவலகம். நான் அமர்வதற்கு உங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை“ என்று சொன்னதும், வந்ததே கோபம் போலாநாத்துக்கு. “கெட் அவுட்“ என்று பலத்த குரலில் கத்தினார்.
சவுக்கு உடனே எழுந்து வெளியே வந்து விட்டது. சவுக்கு, வெளியில் வந்த பத்து நிமிடங்களிலேயே, போலா நாத், அவசர அவசரமாக காரில் வெளியே கிளம்பிச் சென்றார். எங்கே என்று விசாரித்தால், ரத்த அழுத்தம் கூடி விட்டதால், மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப் படலாமா சார்…. ஏன் இப்படி டென்ஷனா ஆகுறீங்க ?
நீங்கள் எதற்குத் தெரியுமா கோபப் பட்டிருக்க வேண்டும் ?
தமிழகம் முழுக்க உள்ள வணிக வரித்துறையின் சோதனை சாவடிகளிலும், போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடிகளிலும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு லட்ச ரூபாய் வசூலாகிறதே…. அங்கே உங்களை சோதனை செய்ய விடாமல் தடுத்த போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், விதிமுறைகளை மீறி, இரவு நேரங்களிலும், பல லட்ச ரூபாய் வசூல் செய்து, பத்திரப் பதிவு செய்யப் படுகிறதே… அங்கே உங்களை சோதனை செய்ய விடவில்லையே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
கே.என்.நேரு, பொன்முடி, ஆற்காடு வீராச்சாமி, கோ.சி.மணி, துரை முருகன், வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ் ராஜன், பொங்கலூர் பழனிச்சாமி, போன்ற அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில், நீதிமன்றத்தை ஏமாற்றி, இந்த அமைச்சர்கள் விடுவிக்கப் பட்டதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விடாமல் தடுக்கப் பட்டீர்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
உமாசங்கர் போன்ற ஒரு அதிகாரி மீது, சொத்துக் குவிப்பு வழக்கு போட்டது மட்டுமல்லாமல், அதில் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டன என்று உங்களிடம், அறிக்கை கேட்டு நெருக்கடி கொடுத்தார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கமாக நடத்தும் திடீர் சோதனைகளை எங்கேயுமே நடத்தாமல் உங்கள் கைகள் கட்டப் பட்டிருக்கின்றனவே, அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
பொட்டு சுரேஷ் போன்ற ஒரு ப்ரோக்கர் சொன்னான் என்பதற்காக, வசூல் செய்து, கையும் களவுமாக பிடிபட்ட ஜெயஸ்ரீ போன்ற காவல்துறை அதிகாரிக்கு, ஐபிஎஸ் நியமனம் செய்ய உங்களிடம் தடையில்லா சான்று கேட்டார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
அதே ஜெயஸ்ரீ மீதான வழக்கில் மேல் நடவடிக்கையை கைவிடச் சொல்லி நெருக்கடி கொடுத்தார்களே… அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டு, அவ்வழக்கிற்கு ஆளான, ஐபிஎஸ் அதிகாரி, ஏ.கே.விஸ்வநாதன், அனைத்துச் சொத்துக்களுக்கும் உரிய கணக்கை காண்பித்த பிறகு, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படாத நிலையிலும், அந்த விசாரணை அதிகாரி முகம்மது இக்பாலை, எப்ஐஆர் போடும் வகையில் ஒரு அறிக்கை அளிக்க நெருக்கடி கொடுங்கள் என்று உங்களை விட பணியில் பத்து ஆண்டுகள் இளைய, ஜாபர் சேட் என்ற ஒரு நபர், சொன்னாரே…. அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
இன்ஸ்பெக்டர் பணியை பார்க்க வேண்டியவர்கள், கருணாநிதியின் வண்டியை தள்ளிக் கொண்டு இருப்பதற்காக, அவர்களுக்கு ஆளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப் பட்டன. அவர்களுக்கு ஏது இரண்டு கோடி ரூபாய் என்று, கொடுக்கப் பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று உங்களை மிரட்டினாரே ஜாபர் சேட். அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
தனது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக் கொள்வதற்காக, ராமசுந்தரம் என்ற அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்டு, அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யச் சொல்லி உங்களை மிரட்டினாரே.. கருணாநிதியின் செயலாளர் ராஜரத்தினம்…. அப்போது கோபப் பட்டிருக்க வேண்டும்.
அப்போதெல்லாம் கோபப் படாமல், இப்போது ஏன் கோபப் பட்டீர்கள் போலாநாத் ?
நீங்கள் வட இந்தியர்… திருக்குறள் படித்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காகவே எழுதப்பட்ட குறள் ஒன்று இருக்கிறது போலாநாத்.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
இந்த குறளுக்கான விளக்கத்தை உங்கள் இன்ஸ்பெக்டர்கள் சரியான முறையில் சொல்வார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால், அதன் ஆங்கில வடிவமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
Whene’er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
இந்தச் சம்பவத்தால் என்ன விளைவுகள் நேரும், நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சவுக்குக்கு நன்கு தெரியும். பல்வேறு கடிதங்கள் எழுதிய பிறகு சவுக்குக்கு சட்ட ரீதியாக அளிக்கப் பட வேண்டிய பாதி சம்பளத்தை மேலும் தாமதம் செய்வீர்கள். அல்லது சுத்தமாக நிறுத்துவீர்கள். இதற்காகவும் நீதிமன்றத்தை அணுக வேண்டும் படி நெருக்கடி கொடுப்பீர்கள். ஏற்கனவே, நிலுவையில் உள்ள இரண்டு மாத அரைச் சம்பளத்தை, இன்னும் நான்கு மாதங்களுக்கு தாமதப் படுத்துவீர்கள்.
நீங்களும், துக்கையாண்டியும் சேர்ந்து கொண்டு, சவுக்குக்கு இன்னும் என்னென்ன வழிகளில் தொந்தரவு கொடுக்கலாம் என்று திட்டமிடுவீர்கள்.
எப்படி விரைவில், அரசுப் பணியை விட்டு டிஸ்மிஸ் செய்யலாம் என்று வேகவேகமாக நடவடிக்கை எடுப்பீர்கள்.
இதற்கு சவுக்கின் பதில் என்ன தெரியுமா ?
இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ என்ற காவியம் ஒன்று உண்டு.
சரத்பாபு, பொதுப் பணித்துறை பொறியாளராக வருவார். சரத்பாபுவிடம் ட்ராலி ஆப்பரேட்டராக இருக்கும், ரஜினிகாந்துக்கும், சரத்பாபுவுக்கும் ஏழாம் பொருத்தம். சரத்பாபு, பணி நிமித்தமாக, ரஜினியை கடிந்து கொண்டாலும், ரஜினி இந்த ஆள் வேண்டுமென்றே நம் மீது உள்ள வெறுப்பில் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று தொடர்ச்சியாக எண்ணுவார்.
ஒரு நாள், ரஜினி புல்லாக சரக்கடித்து விட்டு, சாலையில் படுத்திருக்கும் போது நேரும் விபத்தில், ரஜினியின் இடது கை துண்டிக்கப் படும். அதன் பிறகு சரத் பாபுவை சந்திப்பார் ரஜினி. சரத் பாபு ரஜினியிடம், ‘காளி, நான் மேலதிகாரிகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். ஆனால், உன்னை வேலையை விட்டு நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுவார்.’
வேலை போய் விட்டதே என்ற ஆற்றாமை அழுகையை பீறிட்டு வர வைத்தாலும், அந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரஜினி ஒரு டயலாக் கூறுவார். “ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளிங்கறவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் அவன்..” என்று சொல்லுவார்.
போலாநாத்…. சவுக்கு உங்களிடமும் இதையே தான் சொல்ல விரும்புகிறது “இந்த வேலை போனாலும், டிஸ்மிஸ் பண்ணாலும் சவுக்குன்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் அவன்”